திருவாய்மொழி
ஸ்ரீ:
நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாய்மொழி தனியன்கள்
(நாதமுனிகள் அருளிச்செய்தது)
பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம்
ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம்
(ஈஶ்வரமுனிகள் அருளிச்செய்தது)
திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்*
மருவினியவண்பொருநலென்றும்* – அருமறைகள்
அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்*
சிந்தியாய்!நெஞ்சே! தெளிந்து,
(சொட்டைநம்பிகள் அருளிச்செய்தது)
மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்*
இனத்தாரையல்லாதிறைஞ்சேன்* – தனத்தாலும்
ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன்
பாதங்கள்யாமுடைய பற்று.
(அனந்தாழ்வான் அருளிச்செய்தது)
ஏய்ந்தபெருங்கீர்த்திஇராமாநுசமுனிதன்
வாய்ந்தமலர்ப்பாதம்வணங்குகின்றேன் * – ஆய்ந்தபெருஞ்
சீரார்சடகோபன்செந்தமிழ்வேதம்தரிக்கும்*
பேராதவுள்ளம்பெற.
(பட்டர் அருளிச்செய்தது)
வான்திகழும்சோலைதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்றதமிழ்மறைகளாயிரமும்* – ஈன்ற
முதல்தாய்சடகோபன்* மொய்ம்பால்வளர்த்த
இதத்தாய்இராமானுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாமுயிர்நிலையும்*
தக்கநெறியும் தடையாகித் – தொக்கியலும்*
ஊழ்வினையும் வாழ்வினையும்ஓதும்குருகையர்கோன்*
யாழினிசைவேதத்தியல்.
*****
திருவாய்மொழி
முதல் பத்து
முதல் திருவாய்மொழி
உயர்வற உயர்நல முடையவன் யவனவன் *
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன் *
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் *
துயரறு சுடரடி தொழுது எழு, என் மனனே ! 1.1.1
மனனக மலமற, மலர்மிசை யெழுதரும் *
மனனுணர்வள விலன், பொறி யுணர்வவை யிலன் *
இனனுணர் முழுநலம், எதிர் நிகழ் கழிவினும் *
இனன் இலன் எனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2
இலனது உடையனிது, என நினைவரியவன் *
நிலனிடை விசும்பிடை, உருவினன் அருவினன் *
புலனொடு புலனலன், ஒழிவிலன் * பரந்த அந்
நலனுடை யொருவனை, நணுகினம் நாமே. 1.1.3
நாமவனிவனுவன், அவளிவளுவளெவள் *
தாமவரிவருவர், அதுவிதுவுதுவெது *
வீமவை யிவையுவை, அவை நலம் தீங்கவை *
ஆமவை ஆயவையாய், நின்ற அவரே. 1.1.4
அவரவர் தமதமது அறிவறிவகைவகை *
அவரவர் இறையவரென, அடியடைவர்கள் *
அவரவர் இறையவர், குறைவிலர் * இறையவர்
அவரவர் விதிவழி அடைய, நின்றனரே. 1.1.5
நின்றனர் இருந்தனர், கிடந்தனர் திரிந்தனர் *
நின்றிலர் இருந்திலர், கிடந்திலர் திரிந்திலர் *
என்றுமோரியல்வினர், என நினைவரியவர் *
என்றுமோரியல்வொடு நின்ற, எம் திடரே. 1.1.6
திடவிசும்பெரி வளி நீர் நிலம், இவை மிசை *
படர் பொருள் முழுவதுமாய், அவை யவை தொறும் *
உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து உளன் *
சுடர் மிகு சுருதியுள், இவை யுண்ட சுரனே. 1.1.7
சுரரறி வருநிலை, விண் முதல் முழுவதும் *
வரன் முதலாய், அவை முழுதுண்ட பரபரன் *
புரமொரு மூன்றெரித்து, அமரர்க்கும் அறிவியந்து *
அரனயனென, உலகழித்து அமைத்துளனே. 1.1.8
உளனெனில் உளன், அவனுருவம் இவ்வுருவுகள் *
உளனலனெனில், அவனருவம் இவ்வருவுகள் *
உளனென இலனென, இவைகுண முடைமையில் *
உளனிரு தகைமையொடு, ஒழிவிலன் பரந்தே. 1.1.9
பரந்த தண் பரவையுள் நீர் தொறும், பரந்துளன் *
பரந்த அண்டமிதென, நில விசும்பொழிவறக்
கரந்த * சிலிடந்தொறும், இடம் திகழ் பொருள் தொறும் *
கரந்தெங்கும் பரந்துளன், இவையுண்ட கரனே. 1.1.10
கரவிசும்பெரி வளி நீர் நிலம், இவை மிசை *
வரனவில் திறல் வலி, அளி பொறையாய் நின்ற *
பரனடி மேல், குருகூர்ச் சடகோபன் சொல் *
நிரனிறை யாயிரத்து, இவை பத்தும் வீடே. 1.1.11