பத்தாம் திருவாய்மொழி
பொருமா நீள்படை, ஆழிசங்கத்தொடு *
திருமா நீள்கழல், ஏழுலகும் தொழ *
ஒரு மாணிக் குறளாகி, நிமிர்ந்த * அக்
கருமாணிக்கம், என் கண்ணுள்ளதாகுமே. 1.10.1
கண்ணுள்ளே நிற்கும், காதன்மையால் தொழில் *
எண்ணிலும் வரும், என் இனி வேண்டுவம்? *
மண்ணும் நீரும், எரியும் நல் வாயுவும் *
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே. 1.10.2
எம்பிரானை, எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் * தண்தாமரைக் கண்ணனை *
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை *
எம்பிரானைத் தொழாய், மட நெஞ்சமே ! 1.10.3
நெஞ்சமே! நல்லை நல்லை! உன்னைப் பெற்றால்
என்செய்யோம் ? * இனி, என்ன குறைவினம் ?*
மைந்தனை, மலராள் மணவாளனைத் *
துஞ்சும் போதும், விடாது தொடர் கண்டாய். 1.10.4
கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று * ஓர்
எண் தானும் இன்றியே, வந்தியலுமாறு *
உண்டானை உலகேழும், ஓர் மூவடி
கொண்டானைக் * கண்டு கொண்டனை நீயுமே. 1.10.5
நீயும் நானும், இந்நேர் நிற்கில் * மேல் மற்றோர்
நோயும் சார்கொடான், நெஞ்சமே ! சொன்னேன் *
தாயும் தந்தையுமாய், இவ்வுலகினில் *
வாயும் ஈசன், மணிவண்ணன், எந்தையே. 1.10.6
எந்தையே ! என்றும், எம்பெருமான் ! என்றும் *
சிந்தையுள் வைப்பன், சொல்லுவன் பாவியேன் *
எந்தை ! எம்பெருமான் ! என்று வானவர் *
சிந்தையுள் வைத்துச் சொல்லும், செல்வனையே. 1.10.7
செல்வ நாரணனென்ற சொல், கேட்டலும் *
மல்கும் கண்பனி, நாடுவன், மாயமே *
அல்லும் நன்பகலும், இடைவீடின்றி
நல்கி * என்னை விடான் நம்பி நம்பியே. 1.10.8
நம்பியைத், தென் குறுங்குடி நின்ற * அச்
செம்பொனேய் திகழும், திருமூர்த்தியை *
உம்பர் வானவர் ஆதி அஞ்சோதியை *
எம்பிரானை, என் சொல்லி மறப்பனோ ? 1.10.9 திருக்குறுங்குடி
மறப்பும் ஞானமும், நானொன்றுணர்ந்திலன் *
மறக்குமென்று, செந்தாமரைக் கண்ணொடு *
மறப்பற, என்னுள்ளே மன்னினான் தன்னை *
மறப்பனோ? இனி, யான் என் மணியையே. 1.10.10
மணியை, வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் * தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணிசெய் * ஆயிரத்துள், இவை பத்துடன்
தணிவிலர் * கற்பரேல், கல்வி வாயுமே. 1.10.11
***********