திருவாய்மொழி
முதல் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் *
வீடு உடையானிடை வீடு இசைமினே. 1.2.1
மின்னின் நிலையில * மன்னுயிராக்கைகள் *
என்னுமிடத்து * இறை உன்னுமின் நீரே. 1.2.2
நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து *
இறை சேர்மின் * உயிர்க்கு, அதன் நேர் நிறையில்லே. 1.2.3
இல்லதும் உள்ளதும் * அல்லது அவனுரு *
எல்லையில் அந்நலம் * புல்கு பற்றற்றே. 1.2.4
அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர் *
செற்று அது மன்னுறில் * அற்று இறை பற்றே. 1.2.5
பற்றிலன் ஈசனும் * முற்றவும் நின்றனன் *
பற்று இலையாய் * அவன் முற்றிலடங்கே. 1.2.6
அடங்கெழில் சம்பத்து * அடங்கக் கண்டு * ஈசன்
அடங்கெழில் அஃதென்று * அடங்குக உள்ளே. 1.2.7
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் *
உள்ளிக் கெடுத்து * இறை யுள்ளில் ஒடுங்கே. 1.2.8
ஒடுங்க அவன் கண் * ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் * ஆக்கை விடும் பொழுது எண்ணே. 1.2.9
எண்பெருக்கு அந்நலத்து * ஒண்பொருள் ஈறில *
வண்புகழ் நாரணன் * திண்கழல் சேரே. 1.2.10
சேர்த்தடத் * தென்குருகூர்ச் சடகோபன் சொல் *
சீர்த்தொடை யாயிரத்து * ஓர்த்த இப்பத்தே. 1.2.11