திருவாய்மொழி
முதல் பத்து
மூன்றாம் திருவாய்மொழி
பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய
வித்தகன் * மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் *
மத்துறு கடை வெண்ணெய் களவினில், உரவிடை யாப்புண்டு *
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே? 1.3.1
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் *
ஒளி வரு முழு நலம் முதலில கேடில * வீடாம்
தெளி தரு நிலைமையது ஒழிவிலன், முழுவதும் இறையோன் *
அளிவரும் அருளினோடு அகத்தனன், புறத்தனன் அமைந்தே. 1.3.2
அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்த
அமைவுடை * முதல் கெடல் ஒடிவிடை யறநிலமதுவாம் *
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் * தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே ? 1.3.3
யாரும், ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் *
யாரும், ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் *
பேரும் ஓராயிரம், பிறபல வுடைய எம்பெருமான் *
பேரும் ஓருருவமும், உளதில்லை இலதில்லை பிணக்கே. 1.3.4
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த *
கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன் *
வணக்குடைத் தவநெறி வழி நின்று புறநெறி களைகட்டு *
உணக்குமின், பசையற அவனுடையுணர்வு கொண்டுணர்ந்தே. 1.3.5
உணர்ந் துணர்ந்து இழிந்தகன்று
உயர்ந்துரு வியந்த இந்நிலைமை *
உணர்ந் துணர்ந் துணரிலும்
இறை நிலை உணர்வரிது உயிர்காள் ! *
உணர்ந் துணர்ந் துரைத்து உரைத்து
அரி அயன் அரன் என்னும் இவரை *
உணர்ந் துணர்ந் துரைத்து உரைத்து
இறைஞ்சுமின் மனப் பட்டதொன்றே. 1.3.6
ஒன்றெனப் பலவென, அறிவரும் வடிவினுள் நின்ற *
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும் இவரை *
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை யறுத்து *
நன்றென நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே. 1.3.7
நாளும் நின்றடு நம பழமை அங்கொடு வினை யுடனே
மாளும் * ஓர் குறைவில்லை மனனகம் மலமறக் கழுவி *
நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலங்கழல் வணங்கி *
மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8
வலத்தனன், திரிபுர மெரித்தவன், இடம் பெறத் துந்தித்
தலத்து * எழு திசைமுகன் படைத்த நல்லுலகமும், தானும்
புலப்படப் * பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் * இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே. 1.3.9
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் *
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் *
புயற்கரு நிறத்தனன் பெருநிலம் கடந்த நல்லடிப் போது *
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே. 1.3.10
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை *
அமர்பொழில் வளங்குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் *
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள், இவை பத்தும் வல்லார் *
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி யஞ்சிறையே. 1.3.11