திருவாய்மொழி
முதல் பத்து
ஆறாம் திருவாய்மொழி
பரிவதில் ஈசனைப் பாடி * விரிவது மேவலுறுவீர் *
பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் * புரிவதுவும் புகை பூவே. 1.6.1
மதுவார் தண்ணந் துழாயான் * முதுவேத முதல்வனுக்கு *
எது ஏது? என்பணி ? * என்னா ததுவே, ஆட்செய்யு மீடே. 1.6.2
ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே *
பாடும் என் நா அவன் பாடல் * ஆடும் என் அங்கம் அணங்கே. 1.6.3
அணங்கென ஆடும் எனங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் *
பிணங்கி அமரர் பிதற்றும் * குணங்கெழு கொள்கையினானே. 1.6.4
கொள்கை கொளாமை இலாதான் * எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி * உள் கலந்தார்க்கு ஓரமுதே. 1.6.5
அமுதம் அமரர்கட்கீந்த * நிமிர்சுடர் ஆழி நெடுமால் *
அமுதிலும் ஆற்ற இனியன் * நிமிர்திரை நீள் கடலானே. 1.6.6
நீள்கடல்சூழ் இலங்கைக் கோன் * தோள்கள் தலை துணி செய்தான் *
தாள்கள் தலையில் வணங்கி * நாள்கடலைக் கழிமினே. 1.6.7
கழிமின் தொண்டீர்கள் ! கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால் *
வழிநின்ற வல்வினை மாள்வித்து * அழிவின்றி ஆக்கம் தருமே. 1.6.8
தரும், அவரும் பயனாய * திருமகளார் தனிக்கேள்வன் *
பெருமையுடைய பிரானார் * இருமை வினை கடிவாரே. 1.6.9
கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் *
கொடியா அடுபுள் உயர்த்த * வடிவார் மாதவனாரே. 1.6.10
மாதவன் பால் சடகோபன் * தீதவமின்றி உரைத்த *
ஏதமில் ஆயிரத்து, இப்பத்து * ஓத வல்லார் பிறவாரே. 1.6.11