திருவாய்மொழி
முதல் பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் *
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் *
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் *
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே. 1.9.1
சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகைக் *
கேழலொன்றாகி யிடந்த கேசவன் என்னுடை அம்மான் *
வேழ மருப்பை யொசித்தான் விண்ணவர்க்கு எண்ணலரியான் *
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான், அவன் என்னருகலிலானே. 1.9.2
அருகலிலாய பெருஞ்சீர் அமரர்களாதி முதல்வன் *
கருகிய நீலநன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் *
பொரு சிறைப் புள் உவந்தேறும் பூமகளார் தனிக் கேள்வன் *
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன், என்னோடு உடனே. 1.9.3
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள் * என்றிவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே *
உடனவை யொக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் * எம்மான்
கடல்மலி மாயப் பெருமான் கண்ணன், என் ஒக்கலையானே. 1.9.4
ஒக்கலை வைத்து, முலைப் பாலுண்ணென்று தந்திட வாங்கிச் *
செக்கஞ் செக அன்று அவள் பால் உயிர் செக, உண்ட பெருமான் *
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக *
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சினுளானே. 1.9.5
மாயன், என்னெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்கும் அஃதே *
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே *
சேயன் அணியன், யவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லன் *
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே. 1.9.6
தோளிணை மேலும், நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் *
தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை யம்மான் *
கேளிணை யொன்றுமிலாதான் கிளரும் சுடரொளி மூர்த்தி *
நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே. 1.9.7
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம் *
ஆவியும் ஆக்கையும் தானே அளிப்போடு அழிப்பவன் தானே *
பூவியல் நால் தடந்தோளன் பொருபடையாழி சங்கேந்தும் *
காவி நன்மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுளானே. 1.9.8
கமலக்கண்ணன் என்கண்ணினுள்ளான் காண்பன் அவன்கண்களாலே *
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி *
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி *
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என்நெற்றியுளானே. 1.9.9
நெற்றியுள் நின்று என்னையாளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடி *
கற்றைத் துழாய் முடிக், கோலக் கண்ணபிரானைத் தொழுவார் *
ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் *
மற்றை யமரரும் எல்லாம், வந்து எனது உச்சியுளானே. 1.9.10
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக், கண்ணபிராற்கு *
இச்சையுள் செல்ல உணர்த்திய வண்குருகூர்ச் சடகோபன் *
இச்சொன்ன ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து எம்பிராற்கு *
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள்கழல் சென்னி பொருமே. 1.9.11