திருவாய்மொழி
நான்காம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
பாலனாய் ஏழுலகுண்டு, பரிவின்றி *
ஆலிலை அன்ன வசஞ் செய்யும், அண்ணலார் *
தாளிணை மேலணி, தண்ணந் துழாயென்றே
மாலுமால் * வல்வினையேன், மடவல்லியே. 4.2.1
வல்லி சேர் நுண்ணிடை, ஆய்ச்சியர் தம்மொடும் *
கொல்லைமை செய்து, குரவை பிணைந்தவர்
நல்லடி மேலணி, நாறு துழா யென்றே
சொல்லுமால் * சூழ்வினை யாட்டியேன், பாவையே. 4.2.2
பாவியல், வேத நன் மாலை பல கொண்டு *
தேவர்கள் மாமுனிவர், இறைஞ்ச நின்ற *
சேவடி மேலணி, செம் பொற்றுழா யென்றே
கூவுமால் * கோள்வினை யாட்டியேன், கோதையே. 4.2.3
கோதில வண் புகழ் கொண்டு, சமயிகள் *
பேதங்கள் சொல்லிப் பிதற்றும், பிரான் * பரன்
பாதங்கள் மேலணி, பைம் பொற்றுழா யென்றே
ஓதுமால் * ஊழ்வினையேன், தடந்தோளியே. 4.2.4
தோளிசேர் பின்னை பொருட்டு, * எருதேழ் தழீஇக்
கோளியார் கோவலனார் குடக்கூத்தனார் *
தாளிணை மேலணி, தண்ணந் துழாயென்றே *
நாளுநாள் நைகின்றதால், என் தன் மாதரே. 4.2.5
மாதர் மா மண்மடந்தை பொருட்டு, ஏனமாய் *
ஆதியங் காலத்து, அகலிடம் கீண்டவர் *
பாதங்கள் மேலணி, பைம் பொற்றுழா யென்றே
ஓதும் மால் * எய்தினள், என் தன் மடந்தையே. 4.2.6
மடந்தையை, வண்கமலத் திருமாதினைத் *
தடங்கொள் தார் மார்பினில், வைத்தவர் தாளின் மேல் *
வடங்கொள் பூந் தண்ணந் துழாய் மலர்க்கே, இவள்
மடங்குமால் * வாணுதலீர் ! என் மடக் கொம்பே. 4.2.7
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர் *
அம்பெரி யுய்த்தவர், தாளிணை மேலணி *
வம்பவிழ் தண்ணந் துழாய் மலர்க்கே, இவள்
நம்புமால் * நான் இதற்கு என் செய்கேன் ? நங்கைமீர் ! 4.2.8
நங்கைமீர் ! நீரும், ஓர் பெண் பெற்று நல்கினீர் *
எங்ஙனே சொல்லுகேன் ? யான் பெற்ற ஏழையைச் *
சங்கென்னும் சக்கரமென்னும், துழாயென்னும் *
இங்ஙனே சொல்லும், இராப்பகல் என் செய்கேன் ? 4.2.9
என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் *
என் சொல்லும் என் வசமுமல்லள், நங்கைமீர் !*
மின்செய் பூண் மார்பினன், கண்ணன் கழல் துழாய் *
பொன் செய் பூண்மென் முலைக்கென்று, மெலியுமே. 4.2.10
மெலியும் நோய் தீர்க்கும், நம் கண்ணன் கழல்கள் மேல் *
மலிபுகழ், வண் குருகூர்ச் சடகோபன் சொல் *
ஒலி புகழாயிரத்து, இப்பத்தும் வல்லவர் *
மலிபுகழ் வானவர்க் காவர், நற்கோவையே. 4.2.11