திருவாய்மொழி
நான்காம் பத்து
மூன்றாம் திருவாய்மொழி
கோவை வாயாள் பொருட்டு
ஏற்றினெருத்த மிறுத்தாய் ! * மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய் !
குல நல் யானை மருப்பொசித்தாய் ! *
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் * நின்
பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே. 4.3.1
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய *
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே *
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே *
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே. 4.3.2
ஏக மூர்த்தி இரு மூர்த்தி, மூன்று மூர்த்தி பல மூர்த்தி-
யாகி * ஐந்து பூதமாய், இரண்டு சுடராய் அருவாகி *
நாகமேறி நடுக் கடலுள் துயின்ற, நாராயணனே ! * உன்
ஆக முற்று மகத் தடக்கி, ஆவி யல்லல் மாய்த்ததே. 4.3.3 திருப்பாற்கடல்
மாய்த்த லெண்ணி வாய் முலை தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த * ஆய மாயனே ! வாமனனே! மாதவா ! *
பூத்தண்மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4
கண்ணி எனதுயிர், காதல் கனகச் சோதி முடி முதலா *
எண்ணில் பல்கலன்களும், ஏலுமாடையும் அஃதே *
நண்ணி மூவுலகும், நவிற்றும் கீர்த்தியும் அஃதே *
கண்ண னெம்பிரா னெம்மான், கால சக்கரத்தானுக்கே. 4.3.5
கால சக்கரத்தொடு வெண் சங்கம், கையேந்தினாய் !*
ஞால முற்றும் உண்டுமிழ்ந்த, நாராயணனே! என்றென்று *
ஓலமிட்டு நானழைத்தால், ஒன்றும் வாரா யாகிலும் *
கோலமாம் என் சென்னிக்கு, உன் கமல மன்ன குரை கழலே. 4.3.6
குரை கழல்கள் நீட்டி, மண் கொண்ட கோல வாமனா ! *
குரை கழல் கை கூப்புவார்கள், கூட நின்ற மாயனே ! *
விரை கொள் பூவும் நீரும் கொண்டு, ஏத்த மாட்டேனேலும் * உன்
உரை கொள் சோதித் திரு வுருவம், என்னதாவி மேலதே. 4.3.7
என்னதாவி மேலையாய், ஏர் கொளேழுலகமும் *
துன்னி முற்றுமாகி நின்ற, சோதி ஞான மூர்த்தியாய் *
உன்ன தென்ன தாவியும், என்ன துன்ன தாவியும் *
இன்ன வண்ணமே நின்றாய், என்றுரைக்க வல்லேனே ? 4.3.8
உரைக்க வல்லேனல்லேன் உன்னுலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் *
கரைக் கணென்று செல்வன் நான் ? காதல் மைய லேறினேன் *
புரைப்பிலாத பரம்பரனே ! பொய் யிலாத பரஞ்சுடரே ! *
இரைத்து நல்ல மேன் மக்களேத்த யானு மேத்தினேன். 4.3.9
யானு மேத்தி, ஏழுலகும் முற்று மேத்திப் * பின்னையும்
தானு மேத்திலும், தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும் ? *
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித், தித்திப்ப *
யானும் எம்பிரானையே ஏத்தினேன், யானுய்வானே. 4.3.10
உய்வுபாயம் மற்றின்மை தேறிக் கண்ணனொண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன் *
பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் *
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணோடே. 4.3.11