திருவாய்மொழி
நான்காம் பத்து
நான்காம் திருவாய்மொழி
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும் *
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும் *
கண்ணை உள் நீர்மல்க நின்று கடல்வண்ண னென்னுமன்னே ! * என்
பெண்ணைப் பெருமயல்செய்தாற்கு என்செய்கேன்? பெய்வளையீரே! 4.4.1 பரமபதம்
பெய்வளைக் கைகளைக்கூப்பிப் பிரான் கிடக்கும் கடலென்னும்*
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈதென்னும் *
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணனென்னும் அன்னே ! * என்
தெய்வ வுருவிற் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே. 4.4.2
அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதனென்னும், மெய் வேவாள் *
எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும் *
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற *
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கொன்றே. 4.4.3
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே ! என்னும் *
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும் *
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தானென்று ஆலும் *
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே. 4.4.4
கோமளவான்கன்றைப் புல்கிக் கோவிந்தன்மேய்த்தனவென்னும் *
போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈதென்னும் *
ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற *
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே. 4.4.5
கூத்தர் குடமெடுத்தாடில் கோவிந்தனா மெனா ஓடும் *
வாய்த்த குழலோசை கேட்கில் மாயவனென்று மையாக்கும் *
ஆய்ச்சியர்வெண்ணெய்கள்காணில்அவனுண்டவெண்ணெய்ஈதென்னும்*
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்கொடி யேறிய பித்தே ! 4.4.6
ஏறிய பித்தினோடு, எல்லாவுலகும் கண்ணன் படைப்பென்னும் *
நீறு செவ்வே யிடக் காணில் நெடுமாலடியா ரென்றோடும் *
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈதென்னும் *
தேறியும் தேறாதும், மாயோன் திறத்தனளே இத்திருவே. 4.4.7
திருவுடைமன்னரைக் காணில் திருமாலைக்கண்டேனேயென்னும்*
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந்தானென்று துள்ளும் *
கருவுடைத் தேவில்களெல்லாம் கடல்வண்ணன் கோயிலேயென்னும் *
வெருவிலும் வீழ்விலும் ஓவா கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.4.8
விரும்பிப், பகவரைக் காணில் வியலிட முண்டானே யென்னும் *
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணனென்றேறப் பறக்கும் *
பெரும்புல வாநிரை காணில் பிரானுளனென்று பின் செல்லும் * அரும்பெறல் பெண்ணினைமாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே. 4.4.9
அயர்க்கும்சுற்றும்பற்றிநோக்கி அகலவேநீள்நோக்குக்கொள்ளும்*
வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்கொள்ளும் மெய்சோரும் *
பெயர்த்தும் கண்ணா ! என்று பேசும் பெருமானே! வாவென்று கூவும்*
மயல்பெருங்காதலென்பேதைக்கு என்செய்கேன்? வல்வினையேனே. 4.4.10
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குருகூர்ச் சடகோபன் *
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் *
நல்வினை யென்று கற்பார்கள் நலனுடை வைகுந்தம் நண்ணித் *
தொல் வினை தீர, எல்லோரும் தொழுதெழ வீற்றிருப்பாரே. 4.4.11