திருவாய்மொழி
நான்காம் பத்து
ஐந்தாம் திருவாய்மொழி
வீற்றிருந்து, ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் *
ஆற்றல் மிக்காளும் அம்மானை, வெம்மா பிளந்தான் தன்னைப் *
போற்றி யென்றே கைகளாரத் தொழுது, சொல் மாலைகள் *
ஏற்ற நோற்றேற்கு இனியென்ன குறை, எழுமையுமே? 4.5.1
மைய கண்ணாள் மலர் மேலுறைவாள், உறை மார்பினன் *
செய்ய கோலத் தடங்கண்ணன், விண்ணோர் பெருமான் தன்னை *
மொய்ய சொல்லால் இசை மாலைகளேத்தி, உள்ளப் பெற்றேன் *
வெய்ய நோய்கள் முழுதும், வியன் ஞாலத்து வீயவே. 4.5.2
வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்த, நம் அச்சுதன் *
வீவில் சீரன் மலர்க் கண்ணன், விண்ணோர் பெருமான் தன்னை *
வீவில் காலம் இசை மாலைகளேத்தி, மேவப் பெற்றேன் *
வீவிலின்பம் மிக, எல்லை நிகழ்ந்தனன் மேவியே. 4.5.3
மேவி நின்று தொழுவார் வினை போக, மேவும் பிரான் *
தூவியம் புள்ளுடையான், அடலாழி யம்மான் தன்னை *
நாவியலால் இசை மாலைகளேத்தி, நண்ணப் பெற்றேன் *
ஆவி என்னாவியை, யானறியேன் செய்த வாற்றையே. 4.5.4
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை, அமரர் தம்
ஏற்றை * எல்லாப் பொருளும் விரித்தானை, எம்மான் தன்னை *
மாற்ற மாலை புனைந்தேத்தி, நாளும் மகிழ்வெய்தினேன் *
காற்றின் முன்னம் கடுகி, வினை நோய்கள் கரியவே. 4.5.5
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே யிடும் *
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை *
உரிய சொல்லால் இசை மாலைகளேத்தி உள்ளப் பெற்றேற்கு *
அரியதுண்டோ எனக்கு? இன்று தொட்டும் இனியென்றுமே. 4.5.6
என்று மொன்றாகி, ஒத்தாரும் மிக்கார்களும் * தன் தனக்கு
இன்றி நின்றானை, எல்லாவுலகு முடையான் தன்னைக் *
குன்ற மொன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் *
நன்று சூட்டும் விதி யெய்தினம், என்ன குறை நமக்கே? 4.5.7
நமக்கும், பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை * ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும், பெருமானைத் * தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு * இனி யாவர் நிகர், அகல் வானத்தே ? 4.5.8
வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் * எண் திசையும் தவிராது நின்றான் தன்னைக் *
கூனற் சங்கத் தடக்கை யவனைக் குடமாடியை
வானக் கோனைக் * கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே ? 4.5.9
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் *
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும், மணங் கூடியும் *
கண்ட வாற்றால், தனதே யுலகென நின்றான் தன்னை *
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே. 4.5.10
மாரி மாறாத தண்அம், மலை வேங்கடத் தண்ணலை *
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ், குருகூர் நகர்க் *
காரி மாறன் சடகோபன், சொல்லாயிரத்து இப்பத்தால் *
வேரி மாறாத பூமேலிருப்பாள், வினை தீர்க்குமே. 4.5.11 திருவேங்கடம் திருப்பதி