திருவாய்மொழி
நான்காம் பத்து
எட்டாம் திருவாய்மொழி
ஏறாளும் இறையோனும், திசைமுகனும் திருமகளும் *
கூறாளும் தனி யுடம்பன், குலங்குலமா அசுரர்களை *
நீறாகும் படியாக, நிருமித்துப் படை தொட்ட *
மாறாளன் கவராத மணிமாமை, குறைவிலமே. 4.8.1
மணிமாமை குறைவில்லா, மலர் மாதருறை மார்பன் *
அணிமானத் தடவரைத் தோள், அடலாழித் தடக்கையன் *
பணிமானம் பிழையாமே, அடியேனைப் பணி கொண்ட *
மணிமாயன் கவராத மடநெஞ்சால், குறைவிலமே. 4.8.2
மடநெஞ்சால் குறைவில்லா, மகள் தாய் செய்தொரு பேய்ச்சி *
விட நஞ்ச முலை சுவைத்த, மிகு ஞானச் சிறு குழவி *
பட நாகத்தணைக் கிடந்த, பருவரைத் தோள் பரம் புருடன் *
நெடு மாயன் கவராத நிறைவினால், குறைவிலமே. 4.8.3
நிறைவினால்குறைவில்லா, நெடும்பணைத்தோள் மடப்பின்னை *
பொறையினால் முலையணைவான், பொருவிடை யேழடர்த்துகந்த *
கறையினார் துவருடுக்கை, கடையாவின் கழிகோல்கை *
சறையினார் கவராத தளிர் நிறத்தால், குறைவிலமே. 4.8.4
தளிர் நிறத்தால் குறைவில்லாத், தனிச் சிறையில் விளப்புற்ற *
கிளி மொழியாள் காரணமாக், கிளரரக்கன் நகரெரித்த *
களிமலர்த் துழாயலங்கல், கமழ் முடியன் கடல் ஞாலத்து *
அளிமிக்கான் கவராத அறிவினால், குறைவிலமே. 4.8.5
அறிவினால் குறைவில்லா, அகல் ஞாலத்தவரறிய *
நெறி யெல்லா மெடுத்துரைத்த, நிறை ஞானத்தொரு மூர்த்தி *
குறிய மாணுருவாகிக், கொடுங் கோளால் நிலம் கொண்ட *
கிறியம்மான் கவராத கிளரொளியால், குறைவிலமே. 4.8.6
கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து *
கிளரொளிய இரணியனது, அகல் மார்பம் கிழித்துகந்த *
வளரொளிய கனலாழி, வலம்புரியன் மணிநீல *
வளரொளியான் கவராத வரிவளையால், குறைவிலமே. 4.8.7
வரிவளையால் குறைவில்லாப், பெரு முழக்கால் அடங்காரை *
எரியழலம் புகவூதி, இருநிலமுன் துயர் தவிர்த்த *
தெரிவரிய சிவன் பிரமன், அமரர் கோன் பணிந்தேத்தும் *
விரிபுகழான் கவராத மேகலையால், குறைவிலமே. 4.8.8
மேகலையால் குறைவில்லா, மெலிவுற்ற வகலல்குல் *
போகமகள் புகழ்த் தந்தை, விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல், உலகெல்லாம் நன்கொடுங்க *
யோகணைவான் கவராத உடம்பினால், குறைவிலமே. 4.8.9
உடம்பினால் குறைவில்லா, உயிர் பிரிந்த மலைத் துண்டம் *
கிடந்தன போல் துணிபலவா, அசுரர் குழாம் துணித்துகந்த *
தடம் புனல சடை முடியன், தனியொரு கூறமர்ந்துறையும் *
உடம்புடையான் கவராத உயிரினால், குறைவிலமே. 4.8.10
உயிரினால் குறைவில்லா, உலகேழ் தன்னுள்ளொடுக்கித் *
தயிர் வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன் *
செயிரில் சொல்லிசை மாலை, ஆயிரத்துள் இப்பத்தால் *
வயிரம் சேர் பிறப்பறுத்து, வைகுந்தம் நண்ணுவரே. 4.8.11