திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
முதல் திருவாய்மொழி
கொண்ட பெண்டிர் மக்களுற்றார், சுற்றத்தவர் பிறரும் *
கண்டதோடு பட்டதல்லால், காதல் மற்று யாதுமில்லை *
எண் திசையும் கீழும் மேலும், முற்றவும் உண்ட பிரான் *
தொண்டரோமாய் உய்யலல்லால், இல்லை கண்டீர் துணையே. 9.1.1
துணையும் சார்வு மாகுவார் போல், சுற்றத்தவர் பிறரும் *
அணைய வந்த ஆக்கமுண்டேல், அட்டைகள் போல் சுவைப்பர் *
கணை யொன்றாலே ஏழ் மரமும் எய்த, எம் கார் முகிலைப் *
புணை யென்றுய்யப் போகலல்லால், இல்லை கண்டீர் பொருளே. 9.1.2
பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்றெழுவர்*
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே ! என்பாருமில்லை *
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *
அருள் கொளாளாய் உய்யலல்லால் இல்லை கண்டீர் அரணே. 9.1.3 வடமதுரை
அரணமாவர் அற்ற காலைக்கு, என்றென் றமைக்கப் பட்டார் * இரணங் கொண்ட தெப்பராவர், இன்றி யிட்டாலு மஃதே *
வருணித் தென்னே? வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
சரணென் றுய்யப் போகலல்லால், இல்லை கண்டீர் சதிரே. 9.1.4 வடமதுரை
சதுரமென்று தம்மைத் தாமே, சம்மதித்து இன்மொழியார் *
மதுர போகம் துற்றவரே, வைகி மற்றொன்றுறுவர் *
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க, வடமதுரைப் பிறந்தாற்கு *
எதிர் கொளாளாய் உய்யலல்லால், இல்லை கண்டீர் இன்பமே. 9.1.5 வடமதுரை
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ ! உள்ளது நினையாதே *
தொல்லையார்க ளெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் ? *
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன், வண்புகழே *
சொல்லி யுய்யப் போகலல்லால், மற்றொன் றில்லை சுருக்கே. 9.1.6 வடமதுரை
மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம், மாநிலத்தெவ்வுயிர்க்கும்*
சிற்ற வேண்டா சிந்திப்பே யமையும், கண்டீர்கள் அந்தோ ! *
குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் *
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல், கண்டீர் குணமே. 9.1.7 வடமதுரை
வாழ்தல் கண்டீர் குணமிதந்தோ ? மாயவனடி பரவி *
போழ்து போக உள்ளகிற்கும், புன்மை யிலாதவர்க்கு *
வாழ் துணையா, வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே *
வீழ் துணையாப் போமிதனில், யாதுமில்லை மிக்கதே. 9.1.8 வடமதுரை
யாதுமில்லை மிக்கதனில், என்றென்றது கருதிக் *
காது செய்வான் கூதை செய்து, கடை முறை வாழ்க்கையும் போம் *
மாதுகிலின் கொடிக் கொள் மாட, வடமதுரைப் பிறந்த *
தாது சேர் தோள் கண்ணலல்லால், இல்லை கண்டீர் சரணே. 9.1.9 வடமதுரை
கண்ணலல்லால் இல்லை கண்டீர் சரண், அது நிற்க வந்து *
மண்ணின் பாரம் நீக்குதற்கே, வடமதுரைப் பிறந்தான் *
திண்ணமா நும்முடைமை உண்டேல், அவனடி சேர்த்து உய்ம்மினோ *
எண்ண வேண்டா நும்மதாதும், அவனன்றி மற்றில்லையே. 9.1.10 வடமதுரை
ஆதுமில்லை மற்றவனில் என்று, அதுவே துணிந்து *
தாதுசேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன *
தீதிலாத வொண்தமிழ்கள், இவையாயிரத்துள் இப்பத்தும் *
ஓதவல்ல பிராக்கள், நம்மையாளுடையார்கள் பண்டே. 9.1.11 வடமதுரை