திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி
மாலை நண்ணித், தொழுதெழுமினோ வினை கெடக் *
காலை மாலை, கமல மலரிட்டு நீர் *
வேலை மோதும் மதிள் சூழ், திருக்கண்ணபுரத்து *
ஆலின் மேலால் அமர்ந்தான், அடியிணைகளே. 9.10.1 திருக்கண்ணபுரம்
கள்ளவிழும் மலரிட்டு, நீர் இறைஞ்சுமின் *
நள்ளி சேரும் வயல் சூழ், கிடங்கின் புடை *
வெள்ளி யேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம்
உள்ளி * நாளும் தொழுதெழுமினோ, தொண்டரே ! 9.10.2 திருக்கண்ணபுரம்
தொண்டர் ! நுந்தம் துயர் போக, நீர் ஏகமாய் *
விண்டு வாடா மலரிட்டு, நீர் இறைஞ்சுமின் *
வண்டு பாடும் பொழில் சூழ், திருக்கண்ணபுரத்து *
அண்ட வாணன் அமரர் பெருமானையே. 9.10.3 திருக்கண்ணபுரம்
மானை நோக்கி, மடப் பின்னை தன் கேள்வனைத் *
தேனை, வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் *
வானை யுந்தும் மதிள் சூழ், திருக்கண்ணபுரம் *
தான் நயந்த பெருமான், சரணாகுமே. 9.10.4 திருக்கண்ணபுரம்
சரணமாகும், தனதாளடைந்தார்க் கெல்லாம் *
மரணமானால், வைகுந்தம் கொடுக்கும் பிரான் *
அரணமைந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரத்
தரணியாளன் * தனதன்பர்க்கு, அன்பாகுமே. 9.10.5 திருக்கண்ணபுரம்
அன்பனாகும், தனதாளடைந்தார்க்கெல்லாம் *
செம்பொனாகத்து, அவுணனுடல் கீண்டவன் *
நன்பொனேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரத்து
அன்பன் * நாளும், தன மெய்யர்க்கு மெய்யனே. 9.10.6 திருக்கண்ணபுரம்
மெய்யனாகும், விரும்பித் தொழுவார்க்கெல்லாம் *
பொய்யனாகும், புறமே தொழுவார்க்கெல்லாம் *
செய்யில் வாளையுகளும், திருக்கண்ணபுரத்து
ஐயன் * ஆகத்தணைப்பார்கட்கு, அணியனே. 9.10.7 திருக்கண்ணபுரம்
அணியனாகும், தனதாளடைந்தார்க்கெல்லாம் *
பிணியும் சாரா, பிறவி கெடுத்தாளும் *
மணிபொனேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம்
பணிமின் * நாளும், பரமேட்டி தன் பாதமே. 9.10.8 திருக்கண்ணபுரம்
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி *
ஏதம் சாரா, எனக்கேல் இனியென் குறை ? *
வேத நாவர் விரும்பும், திருக்கண்ணபுரத்து
ஆதியானை * அடைந்தார்க்கு, அல்லலில்லையே. 9.10.9 திருக்கண்ணபுரம்
இல்லை யல்லல், எனக்கேல் இனி என் குறை ? *
அல்லி மாதரமரும், திருமார்பினன் *
கல்லிலேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம்
சொல்ல * நாளும், துயர் பாடு சாராவே. 9.10.10 திருக்கண்ணபுரம்
பாடு சாரா வினை, பற்றற வேண்டுவீர் ! *
மாட நீடு, குருகூர்ச் சடகோபன் * சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள், இப்பத்தும்
பாடியாடிப் * பணிமின், அவன் தாள்களே. 9.10.11 திருக்கண்ணபுரம்
**********