திருவாய்மொழி
பத்தாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
கெடும் இடராய வெல்லாம், கேசவா வென்ன * நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும், குறுக கில்லார் *
விடமுடை யரவில், பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் *
தடமுடை வயல் அனந்தபுரநகர், புகுதும் இன்றே. 10.2.1 திருவனந்தபுரம்
இன்று போய்ப் புகுதிராகில், எழுமையும் ஏதம் சாரா *
குன்று நேர் மாடமாடே, குருந்து சேர் செருந்தி புன்னை *
மன்றலர் பொழில், அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் * ஓராயிரமாம், உள்ளுவார்க்கு உம்பரூரே. 10.2.2 திருவனந்தபுரம்
ஊரும் புட்கொடியுமஃதே, உலகெல்லா முண்டுமிழ்ந்தான் *
சேரும் தண்ணனந்தபுரம், சிக்கெனப் புகுதிராகில் *
தீரும் நோய்வினைகளெல்லாம், திண்ணம்நாம் அறியச் சொன்னோம் *
பேருமோராயிரத்துள் ஒன்று, நீர் பேசுமினே. 10.2.3 திருவனந்தபுரம்
பேசுமின் கூசமின்றிப், பெரிய நீர் வேலை சூழ்ந்து *
வாசமே கமழும் சோலை, வயலணி யனந்தபுரம் *
நேசஞ் செய்து உறைகின்றானை, நெறிமையால் மலர்கள் தூவிப் *
பூசனை செய்கின்றார்கள், புண்ணியம் செய்தவாறே ! 10.2.4 திருவனந்தபுரம்
புண்ணியம் செய்து, நல்ல புனலொடு மலர்கள் தூவி *
எண்ணுமின் எந்தை நாமம், இப்பிறப் பறுக்கும் அப்பால் *
திண்ணம் நாம் அறியச் சொன்னோம், செறிபொழிலனந்தபுரத்து *
அண்ணலார் கமலபாதம் அணுகுவார், அமரராவார். 10.2.5 திருவனந்தபுரம்
அமரராய்த் திரிகின்றார்கட்கு, ஆதிசே ரனந்தபுரத்து *
அமரர் கோனர்ச்சிக்கின்று, அங்ககப் பணி செய்வர் விண்ணோர் *
நமர்களோ ! சொல்லக் கேண்மின், நாமும் போய் நணுக வேண்டும் *
குமரனார் தாதை துன்பம் துடைத்த, கோவிந்தனாரே. 10.2.6 திருவனந்தபுரம்
துடைத்த கோவிந்தனாரே, உலகுயிர் தேவும் மற்றும் *
படைத்த எம் பரம மூர்த்தி, பாம்பணைப் பள்ளி கொண்டான் *
மடைத்தலை வாளை பாயும் வயலணி, அனந்தபுரம் *
கடைத்தலை சீய்க்கப் பெற்றால், கடுவினை களையலாமே. 10.2.7 திருவனந்தபுரம்
கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை *
இடவகை கொண்டதென்பர், எழிலணி யனந்தபுரம் *
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண *
நடமினோ நமர்களுள்ளீர், நாம் உமக்கறியச் சொன்னோம். 10.2.8 திருவனந்தபுரம்
நாம் உமக்கு அறியச் சொன்ன, நாள்களும் நணியவான *
சேமம் நன்குடைத்துக் கண்டீர், செறிபொழிலனந்தபுரம் *
தூமநல் விரை மலர்கள், துவளற ஆய்ந்து கொண்டு *
வாமனனடிக் கென்றேத்த, மாய்ந்தறும் வினைகள் தாமே. 10.2.9 திருவனந்தபுரம்
மாய்ந்தறும் வினைகள் தாமே, மாதவா ! என்ன * நாளும்
ஏய்ந்த பொன்மதிள், அனந்தபுர நகரெந்தைக் கென்று *
சாந்தொடு விளக்கம் தூபம், தாமரை மலர்கள் நல்ல *
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார், அந்தமில் புகழினாரே. 10.2.10 திருவனந்தபுரம்
அந்தமில் புகழ், அனந்தபுர நகராதி தன்னைக் *
கொந்தலர் பொழில், குருகூர் மாறன் சொல்லாயிரத்துள் *
ஐந்தினோடைந்தும் வல்லார், அணைவர் போய் அமருலகில் *
பைந்தொடி மடந்தையர் தம், வேய்மரு தோளிணையே. 10.2.11 திருவனந்தபுரம்