திருவாய்மொழி
பத்தாம் பத்து
ஐந்தாம் திருவாய்மொழி
கண்ணன் கழலிணை * நண்ணும் மனமுடையீர் ! *
எண்ணும் திருநாமம் * திண்ணம் நாரணமே. 10.5.1
நாரணன் எம்மான் * பாரணங்காளன் *
வாரணம் தொலைத்த * காரணன் தானே. 10.5.2
தானே உலகெல்லாம் * தானே படைத்திடந்து *
தானே உண்டுமிழ்ந்து * தானே யாள்வானே. 10.5.3
ஆள்வான் ஆழிநீர் * கோள்வா யரவணையான் *
தாள் வாய் மலரிட்டு * நாள் வாய் நாடீரே. 10.5.4
நாடீர் நாள் தோறும் * வாடா மலர் கொண்டு *
பாடீர் அவன் நாமம் * வீடே பெறலாமே. 10.5.5
மேயான் வேங்கடம் * காயா மலர் வண்ணன் *
பேயார் முலையுண்ட * வாயான் மாதவனே. 10.5.6 திருவேங்கடம் திருப்பதி
மாதவனென்றென்று * ஓத வல்லீரேல் *
தீதொன்றும் அடையா * ஏதம் சாராவே. 10.5.7
சாரா ஏதங்கள் * நீரார் முகில் வண்ணன் *
பேர் ஆர் ஓதுவார் * ஆரார் அமரரே. 10.5.8
அமரர்க்கு அரியானைத் * தமர்கட்கு எளியானை *
அமரத் தொழுவார்கட்கு * அமரா வினைகளே. 10.5.9
வினை வல்லிருளென்னும் * முனைகள் வெருவிப் போம் *
சுனை நன் மலரிட்டு நினைமின் * நெடியானே 10.5.10
நெடியானருள் சூடும் * படியான் சடகோபன் *
நொடி யாயிரத்து இப்பத்து * அடியார்க்கு அருள் பேறே. 10.5.11