திருவாய்மொழி
பத்தாம் பத்து
எட்டாம் திருவாய்மொழி
திருமாலிருஞ்சோலை மலை என்றேன், என்னத் *
திருமால் வந்து, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் *
குருமாமணி யுந்து புனல், பொன்னித் தென்பால் *
திருமால் சென்று சேர்விடம், தென் திருப்பேரே. 10.8.1 திருப்பேர்நகர்,
திருமாலிருஞ்சோலை
பேரே யுறைகின்ற பிரான், இன்று வந்து *
பேரேனென்று, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் *
காரேழ் கடலேழ், மலையே ழுலகுண்டும் *
ஆரா வயிற்றானை, அடங்கப் பிடித்தேனே. 10.8.2 திருப்பேர்நகர்
பிடித்தேன், பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் *
மடித்தேன், மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையைக் *
கொடிக் கோபுர மாடங்கள் சூழ், திருப்பேரான் *
அடிச் சேர்வது எனக்கு, எளிதாயினவாறே. 10.8.3 திருப்பேர்நகர்
எளிதாயின வாறென்று, என் கண்கள் களிப்பக் *
களிதாகிய சிந்தையனாய்க், களிக்கின்றேன் *
கிளி தாவிய சோலைகள் சூழ், திருப்பேரான் *
தெளிதாகிய, சேண் விசும்பு தருவானே. 10.8.4 திருப்பேர்நகர்
வானே தருவான், எனக்கா என்னோடொட்டி *
ஊனேய் குரம்பை, இதனுள் புகுந்து * இன்று
தானே தடுமாற்ற, வினைகள் தவிர்த்தான் *
தேனேய் பொழில், தென் திருப்பேர் நகரானே. 10.8.5 திருப்பேர்நகர்
திருப்பேர் நகரான், திருமாலிருஞ்சோலைப் *
பொருப்பே யுறைகின்ற பிரான், இன்று வந்து *
இருப்பேனென்று, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் *
விருப்பே பெற்று, அமுதமுண்டு களித்தேனே. 10.8.6 திருப்பேர்நகர்,
திருமாலிருஞ்சோலை
உண்டு களித்தேற்கு, உம்பர் என் குறை? *
மேலைத் தொண்டு உகளித்து, அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் *
வண்டு களிக்கும் பொழில் சூழ், திருப்பேரான் *
கண்டு களிப்பக், கண்ணுள் நின்று அகலானே. 10.8.7 திருப்பேர்நகர்
கண்ணுள் நின்று அகலான், கருத்தின் கண் பெரியன் *
எண்ணில் நுண்பொருள், ஏழிசையின் சுவை தானே *
வண்ண நன்மணி மாடங்கள் சூழ், திருப்பேரான் *
திண்ணம் என் மனத்துப் புகுந்தான், செறிந்து இன்றே. 10.8.8 திருப்பேர்நகர்
இன்று என்னைப் பொருளாக்கித், தன்னை யென்னுள் வைத்தான் *
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது, என் செய்வான் ? *
குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ், திருப்பேரான் *
ஒன்றெனக் கருள் செய்ய, உணர்த்த லுற்றேனே. 10.8.9 திருப்பேர்நகர்
உற்றேன் உகந்து பணி செய்து, உன பாதம்
பெற்றேன் * ஈதே இன்னம் வேண்டுவது, எந்தாய் ! *
கற்றார் மறை வாணர்கள் வாழ், திருப்பேராற்கு *
அற்றார் அடியார் தமக்கு, அல்லல் நில்லாவே. 10.8.10 திருப்பேர்நகர்
நில்லா அல்லல் நீள் வயல் சூழ், திருப்பேர் மேல் *
நல்லார் பலர் வாழ், குருகூர்ச் சடகோபன் *
சொல்லார் தமிழ் ஆயிரத்துள், இவை பத்தும்
வல்லார் * தொண்டர் ஆள்வது, சூழ் பொன் விசும்பே. 10.8.11 திருப்பேர்நகர்