திருவாய்மொழி
பத்தாம் பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
சூழ் விசும்பணி முகில், தூரியம் முழக்கின *
ஆழ் கடலலை திரை, கையெடுத் தாடின *
ஏழ் பொழிலும், வளமேந்திய என்னப்பன் *
வாழ் புகழ், நாரணன் தமரைக் கண்டுகந்தே. 10.9.1
நாரணன் தமரைக் கண்டுகந்து, நல் நீர்முகில் *
பூரண பொற்குடம், பூரித்தது உயர் விண்ணில் *
நீரணி கடல்கள், நின்றார்த்தன * நெடு வரைத்
தோரணம் நிரைத்து, எங்கும் தொழுதனருலகே. 10.9.2
தொழுதனர் உலகர்கள், தூப நல் மலர் மழை
பொழிவனர் * பூமியன்றளந்தவன், தமர் முன்னே *
எழுமினென்று இருமருங் கிசைத்தனர், முனிவர்கள் *
வழியிது வைகுந்தற்கு என்று, வந்து எதிரே. 10.9.3
எதிரெதிர் இமையவர், இருப்பிடம் வகுத்தனர் *
கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர் *
அதிர் குரல் முரசங்கள், அலைகடல் முழக்கொத்த *
மதுவிரி துழாய்முடி, மாதவன் தமர்க்கே. 10.9.4
மாதவன் தமரென்று, வாசலில் வானவர் *
போதுமின் எமதிடம், புகுதுக வென்றலும் *
கீதங்கள் பாடினர், கின்னரர் கெருடர்கள் *
வேத நல்வாயவர், வேள்வியுள் மடுத்தே. 10.9.5
வேள்வியுள் மடுத்தலும், விரை கமழ் நறும்புகை *
காளங்கள் வலம்புரி, கலந்தெங்கும் இசைத்தனர் *
ஆண்மின்கள் வானகம், ஆழியான் தமரென்று *
வாளொண் கண் மடந்தையர், வாழ்த்தினர் மகிழ்ந்தே. 10.9.6
மடந்தையர் வாழ்த்தலும், மருதரும் வசுக்களும் *
தொடர்ந்து எங்கும், தோத்திரம் சொல்லினர் *
தொடு கடல் கிடந்த எங்கேசவன், கிளரொளி மணிமுடி *
குடந்தை எங்கோவலன், குடியடியார்க்கே. 10.9.7 திருக்குடந்தை (கும்பகோணம்),
திருப்பாற்கடல்
குடியடியார் இவர், கோவிந்தன் தனக்கென்று *
முடியுடை வானவர், முறை முறை எதிர் கொள்ளக் *
கொடியணி நெடுமதிள், கோபுரம் குறுகினர் *
வடிவுடை மாதவன் வைகுந்தம், புகவே. 10.9.8
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர் *
வைகுந்தன் தமர் எமர், எமதிடம் புகுதென்று *
வைகுந்தத்து, அமரரும் முனிவரும் வியந்தனர் *
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 10.9.9
விதிவகை புகுந்தனரென்று, நல் வேதியர் *
பதியினில் பாங்கினில், பாதங்கள் கழுவினர் *
நிதியும் நற்சுண்ணமும், நிறைகுட விளக்கமும் *
மதிமுக மடந்தையர், ஏந்தினர் வந்தே. 10.9.10
வந்து அவர் எதிர் கொள்ள, மாமணி மண்டபத்து *
அந்தமில் பேரின்பத்து, அடியரோ டிருந்தமை *
கொந்தலர் பொழில், குருகூர்ச் சடகோபன் * சொல்
சந்தங்கள் ஆயிரத்து, இவை வல்லார் முனிவரே. 10.9.11