[highlight_content]

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஸ்ரீ :

மணவாளமாமுனிகள் அருளிச்செய்த

திருவாய்மொழி நூற்றந்தாதி

தனியன்கள்

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்*

சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்*

நல்ல மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்*

தணவா நூற்றந்தாதிதான்.

.மன்னுபுகழ்சேர் மணவாளமாமுனிவன்*

தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே சொன்ன*

திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை*

ஒருவாதருந்து நெஞ்சே! உற்று.

** உயாவே பரன்படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு*

உயர்வேதம் நேர்கொண்டுரைத்து * – மயர்வேதும்

வாராமல்  மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்*

வேராகவே விளையும் வீடு.                                      1.

** வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன்தாள்*

நாடு நலத்தால் அடைய  நன்குரைக்கும் * – நீடு புகழ்

வண்குருகூர்மாறன்  இந்த மாநிலத்தோர்தாம் வாழப்*

பண்புடனே பாடியருள் பத்து.                                    2

பத்துடையோர்க்கு என்றும்  பரனெளியனாம் பிறப்பால்*

முத்தி தரும் மாநிலத்தீர்!  மூண்டவன்பால் * – பத்திசெய்யும்

என்றுரைத்த  மாறன்தனின் சொல்லால் போம்*

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை.                           3.

அஞ்சிறைய புட்கள் தமை  ஆழியானுக்கு*

நீர் என்செயலைச் சொல்லுமென இரந்து*

விஞ்ச நலங்கியதும் மாறன் இங்கே  நாயகனைத் தேடி*

மலங்கியதும் பத்திவளம்.                                           4

வளம்மிக்க மால்பெருமை  மன்னுயிரின் தண்மை*

உளமுற்றங்கு ஊடுருவ ஓர்ந்து * – தளர்வுற்று

நீங்க நினை மாறனை மால்  நீடிலகு சீலத்தால்*

பாங்குடனே சேர்த்தான் பரிந்து.                                     5

பரிவதிலீசன் படியைப்  பண்புடனே பேசி*

அரி அனலன் ஆராதனைக்கென்று*

உரிமையுடன் ஓதியருள் மாறன்  ஒழிவித்தான் இவ்வுலகில்*

பேதையர்கள் தங்கள் பிறப்பு.                                       6

பிறவியற்று நீள்விசும்பில்  பேரின்பமுய்க்கும்*

திறமளிக்கும் சீலத் திருமால்* –

அறவினியன் பற்றுமவர்க்கென்று   பகர்மாறன் பாதமே*

உற்ற துணையென்று உள்ளமே! ஓடு.                                7

.

ஓடு மனம் செய்கை  உரை ஒன்றி நில்லாதாருடனே*

கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை*

நாடறிய ஓர்ந்தவன் தன்செம்மை   உரை செய்த மாறனென*

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை.                                   8

இவை அறிந்தோர் தம்மளவில்   ஈசன் உவந்தாற்ற*

அவயவங்கள் தோறுமணையும்  சுவையதனைப் பெற்று*

ஆர்வத்தால் மாறன்  பேசின சொல் பேச*

மால் பொற்றாள் நம் சென்னி பொரும்.                              9.

பொருமாழி சங்குடையோன்   பூதலத்தே வந்து*

தருமாறோர் ஏதுவறத் தன்னை*

திரமாகப் பார்த்துரை செய் மாறன்   பதம் பணிகவென் சென்னி*

வாழ்த்திடுக என்னுடைய வாய்.                                 10

.

வாயுந் திருமால் மறைய நிற்க*

ஆற்றாமை போய்விஞ்சி மிக்க புலம்புதலாய்*

ஆய அறியாதவற்றோடு   அணைந்தழுத மாறன்*

செறிவாரை நோக்கும் திணிந்து.                                    11

திண்ணிதா மாறன்   திருமால் பரத்துவத்தை*

நண்ணி அவதாரத்தே நன்குரைத்த*

வண்ணமறிந்து அற்றார்கள் யாவர்   அவரடிக்கே ஆங்கவர்பால்*

உற்றாரை மேலிடாதூன்.                                       12

ஊனமறவே வந்து  உள்கலந்த மாலினிமை ஆனது*

அனுபவித்தற்காம் துணையா * – வானில்

அடியார் குழாம்கூட  ஆசையுற்ற மாறன்*

அடியாருடன் நெஞ்சே! ஆடு.                                       13

ஆடி மகிழ்வானில்  அடியார் குழாங்களுடன்*

கூடி இன்பமெய்தாக் குறையதனால்* வாடிமிக

அன்புற்றார் தம்நிலைமை   ஆய்ந்துரைக்க மோகித்துத்*

துன்புற்றான் மாறனந்தோ!.                                         14

அந்தாமத்தன்பால்  அடியார்களோடு இறைவன்*

வந்தாரத் தான் கலந்த வண்மையினால்*

சந்தாபம் தீர்ந்த  சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!*

வாய்ந்த அன்பை நாள்தோறும் வை.                             15

வைகுந்தன் வந்து  கலந்ததற்பின் வாழ் மாறன்*

செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து*

நைகின்ற தன்மைதனைக்கண்டு  உன்னைத்தான்

விடேனென்றுரைக்க*  வன்மையடைந்தான் கேசவன்.             16

கேசவனால் எந்தமர்கள்  கீழ் மேல் எழு பிறப்பும்*

தேசடைந்தாரென்று சிறந்துரைத்த* – வீசுபுகழ் மாறன்

மலரடியே   மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு*

ஆறென்று நெஞ்சே! அணை.                                       17

அணைந்தவர்கள் தம்முடனே  ஆயனருட்காளாம்*

குணந்தனையே கொண்டு உலகைக் கூட்ட* – இணங்கி மிக

மாசில் உபதேசம் செய்  மாறன் மலரடியே*

வீசுபுகழ் எம்மா வீடு.                                       18

 எம்மா வீடும் வேண்டா  என்தனக்கு உன் தாளிணையே*

அம்மா அமையுமென ஆய்ந்துரைத்த*

நம்முடைய வாழ் முதலாம் மாறன்   மலர்த்தாளினை சூடி*

கீழ்மையற்று நெஞ்சே! கிளர்.                                       19

கிளரொளி சேர்  கீழுரைத்த பேறு கிடைக்க*

வளரொளிமால் சோலை மலைக்கே* – தளர்வறவே

நெஞ்சை வைத்துச் சேருமெனும்  நீடுபுகழ் மாறன் தாள்*

முன் செலுத்துவோம் எம்முடி.                                     20

முடியார் திருமலையில்  மூண்டு நின்ற மாறன்*

அடிவாரந் தன்னில் அழகர் வடிவழகைப் பற்றி*

முடியும்அடியும் படிகலனும்*

முற்றும் அனுபவித்தான் முன்.                                     21

முன்னம் அழகர் எழில்  மூழ்கும் குருகையர் கோன்*

இன்ன அளவென்ன எனக்கரிதாய்த் தென்ன*

கரணக்குறையின் கலக்கத்தை*

கண்ணன் ஒருமைப்படுத்தான் ஒழித்து.                          22

**ஒழிவிலாக்காலம்   உடனாகி மன்னி*

வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு*

எழுசிகர வேங்கடத்துப் பாரித்த  மிக்கநலம் சேர்மாறன்*

பூங்கழலை நெஞ்சோ புகழ்.                                    23

புகழ் ஒன்றுமால்  எப்பொருள்களும் தானாய்*

நிகழ்கின்ற நேர்காட்டி நிற்க*

மகிழ்மாறன் எங்கும் அடிமை செய்ய   இச்சித்து வாசிகமாய்*

அங்கடிமை செய்தான் மொய்ம்பால்.                            24

 மொய்ம்பாரும் மாலுக்கு  முன்னடிமை செய்து உவப்பால்*

அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும்*

அன்பிலா மூடரை நிந்தித்தும்  மொழிந்தருளும் மாறன்பால்*

தேடரிய பத்திநெஞ்சே! செய்.                              25

செய்ய பரத்துவமாய்ச்  சீரார் வியூகமாய்*

துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள்*

எய்துமவர்க்கு இந்நிலத்தில்  அர்ச்சாவதாரம் எளிதென்றான்*

பன்னு தமிழ்மாறன் பயின்று.                                   26

பயிலுந் திருமால் பதந்தன்னில்*

நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு*

இயல்வுடனே ஆளானார்க்கு ஆளாகும்  மாறன் அடியதனில்*

ஆளாகார் சன்மம் முடியா.                                            27

முடியாத ஆசைமிக  முற்றுகரணங்கள்*

அடியார் தமைவிட்டு அவன்பால் படியா*

ஒன்றொன்றின் செயல் விரும்ப  உள்ளதெல்லாம் தான் விரும்ப*

துன்னியதே மாறன்தன் சொல்.                                 28

சொன்னாவில் வாழ்புலவீர்!  சோறுகூறைக்காக*

மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும்?*

என்னுடனே மாதவனை  ஏத்துமெனும் குருகூர்*

மன்னருளால் மாறும் சன்மம்.                                  29

சன்மம் பல செய்து  தான் இவ்வுலகளிக்கும்*

நன்மையுடைய மால் குணத்தை நாள் தோறும்*

இம்மையிலே ஏத்துமின்பம் பெற்றேன்  என்னும் மாறனை உலகீர்!*

நாத்தழும்ப ஏத்தும்ஒருநாள்.                                          30

ஒருநாயகமாய் உலகுக்கு*

வானோர் இருநாட்டிலேறி  உய்க்கும் இன்பம் திரமாகா*

 மன்னுயிர்ப்போகம் தீது   மாலடிமையே இனிதாம்*

பன்னியிவை மாறனுரைப்பால்.                                  31

பாலரைப்போல் சீழ்கிப்  பரனளவில் வேட்கையால்*

காலத்தால் தேசத்தால் கைகழிந்து*

சால அரிதான போகத்தில்  ஆசையுற்று நைந்தான்*

குருகூரில் வந்துதித்த கோ.                                    32

கோவானவீசன்  குறையெல்லாந் தீரவே*

ஓவாத காலத்து உவாதிதனை*

மேவிக் கழித்தடையக் காட்டிக்  கலந்த குணமாறன்*

வழுத்துதலால் வாழ்ந்த்து இந்த மண்.                           33

மண்ணுலகில் முன்கலந்து   மால்பிரிகையால்*

மாறன் பெண்ணிலைமையாய்க் காதல் பித்தேறி* _ எண்ணிடில்

முன் போலி முதலான பொருளை  அவனாய் நினைந்து*

மேல் விழுந்தான் மையல் தனின் வீறு.                         34

வீற்றிருக்கும்மால் விண்ணில்  மிக்க மயல் தன்னை*

ஆற்றுதற்காத் தன் பெருமையானதெல்லாம்*

தோற்றவந்து நன்று கலக்கப்போற்றி   நன்குகந்து வீறுரைத்தான்*

சென்ற துயர் மாறன் தீர்ந்து.                                 35

 தீர்ப்பாரிலாத  மயல் தீரக் கலந்தமால்*

ஓர்ப்பாதுமின்றி உடன்பிரிய*

நேர்க்க அறிவழிந்து  உற்றாரும் அறக்கலங்க*

பேர்கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்.                      36.

சீலமிகு கண்ணன்  திருநாமத்தால் உணர்ந்து*

மேலவன் தன் மேனிகண்டு மேவுதற்கு*

சால வருந்தி இரவும் பகலும்  மாறாமல் கூப்பிட்டு*

இருந்தனனே தென் குருகூரேறு.                                37

ஏறு திருவுடையை   ஈசன் உகப்புக்கு*

வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர்* – தேறுங்கால்

என்றனக்கும் வேண்டா   எனும் மாறன்தாளை நெஞ்சே!*

நந்தமக்குப் பேறாக நண்ணு.                                    38

நண்ணாது மாலடியை   நானிலத்தே வல்வினையால்*

எண்ணாராத் துன்பமுறும் இவ்வுயிர்கள்*

தண்ணிமையைக் கண்டிருக்கமாட்டாமல்  கண்கலங்கும் மாறனருள்*

உண்டு நமக்கு உற்ற துணையொன்று.                          39

**ஒன்றுமிலைத்தேவு  இவ்வுலகம் படைத்தமால்*

அன்றியென ஆருமறியவே* – நன்றாக

மூதலித்துப்பேசியருள்   மொய்ம் மகிழோன் தாள் தொழவே*

காதலிக்கும் என்னுடைய கை.                                  40

கையாரும் சக்கரத்தோன்  காதலின்றிக்கே இருக்க*

பொய்யாகப் பேசும் புறனுரைக்கு*

மெய்யான பேற்றை உபகரித்த  பேரருளின் தன்மைதனைப்*

போற்றினனே மாறன் பொலிந்து.                                41

பொலிக பொலிகவென்று  பூமகள்கோன் தொண்டர்*

மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி* – உலகில்

திருந்தாதார் தம்மைத்  திருத்தியமாறன் சொல்*

மருந்தாகப்போகும் மனமாசு.                                   42

மாசறுசோதி  கண்ணன் வந்து கலவாமையால்*

ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல்*

ஏசறவே மண்ணில் மடலூர  மாறன் ஒருமித்தான்*

உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்.                                43

ஊரநினைந்த  மடல் ஊரவும் ஒண்ணாதபடி*

கூரிருள்சேர் கங்குல் உடன் கூடிநின்று* – பேராமல்

தீது செய்ய மாறன்  திருவுள்ளத்துச் சென்ற துயர்*

ஓதுவதிங் கெங்ஙனேயோ?.                                    44

எங்ஙனே நீர் முனிவது  என்னை இனி நம்பியழகு*

இங்ஙனே தோன்றுகின்றது என்முன்னே*

அங்கன் உருவெளிப்பாடா  உரைத்த தமிழ்மாறன்*

கருதுமவர்க்கு இன்பக்கடல்.                                    45

கடல் ஞாலத்தீசனை  முன்காணாமல் நொந்தே*

உடனா அனுகரிக்கலுற்று* – திடமாக

வாய்ந்து அவனாய்த்தான் பேசும்  மாறன் உரையதனை*

ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்.                          46

நோற்ற நோன் பாதியிலேன்  உன்தனை விட்டாற்றகில்லேன்*

பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே சாற்றுகின்றேன்*

இங்கென்னிலை என்னும்  எழில்மாறன் சொல் வல்லார்*

அங்கு அமரர்க்கு ஆராவமுது.                                  47

**ஆராவமுதாழ்வார்  ஆதரித்தபேறுகளை*

தாராமையாலே தளர்ந்துமிக*

தீராத ஆசையுடன் ஆற்றாமைபேசி   அலமந்தான்*

மாசறுசீர் மாறனெம்மான்.                                      48

மாநலத்தால் மாறன்  திருவல்லவாழ் புகப்போய்*

தானிளைத்து வீழ்ந்து அவ்வூர் தன்னருகில்* – மேல்நலங்கித்

துன்பமுற்றுச் சொன்ன  சொலவுகற்பார் தங்களுக்கு*

பின் பிறக்க வேண்டாபிற.                                      49

பிறந்துலகம் காத்தளிக்கும்  பேரருட்கண்ணா!*

உன் சிறந்த குணத்தாலுருகும் சீலத்திறம் தவிர்ந்து*

சேர்ந்தனுபவிக்கும் நிலை  செய்யென்ற சீர்மாறன்*

வாய்ந்த பதத்தே மனமே! வைகு.                               50

வைகல் திருவண்வண்டூர்  வைகுமிராமனுக்கு*

என் செய்கைதனைப் புள்ளினங்காள்! செப்புமென*

கைகழிந்த காதலுடன் தூதுவிடும்  காரிமாறன் கழலே

மேதினியீர்! நீர் வணங்குமின்.                                   51

மின்னிடையார் சேர் கண்ணன்  மெத்தென வந்தானென்று*

தன்னிலைபோய்ப் பெண்ணிலையாய்த் தான் தள்ளி * – உன்னுடனே

கூடேனென்றூடும்  குருகையர்கோன் தாள் தொழவே*

நாள் தோறும் நெஞ்சமே! நல்கு.                                52

நல்ல வலத்தால்  நம்மைச்சேர்த்தோன் முன் நண்ணாரை*

வெல்லும் விருத்த விபூதியனென்று*

எல்லையறத் தானிருந்து வாழ்த்தும்  தமிழ்மாறன் சொல்வல்லார்*

வானவர்க்கு வாய்த்தகுரவர்.                                    53

குரவைமுதலாம்  கண்ணன் கோலச் செயல்கள்*

இரவுபகல் என்னாமல் என்றும் * – பரவுமனம்

பெற்றேனென்றே களித்துப்  பேசும் பராங்குசன் தன்*

சொல் தேனில் நெஞ்சே! துவள்.                                54

துவளறு சீர்மால் திறத்துத்  தொன்னலத்தால்*

நாளும் துவளறுதன் சீலமெல்லாம் சொன்னான்*

துவளறவே முன்னம் அனுபவத்தில்  மூழ்கி நின்ற மாறனதில்*

மன்னும் உவப்பால் வந்தமால்.                                 55

மாலுடனே தான் கலந்து   வாழப் பெறாமையால்*

சாலநைந்து தன்னுடைமை தானடையக் கோலியே*

தானிகழ வேண்டாமல்   தன்னை விடல் சொல் மாறன்

ஊனமறு சீர் நெஞ்சே! உண்.                                    56

உண்ணுஞ் சோறாதி   ஒரு மூன்றும் எம்பெருமான்*

கண்ணன் என்றே நீர்மல்கிக் கண்ணிணைகள்*

மண்ணுலகில் மன்னுதிருக்கோளூரில்  மாயன்பால் போம்மாறன்*

பொன்னடியே நந்தமக்குப் பொன்.                               57

பொன்னுலகு பூமியெல்லாம்  புள்ளினங்கட்கே வழங்கி*

என்னிடரை மாலுக்கு இயம்புமென*

மன்னு திருநாடு முதல்  தூது நல்கி விடும் மாறனையே*

நீடுலகீர்! போய் வணங்கும் நீர்.                                  58

நீராகிக் கேட்டவர்கள்  நெஞ்சழிய*

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பரிதா*

ஆராத காதலுடன் கூப்பிட்ட  காரிமாறன் சொல்லை*

ஓதிடவே உய்யும் உலகு.                                       59

உலகுய்யமால் நின்ற  உயர்வேங்கடத்தே*

அலர்மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியே*

வன் சரணாய்ச் சேர்ந்த  மகிழ்மாறன் தாளிணையே*

உன் சரணாய் நெஞ்சமே! உள்.                                  60

உண்ணிலா ஐவருடன் இருத்தி*  இவ்வுலகில்

எண்ணிலா மாயன்  எனை நலிய எண்ணுகின்றான்*

என்று நினைந்தோலமிட்ட  இன் புகழ்சேர் மாறனென*

குன்றி விடுமே பவக்கங்குல்.                                    61

**கங்குல் பகலாதி  கைவிஞ்சி மோகமுற*

அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து* – இங்கிவள்பால்

என் செய்ய நீர் எண்ணுகின்றதென்னும்   நிலைசேர் மாறன்*

அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்.                            62

வெள்ளிய நாமங்கேட்டு  விட்டகன்றபின் மோகம்*

தெள்ளியமால் தென்திருப்பேர் சென்றுபுக

உள்ளமங்கே பற்றி நின்ற தன்மை  பகரும் சடகோபற்கு*

 அற்றவர்கள் தாம் ஆழியார.                                   63

ஆழிவண்ணன்  தன் விசயம்  ஆனவை முற்றும் காட்டி*

வாழிதனாலென்று மகிழ்ந்து நிற்க* – ஊழிலவை

தன்னை இன்றுபோற்கண்டு   தானுரைத்த மாறன் சொல்*

பன்னுவரே நல்லது கற்பார்.                                    64

கற்றோர் கருதும்  விசயங்களுக்கெல்லாம்*

பற்றாம் விபவ குணப் பண்புகளை* – உற்றுணர்ந்து

மண்ணிலுள்ளோர் தம் இழவை  வாய்ந்துரைத்த மாறன் சொல்*

பண்ணில் இனிதான தமிழ்ப்பா.                                 65

பாமருவு வேதம்  பகர்மால் குணங்களுடன்*

ஆமழகு வேண்டப்பாடாமவற்றைத்* – தூமனத்தால்

நண்ணி அவனைக் காண  நன்குருகிக் கூப்பிட்ட*

அண்ணலை நண்ணார் ஏழையர்.                                66

ஏழையர்கள் நெஞ்சை  இளகுவிக்கும் மாலழகு*

சூழ வந்து தோன்றித் துயர்விளைக்க* – ஆழு மனந்

தன்னுடனே அவ்வழகைத்  தானுரைத்த மாறன்பால்*

மன்னுமவர் தீவினைபோம் மாய்ந்து.                            67

மாயாமல் தன்னைவைத்த  வைசித்திரியாலே*

தீயா விசித்திரமாச் சேர்பொருளோடு ஓயாமல்*

வாய்ந்து நிற்கும் மாயன்  வளமுரைத்த மாறனை நாம்*

ஏய்ந்துரைத்து வாழுநாளென்று.                                68

என்தனை நீயிங்கு வைத்தது  ஏதுக்கென*

மாலும் என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா*

நன்று கவிபாடவெனக்  கைம்மாறிலாமை*

பகர்மாறன் பாடணைவார்க்கு உண்டாமின்பம்.                   69

இன்பக்கவி பாடுவித்தோனை   இந்திரையோடு*

அன்புற்று வாழ் திருவாறன் விளையில்*

துன்பமற்காக கண்டடிமை செய்யக்  கருதிய மாறன் கழலே*

திண்டிறலோர் யாவர்க்கும் தேவு.                                70

தேவனுறைபதியில்  சேரப் பெறாமையால்*

மேவுமடியார் வசனாம் மெய்ந்நிலையும்* – யாவையும்

தானாம் நிலையும் சங்கித்து  அவை தெளிந்த மாறன்பால்*

மாநிலத்தீர்! நங்கள் மனம்.                                      71

நங்கருத்தை நன்றாக  நாடி நிற்கும் மாலறிய*

இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? சங்கையினால்*

தன்னுயிரில் மற்றில் நசை  தானொழிந்த மாறன் தான்*

அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு                         72

அங்கமரர் பேண  அவர் நடுவே வாழ் திருமாற்கு*

இங்கோர் பரிவரிலை என்றஞ்ச*

எங்கும் பரிவருளரென்னப்  பயம் தீர்ந்த மாறன்*

வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்.                            73

வாராமல் அச்சமினி  மால் தன் வலியினையும்*

சீரார் பரிவருடன் சேர்த்தியையும்* – பாருமெனத்

தானுகந்த மாறன்தாள்  சார்நெஞ்சே! சாராயேல்*

மானிடவரைச் சார்ந்துமாய்.                                     74

மாயன் வடிவழகைக்  காணாத வல்விடாயாய*

அறவிஞ்சி அழுதலற்றும்* – தூய புகழ் உற்ற

சடகோபனை   நாமொன்றி நிற்கும்போது பகல்*

அற்றபொழுதானது எல்லியாம்.                                 75

 எல்லிபகல் நடந்த  இந்த விடாய் தீருகைக்கு*

மெல்ல வந்து தான் கலக்க வேணுமென* – நல்லவர்கள்

மன்னு கடித்தானத்தே  மாலிருக்க மாறன் கண்டு*

இந்நிலையைச் சொன்னான் இருந்து.                            76

இருந்தவன் தான் வந்து  இங்கிவர் எண்ணமெல்லாம்*

மலையைப் திருந்த இவர் தந் திறத்தே செய்து*

பொருந்தக் கலந்தினியனா இருக்கக்  கண்ட சடகோபர்*

கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு.                             77

கண்ணிறைய வந்து  கலந்தமால் இக்கலவி*

திண்ணிலையா வேணுமெனச் சிந்தித்து * – தண்ணிதெனும்

ஆருயிரின் ஏற்றம்  அது காட்ட ஆய்ந்துரைத்தான்*

காரிமாறன் தன் கருத்து.                                       78

கருமால் நிறத்தில்  ஒரு கன்னிகையாம் மாறன்*

ஒரு மா கலவி உரைப்பால்*

திரமாக அன்னியருக்காகாது  அவன் தனக்கேயாகும் உயிர்*

இந்நிலையை யோருநெடிதா.                                   79

**நெடுமால் அழகுதனில்  நீள்குணத்தில்*

ஈடு படுமா நிலையுடைய பத்தர்* – அடிமைதனில்

எல்லை நிலம் தானாக  எண்ணினான் மாறன்*

அது கொல்லை நிலமான நிலைகொண்டு.                       80

கொண்ட பெண்டிர் தாம் முதலாக்  கூறுமுற்றார் கன்மத்தால்*

அண்டினவர் என்றே அவரை விட்டு*

தொண்டருடன் சேர்க்கும்   திருமாலைச் சேருமென்றான்*

ஆாக்கும் இதம் பார்க்கும்  புகழ் மாறன் பண்டு.                  81

பண்டை உறவான பரனைப்  புளிங்குடிக்கே கண்டு*

எனக்கெல்லா உறவின் காரியமும்* – தண்டற

நீ செய்தருள் என்றே இருந்த  சீர்மாறன் தாளிணையை*

உய்துணையென்று உள்ளமே! ஓர்.                              82

ஓராநீர் வேண்டினவை  உள்ளதெல்லாம் செய்கின்றேன்*

நாராயணன் அன்றோ நானென்று* – பேருறவைக் காட்ட

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறனருள்*

மாட்டிவிடும் நம்மனத்துமை.                                   83

மையார் கண்மா மார்பில்  மன்னும் திருமாலை*

கையாழி சங்குடனே காண எண்ணி*

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக்  கண்டுகந்த மாறன் பேர்*

ஓத உய்யுமே இன்னுயிர்.                                      84

இன்னுயிர் மால் தோற்றினது  இங்கென் நெஞ்சிலென்று*

கண்ணால் அன்றவனைக் காணவெண்ணி ஆண் பெண்ணாய்*

பின்னை அவன் தன்னை நினைவிப்பவற்றால்  தான்தளர்ந்த

மாறனருள்* – உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்.               85

உருகுமால் என்னெஞ்சம்  உன் செயல்களெண்ணி*

பெருகுமால் வேட்கையெனப் பேசி * – மருவுகின்ற

இன்னாப்புடன் அவன் சீர்   ஏய்ந்துரைத்த மாறன் சொல்*

என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?.                             86

எங்காதலுக்கடி   மாலேய்ந்த வடிவழகென்று*

அங்காது பற்றாசா ஆங்கவன்பால்*

எங்குமுள்ள புள்ளினத்தைத்  தூதாகப்போகவிடும் மாறன்தாள்*

உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்.                              87

**அறுக்குமிடரென்று  அவன்பால் ஆங்குவிட்ட தூதர்*

மறித்து வரப் பற்றா மனத்தால்* – அறப்பதறிச்

செய்ய திருநாவாயில்  செல்ல நினைந்தான் மாறன்*

மையலினால் செய்வறியாமல்.                                 88

மல்லடிமை செய்யும் நாள்   மால் தன்னைக் கேட்க*

அவன் சொல்லுமளவும் பற்றாத் தொன்னலத்தால்*

செல்கின்ற ஆற்றாமை பேசி   அலமந்த மாறன் அருள்*

மாற்றாகப் போகும் என்தன் மால்.                              89

*’மால் உமது வாஞ்சை முற்றும்   மன்னும் உடம்பின் முடிவில்*

சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து*

மேலவனைச் சீரார் கணபுரத்தே   சேருமெனும் சீர்மாறன்*

தாரானோ நந்தமக்குத் தாள்.                                   90

தாளடைந்தோர் தங்கட்குத்  தானே வழித் துணையாம்*

காளமேகத்தைக் கதியாக்கி* – மீளுதலாம்

ஏதமிலா விண்ணுலகில்   ஏகவெண்ணும் மாறனென*

கேதமுள்ளதெல்லாம்  கெடும்.                                 91

கெடுமிடர் வைகுந்தத்தைக்  கிட்டினாற்போல்*

தடமுடை அனந்தபுரந்தன்னில் * – படவரவில்

கண்துயில்மாற்கு ஆட்செய்யக்   காதலித்தான் மாறன்*

உயர் விண்தனில் உள்ளோர் வியப்பவே.                        92

வேய் மருதோள் இந்திரைகோன்  மேவுகின்ற தேசத்தை*

தான் மருவாத் தன்மையினால் * தன்னையின்னம்

பூமியிலே வைக்கு மெனச்சங்கித்து  மால் தெளிவிக்கத் தெளிந்த*

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு.                             93

சார்வாகவே அடியில்  தானுரைத்த பத்திதான் *

சீரார் பலத்துடனே சேர்ந்ததனை*

சோராமல் கண்டுரைத்த மாறன்  கழலிணையே நாள் தோறும்*

கண்டுகக்கும் என்னுடைய கண்.                               94

கண்ணன் அடி இணையில்  காதலுறுவார் செயலை*

திண்ணமுறவே சுருங்கச் செப்பியே*

மண்ணவர்க்குத் தான் உபதேசிக்கை  தலைக்கட்டினான் மாறன்*

ஆனபுகழ் சேர் தன்னருள்.                                      95

அருளால்  அடியிலெடுத்த மாலன்பால்*

இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து* – இருவிகம்பில்

இத்துடன் கொண்டேக  இசைவு பார்த்தே யிருந்த*

சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல்.                            96

செஞ்சொற் பரன் தனது  சீராரும் மேனிதனில்*

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின்* – விஞ்சுதலைக்

கண்டவனைக் கால் கட்டிக்  கை விடுவித்துக் கொண்ட

திண் திறல் மாறன் நம் திரு.                                   97

திருமால் தன்பால்  விருப்பம் செய்கின்ற நேர்கண்டு*

அருமாயத்தன்ற கல்விப்பானென்?* –  பெருமால் நீ

இன்றென்பால் செய்வான் என்னென்ன  இடருற்று நின்றான்*

துன்னு புகழ் மாறனைத்தான் சூழ்ந்து.                           98

சூழ்ந்து நின்ற மால்விசும்பில்  தொல்லை வழிகாட்ட*

ஆழ்ந்ததனை முற்றும் அநுபவித்து * – வாழ்ந்தங்கு

அடியருடனே  இருந்தவாற்றை உரை செய்தான்*

முடிமகிழ் சேர் ஞானமுனி.                                    99

முனிமாறன் முன்புரை செய்  முற்றின்பம் நீங்கி*

தனியாகிநின்று தளர்ந்து * – நனியாம்

பரம பத்தியால் நைந்து   பங்கயத்தாள் கோனை*

ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து.                     100

திருவாய்மொழி நூற்றந்தாதி முற்றும்

மணவாளமாமுனிகள் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.