ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான
அழகியமணவாளப்பெருமாள்நாயனார் அருளிச் செய்த
ஆசார்ய ஹ்ருத₃யத்தின் தனியன்கள்
ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபி₄ராமவராபி₄த₄ம் |
ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே₃ ஜக₃த்₃கு₃ருவராநுஜம் ||
பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும்
குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே.
மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று.
*******
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த
ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம்
ஆசார்யஹ்ருத₃யஸ்யார்த்தா₂ஸ்ஸகலா யேந த₃ர்ஶிதா: |
ஸ்ரீஸாநுதா₃ஸமமலம் தே₃வராஜம் தமாஶ்ரயே ||
*******
ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன் ‘‘அசித₃விஶேஷிதாந் ப்ரளயஸீமநி’’ (ஸ்ரீர. ஸ்தவே.2-41) என்று சொல்லுகிறபடியே கரணகளேப₃ரங்களை இழந்து அசித₃விஶேஷிதமாய், அத ஏவ போ₄க₃மோக்ஷஶூந்யமாய்க் கிடக்கிற சேதந வர்க்க₃த்தை, இவற்றின்பக்கல் தனக்குண்டான ஸ்வாபா₄விக ஸம்ப₃ந்த₄மே ஹேதுவாக ‘‘ததை₃க்ஷத’’ (தை.ஆ.6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுப₄வத்துக்கு இட்டுப்பிறந்த இச்சேதநர் இவ்வநுப₄வத்தை இழந்து இங்ஙனே க்லேஶிக்கவொண்ணாது’ என்று ‘‘கரணகளேப₃ரைர்க₄டயிதும் த₃யமாநமநா:’’ (ஸ்ரீர. ஸ்தவே 2-41) என்கிறபடியே த₃யமாநமநாவாய்க்கொண்டு கரணகளேப₃ர ப்ரதா₃நம் பண்ணுவதாக ‘‘ப₃ஹுஸ்யாம்’’ (தை. ஆ. 6) என்று ஸங்கல்பித்து ‘‘தத்ஸ்ருஷ்ட்வா’’ (தை. ஆ. 6) என்கிறபடியே யதா₂ ஸங்கல்பம் இவர்களுக்குக் கரணகளேப₃ரங்களைக் கொடுத்து, அநந்தரம், ‘‘தத₃நுப்ரவிஶ்ய’’ என்கிறபடியே அநுப்ரவேஶித்து வஸ்துத்வ நாமபா₄க்த்வங்களை உண்டாக்கி, ‘‘அந்த: ப்ரவிஷ்டஶ் ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா’’ (யஜு.ஆர.3-21) என்கிறபடியே ஜ்ஞாநவிகாஸத்தையும், ப்ரவ்ருத்தி- நிவ்ருத்தி யோக்₃யதையையும் பண்ணிக்கொடுத்து இந்த ஜ்ஞாநகார்யமான த்யாஜ்யோ- பாதே₃யவிவேகத்துக்குப் பரிகரமாக ‘‘மாநம் ப்ரதீ₃பமிவ காருணிகோ த₃தா₃தி’’ (ஸ்ரீர. ஸ்தவே 2-1) என்கிறபடியே வேத₃ப்ரதா₃நத்தைப்பண்ணி, அநந்தரம் மந்வாதி₃களுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதநருடைய விஶிஷ்டவேஷ விஷயமான ஶாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும், அந்த ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநம் சிரகால ஸாத்₄யமுமாய், அதி₄க்ருதாதி₄காரமுமாய், அநேக யோக்₃யதா ஸாபேக்ஷமுமாய் இருக்கையாலே து₃ஷ்கரமுமாயிருக்கும் என்று, ஏவமாதி₃தோ₃ஷரஹிதமுமாய், நிஷ்க்ருஷ்டவேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர- ப்₃ரஹ்மவித்₃யைத்தானே உபதே₃ஶித்தவிடத்திலும் இதில் இழிவாரற்றபடியாலே ஓலைப்புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக்கொள்ளும் ராஜாக்களைப்போலே ‘‘அஜாயமாந:’’ (யஜு. ஆர.3-17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது₄பரித்ராணார்த்த₂மாக வந்து அவதரித்துப்போருகிற அளவிலும், இவை ஒன்றிலும் அர்த்த₂க்ரியாகார்யமாகாதிருக்கிறபடியாலே, ‘விஸஜாதீயரான நம்மால் ஒன்றாலும் இவர்களைத் திருத்தவொண்ணாது. இனிப் பார்வைகாட்டி ம்ருக₃ம் – பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக்கொண்டே கார்யம் கொள்ளக்கடவோம்’ என்று அறுதியிட்டு ‘‘ஸுஹ்ருத₃ம் ஸர்வபூ₄தாநாம்’’ (ப.கீதை 5-29) என்கிறபடியே ஸர்வபூ₄த ஸுஹ்ருத்தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாத₃த்தாலே எங்கும் பார்த்து இலக்குக் காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வைதானே தா₃க்ஷிண்யமானவளவிலே, ‘‘மாறி மாறிப்பல பிறப்பும் பிறந்து’’ (திருவாய். 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார் மேலே நிர்ஹேதுகமாகப்பட அதுதானே ‘‘மா நிஷாத₃ ப்ரதிஷ்டா₂ம் த்வமக₃மஶ் ஶாஶ்வதீஸ்ஸமா யத்க்ரௌஞ்ச மிது₂நாதே₃கமவதீ₄: காமமோஹிதம்’’ (ரா.பா₃.2-15) என்கிறபடியே ஶோகம் ஶ்லோகமாய் அவதரித்தாப் போலே ஸர்வலக்ஷணபேதமான ப்ரப₃ந்த₄மாய்த் தலைக்கட்டிற்று.
அதுதானும் த்₃ராவிடவேத₃மானபடியாலே பலவான அர்த்த₂ங்களை உடைத்தாய், பரந்திருக்கையாலே இதில் தாத்பர்யம் எல்லார்க்கும் ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில் அர்த்த₂விஶேஷங்களையும், இவற்றில் இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக்கருத்து இன்னபடிப்பட்டிருக்குமென்று, இவ்வாசார்யருசி பரிக்₃ருஹீதமான அர்த்த₂மே எல்லார்க்கும் தஞ்சம் என்னுமிடத்தையும், இவர் தம்முடைய பரமக்ருபையாலே ஆசார்யபரம்பராப்ராப்தமான அர்த்த₂விஶேஷங்களை எல்லார்க்கும் ப்ரதிபத்தி யோக்₃யமாம்படி ஸங்க்₃ரஹேண இவ்வாசார்ய ஹ்ருத₃ய ப்ரப₃ந்த₄ முக₂த்தாலே அருளிச்செய்கிறார்.
இதில் முதல் சூர்ணையாலே பரமகாருணிகனான ஸர்வேஶ்வரன் ‘‘தத் ஸ்ருஷ்ட்வா’’ (தை.ஆ.6-2) என்கிறபடியே ஜக₃த்ஸ்ருஷ்டியைப் பண்ணி ஸ்ருஷ்ட்ய நந்தரம் அஜ்ஞாநாந்த₄காராவ்ருதரான சேதநர் ஜ்ஞாநப்ரகாஶத்தை உடையராய் அஜ்ஞானம் நீங்கி, வேதா₃ந்த– வேத்₃யனாய், நித்யனாய், ஸ்வயம்ப்ரகாஶனாய் இருந்துள்ள தன்னைக் கண்டு ஸாராஸார– விவேகம் பண்ணுகைக்கு ஸகலஶாஸ்த்ரஸங்க்₃ரஹமாய், ஸகல ஶப்₃த₃ங்களும் தன்னுடைய கார்யமாகையாலே தான் காரணமாய், ஸகலார்த்த₂ப்ரகாஶகமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான ஶாஸ்த்ரங்களைத்தன் க்ருபையாலே வெளியிட்டருளினான் என்கிறார்.
அவதாரிகை முற்றிற்று
@@@@@@@@@@
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம்
ப்ரதம ப்ரகரணம்
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் ।
ரம்யஜாமாத்ருதேவேந தரஶிதம் க்ருஷ்ண ஸூநுநா ।।
- காருணிகனான ஸர்வேஶ்வரன் அறிவிலா மனிசர் உணர்வென்னும்1. சுடர்விளக்கேற்றிப் பிறங்கிருள் நீங்கி, மேலிருந்த நந்தாவேத விளக்கைக் கண்டு, நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு, மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்.
(காருணிகனான ஸர்வேஶ்வரன்) க்ருபாவிஶிஷ்டஸ்வதந்த்ரன் என்றபடி. (ஸர்வேஶ்வரன்) என்று ஈஶேஶிதவ்யஸம்ப₃ந்த₄ம் சொல்லுகிறது. இத்தால் ஸம்ப₃ந்த₄மே ப்ரதா₄நம் என்றபடி. ஸம்ப₃ந்த₄முள்ள விஷயத்திலே க்ருபையுமாகப் பெற்றது என்கிறார். ஸ்வாதந்த்ர்யவிஶிஷ்டமான க்ருபை என்று க்ருபைக்கு ஸ்வா– தந்த்ர்யம் உபயுக்தம் என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது. (அறிவிலா மனிசர்) ‘‘அறிவிலா மனிசர்’’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாநாந்த₄காரத்தாலே ஆவ்ருத– ரான சேதநர். (உணர்வெனும் சுடர்விளக்கேற்றி) ‘‘உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி’’ (மூ. திரு. 94) என்றும், ‘‘ஞானச்சுடர்விளக்கேற்றினேன்’’ (இர. திரு. 1) என்றும் சொல்லுகிறபடியே உஜ்ஜீவநகரமுமாய், ஸவிபூ₄திகனான ஸர்வேஶ்வரனை விஷயமாக உடைத்தாய், (பரஸ்மை) ஸ்வயம்ப்ரகாஶமுமாய், ஸகலார்த்த₂ப்ரகாஶகமு– மான ஜ்ஞாநதீ₃பத்தை உடையராய். (பிறங்கிருள் நீங்கி) ‘‘பிறங்கிருள் நிறங்கெட’’ (திரு மொழி 5-7-3) என்றும், ‘‘பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க’’ (பெரியா. திரு.1-9-10) என்றும் சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம் போய். (மேலிருந்த நந்தா வேதவிளக்கைக்கண்டு) ‘‘வேதாந்தவிழுப்பொருளின் மேலிருந்த விளக்கு’’ (பெரியா. திரு.4-3-11) என்றும், ‘‘நந்தாவிளக்கு’’ (திருமொழி. 3- 8-1) ‘‘மிக்க ஞானமூர்த்தியாய வேத விளக்கினை’’ (திருவாய்.4-7-10) என்றும் வேதா₃ந்தங்களிலே ஸர்வஸ்– மாத்பரனாக ப்ரகாஶியாநிற்பானுமாய், நித்யனுமாய், வேத₃த்தாலே ப்ரகாஶ ஸ்வரூபனாக ப்ரதிபாத்₃யனுமாயிருந்துள்ள தன்னை, ‘‘என் தக்க ஞானக்கண்களாலே கண்டு’’ (திருவாய். 4-7-10) என்கிறபடியே ஜ்ஞாநத்₃வாரா ஸாக்ஷாத்கரித்து.
(நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு) ‘‘இவையன்றே நல்ல இவையன்றே தீய இவையென்றிவை அறிவனேலும்’’ (பெரிய திருவ.3) என்கிறபடியே ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு. அதாவது – ப₄க₃வத்₃விஷயம் நன்று, ஸம்ஸாரம் தீது – என்று அறிகைக்காக; ப₄க₃வத்₃விஷயத்தைக்கண்டபின்பு ஸாராஸாரவிவேகம் பண்ணுகை யாவது என் என்னில் – ப₄க₃வத்₃விஷயத்தில் வைலக்ஷண்யம் கண்டபின்பிறே ஸம்ஸாரம் அவிலக்ஷணம் என்று அறியலாவது. (மறையாய்விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை) ‘‘மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை’’ (திருமொழி.8-9-4), துளக்கமில் விளக்கு (தி.ச.வி.4) என்று ஸகலவேத₃ ஸங்க்₃ரஹமாய், நித்யமாய், ஸகலார்த்த₂ப்ரகாஶகமான அகாரத்தில்நின்றும் விஸ்த்ருதமான, ‘‘மாநம் ப்ரதீ₃பமிவ காருணிகோ த₃தா₃தி’’ (ஸ்ரீர. ஸ்தவே.2-1) என்றும், ‘‘பன்னுகலை நால்வேதப்பொருளை’’ (திருமொழி. 7-8-2) என்றும், ‘‘கலைகளும் வேதமும் நீதிநூலும்’’ (திருமொழி.2-8-5) என்றும்சொல்லப்படுவதாய், த்யாஜ்யோபாதே₃யார்த்த₂ ப்ரகாஶகமான ஶாஸ்த்ரங்களை. (நீர்மையினாலருள்செய்தான்) ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே ஶாஸ்த்ரப்ரதா₃நம் பண்ணியருளினான் என்கிறார்.
‘‘மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கு’’ என்று வேத₃த்தையும், அகாரத்தையும்
ஸர்வேஶ்வரனோடே ஸமாநாதி₄கரிக்கைக்கடி ‘‘வேதை₃ஶ்ச ஸர்வைரஹமேவ வேத்₃ய:’’ (ப.கீ.15-15) என்றும், ‘‘ஸமஸ்தஶப்₃த₃மூலத்வாத₃காரஸ்ய ஸ்வபா₄வத😐 ஸமஸ்த– வாச்யமூலத்வாத்₃ப்₃ரஹ்மேணாபி ஸ்வபா₄வத:|| வாச்யவாசக ஸம்ப₃ந்த₄ ஸ்தயோரர்த்தா₂த் ப்ரதீயதே’’ (வாமந.பு.) என்று ப்ரதிபாத்₃யப்ரதிபாத₃கபா₄வத்தாலும், காரணத்வவ்யாபகத்வாதி₃களான அர்த்த₂ஸாம்யத்தாலே தோற்றின வாச்யவாசக– ஸம்ப₃ந்த₄த்தாலும். ‘‘அக்ஷராணாமகாரோஸ்மி’’ (கீ.4) என்றானிறே. ஆக இத்தால் ‘‘ஹர்த்தும் தமஸ்ஸத₃ஸதீ ச விவேக்துமீஶோ மாநம் ப்ரதீ₃பமிவ காருணிகோ த₃தா₃தி’’ (ர.ஸ்தவே உ.1) என்கிறபடியே ஸம்ஸாரிகள் அஜ்ஞாநநிவ்ருத்திபூர்வகமாக ஜ்ஞாந– ப்ரகாஶத்தை உடையராய் ஸாராஸாரவிவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஶாஸ்த்ர– ப்ரதா₃நம் பண்ணினதுக்கடி நிர்ஹேதுகக்ருபை என்றதாய்த்து. (1)
2.. விவேகப₂லம் வீடுபற்று.
(விவேகப₂லம்) இப்படி இவன்கொடுத்த ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்தாலே ஸாராஸார– விவேகம் பண்ணினதுக்கு ப₂லம் என்னென்னில் ; (வீடுபற்று) விடுகையும் பற்றுகை– யும்; இவை இரண்டையும். ‘‘வீடுமின் முற்றவும்’’ (திருவாய். 1 – 2 – 1) என்றும், ‘‘அற்றிறை பற்றே’’ (திருவாய். 1 – 2 – 5) என்றும் சொல்லக்கடவதிறே. (2)
3. த்யாஜ்யோபாதே₃யங்கள் ஸுக₂து₃:க₂ங்கள்.
இனி த்யாஜ்யோபாதே₃யங்கள் எவை என்னில்; (த்யாஜ்யோபாதே₃யங்கள் ஸுக₂– து₃:க₂ங்கள்) என்கிறார். ‘ஸுகீ₂ ப₄வேயம், து₃:கீ₂ மா பூ₄வம்’ என்று ஸர்வர்க்கும் து₃:க₂ம் த்யாஜ்யமாய், ஸுக₂ம் உபாதே₃யமாயிறே இருப்பது. (3)
4. இவற்றுக்கெல்லை இன்புதுன்பளி பன்மாமாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையும்.
இந்த ஸுக₂து₃:க₂ங்களுக்கு எல்லை எவை என்னில் (இன்புதுன்பளி பன்மா மாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையும்). (இன்பு துன்பளி) துன்பத்தோடே கூடின இன்பத்தைத்தருமதாய் இருக்கை. இதுக்கு ப்ரமாணம் ‘‘அத்யந்தஸ்திமிதாங்கா₃நாம் வ்யாயாமேந ஸுகை₂ஷிணாம் | ப்₄ராந்திஜ்ஞாநவதாம் பும்ஸாம் ப்ரஹாரோபி ஸுகா₂யதே’’ (வி.பு.1-17-61). என்று திமிர்வாதம்பற்றின ஶரீரத்தையுடையவர்களாய், வ்யாயாமத்தினாலே ஸுக₂த்திலே ஆசையுடையவர்களுக்கு ஶரீரத்திலே குத்த, ப்₄ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுக₂மாகிறாப்போலேயிறே. இன்புதுன்பளி பன்மா மாயத் தழுந்துகையாவது ‘‘ஓ ஓ உலகினதியல்வே’’ (திருவாசிரியம் 6) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதி₃ஸாத₄நமுக₂த்தாலே க்ஷுத்₃ரதே₃வதா ஸமாஶ்ரயணம் பண்ணி, தத்ப₂லமாய் து₃:க₂மிஶ்ரமான க்ஷுத்₃ரஸுக₂ங்களை அநுப₄விக்கைக்கீடான தே₃வாதி₃ ஶரீரங்களிலே அஹமபி₄மாநம் பண்ணி ஸம்ஸரிக்கை. களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையாவது ‘‘களிப்பும் கவர்வுமற்று’’ (திருவாய்.2-3-10) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதா₃ர்த்த₂ங்களினுடைய லாபா₄லாப₄ங்களாலே வருகிற ஶோகஹர்ஷங்கள் போய், ஷட்₃பா₄வ விகாராஸ்பத₃மான ஸ்தூ₂லஸூக்ஷ்ம– ரூபமான ப்ரக்ருதி ஸம்ப₃ந்த{மு} மற்று, ‘‘பேரின்பவெள்ளத்தே’’ (திருவாய்.7-2-11) என்று சொல்லுகிற நிரதிஶயாநந்த₃ மயமான தே₃ஶவிஶேஷத்திலே போய், அப்ராக்ருத– விக்₃ரஹ பரிக்₃ரஹம்பண்ணி, தி₃வ்யாஸ்தா₂நமண்டபத்திலே நிரதிஶயாநந்த₃மக்₃நரான நித்ய ஸூரிகளோடே‘‘ சுழி பட்டோடும் சுடர்ச்சோதிவெள்ளத்தின்புற்று’’ (திருவாய்.8-10-5) என்கிறபடியே ப₄க₃வத₃நுப₄வம் பண்ணி, ஆநந்த₃நிர்ப₄ரராய் இருக்கையும். அந்த ஶாஸ்த்ர ஜந்யஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம் த்யாக₃ஸ்வீகாரங்களென்றும், த்யஜிக்கைக்கும் ஸ்வீகரிக்கைக்கும் ஹேது ஸுக₂து₃:க₂ங்களாகையாலே என்றும், இவை இரண்டுக்கும் எல்லை ஸம்ஸாரஸம்ப₃ந்த₄மும், பரமபத₃த்திலே போய் ஆநந்த₃ நிர்ப₄ரராயிருக்கையும் என்றதாய்த்து. (4)
5. அநந்தக்லேஶநிரதிஶயாநந்தஹேது மறந்தேன் அறியகிலாதே உணர்விலேன் ஏணிலேன் அயர்த்தென்றும், உய்யும்வகை நின்றவொன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம்பரிசென்றும் சொல்லுகிற ஜ்ஞாதவ்யபஞ்சக ஜ்ஞாந அஜ்ஞாநங்கள்.
(அநந்தக்லேஶநிரதிஶயாநந்த₃ஹேது) ‘‘ஸம்ஸாரஸாக₃ரம் கோ₄ரம் அநந்த க்லேஶபா₄ஜநம்’’ (ஜித.1-4) என்கிறபடியே அநந்தது₃:கா₂வஹமான ஸம்ஸாரத்துக்கும், ‘‘நிரஸ்தாதிஶயாஹ்லாத₃ஸுக₂பா₄வைகலக்ஷணா | பே₄ஷஜம் ப₄க₃வத்ப்ராப்திரேகாந்- தாத்யந்திகீ மதா’’ (வி.பு.6-5-59) என்கிறபடியே நிரதிஶய ஆநந்தா₃வஹமான மோக்ஷத்துக்கும் ஹேது என் என்னில் :- (மறந்தேன் என்று தொடங்கி). ‘‘ப்ராப்யஸ்ய ப்₃ரஹ்மேணா ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகா₃த்மந ப்ராப்த்யுபாயம் ப₂லம் ப்ராப்தே: ததா₂ ப்ராப்திவிரோதி₄ ச’’ (வ்ருத்₃த₄ஹாரீத. 8) என்று இத்யாதி₃களில் சொல்லுகிற அர்த்த₂ பஞ்சகஜ்ஞாநமும், தத்₃விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார் மேல். ‘‘மறந்தேனுன்னை முன்னம்’’ (திருமொழி 6-2-2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும், (அறியகிலாதே) ‘‘யானே என்னை அறியகிலாதே’’ (திருவாய்.2-9-9) என்கையாலே ஆத்ம விஷயமான அஜ்ஞாநமும், (உணர்விலேன்) ‘‘ஓடியுமுழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன்’’ (திருமொழி.1-6-6) என்கையாலே விரோதி₄விஷயமான அஜ்ஞாநமும், (ஏணிலேன்) ‘‘பிறவி நோயறுப்பான் ஏணிலேனிருந்தேன்’’ (திருமொழி.1-6-1) என்கையாலே உபாயவிஷயமான அஜ்ஞாநமும், (அயர்த்து) ‘‘ஆழியங்கையம்மானை ஏத்தாதயர்த்து’’ (பெரியதிருவ.82) என்கையாலே புருஷார்த்த₂விஷயமான அஜ்ஞாந- மும். ஏத்துகையிறே புருஷார்த்த₂ம். அத்தை மறக்கையாலே புருஷார்த்த₂விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார். ‘‘சூழ்ந்திருந்தேத்துவர்’’ (திருப்பல்.12) என்றும், ‘‘ஏதத்ஸாம கா₃யந்நாஸ்தே’’ (தை. ப்₄ருகு₃.) என்றும் சொல்லக்கடவதிறே.
(உய்யும்வகை) ‘‘உணர்ந்தேன் உண்மையாலினி யாதும் மற்ேறார் தெய்வம் பிறிதறி– யேன்’’ (திருமொழி 6-3-6) என்கையாலே பரவிஷயமான ஜ்ஞாநமும், ‘‘நின்ற– வொன்றை உணர்ந்தேன்’’ (திருவாய். 8-8-5) என்கையாலே ஸ்வரூபவிஷயமான ஜ்ஞாநமும், (நன்கறிந்தனன்) ‘‘அகற்ற நீ வைத்த மாயவல்ல ஐம்புலன்கள் ஆமவை நன்கறிந்தனன்’’ (திருவாய். 5-7-8) என்கையாலே விரோதி₄விஷயமான ஜ்ஞாநமும், (உணர்வினுள்ளே) ‘‘உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவுமவனதின்னருளே’’ (திரு– வாய். 8-8-3) என்கையாலே உபாயவிஷயமான ஜ்ஞாநமும், (ஆம்பரிசு) ‘‘ஆம்பரி– சறிந்துகொண்டு’’ (திருமாலை.38) என்கையாலே புருஷார்த்த₂விஷயஜ்ஞாநமும் சொல்லிற்று. ஆக, கீழ்ச்சொன்ன ஸம்ஸாரஸம்ப₃ந்த₄த்துக்கும் மோக்ஷப்ராப்திக்கும் ஹேது ‘ஜ்ஞாநாந் மோக்ஷம், அஜ்ஞாநாத்ஸம்ஸாரம்’ என்று அறியப்படுமதான அர்த்த₂– பஞ்சகஜ்ஞாநமும், தத₃ஜ்ஞாநமும் என்றதாய்த்து. (5)
6. இவற்றுக்குக் காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்.
இந்த அர்த்த₂பஞ்சகஜ்ஞாநமும், அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக் காரணம் – இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள். அதாவது இரண்டில் ஒன்றுகையும், ஒன்றினில்
ஒன்றுகையும். இரண்டில் ஒன்றுகையாவது – ‘‘முத்திறத்து வாணியத்திரண்டில் ஒன்றும் நீசர்கள்’’ (திரு. ச. வி. 68) என்கிறபடியே ரஜஸ்தம:ப்ரசுரனாகை. ஒன்றினில் ஒன்றுகையாவது – ‘‘முக்குணத்திரண்டவையகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று’’ (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வப்ரசுரனாகை. இத்தால் அர்த்த₂பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாநகாரணம் ஸத்த்வாஸத்த்வப்ராசுர்யங்கள் என்றபடி. (6)
7. ஸத்த்வாஸத்த்வநிதா₃நம் – இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந காலகடாக்ஷங்கள்.
இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும் அஸத்த்வத்துக்கும் நிதா₃நம் என் என்னில் – (இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்மஜாயமாநகாலகடாக்ஷங்கள்). அவையாவன – ‘‘இருள்தரு மாஞாலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன்’’ (திருவாய்.10-6-1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ‘‘ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஶ்யேந்– மது₄ஸூத₃ந: | ஸாத்த்விகஸ்ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த₂ சிந்தக:’’ (பா₄ரதே.ஶா.ப.348 -73) என்கிற ஜாயமாநகாலத்தில் ‘‘அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்’’ (திருவாய். 1-9-9) என்கிற ப₄க₃வத்கடாக்ஷமும். (7)
8. இவற்றுக்கு மூலம் – இருவல்லருள் நல்வினைகள்.
(இவற்றுக்கு மூலம்) இந்த ஜந்மகடாக்ஷங்களாகிற இவற்றுக்குக் காரணம் என் என்னில் – (இருவல்லருள்நல் வினைகள்). ‘‘சார்ந்த இருவல்வினை’’யும், ‘‘தொல்லருள் நல்வினை’’யும். அவையாவன – ஆத்மாவுக்கு ஸஹஜம் என்னலாம்படி பொருந்தி புண்யபாபங்களும், ஈஶ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும். (8)
9. கர்மக்ருபாபீ₃ஜம், பொய்ந்நின்ற அருள்புரிந்த என்கிற அவித்யா ஸௌஹார்த்த₃ங்கள்.
(கர்மக்ருபாபீ₃ஜம்) ஏவம்வித₄மான கர்மத்துக்கும் க்ருபைக்கும் பீ₃ஜம் – (பொய்ந்நின்ற அருள்புரிந்த என்கிற அவித்₃யாஸௌஹார்த்த₃ங்கள்). அவையாவன – ‘‘பொய்ந்நின்ற ஞானம்’’ (திருவிரு. 1) என்கிற அவித்₃யையும், ‘‘அருள்புரிந்த சிந்தை’’ (இர. திருவ. 59) என்றும், ‘‘ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்த்த₃ம்’’ ( ) என்றும் சொல்லுகிற ஈஶ்வரனுடைய ஸௌஹார்த்த₃மும். (9)
10. ஏதந்நிமித்தம் முதல்முன்னமேயான அசித₃யநாநாதி ஸம்ப₃ந்த₄ங்கள்.
(ஏதந்நிமித்தம்) இந்த அவித்₃யைக்கும் ஸௌஹார்த்த₃த்துக்கும் ஹேது ஏதென்னில் – (முன்னமே முதல் முன்னமேயான அசித₃யநாநாதி₃ஸம்ப₃ந்த₄ங்கள்). அவையாவன – ‘‘மூதாவியில் தடுமாறும் உயிர்முன்னமே’’ (திருவிரு. 95) என்கிற அநாதி₃யான அசித்– ஸம்ப₃ந்த₄மும், ‘‘அடியேனடைந்தேன் முதல்முன்னமே’’ (திருவாய்.2-3-6) என்கிற அநாதி₃யான அயநஸம்ப₃ந்த₄மும். (10)
11. இவை கிட்டமும் வேட்டுவேளானும்போலே ஒண்பொருள் பொருளல்லாத{வை} என்னாதே நானிலாத யானுமுளனாவன் என்கிற ஸாம்யம் பெறத்தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநிஸத்தைகளை உண்டாக்கும்.
உப₄ய ஸம்ப₃ந்த₄த்தினுடையவும் கார்யம் சொல்லுகிறது மேல் ; (இவை கிட்டமும் வேட்டுவேளானும்போலே) என்று தொடங்கி. அதில் அசித்ஸம்ப₃ந்த₄ம் கிட்டம் போலே. ‘‘எண்பெருக்கந்நலத்தொண்பொருள்’’ (திருவாய். 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்மவஸ்துவென்று பாராதே ‘‘நானிலாதமுன்னெலாம்’’ (திரு. ச. வி. 65) என்னும்படி ஸாம்யம்பெற. ‘‘அறுத்துத்தின்று’’ (திருமொழி.7-7-7) என்கிறபடியே தின்று. ‘‘அந்தமும் வாழ்வும்’’ (திருமொழி .5-7-2) என்கிறதில் அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும். ‘‘அஸந்நேவ ஸ ப₄வதி’’ (தை. ஆந.) என்னக்கடவதிறே. இனி அயந ஸம்ப₃ந்த₄ம் வேட்டுவேளான்போலே ‘‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி’’ (திருவாய். 5-7-3) என்கிறபடியே அவஸ்துஶப்₃த₃வாச்யமான இத்தை வஸ்துஶப்₃த₃– வாச்யமாக்கி. ‘‘உள்ள உலகளவும் யானுமுளனாவனென் கொலோ’’ (பெரிய திருவ.76) என்கிறபடியே இவனும் த₄ர்மபூ₄தஜ்ஞாநத்₃வாரா விபு₄வாகையாலே ஈஶ்வரன் உள்ள– வளவும் இவ்வாத்மா உண்டாம்படி ‘‘பரமம் ஸாம்யமுபைதி’’ (மு. 3-1-3) என்கிற ஸாம்யம் பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும். ‘‘ஸந்தமேநம் ததோ விது₃:’’ (தை. ஆந.) என்றும், ‘‘கீட:பேஶக்ருதாருத்₃த₄: குட்₃யாந்தரநுசிந்தயந் | ஸம்ரம்ப₄– ப₄யயோகே₃ந விந்த₃தே தத்ஸரூபதாம் | ஏவம் க்ருஷ்ணே ப₄க₃வதி மாயாமநுஜ ஈஶ்வரே | கோ₃விந்தே₃ மதிமாவேஶ்ய நரஸ்ஸத்₃யோ விமுச்யதே’’ ( ) என்றும் ‘‘அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்’’ (திருமொழி 5-7-2) என்றும் சொல்லக்கடவதிறே. (11)
12. ஒன்று கூடினதாய்ப் பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன் என்னுமதொன்றுமே ஒழிக்க ஒழியாதது.
இந்த உப₄யஸம்ப₃ந்த₄மும் அநாதி₃யாய் நித்யமாயிருக்குமோவென்னில் ; அசித்– ஸம்ப₃ந்த₄ம் வந்தேறியுமாய், கர்மோபாதி₄கமாகையாலே அநித்யமுமாயிருக்கும். அயநஸம்ப₃ந்த₄ம் அநாதி₃யுமாய், நிருபாதி₄கமாகையாலே நித்யமுமாயிருக்கும் என்கிறார் மேல் (ஒன்றுகூடினதாய்) என்று தொடங்கி. (ஒன்று கூடினதாய்) ‘‘பெருந் துயரிடும்பையில் பிறந்து கூடினேன்’’ (திருமொழி.1-1-1) என்கையாலே அசித்– ஸம்ப₃ந்த₄ம் ஆக₃ந்துகம். ஆனால் அசித்ஸம்ப₃ந்த₄ம் அநாதி₃ என்று சொல்லுவான் என் என்னில் ; வந்தேறினகாலம் பழையதாகையாலும், ப்ரமாணங்கள் தான் அநாதி₃ என்கையாலும். இனி ‘‘வினை பற்றறுக்கும் விதியே’’ (திருமொழி.11-5-9), ‘‘அடைந்த அருவினையோடல்லல் நோய்பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்’’ (மு.திருவ.59) என்றும் சொல்லுகிறபடியே ஒருநாள் வரையிலே ப₄க₃வத் ப்ரஸாத₃த்தாலே கழியக் காண்கையாலே ஆக₃ந்துகம் என்கிறது. ஆகையாலே ‘‘நானுமுனக்குப் பழவடியேன்’’ (திருப்பல்.11) என்கிறபடியே ஜீவபரர்களுக்குண்டான ஶேஷஶேஷிபா₄வஸம்ப₃ந்த₄– மொன்றுமே ‘‘உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது’’ (திருப்பாவை 28) என்கிறபடியே கழியாதது. (12)
13. இந்த உதரத்தரிப்பு த்ரைகு₃ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஶகம்.
இவ்வயநஸம்ப₃ந்த₄மே கீழ்ச்சொன்ன ஶாஸ்த்ரப்ரதா₃நத்துக்கு ஹேது என்கிறார் மேல், (இந்த உத₃ரத்தரிப்பு த்ரைகு₃ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஶகம்). (இந்த உத₃ரத் தரிப்பு) இந்த நாராயணத்வப்ரயுக்தமான குடல் துடக்கு, ‘‘த்ரைகு₃ண்யவிஷயா வேதா₃:’’ (ப.கீ..2-45) என்கிறபடியே த்ரிகுணவஶ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஶிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. தம:ப்ரசுரராயும், ரஜ:ப்ரசுரராயும், ஸத்த்வப்ரசுரராயுமிறே சேதநர் இருப்பது. ஆக, இந்த உத₃ரத்தரிப்பு த்ரைகு₃ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஶகம் என்கிற இத்தால் ருச்யநுரூபபுருஷார்த்த₂ங்களையும் தத்ஸாத₄நங்களையும் விதிக்கிற ஶாஸ்த்ரப்ரதா₃நத்துக்கு அடி இந்த ஸம்ப₃ந்த₄ம் என்றதாய்த்து. கீழ் ‘‘நீர்மையினாலருள் செய்தான்’’ (திருமொ.1-8-5) என்று சொன்ன ஶாஸ்த்ரப்ரதா₃நத்துக்கு ஹேது சொல்லிற்றாய்த்து. (13)
14. வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண்தின்னவிட்டு ப்ரத்யௌஷதம் இடுமா போலே எவ்வுயிர்க்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும் ருசிக்கீடாகப் பந்தமும் பந்தமறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே.
இப்படி ஶாஸ்த்ரப்ரதா₃நம் பண்ணுகிறது ஸம்ப₃ந்த₄மடியாகவாகில் விமோசக– ஶாஸ்த்ரத்தையே வெளியிடாதே ப₃ந்த₄கஶாஸ்த்ரங்களையும் வெளியிடுவான் என் என்னில்; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநுகு₃ணமாக வெளியிட்டான் என்கிறது மேல் (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி. ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும் அதுக்கடியான வாத்ஸல்யத்தைப்பற்றவும் இப்போது மாதாவை த்₃ருஷ்டாந்த மாக்குகிறது. ‘‘எல்லாவெவ்வுயிர்க்கும் தாயோன்’’ (திருவாய்.1-5-3) என்றும், ‘‘தாய் இருக்கும் வண்ணமே’’ (திருமொழி.11-6-6) என்றும் சொல்லுகிறபடியே இவனும் அப்படியே ஸர்வாத்மாக்கள்பக்கலிலும் மாத்ருத்வப்ரயுக்தமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான ‘‘பந்தமும்’’ என்கிற ப₃ந்த₄க ஶாஸ்த்ரங்களையும், ‘‘பந்த மறுப்பதோர் மருந்தும்’’ என்கிற மோசகஶாஸ்த்ரத்தையும் விதிக்கும் என்கிறார். (14)
15. அதுதானும் ஆஸ்திக்யவிவேக அந்யஶேஷத்வ ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்திபாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.
இப்படி ப₃ந்த₄கமாக ஶாஸ்த்ரத்தையும் கலசி விதித்தால் அதுகொண்டு சேதநர் ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில் ; அதுதானும் மோசக ஶாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார் மேல் (அதுதானும் ஆஸ்திக்யம்) என்று தொடங்கி. அதுதானும் – ப₃ந்த₄க ஶாஸ்த்ரத்தைக் கலசி விதி₄த்ததுதானும். பரஹிம்ஸாஶீலனாய் ஶாஸ்த்ரஸாமர்த்₂யம் {ஶாஸ்த்ரத்தில் ஆஸ்திக்யம்} முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால் அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபி₄சாரஶாஸ்த்ரத்தை விதி₄த்து அது அவனுக்கு ப₂லித்தவாறே அவ்வழியாலே ஶாஸ்த்ரம் உண்டென்கிற ஆஸ்திக்யத்தை உண்டாக்கியும், ஆஸ்திகனானவாறே ‘‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க₃காமோ யஜேத’( ) என்று இத்யாதி₃களில் சொல்லுகிறபடியே ஸ்வர்க்கா₃தி₃புருஷார்த்த₂ங்களையும், தத் ஸாத₄நங்களையும் சொல்லுகிற ஶாஸ்த்ரங்களையும் விதி₄த்து, அவ்வழியாலே ப்ரக்ருத்யாத்மவிவேகத்தைப் பிறப்பித்தும், இப்படி ப்ரக்ருத்யாத்மவிவேகம் பிறந்தவாறே ஆத்மலாப₄ரூபபுருஷார்த்த₂த்தைக் காட்டி அந்யஶேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும், அநந்தரம் ப₄க₃வத்கைங்கர்யரூபபுருஷார்த்த₂த்தைக்காட்டி ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தை நிவர்த்திப்பித்தும், ஆத்மாவினுடய அத்யந்த பாரதந்த்ர்யத்தை உண்டாக்குகைக்கிட்ட வழி என்கிறார். (15)
16. சதுர்விதன தே₃ஹ–வர்ண–ஆஶ்ரம–அதி₄கார–ப₂ல–மோக்ஷ–ஸாத₄ந–க₃தி– யுக₃–த₄ர்ம–வ்யூஹ–ரூப–க்ரியாதி₃களை அறிவிக்கிற பாட்டுப்பரப்புக்கு – பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும், மானிடப்பிறவியும், ஆக்கைநிலையும், ஈரிரண்டிலொன்றும், இளமையும், இசைவுமுண்டாய், புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்₄நமற, நின்றவாநில்லா ப்ரமாதியைக்கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத₃ஸார–உபநிஷத் ஸாரதராநுவாக ஸாரதமக கா₃யத்ரியில் முதலோதுகிற பொருள்முடிவான சுருக்கைத் தெய்வவண்டாய், அன்னமாய், அமுதம் கொண்டவன் ஶாகைகளிலும், ஓதம்போல்கிளர் நால்வேதக்கடலிலும், தேனும் பாலும் அமுதுமாக எடுத்துப் பெருவிசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது.
இனிமேல் ஶாஸ்த்ரப்ரதிபாத்₃யமான அர்த்த₂விஶேஷங்களை ஸங்க்₃ரஹேண ப்ரதி– பாதி₃யாநின்றுகொண்டு ஏவம்வித₄மான ஶாஸ்த்ரத்தினுடைய அப்₄யாஸத்துக்கு ஜம்பூ₃த்₃வீபாதி₃தே₃ஶதே₃ஹாதி₃ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும் அஶக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்யநிரபேக்ஷமாய், அத ஏவ ஸுகரமுமாய், ஶாஸ்த்ர– தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஸ்ரீப₃த₃ரிகாஶ்ரமத்திலே வெளியிட்டருளினான் என்கிறார் (சதுர்வித₄மான தே₃ஹ) என்று தொடங்கி. (சதுர்வித₄மான தே₃ஹம்) தே₃வ–திர்யங்– மநுஷ்ய–ஸ்தா₂வரரூபமான ஶரீரவிஶேஷங்கள். (வர்ணம்) ப்₃ராஹ்மண–க்ஷத்ரிய– வைஶ்ய–ஶூத்₃ரரூபமான வர்ணசதுஷ்டயம். (ஆஶ்ரமம்) ப்₃ரஹ்மசர்ய– கா₃ர்ஹஸ்த்₂ய– வாநப்ரஸ்த₂–ஸந்ந்யாஸங்களாகிறவை. (அதி₄காரம்) ‘‘ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தா₂ர்த்தீ₂ ஜ்ஞாநீ’’ (கீதை.7-16) என்று சொல்லுகிறவை.
இதில் ஆர்த்தனாவான் – நஷ்டைஶ்வர்யகாமன். ஜிஜ்ஞாஸுவாவான் – கேவலன். அர்த்தா₂ர்த்தி₂யாவான் – அபூர்வைஶ்வர்யகாமன். ஜ்ஞாநி என்கிறது ப₄க₃வத₃ நுப₄வைக– பரனை. ஆர்த்தனுக்கும் அர்த்தா₂ர்த்தி₂க்கும் நடுவே கேவலனைச்
சொல்லிற்று – அவனும் ப்ரயோஜநாந்தரபரன் என்னுமிடம் தோற்றுகைக்காக. ப₂லம் – ‘‘த₄ர்ம– அர்த்த₂– காம– மோக்ஷாக்₂யா:’’ ( ) என்று சொல்லுகிறவை. மோக்ஷமாவது – ஸாலோக்ய–ஸாமீப்ய– ஸாரூப்ய–ஸாயுஜ்யங்கள். ஸாத₄நம் – கர்ம–ஜ்ஞாந–ப₄க்தி–ப்ரபத்திகள். க₃தியாவது – த்₃யு:பர்ஜந்யப்ருதி₂வீபுருஷயோஷித்துக்களான பஞ்சாக்₃நி வித்₃யையில் சொல்லுகிறபடியே வருகிற க₃ர்ப்ப₄க₃தியும், யாம்யக₃தியும், தூ₄ம்ய க₃தியும், அர்ச்சிராதி₃க₃தியும். யுக₃மாவது – க்ருத–த்ரேதா–த்₃வாபர–கலியுக₃ங்கள். த₄ர்மமாவது – ‘‘த்₄யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்₃வாபரேர்ச்சயந் | யதா₃ப்நோதி ததா₃ப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேஶவம்’’ (வி.பு.6-2-17) என்று சொல்லுகிற த்₄யாந–யாக₃–அர்ச்சந– ஸங்கீர்த்தநங்கள்.
வ்யூஹமாவது – வாஸுதே₃வ–ஸங்கர்ஷண–ப்ரத்₃யும்ந–அநிருத்₃த₄ர்கள். ரூபமாவது ‘ரக்தம் ஸிதேதரே பீதம் சதுர்த்தா₄ யத்க்ருதே யுகே₃ | ரக்தாத்₃யம் ஸிதநிஷ்ட₂ஞ்ச த்ரேதாயாம் ஹி மஹாமதே | பீதம் க்ருஷ்ணம் ஸிதம் ரக்தம் ஸம்ப்ராப்தேத்₃வாபரே யுகே₃ | கலௌ க்ருஷ்ணஸிதம் ரக்தம் பீதஞ்சாநுக்ரமேண து’’( ) {யதா₃மதி ஶோத₄நீயம்} என்கிறபடியே க்ருதாதி₃களில் ஸித–ரக்த–பீத–க்ருஷ்ணாதி₃ களான ஸங்கர்ஷணாதி₃ களுடைய வர்ணசதுஷ்டயங்கள். ‘‘பாலினீர்மை’’ (திரு.ச.வி.44) இத்யாதி₃. க்ரியையாவது – ஸ்ருஷ்டி–ஸ்தி₂தி–ஸம்ஹார–மோக்ஷ ப்ரத₃த்வாதி₃கள். ஆதி₃ ஶப்₃த₃த்தாலே மற்றும் அர்ச்சநீயரான தே₃வதா விஶேஷங்களைச் சொல்லுகிறது.
இப்படி சதுர்வித₄மான தே₃ஹாத்₃யர்த்த₂விஶேஷங்களுக்கு ப்ரகாஶகமான பாட்டுப் பரப்புக்கு ‘‘பாட்டும் முறையும்’’ (நா. திருவ.76) என்கிற பாட்டில் சொல்லுகிற ஶாஸ்த்ர– விஸ்தரத்துக்கு. (பெரியதீவினில் இத்யாதி₃) ‘‘நாவலம்பெரிய தீவு’’ (பெரியா.தி.3-6-1) என்கிற ஜம்பூ₃த்₃வீபத்தில் நவக₂ண்டையான ப்ருதி₂வியில் ப₄ரதக₂ண்ட₃மும். ‘‘து₃ர்லபோ₄ மாநுஷோ தே₃ஹ:’’ (பா₄க₃வ.11-2-21) என்றும், ‘‘மானிடப்பிறவி அந்தோ’’ (திருக்குறு. 8) என்றும் சொல்லுகிற மநுஷ்யதே₃ஹமும், ‘‘தே₃ஹிநாம் க்ஷண– ப₄ங்கு₃ர:’’ என்றும், ‘‘மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்’’ (திருவாய்.1-2-2) என்றும் சொல்லுகிற தாத்₃ருஶதே₃ஹங்களினுடைய ஸ்தை₂ர்யமும். ஶாஸ்த்ர– ஜ்ஞாநத்துக்கு யோக்₃யமான வர்ணங்களில் ப்ரத₂மக₃ண்யமாய், ‘‘குலங்களாய ஈரிரண்டிலொன்றிலும்’’ (திருச்ச.90) என்கிற ப்₃ராஹ்மணஜந்மமும், ‘‘கிளரொளி இளமை’’ (திருவாய்.2-10-1) என்று இதினுடைய பா₃ல்யமும். ‘‘தஸ்மாத்₃பா₃ல்யே விவேகாத்மா’’ (வி. பு.1-17-75) என்றும் சொல்லக்கடவதிறே.
அதிலும், ‘‘யானுமென்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்’’ (பெரியதிருவ. 36) என்கிற படியே இச்சையுமுண்டாய், ‘‘வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்’’ (திரு மாலை 3) என்றும், ‘‘ஶதாயுர்வை புருஷ:’’ (யஜு. கா. 1-5-2) என்றும் சொல்லுகிற படியே மநுஷ்யர் வேதோ₃க்தமான ஆயுஸ்ஸை உடையவரேயாகிலும் அவ்வாயுஸ்ஸுக்குள்ளே ‘‘அநந்தஸாரம் ப₃ஹு வேதி₃தவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஶ்ச விக்நா:” என்றும், ‘‘ஶ்ரேயாம்ஸி பஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி’’ ( ) என்றும் சொல்லுகிறபடியே ஶாஸ்த்ரஜ்ஞாநவிரோதி₄யான ப்ரப₃லப்ரதிப₃ந்த₄கங்களும் அற்று, ‘‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’’ (திருமொழி 1-1-4) என்றும், ‘‘சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி₂ ப₃லவத்₃த்₃ருட₄ம் | தஸ்யாஹம் நிக்₃ரஹம் மந்யே வாயோரிவ ஸுது₃ஷ்கரம்’’ (கீதை 6-34) என்றும் சொல்லப்படுகிற மநஸ்ஸைக்கொண்டு ‘கலையறக் கற்றமாந்தர்’’ (திருமாலை 7) என்கிறபடியே ஶாஸ்த்ரங்களைக் கரைகண்டு ‘‘ஆமாறறிவுடையார் ஆவதரிதன்றே’’ (பெரியதிருவ.37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே.
வேத₃ஸாரோபநிஷத் – {‘‘அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | ப₄ஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம்’’ (வைகுண்ட தீக்ஷிதீயம்)} அயதா₂ர்த்த₂ ப்ரதிபாத₃கங்களான பா₃ஹ்யஶாஸ்த்ரங்கள் அஸாரமாய், புத்ர பஶ்வந்நாத்₃யைஶ்வர்யஸாத₄நத்தையும், ஸ்வர்க்க₃ஸாத₄ந ஜ்யோதிஷ்டோமாதி₃ களையும் விதிக்கிற முகத்தாலே ஶாஸ்த்ராஸ்திக்யம் ப்ரக்ருத்யாத்மவிவேகம் இவற்றைப் பிறப்பிக்கையாலே வேதத்தில் பூர்வபா₄க₃ம் அல்பஸாரமாயிருக்கும். இங்ஙனன்றிக்கே அநந்தஸ்தி₂ரப₂லப்₃ரஹ்மோபபாத₃நமான உபநிஷத்₃பா₄க₃ம் ஸாரமாயிருக்கும்.
அந்த உபநிஷத்துக்களிலும் சொல்லுகிற ‘‘பரம் ப்₃ரஹ்ம பரம் ஜ்யோதி:’’ இத்யாதி– ஸாமாந்ய வாசக ஶப்₃த₃ங்களாலும், விஶேஷவாசியான ஶம்பு₃ஶிவாதி ஶப்₃த₃ங்களாலும் ப்ரதிபாதி₃க்கப்படுகிறவன் நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம் ஸாரதரமாய், அதில் வ்யாபகத்ரயத்தையும் ப்ராதா₄ந்யேந ப்ரதிபாதி₃க்கிற விஷ்ணு கா₃யத்ரியில் முதலில் குறிக்கப்பட்டதான நாராயணஶப்₃த₃ம் ஸாரதமமாகையாலே ‘‘ஓத்தின் பொருள் முடிவுமித்தனையே – மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு’’ (இர. திருவ. 39) என்கிறபடியே வேதா₃ந்தத்தின் கருத்தாய், ‘‘ருக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம் அப்படியே அதர்வண வேதம் மற்ரும் உண்டான இதிஹாஸம் முதலானவைகள் எல்லாம் திருவெட்டெழுத்தினுள் பொதிந்து கிடக்கின்றன’’ (வ்ரு. ஹா.) என்று முதலானவற்றில் சொல்லுகிறபடியே எல்லா வேதங்களின் சுருக்கமுமாய், எல்லாப் பொருள்களையும் ப்ரகாஶப்படுத்துவதாய் ஸர்வேஶ்வரன்தனக்குத் திருநாமமான திருமந்த்ரத்தை ஆறு கால்களையுடைய வண்டானது கிளைகளிலே அலைந்து திரிந்து தேனை எடுக்குமாப்போலே தூவியம்புள்ளுடைத் தெய்வவண்டானவன் ஶாகை₂களில் ஸாரரூபமான திருமந்த்ரத்தை எடுத்தும், ‘‘அன்னமாய் அன்றங்கருமறை பயந்தான்’’ (திருமொழி.5-7-3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப்போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்.
அநந்தரம், ‘‘பேணான் வாங்கி அமுதங்கொண்ட’’ (திருமொழி.6-10-3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸுரப₄யபீ₄தரான தேவர்களுடைய ரக்ஷணார்த்த₂மாக க்ஷீராப்₃தி₄யை மதி₂த்து அம்ருதத்தை எடுத்தாப்போலே ஸம்ஸாரப₄யபீ₄தரான சேதநருடைய ரக்ஷணார்த்த₂ம் ‘‘நால்வேதக்கடலமுது’’ (பெரியா. தி.4-3-11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும் ஸாரபூ₄தமான திருமந்த்ரத்தை எடுத்தும். ஆக, ஸர்வரஸமு- மாய் ஸர்வாதி₄கஸத்யத்வத்தையும் தருமதான ‘‘தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்’’ (திருமொழி 6-10-6) என்கிற திருமந்த்ரத்தை ‘‘அமரர் பெருவிசும்பருளும் பேரருளாளன்’’ (திருமொழி .1-4-4) என்கிற பெருவிசும்பான பரமபத₃த்தைக் கொடுப்பதான நிர்ஹேதுகக்ருபையாலே ‘‘நரநாரணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன்’’ (திருமொழி.10-6-1) என்கிறபடியே ஸ்ரீப₃த₃ரிகாஶ்ரமத் திலே நரநாராயணரூபேண வந்து அவதரித்து ஸ்வரூபஶாஸ்த்ரம் மடங்காதபடி விஸ்தரித்தருளினது; அறக்கற்கை அரிதென்றிறே இத்தைக்கொண்டு அந்வயிப்பது. (16)
17. முனிவரை இடுக்கியும் முந்நீர்வண்ணனாயும் வெளியிட்ட ஶாஸ்த்ர– தாத்பர்யங்களுக்கு விஶிஷ்டநிஷ்க்ருஷ்டவேஷங்கள் விஷயம்.
ஶாஸ்த்ரத்தையும் ஶாஸ்த்ரதாத்பர்யமான திருமந்த்ரத்தையும் வெளியிட்டு அருளினான் என்று நின்றது கீழ் ; ‘அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென் ; அவற்றுக்கு விஷயமேது’ என்கிற ஶங்கையில் சொல்லுகிறது (முனிவரை இடுக்கியும்) என்று தொடங்கி. ‘‘இருள்கள் கடியும் முனிவரும்’’ (திருவாய். 10-7-7) என்கிற ஸ்மர்த்தாக் களான வ்யாஸாதி₃களுக்கு ‘‘க்ருஷ்ணத்₃வைபாயநம் வ்யாஸம் வித்₃தி₄ நாராயணம் ப்ரபு₄ம் | கோஹ்யந்ய: புண்ட₃ரீகாக்ஷாந்மஹாபா₄ரதக்ருத்ப₄வேத்’’ (வி.பு. 3-4-5) என்கிறபடியே அந்தர்யாமியாய்நின்று தந்முகே₂ந ப்ரவர்த்திப்பித்த ஶாஸ்த்ரங்களுக்கு விஷயம் இவர்களுடைய தே₃ஹவிஶிஷ்டஸ்வரூபம் என்றும், ‘‘கருங்கடல் முந்நீர்வண்ணன்’’(திருமொழி.1-4-10) என்கிறபடியே ஸ்ரீப₃த₃ரிகாஶ்ர மத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம் சேதநருடைய நிஷ்க்ருஷ்டஸ்வரூபம் என்றும் சொல்லப்பட்டது; ஶாஸ்த்ரத்துக்கு தே₃ஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து. (17)
18. தோல்புரையே போமதுக்குப் பழுதிலா யோக்₃யதை வேணும். மனமுடையீர் என்கிற ஶ்ரத்₃தை₄யே அமைந்த மர்மஸ்பர்ஶிக்கு நானும் நமரும் என்னும்படி ஸர்வரும் அதி₄காரிகள்.
ஆனால் இவையிரண்டும் ஸர்வாதி₄காரமாயிருக்குமோ? அதி₄க்ருதாதி₄காரமாய் இருக்குமோ? என்கிற ஶங்கையிலே சொல்லுகிறது (தோல்புரையே போமதுக்கு) என்று தொடங்கி. தே₃ஹவிஶிஷ்டஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தே₃ஹ அவஸாநமே தனக்கு அவஸாநமான ஶாஸ்த்ரத்துக்கு ‘‘பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்’’ (திருமாலை.42) என்கிறபடியே அதி₄காரிஸம்பத்தி ஸாபேக்ஷமாய் இருக்கும். ‘‘மனமுடையீர்’’ என்கையாலே ‘‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்’’ (திருவாய்.10-5-1) என்றும், ‘‘ந தீர்த்த₂ம் ந ச நக்ஷத்ரம் ந க்₃ரஹா ந ச சந்த்₃ரமா: | ஶ்ரத்₃தை₄வ காரணம் ந்ரூணாம் அஷ்டாக்ஷரபரிக்₃ரஹே’’ (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஶ்ரத்₃தா₄மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஶியான தாத்பர்யத்துக்கு ‘‘நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோநாராயணமே’’ (திருமொழி.6-10-6) என்கையாலே அதி₄காரி நியமமில்லை. இத்தால் ஶாஸ்த்ரம் அதி₄க்ருதாதி₄காரமாயிருக்கும் ; ஶாஸ்த்ரதாத்பர்யமான திருமந்த்ரம் ஸர்வாதி₄காரம் என்றதாய்த்து. (18)
19. ஶாஸ்த்ரிகள் தெப்பக்கையரைப்போலே இரண்டையுமிடுக்கிப் பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.
இனிமேல் ஶாஸ்த்ரோபலக்ஷிதமான ப₄க்தி நிஷ்ட₂னுடையவும், தாத்பர்ய உபலக்ஷிதமான ப்ரபத்திநிஷ்ட₂னுடையவும் ப்ரதிபத்திகளைச் சொல்லுகிறது (ஶாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப்போலே) என்று தொடங்கி. ஆறு நீஞ்ச வந்தவன் தெப்பத்தை ஒருகையிலே இடுக்கியும், தானும் ஒருகையாலே நீஞ்சுமாப்போலே, ப₄க்திநிஷ்ட₂னும், ஸ்வயத்நமும் ஸ்வயத்நஸாத்₄யமான ப₄க₃வத்க்ருபையையுங் கொண்டு ‘‘புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே’’ (திருவாய். 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸாரஸாக₃ரத்தைக் கடக்கத் தேடும். (ஸாரஜ்ஞர்) தாத்பர்யநிஷ்ட₂ரான ப்ரபந்நரானவர்கள். (விட்டத்திலிருப்பாரைப் போலே) ஆற்றின் கரையேறிப் போகிறவன் அதில் யத்நத்தில் அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப்போலே ; ‘‘விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித₃ஸ்தி பராயணம்’’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவநின்று நடத்துகிற ‘‘வைகுந்தனென்பதோர் தோணி’’(நா. திரு.5-4) என்கிற விஷ்ணுபோதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாநஶக்த்யாதி₃கு₃ணாநுப₄வத்தாலும் ஸ்வபாரதந்த்ர்ய அநுஸந்தா₄நத்தாலும் நிர்ப₄ரராய் மேல் உபாயதயா கர்த்தவ்யமில்லாமையாலே, இரு கையும் விட்டு – அசேதநக்ரியா கலாபத்தையும் தத்ஸாத்₄யமான ப₄க₃வத்க்ருபையையும்
விட்டு – கேவலப₄க₃வத்க்ருபையே தங்களுக்கு உத்தாரகம் என்று அத்₄யவஸித்துக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள். ‘‘கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ’’ (திருவாய்.6-9-9) என்றும், ‘‘ஆக்கை விடும்பொழுதெண்ணே’’ (திருவாய்.1-2-9) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தியைச் சிந்தித்திருப்பர்கள்.
20. இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும் உணர்வைப் பெறவூர மிக உணர்வுமுண்டாம்.
இவர்களுக்கு அவ்வதி₄காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூபஜ்ஞாந தாரதம்யத்தைச் சொல்லுகிறது (உணர்ந்துணர்ந்துணரவும் உணர்வைப்பெறவூர மிகவுணர்வுமுண்டாம்) என்று. (உணர்ந்துணர்ந்துணரவும்) ‘‘உணர்ந்துணர்ந்து இழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்’’ (திருவாய்.1-3-6) என்கிறபடியே ஆத்மஸ்வரூபத்தை ஜ்ஞப்திமாத்ரமன்றிக்கே நித்யஜ்ஞாநகு₃ணகமாய் தே₃ஹேந்த்₃ரியாதி₃ விலக்ஷணனாகவும், ஜ்ஞாதாவாகவும், கர்த்தாவாகவும் ப₄க₃வச்சே₂ஷமாகவும் ஶ்ரவணமநநாதி₃களாலே ஸாக்ஷாத்கரித்த ஶாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம். (உணர்வைப் பெறவூர மிக உணர்வும் உண்டாம்) ‘‘உணர்வுமுயிருமுடம்பும் மற்றுலப்பிலனவும் பழுதே யாம் உணர்வைப் பெறவூர்ந்து’’ (திருவாய்.8-8-3) என்கிறபடியே தே₃ஹேந்த்₃ரியாதி₃களில் வ்யாவ்ருத்தமான ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஶ்வரன் நடத்த ‘‘மெய்ம்மையை மிகவுணர்ந்து’’ (திருமாலை 38) என்கிறபடியே ததீ₃யஶேஷத்வபர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம். (20)
21. ஶேஷத்வபோக்த்ருத்வங்கள்போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.
இந்த ஸ்வரூபஜ்ஞாநமும் ஸ்வரூபயாதா₂த்ம்யஜ்ஞாநமுமாகிற இவை இரண்டும் தன்னிலொக்குமோ என்னில்; ஒவ்வாது என்கிறார் (ஶேஷத்வ போ₄க்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்யபோ₄க்₃யதைகள்) என்று தொடங்கி. ஶேஷத்வமாவது – இஷ்ட– விநியோகா₃ர்ஹதாமாத்ரம். பாரதந்த்ர்யமாவது – அந்த ஶேஷ வஸ்துவை ஶேஷிக்கு இஷ்டமானபடி விநியோக₃ப்படுத்திக்கொடுக்குமது. போ₄க்த்ரு த்வமாவது – ரஸாரஸங்களுக்குத் தானே போ₄க்தாவாகை. போ₄க்₃யதையாவது – பதா₃ர்த்த₂க₃தமான ரஸவர்ணாதி₃கள் போ₄க்தாவுக்கே போ₄க்₃யமாய் இருக்குமாப் போலே ஆத்மக₃தமான ஜ்ஞாநாதி₃களும் ஈஶ்வரனுக்கே போ₄க்₃யமாய் இருக்கை. ஆகையால் இஷ்டவிநியோகா₃ர்ஹதாமாத்ரமான ஶேஷத்வம்போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோக₃ப்படுத்திக் கொடுக்கிற பாரதந்த்ர்யம். ஸ்வபோ₄க₃த்துக்கும் ஹேதுவாயிருக்கிற போ₄க்த்ருத்வம் போலேயன்றே அந்த போ₄க்த்ருத்வத்தை ஶேஷியினுடைய ப்ரியோபயோகி₃யாக்கிக் கொடுக்கிற போ₄க்₃யதை. (21)
22. ஜ்ஞாந சதுர்த்தி₂களின்மேலேயிறே ஆநந்த₃ஷஷ்டி₂களுக்கு உத₃யம்.
ஆகையிறே போ₄க்த்ருத்வப்ரகாஶகமாய் ‘மந – ஜ்ஞாநே’ என்கிற தா₄துவிலே உதி₃தமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரணரூபமாய் போ₄க்₃யதா ப்ரகாஶகமான சரமசதுர்த்தி₂யிலே ஆநந்த₃ம் உதி₃த்ததும், ஶேஷத்வப்ரகாஶகமான சதுர்த்தி₂யின்மேலே பாரதந்த்ர்யப்ரகாஶகமான ஷஷ்டி₂ உதி₃த்ததும். (22)
23. முளைத்தெழுந்த ஸூர்யதுல்யயாதா₂த்ம்யசரமம் விதி₄யில் காணும் ப்ரத₂மமத்₄யமத₃ஶைகளைப் பகல்விளக்கும் மின்மினியுமாக்கும்.
இனிமேல் இந்த ஸ்வரூபஜ்ஞாநத்தினுடையவும் ஸ்வரூபயாதா₂த்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும் அத்யந்தவைஷம்யம் சொல்லுகிறது (முளைத்தெழுந்த) என்று தொடங்கி. ‘முளைத்தெழுந்த திங்கள்தானாய்’’ (திருநெடு.1) என்றும், ‘‘யதா₂ ஸூர்யஸ் ததா₂ ஜ்ஞாநம்’’ (வி.பு.6-5-62) என்றும், ஆஹ்லாத₃கரனாயும், அதிப்ரகாஶகனாயும் இருக்கிற சந்த்₃ராதி₃த்யர்களை யாதா₂த்ம்யசரமமான பாரதந்த்ர்யபோ₄க்₃யதா ஜ்ஞாநங்களுக்கு த்₃ருஷ்டாந்தமாக்குகையாலே ப₄க₃வத்ப்ரஸாத₃லப்₃த₄மாகையாலே அயத்நஸித்₃த₄முமாய், அதிப்ரகாஶகமுமான அத்யந்தபாரதந்த்ர்யபோ₄க்₃யதா ஜ்ஞாநங்களில் பாரதந்த்ர்யம் ஶேஷத்வலக்ஷணமான இஷ்டவிநியோகா₃ர்ஹதையை ஸ்வயமேவ நிர்வஹித்துத் தலைக்கட்டுகையாலும், போ₄க்₃யதையானது அசித்₃ வ்யாவ்ருத்திலக்ஷணமாத்ரமான போ₄க்த்ருத்வத்தை ஶேஷியினுடைய ப்ரியோபயோகி₃யாக்கிக் கொடுக்கையாலும் விதி₄யில் காணும் ப்ரத₂மமத்₄யம த₃ஶைகளை ‘‘விளக்கினை விதியில் காண்பார்’’ (திருக்குறு.18) என்கிறபடியே ஶாஸ்த்ரமுக₂த்தாலே வந்த ஶ்ரவணமநநாதி₃களால் காணப்படுகிற ப்ரத₂மத₃ஶையான ஶேஷத்வத்தையும், மத்₄யமத₃ஶையான போ₄க்த்ருத்வத்தையும், அந்த பாரதந்த்ர்ய போ₄க்₃யதைகள் பகல்விளக்கையும் மின்மினியையும்போலே அப்ரயோஜகமாகவும் அல்பப்ரகாஶகமாகவும் பண்ணும் என்கிறார். (23)
24. நாலிலொன்று ப்ரவர்த்தகம்; ஒன்று நிவர்த்தகம்.
இந்நாலிலும் வைத்துக்கொண்டு உபாஸகனுக்கு போ₄க்த்ருத்வம் உபாய ரூபப்ரவ்ருத்தி– ஹேதுவாயிருக்கும் ; ப்ரபந்நனுக்கு போ₄க்₃யதை நிவ்ருத்தி ஹேதுவாயிருக்கும் என்கிறார் மேல் (நாலிலொன்று ப்ரவர்த்தகம்) என்று தொடங்கி. உபாஸகன் தன்னை போ₄க்தாவாக நினைத்திருக்கையாலே அந்த போ₄க்த்ருத்வ நிப₃ந்த₄நமான கர்த்ருத்வமும் அவனுக்கே ஆகையாலே அவனை உபாயரூப ப்ரவ்ருத்தியிலே மூட்டும் போ₄க்த்ருத்வம். ப்ரபந்நனுக்கு போ₄க்₃யதை ஸ்வரூபமாகை யாலே அந்த போ₄க்₃யதைதானே தந்நிவ்ருத்திஹேதுவாயிருக்கும். (24)
25.முற்பாடர்க்கு க்ரியாங்க₂மானவை இரண்டும், செயல்தீர்ந்தார் வ்ருத்தியில் ஸ்வநிர்ப்ப₃ந்த₄ம் அறுக்கும்.
ஆனால் இந்த ஶேஷத்வபோ₄க்த்ருத்வங்களிரண்டும் இவனுக்குச் செய்யும்படி என் என்னில் ; இவனுடைய வ்ருத்திக்கு அநுரூபமாயிருக்கும் என்னுமிடத்தைச் சொல்லுகிறது மேல் (முற்பாடர்க்கு) என்று தொடங்கி. ‘முற்பாடர்’ என்று சொல்லப்– பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க₃மானவை இரண்டும்) கர்மத்துக்கு அங்க₃மான ஶேஷத்வபோ₄க்த்ருத்வங்களிரண்டும்; கர்மத்துக்கு யோக்₃யதாபாத₃கங்களான ஶேஷத்வ போ₄க்த்ருத்வங்கள் ; இப்படி இருக்கிற இவற்றைச் சொல்லுவான் என் என்னில் ; போ₄க்த்ருத்வமாவது – போ₄க்₃யஸித்₃தி₄க்கு அடியான யத்நத்திலே மூட்டு– கையாலும், ஶேஷத்வம் அதில் ஆத்மஜ்ஞாநம் முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகை– யாலும், அந்த ஶேஷத்வபோ₄க்த்ருத்வங்கள் ஸாத₄நப்ரத₂மபா₄வியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹகரிக்கையாலும் அவற்றை க்ரியாங்க₃ம் என்கிறது.
இப்படிப்பட்ட ஶேஷத்வ போ₄க்த்ருதவங்கள் (செயல்தீர்ந்தார் வ்ருத்தியில்) ‘‘செயல் தீரச்சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்’’ (நா. திருவ.88) என்கிறபடியே உபாய ரூபப்ரவ்ருத்தியில் ஸ்வரூபபாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்நருடைய, வ்ருத்தியில் – கைங்கர்ய– வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வநிர்ப₃ந்த₄மறுக்கும்) ஸ்வபோ₄க்த்ருத்வப்ரதிபத்தியையும், மதீ₃யத்வப்ரதிபத்தியையும் தவிர்க்கும். எங்ஙனே என்னில் ; இவனுடைய போ₄க்த்ருத்வம் அவனுடைய போ₄க₃த்துக்கு வர்த்த₄கமாய் இருக்கும். ‘‘அஹமந்நம்’’ என்ற பின்பு ‘‘அஹமந்நாத₃:’’ என்றது – போ₄க்த்ருத்வமிறே. இப்படிச்சொல்லாதபோது ஒரு சேதநேனாடே அநுப₄வித்ததாயிராதிறே ; இவனுடைய ஶேஷத்வமும் அத்தலைக்கு அதிஶயகரமாயிருக்கும், ‘‘பரக₃த–அதிஶய–ஆதா₄நேச்ச₂யா உபாதே₃யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ ஶேஷ:’’, ‘‘யதே₂ஷ்டவிநியோகா₃ர்ஹம் ஶேஷஶப்தே₃ந கத்₂யதே’’, ‘‘ஈஶ்வரேண ஜக₃த்ஸர்வம் யதே₂ஷ்டம் விநியுஜ்யதே’’ என்னக்கடவதிறே. (25)
26. கர்ம கைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய–நித்யாநித்ய–வர்ணதா₃ஸ்யாநு கு₃ணங்கள்.
இந்த க்ரியாவாசியான கர்மமும் வ்ருத்திவாசியான கைங்கர்யமும் எதுக்கு அநுகு₃ணமாயிருக்குமென்னில் ; (கர்மகைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய–நித்யாநித்ய–வர்ணதா₃ஸ்யாநுகு₃ணங்கள்) என்கிறார். இவை இரண்டிலும் வைத்துக்கொண்டு எத்தை எதுக்கு அநுகு₃ணம் என்கிறதென்னில் ; கர்மம் அஸத்யமுமாய், அநித்யமுமான வர்ணத்துக்கு அநுகு₃ணமாயிருக்குமென்றும், கைங்கர்யம் ஸத்யமுமாய் நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய் நித்யமுமாயிருக்கும். (26)
27. இவற்றுக்கு விதி₂ராக₃ங்கள் ப்ரேரகங்கள்
இவை இரண்டுக்கும் ப்ரேரகர் ஆர் என்னில் (இவற்றுக்கு விதி₄ராக₃ங்கள் ப்ரேரகங்கள்). ‘இத₃ம் குரு’, ‘அநேந யஜேத’ என்றும் சேதநனைக் குறித்துச்சொல்லுகிற ஶாஸ்த்ரவிதி₄கள் கர்மத்துக்கு ப்ரேரகம். ப₄க₃வத₃நுப₄வஜநிதப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம். ‘‘உற்றேனுகந்து பணிசெய்து’’ (திருவாய்.10-8-10) என்னக்கடவதிறே. ப₄க₃வத₃நுப₄வ ஜநிதப்ரீதிகாரிதமிறே கைங்கர்யம். (27)
28. மண்டினாரும் மற்றையாரும் ஆஶ்ரயம்.
இவற்றுக்கு ஆஶ்ரயம் ஆர் என்னில், (மண்டினாரும் மற்றையாரும் ஆஶ்ரயம்). ‘‘கண்டியூர்’’ (திருக்குறு.19) இத்யாதி₃. மண்டினார் என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபி₄நிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார் என்கிறது – ‘‘விளக்கினை விதியில் காண்பார்’’ (திருக்குறு.18) என்கிற உபாஸகர் என்று ப்ரஸித்₃த₄மிறே. இத்தால் கர்மத்துக்கு ஆஶ்ரயம் உபாஸகர், கைங்கர்யத்துக்கு ஆஶ்ரயம் ப்ரபந்நர் என்றபடி. (28)
29. அருள்முடிய நிறுத்தி அடையநின்றதும் நல்லதோரருள் தன்னாலே நன்றுமெளியனாகிறதும் விஷயம்.
இவற்றுக்கு விஷயம் ஏதென்னில் ; ‘‘எத்தவம் செய்தார்க்கும் அருள் முடிவதாழியான் பால்’’ (நான். திருவ.2) என்றும், ‘‘நிறுத்தி நும் உள்ளத்துக்கொள்ளும் தெய்வங்களும்மை உய்யக்கொள் மறுத்துமவேனாடே கண்டீர்’’ (திருவாய்.5-2-7) என்றும், ‘‘அவரவர் விதிவழி அடைய நின்றனரே’’ (திருவாய்.1-1-5) என்றும் சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க்கொண்டு நின்றவிடமும், ‘‘நல்லதோரருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம்’’ (திருமாலை.10) என்றும், ‘‘கருத்துக்கு நன்றுமெளியன்’’ (திருவாய்.3-6-11) என்றும் சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க்கொண்டு நின்ற இடமும். (29)
30. இவற்றாலே ஸாதா₄ரணம் அஸாதாரணம் என்னும்.
ஆக (இவற்றாலே) இந்த ப்ரமாணப்ரகாரங்களாலே (ஸாதா₄ரணம் அஸாதா₄ரணம் என்னும்) ஸாதா₄ரணமான விக்₃ரஹவிஶிஷ்டன் கர்மத்துக்கு விஷயம். அஸாதா₄ரணமான விக்₃ரஹவிஶிஷ்டன் கைங்கர்யத்துக்கு விஷயம் என்று விஷயபே₄த₃த்தை அருளிச்செய்து, அதில் அஸாதா₄ரணவிக்₃ரஹவிஷய கைங்கர்ய நிஷ்ட₂ன் ஸாதா₄ரணவிக்₃ரஹவிஷயத்திலே ஸர்வஸாமாந்யதயா கர்த்தவ்யமான வற்றில் அந்வயியான் என்கிறார். (30)
31. ஜாத்யாஶ்ரமதீ₃க்ஷைகளில் பே₄தி₃க்கும் த₄ர்மங்கள்போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்.
ஆனால் பழையதாக அநுவர்த்தித்துப் போந்ததுமாய் வர்ணாத்₃ய ஸாதா₄ரணமுமான ஸத்₃வாரகவிஷயப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப்போமோ என்னில் ; அதுதானே நழுவும் என்கிறார். எங்ஙனே என்னில் ; ஜாதி த₄ர்மமானது ஜாத்யந்தரத்திலே பே₄தி₃க்கக்கண்டோம், கண்டபடி என் என்னில், யஜந–யாஜந–அத்₄யயந–அத்₄யாபந–தா₃ந–ப்ரதிக்₃ரஹங்களாகிற ஷட்கர்மங்கள் க்ஷத்ரியாதி₃ களில் பே₄தி₃யாநின்றனவிறே ; ஆஶ்ரமத₄ர்மம் ஆஶ்ரமாந்தரத்தில் பே₄தி₃யாநின்றது. இவை இத்தனையும் பே₄தி₃த்தாலும் பே₄தி₃யாத நித்யத₄ர்ம–நைமித்திக த₄ர்மங்கள் ஜ்யோதிஷ்டோமாதி₃தீ₃க்ஷைகளில் பே₄தி₃க்குமாப்போலே ‘அத்தாணிச் சேவகமும்’’ (திருப்பல்.8) என்கிற அந்தரங்க₃ கைங்கர்யத்தில் வர்ணாஶ்ரம ஸாதா₄ரணத₄ர்மம் தானே நழுவுமிறே, உறங்குகிறவன் கையில் எலுமிச்சம்பழம் போலே இதுதனக்கு அவகாஶமில்லை. இந்த த்₃ருஷ்டாந்தப₃லத்தாலே இவ்வதி₄காரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச்சொன்னவை தன்னைப்போலே; இப்படி இருக்கச் செய்தேயும் ஶிஷ்டர்கள் அநுஷ்டி₂த்துப் போருகிது ஆந்ருஶம்ஸ்யத்தாலேயிறே. (31)
32. ஸாதநஸாத்₄யங்களில் முதலும் முடிவும் வர்ணத₄ர்மிகள் முடிவும் வர்ணதர்மிகள் தாஸவ்ருத்திகள் என்று துறை வேறிடுவித்தது.
இனி கர்மநிஷ்ட₂னிற்காட்டில் கைங்கர்யநிஷ்ட₂னுக்குள்ள வைஷம்யம் சொல்லுகிறது (ஸாத₄நஸாத்₄யங்களில்) என்று தொடங்கி. ஸாத₄நங்களில் முதற் சொல்லுகிறது கர்மம். கர்மஜ்ஞாநப₄க்திகளிறே ஸாத₄நங்கள். ஸாத்₄யங்களில் முடிவு கைங்கர்யம். ப₄க₃வத₃நுப₄வம், அநுப₄வஜநிதப்ரீதி, அநந்தரமிறே ப்ரீதிகாரித கைங்கர்யம். திருவயிந்திரபுரத்தில் வில்லிபுத்தூர்ப்பகவர் என்பாரொருவர் எல்லாரும் ஒரு துறையிலே அநுஷ்டா₂நம் பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டா₂நம் பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டா₂நம் பண்ணுவாராய், ஒருநாள் அநுஷ்டா₂நம் பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச்செய்தே, இருந்த ப்₃ராஹ்மணர் ‘ஏன் ஜீயரே! எங்கள் துறையில் அநுஷ்டா₂நம் பண்ண வாராதொழிவானென்’ என்ன, ‘‘விஷ்ணுதா₃ஸா வயம் யூயம் ப்₃ராஹ்மணா வர்ணத₄ர்மிண: | அஸ்மாகம் தா₃ஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்க₃தி:’’ என்று – ‘நீங்கள் ப்₃ராஹ்மணர், வர்ணத₄ர்மிகள்; நாங்கள் தா₃ஸவ்ருத்திகள், கைங்கர்யபரர். ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறை வேறிட்டுப் போனாரிறே. (32)
33. வேதவித்துக்களும் மிக்கவேதியரும் ச₂ந்த₃ஸாம் மாதாவாலும், அதுக்கும் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவர்க்கும் ஶ்ரேஷ்ட₂ ஜந்மம்.
இனிமேல் இவர்களிருவர்க்கும் ஜந்மநிரூபக கூடஸ்த₂ரிருக்கும்படி என் என்ன; இவை இப்படிப்பட்டிருக்கும் என்கிறார் (வேதவித்துக்களும்) என்று தொடங்கி. ‘‘யே ச வேத₃விதோ₃ விப்ரா:’’ (பார. ஆர.88) என்கிற வேதவித்துக்கள், ‘‘கா₃யத்ரீம் ச₂ந்த₃ஸாம் மாதா’’ என்கிற கா₃யத்ர்யுபதே₃ஶத்தாலே பிறப்பிக்குமது கர்மநிஷ்ட₂னுக்கு ஶ்ரேஷ்ட– ஜந்மம்; ‘‘யே சாத்₄யாத்மவிதோ₃ ஜநா:’’ என்கிறபடியே மிக்கவேதியரான வேத₃– தாத்பர்யம் கைப்பட்டவர்கள் ‘‘ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த₂ம்’’ (வ்ரு.ஹா.) என்கிறபடியே, அந்த கா₃யத்ரிதனக்கும் மாத்ருஸ்தா₂நமாய், ‘‘பெற்ற தாயினுமாயின செய்யும்’’ (திருமொழி.1-1-9) என்கிறபடியே ஶரீரோத்பத்தி மாத்ரமன்றியிலே ஜ்ஞாந விகாஸத்தைப் பண்ணிக்கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்ட₂ர்க்கு ஶ்ரேஷ்ட₂ஜந்மம். ‘‘ஜந்மநா ஜாயதே ஶூத்₃ர: கர்மணா ஜாயதே த்₃விஜ: | வேதா₃ப்₄ யாஸேந விப்ரத்வம் ப்₃ரஹ்மவித்₃ப்₃ராஹ்மேணா விது₃:’’ என்றும், ‘‘ஸ ஹி வித்₃யாதஸ்தம் ஜநயதி தச்ச்₂ரேஷ்ட₂ம் ஜந்ம’’ (ஆப.த.1-1-16) என்னக்கடவதிறே. (33)
34. அந்தணர் மறையோர் என்றும், அடியார் தொண்டரென்றும் இவர்களுக்கு நிரூபகம்.
இப்படி ஶ்ரேஷ்ட₂ஜந்மரான இருவர்க்கும் நிரூபகம் ஏதென்னில் (அந்தணர் இத்யாதி₃). ‘‘துணைநூல் மார்விலந்தணர்’’ (திருமொழி 1-5-9) என்றும், ‘‘தீயோம்புகை மறையோர்’’ (திருமொழி .7-9-7) என்றும் சொல்லுகிற இவை கர்மநிஷ்ட₂ர்க்கு நிரூபகம். ‘வேதா₃ர்த்தா₂நுஷ்டா₂நயோக்₃யர் அந்தணர்’ என்றும், ‘வேதா₃ர்த்தா₂நுஷ்டா₂நபரர் மறையோர்’ என்றும் சொல்லக்கடவது. இனி, ‘‘அணியரங்கன் திருமுற்றத்தடியார்’’ (பெரு. திரு.1-10) என்றும், ‘‘அகமகிழும் தொண்டர்’’ (பெரு.திரு.1-10) என்றும் சொல்லுகிறபடியே கைங்கர்யநிஷ்ட₂னுக்கு நிரூபகம் – அடியார்; கிஞ்சித்காரார்ஹர். தொண்டர்; கிஞ்சித்காரஸ்வபா₄வர். (34)
35. ஒருதலையில் கிராம குலாதி வ்யபதேஶம், குலம் தரும் என்னும் மாசில் குடிப்பழி என்று, பதியாகக் கோயிலில் வாழும் என்பர்கள்.
கர்மகைங்கர்யங்களில் நிஷ்ட₂ராயிருக்கும் இருவர்க்கும் வ்யபதே₃ஶம் ஏதென்னில் (ஒரு தலையில் க்₃ராமகுலாதி₃வ்யபதே₃ஶம் என்று தொடங்கி). கர்மநிஷ்ட₂ரை க்₃ராமகுலாதி₃களாலே வ்யபதே₃ஶிக்கக்கடவது; கைங்கர்ய நிஷ்ட₂னுக்கு அந்த க்₃ராமகுலாதி₃களால் வருகிற வ்யபதே₃ஶம் ‘‘குலந்தரும்’’ (திருமொழி.1-1-9) என்றும், ‘‘மாசில் குடிப் பிறப்பு’’ (மூ.திருவ.10) என்றும் ப₄க₃வத் ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநத்தாலே இதரவ்யாவ்ருத்தமான வைஷ்ணவஜாதீயனான இவனுக்கு அவத்₃யமாகையாலே நிரவத்₃யமான ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄ப்ராதா₄ந்யமே தோற்றும் படியாக, ‘‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்’’ (நா.திரு.8-9) என்றும், ‘‘கோயிலில் வாழும் வைட்டணவர்’’ (பெரியா.திரு.5-1-3) என்றும் சொல்லுகிறபடியே ப₄க₃வத் ஸம்ப₃ந்த₄முள்ள தே₃ஶத்தையிட்டும், ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄ந்தன்னையிட்டும் வ்யபதே₃ஶிக்கக் கடவது; ‘‘ஏகாந்தீ வ்யபதே₃ஷ்டவ்யோ நைவ க்₃ராமகுலாதி₃பி₄: | விஷ்ணுநா வ்யபதே₃ஷ்டவ்யஸ்தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி || (வி.ஸ) நத்₃யாஸ் தஸ்யைவ நாமாதி₃ ப்ரவிஷ்டாயா யதா₂ர்ணவம் | ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமே காந்திநஸ்ததா₂’’ என்னாநின்றதிறே. (35)
36. விப்ரர்க்கு கோ₃த்ரசரணஸூத்ரகூடஸ்த₂ர் பராஶரபாராஶர்ய போதாயநாதிகள்; ப்ரபந்நஜநகூடஸ்தர் பராங்குஶபரகாலயதிவராதி₃கள்.
இனிமேல் இருவருடையவும் கூடஸ்த₂ரைச் சொல்லுகிறது (விப்ரர்க்கு என்று தொடங்கி). முற்பட்ட ப்₃ராஹ்மணர்க்கு பராஶர(வ்யாஸ)வஸிஷ்டா₂தி₃கள் கோ₃த்ர– கு₃ருக்களுமாய், போ₃தா₄யநாதி₃கள் ஸூத்ரகு₃ருக்களுமாய், (தத்தச்சரண– உப₄யங்களில்) பூர்வபூர்வபுருஷர்கள் கூடஸ்த₂ருமாய் இருப்பர்கள். ப்ரபந்நஜந கூடஸ்த₂ர் ‘‘‘பத்யுஶ்ஶ்ரிய: ப்ரஸாதே₃ந ப்ராப்தஸார்வஜ்ஞ்யஸம்பத₃ம் | ப்ரபந்நஜந கூடஸ்த₂ம் ப்ரபத்₃யே ஸ்ரீபராங்குஶம்’’ (பரா.அ.) என்றும், ‘‘ராமாநுஜாங்க்₄ரிஶரேணாஸ்மி குலப்ரதீ₃பஸ்த்வாஸீத் ஸ யாமுநமுநேஸ்ஸ ச நாத₂வம்ஶ்ய: | வம்ஶ்ய: பராங்குஶமுநேஸ்ஸ ச ஸோபி தே₃வ்யா தா₃ஸஸ்தவேதி வரதா₃ஸ்மி தவேக்ஷணீய:’’ (வரத.ஸ்தவே.102) என்றும் சொல்லுகிறபடியே நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களும், உடையவர்க்கு முன்பும் பின்புமுள்ள ஆசார்யர்களும் என்கிறார். (36)
37. அத்₄யயநஜ்ஞாநாநுஷ்டா₂நங்களாலே ப்₃ராஹ்மண்யமாகிறாப்போலே சந்தங்களாயிரமும் அறியக்கற்று வல்லரானால் வைஷ்ணவத்வ ஸித்₃தி..
இனிமேல் விப்ரரும் ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும் ப்₃ராஹ்மண்ய ஸித்₃தி₄ஹேது ஏது? வைஷ்ணவத்வஸித்₃தி₄ஹேது ஏது? என்னச் சொல்லுகிறார் (அத்₄யயநஜ்ஞாநா– நுஷ்டா₂நங்களாலே என்று தொடங்கி). அத்₄யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது – அதில் அர்த்த₂பரிஜ்ஞாநம். அநுஷ்டா₂நமாவது – அறிந்தபடியே அநுஷ்டி₂க்கை என்று இவற்றாலே ப்₃ராஹ்மண்யமாகிறாப்போலே, (சந்தங்கள் ஆயிரமும்) ‘‘சந்தங்களாயிரத்திவை வல்லார்’’ (திருவா.10-9-11) என்று ச₂ந்தோ₃ ரூபமான ஆயிரத்தையும், ‘‘அறியக் கற்றுவல்லார் வைட்டணவர்’’(திருவா.5-5-11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும் அத்₄யயநம்பண்ணி, ஆசார்யமுகத்தாலே அர்த்த₂ஶ்ரவணம்பண்ணி, அறிந்த படியே அநுஷ்டி₂க்கவும் வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம் ஸித்₃தி₄த்ததாவது. ‘ஸ்வாத்₄யாயோத்₄யேதவ்ய:’’ (தை. ஆ.2) என்கிற என்று அந்த வேதா₃ந்ததாத்பர்யமாய், இந்த த்₃ராவிட₃வேத₃த்துக்கு உள்ளீடான பா₄க₃வதஶேஷத்வபர்யந்தமான ப₄க₃வச்– சே₂ஷத்வபரிஜ்ஞாநாபா₄வத்தால் ப்₃ராஹ்மண்ய ஸித்₃தி₄யுமில்லை. (37)
38. இந்த உட்பொருள் கற்றுணர்ந்து மேலைத்தலைமறையோராகாதாரை அயல் சதுப்பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்.
அவர்களுடைய உத்பத்தியும் நிரூபிக்கவேணுமென்கிறார் (இந்த உட்பொருள் கற்றுணர்ந்து என்று தொடங்கி). ‘‘மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்’’ (க.நு.சி.9) என்று உபநிஷத்₃கு₃ஹ்யமுமான இந்த த்₃ராவிடவேதத்தினுடைய ரஹஸ்யார்த்த₂த்தை, (கற்றுணர்ந்து மேலைத்தலைமறையோராகாதாரை) ‘‘வேட்பனவும்’’ (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும் அநுஷ்டா₂நபரருமாகாதாரை ‘‘அயல்சதுப்பேதிமார்கள்’’ (திருமாலை.39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக்கடவதிறே. ‘‘ஓளபாஸநிஸஹஸ்– ரேப்₄யோ ஹ்யாஹிதாக்₃நிர்விஶிஷ்யதே | ஆஹிதாக்₃நிஸஹஸ்ரேப்₄யஸ்ஸோமயாஜீ விஶிஷ்யதே | ஸோமயாஜிஸஹஸ்ரேப்₄யஸ்ஸத்ரயாஜீ விஶிஷ்யதே | ஸத்ரயாஜி– ஸஹஸ்ரேப்₄யஸ்ஸர்வவேதா₃ந்தபாரக₃: | ஸர்வவேதா₃ந்தவித்கோட்யா விஷ்ணு– ப₄க்தோ விஶிஷ்யதே | விஷ்ணுப₄க்திவிஹீநோ யஸ்ஸர்வஶாஸ்த்ரார்த்த₂வேத்₃யபி | ப்₃ராஹ்மண்யம் தஸ்ய ந ப₄வேத் தஸ்யோத்பத்திர்நிரூப்யதாம்’’ என்னக்கடவதிறே.(38)
39. ‘‘எவ்வுலகத்தெவ்வெவையும்’’ என்கையாலே வேதம் ப₃ஹுவித₄ம்.
வேதா₃த்₄யயநவிதி₄போலே இப்ப்ரப₃ந்தா₄த்₄யயநமும் விதி₄ என்பது, இதினுடைய அர்த்த₂பரிஜ்ஞாநாபா₄வத்தில் உத்பத்தி நிரூபிக்கவேணுமென்பதாய்க் கொண்டு வேதத்தோடொக்கச் சொல்லாநின்றீர். இதுவும் பிற்றை வேதமோ என்னில் ; இதுவும் வேதம்; இது என்ன வேதம் என்ன; ‘‘வேதா₃ வா ஏதே | அநந்தா வை வேதா₃:’’ (யஜு. கா.) என்றும், ‘‘ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத்தெவ்வெவையும்’’ (திருவா.3-1-6) என்றும் சொல்லுகிறபடியே அத்₄யேதாக்களுடைய பே₄த₃த்தாலும், லோகபே₄த₃த் தாலும் வேத₃ம் ப₃ஹுவித₄ம் என்கிறார். (39)
40. இதில் ஸம்ஸ்க்ருதம், த்₃ராவிட₃ம் என்கிற பிரிவு ருகா₃தி₃பேத₃ம் போலே.
ஆனால் அது ஸம்ஸ்க்ருதமாய், இது த்₃ராவிட₃மாய்ப் பிரிந்திராநின்றதீ என்ன, சொல்லுகிறது மேல். (இதில்) இந்த வேதத்தில். (ஸம்ஸ்க்ருதம் த்₃ராவிட₃ம் என்கிற பிரிவு ருகா₃தி₃பே₄த₃ம்போலே என்று) வேதங்கள்தான் ஒன்றுபோலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான் ருக்₃யஜுஸ்ஸாமாத₂ர்வணங்களாய்ப் பிரிந்தாப்போலே வேதந்தான் ஸம்ஸ்க்ருதரூபமாயும், த்₃ராவிட₃ரூபமாயும் பிரிந்ததென்கிறார். (40)
41. செந்திறத்த தமிழென்கையாலே ஆக₄ஸ்த்யமும் அநாதி₃
ஆனாலும் அந்த ஸம்ஸ்க்ருத பா₄ஷைதான் அநாதி₃யாயிராநின்றதே என்ன; (செந்திறத்த தமிழென்கையாலே ஆக₃ஸ்த்யமும் அநாதி₃) ‘‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’’ (திருநெடு.4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில் ‘‘செந்திறத்த தமிழோசை’’ என்றதுக்குப் பின்பிறே ‘‘வடசொல்லாகி’’ என்றது. ஆகையாலே இரண்டும் அநாதி₃யிறே. (41)
42. வடமொழிமறை என்றது தென்மொழிமறையை நினைத்திறே.
ஆனால் அந்த பா₄ஷை அநாதி₃யாகிறது; திருவாய்மொழிக்கு வேத₃த்வமுண்டாக வேணுமென்கிற நிர்ப₃ந்த₄முண்டோ என்னில்; (வடமொழிமறை என்றது – தென்மொழி மறையை நினைத்திறே) வேத₃ம் என்னாதே ஸம்ஸ்க்ருதவேத₃ம் என்கையாலே த்₃ராவிட₃– வேத₃முமுண்டாகவேணுமென்கிறார். (42)
43. வேத₄சதுஷ்டய – அங்கோ₃பாங்க₃ங்கள் பதினாலும்போலே, இந்நாலுக்கும் இருந்தமிழ்நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்.
அங்கோ₃பாங்க₃ஸஹிதத்வம் இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார் மேல் (வேத₃சதுஷ்டயாங்கோ₃பாங்க₃ங்கள் என்று தொடங்கி). ‘‘அங்கா₃நி வேதா₃ஶ்சத்வாரோ மீமாம்ஸாந்யாயவிஸ்தர: | புராணம் த₄ர்மஶாஸ்த்ரஞ்ச வித்₃யா ஹ்யேதாஶ்சதுர்த₃ஶ’’ என்கிறபடியே சதுர்த₃ஶவித்₃யாஸ்தா₂நவேத₃ம்போல் இங்கும் இவருடைய ப்ர– ப₃ந்த₄ங்கள் நாலும் நாலு வேதத்தினுடைய ஸ்தா₂நேயாய், ‘‘இருந்தமிழ்நூற்புலவன் மங்கையாளன்’’ (திருமொழி.1-7-10) என்றும், ‘‘கலியன்வாயொலிசெய்தபனுவல்’’ (திருமொழி.1-4-10) என்றும் சொல்லுகிற திருமங்கையாழ்வாருடைய ப்ரப₃ந்த₄ங்க– ளாறும், அங்க₃ங்களினுடைய ஸ்தா₂நத்திலேயாய், மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரப₃ந்த₄ங்களும் உபாங்க₃ங்களாயிருக்கும். (43)
44. ஸகலவித்₄யாதி₄கவேத₃ம்போலே இதுவும் திவ்ய ப்ரபந்த ப்ரதாநம்.
ஸகலவித்₃யைகளிலும் வைத்துக்கொண்டு அங்கி₃யான வேதம் அதி₄கமாயன்றோ இருப்பது என்னில், (ஸகலவித்₃யாதி₄கவேதம்போலே) அந்த ஸகல வித்₃யைகளிலும் அதி₄கமான வேதம் ப்ரதா₄நமானாப்போலே இதுவும் தி₃வ்ய ப்ரப₃ந்த₄ங்களில் ப்ரதா₄நமாயிருக்கும். (44)
45. வேதநூல், இருந்தமிழ்நூல், ஆஜ்ஞை, ஆணை, வசையில், ஏதமில், சுருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில்பாடல், பண்டை, நிற்கும், முந்தை, அழிவில்லா என்னும் லக்ஷணங்களொக்கும்.
ஆனால் வேதத்துக்குச் சொல்லுகிற ‘‘வேத₃ஶாஸ்த்ராத்பரம் நாஸ்தி’’ (ஹரி வம்ஶே) என்கிற ஶாஸ்த்ரத்வமும், ‘‘ஶ்ருதிஸ்ம்ருதிர்மமைவாஜ்ஞா’’ என்கிற ப₄க₃வதா₃ஜ்ஞாரூபத்வமும், ப்₄ரமவிப்ரலம்பா₄தி₃தோ₃ஷரஹிதத்வமும், பூர்வ பூர்வோச்சாரணக்ரமத்தாலே உத்தரோத்தரோச்சார்யமாணத்வம், நித்யத்வம், ஸத்யத்வம் தொடக்கமான லக்ஷணங்கள் இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில், உண்டென்கிறார் (வேதநூல் என்று தொடங்கி). ‘‘வேதநூல்’’ (திருச்ச.72) என்றாப்போலே ‘‘இருந்தமிழ்நூல்’’ (திருமொழி 1-7-10) என்று ஶாஸ்த்ரத்வமும், ‘‘ஶ்ருதிஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’’ என்றாப்போலே ‘‘ஆணையாயிரத்து’’ (திருவா. 6-3-11) என்று ப₄க₃வத₃நுஶாஸநரூபமாய், ‘‘வசையில் வேதம்’’ (திருமொழி 5-3-2) என்றாப்போலே ‘‘ஏதமிலாயிரம்’’ (திருவா. 1-6-11) என்று ப்₄ரமவிப்ரலம்பா₄தி₃தோ₃ஷரஹிதமாய், ‘‘சுடர்மிகுசுருதி’’ (திருவா. 1-1-7) என்றும், ‘‘செவிக்கினிய செஞ்சொல்’’ (திருவா. 10-6-11)
என்றும் ஶ்ராவ்யமாய், ‘‘வேதநூலோதுகின்றதுண்மை’’ (திருச்ச.72) என்றாப்போலே ‘‘பொய்யில்பாடலாயிரம்’’ (திருவா. 4-3-11) என்று இதில் சொல்லுகிற அர்த்த₂ங்களில் ஒரு பொய் இன்றியிலே இருப்பதாய், ‘‘பண்டைநான்மறை’’(திருமொழி 5-7-3), ‘‘நிற்கும் நான்மறை’’ (திருவா. 6-5-4) என்றாப்போலே ‘‘முந்தையாயிரம்’’ (திருவா. 6-5-11) என்றும், ‘‘அழிவில்லா ஆயிரம்’’ (திருவா. 9-7-11) என்றும், ஆத்₃யந்தரஹிதமாய், அதிற்சொல்– லுகிற லக்ஷணங்கள் இதுக்குமுண்டென்கிறார். (45)
46. ‘‘சொல்லப்பட்ட’’ என்றதில் கர்த்ருத்வம் ‘ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்’ என்றது போலே.
ஆனால் ‘‘சொல்லப்பட்ட ஆயிரத்துள்’’ (திருவா.8-10-11) என்று இவர்தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில் கர்த்ருத்வத்தால் நித்யத்வ–அபௌருஷேயத்வ–ஹாநி வாராதோ என்னில், வாராதென்கிறார். அது என்போலவென்னில், ‘‘முன்னம் திசை முகனைத்தான் படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்’’ (பெ.திருமடல்) என்றும், ‘‘அநாதி₃நித₄நா ஹ்யேஷா வாகு₃த்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு₄வா’’ (பார.ஶா.) என்றும் சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, ‘ப்₃ரஹ்மா வேதங்களைப் படைத்தான்’ என்ற இடத்தில், அந்த ப்₃ரஹ்மாவால் வந்த கர்த்ருத்வத்தால் அவற்றினுடைய நித்யத்வ–அபௌருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப்போலே இதுக்கும் நித்யத்வ– அபௌருஷேயத்வஹாநி வாராது. (46)
47. நால்வேதங்கண்ட புராண ருஷி – மந்த்ரத₃ர்ஶிகளைப்போலே இவரையும் ருஷி, முனி, கவி என்னும்.
(நால்வேதங்கண்ட இத்யாதி₃) ‘‘நால்வேதங்கண்டானே’’ (திருமொழி.8-10-11) என்கிறபடியே நாலுவேதங்களைக் கரைகண்டவர்களையும் அஷ்டாத₃ஶபுராண கர்த்தாக்களையும் ‘‘சதுர்வேத₃த₃ர்ஶநாத்₃ருஷி:’’ என்கிறபடியே ருஷிகளென்றும், ‘‘ஜிதந்தே’’ இத்யாதி₃ஜிதந்தா– மந்த்ரத₃ர்ஶிகளான ஶௌநகாதி₃களை முனிகளென்றும், இதிஹாஸகர்த்தாக்களான ஸ்ரீவால்மீகிபகவான்போல்வாரை கவிகளென்றும் சொல்லுமாப்போலே இவரையும் ‘‘ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா– தத்த்வ மிவோதி₃தம் | ஸஹஸ்ரஶாகா₂ம் யோத்₃ராக்ஷீத்₃த்₃ராவிடீ₃ம் ப்₃ரஹ்ம ஸம்ஹிதாம்’’ (பரா.அ.) என்றும், ‘‘ஶட₂கோபமுநிம் வந்தே₃ ஶடா₂நாம் பு₃த்₃தி₄தூ₃ஷகம் | அஜ்ஞாநாம் ஜ்ஞாநஜநகம் திந்த்ரிணீமூலஸம்ஶ்ரயம்’’ (பரா. அ) என்றும், ‘‘உலகம் படைத்தான் கவி’’ (திருவா.3-9-10) என்றும் சொல்லுகையாலே இவரையும் ருஷி முனி கவி என்னும் என்கிறார். (47)
48. ‘‘படைத்தான் கவி’’ என்றபோதே இதுவும் யதா₂பூர்வகல்பநமாமே.
‘‘ஒன்றியொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு’’ (திருவா.3-10-10) என்று அடுத்தடுத்து ஜக₃த்ஸ்ருஷ்டியைப் பண்ணினவனுக்குக் கவியானேன் என்கையாலே ‘‘ஸூர்யாசந்த்₃ரமஸௌதா₄தாயதா₂பூர்வமகல்பயத்’’ (தை. உ.) என்று ஸ்ருஷ்டிதோறும் ஸூர்யாசந்த்₃ரமாக்கள் உண்டானாப்போலே ஸ்ருஷ்டிதோறும் இந்த ப்ரப₃ந்த₄மும் உண்டென்னுமிடம் தோற்றுகிறது. இத்தாலும் இதினுடைய அநாதி₃த்வம் சொல்லுகிறது. (48)
49. உறக்கம் தலைக்கொண்டபின்னை மறைநான்குமுணர்ந்த தங்க– ளப்பனோடே ஓதின சந்தச்சதுமுகன் சலங்கலந்த வெண்புரிநூல் மானுரி– திரிதந்துண்ணும் காமனுடல் இருக்கிலங்கு ஜ்யேஷ்ட₂ புத்ராதிகளுக்கு மறை பயந்தாப்போலே ஆதுமில் காலத்தெந்தையான வாய்முதலப்பன் பிரமகுருவாய் இராப்பகல் முன்சொல்லக் கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓதவல்ல பிராக்களை ‘‘கன்மின்கள்’’ என்று சொல்பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே ஆத₂ர்வணாதிகள்போலே இதுவும் பேர்பெற்றது.
ஆனால் அதி₄காரிகள் ஸம்ஹ்ருதராக வேதம் நித்யமானபடி என் என்னில், ஸர்வஜ்ஞனான ஸர்வேஶ்வரன் நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸுப்தப்ரபு₃த்₃த₄ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம் ‘‘யோ ப்₃ரஹ்மாணம் வித₃தா₄தி பூர்வம் யோ வை வேதா₃ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ (ஶ்வே.6-18) என்கிறபடியே ப்₃ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம் அவனுக்கு வேத₃ப்ரதா₃நத்தைப்பண்ண, ஸர்வேஶ்வரேனாடே அத்₄யயநம் பண்ணின அந்த ப்₃ரஹ்மாவானவன் ஜ்யேஷ்ட₂புத்ரனான ருத்₃ரன் தொடக்கமானாரை ஓதுவித்தாப் போலே ஸர்வேஶ்வரன் இந்த த்₃ராவிடவேத₃ஸம்ஸ்காரத்தைத் திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும் தம்பக்கலில் க்ருதஜ்ஞரான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை அத்₄யயநம் பண்ணுவிக்க, இதுவும் இவரையிட்டு நிரூபிக்கும்படியாய்த்து என்கிறார் (உறக்கம் தலைக்கொண்ட பின்னை என்று தொடங்கி). ‘‘உன்னிய யோகத்துறக்கம் தலைக்கொண்ட பின்னை’’ (பெ. திருமடல்) என்கிறபடியே ‘‘ந ப்₃ரஹ்மா நேஶாநோ நேமே த்₃யாவாப்ருதி₂வீ ந நக்ஷத்ராணி’’ (மஹோபநிஷத்) என்றும், ‘‘ப்ருதி₂வ்யப்ஸு ப்ரலீயதே’’ என்றுதொடங்கி, ‘‘மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தமக்ஷரே லியதே அக்ஷரம் தமஸி லீயதே தம: பரே தேவ ஏகீப₄வதி’’(ஸு.உ.), ‘‘ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்’’ (ம.உ.) என்றும், ‘‘ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று’’ (திருவா.4-10-1) என்றும் சொல்லுகிறபடியே ஸகல– தத்த்வங்களும் அவர்பக்கலிலே ஏகீப₄வித்து ‘‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்’’ (மநு..1-5) என்கிறபடியே நாமரூபவிபா₄கா₃நர்ஹமாய் அவனையிட்டு நிரூபிக்கவேண்டும்படி அவனொருவனுமேயாய், மேல் ஸ்ருஷ்ட்யாதி₃முக₂த்தாலே சேதநருடைய ரக்ஷண– ப்ரகாரங்களைத் திருவுள்ளத்தோடே கூட்டுகிற த₃ஶையிறே ஸம்ஹாரமாவது.
பின்னை ஸம்ஹாராநந்தரம் யோக₃நித்₃ராஸமாரூட₄னாய் ஸ்ருஷ்ட்யுந்– முக₂னான காலத்தில் ‘‘உணர்ந்தாய் மறைநான்கும்’’ (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும் ஸ்மரித்த ‘‘திசை முகனார் தங்களப்பன்’’ (திருமொழி.2-2-7) என்கிறபடியே தனக்குப் பிதாவான ஸர்வேஶ்வரேனாடே அத்₄யயநம் பண்ணின. முன்புள்ளவையையிறே அத்₄யயநம் பண்ணலாவதும், ஸ்மரிக்கலாவதும். ‘‘சந்தச் சதுமுகன்’’ (பெரியா.2-5-8) என்கிறபடியே ப்₃ரஹ்மாவானவன் ‘‘சலங்கலந்த செஞ்சடை’’, (திருச்ச.113) ‘‘வெண்புரிநூல்மார்வன்’’ (மு.திருவ.46), ‘‘மானுரியதளுமுடையவர்’’ (திருமொழி.10-9-5) , ‘‘பிறர்மனை திரிதந்துண்ணும்’’(திருக்குறு.19) , ‘‘காமனுடல்கொண்ட தவத்தான்’’(நா.திருவ.79) , ‘‘இருக்கிலங்குதிருமொழிவாய் எண்டோளீசர்’’ (திருமொழி 6– 6- 9) என்றும், நித்யஸ்நாநயஜ்ஞோபவீதக்ருஷ்ணாஜிநதா₄ரணமும், பி₄க்ஷா சரணமும், ஜிதேந்த்₃ரியத்வமும், ஸதா₃த்₄யயநபரத்வமுமாகிற ப்₃ரஹ்மசர்யலக்ஷணத்தை உடையனாய், ‘‘ப்₃ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டா₂ய ஶ்ரேஷ்டா₂ய’’ என்கிறபடியே ஜ்யேஷ்ட₂புத்ரனான ருத்ரன்முதலானார்க்கு ‘‘சரணாமறைபயந்த தாமரையான்’’ (மு.திருவ.60) என்று புருஷார்த்த₂–தத்ஸாத₄நஜ்ஞாந ஸாத₄நமான வேதத்தை ஓதுவித்தாப்போலே ‘‘ஆதுமில் காலத்தெந்தை’’ (திருவா.3-4-4) என்கிறபடியே சேதநாசேதநாத்மகமான ஸகலபதா₃ர்த்த₂ங்களும் வஸ்துத்வ–நாமபா₄க்த்வங்களை இழந்த காலத்தில் இவற்றைத் தன்பக்கலிலே ஏறிட்டுக்கொண்டுநோக்கி, ‘என்கை’ என்கிறபடியே ஸ்வாமியாயிருக்கிறவன். ‘‘என் வாய்முதலப்பன்’’ (திருவா.7-9-3) எனக்கு வாய்த்த ப்ரத₂மோபகாரகன் என்கிற. ‘‘பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி’’ (பெரியா. 5-2-8) என்கிறபடியே ஸர்வேஶ்வரன்தானே இவர்தமக்கு ஆசார்யனாய்வந்து ‘‘எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகலோதுவித்து’’ (பெரியா.5-2-3) என்கிறபடியே தி₃வாராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில் ‘‘என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே’’(திருவா.7-9-2) என்கிறபடியே ஈஶ்வரன் முன்னுருச்சொல்ல, ‘‘திருநாமச்சொல் கற்றனமே’’ (திருவிரு.64) என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று அவேனாடே ஓதின இவரும். ‘‘நாவினால் நவிற்றின்பமெய்– தினேன்’’ (க.நு.சி.2) என்று தொடங்கி ‘‘குருகூர்நம்பிப்பாவினின்னிசை பாடித்திரிவன்’’ என்றும், ‘‘நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவரா’ம் படியான ‘‘என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்’’ (க.நு.சி.4) என்கிற ப்ரதிபத்தியையுடைய ★ஓதவல்லபிராக்களான ஸ்ரீமதுரகவிகள்போல்வாரை ‘‘கன்மின்களென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்’’ (திருவா.6-8-6) என்கிறபடியே இப்ப்ரப₃ந்த₄த்தை அப்₄யஸியுங்கோள் என்று ‘‘சொல்பயிற்றிய நல்வளமூட்டினீர்’’ (திருவா.9-5-8) என்கிறபடியே சொல்லிச் சொல்லுவிக்க, வேதமானது ‘‘ஓதுவார் ஓத்தெல்லாம்’’ (திருவா.3-1-6) என்கிறபடியே அத்₄யேதாக்களையிட்டு, அத₂ர்வணம் என்றும், தைத்திரீயம் என்றும் பேர்பெற்றாப்போலே இதுவும் ‘‘சடகோபன்சொல்’’ என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர்பெற்றது. (49)
50. இயற்பா மூன்றும் வேதத்ரயம்போலே; பண்ணார்பாடல் பண்புரை இசைகொள் வேதம்போலே.
கீழே இவருடைய ப்ரப₃ந்த₄ங்கள் நாலும் வேதசதுஷ்டயம்போலே என்றது, எந்த ப்ரப₃ந்த₄ம் எந்த வேத₃ஸ்தா₂நத்திலே என்னில், (இயற்பா மூன்றும் என்று தொடங்கி). இயற்பாவாயிருக்கிற திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்கிற ப்ரப₃ந்த₄ங்கள் மூன்றும் ருக்₃யஜுரத₂ர்வணம் என்கிற மூன்று வேத₃ஸ்தா₂நத்திலே; ‘‘பண்ணார்பாடல்’’ (திருவா.10-7-5) என்கிற திருவாய்மொழி ‘‘பண்புடைவேதம்’’, (திருவா. 6-6-5) ‘‘இசைகொள்வேதநூல்’’ (திருமொழி. 5-3-2) என்றும் சொல்லுகிற கா₃நப்ரதா₄நமான ஸாமவேதம்போலே என்கிறார். (50)
51. ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய், ஸ்தோபத்தாலே பரம்புமாப் போலே சொல்லார் தொடையல் இசைகூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று.
இதில் ருக்கு ஸாமமாகப் பாடப்படுகிறாப்போலே ருக்₃வேத₃ ஸ்தா₂நேயாயிருக்கிற திருவிருத்தம் திருவாய்மொழியாகப் பாடப்படும் என்கிறார் (ருக்கு ஸாமத்தாலே என்று தொடங்கி). ஸாமஸங்க்₃ரஹம் ருக்கு; ருக்₃விவரணம் ஸாமம். அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும். (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்) ருக்கு ஸாமத்தோடேகூடி ரஸஸஹிதமாய். (ஸ்தோப₄த்தாலே பரம்புமாப் போலே) ஸ்தோப₄ம் என்கிறது ருக்₃வேதங்களையொழிந்த ‘‘ஹாவு ஹாவு ஹாவு’’ இத்யாதி₃களாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப்போலே ★சொல்லார் தொடையலான இந்நூறுபாட்டும் ‘‘இசைகூட்டி வண்சடகோபன்’’ (திருவா.2-4-11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே ‘‘அமர் சுவையாயிரம்’’ (திருவா.1-3-11) என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று. (51)
52. சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ்பயில் காந ஸ்வரூபியை ‘‘பாலையாகி’’ என்று விஶேஷிக்கையாலே வேதகீதச்சாமி நானென்ன ஸாமந்தோன்ற உத்₃கீ₃த₂ப்ரணவத்தை ப்ரத₂மத்திலே மாறாடி சரமகதிமுடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹாகோஷநல்வேதவொலிபோலே மஹாத்யயனம் என்னப்பாடுகையாலே இத்தை சா₂ந்தோக்₃யஸமமென்பர்கள்.
ஸாமந்தான் ஆயிரமாய் அநேகவிதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஒப்பாகிறது என்னில், சா₂ந்தோ₃க்₃யஸமமாயிருக்கும் என்கிறார் மேல் (சந்தோகன்) என்றுதொடங்கி. ‘‘சந்தோகன் பௌழியன் ஐந்தழலோம்புதைத்திரியன் சாமவேதி’’ (திருமொழி.5-5-9) என்கிறவிடத்தில் ‘‘ஸாமவேதி’’ என்று ஸாமஸாமாந்யமாகாமல் ‘‘சந்தோகன்’’ என்று முதலிலே பிரித்து ‘‘முன்னல்யாழ்பயில் நூல்நரம்பின் முதிர்சுவை’’ (திருவா.2-3-7) என்கிற கா₃நரூபியை – கா₃நரஸமானவனை; ‘‘யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி’’ (திருமொழி.7-3-7) என்றுகொண்டு கா₃நஸ்வரூபி என்று ஸமுதா₃யமாக்காமல், ‘‘பாலை’’, ‘‘யாழ்’’ என்கிற பண்ணையிட்டு விஶேஷிக்கையாலே ‘‘சாமவேதகீதனாய’’ (திருச்ச.14) என்றும், ‘‘வேதா₃நாம் ஸாம வேதோ₃ஸ்மி’’ (கீதை.10-22) என்றும் அவன்தன்னோடொக்க ஸமாநாதி₄கரிக்கும்படியான ச₂ந்தோ₃க₃ஸாமம் இத்திருவாய்மொழி என்னுமிடம் தோற்ற ‘‘உத்₃கீ₃த₂மேதத் பரமநுப்₃ரஹ்ம’’, ‘‘ஓங்காரோத்கீ₃த₂ மேவ’’, ‘‘ஓமித்யேதத₃க்ஷரமுத்₃கீ₃த₂முபாஸீத’’(சா.உ.1-1-1) என்று சொல்லுகிற உத்₃கீ₃த₂ப்ரணவத்தை ப்ரத₂மத்திலே மாறாடி. இப் ப்ரப₃ந்த₄த்துக்கு உத்₃கீ₃த₂ம் என்கிற இது ப்ரதா₄நம் என்னுமாகாரம் தோன்ற ப்ரணவத்தை ப்ரப₃ந்தா₄தி₃- யிலே ‘‘உயர்வற, மயர்வற, அயர்வறும்’’ என்று மாறாடி ‘‘உயர்ந்தே’’ என்று சரமக₃தி முடிவாக அகாரமகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம் அத்தைத் திருவாய் மொழிக்கு முடிவாக்கி {அகார–உகாரங்களின் சரமமான தகாரத்தைத் திருவாய் மொழிக்கு முடிவாக்கி}.
அன்றிக்கே அர்ச்சிராதி₃யை முடிவாக்கி என்னவுமாம். அதுக்கடி – முடிவிலே சூழ்விசும்பணிமுகிலாகையாலே. ‘‘தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்’’ (திருவா.9-4-9) என்று இப்ப்ரப₃ந்த₄த்தை ‘‘ஹாவு ஹாவு ஹாவு’’ என்று தொடங்கி, ‘‘அஹமந்நாதோ₃ஹமந்நாதோ₃ஹமந்நாத₃:’’ என்று தே₃வபோ₄க்₃யமானாப் போலே, ப₄க₃வத்₃விஷயத்தில் சபலரானார்க்கு போ₄க்₃யமாக்கி.
‘‘ஸர்வேப்₄யோபி ஹி வேதே₃ப்₄ய: ஸாமகோ₄ஷோ மஹாநபூ₄த்| அந்வகோ₄ஷ யத₃த்யர்த்த₂ம் தேந ப்₃ரஹ்மாண்ட₃மண்ட₃ப:’’ என்று (மஹாகோஷம்) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாமகோ₄ஷமிறே. ‘‘எழுந்த நல்வேதத்தொலி’’ என்றும், ‘‘ஸாமத்₄வநி’’ என்றும் சொல்லுமாப் போலே இப்ப்ரப₃ந்த₄த்தையும் மஹாத்₄யயநம் என்னப்பாடுகையாலே பெரிய திருவத்யயநம் என்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சா₂ந்தோ₃க்₃யஸமமென்பர்கள் என்கிறார். (52)
53. புரவியேழொருகாலுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரச் செங்கோல் நடாவி ஜ்யோதிஶ்சக்ரவொளிசுருக்கி அக்₃நீஷோமீய தேஜோம்ருதத்துக் கூற்றும், மந்தே₃ஹர்க்குச் செந்தீயும், முக்திமார்க்க₃த்தலைவாசலும், கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்கத் தோள்வளையும், குழையும், திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்,வளையும் குழையும், திருச்செய்யமுடியும் ஆரமும் படையும், திகழும் பொன்மேனியும், செஞ்சுடர்த் தாமரைக்கண்ணுமாய், அணிநிறமூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதா₃த்யேய தேஜஸ்ஸின் ஸாமரஸோத்கா₃ந நாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினாலருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத கு₃ரூபதேரூபதேஶம்.
அதிலே சொல்லுகிற அந்தராதி₃த்யவித்₃யை தொடக்கமானவற்றையும் இதிலே சொல்லுமென்றுகொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச்செய்கிறார் மேல் (புரவி ஏழொருகாலுடைய தேரிலே என்றுதொடங்கி). ‘‘காரார் புரவியேழ்’’ (சி. திருமடல்) என்றும், ‘‘ஒருகாலுடைய தேரொருவன்’’ (திருமொழி.5-7-8) என்றும், ‘‘ஸப்த யுஞ்ஜந்தி ரத₂மேகசக்ரம்’’ (அருணம். 3) என்றும், ‘‘ஏகோ அஶ்வோ வஹதி ஸப்தநாமா’’ (அருணம் 3) என்று ஸப்தநாமாவாயிருப்பதொரு அஶ்வத்தாலே வஹிக்கப்படுவதாய், ஏகசக்ரியுமாயிருக்கிற தேரிலே.
‘‘திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும்’’ (திருவிரு.86) என்கிறபடியே திருவாழியாழ்வானோடே ஒப்புச்சொல்லலாய், (காலசக்கரச் செங்கோல் நடாவி) ‘‘கால சக்கரத்தாய்’’ (திருவா.7-2-7), ‘‘தனிவளர் செங்கோல் நடாவுதிர்’’ (திருவிரு. 13) என்கிறபடியே காலசக்ரநிர்வாஹகமுமாய், (ஜ்யோதிஶ்சக்ரவொளி சுருக்கி) ‘‘துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி’’ (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ரதேஜஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப்பண்ணுமதாய்.
(அக்₃நீஷோமீயதேஜோம்ருதத்துக்கு ஊற்றும்) அக்₃நியினுடைய தேஜஸ்ஸுக்கும் சந்த்ரனுடைய அம்ருதகலைக்கும் உத்பத்திஸ்த₂லமுமாய். பூர்வாபரங்களாகிற பக்ஷ– த்₃வயத்திலும் சந்த்ரகலையானது போவதுவருவதாவது ஆதித்யன்பக்கல்நின்றுமிறே.
(மந்தேஹர்க்குச் செந்தீயும்) மந்தே₃ஹரென்று – ஆதி₃த்யேனாடேஉத₃யாஸ்தமய– ஸமயங்களிலே யுத்தம் பண்ணுவார் சில அசுரர்கள். அவர்களை ‘‘எரிகொள் செந்தீவீழ்’’ (திருவிரு. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்₃நிஜ்வாலையுமாய்.
(முக்திமார்க்கத்தலைவாசலும்) ‘‘நக்ஷத்ராதா₃தி₃த்யம்’’ என்று முக்திமார்க்க₃ த்₃வாரமுமாய், ‘‘ஸம்வத்ஸராதா₃தி₃த்யம்’’ என்று ஆதித்யனைக்கூட்டி ‘‘தத்₃பி₄த்வா ஸூர்யமண்ட₃லம்’’ என்றும், ‘‘தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு’’ (சி.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே ஆதி₃த்யமண்டலத்தை பே₄தி₃த்தே முக்தனுக்குப் போகவேண்டுகையாலும், மற்றவையெல்லாம் கிட்டுமளவேயாய் அண்ட₃பே₄த₃ம் பின்பே{அண்ட₃பே₄த₃த்துக்குமுன்பே}யாகையாலே முக்திமார்க்க₃த் தலைவாசலும் என்கிறார்.
(கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும்) ‘‘கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’’ (திருவாய்.1-8-3) என்றும், ‘‘சக்ஷுர்தே₃வாநாமுத மர்த்யாநாம்’’ (யஜு. ஸம்.4-6) என்றும் சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ரபூதனான ஸர்வேஶ்வரனுடைய ‘‘சக்ஷோஸ்ஸூர்யோ அஜாயத’’ (பு.ஸூ.) என்கிறபடியே தி₃வ்யசக்ஷுஸ்ஸைப் பிறப்பகமாக உடைத்தாய்.
‘‘ஜகதேகசக்ஷுஷே’’ என்கிறபடியே ஜகத்துக்கு த்ருஷ்டிபூதமாய், (த்ரயீமயமுமான மண்டலத்திலே) ‘‘த்ரயீமயாய’’ என்கிறபடியே வேதமயமுமான ஆதித்யமண்டலத்திலே. (தண்டாமரை சுமக்க) ‘‘தண்டாமரை சுமக்கும் பாதப்பெருமான்’’ (திருவாய்.4-5-8) என்றும், ‘‘த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண ஸரஸிஜாஸநஸந்நிவிஷ்ட:I கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீஹிரண்மயவபு: த்ருதஶங்கசக்ர:’’ என்றும், ‘‘மங்கல வைம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும்’’ (பெரியா.திரு.1-5-9) என்றும், ‘‘திருச்செய்ய முடியுமாரமும் படையுந்திகழ’’ (திருவாய்.8-4-7) என்றும், ‘‘நீண்டபொன் மேனியோடும்’’ (திருவாய்.5-5-7), ‘‘செஞ்சுடர்த்தாமரைக்கண் செல்வனும்’’ (திருவாய்.5-4-9) என்றும் சொல்லுகிறபடியே பா₃ஹுவலய–மகரகுண்டல–அபி₄ஷேக–ஹார–கேயூர–ஶங்க₂–சக்ராதி₃ தி₃வ்ய பூ₄ஷணங்களாலும் விளங்கா நிற்பதுமாய், ‘‘ருக்மாப₄ம் ஸ்வப்நதீ₄ க₃ம்யம் வித்₃யாத்து புருஷம் பரம்’’ (மநு.12-122) என்றும், ‘‘ஆப்ரணகா₂த் ஸர்வ ஏவ ஸுவர்ண:’’ (சா₂.1-6-6) என்றும் சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான தி₃வ்ய விக்₃ரஹத்தையும், ‘‘யதா₂ கப்யாஸம் புண்ட₃ரீகமேவமக்ஷிணீ’’ (சா₂.) என்கிறபடியே ஆதி₃த்யகிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸையுடைய திருக்கண் மலரையுமுடைத்தாய்,
‘‘அருக்கனணிநிறமும் கண்டேன்’’ (மூ.திரு.1) என்றும், ‘‘செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி’’ (திருவாய்.4-4-2) என்றும் சொல்லுகிறபடியே ஆதி₃த்யதேஜஸ்ஸுபோலேயிருக்கிற ப₄க₃வத்₃விக்₃ரஹத்தையும், ப்ரபா–ப்ரபா₄வான் –களுடைய சேர்த்தியாலே ஶ்ரிய:பதித்வத்துக்கு ஸ்மாரகமுமாயிருக்கிற ஆதி₃த்ய மண்ட₃லத்தையும், இவையிரண்டையும் தன்னிறமாக்கும்படியான ‘‘கமல மலர்மேல் செய்யாள்’’ (திருவாய்.9-3-1) என்கிறபடியே ஹிரண்யவர்ணையாய், ‘‘வித்₃யா ஸஹாயம்’’ ‘‘ஆதி₃த்யஸம்ஸ்த₂ம் வித்₃யாப்ரபா₄வகம் {ப்ரஸாத₃கம்}’’ என்கிறபடியே வித்₃யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.
‘‘வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு’’ (பெ.திருமொழி.2-1-7) என்கிறபடியே ஆதி₃த்யாந்தர்வர்த்தியாய், ஸதா₃த்₄யேயதேஜோரூபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி₃க்கிற ‘‘ஸாம்ந உத்₃கீ₃தோ₂ ரஸ:’’ (சா₂.) என்று ஸாமத்துக்கு ரஸமாய், ‘‘தஸ்யோதி₃தி நாம’’ (சா₂.) என்கிறபடியேஅவர்க்குத் திருநாமமாயிருக்கிற உத்₃கா₃ந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே ‘‘உத்’’ என்கிறவிதில் உகார–தகாரங்களை ஆத்₃யந்தங்களில் உடைத்தாயிருக்கிற இப்ப்ரப₃ந்த₄த்தை.
‘‘ஓராயிரமாயd உலகேழளிக்கும் பேராயிரம்’’ (திருவாய்.9-3-1) என்கிறபடியே ஓரோ திருநாமமே அநேக ப்ரகாரமாக ரக்ஷிக்கும்படியான திருநாமங்களில் வைத்துக் கொண்டு ஆதி₃த்யாந்தர வஸ்தி₂தனானவனுக்குத் திருநாமமான ‘‘உத்’’ என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயணஶப்₃த₃த்தை ‘‘ஆயிரமுகத்தினாலருளி மந்தரத்திழிந்த கங்கை’’ (பெரிய. திரு.1-4-7) என்கிறபடியே கங்கை லோகபாவநார்த்த₂மாக ஸஹஸ்ர முக₂மாக ப்ரவஹித்தாப் போலே ‘‘தீர்த்தங்களாயிரத்து’’ (திருவாய்.7-10-11) என்கிறபடியே லோகபாவநார்த்த₂மாக ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று வேதா₃சார்யப₄ட்டர் அருளிச்செய்யும்படி.
ஆக, ‘‘எவ்வுலகத்தெவ்வெவையும்’’ என்று தொடங்கி, இவ்வாழ்வார் அருளிச்செய்த ப்ரப₃ந்த₄ங்கள் நாலுக்கும் வேத₃ரூபத்வமும், அங்கோ₃பாங்க₃ ஸஹிதத்வமும், ஶாஸ்த்ரத்வம் முதலான வேத₃லக்ஷணங்களும் இவற்றினுடைய நித்யத்வ–அபௌருஷேயத்வமும், இந்நாலு ப்ரப₃ந்த₄ங்களுக்கும் நாலுவேத₃ ஸ்தா₂நேயான ப்ரகாரத்தையும், அதில் திருவாய்மொழி ஸாமஸாமாந்யமன்றிக்கே, ச₂ந்தோ₃க₃ ஸாமோபநிஷத்தாயிருக்கிற ப்ரகாரத்தையும், அதில் விஶேஷ லக்ஷணங்களையும் சொல்லுகையாலே இப்ப்ரப₃ந்த₄த்– துக்கு வேத₃ஸாம்யம் சொல்லாநின்றது. (53)
54. அன்றிக்கே, ஸ்வரூபகு₃ணவிபூ₄திசேஷ்டிதங்களை விஶதமாக்குகிற பஞ்சராத்ரபுராணேதிஹாஸங்கள் போலே நீலபா₄ரூபோக்தி தெரியச்சொன்ன வேதோ₃பப்₃ரும்ஹணமென்பர்கள்.
இனிமேல் ஸ்வரூபாதி₃களை விஶத₃மாகச் சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதி₃களைப்
போலே விக்₃ரஹத்தை விஶத₃மாகச் சொல்லுகிற வேத₃த்துக்கு இப்ப்ரப₃ந்த₄ம் விவரணரூபமாயிருக்கும் என்பாருமுண்டென்கிறார் (அத₂வா வேத₃ஸாம்யமுண்டான மாத்ரமேயன்றிக்கே ஸ்வரூபரூபகு₃ணவிபூ₄திசேஷ்டிதங்கள் என்று தொடங்கி).
ஸ்வரூபரூபகு₃ணவிபூ₄திசேஷ்டிதங்களித்தனையும் வேத₃த்திலே சொல்லும். இதில் ஸ்வரூபத்தையும், கு₃ணத்தையும் விஶத₃மாகச் சொல்லும் ஸ்ரீபாஞ்சராத்ரம், விபூ₄தியை விஶத₃மாகச் சொல்லும் புராணங்கள், அவனுடைய தி₃வ்ய சேஷ்டிதங்களுக்கு ப்ரகாஶகமாயிருக்கும் இதிஹாஸங்கள், அவைபோலே ‘‘நீலதோயத₃ மத்₄யஸ்தா₂ வித்யுல்லேகே₂வ பா₄ஸ்வரா’’ (தை.நா.) என்றும், ‘‘பா₄ரூபஸ் ஸத்ய ஸங்கல்ப:’’ (மு.உ.2-2-7) என்றும் விக்₃ரஹபரமான வேத₃வாக்யங்களை ‘‘தெரியச் சொன்ன ஓராயிரம்’’ (திருவாய்.6-9-11) என்கிறபடியே விஶத₃மாக்குகிற வேதோ₃பப்₃ரும்ஹணம் என்பாருமுண்டென்கிறார்.
‘‘சுடரடி’’ (திருவாய்.1-1-1) என்று தொடங்கி ‘‘புனக்காயாநிறத்த புண்டரீகக்கட் செங்கனிவாய்’’ (திருவாய்.10-10-5) என்று தலைக்கட்டுகையாலே ஸ்வரூபாதி₃கள் எல்லாவற்றிலும் உண்டேயாகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்கு என்கிறார். (54)
55. கல்பாதி₃யில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்த₃ஸ்ஸும் மோஹஶாஸ்த்ரப்ரவர்த்தகன் பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறேறிச்சுழன்றாடும் ஆலமமர் பிச்சுத்தெளிந்து தான் வணங்குமாறுரைக்கக்கேட்ட ஸஜாதீயர்ப்ரஸாதமும் ஆர்ஷமூலம்.
கீழ்ச்சொன்ன புராணேதிஹாஸகர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதி₃யிலே உத்₃ரிக்தகு₃ணாநுகு₃ணமாகச் சொல்லும் ப்₃ரஹ்மாவின் ப்ரஸாத₃மும், ரஜஸ்தம:ப்ரசுரனான ருத்₃ரன், அவை தலைசாய்ந்து ஸத்த்வம் தலையெடுத்தபோது அத்₄யாத்மம் சொல்லக்கேட்ட ஸப்₃ரஹ்மசாரிகளான ப்₄ருகு–புலஸ்த்ய–மார்க்கண்டே₃ய– வாமதே₃வாதி₃கள் என்று சொல்லப்படுகிறவவர்கள் ப்ரஸாத₃மும் ஆர்ஷத்துக்கு மூலம். ப்₃ரஹ்மருத்₃ராதி₃களுக்கு அந்தர்யாமியாய்க்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதா₃நம் பண்ணினவன்தானே ஶ்ரிய:பதியாய், பரமஸத்த்வஸமாஶ்ரயமான தி₃வ்ய விக்₃ரஹயுக்தனுமாய் நின்று செய்த ப்ரஸாத₃ம் இவர்க்கு மூலம் என்கிறார் ‘ (கல்பாதி₃யில் தோற்றிற்று வர்ணிக்கும் என்று தொடங்கி).
(கல்பாதி₃யில்) ‘‘யஸ்மிந் கல்பே து யத்ப்ரோக்தம் புராணம் ப்₃ரஹ்மணா புரா | தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே || அக்₃நேஶ்ஶிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்யதே | ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதி₄கம் ப்₃ரஹ்மேணா விது₃: | ஸாத்த்விகேஷ்வத₂ கல்பேஷு மாஹாத்ம்யம் அதி₄கம் ஹரே: | தேஷ்வேவ யோக₃– ஸம்ஸித்₃தா₄ க₃மிஷ்யந்தி பராம் க₃திம்’’ (மாத்ஸ்யே) என்று கு₃ணத்ரயவஶ்யனாகையாலே கல்பாதி₃யிலே தனக்குத் தோற்றின கு₃ணாநுகு₃ணமாக தமஸ்ஸு தலையெடுத்தபோது ருத்₃ராக்₃நிமாஹாத்ம்யமும், ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வவர்ணநமும், ஸத்த்வம் தலையெடுத்தபோது ப₄க₃வத்₃ வர்ணநமும் சொல்லக்கடவனான ப்₃ரஹ்மாவினுடைய ‘‘மச்ச₂ந்தா₃தே₃வ தே ப்₃ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ’’ (ரா. பா.2-31) என்கிற நினைவும். ‘‘சந்தஸ்ஸு’’ என்றது நினைவென்றபடி
(மோஹஶாஸ்த்ரப்ரவர்த்தகன்’) ‘‘த்வம் ஹி ருத்₃ர மஹாபா₃ஹோ மோஹஶாஸ்த்ராணி காரய | மாஞ்ச கோ₃பய யேந ஸ்யாத் ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்யவாத₃ஶ்சித்தவிபே₄த₃த: || கிம்புநர்லோகமோஹார்த்த₂ம் ப்ரவ்ருத்தம் ருத்₃ர- ஶாஸநம் | மயாநுஶிஷ்டோ ருத்₃ரஸ்து மோஹஶாஸ்த்ரம் வ்யதா₄த் ஸ்வயம்’’ என்கிற படியே ப₄க₃வந் நியோகத்தாலே மோஹ ஶாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்₃ரன். (பிணச்சுடலை இத்யாதி₃) ‘‘பிணங்களிடுகாடதனுள்’’ (திருமொழி 2-6-9) என்றும், ‘‘சுடலையில் சுடு நீறன்’’ (திருமொழி 10-1-5) என்றும், ‘‘வெந்தாரென்பும் சுடுநீறும்’’ (திருமொழி.1-5-8) என்றும், ‘‘அக்கும் புலியினதளுமுடையர்’’ (திருமொழி. 9-6-1) என்றும், ‘‘ஆறும் பிறையுமரவமும் அடம்பும் சடைமேலணிந்து’’ (திருமொழி. 6-7-9) என்றும், ‘‘வேறேறிப் பட்டவிடுசாபம்’’ (இர.திருவ. 63) என்றும், ‘‘தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்’’ (பெ.திருமடல்) என்றும், ‘‘ஆலமமர் கண்டத்தரன்’’ (மு.திருவ. 4) என்றும், ‘‘ஆல்மேல் வளர்ந்தானைத்தான் வணங்குமாறு – மேலையுகத்துரைத்தான்’’ (நா. திருவ. 17) என்றும் சொல்லுகிற இவற்றாலே ருத்₃ரன் தமஸ்ஸு தலைமண்டையிட்டு ப₄க₃வத்₃– விமுக₂னாய் ப்₄ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும் ஸஞ்சரியாநின்றுகொண்டு, ‘‘தீ₃பாக்₃நிம் தீ₃பதைலஞ்ச ப₄ஸ்ம சாஸ்தி₂ம் ரஜஸ்வலாம் | ப்ரமாதா₃த் ஸ்பர்ஶநாத்₃ விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஶேத்’’ என்று த₃ர்ஶந–ஸ்பர்ஶந–அநர்ஹங்களான ப₄ஸ்மாஸ்தி₂களை த₄ரித்து, வ்யாக்₄ரசர்மவஸநனாய், நதீ₃சந்த்₃ரர்களை ஜடையிலே த₄ரித்து, ஶாபோபஹதனாய், க்ருத்யாக்ருத்ய விவேகஶூந்யனாய் விஷத்தை த₄ரித்து, சக்ரப்₄ரமம் போலே ப்₄ரமிக்கிறவன்,
அதுக்குமேலே ஸத்த்வம் தலையெடுத்து, ஸத்த்வம் விஷ்ணுப்ரகாஶக மாகையாலே, அக₄டிதக₄டநாஸாமர்த்₂யத்தையுடைய ஸர்வேஶ்வரனே உபாஸ்யன் என்று தான் அவனை உபாஸிக்கும் ப்ரகாரத்தை உபதே₃ஶிக்கக்கேட்டு ஸத்த்வஸ்த₂ராய், ருஷித்வத்தால் ஸாஜாத்யத்தையுடையரான புலஸ்த்ய–ப்₄ருகு₃–மார்க்கண்டே₃ய–வாமதே₃வாதி₃களுடைய ப்ரஸாத₃ம் ஆர்ஷங்களான புராண இதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதி₃களுக்கு பராஶரேனோடே ருஷிஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர் என்றது. (55)
56. பரமஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறைஞானத்தயனாம் சிவனாம் திருமாலருள்கொண்டு இவர் பாடினார்.
இனி (பரமஸத்த்வம்) என்றுதொடங்கி – ‘‘பரமஸத்த்வஸமாஶ்ரய: க:’’ (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ்தமஸ்ஸுக்கு ஆஶ்ரயமன்றிக்கே பரமஸத்த்வஸமாஶ்ரயனாய், அவர்களைப்போலே தோற்றிற்றுச் சொல்லுகையன்றிக்கே ‘‘நெறியுள்ளியுரைத்த’’ (திருவா.1-3-5) என்கிறபடியே இவன் சொல்லிற்றொன்று வேதா₃ர்த்த₂மாயிருக்கச் செய்தேயும், இச்சேதநர்பக்கல் க்ருபாதிஶயத்தாலே விசாரித்துச் சொல்லலாம்படி ஆப்தனுமாய், ‘‘நிறைஞானத்தொருமூர்த்தி’’ (திருவா.4-8-6) என்கிறபடியே அதுக்கடி– யான ஸார்வஜ்ஞ்யத்தையுமுடையனாய், ‘‘அயனாய் சிவனானாய் திருமாலாலருளப் பட்ட சடகோபன்’’ (திருவா.8-8-11) என்கிறபடியே ப்₃ரஹ்மருத்₃ராதி₃களுக்கும் அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப்போலே ஶ்ரிய:பதியாய் அஸாதா₄ரண விக்₃ரஹயுக்தனான ஈஶ்வரனுடைய க்ருபை இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார்.
57. கருவுள் வேறலாமை அரன் அயன் எனச்செய்யுமவைபோலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரமகவிகளால் பாடுவியாது நேர்படச்சொல்லும் நீர்மையிலா என்னைத்தன்னாக்கி என் நாமுதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்யசொல்லால் சொல்லவல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான் என்றாரிறே.
அவர்களுடைய ப்ரஸாத₃ம் ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம் ப்ரமாண ப்ரஸித்₃த₄மாயிருந்தது. இவருடைய ப்ரப₃ந்த₄த்துக்கு ப₄க₃வத்ப்ரஸாத₃ம் மூலம் என்னுமிடம் அறிந்தபடி என் என்னில், அவர்தம்முடைய வசநங்கள் ப்ரமாணம் என்கிறார் (கருவுள் வேறலாமை என்றுதொடங்கி).
‘‘ஸ்ருஷ்டிஸ்தி₂த்யந்தகரணீம் ப்₃ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகாம் | ஸ ஸம்ஜ்ஞாம் யாதி ப₄க₃வாந் ஏக ஏவ ஜநார்த்த₃ந:’’ (வி.பு.1-2) என்றும், ‘‘ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாமாவிஶ்ய ப்ரஜாபதே’’, ‘‘கல்பாந்தே ருத்₃ரரூபீ யோ க்₃ரஸதே ஸகலம் ஜக₃த் | தமாத்₃யம் புருஷம் விஷ்ணும் ப்ரணதோஸ்மி ஜநார்த்த₃நம்’’, ‘‘விஷ்ணுராத்மா ப₄க₃வதோ ப₄வஸ்யாமிததேஜஸ: | தஸ்மாத்₃த₄நுர்ஜ்யாஸம்ஸ்பர்ஶம் ஸவிஷேஹே மஹேஶ்வர:’ (பா₄ர. கர்ண. 29) என்றும், ‘‘திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்’’ (திருவா.5-10-8) என்றும், ‘‘வெள்ளநீர்ச்சடையானும் நின்னிடை வேறலாமை விளங்கநின்றதும்’’ (திருவா.5-10-4) என்றும் சொல்லுகிறபடியே ப்ரஹ்மாதி₃களுக்கு அந்தர்யாமியாய் ஸ்ருஷ்ட்யாதி₃ களைப் பண்ணாநிற்கச் செய்தேயும் ‘‘அரனயனென உலகழித்து அமைத்துளன்’’ (திருவா.1-1-8) என்கிறபடியே ‘ப்₃ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்; வேதங்களை உபதேஶித்தான்; ருத்ரன் ஜகத்தை ஸம்ஹரித்தான்; த்ரிபுரங்களை த₃ஹித்தான்’ என்று லோகத்தார் செய்தாப்போலே ‘‘மூவுருவாம் முதல்வன்’’ (திருவா.7-9-2) என்கிறபடியே ப்₃ரஹ்மாதிகளுக்குத் தானே காரணமானாப்போலே தனக்குத்தானே அடியாயிருக்கிறவன்,
‘‘திறத்துக்கே துப்பரவாம்’’ (திருவா.7-9-9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொருகார்யம் கொள்ளநினைத்தான், அத்தைக்கொண்டே அக்கார்யம் கொள்ளவல்ல ஸாமர்த்₂யத்தை உடையனாகையாலே, தன்னைக்கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால் ‘‘இன்கவிபாடும் பரமகவிகளால் தன்கவி தான் தன்னைப் பாடுவியாது’’ (திருவா.7-9-6) என்கிறபடியே வ்யாஸ–பராஶர–வால்மீகிகளைக்கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல், முதலாழ்வார்களைக்கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளுதல் செய்யாதே. (நேர்படச்சொல்லும் நீர்மையிலா என்னைத் தன்னாக்கி) ‘‘நேர்பட யான் சொல்லும் நீர்மையிலாமையில்’’ (திருவா.7-9-5) என்கிறபடியே தன்னைக்கவிபாடு– கைக்குத் தகுதியான ஜ்ஞாநஶக்த்யாதி₃களின்றிக்கே இருக்க, ‘‘என்னைத் தன்னாக்கி’’ (திருவா.7-9-1) என்கிறபடியே என்னைத் தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்; என்னைத் தன்னோடொத்த ஜ்ஞாநஶக்த்யாதி₃களை உடையனாம்படி பண்ணி, ‘‘என் நாமுதல் வந்துபுகுந்து’’ (திருவா.7-9-3) என்கிறபடியே ஜ்ஞாநாதி₃களை உண்டாக்கித் தான் தூ₃ரஸ்த₂னாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்₃ரத்திலே வந்து புகுந்திருந்து.
‘‘தப்புதலின்றித்தனைக்கவிதான் சொல்லி’’ (திருவா.7-9-4) என்கிறபடியே என்னை உபகரணமாகக்கொண்டு கவிபாடாநிற்கச்செய்தே என்னுடைய ஸ்பர்ஶத்தால் வந்த தோ₃ஷம் தட்டாதபடிபண்ணி, ‘‘தன்னை வைகுந்தனாகப்புகழ வண்தீங்கவி’’ (திருவா.7-9-7) என்கிறபடியே நான் கவிபாடினபின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட₂ நாத₂னாகவும் அவ்விபூ₄தியில் ஐஶ்வர்யம் தான் பெற்றானாகவும் நினைத்து, ‘‘தன்சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்’’ (திருவா.7-9-2) என்கிறபடியே சொல்லும் தன்னதாய், சொன்னானும் தானாய், சொல்லிற்றும் தன்னையாய், ‘‘தன்னைத்தானே துதித்து’’ (திருவா.10-7-2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய் நின்று தன்னைத்தானே ஸ்துதியாநிற்கச் செய்தேயும்.
‘‘மலக்குநாவுடையேற்கு’’ (திருவா.6-4-9) என்றும், ‘‘நாவியலாலிசை மாலைகளேத்தி’’ (திருவா.4-5-4) என்றும், ‘‘மொய்யசொல்லாலிசைமாலைகளேத்தி’’ (திருவா.4-5-2) என்றும், ‘‘வானக்கோனைக் கவி சொல்லவல்லேற்கு’’ (திருவா.4-5-9) என்றும் இப்படி நானும் சொல்லி, ‘‘சடகோபன்சொல்’’ என்றவாறே நாடும் அஞ்ஜலி பண்ணும்படி பண்ணி, ‘‘என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்து’’ (திருவா.7-9-2) என்று – சொல் என்னதாகவும், சொன்னேன் நானாகவும், அதுதான் எனக்கு இனிதாகவும் சொல்லுவித்தான் என்கிறாரிறே. ஆகையால் இவருடைய உக்திகளால் ஸர்வேஶ்வர– னருளாலே திருவாய்மொழி பாடினார் என்னுமிடம் ஸித்₃த₄ம். (57)
58. தர்மவீர்யஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப்போலன்றே அருளின பக்தியாலே உள்கலங்கிச்சோகித்து, மூவாறு மாஸம் மோஹித்து, வருந்தி, ஏங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்.
இதுக்குக்கீழ் ப்ரப₃ந்த₄மூலவைலக்ஷண்யம் சொல்லிற்று. இனிமேல் வக்த்ருவைலக்ஷண்யம் சொல்லுகிறது (த₄ர்மவீர்யஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி). ‘‘ஹஸிதம் பா₄ஷிதஞ்சைவ க₃திர்யா யச்ச சேஷ்டிதம் | தத்ஸர்வம் த₄ர்மவீர்யேண யதா₂வத்ஸம்ப்ரபஶ்யதி’’ (ரா. பா₃.3-4) என்கிறபடியே தந்தாமுடைய தபோப₃லத்தாலே லப்தமான ஞானத்தாலே ‘‘கண்டும் தெளிந்தும்’’ (திருவா 7-5-7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்ட- ராய், மேலே மேலே ஶப்₃த₃ங்களைத் தொடுக்கும் ருஷிகளைப் போலன்றே அருளின ப₄க்திரூபமான ஞானமெல்லாம் அடிமண்டியோடே கலங்கி யதாமநோரதம் பகவதநுபவம் பண்ணப்பெறாமையாலே ஶோகித்து, ‘‘தாம்நா சைவோதரே பத்த்வா ப்ரத்யபத்நாதுலூகலே | யதி ஶக்நோஷி கச்சத்வம் அதிசஞ்சல- சேஷ்டித’’ என்றும், ‘‘உரலிேனாடிணைந்திருந்தேங்கிய எளிவு எத்திறம்’’ (திருவா. 1 – 3 – 1) என்றும், ‘‘போனாய் மாமருதின் நடுவே’’ (திருவா. 5 – 1 – 2) என்றும், ‘‘பிறந்தவாறும் வளர்ந்தவாறும்’’ (திருவா. 5 – 10 – 1) என்றும், ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வஶக்தியாயிருக்கச் செய்தே இப்படி ஓரபலைகையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஶ்ரிதவ்யாமோஹந்- தான்!’ என்கிற ஆஶ்ரிதவ்யாமோஹாநுஸந்தாநமும்,
இவர் ப₄க்திபாரவஶ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதி₃களை மறந்து விரோத₄ம் பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும் நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தி₄த்து, ‘உலகங்கட்கெல்லாம் ஓருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில் செய்வதென்?’ என்கிற ப்ரேமாதிஶயமும், ‘ஜநநஹேதுவான கர்மஸ்பர்ஶமில்லாத வஸ்து ‘‘ததஶ்ச த்வாதஶே மாஸே’’ (ரா.பா₃. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டுமாஸம் க₃ர்ப்ப₄வாஸம்பண்ணி ஶத்ருக்₃ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!’ என்றும், ஓரொன்றில் மூவாறு மாஸம் மோஹித்து, ‘‘வருந்திநான் வாசகமாலைகொண்டு’’ (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல் எடுக்கும்போது ஒரு மலை எடுத்தாப்போலே வருந்தி. (ஏங்கி) ‘‘என்றென்றேங்கி அழுதக்கால்’’ (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன்திருநாமங்- களைச் சொல்லப்புக்கு ப₃லஹாநியாலே நடுவுநடுவே ஏங்குவது இளைப்பதாய். (தாழ்ந்த) ‘‘அங்கே தாழ்ந்த சொற்களால்’’ (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப்புக்குச் சொல்லமாட்டாதே தரைப்பட்டு கத்கதஸ்வரத்தோடே ‘‘வண்டமிழ்நோற்க நோற்றேன்’’ (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிறவிவர் என்கிறார். (58)
59. ஸ்வாத்₄யாய யோக₃ங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமைமைப்பாலே ஓதி உணர்ந்தவர் இன்றும் ஆஶாபாஶபத்தர்..
இனிமேல் இந்த ருஷிகளிற்காட்டில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசையறுகையால்
உண்டான வைலக்ஷண்யம் சொல்லுகிறது (ஸ்வாத்₄யாயயோக₃ங்களைக் கற்றும் தெளிந்தும் என்று தொடங்கி). வேதங்களைக் கற்றும் அதில் அர்த்த₂த்தைத் தெளிந்தும் யமநியமாத்₃யஷ்டாங்க₃யோக₃த்தாலேயும் அவனைக்கண்டமைப்பாலே – ஸ்வபா₃ஹு ப₃லார்ஜிதமான ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்தாலே தாங்கள் காண்கிறதாகையாலே மெய்ம்மையற்றிருக்கும்; அவிஶத₃மாயுமிருக்கும். அத்தாலே ‘‘ஓதியுணர்ந்தவர் முன்னா’’ (திருவா.3-5-5) என்கிறபடியே வேத₃ஶாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்ய உபாதே₃யங்களை உணர்ந்திருக்கிற ருஷிகள், இன்றும் ‘‘ஆஶாபாஶஶதைர்ப₃த்₃த₄: காமக்ரோத₄பராயண:’’ என்கிறபடியே ஸாம்ஸாரிகஸங்க₃பாஶப₃த்₃த₄ர். இவர்க்கோ வென்னில் :- (அவன் வழங்கும் தி₃வ்யசக்ஷுஸ்ஸாலே) ‘‘அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்’’ (திருவா.1-9-9) என்றும், ‘தி₃வ்யம் த₃தா₃மி தே சக்ஷு: பஶ்ய மே யோக₃மைஶ்வரம்’’ (கீதை11-8) என்றும் சொல்லுகிறபடியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே த₃த்தமான தி₃வ்ய சக்ஷுஸ்ஸாலே ‘‘நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணனடிக்கமலந் தன்னை அயன்’’ (மு.திருவ.56) என்றும், ‘‘கார்செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்’’ (நா.திருவ.73) என்றும், ‘‘நீறாடி தான் காணமாட்டாத தாரகலசேவடி’’ (நா. திருவ.27) என்றும், ‘‘கட்கரிய பிரமன் சிவனிந்திரனென்றிவர்க்கும் கட்கரிய கண்ணன்’’ (திருவா.7-7-11) என்றும், ‘‘விதி₄ஶிவ ஸநகாத்₃யைர்த்₄யாதுமத்யந்ததூ₃ரம்’’ (ஸ்தோ.ர.47) என்றும் சொல்லுகிறபடியே தங்களைப்போரப்பொலிய நினைத்திருக்கும் ப்₃ரஹ்ம ருத்₃ராதி₃களுக்கும் காணவரிதாயிருக்கிற ‘‘அரும் பொருளாய் நின்ற அரங்கனே’’ (நா. திருவ.60) என்கிறபடியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய் பரத்வ–ஸௌலப்₄ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனை ‘‘கண்டேன் கமலமலர்ப்பாதம்’’ (திருவா.10-4-9) என்கிறபடியே கண்டபோதே ‘‘பொய்ந்நின்ற ஞானமும்’’ (திருவிரு.1) என்று தொடங்கி, ‘‘இனி யாமுறாமை’’ (திருவிரு. 1) என்று – ‘அவித்₃யாதி₃களை விடுவித்தருளவேணும்’ என்று இவர்தாமே அவனைக்கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால் விடுவிக்க அரிதான ‘‘மற்ற வன்பாசங்கள்’’ (திருவா.8-2-11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகலபாஶங்களும் ‘‘பாசங்கள் நீக்கி’’ (திருவா.7-8-5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார். (59)
60. அவர்களுக்குக் காயோடென்னுமிவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே.
இனிமேல் அவர்களுக்கும் இவர்க்கும் தா₄ரகாதி₃களும் வேறுபட்டபடி சொல்லுகிறது. ‘‘காயோடு நீடுகனியுண்டு’’ (திருமொழி.3-2-2) என்றும், ‘‘வீழ்கனியும் ஊழிலையும் என்னுமிவையே நுகர்ந்து’’ (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே ப₂ல–மூல–பத்ர–வாயு–தோயங்களே அவர்களுக்கு தா₄ரகபோஷக போ₄க்₃யங்கள். இவரையும் ‘ருஷி’ என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும் ஒவ்வாதோ என்னில், ஒவ்வாது. ‘‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்’’ (திருவா.6-7-1) என்கிறபடியே தா₄ரகாதி₃களுமெல்லாம் ஸர்வஸுலப₄னான ஸர்வேஶ்வரனிறே இவர்க்கு. (60)
61. அழுநீர்துளும்பக் கடலும் மலையும் விசும்பும் துழாய் திருமால் என்று ‘‘எங்கே காண்கேன்’’ என்னும் இவர் அலமாப்பு அவர்களுக்கு புத்திர வியோக₃த்திலே.
ஆகில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசையற்றதென்றும், அவர்களுக்கு நசையற்றதில்லை என்றும் சொல்லிற்றே, அதறிந்தபடி என் என்னில், அத்தைச் சொல்லுகிறது. ‘‘அழுநீர்துளும்ப அலமருகின்றன’’ (திருவிரு.2) என்றும், ‘‘கடலும் மலையும் விசும்பும் துழாய்’’ (திருவா.2-1-4) என்றுதொடங்கி, ‘‘சிந்தை கலங்கித் திருமால் என்றழைப்பன்’’ (திருவா.9-8-10) என்றும், ‘‘எங்கே காண்கேன் ஈன்துழாய் அம்மான் தன்னை’’ (திருவா.8-5-11) என்றும், ‘‘உன்னைக்காண்பான் நானலைப்பாய்’’ (திருவா.5-8-4) என்றும் சொல்லுகிறபடியே பகவத்விஶ்லேஷவ்யஸநத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஶத்தோடு வாசியற, எங்கும் தேடி ‘ஶ்ரிய:பதியே!’ என்று கூப்பிட்டுப்படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ரவியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஶக்திஶுகாதிகளாகிற புத்ரவியோகத்திலே காணலாம். (61)
62.ப₂ல ஸாத₄ந தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்.
பல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்கள் இருவர்க்கும் நினைவு ஒக்குமோ என்னில், அவற்றிலுண்டான வாசி பேச்சிலே தெரியுமென்கிறார். எங்ஙனே என்னில், ‘‘பே₄ஷஜம் ப₄க₃வத்ப்ராப்தி:’’(வி. பு. 6-5-59) என்று ப₄க₃வத்ப்ராப்தி ப₂லமாகவும், அதுக்கு ஸாத₄நம் கர்மஜ்ஞாநப₄க்திகள் என்றும், இந்த்₃ராதி₃தே₃வதாந்தர்யாமியாய்க்கொண்டு ஈஶ்வரன் உபாஸ்யனாயிருக்குமென்றுமிறே அவர்கள் சொல்லுவது. இவரோ வென்றால் ‘‘தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே’’ (திருவா.2-9-4) என்றும், ‘‘வழுவிலா வடிமை செய்யவேண்டும்நாம்’’ (திருவா.3-3-1) என்கிற கைங்கர்யம் புருஷார்த்தமாக வும், அதுக்கு ஸாத₄நம் ‘‘நாகணைமிசைநம்பிரான் சரணே சரண் நமக்கு’’ (திருவா.5-10-11) என்றும், ‘‘அடிக்கீழமர்ந்து புகுந்தேன்’’ (திருவா.6-10-10) என்றும் சொல்லுகிற ப்ரபத்தி என்றும், தே₃வதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்’’ (திருவா.4-6-10) என்றுமிறே இவரருளிச்செய்வது. (62)
63. ராமாயணம் நாராயணகதை என்று தொடங்கி கங்கா₃– காங்கே₃ய ஸம்ப₄வாத்₃ய ஸத்கீர்த்தநம் பண்ணின எச்சில்வாய் ஶுத்₃தி பண்ணாமல் “திருமாலவன்கவி’’ என்ற வாயோலைப்படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரியசொல் வாய்த்தவிது – வேதா₃தி₃களில் பௌருஷ–மாநவ–கீ₃தா–வைஷ்ணவங்கள் போலே அருளிச்செயலில் ஸாரம்.
ஆக, இதுக்குகீழ் வக்த்ருவைலக்ஷண்யம் சொல்லிற்று – இனிமேல் ப்ரப₃ந்த₄ வைலக்ஷண்யம் சொல்லுகிறது. அவர்கள் ப்ரப₃ந்த₄ங்களுக்கு கதா₂ந்தர ப்ரஸ்தாவம் உண்டு; இதுக்கு இல்லை என்னாநின்றுகொண்டு இதினுடைய ஸாரதமத்வம் சொல்லுகிறார் (ராமாயணம் நாராயணகதை என்று தொடங்கி). ‘‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நமீத்₃ருஶை: கரவாண்யஹம்’’ (ரா.பா₃.2–42), ‘‘நமோ ப₄க₃வதே தஸ்மை வ்யாஸாயா– மிததேஜஸே | யஸ்ய ப்ரஸாதா₃த்₃வக்ஷ்யாமி நாராயணகதா₂மிமாம்’’ (பா₄ர.ஆதி₃) என்றும் சொல்லுகிறபடியே இதிஹாஸஶ்ரேஷ்ட₂மான ஸ்ரீராமாயணம் நாராயணகதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும், ஸுப்₃ரஹ்மண்ய கதையும், புஷ்பகவர்ணநமுமாய், ஸ்ரீமஹாபாரதத்தில் நாராயணகதை என்று தொடங்கி, கங்கையினுடையவும் ஸ்ரீபீ₄ஷ்மருடையவும் உத்பத்திமுதலான பூசல் பட்டோலையாய், ‘‘அஸத்கீர்த்தநகாந்தாரபரிவர்த்தநபாம்ஸுலாம்’’ (ஹரிவம்ஶே) என்கிறபடியே அஸத்கீர்த்தநம்பண்ணின எச்சில்வாயானது ‘‘வாசம் ஶௌரிகதா₂ லாபக₃ங்க₃யைவ புநீமஹே’’ என்று ஶுத்₃தி₄ பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. ‘‘ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி’’ (வி.த₄ர்மே.1) என்றும், ‘‘வாயவனையல்லது வாழ்த்தாது’’ (மு.திருவ.11) என்றும் சொல்லுகிற இவர் நாக்குக்கு ப₄க₃வத்₃ வ்யதிரிக்தமான வர்ணநம் உச்சி₂ஷ்டமிறே.
இவருடைய ப்ரப₃ந்த₄த்தில் அப்படி எச்சில்வாய் ஶுத்₃தி₄பண்ணவேண்டாதே ‘‘திருமாலவன்கவி யாதுகற்றேன்’’( திருவிரு.48) என்று வாயோலையிட்டாப்போலே ‘‘மாற்றங்களாய்ந்துகொண்டு’’ (திருவா.6-8-11) என்கிறபடியே எல்லாச் சொற்களும் புறம்பு அந்யபரங்களாயிராதே ஸர்வமும் ‘‘உரியசொல்லாலிசைமாலைகளேத்தி’’ (திருவா.4-5-6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய் ‘‘வாய்த்த– வாயிரத்துள்’’ (திருவா.2-2-11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரப₃ந்த₄ம்; (வேதா₃தி₃களில்) வேத₃ஶாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு ‘‘வேதே₃ஷு பௌருஷம் ஸூக்தம் த₄ர்மஶாஸ்த்ரேஷு மாநவம் | பா₄ரதே ப₄க₃வத்₃கீ₃தா புராணேஷு ச வைஷ்ணவம்’’ என்கிறபடியே வேதத்தில் ஸாரமான ஸ்ரீபுருஷஸூக்தம் போலேயும், த₄ர்மஶாஸ்த்ரத்தில் மநுப்ரணீதமானது ஸாரமானாப்போலேயும், ஸ்ரீமஹாபாரதத்தில் கீதை ஸாரமானாப்போலவும், புராணங்களில்வைத்துக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஸாரமானாப்போலவும், அருளிச்செயலில்வைத்துக்கொண்டு இத்திருவாய்மொழிப்ரப₃ந்த₄த்தினுடைய ஸாரதமத்வம் சொல்லிற்று. (63)
64. கு₃ருஶிஷ்யக்₃ரந்தவிரோத₄ங்களை பரமதாதி₃களாலே பரிஹரியாமல் செஞ்சொல், செந்தமிழ், இன்கவி, பரவி, அழைக்கும் என்று அந்யோந்யம் கொண்டாடிப்பேசிற்றேபேசும் ஏககண்ட₂ரில் ‘‘என்னில் மிகு’’ என்னும் இவருரைகொளின்மொழிகொண்டு ஶாஸ்த்ரார்த்த₂ங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங்கொண்ட இதுக்குச் சேராதவை மநுவிபரீதங்கள்போலே.
ஆனால் இவ்வாழ்வார்களுடைய ப்ரப₃ந்த₄ங்களும் பரஸ்பர விருத்₃த₄ங்களாய் இருக்குமோ என்ன, இவர்களெல்லாரும் எககண்ட₂ராகையாலே எல்லாம் ஏகார்த்த₂ ப்ரதிபாத₃கங்களுமாய், எல்லா ப்ரப₃ந்த₄ங்களும் இவருடைய ப்ரப₃ந்த₄த்தைப் பின்செல்லும்படியான வைப₄வத்தை உடைத்தாய், இத்தோடு சேராத ஶாஸ்த்ரங்கள் எல்லாம் த்யாஜ்யங்களாயிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம் சொல்லுகிறது (கு₃ருஶிஷ்யக்₃ரந்த₂விரோத₄ம் என்று தொடங்கி). ருஷிகளில் கு₃ருஶிஷ்யர்களான வ்யாஸஜைமிநிகளில் கு₃ருவான வ்யாஸனுடைய க்₃ரந்த₂மான ப்₃ரஹ்மஸூத்ரத்துக்கு ஶிஷ்யனான ஜைமிநிக்₃ரந்த₂மான கர்மஸூத்ரத்தில் நிரீஶ்வரவாத₃த்தால் வந்த விரோத₄த்தை வ்யாஸன்தானே ‘‘ஜைமிநிராசார்யோ மந்யதே’’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும் ஏககண்ட₂ர்; இனி நிரீஶ்வரவாத₃ம் சொன்னது – வைதி₃க க்ரியைகளை நாஸ்திவாத₃ம் பண்ணுகிற பா₃ஹ்யரை நிராகரிக்கைக்காக பரமதத்தை அதி₄ஷ்டி₂த்துச்சொன்னானென்று பரிஹரிக்கவேண்டிற்று அங்கு. இதுக்கு அப்படிப் பரிஹரிக்கவேண்டாதபடி ‘‘செஞ்சொற்கவிகாள்’’ (திருவா.10-7-1) என்றும், ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்’’ (திருமொழி.2-8-2) என்றும், ‘‘இன்கவி பாடும் பரமகவிகள்’’ (திருவா.7-9-6) என்றும், ‘‘பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்’’ (திருவா.1-5-11) என்றும், ‘‘பரவித்தொழும் தொண்டர்தமக்குக்கதி’’ (திருமொழி.7-1-7) என்றும், ‘‘அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும்பெயரே பேசி’’ (இ. திருவ.50) என்றும், ‘‘அரங்கவோ என்றழைக்கும்’’ (பெரு. தி.2-2) என்றும் சொல்லுகிறபடியே அந்யோந்யம் கொண்டாடி ‘‘பேசிற்றே பேசலல்லால்’’ (திருமாலை.22) என்று ஏககண்ட₂ராகையாலே ஏகார்த்த₂ப்ரதிபாத₃கரான இவர்களில்வைத்துக்கொண்டு, ‘‘என்னில் மிகுபுகழார் யாவரே’’ (பெ.திருவ.4) என்கிறபடியே தாஸ்யஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய ‘‘உரைகொளின்மொழி’’ (திருவா. 6-5-3) என்கிறபடியே ‘அது அது’ என்று வாய்புலற்றும்படியாகப் பேச்சுக்கு அவிஷயமாய், மாற்றுமுறையுமற்றிருப்பதாய், ஸ்ரீராமாயணத்திலுங்காட்டில் இனிமையை உடையதாயிருக்கிற இவருடைய உக்திகளைக்கொண்டு தத்வஹித புருஷார்த்த₂ங்– களை ப்ரதிபாதி₃க்கிற வேதா₃ந்தஶாஸ்த்ரங்களில் ஸம்ஶயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே ‘‘சொல் வலங்கொண்ட’’ (திருவா.3-8-11) என்கிறபடியே அர்த்த₂ப்ரதிபாத₃நஸாமர்த்₂யத்தை உடைத்தான இப்ப்ரப₃ந்த₄த்தோடு சேராதவை யாவை சில ஶாஸ்த்ரங்கள், அவை, ‘‘மந்வர்த்த₂விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஶஸ்யதே’’ என்று மநுவிபரீதமான ஸ்ம்ருதிகளைப்போலே கழிக்கப்படுகிறது. (64)
65. பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்.
ஆகையாலே ‘பா₄ஷ்யகாரர் இப்ப்ரபந்தங்கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்க விடுவர்’ என்கிறார். (65)
66. அதுக்கு மூலம் ‘‘விதயஶ்ச’’ என்கிற பரமாசார்யவசநம்.
வேதா₃ந்த ஸூத்ரங்களைக்கொண்டு இதில் அர்த்த₂ங்களை க₄டிப்பியாதே இப்ப்ரப₃ந்த₄த்தைக் கொண்டு வேதா₃ந்தஸூத்ரங்களை க₄டிப்பிப்பானென் என்னில், அதுக்கடி ‘‘வித₄யஶ்ச’’ (ஸ்தோ. ர. 20) என்கிற பரமாசார்யவசநமென்கிறார். ‘‘வைதி₃கா: வித₄யஶ்ச த்வதீ₃யக₃ம்பீ₄ரமநோநுஸாரிண:’’ என்றுகொண்டு ‘இத₃ம் குர்யாத், இத₃ம் ந குர்யாத்’, ‘‘விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத’’ (ப்₃ரு.6-4-21), ‘‘த்₄யாயத₂’’ (மு.2-2-6), ‘‘உபாஸீத’’ (சா₂.உ1-1-1) என்கிற வைதி₃க ஶாஸ்த்ரங்களானவை ஐஶ்வர்ய கைவல்யங்களால் கடக்க ஒண்ணாதபடி க₃ம்பீ₄ரமான த்வதீ₃யருடைய மநஸ்ஸைப்பின்செல்லுமென்றுகொண்டு பரமாசார்யரான ஆளவந்தார் அருளிச்செய்கையாலே. (66)
67. ஆப்திக்கு இவர் ‘‘சுருதி, மார்க்கண்டேயன், பார்த்தன்’’என்கிற இவை வ்யாஸமநுப்₃ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாப்போலே.
ஆனால் பா₄ஷ்யகாரருட்பட ப்₃ரஹ்மஸூத்ரங்களில் ஸந்தேஹார்த்த₂ங்களையும்
இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியையுடைய இப் ப்ரப₃ந்த₄த்துக்கு இவர் வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென் என்னில்; வேதந்தான் ஆப்ததமமாயிருக்கச் செய்தேயும் ஆப்திக்கு ‘‘ஸஹோவாச வ்யாஸ: பாராஶர்ய:’’ (யஜு. அரு.), ‘‘யத்₃வை கிஞ்ச மநுரவத₃த், தத்₃பே₄ஷஜம்’’ (யஜு.2-2-10) என்றும், ‘‘ப்₃ரஹ்மவாதி₃நோ வத₃ந்தி’’ (யஜு.1-7-1) என்றும் எடுத்தாப்போலே இவரும், ‘‘உளன் சுடர்மிகு சுருதியுள்’’ (திருவா.1-1-7) என்றும், ‘‘மார்க்கண்டேயனும் கரியே’’ (திருவா.5-2-7) என்றும், ‘‘பார்த்தன் தெளிந்து ஒழிந்த’’ (திருவா.2-8-6) என்றும் ஆப்த்யதிஶயத்துக்காக எடுத்தார் என்கிறார். (67)
68. பா₄ரதகீதைகளின் வேதோபநிஷத்த்வம்போலே இதுவும் வ்யாக்₂யை யானாலும் வேத₃ரஹஸ்யமாம்.
இதுக்கு வேத₃ரஹஸ்யத்வம் சொல்லிற்று; இப்படியிருக்க இத்தை க்₃ரந்த₂ஸ்த₂– மாக்கி வ்யாக்₂யாநம் பண்ணப்படாநின்றது {இது உபப்₃ரும்ஹண ஸமமானால் வேத₃– வ்யாக்₂யாநமாம் – பா}. அப்போது வேத₃த்வத்துக்கும் ரஹஸ்யத்வத்துக்கும் கொத்தை வாராதோ என்னில், ப்ரஸித்₃த₄–லிகி₂த–படி₂த–பாடங்களான மஹாபா₄ரதத்துக்கும் ஸ்ரீகீ₃தைக்கும் ‘‘வேதா₃நத்₄யாபயாமாஸ மஹாபா₄ரத பஞ்சமாந்’’ (வி.பு) என்றும், ‘‘ப₄க₃வத்₃ கீ₃தாஸு உபநிஷத்ஸு’’ (கீ. 1) என்றும் சொல்லுகிறபடியே இவையிரண்டுக்கும் வேத₃த்வ–உபநிஷத்வங்கள் உண்டானாப்போலே இதுவும் லிகி₂த–படி₂தங்களாய்ப் போந்ததே யாகிலும் வேத₃த்வமும் ரஹஸ்யத்வமும் உண்டாமென்கிறார். (68)
69. உதாத்தாதி பத₃–க்ரம–ஜடா–வாக்ய–பஞ்சாதி–பாத–வ்ருத்த–ப்ரஶ்ந–காண்ட₃–அஷ்டக–அத்₄யாய–அம்ஶ–பர்வாத்யலங்காரங்கள் போலே, எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, நிரைநிரை, ஓசை, தளை, இனம், யாப்பு, பா, துறை, பண், இசை, தாளம், பத்து,, நூறு, ஆயிரம் முதலான செய்கோலம் இதுக்குமுண்டு.
ஆக, இப் ப்ரப₃ந்த₄ம் வேத₃த்தோடும், உபப்₃ரும்ஹணத்தோடும் துல்யமென்றீர், அவை இரண்டுக்குமுள்ள உதா₃த்தாதி₃களான வேத₃லக்ஷணங்களும், அத்₄யாயாம்ஶ– பர்வாதி₃களான உபப்₃ரும்ஹணலக்ஷணங்களும் இதுக்குமுண்டோ என்னில், த்₃ரமிடோ₃பநிஷத்₃ விஹிதங்களாய், ‘‘செய்கோலத்தாயிரம்’’ (திருவா.4-1-11) என்கிற படியே ‘எழுத்து, அசை, சீர்’ என்று இத்யாதி₃களான அலங்காரங்கள் இதுக்கும் உண்டு என்கிறார் (உதா₃த்தாதி₃ என்று தொடங்கி). பா₄ஷாநுகு₃ணமாயும், வேதா₃நுகு₃ண– மாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பா₄ஷாநுகு₃ணமான லக்ஷணங்களை அருளிச்செய்தது. (69)
70. அதவா வேதவேத்₃ய ந்யாயத்தாலே பரத்வபரமுதுவேதம் வ்யூஹவ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆகமுர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்₃ராவிட₃மாகச் செய்தாரென்னும்.
ஆக இதுக்குக்கீழ் வேத₃த்தினுடையவும், தது₃பப்₃ரும்ஹணத்தினுடையவும் ஸ்தா₂நத்திலேயாக்கி அவற்றினுடைய ஶப்₃த₃லக்ஷணங்களும் அர்த்த₂லக்ஷணங்களும் அருளிச்செய்தார். இனிமேல் ப்ரமேயபூ₄தனான ஸர்வஸ்மாத்பரனுடைய அவதாரபரம்பரையில் எல்லையான அர்ச்சாவதாரம்போலே ப்ரமாணவேதா₃வதாரத்தினுடைய எல்லை இத்திருவாய்மொழி என்கிறார் (அத₂வா வேத₃வேத்₃யந்யாயத்தாலே என்று தொடங்கி). (அத₂வா) என்றது – கீழ்ச்சொன்ன யோஜனையொழிய யோஜநாந்தரமென்கை. ‘‘வேத₃வேத்₃யே பரே பும்ஸி ஜாதே த₃ஶரதா₂த்மஜே | வேத₃: ப்ராசேதஸாதா₃ஸீத் ஸாக்ஷாத்₃ராமாயணாத்மநா’’ (ரா. பா₃.) என்கிறபடியே வேத₃வேத்₃யனான பரமபுருஷன் த₃ஶரத₂புத்ரனாய் வந்தவதரித்தவிடத்தில் அபௌருஷேயமான வேதமும் ஸ்ரீவால்மீகி பகவான்பக்கலிலே ஸ்ரீராமாயணமாய் வந்தவதரித்ததென்கிற ந்யாயத்தாலே. (பரத்வ– பரமுதுவேதம்) ‘‘முதுவேதமுதல்வனுக்கு’’ (திருவா.1-6-2) என்கிற ப்ரத்வப்ரதிபாத₃– கமான பழைய வேதம். இத்தால் நித்யநிர்தோ₃ஷமாய், அபௌருஷேயமாய் ப்₄ரமவிப்ரலம்பா₄தி₃தோ₃ஷரஹிதமான வேதம் என்றபடி.
அந்த பரத்வந்தானே வ்யூஹீப₄வித்த அவஸ்தை₂யில் அந்த வேதந்தானே ‘‘பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ்ஸ்வயம்’’ (பா₄ர. மோ.) என்றும், ‘‘ஓதினாய் நீதி’’ (இ. திருவ.48) என்றும் சொல்லுகிறபடியே அவனருளிச்செய்த ஸ்ரீபாஞ்சராத்ரஶாஸ்த்ரமாய் வந்தவதரித்தும், அந்தர்யாமியான அவஸ்தை₂யில் ‘‘கேட்ட மனுவும்’’ (நா.திருவ.76) என்கிறபடியே ஆசாரவ்யவஹாரப்ராயஶ்சித்தங்களுக்கு ப்ரகாஶகமான மந்வாதி₃ஸ்ம்ருதிகளாயும், ராமக்ருஷ்ணாத்₃யவதாரங்களில் வந்தவாறே ‘‘பாட்டும் முறையும் படுகதையும்’’ (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள்தான் இதிஹாஸாதி₃களானாப் போலேயும், ‘‘ஆகமூர்த்தியாயவண்ணம்’’ (திருச்ச.17) என்கிறபடியே ஸர்வேஶ்வரன் ஆஶ்ரித ஹ்ருத₃யாநுகு₃ணமாக ‘‘தமருகந்ததெவ்வுருவம்’’(மு.திருவ.45) என்கிறபடியே த்₃ரவ்ய–நாம–ரூப–ஆஸந–ஶயந–தே₃ஶ–கால–அதி₄காயு–போ₄ஜநாதி₃ஸகலவ்யாபாரங்களையும் ஆஶ்ரித ஹ்ருத₃யாநு கு₃ணமாக்கிக்கொண்டு ஸர்வஸுலப₄மான அர்ச்சாவதாரமான இடத்தில் ப்ரமாணமும் அப்படியே ப்ரமேயம்போலே ஸர்வஸுலப₄மாய் ஸர்வாதி₄கார– மாம்படி த்₃ரவிட₃ ஸம்ஹிதையாக ப்ராப்தமாகையாலே ‘‘பண்ணிய தமிழ்மாலை’’ (திருவா.2-7-13) என்கிறபடியே வேதத்தைத் திருவாய்மொழியாகச் செய்தருளினார் என்னவுமாம் என்கிறார். அந்த வேதம் முதலானவை எல்லாத்திலும் எல்லாம் சொல்லிற்றேயாகிலும் ஒன்றுக்கொன்றிலே நோக்காகக்கடவது. (70)
71. மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச்சங்கணிதுறையிலே துகில் வண்ணத்தெண்ணீராய் அந்தஸ்ஸ்தத்தைக் காட்டுமாப்போலே அல்பஶ்ருதர் கலக்கின ஶ்ருதி நன்ஞானத்துறைசேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.
ஆனால் இப்படி பரத்வப்ரதிபாத₃கமானவேதம் அவஸ்தா₂ந்தரபா₄க்காய் உள்ளவளவில் ப்ரமேயப்ரகாஶகமாகவற்றோ என்ன, இவ்வவஸ்தை₂யிலே யதா₂வாக ப்ரகாஶிக்கும் என்னுமிடத்தை த்₃ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார் (மண்ணாடின ஸஹ்யஜலம் என்று தொடங்கி). மண்ணாடின ஸஹ்யஜலமாவது – ‘‘தோதவத்தித்தூய் மறையோர் துறைபடிய’’ (பெரியா.4-8-1) என்றும், ‘‘பொருநல் சங்கணிதுறை’’ (திருவா.10-3-11) என்றும் சொல்லுகிற துறைகளிலே ‘‘துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன்’’ (திருவா.7-2-11) என்றும், ‘‘தெண்ணீர்ப்பொன்னி’’ (பெருமா.தி.1-1) என்றும் சொல்லுகிற படியே தெளிந்த நீராய்த் தனக்குள்ளே கிடக்கிற பதா₃ர்த்த₂ங்களை ப்ரகாஶிப்– பிக்குமாப்போலே, அல்பஶ்ருதர் கலக்கின ஶ்ருதி – ‘‘இதிஹாஸபுராணாப்₄யாம் வேத₃ம் ஸமுபப்₃ரும்ஹயேத்| பி₃பே₄த்யல்பஶ்ருதாத்₃வேத₃: மாமயம் ப்ரதரிஷ்யதி’’ (பா₄ர. ஆதி₃) என்கிறபடியே அல்பஶ்ருதராயிருக்குமவர்கள் ஒரு ஶ்ருதிவாக்யத்தைப்பிடித்து இதுக்குப் பொருள் த்₃வைதமென்றும், அத்₃வைதமென்றும், த்₃வைதாத்₃வைதமென்றும் இப்படி ப₃ஹுப்ரகாரமாகக்கலக்க, கலங்கின ஶ்ருதியானது – (நன்ஞானத்துறைசேர்ந்து) ‘‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு₃ ஸந்மநுஷ்யமநோ யதா₂’’ (ரா. பா₃.2-5) என்றும், ‘‘காலைநன் ஞானத்துறை’’(திருவிரு.93) என்றும் சொல்லுகிறபடியே ஞானத்துறையான இவ்வாழ்வார்– பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ்பொருளை அறிவித்தது) ‘‘தெளிவுற்றவாயிரம்’’ (திருவா.7-5-11) என்கிறபடியே ப்ரஸந்நக₃ம்பீ₄ரமான ஆயிரம் பாட்டாய், ‘‘அறிவித்தேன் ஆழ்பொருளை’’ (நா.திருவ.1) என்கிறபடியே அகா₃த₄மாய் பரமரஹஸ்யமான அர்த்த₂ விஶேஷங்களை எல்லாம் யதா₂த₃ர்ஶநம் பண்ணுவிக்கும் என்கிறார். (71)
72. மேகம் பருகின ஸமுத்ராம்பு₃போலே நூற்கடல்சொல் இவர் வாயன வாய்த்திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.
இனிமேல் அந்த ப்ரதா₄நமான வேதத்திற்காட்டிலும் இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஶத்தாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது (மேகம் பருகின என்று தொடங்கி). ஸமுத்₃ரஜலம் விரஸதையையுடைத்தாய் தத₃ந்தர்க₃தமான பதா₃ர்த்த₂ங்களுக்கே உபஜீவ்யமாய், புறம்புள்ளார்க்கு உபஜீவ்யமன்றியிலே இருப்பதாய், அபர்வணி ஸ்பர்ஶிக்கைக்குக் கால நியதியையுமுடைத்தாயிருக்கும். அந்த ஸமுத்₃ரஜலத்தை மேகமானது பாநம் பண்ணி ஜகத்திலே வர்ஷிக்க அந்த மேக₄ஸ்பர்ஶத்தாலே அதினுடைய விரஸதையும், ஸ்பர்ஶகாலநியதமும் போய், ஸர்வஜநபோ₄க்₃யமுமாமாப்போலே, ப₄க₃வத் ஸ்வரூபாநுரூபகு₃ணவிபூ₄திகளை ப்ரதிபாதி₃க்கிற வேதம் ப₄க₃வத்₃விபூ₄திபூ₄தரான தே₃வதாந்தரங்களை ப்ரதிபாதி₃க்கையாகிற விரஸதையை உடைத்தாய், வேதா₃தி₄காரி களான த்ரைவர்ணிகர்க்கே அத்₄யேதவ்யமாகையாலே அதி₄க்ருதாதி₄காரமுமாய் அத்₄யயந–அநத்₄யயந–காலநியதியையுமுடைத்தாயிருக்கும். ‘‘நூற்கடல்’’ (மூ. திருவ.32) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஶாஸ்த்ரத்திலுண்டான அர்த்த₂ விஶேஷங்கள் ‘‘இவள்வாயனகள் திருந்தவே’’ (திருவா.6-5-7) என்கிறபடியே இவருடைய வாக்₃க₃தமாய்க்கொண்டு கட்டளைப்பட்டவாறே ப₄க₃வத்₃வ்யதிரிக்த ப்ரஶம்ஸா பரதையாகிற விரஸதையும்போய் ‘‘அத்₄யேதவ்யம் த்₃விஜஶ்ரேஷ்டை₂ர் வேத₃ரூபமித₃ம் க்ருதம் | ஸ்த்ரீபி₄ஶ்ஶூத்₃ராதி₃பி₄ஶ்சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்தி₂தா’’ (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி₄காரமுமாய் ஸர்வகாலாத்₄யேதவ்யமுமாயிருக்கும். (72)
73. ம்ருத்க₄டம் போலன்றே பொற்குடம்.
ஸமுத்₃ரஜலத்தையும்தத்கார்யமான மேகம் பருகின ஜலத்தையும் அதி₄க்ருதாதி₄காரமான வேதத்துக்கும் தத்கார்யமான திருவாய்மொழிக்கும் த்₃ருஷ்டாந்தமாக்கினால் காரணம் போலே கார்யமும் அதி₄க்ருாதி₄காரமாயிருக்குமோ
என்னில், அப்படியிராது, ஸர்வாதிகாரமாய், ஶ்லாக்₄யமாய், ஸ்ப்ருஹணீயமாய் இருக்குமென்கிறார் (ம்ருத்₃க₄டம் போலன்றே பொற்குடம் என்று). ம்ருத்₃க₄டமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும் தொடவொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற்குடம் பார்த்தி₂வமாயிருக்கச்செய்தேயும் எல்லார்க்கும் ஸ்பர்ஶிக்கவுமாய், ஶ்லாக்₄யமுமாய், ஸ்ப்ருஹணீயமுமாயிருக்கும். ஆகையாலே அதி₄க்ருதாதி₄காரமான வேதந்தான் திருவாய்மொழியான அவஸ்தை₂யை ப₄ஜித்தாலும் ஸர்வாதி₄காரமுமாய், ஸ்ப்ருஹணீயமுமாயிருக்குமென்கிறார். (73)
74. பெரும்புறக்கடலும், ஶ்ருதிஸாகரமும் அலைத்தாழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யர்க்குச் சமைத்த மடுவும், சாய்கரகமும் மாநமேயசரமம்.
ஸர்வஸுலப₄மாய் ஸர்வாதி₄காரமான அர்ச்சாவதாரத்தையும் திருவாய்மொழியையும் கீழ் ‘‘பரத்வபரமுது வேதம்’’ என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை ‘‘பெரும்புறக்கடலும்’’ ‘‘ஶ்ருதிஸாக₃ரமும்’’ என்று பராமர்ஶித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியும் கீழ்ச்சொன்ன பரத்வாதி₃களுக்கும் வேதம் முதலான ஶாஸ்த்ரங்களுக்கும் அயோக்₃யரானார்க்கும் அநுபா₄வ்யமாம்படி சரமமாயிருக்கும் என்கிறார்.
(பெரும்புறக்கடலும் ஶ்ருதிஸாக₃ர`மும்) அபரிச்சேத்யமான ப்ரமாண ப்ரமேயங்கள்; அவையாவன – பரத்வமும் பரத்வப்ரதிபாதகமான வேதமும். அவற்றுக்குடலானால் அலையக்கடவதிறே. அலைகையாவது – பரவாஸுதேவர் பக்கல்நின்றும் பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான வ்யூஹமும் த்த்ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ரஶாஸ்த்ரமும். (ஆழ்ந்து) ‘‘யமாத்மா ந வேத₃’’ (ப்₃ரு. 5-7-22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும், தத்பரமான மந்வாதி₃ஸ்ம்ருதிகளும். (ஓடுமிடம்) ராமக்ருஷ்ணாத்₃யவதாரங்களும் தத் ப்ரகாஶகங்களான இதிஹாஸங்களும்; இவை தே₃ஶ–கால–இந்த்₃ரிய– விப்ரக்ருஷ்டங்– களாகையாலே பரத்வாதி₃களை அநுப₄விக்க யோக்₃யரல்லாதவர்களுக்கு அப்படி தே₃ஶகாலவிப்ரகர்ஷமுமின்றிக்கே பெருகின ஆற்றில் மடுப்போலே ஸர்வ– ஸுலப₄முமாய், ருசிஜநகமுமாய், ஶ்ரமஹரமுமாய், ஸர்வஜநபோ₄க்₃யமுமாய், ஸர்வா– பாஶ்ரயமுமான அர்ச்சாவதாரமும், வேதா₃தி₃களுக்கு யோக்₃யராயிருக்கிறவர்களுக்கு சாய்கரகம்போலே ஸுகரமுமாய், ஸர்வாதி₄காரமுமான திருவாய்மொழியும் ப்ரமாண– ப்ரமேயங்களினுடைய சரமமென்கிறார். ஆக, இத்தால் ‘‘பரத்வபரமுதுவேதம்’’ என்று தொடங்கின அர்த்த₂ங்களை உபபாதி₃த்து அவ்வர்த்த₂த்துக்கெல்லை அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியுமென்று நிக₃மித்தாராய்த்து. (74)
75. வீட்டின்ப–இன்பப்பாக்களில் த்₃ரவ்யபாஷாநிரூபணஸமம் இன்பமாரியில்– ஆராய்ச்சி.
ஆக, ப்ரமாணப்ரமேயங்களை ஸஹபடித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ருவைப₄வத்தை அருளிச்செய்கிறார் (வீட்டின்பமென்று தொடங்கி). மேலெல்லாம் இதில் ப்ரமாணப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தி– னுடையவும், திருவாய்மொழியினுடையவும் த்₃ரவ்யபா₄ஷா நிரூபணத்தோடு ஒக்குமென்று இவற்றை ஸித்₃த₄வத்கரித்து இவற்றோடொக்கும் ப்ரமாதாக்களின் ஜன்மநிரூபணம் என்கிறார் (வீட்டின்பமித்யாதி). ‘‘கனிவார் வீட்டின்பமே’’ (திருவா.2-3-5) என்கிறபடியே அவன் என்றால் உள் கனிந்திருக்கிறவர்களுடைய க்₃ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும் அர்ச்சாவதாரத்தினுடையவும், ‘‘அந்தமிழினின்பப்பாவினை’’ (பெருமா.திரு.1-4) என்றும் சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும் த்₃ரவ்ய– நிரூபணத்தோடும் பா₄ஷாநிரூபணத்தோடும் ஒக்கும் என்றும், ‘‘அடியார்க்கு இன்பமாரி’’ (திருவா.4-5-10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் திருவாய்மொழி– முகத்தாலே ஆநந்தா₃வஹமான ப₄க₃வத்₃கு₃ணங்களை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில் ஆராய்ச்சியுமென்கிறார். அர்ச்சாவதாரத்தில் த்₃ரவ்ய– நிரூபண நிஷேத₄ம் ப₃ஹுப்ரமாணஸித்₃த₄ம். அத்தோடே சேர்த்துச்சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பா₄ஷாநிரூபணம் பண்ணலாகாதென்னுமிடம் ஸித்₃த₄மாய்த்து. ‘‘ஹரிகீர்த்திம் விநைவாந்யத்₃ப்₃ராஹ்மணேந நரோத்தம | பா₄ஷா கா₃நம் ந கா₃தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்’’ (லைங்கே₃ உ. 3-44) என்றிறே மநுவும் சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில் த்₃ரவ்யநிரூபண நிஷேத₄த்துக்கு ப்ரமாணமென் என்னில்; ‘‘அர்ச்சாவதாரோபாதா₃நம் வைஷ்ணவே ஜாதிசிந்தநம் | மாத்ரு யோநிபரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:’’ (பாஞ்ச.) என்றும், ‘‘யோ விஷ்ணோ: ப்ரதிமாகாரே லோஹபா₄வம் கரோதி வை | யோ கு₃ரௌ மாநுஷம் பா₄வம் உபௌ₄ நரகபாதிநௌ’’ (ப₄க₃வச்சா₂ஸ்த்ரே) என்றும் சொல்லக்கடவதிறே. (75)
76. பேச்சுப்பார்க்கில் கள்ளப்பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்.
ஆகிலும் த்₃ராவிட₃பா₄ஷையாயிராநின்றதே, அது க்₃ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்; (பேச்சுப்பார்க்கில்) பா₄ஷாமாத்ரமே அங்கீ₃கார–அநங்கீ₃காரஹேதுவாகில், (கள்ளப் பொய்ந்நூல்களும் க்₃ராஹ்யங்கள்) ‘‘வெள்ளியார் பிண்டியார் போதியா– ரென்றிவர் ஓதுகின்ற கள்ளநூல்தன்னையும்’’ (திருமொழி.9-7-9) என்றும், ‘‘பொய்ந்– நூலை மெய்ந்நூல்’’(திருமொழி. 3-5-2) என்றும் சொல்லுகிற பா₃ஹ்யஶாஸ்த்ரங்களும் குத்₃ருஷ்டிஶாஸ்த்ரங்களும் அங்கீ₃கரிக்கப்படும். அவற்றுக்கு அப்படி ஶிஷ்டாசார– மில்லாமையாலும், இத்தை ஶிஷ்டரானவர்கள் பரிக்₃ரஹிக்கையாலும் பா₄ஷாவதி₄– மாத்ரமே பரிக்₃ராஹ்ய–அபரிக்₃ராஹ்யதாஹேதுவாக ஒண்ணாது.
ஆனாலும் ப்ரப₃ந்த₄கர்த்தா சதுர்த்த₂வர்ணாதி₄காரியாயிராநின்றாரே? ப்ரப₃ந்த₄மும் ப்ரதிபாத்₃யவஸ்துவும் விலக்ஷணமேயாகிலும் கர்த்ருமாந்த்₃யத்தாலே ப்ரப₃ந்த₄மாந்த்₃யமும் பிறக்குமே என்ன (பிறவிபார்க்கில் அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்) என்கிறார். (பிறவிபார்க்கில்) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தையிட்டுக் கழிக்கப்பார்க்கில், வலைச்சிவயிற்றிலே பிறந்த வ்யாஸன் சொன்ன பஞ்சமவேதமான மஹாபா₄ரதமும், இடைச்சேரியிலே பிறந்த க்ருஷ்ணனருளிச்செய்த ஷட்கத்ரயாத்மகமான ஸ்ரீகீதையும் கழியுண்ணும். (76)
77. க்ருஷ்ணக்ருஷ்ணத்வைபாயநோத்பத்திகள் போலன்றே. க்ருஷ்ண த்ருஷ்ணாதத்த்வஜந்மம்.
ஆக, இதுக்குக் கீழ் க்ருஷ்ணத்₃வைபாயநனான வ்யாஸேனாடும், க்ருஷ்ணேனாடும் உண்டான ஜந்மஸாத₄ர்ம்யம் சொல்லி, ‘‘க்ருஷ்ண க்ருஷ்ணத்₃வைபாய நோத்பத்திகள் போலன்றே’’ என்று – இனிமேல் வைத₄ர்ம்யம் சொல்லுகிறது. எங்ஙனே என்னில்; இடைச்சிவயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும் வலைச்சிவயிற்றில் பிறந்த க்ருஷ்ணத்₃வைபாயநனுடையவும் {உத்பத்திபோலன்றே, இவர்} திருவவதாரம் ; இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும் அவர்களுடைய ஜந்மத்தையும் நிரூபித்தால் இத்தோடு அவை நேர்நில்லாது. ஆகையால் இவர்க்கு அவர்கள் ஸத்₃ருஶரல்லர். (77)
78. பெற்றும் பேறிழந்தும் கன்னிகையானவளும் எல்லாம் பெற்றாளாயும், தத்துக்கொண்டாள், என்பர் நின்றார் என்னுமவளும் நெடுங்காலமும் நங்கைமீர் என்னுமிவர்க்கு நேரன்றே.
இவர்களுடைய உத்பத்திப்ரகாரங்களையும் ஸ்த₂லங்களையும் விசாரித்தால் அவையும் வாசாமகோ₃சரம் என்கிறார் மேல் (பெற்றும் பேறிழந்தும் என்று தொடங்கி). ‘‘தேவகி பெற்ற’’ (பெரியா.1-3-11) என்கிறபடியே ஸ்ரீதேவகிப்பிராட்டி க்ருஷ்ணனைப் பெற்றுவைத்து, ‘‘திருவிலே ஒன்றும் பெற்றிலேன்’’ (பெருமா.தி.7-5) என்கிறபடியே அவனுடைய பா₃ல்யரஸம் அநுப₄விக்கப் பெற்றிலளிறே. வ்யாஸனைப்பெற்ற அநந்தரம் ‘‘புந: கந்யா ப₄விஷ்யதி’’ (பா₄ர.) என்று ஸ்ரீபராஶரபகவான் சொல்ல மீண்டும் கந்யகை– யான மத்ஸ்யக₃ந்தி₄யும் அவனுடைய பா₃ல்யரஸம் அநுப₄விக்கப்பெற்றிலள். (எல்லாம் பெற்றாளாயும்) ‘‘எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே’’ (பெருமா.தி.7-5) என்கிற யசோதையும் க்ருஷ்ணனுடைய பா₃ல்ய சேஷ்டிதங்களெல்லாம் அநுப₄விக்கப்பெற்றாளேயாகிலும், ‘‘தத்துக்கொண்டாள்கொலோ’’ (பெரியா.2-1-7) என்றும், ‘‘உன்னை என்மகனே என்பர் நின்றார்’’ (பெரியா.3-1-3) என்றும் – தானும் பிறரும் ஶங்கிக்கும்படியாயிருக்கும். இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே ‘‘நெடுங்காலம் கண்ணன் நீண்மலர்ப்பாதம் பரவிப்பெற்ற’’ (திருவிரு.37) என்றும், ‘‘நங்கைமீர் நீருமோர் பெண்பெற்று நல்கினீர்’’ (திருவா.4-2-9) என்றும் சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும் சில பெண்களைப் பெற்று வளர்த்திகோளல்லிகோளோ, ப₄க₃வல்லாஞ்ச₂- நாதி₃களை தி₃வாராத்ரவிபா₄க₃மற வாய்புலற்றும்படியான என் பெண்பிள்ளைக்கு ஸத்₃ருஶமுண்டோ என்கையாலே இவர்க்கும் அவர்களுக்கும் அத்யந்த வைஷம்யம் சொல்லிற்று. (78)
79. மீனநவநீதங்கள் க₃ந்தி₄க்குமிடமும் வெறிகொள்துழாய் கமழுமிடமும் தன்னிலொக்குமோ.
மத்ஸ்யக₃ந்த₄த்தையுடய வ்யாஸன் பிறந்தவிடமும், நவநீதக₃ந்தி₄யான க்ருஷ்ணன் பிறந்தவிடமும் – ‘‘வெறிகொள்துழாய் மலர்நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற’’ (திருவா.4-4-3) என்கிற ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄க₃ந்தி₄யான ஆழ்வார் திருவவதரித்த இடத்துக்கு ஸத்₃ருஶமன்றே. (79)
80. ஆற்றில் துறையில் ஊரிலுள்ள வைஷம்யம் வாசாமகோ₃சரம்.
வ்யாஸனுக்கு உத்பத்திஸ்த₂லமான அஶிஷ்டபரிக்₃ரஹமுடைய க₃ங்கா₃ நதிக்கும், அதில் ஓடத்துறைக்கும், அவ்விடத்தில் வலைச்சேரிக்கும், க்ருஷ்ணோத்பத்தி ஸ்த₂லமான க்ருஷ்ண– ஜலப்ரவாஹமான யமுநாநதிக்கும், காளியவிஷதூ₃ஷிதமான அதில் துறைக்கும், ‘‘கறவைகள் பின்சென்று’’ என்கிறபடியே பசுக்கள்தான் ஸர்வஜ்ஞம்’ என்னும்படி அறிவுகேடரான இடையர் வர்த்திக்கிற இடைச் சேரிக்கும் ஆகிய இவற்றுக்கும், முக்தாப₂லப்ரஸவோந்முக₂ஶங்க₂ஸமூஹங்களுக்கு வாஸஸ்தா₂நமான தாம்ரபர்ணி நதிக்கும் ஶுத்₃த₄ஸ்வபா₄வமாயிருக்கிற அந்த ஶங்கங்கள்சேருகிற திருச்சங்கணித் துறைக்கும், ‘‘நல்லார் நவில் குருகூர்’’ (திருவிரு. 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்படுமதாய் ‘‘சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்’’ (திருவா.3-1-11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய், ப₄க₃வத₃நுப₄வம் பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதி₄கர் பலரும் வர்த்திக்கிற திருக்குருகூர்க்கும் உண்டான வைஷம்யம் பேச்சுக்கு அவிஷயமாயிருக்கும். ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்₃வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக்குண்டான ஸாத₄ர்ம்ய வைத₄ர்ம்யங்கள் சொல்லிற்று. (80)
81. தே₃வத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள்போலே ப்₃ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டைநாளில் பிறவி உண்ணாட்டுத்தேசிறே. .
இனிமேல், இப்படி ஆழ்வார் தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரேயாகிலும், மிகவும் தேஜஸ்ஸு உண்டாமென்கிறார். எங்ஙனே என்னில், ஸர்வேஶ்வரன் லோகஸம்ரக்ஷணார்த்த₂மாக அவதரித்தவிடத்தில் பரத்வஶங்கையும் அஸஹ்யமாம்– படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஶயித்திருக்குமாப்போலே பா₄க₃வதத்வ ரஹிதமான உத்க்ருஷ்டஜந்மமும் அவத்₃யம் என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதி₃களால் வருகிற அஹங்காரமின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில் ஜந்மம் நித்யவிபூ₄தியிலும் தேஜஸ்கரம் என்கிறார் (தே₃வத்வம் என்று தொடங்கி).
(தே₃வத்வமும் நிந்தையானவனுக்கு) ராவணவதா₄நந்தரம் ப்₃ரஹ்மாதி₃கள் ‘‘ப₄வாந் நாராயேணா தே₃வ:’’ (ரா.யு.120-13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய், ‘‘ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் த₃ஶரதா₂த்மஜம்’’ (ரா.யு.120-11) என்றும், கோ₃வர்த்த₄நோத்த₄ரணாநந்தரம் அந்த அதிமாநுஷசேஷ்டிதங்கண்டு ஆஶ்சர்யப்பட்ட இடையர் ‘‘பா₃லத்வஞ்சாதிவீர்யஞ்ச ஜந்ம சாஸ்மாஸ்வஶோப₄நம் | தே₃வோ வா தா₃நவோ வா த்வம் யக்ஷோ க₃ந்த₄ர்வ ஏவ வா’’ (வி.பு.5-13-7) என்று ஶங்கிக்க, ‘‘க்ஷணம் பூ₄த்வா த்வஸௌ தூஷ்ணீம் கிஞ்சித்ப்ரணயரோஷவாந்’’ என்று அது அஸஹ்யமாய், ‘‘நாஹம் தே₃வோ ந க₃ந்த₄ர்வோ ந யக்ஷோ ந ச தா₃நவ: | அஹம் வோ பா₃ந்த₄வோ ஜாத: நைதச்சிந்த்யமதோந்யதா₂’’ (வி. பு.5-13-12) என்று இப்படி பரத்வஶங்கையும், அஸஹ்யமாம்படி ஶீலாதி₄கனாயிருக்கிறவனுக்கு.
(ஒளிவரும் ஜநிகள்போலே) ‘‘ஸ உ ஶரேயாந் ப₄வதி ஜாயமாந:’’ என்றும், ‘‘பல பிறப்பாய் ஒளிவருமுழுநலம்’’ (திருவா.1-3-2) என்றும் சொல்லுகிறபடியே ஆநந்தா₃தி₃ கல்யாணகு₃ணங்கள் ஒளிபெற்றுவரும் அவதாரங்கள்போலே. (ப்₃ரஹ்ம– ஜந்மமும் இழுக்கென்பார்க்கு) ‘‘இதராவஸதே₂ஷு மா ஸ்ம பூ₄தபி மே ஜந்ம சதுர்முகா₂த்மநா’’ (ஸ்தோ. ர.55) என்கிறபடியே அபா₄க₃வதக்₃ருஹங்களில் ப்₃ரஹ்மாவாய்ப் பிறக்கையும் அவத்₃யமாம்படி ப₄க₃வத்₃தா₃ஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதி₄கர்க்கு.
(பண்டைநாளில் பிறவி) ‘‘பண்டைநாள்’’ (திருவா.9-2-1) என்கிற பாட்டின்படியே லக்ஷ்மீ–தத்₃வல்லப₄ருடைய கடாக்ஷமடியாகக் கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய், தா₃ஸ்யவிரோதி₄ஜந்மாதி₃களால் வரும் அஹங்காரரஹிதமான குலங்களில் ஜந்மமும். (உண்ணாட்டுத்தேசிறே) புறநாடான லீலாவிபூ₄திபோலன்றிக்கே ப₄க₃வதாநுகூல்யைக– போ₄க₃ராலே நெருங்கி ப₄க₃வானுக்கு போ₄க₃விபூ₄தியாகையாலே அந்தரங்கமாய் இருக்கிற பரமபதத்தில் தேஜஸ்ஸன்றோ என்கிறார். (81)
82. ஜநக–த₃ஶரத–வஸுதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும், நடுவில் பிள்ளையும், கடைக்குட்டியும் போலே இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அஞ்சிறையுமறுத்தார்.
இப்படிப்பட்ட இவருடைய அவதாரம் ஜநககுலஸுந்தரியான நாச்சிமார் முதலானாருடைய அவதாரம்போலே ஸர்வோபகாரகம் என்கிறார் (ஜநகேத்யாதி₃). ஜநககுலத்துக்கு மூத்தபெண்ணான நாச்சியார் திருவவதரித்து. ‘‘ஸீதா ப₄ர்த்தாரமாஸாத்₃ய ராமம் த₃ஶரதா₂த்மஜம் | ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸுதா’’ (ரா. பா₃.67-21) என்று தான் பிறந்து ஜநககுலத்துக்குக் கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்,
த₃ஶரத₂குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீப₄ரதாழ்வான் பிறந்து ‘‘விலலாப ஸபாமத்₄யே ஜக₃ர்ஹே ச புரோஹிதம் | ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய த₄ர்மம் வக்துமிஹார்ஹஸி’’ (ரா. அ. 82 – 10) என்றும், ‘‘ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் பு₄வி’’ (ரா. ஆ. 102 – 1) என்றும், ‘‘குடிக்கிடந்தாக்கம் செய்து’’ (திருவா.9-2-2) என்றும்
சொல்லுகிறபடியே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக்கடவதன்று என்கிற குலமர்யாதையை நடத்தினவளவன்றிக்கே, ஜ்யேஷ்ட₂ரான பெருமாளுடைய விஶ்லேஷத்தில் ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்,
வஸுதே₃வகுலத்துக்கு ‘‘மக்களறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய்’’ (பெரியா. தி.5-3-1) என்று சொல்லுகிறபடியே கடைக்குட்டியான க்ருஷ்ணன் பிறந்து ‘‘தந்தைகாலில் பெருவிலங்கு தாளவிழ’’ (திருமொழி.7-5-1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதாபிதாக்களுடைய கட்டை அறுத்தாப்போலேயும்,
இவரும் திருவவதரித்து ‘‘மலிபுகழ்வண்குருகூர்’’ (திருவா.4-2-11) என்றும், ‘‘ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்’’ (திருவா.3-9-11) என்றும் சொல்லுகிறபடியே தாம் திருவவதரித்து அந்நகரிக்குக் கீர்த்தியை உண்டாக்கி, ‘‘குடிக்கிடந்தாக்கம் செய்து’’ (திருவா.9-2-2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாநவர்த்த₄கரானமாத்ரமே– யன்றியிலே ப்ரேமவர்த்த₄கராயும், ‘‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’’ (திருவா.1-3-11) என்கிறபடியே தம்முடைய ப்ரப₃ந்தா₄ப்₄யாஸமுக₂த்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச்சிறையையுமறுத்தார். (82)
83. ஆதி₃த்ய–ராமதி₃வாகர–அச்யுதபா₄நுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாத போதில் கமலமலர்ந்தது வகுளபூ₄ஷண பாஸ்கரோதயத்திலே.
அவ்வளவேயன்றிக்கே அஜ்ஞாநாந்த₄காரநிரஸநாதி₃களாலே ஆதி₃த்யராம க்ருஷ்ணர்களில் வ்யாவ்ருத்தர் என்கிறார் (ஆதி₃த்யேத்யாதி₃). பா₃ஹ்யமான அந்த₄காரத்தைப் போக்கிக் கொண்டு உதிக்கிற ஆதி₃த்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாநாந்த₄ காரமும்,
‘‘தமோ பா₃ஹ்யம் விநஶ்யேத்து பாவகாதி₃த்யஸந்நிதௌ₄ | ந பா₃ஹ்யா ப்₄யந்தரஞ்சைவ விஷ்ணுப₄க்தார்க்கஸந்நிதௌ₄’’ என்கிறபடியே நீங்கி, ‘‘ஶரஜாலாம் ஶுமாந் ஶூர: கபே ராமதி₃வாகர: | ஶத்ருரக்ஷோமயம் தோயம் உபஶோஷம் நயிஷ்யதி’’ (ரா.ஸு.37-16) என்று ஶரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க்கொண்டு ஶத்ருராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப்பண்ணுகிற ராமதி₃வாகரர்க்கு வற்றாத ஸம்ஸாரஸமுத்₃ரம் ‘‘பிறவி என்னும் கடலும் வற்றி’’ (பெரியா.தி.5-4-2) என்கிறபடியே வற்றி,
‘‘ததோகி₂ல ஜகத்பத்₃மபோ₃தா₄யாச்யுதபா₄நுநா | தே₃வகீபூர்வ ஸந்த்₄யாயாம் ஆவிர்பூ₄தம் மஹாத்மநா’’ (வி.பு.5-3-2) என்று ஜக₃த்பத்₃மம் விகஸிதமாம்படி தேவகியாகிற பூர்வ ஸந்த்₄யையிலே ஆவிர்பூ₄தனான அச்யுதபா₄நுவான க்ருஷ்ணனுக்கு விகஸியாத ‘‘போதில்கமல வன்னெஞ்சம்’’(பெரியா.தி.5-2-8) என்கிற ஹ்ருத்பத்₃மம் விகஸிதமாயிற்று,
‘‘யத்₃கோ₃ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயேணா வஸதி யத்ர ஸஶங்க₂சக்ர: | யந்மண்ட₃லம் ஶ்ருதிக₃தம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுலபூ₄ஷணபா₄ஸ்கராய’’ (பரா. அ.) என்றும் திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய், மஹிஷீபூ₄ஷணாயுத₄ விஶிஷ்டனான நாராயணனை ★கண்கள் சிவந்திற்படியே உள்ளே உடையராய், வேதவித்துக்களான ஸர்வஶிஷ்டர்களும் ப்ரணாமம் பண்ணும்படியான வைப₄வத்தை உடையராய், வகுலபூ₄ஷணரான ஆழ்வாராகிற பா₄ஸ்கரோத₃யத்திலே என்கிறார். கீழ்ச்சொன்ன ஆதி₃த்யதி₃வாகரபா₄நுஶப்₃த₃ம் போலன்றிக்கே இவர்பக்கலிலே பா₄ஸ்கரஶப்₃த₃ ப்ரயோக₃ம் பண்ணுகையாலே ‘‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் (திருவா.6-7-2) என்கிறபடியே தம்மோடு ஸம்ப₃ந்த₄முடையாரெல்லார்க்கும் தம்மோடொத்த ப்ரபா₄வத்தை உண்டாக்குமவர் என்னுமிடமும் தோற்றுகிறது. (83)
84. வம்ஶபூ₄மிகளை உத்₃த₄ரிக்கக் கீழ்க்குலம் புக்க வராஹகோ₃பாலரைப் போலே இவரும் நிமக்நரை உயர்த்தத்தாழ இழிந்தார்.
இப்படி மஹாப்ரபா₄வத்தை உடையரான இவர் அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென் என்னில், க்ஷத்ரியரில் வைத்துக்கொண்டு ஹீநமான யது₃குலத்தை உத்₃த₄ரிக்கைக்காக ‘‘அங்கோராய்க்குலம் புக்கு’’ (திருவா.6-4-5) என்றும், ‘‘அயம் ஸ கத்₂யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த₂விஶாரதை₃: | கோ₃பாலோ யாத₃வம் வம்ஶம் மக்₃நமப்– யுத்₃த₄ரிஷ்யதி’’ (வி.பு 5-20-49) என்றும் சொல்லுகிறபடியே அறிவுகேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க்கொண்டு கோபாலனானாப்போலவும், ப்ரளயார்ணவ மக்₃னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை எடுக்கைக்காக ‘‘உத்₃த்₄ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஶதபா₃ஹுநா’’ (தை.உ.) என்றும், ‘‘நமஸ்தஸ்மை வராஹாய லீலயோத்₃த₄ரதே மஹீம் | கு₂ரமத்₄யக₃தோ யஸ்ய மேரு: கணகணாயதே’’ (வராஹ பு.) என்கிறபடியே வராஹஸஜாதீயனாய்க்கொண்டு ‘‘கேழலாய்க் கீழ்ப்புக்கு’’(திருவா.2-8-7) என்கிற படியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹரூபியைப்போலவும், ஸம்ஸாரார்ணவ மக்₃நரான ஸகலஜந்துக்களையும் அதில்நின்றும் எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார் என்கிறார். அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரப₃ந்தீகரித்தாராகில் வேதமும் தது₃பப்₃ரும்ஹணங்களும்போலே அதி₄க்ருதாதி₄காரமாமிறே.
ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும் வர மந்த₃மதிகளுடைய ஶங்கா– நிராகரணார்த்த₂மாக ‘ப்ரமாணப்ரமேயங்களினுடைய சரமாவதி₄யான அர்ச்சாவதாரத்தி னுடையவும் திருவாய்மொழியினுடையவும் த்₃ரவ்யபா₄ஷாநிரூபணத்தோடொக்கும் ஆழ்வாருடைய உத்பத்திநிரூபணமும்’ என்று இவருடைய உத்பத்திநிரூபணத்தால் வரும் ப்ரத்யவாயத்தையும், வ்யாஸாதி₃களைப்பற்ற இவருடைய அவதாரவைலக்ஷண்– யத்தையும், அவதாரம் பரார்த்த₂ம் என்னுமிடத்தையும், இப்படி மஹாப்ரபா₄வரான இவர் தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும் அருளிச்செய்தார். (84)
85. ம்லேச்ச₂னும் ப₄க்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குலதை₃வத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாத₃னாம் என்கிற திருமுகப் படியும், விஶ்வாமித்ர–விஷ்ணுசித்த-துளஸீ ப்₄ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்₃ராஹ்மணவேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன்பிறந்து வேலும் வில்லுங் கொண்டு பின்பிறந்தாரைச்சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பா₄வம் சொல்லும்படி ஏககுலமானமையும், தூது மொழிந்து நடந்துவந்தவர்களுடைய ஸம்யக் ஸகு₃ண ஸஹபோ₄ஜநமும், ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச் செய்த புத்ரக்ருத்யமும், புஷ்பத்யாகபோக₃மண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகா₃நுயாகோ₃த்தர வீதிகளில் காயாந்நஸ்த₂ல ஶுத்திபண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
இனிமேல் ஆழ்வாருடைய வைப₄வத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பா₄க₃வதவைப₄வத்தைப் பல உதா₃ஹரணங்களாலும் அருளிச்செய்கிறார். அதில், அவர்கள் ஜந்மவ்ருத்தஜ்ஞாநங்களால் குறைய நின்றார்களேயாகிலும் ப₄க₃வத்₃ ப₄க்தரானார்களாகில் அவர்கள் ஸர்வோத்க்ருஷ்டரென்றும், அவர்கள் உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்தநீயரென்றும், அவர்களுடைய ஸம்ப₃ந்த₄மே உத்தாரகம் என்றும், அவர்கள் விஷயத்தில் ப₄க₃வானுடையவும், ப₄க₃வதீ₃யருடையவும் ஆத₃ர ப்ரகாரத்தையும், அநுவர்த்தநீயரான ப்ரகாரத்தையும், அவர்களுடைய ஸ்பர்ஶாதி₃களே பாவநம் என்னுமிடத்தையும், ப்ரமேயபூ₄தனுடையவும், ப்ரமாதாக்களினுடையவும், உக்த்யநுஷ்டா₂நங்களாலே வெளியிடுகிறார்.
(ம்லேச்ச₂னும் ப₄க்தனானால்) ‘‘மத்₃ப₄க்தஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநு மோத₃நம் | ஸ்வயமப்₄யர்ச்சநஞ்சைவ மத₃ர்த்தே₂ ட₃ம்ப₄வர்ஜநம் | மத்கதா₂ஶ்ரவணே ப்ரீதி: ஸ்வரநேத்ராங்க₃விக்ரியா | மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி | ப₄க்திரஷ்டவிதா₄ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சே₂பி வர்த்ததே’’ (ப₄க₃வச்சா₂ஸ்த்ரே) என்று பா₄க₃வதவிஷயத்தில் வாத்ஸல்யம் முதலான அஷ்டவிதை₄யான ப₄க்தி ம்லேச்ச₂ன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும். (சதுர்வேதி₃கள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த₂ ப்ரஸாத₃னாமென்கிற திரு முகப்படியும்) ‘‘ஸ விப்ரேந்த்₃ரோ முநிஶ்ஸ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டி₃த: | தஸ்மை தே₃யம் ததோ க்₃ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா₂ ஹ்யஹம் | தத்பாதா₃ம்ப்வதுலம் தீர்த்த₂ம் தது₃ச்சி₂ஷ்டம் ஸுபாவநம் | தது₃க்தி மாத்ரம் மந்த்ராக்₃ர்யம் தத்ஸ்ப்ருஷ்டம் அகி₂லம் ஶுசி’’ (ப₄க₃வச் சா₂ஸ்த்ரே) என்று – ‘அவர்கள் ஜந்ம வ்ருத்தஜ்ஞாநங்களால் உத்க்ருஷ்டர். அவர்கள் உத்க்ருஷ்டஜந்மாக்களாலே அநுவர்த்தநீயர். அவர்கள் வித்₃யோபஜீவநத்துக்கு விஷயபூ₄தர். அவர்கள் என்னைப்போலேயாகிலும் பூஜ்யர். அவர்கள் தீர்த்த₂ ப்ரஸாதா₃தி₃கள் பரமபாவநம்’ என்கிற திருமுகமான ப₄க₃வது₃க்தியும், ‘‘பழுதிலா ஒழுகலாற்று’’ (திருமாலை 42) இத்யாதி₃யான திருமுகப்படியும்.
(விஶ்வாமித்ர–விஷ்ணுசித்த–துளஸீ ப்₄ருத்யரோடே உள்கலந்து) ‘‘கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்₄யா ப்ரவர்த்ததே | உத்திஷ்ட₂ நரஶார்தூ₃ல கர்த்தவ்யம் தை₃வமாஹ்நிகம்’’ (ரா.பா₃.23-2) என்று பெரியபெருமாளைத் திருப்பள்ளி உணர்த்தின விஶ்வாமித்ரேனாடும், ‘‘அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத்துயிலெழாயே’’ (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத் திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும், ‘‘அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே’’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத் திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும் ஸகோ₃த்ரிகளாய்க் கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, ‘‘வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணர்க்காளென்று உள்கலந்தாரடியார்’’ (திருவா.3-7-9) என்கிறபடியே வலவருகே த₄ரிக்கப்பட்ட திருவாழியையும், அதுக்குப்பரபா₄க₃மான நீலமணிபோலே இருக்கிற திருமேனியையுமுடைய ஸர்வஸ்வாமிக்கு அநந்யார்ஹஶேஷபூ₄தரென்று கொண்டு ஶேஷத்வஜ்ஞாநபூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, ‘‘எம் தொழுகுலம்
தாங்களே’’ (திருவா.3-7-8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்தநீயருமாய், ஶேஷத்வ ஜ்ஞாநாநுகு₃ணமான குலத்திலே பிறந்தவர்.
(நிலையார் பாடலாலே ப்₃ராஹ்மணவேள்விக்குறை முடித்தமையும்) சரகவம்ஶத்திலே பிறந்த ஸோமஶர்மாவான ப்₃ராஹ்மணன் வைதி₃கமான யாக₃த்தை உபக்ரமித்து அதில் மந்த்ர–க்ரியா–த்₃ரவ்ய–த₃க்ஷிணா–லோபத்தாலே யாக₃மத்₄யே ம்ருதனாய் ப்₃ரஹ்மரக்ஷஸ்த்வத்தை அடைந்துவந்தவன், கைஶிகவ்ருத்தாந்தத்தில் வந்த ஸ்ரீவைஷ்ணவரைக்கண்டு ‘‘த்வம் வை கீ₃தப்ரபா₄வேந நிஸ்தாரயிதுமர்ஹஸி | ஏவமுக்த்வாத₂ சண்டா₃ளம் ராக்ஷஸஶ்ஶரணம் க₃த: | ப்₃ரஹ்மரக்ஷோவசஶ்ஶ்ருத்வா ஶ்வபாகஸ்ஸம்ஶிதவ்ரத: | பா₃ட₄மித்யேவ தத்₃வாக்யம் ப்₃ரஹ்மராக்ஷஸசோதி₃தம் | யந்மயா பஶ்சிமம் கீ₃தம் ஸ்வரம் கைஶிகமுத்தமம் | ப₂லேந தஸ்ய ப₄த்₃ரம் தே மோக்ஷயிஷ்யாமி கில்பி₃ஷாத் | ஏவம் தத்ர வரம் க்₃ருஹ்ய ராக்ஷஸோ ப்₃ரஹ்மஸம்ஜ்ஞித: | யஜ்ஞஶாபாத்₃விநிர்முக்தஸ்ஸோமஶர்மா மஹாயஶா:’’ (கை. பு.) என்று அவன் ஶரணம் புக, (நிலையார் பாடலாலே) கைஶிகம் என்கிற பண்ணில் தாம் பண்ணின கீ₃தப்ரபாவத்தாலே அவனுடைய ப்₃ரஹ்மரக்ஷஸ்– த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாக₃க்குறையும் தலைக்கட்டினாரானமையும்.
(கீழ்மகன்) ‘‘ஏழை ஏதலன் கீழ்மகன்’’ (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம–வ்ருத்த– ஜ்ஞாநங்களால் குறையநின்ற ஸ்ரீகுஹப்பெருமாள் ‘‘வானோர்தலைமகன்’’ (திருவி. 53) என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தி திருமகேனாடே ‘‘உகந்து தோழன் நீ’’ (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸகா₂வாய், (தம்பிக்குமுன்பிறந்து) ‘என்தம்பி உன்தம்பி’ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைபெருமாளுக்கும் முற்பாடராய், (வேலும் வில்லுங்கொண்டு பின்பிறந்தாரைச்சோதித்து) இளையபெருமாள் பெருமாள் பக்கல் ஸௌகுமார்யாநுஸந்தா₄நத்தாலுண்டான பரிவாலே அநிமிஷ த்₃ருஷ்டியாய்க் கொண்டு இவரையும் அதிஶங்கைபண்ணி ஸாயுத₄ராய்க்கொண்டு நோக்கும்படி பெருமாள்பக்கல் பரிவையுடையராய்.
(தமையனுக்கு இளையோன் ஸத்₃பா₄வம் சொல்லும்படி ஏககுலமானமையும்) ‘‘ஆசசக்ஷேத₂ ஸத்₃பா₄வம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந ப₄ரதாயாப்ரமேயாய கு₃ஹோ க₃ஹநகோ₃சர:’’ (ரா.ஆ.86-1) என்று அளவிறந்த வைப₄வத்தை உடையராயிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளையபெருமாள் கைங்கர்யஸ்ரீயாலே உளராயிருக்கிறபடியை இவர் உபதேஶிக்கும்படி இக்ஷ்வாகு வம்ஶ்யரோடு ஏக குலமானமையும்.
(தூதுமொழிந்து) ‘‘முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து’’ (திருமொழி.2-2-3) என்று பிராட்டிபக்கல் திருவடியோடே தூ₃து வாக்யத்தை அருளிச் செய்துவிட்டபெருமாள் ‘‘ஶப₃ர்யா பூஜிதஸ்ஸம்யக்₃ராமோ த₃ஶரதா₂த்மஜ:’’ (ரா.பா₃.1-58) என்று ஶபரிகையாலே ஸம்யக்காக பூஜிதரானபின்பு அழகுநிலைபெற்றபடியையும், (நடந்து) ‘‘குடைமன்னரிடை நடந்த தூதா’’ (திருமொழி 6-2-9) என்று பாண்டவதூதனான க்ருஷ்ணனுடைய ‘‘பு₄க்தவத்ஸு த்₃விஜாக்₃ர்யேஷு நிஷண்ண: பரமாஸநே | விது₃ராந்நாநி பு₃பு₄ஜே ஶுசீநி கு₃ணவந்தி ச’’ (பா₄ர. உத்₃.) என்று பாவநத்வபோ₄க்₃யத்வங்களை உடைத்தாயிருக்கிற விது₃ராந்நபோ₄ஜநத்தையும், (வந்த) ‘‘தூது வந்த குரங்கு’’ (திருமொழி.10-2-6) என்கிறபடியே ‘‘த்₃ருஷ்டா ஸீதா’’ (ரா.பா.1-78) என்ற திருவடியோடே ‘‘உபகாராய ஸுக்₃ரீவோ ராஜ்யகாங்க்ஷீ விபீ₄ஷண நிஷ்காரணாய ஹநுமாந் தத்துல்யம் ஸஹபோ₄ஜநம்’’ (பாத்₃மோத்தரே) என்றும், ‘‘உடனே உண்பன் நானென்ற ஒண்பொருள்’’ (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள் ஸஹபோ₄ஜநம் பண்ணினபடியும்.
(ஒருபிறவியிலே இருபிறவியானார் இருவர்க்கு) யது₃குலத்திலே பிறந்து கோ₃பகுலத்திலே வளர்ந்த கண்ணனுக்கும், ருஷி க₃ர்ப்ப₄மாய்க் கொண்டு வந்த இடத்திலே வளர்ந்த திருமழிசைப்பிரானுக்கும், (த₄ர்மஸுநுஸ்வாமிகள் அக்₃ரபூஜை கொடுத்தமையும்) த₄ர்மபுத்ரரும், பெரும்புலியூர் அடிகளும் தங்கள் யாகங்களிலே அக்₃ரபூஜை கொடுத்தமையும்.
(ஐவரில் இத்யாதி₃) ஐவரில் முற்பட்ட த₄ர்மபுத்ரர் ஸ்ரீவிதுரர்க்கு ஞானத்தின் மேம்பாட்டினையும் அஶரீரி வாக்யத்தையம் கொண்டு ஸந்தேஹியாமல் புத்ரன் செய்ய வேண்டிய இறுதிக்கடனைப் பண்ணினமையும், நால்வரில் முற்பட்ட சக்ரவர்த்தி திருமகன் ஸஹஜரான இளைய பெருமாளோடேகூட ‘‘அப்போது அந்த சோகத்தாலேயே ஜடாயு என்கிற கழுகை தகனம் செய்து’’ (ரா.பா.1-54) என்கிறபடியே பெரிய உடையார்க்குப் புத்ரன் செய்வதை அநுட்டி₂த்தபடியும், மூவரில் முற்பட்ட பெரியநம்பி மாறனேரிநம்பிக்குப் புரோடா₃ஶமாகப் புத்ரக்ருத்யம் அநுட்டி₂த்தபடியும். (புஷ்பத்யாகே₃ த்யாதி₃) ‘‘சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து’’ (திருவா.3-3-2) என்கிறபடியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப்பூவும் கையுமாய்த் திருவுள்ளமறியப் பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ‘‘துளங்குநீண்முடி அரசர்தம் குரிசில் தொண்டை மன்னவன்’’ (திருமொழி.5-8-9) என்கிற திருவபி₄ஷேகம் செய்யப்பட்ட அரசனின் புத்ரரான தொண்டைமான் சக்ரவர்த்தி பின்பற்றிய முறையும், ‘‘வேகவதியின் வடகரையில் புண்யகோடி விமானத்தில் விஷ்ணுவானவர் எல்லா உயிர்களுக்கும் வரம் கொடுக்கும் பெருமானாய் இன்றும் எல்லாராலும் காணப்படுகிறார்’’ (ஹஸ்திகி₃ரி மாஹா.) என்கிறபடியே த்யாக₃மண்டபமான பெருமாள்கோயிலிலே திருவாலவட்டமும் கையுமாய்ப் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற திருக்கச்சி நம்பியை வைதி₃கோத்தமரான உடையவர் பின்பற்றிய முறையும், ‘‘தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்’’ (பெருமா.தி.1-1) என்கிறபடியே போ₄க₃மண்டபமான கோயிலில் வீணையும் கையுமாய்ப் பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோகஸாரங்க மஹாமுனிகள் அநுவர்த்தித்த க்ரமமும்,
(யாகா₃நுயாகே₃த்யாதி₃) யாக₃மென்று – திருவாராத₄நமாய், அதுக்குப் பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்பர்ஶத்தாலே காயஶுத்₃தி₄ பண்ணின உடையவருடையவும், அநுயாக₃ம் என்று – ப₄க₃வத்ஸமாராத₄நாநந்தரம் பண்ணப்படுகிற ப்ரஸாத₃ஸ்வீகாரம். அதுக்குப் பிள்ளை ஏறுதிருவுடையார் தாஸருடைய கரஸ்பர்ஶத்தாலே அந்நஶுத்₃தி₄ பண்ணின நம்பிள்ளையுடையவும், உத்தரவீதி குடிபுகுருகைக்கு ‘‘ஆலோக்ய ராஜநக₃ரீ- மதி₄ராஜஸூநுராஜாநமேவ பிதரம் பரிசிந்த்ய பூ₄ப ஸுக்₃ரீவமாருதிவிபீ₄ஷண- புண்யபாத₃ ஸஞ்சாரபூதப₄வநம் ப்ரவிவேஶ ராம:’’ என்று பெருமாள் ஸ்த₂லஶுத்₃தி₄ பண்ணினாப்போலே, உத்தரவீதி குடிபுகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்த₂லஶுத்₃தி₄பண்ணின நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டருடையவும் அநுஷ்டா₂நப்ரகாரங்களையும் அறிவார்க்கிறே ஜந்மத்தினுடைய உத்க்ருஷ்டாபக்ருஷ்டத்வம் தெரிவது.
ஆக, கீழ் ஜந்மவ்ருத்தஜ்ஞாநங்களால் குறையநின்றார்களேயாகிலும் ப₄க₃வதீ₃யரானார்களாகில் அவர்கள் ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதே₃யர் என்னுமிடத்தைச் சொல்லிற்று. (85)
86. அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரமவித்₃யாவ்ருத்தங்களை கர்தப ஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள்.
இனிமேல் ப₄க₃வஜ்ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர் ப்₄ரமிக்கிற கேவல வர்ணாதி₃கள் வ்யர்த்த₂மாகையாலே த்யாஜ்யமென்னுமிடத்தை ஸப்ரமாணமாக அருளிச் செய்கிறார் (அஜ்ஞர் ப்₄ரமிக்கிற என்று தொடங்கி). அஜ்ஞர் – ப₄க₃வச் சே₂ஷத்வஜ்ஞாநமில்லாதவர்கள், உத்தம வர்ணமென்றும், உத்தமாஶ்ரமமென்றும், ஸத்₃வித்₃யை என்றும், ஸத்₃வ்ருத்தமென்றும் கேவலம் உத்க்ருஷ்டமாக ப்₄ரமிக்கிற இவற்றை.
(க₃ர்த்த₃ப₄ஜந்மமித்யாதி₃) ‘‘சதுர்வேத₃த₄ரோ விப்ரோ வாஸுதே₃வம் ந விந்த₃தி | வேத₃பா₄ரப₄ராக்ராந்தஸ்ஸ வை ப்₃ராஹ்மணக₃ர்த்த₃ப₄:’’ என்கிறபடியே ஸகலவேதத்– தையும் அதி₄கரித்துவைத்து ‘‘வேதை₃ஶ்ச ஸர்வைரஹமேவ வேத்₃ய:’’ (கீதை.15-15) என்கிறபடியே ஸகலவேத₃ப்ரதிபாத்₃யன் ஸர்வேஶ்வரன் என்றறியாதவர் குங்குமம் சுமந்த கழுதையோபாதி என்றும், ‘‘விஷ்ணுப₄க்திவிஹீநஶ்சேத்₃யதிஶ்ச ஶ்வபசாத₄ம:’’ என்று யதியேயாகிலும் ப₄க₃வத்₃ப₄க்தி இன்றிக்கே இருக்குமாகில் அவன் ஶ்வபாகனிற்– காட்டில் தண்ணியனென்றும், ‘‘தத்கர்ம யந்ந ப₃ந்தா₄ய ஸா வித்₃யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம் கர்ம வித்₃யாந்யா ஶில்பநைபுணம்’’ (வி.பு.1-19) என்று மோக்ஷார்த்த₂மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்; அல்லாத ஜ்ஞாநம் செருப்புக்குத்தக் கற்றவோபாதி என்றும், ‘‘ஆம்நாயாப்₄யஸநாந்யரண்யருதி₃தம் வேத₃வ்ரதாந்யந்வஹம் மேத₃ஶ்சே₂த₃ ப₂லாநி பூர்த்தவித₄ய: ஸர்வே ஹுதம் ப₄ஸ்மநி | தீர்த்தா₂நாமவகா₃ஹநாநி ச க₃ஜஸ்நாநம் விநா யத்பத₃த்₃வந்த்₃வாம்போ₄ருஹஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தே₃வஸ்ஸ நாராயண:’’ (முகு.மாலை-25) என்றும் பகவஜ்ஜ்ஞாநமில்லாதவர்களுடைய கர்மாதிகள் எல்லாம் பஸ்மாஹுதிபோலே நிஷ்ப்ரயோஜநமென்றும்,
‘‘தே ஶவா: புருஷா லோகே யேஷாம் ஹ்ருதி₃ ந கேஶவ கேஶவார்ப்பித ஸர்வாங்கா₃: ந ஶவா ந புநர்ப₄வா:’’, ‘‘யஸ்யாகி₂லாமீவஹபி₄ஸ் ஸுமங்க₃லைர்வாசோ விமிஶ்ரா கு₃ணகர்மஜந்மபி₄ ப்ராணந்தி ஶும்ப₄ந்தி புநந்தி வை ஜக₃த்யாஸ்தத்₃வியுக்தாஶ்- ஶவஶோப₄நா மதா:’’ என்று ப₄க₃வஜ்ஜ்ஞானம் இல்லாதவர்கள் ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள் ஶவப்ராயர் என்றும், ‘‘ப்ராது₃ர்பா₄வைஸ்ஸுரநரஸமோதே₃வதே₃வஸ்ததீ₃யா ஜாத்யா வ்ருத்தைரபி ச கு₃ணதஸ்தாத்₃ருஶோ நாத்ர க₃ர்ஹா | கிந்து ஸ்ரீமத்₃பு₄வநப₄வந- த்ராணதோந்யேஷு வித்₃யாவ்ருத்தப்ராயோ ப₄வதி வித₄வாகல்பகல்ப: ப்ரகர்ஷ:’’ என்று ப₄க₃வஜ் ஜ்ஞாநமில்லாதவர்களுடைய வித்₃யாதி₃கள் ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநமென்கிற ஸௌமங்கல்யமில்லாமையாலே வித₄வாலங்காரமென்று இந்த ஜந்மாதி₃களை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள் அநாத₃ரிப்பர்களென்கிறார். ப₄க₃வஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதி₃கள் த்யாஜ்யமென்னுமிடம் சொல்லிற்று. (86)
முதல் ப்ரகரணம் முற்றிற்று
அழகியமணவாளப்பெருமாள்நாயனார் திருவடிகளே ஶரணம்
திருநாராயணபுரத்தாய் திருவடிகளே ஶரணம்