அர்ச்சிராதி
த்விதீயப்ரகரணம்
அதில் முற்பட அர்ச்சிஸ்ஸைக்கிட்டி, அவன் சிறிதிடம் வழிநடத்த, பின்பு அஹஸ்ஸையும், ஶுக்லபக்ஷாபிமாநியையும், உத்தராயணாபி மாநியையும், ஸம்வத்ஸராபிமாநியையும், வாயுவையுங் கிட்டி, அவர்கள் வழிநடத்த, 1. ப்ரவிஶ்ய ச ஸஹஸ்ராம்ஶும்’ (பெரிய திருமடல் 16) ‘மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள்” என்கிறபடியே, ஹிரண்மயமாய், காலசக்ரப்ரவர்த்தகமான (சிறிய திருமடல் 7) தேரார் நிறைகதிரோன் மண்டலத்திலே, எதிர்விழிக்க வொண்ணாதபடி நிரவதிகதேஜஸ்ஸோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமாபோலே சென்று, அவன் (சிறிய திருமடல் 7) மண்டலத்தைக் கீண்டுபுக்கு அவ்வருகேபோய், 2. “க்ரமாச்சந்த்ரமஸம் ப்ராப்ய” என்கிறபடியே க்,ரஹநக்ஷத்ரதாரகா நிர்வாஹகனாய் அம்ருதாத்மக னாயிருந்துள்ள சந்த்ரனைக்கிட்டி, அவன் ஸத்கரிக்க அவ்வருகே போய், அமாநவனைக்கிட்டி, அவன் வழிநடத்த, ஸர்வாப்யாயகனான வருணனும், த்ரைலோக்ய பாலகனான இந்த்ரனும், முக்தராய்ப் போகுமவர்களை ஸர்வப்ரகாரத்தாலும் மிகவும் ஶ்லாகிக்கக் கடவர்க ளாய், ஸுராஸுர கந்தர்வ யக்ஷ ராக்ஷஸ நிர்வாஹகனான ப்ரஜாபதியையுஞ் சென்றுகிட்டி, அவர்கள் லோகங்களையும் கடந்து, அண்டத்தையும், தஶோத்தரமான ஆவரண ஸப்தகத்தையும், (திருவாய் 10.10.10) முடிவில் பெரும்பாழான மூலப்ரக்ருதியையும் கடந்து; – முன்பு ஸம்ஸாரியான நாளில் அந்தகாராவ்ருதமாய், நீரும் நிழலுமின்றிக்கே 3. பீதோஸ்ம்யஹம் மஹாதேவ ஶ்ருத்வா மார்க் கஸ்ய விஸ்தரம்” என்கிறபடியே, கேட்டபோதே துளங்கவேண்டும் படியான கொடிய வழியிலே, யமபடர் பாசங்களாலும், புத்ரதாரமய பாசங்களாலுங் கட்டுண்டு, யமதூதராலே இழுப்புண்டு, (பெரியாழ்வார் திரு 4.5.5) தொடைவழி நாய்கள் கவர, ஶக்தி ஶங்கு தோமர ஸாயக ஶூலாதிகளாலே நோவுபட்டு, வ்யாக்ர கிங்கரரான ராக்ஷஸர் முகங் களுக் கிரையாய் உடம்பெங்கும் சீயும் ரக்தமும்வடிய, பசியும் தாக மும் மேலிட்டு, தூதரைச் சோறும் தண்ணீரும் வேண்டி, மூக்கும் முகமும் உதடும் பல்லுந்தகர்ந்து. கையுங்காலுமொடிந்து, கூப்பிட்டுப் போன இழவுதீர – ஸுகோத்தரமான மார்க்கத்தாலே இவ்வெல்லை கடந்தபோதே தொடங்கிக் கண்டாரடைய ஸத்கரிக்க, தனக்கு உபாய மான (திருச்சந்த 66) பாரளந்த பாதபோதுபோலேயும், (பெரிய திரு 11.4.5) அந்தரமேழினூடு செலவுய்த்த பாதம்போலேயும் கடுநடையிட்டுப் போய், ஶப்தஸ்பர்சாதிகளாகிற ஸிம்ஹவ்யாக்ராதிகளைத் தப்பி, ஸம்ஸாரமாகிற (திருவாய் 10.10.8) . பெருந்தூற்றினின்றும் புறப்பட்டு, தாபத்ரயமாகிற காட்டுத்தீயிலே அகப்பட்டுப் பட்ட க்லேஶமெல்லாந் தீர, 1. “ததஸ்து விரஜாதீரப்ரதேஶம்” 2. “ஸ கச்சதி விரஜாம் நதீ,ம்” என்கிறபடியே அம்ருதவாஹிநியாய், வைதரணிக் கெதிர்த்தட்டான விரஜையைச் சென்றுகிட்டி. (திருவிருத்தம் 100) வன் சேற்றள்ளலை யும் வாஸநாரேணுவையுங் கழுவி, மேகாவ்ருதமான ஆதித்ய மண்டலம்போலேயும், ராஹுக்ரஸ்தமான சந்த்ரமண்டலம் போலே யும், சேற்றிலழுந்தின மாணிக்கம்போலேயும் (திருவிருத்தம் 1) அழுக்குடம்பிலேயகப்பட்டுத் திரோஹிதஸ்வரூபனான இவன் அதுவும் நிவ்ருத்தமாய், 3. “தத்தோயஸ்பர்ஶமாத்ரேண” என்கிற படியே விரஜாஜலஸ்பர்ஶத்தாலே திரோதாயகமான ஸுக்ஷ்மஶரீர முங் கழியப்பெறுகையாலே, 4. “ஸுர்ய கோடி ப்ரதீகாஶ:” என்கிற படியே அநேகமாயிரமாதித்யர்கள் சேரவுதித்தாற்போலே கண் கொண்டு காணவொண்ணாதபடி நிரவதிக தேஜஸ்ஸையுடையனாய், 5. “அமாநவம் ஸமாஸாத்ய” என்கிறபடியே சதுர்புஜனாய், ஶங்க சக்ர கதாதரனாய், விரஜைக்கரையிலே யெழுந்தருளியிருக்கிற அமா நவனைச் சென்று கிட்டி, அவன் திருக்கைகளாலே ஸ்பர்ஶிக்க, பின்பு லாவண்ய ஸௌந்தர்யாதி, கல்யாணகுணாகரமாய் ஶுத்தஸத்வ மயமாய், பகவதநுபவைக பரிகரமான விக்ரஹத்தைப்பெற்று, இந்த்ராதி பதங்கள்போலே கர்மஸாத்யமாய், நஶ்வரமாய், குணத்ர யாத்மகமாயிருக்கையன்றிக்கே, பகவத்ப்ரீதிஸாத்யமாய், நித்யமாய், ஶுத்தஸத்வாத்மகமாய், (திருவாய் 9.1.5) ‘இல்லை கண்டீரின்பம்” என்கிறதுக்கு எதிர்த்தட்டாக (திருவாய் 2.8.4) நலமந்தமில்லதோர் நாடாய். (திருவாய் 10.6.1) இருள்தருமா ஞாலத்துக்கு எதிர்த்தட்டாக (திருவாய் 9.7.5) ”தெளிவிசும்பு திருநாடு’ என்கிறபடியே (திருவாய் 10.8.5) தெளிதாகிய சேண்விசும்பாய், ஸநகாதிகள் நெஞ்சுக்கும் நிலமன் றிக்கே பகவதாநுகூல்யைக போகரான நித்யஸித்தராலே நெருங்கி, அவர்களாலும் அளவிடவொண்ணாத அளவையும், ஐஸ்வர்யத் தையும், ஸ்வபாவமாகவுடைத்தான திவ்யதேஶத்தைக் (பெரிய திரு 7.10.9) கண்களாரளவும் நின்றுகண்டு, (திருவாய் 4.4.1) “விண்ணை’த் தொழுது” என்கிறபடியே தொழுது, அமாநவ பரிஸரத்திலே ஶங்க, காஹௗ பேரிகளினுடைய முழக்கத்தைக்கேட்டு, (பெரியாழ் திரு 1.1.2) ”ஓடுவார் விழுவாருகந்தாலிப்பார். நாடுவார் நம்பிரானெங்குற்றா னென்பார்” (திருவாய் 5.2.2) “கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் – தொண்டீரெல்லீரும் வாரீர்” என்பாராய்க்கொண்டு பெரிய ஆர்ப்பரவத்தைப் பண்ணித் திரள் திரளாகப் புறப்பட்டுவருகிற நித்யமுக்தருடைய ஆநந்த களகளத்தைக் கண்டு அநுபவித்துக்கொண்டு, பெரிய ப்ரதீயோடே போகிறவளவிலே, 1. “தம் பஞ்சஶதாந்யப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி” 2.“தத்ராகத்ய ச தே தேவாஸ்ஸாத்யாஶ்ச விமலாஶயா:” என்கிறபடியே திவ்யமால்யம், திவ்யாஞ்ஜநம், திவ்யசூர்ணம், திவ்ய வஸ்த்ரம், திவ்யாபரணம் தொடக்கமானவற்றை தரித்துக்கொண்டு, ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸுக்களும், நித்யஸூரிகளும் எதிரேவந்து, 3. “ப்ரஹ்மாலங்காரேண” 4. “ப்ரஹ்மாலங்க்ரியா” என்கிறபடியே அலங்கரித்து (திருப்பல்லாண்டு 9) உடுத்துக்களைந்த நின்பீதகவாடை, சூடிக்களைந்த திவ்யமால்யம், திவ்யாபரணங்கள், திவ்யாங்கராகங் கள் தொடக்கமானவற்றாலே அலங்க்ருதனாயிருக்கிறபடியைக் கண்டு, (திருவாய் 8.9.5) “புனையிழைகளணிவும் ஆடையுடையும் புதுக் கணிப்பும் – நினையும் நீர்மையதன்று” என்று விஸ்மிதராய்க் கொண் டாட, பின்பு அநேகமாயிரங்கொடிகளாலும், முத்துத்தாமங்களாலும், மேற்கட்டிகளாலும் அலங்க்ருதமாய், திவ்யஸ்த்ரீபரிவ்ருதமாய், பகவத்ஸங்கல்பகல்பிதமாயிருப்பதொரு திவ்யவிமாநத்தைப் பெரிய திருவடி கொண்டுவர, அதிலே இவனையேற்றி ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு திவ்யகாந்தாரத்தளவிலே சென்றவாறே; நாநாவிதமான உபஹாரங்களை ஏந்திக்கொண்டு வேறே சில திவ்யாப்ஸரஸ் ஸுக்கள் எதிரேத்தி ஸத்கரிக்க, பின்பு திவ்யகந்தம், ப்ரஹ்மகந்தம் தொடக்கமான அப்ராக்ருதகந்தங்களை ஆக்ராணம்பண்ணி ஸர்வகந்த னாய் (திருவாய் 10.9.8) “கொடியணி நெடுமதிள் கோபுரங்குறுகினர்” என்கிறபடியே த்வஜபதாகாதிகளாலே அலங்க்ருதமான திவ்ய கோபு ரத்தைக் கிட்டி, திருவாசல் காக்கும் முதலிகள் (திருவாய் 10.9.9) “வைகுந்தன்தமரெமரெமதிடம் புகுது” என்கிறபடியே பெரிய ஆதரத் தோடே ஸத்கரிக்க, 1. “ஸமதித்ய ஜநாகுலம்” (பெரிய திருமடல் 73) ”கவாடங்கடந்து புக்கு” என்கிறபடியே நெஞ்சையும் கண்ணையும் வருந்தி மீட்டுக்கொண்டு, அயோத்யையென்றும் அபராஜிதையென் றுஞ் சொல்லப்படுகிற (பெரிய திரு 4.8.10) ஏர்கொள் வைகுந்தமாநகரத் திலே (திருவாய் 6.1.7) ஒரு வண்ணஞ் சென்றுபுக்கு, 2.”ஸ்ரீவைகுண்டாய திவ்ய நகராய நம:” என்று (திருவிருத்தம் 2) கண்ணன் விண்ணூரைத் தொழுது, (திருவாய் 10.9.9) வைகுந்தத் தமரரும் முனிவரும், ‘சடலில் நீர் ஸஹ்யத்திலே ஏறக்கொழித்தாற் போலே ஸம்ஸாரஸ்தனான இவன் இத்தேஶத்திலே வரப் பெறுவதே!’ என்று விஸ்மிதராய்க்கொண்டாட, பின்பு (திருவாய் 8.6.5) கோயில்கொள் தெய்வங்களான பெரியதிருவடி, ஸ்ரீஸேநாபதியாழ் வான் தொடக்கமானவர்கள் தந்தாம் திருமாளிகைகளிலே கொண்டு புக்கு, இவனை ஆஸநத்திலே உயரவைத்து, தாங்கள் தரையிலே யிருந்து, தங்கள் மஹிஷிகள் நீர்வார்க்க ஸ்ரீபாதம் விளக்கி, தங்கள் மஹிஷிகளுக்கு (திருவாய் 7.10.11) “தேவர் வைகல் தீர்த்தங்களே” என்று இவன் ப்ரபாவத்தைச் சொல்லி, ஸத்கரிக்கும் க்ரமத்திலே ஸத்கரிக்க, பின்பு ஸ்ரீஶடகோபனும், திவ்யசூர்ணங்களும், பூர்ண கும்பங்களும், மங்கள தீபங்களும் ஏந்திக்கொண்டு, தேஶாந்தாக தனாய் வந்த புத்ரனைக்கண்ட தாய்மாரைப்போலே குளிர்ந்த முகத்தையுடைய (திருவாய் 10.9.10) மதிமுகமடந்தையர் வந்தெதிர் கொள்ள, பெருத்தெருவாலே உள்ளேபுக்கு, திவ்யாவரண ஶத ஸஹஸ்ராவ்ருதமான (பெரிய திரு 4.3.1) செம்பொன் செய் கோயிலைக்கிட்டி, 1.” ஸ்ரீவைகுண்டாய திவ்ய விமாநாய நம: ” என்று தண்டனிட்டு ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே தன்னுடைய வரவாலே தளிர்த்துச் செருந்தி இலையும் மரமும் தெரியாதபடி பஹுவிதமான நிறத்தையும் கந்தத்தையுமுடைய அப்ராக்ருத புஷ்பங்களாலே நெருங்கித் தேன்வெள்ளமிடுகிற கற்பகச் சோலைகளாலும், நாநாவிதமான பூக்களலும், ரத்நங்களாலும் சமைத்த லீலாமண்டபங்களாலும், அபூர்வவத்விஸ்மய ஜநகங்களான க்ரீடாஶைலங்களாலும், ஸ்ரீவைகுண்டநாதனுக்கும் பெரியபிராட்டி யார்க்கும் லீலாபரிகரங்களாய், செவிகளடைய மயிர்க்கூச்சிடும்படி இனிய பேச்சுக்களையுடைய ஶுக ஶாரிகா மயூர கோகிலாதிகளாலும் ஆகுலங்களாய், மாணிக்கம் முத்து பவளம் தொடக்கமானவற்றாலே சமைந்தபடிகளையுடைத்தாய், நித்யமுக்தர்களுடைய திருவுள்ளங்கள் போலே குளிர்ந்து தெளிந்து, அம்ருதரஸங்களான திவ்யஜலங்க ளாலே நிறைந்து. நாநாவித பக்ஷிஸங்க ஸமாகீர்ணமாய்த் துளும்பி யெங்குஞ்சொரிகிற தேன்வெள்ளத்தையுடைத்தாய், (திருவாய் 5.9.7) “மாதர்கள் வாண்முசமும் கண்ணுமேந்தும்” என்கிறபடியே (திருவாய் 10.9.10) மதிமுக மடந்தையருடைய திருமுகங்களுக்கும் திருக்கண்களுக்கும் போலியான தாமரை செங்கழுநீர் தொடக்கமான அப்ராக்ருத புஷ்பங்களையுடைய ஓதநெடுந்தடங்களாலும், நாநாவித மான பூம்படுக்கைகளாலும், பரிமளம்போலே பூக்களிலே படிந்து மது வெள்ளத்திலே முழுகிப் பாட்டுக்களாலே அநுமேயங்களான தெய்வ வண்டுகளினுடைய திவ்யகாநத்தாலும் கிட்டினாரைப் பிச்சேற்றுகிற திவ்யோத்யாந ஶதஸஹஸ்ரங்களாலும் சூழப்பட்டு, நாநாரத்நங்க ளாலே சமைந்த ஸ்தலங்களையுமுடைத்தாய், அநேகமாயிரம் ரத்ந ஸ்தம்பங்களாலே அலங்க்ருதமாய், உபயவிபூதியிலுள்ளாரும் ஒரு மூலையிலே அடங்கும்படி இடமுடைத்தாய், தாமரை, செங்கழுநீர், சந்தநம், அகில், கர்ப்பூரம் தொடக்கமானவற்றை அளைந்துவருகிற மந்தமாருதனாலே ஸேவ்யமாநமாய், நிரதிஶயாநந்தமயமான (திருவாய் 10.9.11) திருமாமணி மண்டபத்தைச் சென்று கிட்டி, 1.”ஆநந்த மயாய மண்டபரத்நாய நம:” என்று தண்டனிட்டு, (திருநெடுந் 14) அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை எப்போதுமொக்கப் பருகுகையாலே இளகிப் பதித்து, (பெரியாழ் திரு 3.6.3) வைகுந்தக் குட்டனோடு ஸாம்யாபந்நராய் அநுபவஜநிதமான ஹர்ஷப்ரகர்ஷத் துக்குப் போக்குவிட்டு ஸாமகாநம் பண்ணுவார். (திருவாய் 10.7.1) “செஞ்சொற்கவிகாள் உயிர் காத்தாட்செய்மின்’ என்று இன்ப வாற்றிலே ஸீலகுணமாகிற ஆழங்காலிலே கொண்டைக்கோல் நாட்டுவார், ஸ்வாசார்யனைக் குறித்து (திருவாய் 6.5.5) “இழைகொள் சோதிச்செந்தாமரைக் கண்ணபிரானிருந்தமை காட்டினீர்” என்பார், (திருவாய் 10.8.10) “உற்றேனுகந்து பணிசெய்துனபாதம் பெற்றேனீதே இன்னம் வேண்டுவதெந்தாய்” என்பார், (திருவாய் 2.5.8) “என் முடிவு காணாதே என்னுள் கலந்தானைச் – சொன்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீர்” என்பார், (நாச்சி திரு 5.11) “நமோ நாராயணாய என்பார்” என்கிறபடியே (முதல் திருவ 95) ஓவாதுரைக்கு முரையான பெரியதிருமந்த்ரத்தைச் சொல்லி, (திருவாய் 8.1.10) “தோள் களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதி!” என்று ஆத்மஸமர்ப்பணம் பண்ணுவார், (திருவாய் 10.6) உருகுமாலிலே ஆழ்வார் பட்டதுப்பட்டு, (திருவாய் 8.1.8.) “வல்வினையேனையீர்கின்ற குணங்களையுடையாய்” என்று அம்பு பாடரைப்போலே உழைப்பார், (திருவாய் 10.8.7) “மேலைத் தொண்டுகளித்து” என்கிறபடியே தாஸ்யரஸம் தலைமண்டையிட்டு 1. “நம இத்யேவ வாதிந:” 2. ”நமஶ்ஶப்தம் ப்ரயுஞ்ஜதே” என்கிறபடியே (திருவாய் 10.8.7) அந்தி தொழுஞ் சொல்லைச் சொல்லுவாராய்க்கொண்டு, இப்படி ப்ரளய ஜலதியிலே அலைவாரைப்போலே ஆநந்தஸாகரத்திலே அலைந்து, நித்யமுக்தர் சொல்லுகிற (திருவாய் 10.6.11) செவிக்கினிய செஞ்சொற்க ளாலே, (பெரிய திரு 5.8.4) வெஞ்சொலாளர்களுடைய கடுஞ்சொல்லைக் கேட்ட இழவுதீரச் செவிக்கிரையிட்டுக் கொண்டுபோய், திவ்யாஸ்தா நத்தைக் கிட்டி, அப்பேரோலக்கத்தின் நடுவே, தந்தாம் திருமுடி களிலே திவ்யாயுதங்களை தரித்துக்கொண்டு கூப்பின கைகளும் தாங்களுமாயிருக்கிற அஸ்த்ர ஶஸ்த்ராக்யரான திவ்யபுருஷர்களும், தம்முடைய ஸங்கல்பத்தாலே ஸகலஜகத்ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணக்கடவ ஸேநைமுதலியார் தொடக்கமான திவ்யபுருஷர்களும் வரிசையடைவே ஸேவித்திருக்க-
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.