அர்ச்சிராதி
சதுர்த்த ப்ரகரணம்
(திருவாய் 4.5.1) ஏழுலகும் தனிக்கோல் செல்ல, (திருவாய் 5.5.10) குழுமித்தேவர் குழாங்கள் கைதொழ எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனை (திருவாய் 5.9.6) “காண்பதெஞ்ஞான்று கொலோ” (பெரிய திரு 4.9.7) “காட்டிரானீர்” என்கிற இழவுதீர, 1. “த்ருஷ்ட ஏவ ஹி நஶ்ஶோகம்” என்று இவன் மநோரதி,த்துக்கொண்டு, சென்றபடியே கண்ணாரக்கண்டு, 2. “ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:” என்று ஹர்ஷபரவஶனாய் விழுந்து எழுந்திருந்து, பெரிய ப்ரீதியோடேசென்று, பாதபீடத்திலே அடியிட்டு திவ்யஸிம்ஹாஸநத் திலேயேற, அவனும் இவனைக்கண்டு , 3. “அவாக்ய நாதர:” என்கிற ஆகாரங்குலைந்து, சந்த்ரனைக்கண்ட கடல்போலே விக்ருதனாய், தன்னைப்பிரிந்து நெடுநாள் தரைக்கிடைகிடந்த இழவுதீர, 4.”அங்கே பரதமாரோப்ய” என்கிறபடியே மடியிலேவைத்து, ஸ்ரீபரதாழ்வானை யும் அக்ரூரனையும் அணைத்தாற்போலே அணைத்து, பக்த்யதி ஶயத்தாலே 5. “கோSஸி” என்கிறபடியே “நீ யார்’ என்று கேட்க; 5.”அஹம் ப்,ரஹ்மாஸ்மி” என்று “நான் ராஜகுமாரன்” என்ன, ”நீ இத்தனை காலமும் செய்ததென்?” என்று கேட்க, (பெரிய திரு 6.3.4) “சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்பவெள்ளத்தாழ்ந் தேன்” என்ன, ‘நீ அத்தால் பெற்ற படலம் ஏது’ என்று கேட்க, (பெரிய திரு 6.3.4) “அருநரகத்தழுந்தும் பயன்படைத்தேன்” என்ன, ‘பின்பு நீ செய்ததென்?’ என்ன, (பெரிய திரு 6.3.4) “போந்தேன்” என்ன, ‘நீ போந்த விரகென்?’ என்று கேட்க, (பெரிய திரு 6.3.4) “புண்ணியனே” என்ன, ‘நீ அதினின்றும் போந்து செய்ததென்?’ என்ன, (பெரிய திரு 6.3.4) “உன்னை யெய்தி”னேன் என்ன, ‘நம்மைக் கிட்டினவிடத்தில் நீ பெற்ற ப்ரயோஜநமென்?’ என்ன, (பெரிய திரு 6.3.4) “என் தீவினைகள் தீர்ந்தேன்” என்ன, செய்தது வாய்த்துச் செல்வனாய் (திருவாய் 2.8.4) நலமந்தமில்லதோர் நாட்டிலே வர்த்திக்கப்பெறாதே, (திருவாய் 9.1.6) இல்லை கண்டீரின்பம்” என்கிற கொடுவுலகத்திலே நெடுங்காலம் அலமர்ந்தாயே, (திருவாய் 2.8.4) பலமுந்து சீரிற்படியாதே, (திருவாய் 3.2.2) பன்மா மாயப் பல்பிறவியிலே படிந்து நோவுபட்டாயே, (திருவாய் 2.6.8) ஈறிலின்பத் திருவெள்ளத்தையிழந்து, (பெரிய திரு 6.3.4) தடந்தோள் புணரின்ப வெள்ளத்திலே ஆழ்ந்து, நித்யது:க்கி,த னானாயே, (பெரிய திரு 1.6.7) அதனைப் பிழையெனக் கருதி நம்மைப் பற்றி நம்மைக் காணவேணுமென்று ஆசைப்பட்டபோதே வந்து முகங்காட்டப் பெற்றிலோமே, (திருவாய் 5.8.4) “ஆகாசத்தைநோக்கி அழுவன் தொழுவன்” என்கிறபடியே நாமிருந்த தேஶத்தை நோக்கி அழுவது தொழுவதாய், (திருவாய் 6.9.9) “கூவிக்கொள்ளும் கால மின்னங் குறுகாதோ” (திருவாய் 3.2.1) “எந்தாள் யானுன்னை இனிவந்து கூடுவன்” என்பதாய்க் கொண்டு நோவுபடும்படி தாழ்த்தோமே, (நாச்சி திரு 5.4) “துன்பக்கடல்புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன்” என்று க்லேஶித்த நீ அதினின்றுங்கரையேறி, k(திருவாய் 3.2.2) “நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ்ஞான்று கொலோ” என்கிற இழவுதீர நம்மைக் கிட்டப்பெற்றயே, (திருவாய் 2.4.7) “உள்ளு ளாவி உலர்ந்துலர்ந்து” என்கிற தாபமாறக் கூடியிருந்து குளிரப் பெற்றாயே, நம்முடைய ஸ்ருஷ்ட்யாதி, வ்யாபாரங்கள் ஸபலமா யிற்றதே. 1. ” ப்ரணஷ்டஸ்ய யதா லாப: ” என்கிறபடியே நமக்குக் கிடையாதது கிடைத்ததே, உன்னுடைய வரவாலே இத்தேஶம் ஸநாதமாயிற்றதே, இக்கோஷ்டிக்கு நாயகரத்ம்போலேயிருக்க, நீ கிட்டி ஓௗஜ்ஜ்வல்யத்தையுண்டாக்கினாயே, (திருச்சந்த 61) “நடந்த கால்கள் நொந்தவோ” என்று 2. “மநோஹரைஶ் சாடுபிரார்த்ரயந் முதா” என்கிறபடியே ஏத்தாளிகளைப்போலே ஏத்தி, ஓகமேகஸ்வநத் தாலே மயில்போலே ஆலிக்கும்படி பண்ணி, (பெரிய திரு 9.7.7) நோயெல்லாம் பெய்த்தோராக்கையிலே அகப்பட்டு, நெடுங்காலம் நோவுபட்டு, (பெரியாழ் திரு 5.3.6) மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணனைக்கிட்டி, (திருவாய் 2.6.4) உள்ள கோய்களெல்லாம் துரந்து, (திருவாய் 8.9.5) திருவருள் மூழ்கின இவனை, நோய்விட்டுக் குளித்த புத்ரனைப் பிதா பார்த்துக்கொண்டிருக்குமா போலேயும் (திருவாய் 8.5) மாயக்கூத்தனுக்குப் பிழைத்த ஆழ்வாரைப் பார்த்துக்கொண்டிருக் குமாபோலேயும், 3. “லோசநாப்யாம் பிபந்நிவ” என்று ஸ்ரீவிபீஷணப் பெருமாளைப் பெருமாள் பார்த்துக்கொண்டிருக்குமாபோலேயும், (திருமாலை 36) “என்னை நோக்காதொழிவதே” என்கிற இழவுதீரத் தாமரைக் கண்களால் நோக்கி நெடுநாள்பட்ட விடாயெல்லாம் மாற, (திருவிருத்தம் 42) “ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்காற்கமலத் தடம்போலேயிருக்கிற (திருவிருத்தம் 45) பெருங்கண்மலர்ப் புண்ட ரீகங்களை இவன் பக்கலிலே ஒருமடைப்பட வைத்து, (திருவாய் 2.6.2) எங்கும் பக்க நோக்கறியாதே. (பெரிய திரு 1.9) “தாயே தந்தை”யில் திருமங்கையாழ்வார் மநோரதித்தாற்போலேயும், (திருவாய் 5.8) “ஆராவமுதி”லும் (திருவாய் 7.10) “இன்பம் பயக்க”விலும் நம்மாழ்வார் மநோரதித்தாற் போலேயும் இவன் மநோரதித்த மநோரதங்களை யெல்லாம் ஸபலமாக்கி, (திருவாய் 6.9.5) ‘உருக்காட்டாதே ஒளிப்பாயோ” என்கிற இழவுதீர, 1. “விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்கிறபடியே (பெரிய திரு 4.9.4) காசினொளியில் திகழும் வண்ணம்” காட்டி, (திருவாய் 1.10.8) “நல்கி யென்னைவிடான்” என்கிறபடியே விடாதே, 2. “ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து” என்கிறபடியே விட்டு விட்டணைத்து, 3.கிந்து ஸ்யாச் சித்தமோஹோSயம்” (திருவாய் 8.7.3) ”மருள்தானீதோ” என்கிறபடியே நிரதிஶய வ்யாமோஹத்தைப் பண்ணி, பெரியபிராட்டியார் திருக்கையிலே காட்டிக்கொடுக்க, கம்ஸ வதாநந்தரம் க்ருஷ்ணனைக்கண்ட் தேவகியாரைப்போலே விம்மிப் பாய்கிற ஸ்தந்யத்தாலே உடம்பெங்கும் நனையும்படியணைத்து, உபயவிபூத்யைஶ்வர்யத்தையுங் கொடுக்க, (பெரிய திரு 11.6.10) பூவளருந்திருமகளாலருள்பெற்று, மடியில் நின்று மிழிந்து போந்து, (பெருமாள் திரு 6.7) ”செய்யவுடையும் திருமுகமும் செங்கனிவாயும் குழலுங்கண்டு” என்கிறபடியே முன்பேபோந்து முன்புத்தையழகை அநுபவித்து, கிண்ணகத்தை எதிர்ச்செறிக்கவொண்ணாதாப்போலே நேர்நின்று அநுபவிக்கவொண்ணாமையாலே அட்டத்திலேபோந்து அங்குத்தையழகை அநுபவித்து, அது விட்டுப் பூட்டாவிடில் தரிக்க வொண்ணாமையாலே பின்னே போந்து, பின்புத்தையழகை அநுப வித்து, 4. ”பூர்வாங்காததி காபராங்க கலஹம்” என்று அதில் முன்பு தானே நன்றாயிருக்கையாலே திரியவும் முன்னேபோந்து, ஸௌந்தர்ய தரங்க, தாடக தரளசித்தவ்ருத்தியாய், உத்தம் ஸிதாஞ்ஜலியாய், வளையவளைய வந்து, (பெரிய திரு 2.8.7) ‘முழுசி வண்டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க்கண்ணியும் மேனியஞ் சாந்து – இழுசியகோலமிருந்தவாறும் எங்ஙனஞ்சொல்லுகேன் ஓவிநல்லார் – எழுதிய தாமரையன்னகண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாமிவரார்கொலென்ன” (பெரிய திரு 9.2.1) ‘அச்சோ ஒருவர் அழகியவா” என்று விஸ்மிதஹ்ருதயனாய், (திருவாய் 2.5) ‘அந்தாமத்தன்பு” (திருவாய் 3.1) “முடிச்சோதி” தொடக்கமான வற்றில் நம்மாழ்வாரநுபவித்தாற்போலே தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அநுபவித்து 1.”யத்ர நாந்யத் பஶ்யதி” என்கிற படியே புறம்பொன்றில் நெஞ்சு செல்லாதே 2. “ஹாவு ஹாவு ஹாவு. அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்” (பெரிய திரு 4.3.6) ‘அல்லிமாமல ராள் தன்னொடு மடியேன் கண்டுகொண்டல்லல் தீர்ந்தேனே (திருவாய் 4.9.10) “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே’, (திருவாய் 5.8.9) “இசை வித்தென்னை உன் தாளிணைக்கீழிருத்துமம்மானே”, (திருவாய் 4.7.7) “பிறந்துஞ்செத்தும் நின்றிடரும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்று ப்ரீதிக்குப் போக்குவிட்டு வாயாரப் புகழ, ஸ்ரீவைகுண்டநாதனும் (திருவிருத்தம் 63) வானாடமருங்குளிர் விழிகளாலே கடாக்ஷித்து, ஸஸ்மிதமாக ஸ்நிக்தகம்பீர மதுரமான பேச்சாலே (திருவாய் 8.5.7) முகப்பேகூவி, (திருவாய் 2.9.1) ‘நின் செம்மா பாதபற்புத்தலைசேர்த்து” என்று இவன் அபேக்ஷித்தபடியே (திருவாய் 9.2.10) மலர்மகள் பிடிக்கும் (திருவாய் 4.3.6) கமலமன்ன குரைகழல்களாலே உத்தமாங் கத்தை அலங்கரித்து (திருவாய் 7.5.10). தன்தாளின் கீழ்ச்சேர்த்து, நித்ய கைங்கர்யத்திலே நியோகிக்க, (திருவாய் 10.4.9) . தொண்டே செய்தென் றும் தொழுது வழி யொழுகப்பெற்று, (திருவாய் 3.3.1) ”வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்கிற அபிநிவேஶாதிஶயத்தாலே நாநாதேஹங்களைப் பரிக்ரஹித்து, அஶேஷஶேஷ வ்ருத்திகளிலும் அந்வயித்து, அஸ்தாநரக்ஷா வ்யஸநிகளான நித்யஸூரிகளோடே கூடச் (திருப்பல்லாண்டு 12) சூழ்ந்திருந்து மங்களாஶாஸநம்பண்ணி, (திருவாய் 8.10.5) “சுழிபட்டோடுஞ் சுடர்ச்சோதி வெள்ளத்தின்புற் றிருந்து’ என்கிறபடியே அம்ருதஸாகராந்தர் நிமக்நஸர்வாவயவ னாய்க்கொண்டு யாவத்காலமிருக்கும்.
அர்ச்சிராதி முற்றிற்று.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.