ஸ்ரீ:
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அருளிச்செய்த
அருளிச்செயல் ரஹஸ்யம்
சரமஶ்லோக ப்ரகரணம்
அவதாரிகை
மூலமந்த்ர சரமஶ்லோக பௌர்வாபர்யம்
திருமந்த்ரத்தை நரனுக்கு உபதேஶித்து ( நாச் திரு 2-1 ) நாமமாயிரமேத்த நின்ற நாராயணன் ( சிறிய திருமடல் 74 ) பாரோர் புகழும் வதரியில் நின்றும் ( சிறிய திருமடல் 74 ) வடமதுரையேற வந்து க்ருஷ்ணனான நிலையிலே நரனுடைய அம்ஶமாய். ( பெரியாழ் திரு 1-9-4 ) நம்பிசரணென்று ஶிஷ்யனான அர்ஜுநனைக் குறித்துத் திருமந்த்ரத்தில் ஸ்வரூபத்துக்குச்சேர அறுதியிட்ட புருஷார்த் தத்துக்குத் தகுதியான ஸாதநத்தை சரம ஶ்லோக முகத்தாலே வெளியிட்டருளினான்.
பரமப்ராப்ய ப்ராபக நிர்ணயம்
ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தை உணராதே, உடம்பையே தானாக நினைத்து அத்தைப்பற்றி வருகிற பந்துக்களுக்கு ஸ்நேஹித்து அவர்கள் ஸ்நேஹம் பொறுக்கமாட்டாதே தன்னுடைய தர்மத்தைப் பாபமென்று கலங்கின அர்ஜுநனை ( பெரியாழ் திரு 2-1-2) செங்கணலவலையானக்ருஷ்ணன் ( திருவாய் 1-1-9 ) அமலங்களாக
விழிக்கிற நோக்காலும் ( திருவாய் 9-9-9 ) தூமொழிகளாலும் (பெரியாழ் திரு 4-8-3 ) உருமகத்தே வீழாமே குருமுகமாய் ( திருவாய் 2-3-2 ) அறியாதனவறிவித்து, உடம்பையும் ஆத்மாவையும் பற்றி வருகிற
( திருவாய் 4-9-10 ) ‘ஐங்கருவி கண்ட வின்பம்–தெரிவரியவள வில்லாச் சிற்றின்பம்’ என்கிற ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய பொல்லாங் கையும், ( திருவாய் 7-5-11 ) இன்பக்கதி செய்து ( பெரு திரு 7-8 ) தொல்லை
யின்பத்திறுதி காட்டுகிற ( ) தன்னை மேவுகையாகிற மோக்ஷத்தினுடைய நன்மையையும் அறிவித்துப் பெறுகைக்கு வழியாகக் கர்மஜ்ஞாந பக்திகளை அருளிச்செய்யக் கேட்ட அர்ஜுநன் ( பெரிய திரு 3-2-1 ) ‘ஊன்வாட’ ( பெரிய திரு 3-2-2 ) ‘நீடுகனியுண்டு’
( மூன்றாம் திருவந் 76 ) பொருப்பிடையே நின்று ( திருக்குறுந் 18 ) இளைப்பினை இயக்கம் நீக்கி விளக்கினை விதியிற்கண்டு ( திருவாய் 2-3-8 ) குறிக்கொள் ஞானங்களால் ( திருச்சந்த 75 ) ஊழியூழி தோறெலாம் ( திருச்சந்த 63 ) யோகநீதி நண்ணி ( திருச்சந்த 76 ) என்பிலெள்கி நெஞ்சுருகியுள் கனிந்து ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே செய்து முடிக்கவேண்டின அந்த உபாயங்களினுடைய அருமையையும். (பெரிய திரு 7-7-9 ) மெய்குடியேறிக்குமைத்து.
( திருவாய் 7-1-10 ) வலித்தெற்றுகிற இந்த்ரியங்களினுடைய கொடுமை யையும் ( பெரிய திரு 1-1-8 ) ஐம்புலன் கருதும் கருத்துளே மூட்டப்பட்டு ( பெரிய திரு 1-1-4 ) நின்றவா நில்லா நெஞ்சின் திண்மையையும்.
( திருவாய் 2-3-9 ) செடியார். ( திருவாய் 3-2-9 ) கொடுவினைத் தூற்றுள் நின்று வழிதிகைத்தலமருகின்ற தன்னால் ( திருவாய் 3-2:4 ) அறுக்க லறாத பழவினையின் கனத்தையும், ( திருவாய் 2-5-3 ) தன்னுள் கலவாததொன்றுமில்லையென்னும்படி. ( திருவாய் 7-6-2 ) முற்றுமாய் நின்று ஸர்வபூதங்களையும் மரப்பாவையைப்போலே ஆட்டுகின்றவன் ( திருச்சந்த 2 ) வேறு வேறு ஞானமாய். உபாயாந்தரங்களுக்குள் ளீடாய் நிற்கிற நிலையையும். ( திருவாய் 7-6-3 ) ‘என்னாருயிர் நீ’ என்னும்படி தன் கார்யத்தில் தானிழியவொண்ணாத படி உபதேசித்த ஸ்வரூப பாரதந்தர்யத்தையும் அநுஸந்தித்து ‘நாம் இவ்வுபாயங் களைக்கொண்டு நம் விரோதிகளைக் கழித்து அவனைக் கிட்டுகை கூடாது; உனக்கு ருசித்ததொன்றைச்செய் என்றபோதே தமயந்திக்கு அல்வழிகாட்டின நளனைப்போலே இவனும் நம்மை ( பெரிய திருவந் 6 ) நெறிகாட்டி நீக்கினானத்தனை ‘ என்று வெறுத்து ( திருவாய் 7-6-5 ) ‘என்னுடைக் கோவலனே – என்னுடை ஆருயிராரெங்ஙனேகொல் வந்தெய்துவர்’, ( திருவாய் 10-10-5 ) ‘என்னை நீ புறம் போக்கலுற்றால்’, ( திருவாய் 5-8-3 ) ‘என் நான் செய்கேன்’ என்று கண்ணும் கண்ணீருமாய் கையில் வில்லோடே சோர்ந்துவிழ ( திருவாய் 9-1-10 ) மண்ணின்பாரம் நீக்குதற்குத் தான் ( பெரிய திரு 8-8-9 ) இருள் நாள் பிறந்த கார்யம் இவனைக்கொண்டு தலைக்கட்டவும், பரிபவ காலத்தில் தூரவாஸி யான தன்னை நினைத்த ( பெரியாழ் திரு 4-9-6 ) மைத்துனன்மார் காதலியை மயிர்முடிக்கும்படி, ( இராமா 51 ) பாரதப்போர் முடித்து த்ரௌபதியினுடைய ( பெரிய திரு 2-3-6 ) அலக்கண் நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப ( பெரிய திரு 1-8-4 ) வென்ற பரஞ்சுட ராய்த் தன் ஸ்வரூபம் பெறவுமிருக்கிற க்ருஷ்ணன் ‘இவனுக்கிவ் வளவும் பிறக்கப் பெற்றோமே’ என்று உகந்து அர்ஜுநனைப் பார்த்து. ‘கீழ்ச் சொன்ன உபாயங்களை விட்டு என்னையே உபாயமாகப் பற்று: நானுன்னை விரோதிகளில் நின்றும் விடுவிக்கிறேன் ; நீ சோகியாதே கொள்’ என்று ஸ்வரூபாநுரூபமான உபாயத்தை வெளியிடுகிறான்.
சரமோபாயம்
இதொழிந்தவுபாயங்களிலே பரந்தது இப்பாகம் பிறந்தாலல்லது இவ்வுபாயம் வெளியிடலாகாமையாலே.(திருச்சந்த 68) முத்திறத்து வாணியத்திரண்டிலொன்றி வழிகெட நடக்கிறவர்களை யும் வாத்ஸல்யத்தின் மிகுதியாலே. பித்தனைத்தொடரும் மாதா பிதாக்களைப்போலே மீட்கவிடம் பார்க்கிற ஶாஸ்த்ரம் ( பெரிய திரு
1-6-5 ) கோடிய மனத்தால் சினத்தொழில் புரிகிற நாஸ்திகனுக்கும்
ஶத்ருவையழிக்கைக்கு அபிசாரமாகிற வழியைக் காட்டித் தன்னை விஶ்வஸிப்பித்து, த்ருஷ்டபோகத்துக்கு வழிகளையிட்டுத் தன்னோ டிணக்கி ஸ்வர்காதி பலங்களுக்கு வழிகாட்டி தேஹாத்மாபிமாநத் தைக் குலைத்து, ஆத்மபோகத்துக்கு வழிகாட்டி. அந்யஶேஷத்வத்தை யறுத்து. பரமாத்மபோகத்துக்கு வழிகாட்டி, ஸ்வாதந்த்ர்யத்தைப் போக்கி. ஸ்வருப பாரதந்த்ர்யத்தையுணர்த்தி, ஸித்தோபாயத்திலே மூட்டுமாப்போலே. ( திருவாய் 5-7-7 ) முந்தைத் தாய்தந்தையான இவனும். ( திருவாய் 1-3-5 ) நெறியுள்ளி. ( திருவாய் 4-5-5 ) எல்லாப் பொருளும் விரிக்கிறானாகையாலே. பூசலுக்கேறிக் கொலைக்கஞ்சி விற்பொகட்டவனுக்குத் தன்னைப்பெறுகைக்குத் தானே உபாய மென்கை சேராதென்று புறம்பே பரந்து மோக்ஷாதிகாரியாக்கி உபா யாந்தரங்களைக் கேட்டுக் கலங்கினவளவிலே இவனையுளனாக்கு கைக்காகப் பரமரஹஸ்யத்தை வெளியிட்டருளினான்.
சரமஶ்லோகார்த்தம் பரமரஹஸ்யம்
ஐந்தாம் வேதத்துக்கு உபநிஷத்தான ஸ்ரீகீதையிலே
பரக்கச்சொல்லி குஹ்யதமமென்று தலைக்கட்டின பக்தியோகத்துக்கு மேலாக ஒரு வார்த்தையாகச் சொல்லி. ஒருத்தியுடைய ஶரணாகதி நம்மை நெஞ்சழித்ததென்கிற துணுக்கத்தோடே இதொருவருக்கும் சொல்லாதே கொள்ளென்று மறைத்தபோதே பரமகுஹ்யதமமென்று தோன்றும்.
சரமஶ்லோகார்த்த வைபவஜ்ஞர்
இதினேற்றமறிவார் ( திருவாய் 10-4-9 ) ‘பரமன் பணித்த பணிவகை’ ( முதல் திருவந் 41 ) ‘திறனுரை’, ( நாச் திரு 11-10 ) ‘பெருவார்த்தை’ ( நான்முகன் திருவந் 50 ) ‘கிடக்குமுள்ளத்தெனக்கு’ என்றிருக்கும் ( திருவாய் 7-5-10 ) வார்த்தையறிபவரிறே.
சரமஶ்லோகார்த்தகௌரவம்
இதுக்கு அதிகாரிகள் கிடையாமையாலே தேர்த்தட்டி னையும் சேரபாண்டியனையும் சீர்தூக்கிச் செய்யவடுப்பதென்னென்று பலகால் நடந்து துவளப்பண்ணி. சூழரவுகொண்டு மாஸோபவாஸம் கொண்டு மூன்று தத்துக்குப் பிழைத்தால் சொல்லுகிறோமென்றும். இவனுக்குச் சொல்ல வெளிதுகாணென்றும். நம் முதலிகள் பேணிக் கொண்டு போருவர்கள்.
சரமஶ்லோகாதிகாரிகள்
இதில் சொல்லுகிற அர்த்தம் ( திருவாய் 1-5-3 ) எவ்வுயிர்க்குமாயிருந்ததேயாகிலும் ( திருவெழுகூற் 9 ) முக்குணத் திரண்டவையகற்றி. பரமஸாத்விகனாய், ( மூன்றாம் திருவந் 14 ) மாற் பால் மனஞ்சுழிப்ப ஸம்ஸாரத்தில் அருசியையுடையனாய் ( நாச் திரு 11-10 ) திருவரங்கர் தாம் பணித்ததென்றால் ( பெரிய திரு 11-8-8 ) ‘துணியேனினி’ என்னும்படி வ்யவஸாயமுடையவனாய் நாஸ்திக னும் ஆஸ்திகநாஸ்திகனுமன்றிக்கே ( பெரிய திரு 11-8-8 ) ஒள்வாளுருவியெறியும்படி ஆஸ்திகாக்ரேஸரனானவன் இதுக் கதிகாரியாம்படியாயிருக்கும்.
சரமஶ்லோகவாக்யார்த்தம்
கீழே உபாயங்களை வெளியிட்டு அவற்றுக்குள் ளீடாய் நின்று கார்யம் செய்கிற தன்னை உபாயமாகச் சொல்லி மேலோருபாயம் சொல்லாமையாலே சரமஸ்லோகமென்று பேரான விது, இவ்வுபாயத்துக்கிவன் செய்யவேண்டுமவற்றையும், இவ்வுபா யம் இவனுக்குச் செய்யுமவற்றையும் சொல்லுகிறது.
ஶரண்ய ஶரணாகத க்ருத்யம்
விடுவித்துப் பற்றுவித்து விலக்கடியறுக்கை உபாய க்ருத்யம். விட்டுப்பற்றித் தேறியிருக்கை அதிகாரிக்ருத்யம்.
அவதாரிகை முற்றிற்று.
பதவிபாகம்
பதினொரு பதமான இதில் முதல்பதம் விடப்படுகிற உபாயங்களைச் சொல்லுகிறது.
ஸர்வ தர்ம ஶப்தார்த்தம்
(ஸர்வதர்மாந்) – எல்லா தர்மங்களையும். தர்ம மென்கிறது – ஆசைப்பட்டவை கைபுகுருகைக்கு நல்வழியாக ஶாஸ்த் ரங்கள் சொல்லுமத்தை. இவ்விடத்தில் தர்மமென்கிறது — மோக்ஷ மாகிற பெரியபேறு பெறுகைக்கு ஶாஸ்த்ரங்களிலும் பதினெட்டோத் திலும் சொல்லப்பட்ட கர்மஜ்ஞாநங்களைப் பரிகரமாகவுடைய பக்தி யாகிற ஸாதநத்தை. ‘தர்மாந்’ என்கிற பஹுவசனம் – ( திருவிருத் 44) ‘அறமுயல் ஞானச்சமயிகள்’ பேசும் வித்யாபேதங்கள். ( பெரியாழ் திரு 1-1-3 ) ‘ஆணொப்பாரிவன்னேரில்லை’ என்கிற புருஷோத்தம வித்யை. ( திருவாய் 1-3-11 ) பிறவியஞ்சிறையறுக்கும் ( திருவாய் 1-3-2 ) நிலை வரம்பில்லாத அவதார ரஹஸ்யஜ்ஞாநம், ( திருவாய் 7-5-1 ) ‘நற்பால யோத்தி’ தொடக்கமான க்ஷேத்ரவாஸம், ( திருவாய் 10-5-5 ) ‘பாடீர் அவன் நாமம்’ என்கிற ஸங்கீர்த்தநம். ( திருவாய் 10-2-7 ) ‘கடைத்தலை சீய்க்கை’, ( திருவாய் 7-10-2 ) மாகந்த நீர்கொண்டு தூவிவலம் செய்கை. ( திருவாய் 5-2-9 ) பூவிற்புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு ( திருவாய் 10-2-4 ) பூசனை செய்கை தொடக்கமாக ஸாதநபுத்தியோடே செய்யுமவற்றைக் காட்டுகிறது. ( திருவாய் 4-8-6 ) ‘நெறியெல்லாமெடுத் துரைத்த’ என்கையாலே அவையும் தனித்தனியே ஸாதநமாயிருக்கு மிறே. ‘ஸர்வ’ ஶப்தம் – யஜ்ஞம், தாநம் தபஸ், தீர்த்தஸேவை முதலானவை. கர்மயோக்யதையுண்டாம்படி ஶுத்தியை விளைக்கும் ( முதல் திருவந் 33 ) ஓதியுருவெண்ணும் அந்தி. ( ) ஐந்துவேள்வி தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது. தர்மத்திலே சொருகாமல் இவற்றை ஸர்வஶப்தத்துக்குப் பொருளாகத்தனித்துச் சொல்லுகிறது – ப்ரபத்திக்கு யோக்யதை தேடவேண்டா. இவனையும் இவனுடைய ஸ்த்ரீயையும் போலே நீசர்நடுவே கேட்கவும் அநுஷ்டிக்கவுமாய்,
( திருச்சந்த 90 ) குலங்களாயவீரிரண்டில் பிறவாதாரும் இதிலே அந்வ யிக்கலாமென்று தேறுகைக்காக. முத்து விளக்கி. மூழ்கி. மூக்குப் புதைத்து. கிழக்குநோக்கிக் கும்பிட்டு. கீழ்மேலாகப் புறப்படுத்து, நாளெண்ணி. குறுவிழிக்கொண்டு. ஸாதநாந்தரங்களிலே நினைவாய்க் கிடந்ததிறே. இவையொன்றும் செய்யாதே ஶரணாகதனாய் ( பெரியாழ் திரு 5-3-7 ) இக்கரையேறினவன் உபதேஶிக்கக்கேட்டு. ஶரணாகத ரக்ஷணம் பண்ணின குலத்திலே பிறந்து. உறவையுட்படக் கொண் டாடுகிறவர்க்கு ப்ரபத்தி பழுதுபோய் அக்கரைப்படவொண்ணாதொழிந் தது. நன்மை தீமைகள் தேடவும் பொகடவும் வேண்டா. இவை விலக்கும் பற்றாசுமாயிருக்குமென்றிருக்கையே அதிகாரம்.
“பரித்யஜ்ய” பதார்த்தம்
‘பரித்யஜ்ய’ என்று இந்தவுபாயங்களை விடும்படியைச்
சொல்லுகிறது. த்யாகமாவது விடுகை. பரித்யாகமாவது பற்றற விடுகை. உபாயமல்லாதவற்றை உபாயமாக நினைத்தோமென்று சிப்பியை வெள்ளியென்றெடுத்தவன் லஜ்ஜித்துப் பொகடுமாபோலே
புகுந்துபோனமை தெரியாதபடி விடவேணும். பித்தேறினாலும் அவற்றில் நினைவு செல்லாதபடி, விட்டோமென்கிற நினைவையுங் கூட விடச்சொன்னபடி. தர்மதேவதை பாதகமென்பது. ஆழ்வார்
( திருவாய் 5-7-5 ) ‘எய்தக் கூவுதலாவதே’ என்று ( திருமாலை 7 ) புலை யறங்களோபாதியாகிற இத்தை, தர்மமென்று விடச் சொல்லுகிறது- பூசலை அதர்மமென்றும், இவற்றை தர்மமென்றும் ப்ரமித்த அர்ஜுன் நினைவாலே. நிஷித்தம் செய்கை அஶக்தியாலன்றிக்கே. ஆகாதே யென்று விடுமாபோலே உபாயாந்தரங்களை ஸ்வரூபவிருத்தமென் றிறே – தபோதநரான ரிஷிகளும், நெருப்பை நீராக்குகிற தேஜஸ்ஸை யுடைய பிராட்டியும், ஸ்வரக்ஷணத்தில் இழியாதே கர்ப்பத்திலிருப் பாரைப்போலேயிருந்தது. நாண்தழும்பு வால் தீவிளையாத விடவாயும் வல்வாயுமேறி, பரலோகங்களிலே சென்று, படைத்துணைசெய்து. அரிய தபஸ்ஸுக்களைச் செய்து, வெருட்டுவார் சபையிலே வில்லிட் டடித்து, ஊர்வசியை முறை கூறுகிறவன் கர்மஜ்ஞாநங்களிலிழிய மாட்டாமையன்றே கலங்குகிறது; ஸ்வரூப பாரதந்த்ர்யத்தைக் கேட்ட
படியாலேயிறே, தன்னை ராஜமஹிஷியென்றறிந்தவள்–உதிர்நெல் பொறுக்கவும். கொட்டை நூற்கவும், குடம் சுமக்கவும் லஜ்ஜிக்குமிறே. இவன் தான் சுமப்பேனென்ற(ன) இவனையெடுத்தினானித்தனை யிறே. இவ்வுபாயத்திலிழியும்போது உபாயாந்தரங்களை அதர்ம மென்று விடவேண்டுமென்று ஶாஸ்த்ரங்கள் பலவும் சொல்லுகை யாலும். உத்தமாஶ்ரமத்திலே புகுமவனுக்கு முன்பிலாஶ்ரம தர்மங் களை விடுகை குறையல்லாமையாலும் தர்மங்களை விடச் சொல்லுகை தப்பல்ல.
த்யாகவிதி
‘பரித்யஜ்ய’ என்கிறவிது. விட்டாலல்லது பற்ற வொண்ணாதென்னுமிடத்தைக் காட்டுகிறது. குளித்துண்பானென்றால் உண்டு குளிக்கையும் குளியாமே உண்கையும் தப்பிறே. பற்றுகைக்கு அங்கமானபோதிறே விடுகையும் நன்மையாவது. இவைதான் சுமந்தான் விழ, உறங்குவான் கைப்பண்டம் போலே ஆமவையிறே. இவற்றைப் பேற்றுக்கென்னாதே பேறென்னபோது கைங்கர்யத்திலும் ஸ்வரூபஜ்ஞாநத்திலும் ப்ராப்ய ருசியிலும் சொருகுமிறே.
“மாம்” ஶப்தரர்த்தம்
‘மாம்’ என்று பற்றப்படுமுபாயத்தைச் சொல்லுகிறது. மாம்- என்னை. ( நான் திருவந் 72 ) ‘அறமல்லனவும் சொல்லல்ல’ என்னும் கழிப்பனான தர்மங்கள் போலன்றிக்கே கைக்கொள்ளப்படும்
நல்லறத்தைக் காட்டுகிறான். வேதத்தில் இரண்டு கூற்றிலும் அறிவுடையார்க்கும் நல்லறமாகச் சொல்லுவது. ( திருப்பாவை 10 ) பறைதரும் புண்ணியனான க்ருஷ்ணனையிறே. தர்மங்களை நிலை நிறுத்தப் பிறந்தவன்தானே தர்மங்களை விடுவித்து. அவற்றின் நிலை
யிலே தன்னை நிறுத்துகையாலே நேரே தர்மம் தானென்னுமிடத்தை வெளியிட்டானாயிற்று.
அல்லாத தர்மங்கள் சேதநனாலே செய்யப்பட்டு. பலகூடி ஒன்றாய். நிலைநில்லாதே. அறிவும் மிடுக்குமற்று, இவன் கைபார்த்து, தாழ்த்துப் பலிக்கக்கடவனவாயிருக்கும். இந்த தர்மம்
( திருமாலை 6 ) ‘அறஞ்சுவராகி நின்ற’ என்று படியெடுத்தாப்போலே கோயிலாம்படி ஸித்தரூபமாய். ஒன்றாய். நிலைநின்று. ஜ்ஞாநஶக்தி களோடே கூடி, ஒன்றால் அபேக்ஷையற்றுத் தாழாமல் பலிக்குமதா யிருக்கும். ‘என்னை’ என்று ( திருவாய் 8-6-5 ) ‘வைகுந்தம் கோயில் கொண்ட’ ( பெ திருவந் 85 ) – ‘வேலைவாய்க் கண்வளரும்’ ( திருவாய் 3-2-7 ) ‘ஒழிவற நிறைந்து நின்ற’ ( திருவாய் 1-8-2 ) ‘எம்மாண்புமானான்’ என்கிற தன்னுடைய பரத்வாதிகளைக் கழித்து க்ருஷ்ணனான நிலை யைக் காட்டுகிறான். ( பெரியாழ் திரு 2-6-6 ) பாலப்பிராயத்தே இவனைக் கைக்கொண்டு, ஒக்கவிளையாடி, ஒருபடுக்கையிலே கிடந்து ஓராஸநத்திலே கால்மேல் காலேறிட்டிருந்து. ஒரு கலத்திலேயுண்டு காட்டுக்குத் துணையாகக் கார்யவிசாரங்களைப்பண்ணி, ஆபத்துக் களிலேயுதவி. நன்மைகளைச் சிந்தித்து ( பெரிய திரு 11-5-7 ) மண்ணகலம் கூறிடுவான் ஓலை கட்டித் தூதுசென்று ( பெரியாழ் திரு 2-6-5 ) பாரொன்றுவேண்டிப்பெறாதவுரோடத்தால் பாரதம் கைசெய்து
( திருவாய் 7-5-9 ) தேசமறிய ஓர் சாரதியாய் அவர்களையே யெண்ணும்படியான இவனுடைய குற்றங்களைக் கணக்கறுத்து நலமான வாத்ஸல்யத்துக்கிரையாக்கி. சீரிய அர்த்தங்களை வெளியிட்டு ( நான் திருவந் 16 ) ‘தேவர் தலைமன்னர் தாமே’ என்னும் படியான ஸ்வாமித்வத்தைப் பின் விஶ்வரூபமுகத்தாலே காட்டி
( பெரிய திரு 2-4-4 ) ‘பாங்காக முனைவரொடன்பளவி’ என்னும்படி ஸெளஶீல்யம் தோற்றும்படி புரையறக் கலந்து. ( பெரியாழ் திரு 4- -8 ) ‘பக்கமே கண்டாருளர்’ என்னும்படி ஸுலபனாய் ( திருவாய் 9-9-7 ) காரொக்கும் மேனியைக் கண்ணுக்கு இலக்காக்கிக்கொண்டு போருகிறவன். ஸேநாதூளியாலே புழுதிபடைத்த ( பெரியாழ் திரு 2-1-7 ) கொத்தார் கருங்குழலும். குருவேர்ப்பரும்பின ( திருவாய் 7-7-8 ) கோளிழை வாண் முகமும். ( பெரியாழ் திரு 1-2-10 ) குருமாமணிப்பூண் குலாவித்திகழும் திரு ( நாச் திரு 13-3 ) மார்வணிந்த வனமாலையும், இடுக்கின ( பெரியாழ் திரு 2-1-1 ) மெச்சூது சங்கமும். ( திருவாய் 10-3-5 ) அணிமிகு தாமரைக் கையிலே கோத்த சிறுவாய்க்கயிறும். முடைகோலும், அர்த்தப்ரகாஶகமான ஜ்ஞாநமுத்ரையும். ( பெரியாழ் திரு 3-6-10 ) கட்டி நன்குடுத்த பீதகவாடையும், ( மூன் திருவந் 90 ) சிலம்பும் செறிகழலும் ( பெரியாழ் திரு 1-2-3 ) வெள்ளித்தளையும்
( பெரியாழ் திரு 1-2-20 ) சதங்கையும் கலந்தார்ப்பத் தேருக்குக் கீழே நாற்றின ( திருவாய் 3-6-10) கனைகழலுமாய் நிற்கிற நிலையை ‘மாம்’ என்று காட்டுகிறான்.
”ஏக” ஶப்தரர்த்தம்
புறப்பகையறுத்துக் காட்டின உபாயத்துக்கு ‘ஏகம்’
என்று உட்பகையறுக்கிறது. இந்த உபாயத்தைச் சொல்லுமிடங்களிலே ( பெரிய திரு 4-6-1 ) ‘களை கண் நீயே’ ( திருவாய் 5-10-11 ) ‘சரணே சரண்’ என்பதொரு நிர்ப்பந்தமுண்டாகையாலே என்னையேயென்று. ‘வ்ரஜ‘ என்று சொல்லப்படுகிற ஸ்வீகாரத்தில் உ.பாயபுத்தியைத் துடைத்து உபாயத்தை ஓடவைக்கிறது. ( திருவாய் 9-3-2 ) ‘அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்’ ( மூன்றாம் திரு 51 ) ‘அவனேயருவரையாலாநிரைகள் காத்தான் என்னும்படி ஒன்றிலும் ஒரு ஸஹாயம் பொறாதே. வேறொன்றைக் காணில் சணற்கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்த்ரம்போலே தன்னைக்கொண்டு நழுவும்படியிறே உபாயத்தின் சுணையுடைமை.
( திருவாய் 8-8-3 ) ‘அதுவுமவனதின்னருளே’ என்று இத்தலையில் நினைவுக்கும் அடி அவனாகையாலே ( பெரியாழ் திரு 5-4-2 ) ‘நீ என்னைக் கைக்கொண்டபின்’ என்னும்படியான அவனுடைய ஸ்வீகாரமொழியத் தன் நினைவாலே பெறவிருக்கை ( பெரிய திரு 2-7-1) ‘என் நினைந்திருந்தாய்’ என்கிற அதிகாரிக்குக் கொற்றையிறே. விட்டோம், பற்றினோம், விடுவித்துப் பற்றுவிக்கப் பெற்றோமென்கிற நினைவுகளும் உபாயத்துக்கு விலக்கிறே.
”ஶரண” ஶப்தார்த்தம்
‘ஶரணம்’ என்று பற்றும்படியைச் சொல்லுகிறது.
ஶரணம் – உபாயமாக. இதுக்குப் பல பொருள்களுமுண்டேயாகிலும் இவ்விடத்தில்–விரோதியைக் கழித்துப் பலத்தைத் தரும் உபாயத் தைக் காட்டக்கடவது. ‘மாமேகம் ஶரணம்’ என்கையாலே உபேயமே உபாயமென்னுமிடம் தோற்றும்.
”வ்ரஜ” ஶப்தரார்த்தம்
‘வ்ரஜ ‘ என்று ஸ்வீகாரத்தைச் சொல்லுகிறது. ‘வ்ரஜ’ அடை; புத்தியாலே அத்யவஸி என்றபடி. ( பெரிய திரு 6-3-2 ) ‘என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன்’ என்கிறபடியே இவ்வுபா யத்துக்கு இவன் செய்யவேண்டுவது நெஞ்சாலே துணிகையிறே.
பூர்வார்த்தார்த்த ஸங்க்ரஹம்
ஆக. முற்கூற்றால், ( பெரிய திரு 3-2-1 ) ‘தவம் செய்யவேண்டா’ ( திருவாய் 9-1-7 ) ‘சிந்திப்பே அமையும்’ என்கிற படியே உன்தலையால் உள்ளவற்றை உதறி என்னையே தஞ்சமாக நினை. விறகு தலையரைப்போலே அலமாவாதே, மாணிக்கம் பார்ப்பாரைப்போலே உன் கண்ணைக் கூர்க்கவிட்டிரு. பதர்க்கூட்டை விட்டுப் பர்வதத்தைப் பற்றுவாரைப்போலே அசேதநக்ரியாகலாபங் களைவிட்டுத் தேர்முன் நின்று காக்கிற கருமாணிக்கமாமலையான நம்மைப்பற்று என்று அதிகாரி தொழிலைச் சொன்னானாயிற்று.
உத்தரார்த்த நிரூபணம்
இப்படி தன்னைப் பற்றினவனுக்கு உபாயமான தான் செய்யுமது சொல்லுகிறான் பிற்கூற்றால்.
அஹம் பதார்த்தம்
‘அஹம்’–நான். தனக்கு ( பெரியாழ் திரு 4-2-6 ) ஏவிற்றுச் செய்கிறது ஸ்வாதந்த்ர்யத்தின் மிகுதியாலே. எளிமையாக நினைத்து அஞ்சுகிறவன் தேறும்படி ( திருவாய் 1-3-5 ) அந்தமிலாதியம் பகவனான தன் நிலையை ‘நான்’ என்று வெளியிடுகிறான். ‘மாம்’ என்றால் பற்றுகைக்குறுப்பான வாத்ஸல்யாதிகள் நாலும் தோன்றுமா போலே, ‘அஹம்’ என்றால் கார்யம் செய்கைக்கு உறுப்பான ஜ்ஞாந மும், ஶக்தியும். க்ருபையும். ப்ராப்தியும் தோன்றும். ( திருவாய் 6-8-6 ) ‘நிறைஞானத்தொருமூர்த்தி’ ( திருவாய் 7-6-10 ) ‘ஆற்றல் மிக்கான்’
( பெரியாழ் திரு 3-7-11 ) ‘அருள்செய்த நெடியோன்’ ( திருவாய் 3-2-3 )
‘இருநிலத்தவித்தவெந்தாய்’ என்று தேர்த்தட்டின் நிலையிலே இந்நாலு குணத்தையும் ஆழ்வார் அதுஸந்தித்தருளினார். இவை யெல்லாவற்றிலும் இவ்விடத்திலே ஶக்தியிலே நோக்கு. எல்லாப்
பொருளும் கருத்தினாலுண்டாக்குவதிலும், ( திருவாய் 2-8-8 ) எப்பொருட்குமேண்பாலும் சோராமல் நிற்பதிலும் ( திருவாசிரியம் 7 ) முழுவதுமகப்படக்கரந்து (ஓர்) ஆலிலைச் சேர்வதிலும் ( திருவாய் 4-10-10 ) மறுவின் மூர்த்தியோடொத்தித்தனையும் நின்றவண்ணம் நிற்கும் நிலையிலுமரியது- ( திருவாய் 1-7-7 ) தானொட்டி, இவனுடைய
( திருவிருத்தம் 95 ) நீங்கும் விரதத்தைக் குலைத்து ( திருவாய் 2-7-4 ) மேவுந்தன்மையுமா(யனா?)க்கித் ( திருவாய் 3-5-11 ) திருத்திப் பணி கொள்ளவல்லனாகையிறே. ‘மாம்’ என்றால் ( பெரிய திரு 2-3-1 ) கோல் கையில்கொண்டு, தேவாரங்கட்டியவிழ்க்கிற அர்ஜுநன் காற்பொடி தன்முடியிலே உதிர, ரத்யங்களை விடுவித்துக்கொண்டு, சொலவுக்குச் சேராதபடி நிற்கிற ஸௌலப்யம் தோன்றும். ‘அஹம்’ என்றால் ( பெரியாழ் திரு 4-1-7 ) திருச்சக்கரமேந்துகையனாய், ( பெரிய திரு 11-5-8 ) தார்மன்னர் தங்கள் தலையிலும் ( திருவாய் 2-8-6 ) சிவன் முடியிலும் ( ஆன) தன் காலிலுதறிவிழ ‘பாபங்களை அறுக்கிறேன்’ என்றுகொண்டு செயலுக்குச் சேரும்படியான பரத்வம் தோன்றும்.
”த்வா” பதார்த்தம்
‘த்வா’ என்று உபாயத்தைப் பற்றினவனுடைய ஸ்வுரூபத்தைச் சொல்லுகிறது. த்வா- உன்னை. ( திருவாய் 6-9-8 ) ‘அறிவிலேனுக்கருளாய்’ ( பெரிய திருவந் 6 ) ‘அறியோமை யென் செய்வானெண்ணினாய் ( திருவாய் 5-8-3 ) ‘என் நான் செய்கேன்’ என்று அஜ்ஞாநத்தையும் அஶக்தியையும் அப்ராப்தியையும் அபூர்த்தியையும் முன்னிட்டுக்கொண்டு என்னையே உபாயமாகப் பற்றின உன் பற்றை
உபாயமென்றிராதே, என்னுடைய ஜ்ஞாநஶக்திகளில் அதிஶங்கை யற்றிருக்கிற உன்னை.
“ஸர்வபாபேப்ய:” ஶப்தரர்த்தம்
இவனுக்குத் தான் கழிக்கும் விரோதிகளை – ‘ஸர்வ
பாபேப்,ய:‘ என்கிறான். எல்லாப் பாபங்களில் நின்றும். பாபமாவது–இஷ்டத்தைக் குலைத்து, அநிஷ்டத்தைத் தருமது. இவ்விடத்தில் ஜ்ஞாநத்துக்கும் ருசிக்கும் உபாயத்துக்கும் விலக்குக் கழிந்தபின்பு, ப்ராப்திக்கு இடைச்சுவராய்க் கிடக்குமவற்றைப் பாபமென்கிறது. முமுக்ஷவுக்குப் ( திருவாய் 6-3-4 ) பாவம் போலே புண்ணியமும்
( திருவாய் 3-6-8 ) துயரமே தருகையாலே ( திருவாய் 1-5-10 ) ‘இருவர்
வினைகள்’ என்று புண்யத்தையும் பாபத்தையும் சொல்லுகையாலே இவையிரண்டையும் பாபங்கள் என்கிற பன்மை. ( திருவிருத் 1 ) ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்கிற அவித்யை முதலாக, ப்ரக்ருதி ஸம்பந்தம் முடிவாக நடுவுபட்டவையெல்லாவற்றையும் காட்டுகிறது. ஸர்வஶப்தம் — உபாயத்தைப் பற்றியும் உடம்போடிருக்கைக்கடியான
வற்றையும், இருக்கும் நாள் நினைவறப் புகுருமவற்றையும். கருத்தறியாதே உத்தேஶ்ய விஷயங்களில் உபசாரமென்று பண்ணு மவற்றையும், உகப்பாகச் செய்யுமவற்றில் உபாயபுத்தியையும். நாட்டுக்குச் செய்யுமவற்றைத் தனக்கென்று இருக்கையையும், வாஸநையாலே விட்டவற்றில் மூளுகையையும், அவற்றை உபாய மென்று அஞ்சாதிருக்கையையும், துணிவுகுலைந்து மீளவும் உபாயவரணம் பண்ணுகையையும் சொல்லுகிறது. இப்படி உபாயத்தி லும் அதிகாரத்திலும் குறைவற்றபின்பு விரோதிகளில் கிடப்பதொன் றில்லையிறே.
“மோக்ஷயிஷ்யாமி” ஶப்தார்த்தம்
‘மோக்ஷயிஷ்யாமி’ என்று பாபங்களை விடுவிக்கும்படியைச் சொல்லுகிறது. மோக்ஷயிஷ்யாமி – முக்த னாக்குகிறேன். ( திருவாய் 9-4-9 ) ‘பண்டை வினையாயின’ ( பெரியாழ் திரு 5-4-3 ) ‘சும்மெனாதே கைவிட்டு’ ( திருவாய் 10-4-9 ) ‘விண்டே யொழிந்த’ ( பெரிய திருவந் 54 ) ‘கண்டிலமால் ‘ என்னும்படி பாபங்கள் உன்னைக்கண்டு அஞ்சிப் போனவிடம் தெரியாதே போம்படி பண்ணுகிறேன். ( திருப்பாவை 5 ) ஆயர் குலத்தினில் தோன்றுமணி விளக்கு பாபங்களைப் போக்கும்போது ( திருப்பாவை 5 ) ‘தீயினில் தூசாகும்’ என்கிறபடியே பிணமுகம் காணவொண்ணாதிறே. ( திருவாய் 1-6-8 ) ‘வல்வினை மாள்வித்து’ ( திருவாய் 7-5-10 ) ‘தன் தாளின் கீழ்ச் சேர்த்து’ என்று விரோதி கழிகையும் தன்னைக் கிட்டுகையும் பேறாயிருக்க ஒன்றைச் சொல்லிற்று மற்றையது தன்னடையே வாராதோவென்று. மாணிக்கத்தை மாசறுத்தால் ஒளிவரச் சொல்ல வேணுமோ ? ஸம்பந்தம் தேடுகிறோமன்றே. தடைவிடுகையன்றோ தேட்டம், ( திருவாய் 10-8-5 ) வானே தருவானன்றோ ( திருவாய் 10-8-5 ) தடுமாற்றவினைகள் தவிர்க்கிறது. ( பெரிய திரு 10-2-10 ) இறந்தால் தங்குமூரண்டமன்றோ. முன்பிலுபாயத்துக்குச் சொன்ன பலமே இதற்கும் பேறானபின்பு இதற்குத் தன்னேற்றம் விரோதிகழிகை யன்றோ என்று அவ்வளவைச் சொல்லுகிறான்.
“ மாஶுச: “ ஶப்தார்த்தம்
ஶோகியாமைக்கு வேண்டுவதெல்லாம் சொல்லி, ‘ மாஶுச: ‘ என்று நீ ஶோகியாதே கொள் என்கிறான். இவன் சொன்ன உபாயங்கள் நமக்குச் சேராது. ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயம் கண்டிலோம். விரோதி கனத்திருந்ததென்றிறே ஶோகித்தாய், சேராத உபாயங்களை விடச்சொன்னோம். நம்மை உபாயமாக நினையென் றோம். நாம் விரோதிகளில் நின்றும் விடுவிக்கிறோமென்றோம். இனி ஶோகிக்கிறதென் ? ( நான்முகன் 88 ) செயல்தீரச் சிந்தித்து வாழ்கிற உனக்குச் செய்யவேண்டுவதில்லை. ( திருவாய் 3-7-7 ) சன்ம சன்மாந் தரம் காத்துக் கொண்டுபோய் ( பெ திரு 2-1-4 ) விசும்பேற வைக்கை நம் பணியாயிருந்தது. ( நான்முகன் 57 ) நல்வினையும் தீவினையும்
( பெரிய திரு 11-4-9 ) வினைபற்றறுக்கும் விதி நாமிட்ட வழக்காயிருந் தது. உன்னைப் பார்த்தோ, நம்மைப் பார்த்தோ. விரோதிகளைப் பார்த்தோ. நீ ஏதுக்கு ஶோகிக்கிறாய் ?
ப்ரபத்த்யதிகாரி
மற்ற உபாயங்களைக் கேட்டால் ஶோகிக்குமவன் ஜ்ஞாநவானுமாய். தன்னையுமறிந்து. இவ்வுபாயத்தின் நன்மையையு மறிந்து, அவற்றின் குறைகளையும் கண்டு. இவ்வுபாயத்தையும் பெற்று. அவற்றையும் விட்டு இவற்றைப் ( இத்தைப் ? ) பற்றுகைக்கு அதிகாரியுமாம்.
ஶோக நிவ்ருத்திவிதி
ஸித்தோபாயத்தைக் கேட்டால் ஶோகிக்குமவன் அறிவுகேடனுமாய் தன்னையும் அறியாதே. இவ்வுபாயத்தின்
நன்மையும் அறியாதே, பேரிழவோடே இவ்வுபாயத்துக்கு அதிகாரியு மன்றிக்கேயொழியும்.
ஆனபின்பு முன்பு ஶோகித்த நீ இனி ஶோகிக்கலா காது காண். உடைமையின் பேறு உடையவனது. பேறுடையவனுக்கு இழவு; உடையவன் இழவுக்கு வெறுக்கவும். பேற்றுக்கு வழி கேட்க வும், பெற்றால் உகக்கவும் கடவன். ஆனபின்பு நான் செய்யுமவை மற்றை நீ செய்யவோ ? என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ ? நீ உன்னை அறியாமை காண ஶோகித்தாயென்று
கண்ணில் நீரைத் துடைக்கிறான்.
சரமஶ்லோகார்த்த ஸங்க்ரஹம்
விடுமது இன்னது. அவற்றை இன்னபடி விடு; பற்றுமது இன்னது; அவற்றை இன்னபடி பற்று; விடுவித்துப் பற்றுவித்த நான் விட்டுப் பற்றினவுன்னை விலக்கடிகளில் நின்றும் விடுவிக்கிறேன். நீ கலங்காதே கொள் என்று உபாயாந்தர பரித்யாகத் தையும். ஸித்தோபாயபரிக்ரஹத்தையும், உபாயநைரபேக்ஷ்யத்தை யும். அதிகாரி பூர்த்தியையும், விரோதி நிவ்ருத்தியையும். சுமை போட்ட சோம்பரிருக்கும்படியையும் சொல்லி. ( பெரிய திரு 8-6-6 )
‘வருந்தாதிரு நீ’ ( திருவிருத் 69 ) ‘வருந்தேலுன் வளைத்திறம்’
( திருச்சந்த 115 ) ‘எத்தினாலிடர்க்கடல்கிடத்தி’ என்கிறபடியே அர்ஜுந னைத் தேற்றியருளுகிறான்.
அருளிச்செயல் ரஹஸ்யத்தில்
சரமஶ்லோக ப்ரகரணம் ஸம்பூர்ணம்.
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே ஶரணம்.