ஆழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்த
அருளிச்செயல் ரஹஸ்யம்
தனியன்கள்
த்ராவிடாம்நாயஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்ஶிதம் க்ருஷ்ணஸூநுநா ||
தலையானவெட்டெழுத்திற் பிறந்து சரணாகதித்தாய்
முலையாரமுதில் வளர்ந்தபிரான் முடும்பைக்கதிபன்
மலையார் திருப்புயத்தான் மணவாளன் மலரடிக்கே
நிலையான நெஞ்சம் பெற்றேயும்பர் வாழ்வு நிலைபெற்றதே.
திருமந்த்ர ப்ரகரணம்
அவதாரிகை
ஆத்மத்ரைவித்யம்
ஒரு கடல்துறையிலே படுகிற முத்துமாணிக்கங்களிலே சில ஒளியை யுடையவாய். சில கொத்தைபற்றி அவற்றிலே சிலவற்றைக் கடைந்து சேர்த்தவாறே நல்லவற்றோடே ஒருகோவையாமாபோலே ( பெரிய திரு 7-10-1 ) பெரும்புறக் கடலான நாராயணனுடைய ஸங்கல்பத்தாலே ஸத்தையைப் பெறுகிற ஆத்மாக்களிலே சிலர் ( இரண் திருவ 3 ) ‘துலங்கொளிசேர் தோற்றத்து நல்லமரர்’ என்னும்படி நித்யராய். சிலர் ( திருவிருத்தம் 100 ) வன்சேற்றள்ளலிலே அழுந்தியழுக்கேறி ( திருவிருத்தம் 95 ) ஆப்புண்டு பத்தராய் அவர்களிலே சிலர் ( திருவாய் 1-3-8 ) மலமறக் கழுவி மாசறுக்கப் பட்டு ( திருவாய் 2-3-10 ) ஒளிக்கொண்ட சோதியோடே (இரண் திருவ 2 ) வானத்தணியமரராக்குவிக்க (திருவாய் 4-2-11) வானவர்க்கு நற்கோவையாம் படி முக்தராகக் கடவர்கள். நற்சரக்குக்கு ஒளியினுடைய மிகுதி குறைவா லுள்ள பெருமை சிறுமை ( திருவாய் 1-2-10 ) ஒண்பொருளான ஆத்மாவுக்கும் இந்த ஞானத்தினுடைய ஏற்றச்சுருக்கத்தாலே உண்டாகக்கடவது.
ஸம்ஸாரிகளின் பாகவதநுபவயோக்யதை
( திருவாய் 1-1-1 ) அயர்வறுமமரர்களான நித்யரும் ( திருவாய் 8-3-10 ) கரை கண்டோரென்கிற முக்தரும் எம்பெருமானையும் தங்களையுமுள்ளபடி யுணர்ந்து அறிவுக்குச் சேர்ந்த போகமும் அடிமையும் பெற்று (திருவாய் 3-7-5) மக்களுள்ளவர்’ என்னும்படியுளராகிறாப்போலே ( பெரிய திருமொழி 6-6-2 ) ‘மறந்தேனுன்னை’, ( திருவாய் 2-9-9 ) ‘யானேயென்னையறியகிலாது’ என்னும்படி இரண்டு தலையையும் மறந்து. ( பெரிய திருமொழி 6-2-2 ) மறந்தமதியுமின் றிக்கே அஹங்கார மமகாரங்களும் ராகத்வேஷங்களும். புண்யபாபங்களும் தேஹஸம்பந்தமும் பந்துஸங்கமும். விஷயப்ராவண்யமும் அர்த்தார்ஜநமும். தேஹபோஷணமும், ப்ரயோஜநாந்தர ஶ்ரத்தையும், தேவதாந்தர பஜநமும். ஸமயாந்தரருசியும் ஸாதநாந்தரநிஷ்டையுமாய் ஸ்வர்கநரக கர்ப்பங்களிலே வளையவளைய வந்து வழிதிகைத்து (திருவாய் 4-7-7 ) நின்றிடறி (பெரியாழ்வார் திரு 5-3-7 ) அனத்தக்கடலுளழுந்தி ( திருச்சந்த 65 ) ‘நானிலாதமுன்னெலாம்’, ( திருவாய் 5-7-3 ) ‘பொருளல்லாத’ என்னும்படி உருவழிந்த (திருமாலை 13 ) மாநிலத்துயிர்களான ஸம்ஸாரிகளும், எம்பெருமான் ஶேஷியாய் தாங்கள் அடியராயிருக்கிற ( திருப்பாவை 28 ) ஓழிக்கவொழியாத உறவையுணர்ந்து (திருமாலை 38 ) ஆம்பரிசான அநுபவமும் அடிமையும் பெற்றாலிறே ( திருவாய் 10-8-9 ) ‘அடியேனைப் பொருளாக்கி’. ( பெரிய திருவந் 7 ) ‘யானுமுளனாவன்’ என்கிறபடியே ஸத்தை பெற்றார்களாவது.
பகவத்க்ருஷி
இந்த ( திருவாய் 3-2-7 ) மெய்ஞ்ஞானமின்றி வினையியல் பிறப்பழுந்துகிற
இவர்களுக்குத் ( முதல் திருவந் 67 ) தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குகிற ஞானத்தையறிவிக்கைக்கு ( பெரிய திரு 2-8-5 ) நீர்மையினா லருள் செய்த ( திருவாய் 8-3-2 ) சரணமாகிய வேதஶாஸ்த்ரங்கள் ( மூன் திருவந் 32 ) ‘நூற்கடல்’ என்னும்படி பரந்து ( பெரிய திரு 1-10-6 ) மன்னா விம்மனிசப் பிறவியுள் ( திருமாலை 9 ) மதியிலாமானிடங்களான இவர்களுக்குக் கரை காணவொண்ணாமையாலே ( இரண் திருவந் 39 ) ஓத்தின் பொருள் முடிவை ஓத்தின் சுருக்காயிருப்பதொன்றாலே அறிவிக்க வேண்டுமென்று ( திருவாய் 9-9-4 ) தெய்வவண்டாய் ( பெரிய திரு 6-7-3 ) அன்னமாய் ( பெரி திரு 6-10-3 ) அமுதங் கொண்ட ( பெரி திரு 1-3-6 ) மைத்த சோதியெம்பெருமான் வேதஶாகைகளிலும் ( திருவாய் 1-8-10 ) ஓதம்போல் கிளர் ( பெரியாழ் திரு 4-3-11 ) நால்வேதக் கடலிலும், ( பெரி திரு 6-10-6 ) தேனும் பாலும் அமுதுமாகச் சேர்த்துப் பிரித்தெடுத்து ( பெரி திரு 10-6-1 ) ‘அறநூல் சிங்காமை விரித்தவன்’ என்னும்படி நரநாராயணரூபத்தைக் கொண்டு ஶிஷ்யாசார்யக்ரமம் முன்னாகப் ( பெரி திரு 1-4-4 ) பெருவிசும் பருளும் பேரருளாலே பெரியதிரு ( திருநெடுந் 4 ) மந்திரத்தை வெளியிட் டருளினான்.
மூலமந்த்ரத்தின் ருஷிச்சந்தோதேவதைகள் – பெருமை
இதுதனக்கு. அந்தர்யாமியான நாராயணன் ருஷி. தேவீ காயத்ரீ சந்தஸ்ஸு, பரமாத்மாவான நாராயணன் தேவதை. ப்ரணவம் பீஜம். ஆய ஶக்தி. ஶுக்ல வர்ணம் மோக்ஷத்திலே விநியோகம். 1 ( பெரியாழ் திரு 2-3-2 ) சிந்தை பிரியாத, ‘பரமாத்மா’ என்கிறபடியே அந்தர்யாமியும் பரமாத்மாவுமான தானே இதுக்கு ருஷியும் தேவதையுமாய் ( பெரி திரு 1-3-7 ) ‘வைப்பும் நங்கள் வாழ்வுமானான்’ என்னும்படி ( பெரியாழ் திரு 5-2-8 ) பிரமகுருவாய் ஜ்ஞாநத் தைக்கொடுத்து, உபாயமாய், ( திருவாய் 8-10-7 ) தனிமாத்தெய்வமாய் மோக்ஷத் தைக் கொடுத்து ப்ராப்யனுமாயிருக்கையாலும், 2 நாராயணபரங்களான வேதங்களும், அதுக்குப் பொருள் சொல்லக்கடவ மந்த்ரைக ஶரணரான ருஷி களும், ( முதல் திருவந் 95) ‘நாவாயிலுண்டே’ என்றும் ( பெரு திரு 2-4 ) நாத் தழும்பெழ ( பெரிய திரு 1-7-5 ) ‘ நள்ளிருளளவும் பகலும்’ ( பெரியாழ் திரு 5-1-3 ) ‘ ஓவாதே நமோநாரணா’ என்றும் ( திருவாய் 10-9-1 ) ‘நாரணன் தமரான ஆழ்வார்களும். வைதிகவிதிகளும், தங்கள் நினைவைப் பின்செல்லும்படியான ஆழ்வார்களையடியொற்றி த்ராவிட வேதத்துக்குக் கருத்தறிவிக்கும் நம்மா சார்யர்களும் இத்தையே ஒருமிடறாக விரும்புகையாலும், 3 ( பெரிய திரு 6-10-10 ) ‘நம்பிநாமம்’ என்னும்படி அர்த்தபூர்த்தியை யுடைத்தாகையாலும், முமுக்ஷுக்களுக்குக் கழிப்பனான க்ஷுத்ரமந்த்ரங்களிலும் ஒக்கவோதாநிற்க
( திருவாய் 8-89 ) ஓடித்திரியும் யோகிகளாலே விரும்பப்பட்டு அர்த்தபூர்த்தி யை உடைத்தல்லாத மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றத்தையுடைத்தாய், ( பெரிய திரு 1-1-9 ) ‘குலந்தரும்’ என்கிறபடியே. தர்மம் அர்த்தம் இஹலோக பரலோக போகம் ஆத்ம பரமாத்ம பாகவதாநுபவங்கள் என்கிற புருஷார்த்தங்களையும் ஸாதித்துக்கொடுக்கக் கடவதாய். ( திருச்சந்த 77 ) ‘எட்டினாயபேதமோடு’
( திருச்சந்த 78 ) ‘ ஆர்வமோடிறைஞ்சி நின்று’ என்கிறபடியே அல்லாத உபாயங்களுக்கும் துணைசெய்யக்கடவதாய். ஸித்தோபாயத்திலிழிவார்க்கு
( திருவாய் 2-3-6 ) ‘அடியேனடைந்தேன் முதன் முன்னமே’ என்கிறபடியே ஸ்வரூபஜ்ஞாநத்துக்கும் ( நான்முகன் திரு 85 ) ‘தொழிலெனக்கு’ என்கிற படியே பொழுதுபோக்குக்கும் ( திருநெடுந் 4 ) ‘மந்திரத்தால் மறவாது’ என்கிற படியே இங்குற்றையநுபவத்துக்கும் பரிகரமாய், ( பெரிய திரு 1-1-9 ) பெற்ற தாயினுமாயின செய்யுமதானபடியாலே. இடறினவன் ‘அம்மே’ என்னுமா போலே ( பெரிய திரு 6-10-6 ) ‘நானும் சொன்னேன்’ என்னும்படி ஸர்வாதிகார மாய் ( முதல் திருவந் 95 ) ‘ஓவாதுரைக்குமுரை’ என்னும்படி சொல்லி யிளைப்பாறலாய் ( பெரியாழ் திரு 4-5-2 ) ‘வாயினால்நமோநாரணா’ என்கிற படியே ( பெரிய திரு 1-1-10 ) துஞ்சும் போதைக்கு மோர்க்குழம்புபோலே இளைப்பாறலாய் ( பெரிய திரு 1-1-8 ) ‘செல்கதிக்கு நற்றுணையாக’ என்கிற படியே அர்ச்சிராதிகதிக்குப் பொதிசோறாய் ( திருப்பல் 11 ) ‘நமோநாராயணா’ என்கிறபடியே ( திருவாய் 9-7-5 ) தெளிவிசும்பில் போகத்தையும் வளர்க்கக் கடவதாய் ( முதல் திருவந் 92 ) தேனாகிப் பாலாம் திருமாலானவனுள் வீடு போலே ( பெரிய திரு 6-10-6 ) தேனும் பாலுமமுதுமாய்த் திருமால் திருநாம மாய் ( பெரிய திரு 7-4-5 ) எப்பொழுதும் தித்திக்கக்கடவதாய் ( பெரிய திரு 8-10-3 ) ‘மற்றெல்லாம் பேசிலும்’ என்கிறபடியே அறியவேண்டுமவையெல்லா வற்றையுமுடைத்தாய் ( பெரிய திரு 2-2-2 ) ‘எம்பெருமான்’ ( பெரிய திரு 7-7-1 ) ‘தெய்வத்துக்கரசு’ என்னும்படி ( திருவிருத் 20 ) கழிபெரும் தெய்வமாயிருக்கி றாப்போலே ‘மந்த்ராணாம்மந்த்ரராஜ:‘ என்கிறபடியே எல்லா மந்த்ரங்களிலும் மேலாய்ப் ( திருவாய் 4-6-4 ) பெருந்தேவன் பேரான பெருமையையுமுடைத் தாயிருக்கும்.
பொருளில்லாத கடலோசையில் பக்ஷிகள் சொல் மேலாய், அதில் நாட்டுவழக்குச் சொல் மேலாய். அதில் தொண்டரைப்பாடும் சொல் மேலாய். அதில் இஷ்டதேவதைகளைபயேத்துமது மேலாய். அதில் வேதார்த்தம் சொல்லுமது மேலாய். அதில் வேதம் மேலாய், அதில் வேதாந்தம் மேலாய். அதில் நாராயணாநுவாகம் மேலாய். அதில் பகவந்மந்த்ரங்கள் மேலாய், அதில் மற்றையிரண்டும் கடலோசையோ பாதியாம்படி மேலாயிருக்கும் ( பெரிய திரு 4-3-9 ) வளங்கொள் பேரின்பமான பெரியதிருமந்த்ரம் ( திருவாய் 8-10-7 ) ‘தனிமாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி’ என்கிறபடியே தானறிந்தவுறவாலே எல்லார் பக்கலிலும் நடக்கிற ஸௌஹார்த்தத்தாலே ( திருவாய் 2-10-11 ) பொருளென்று ஶரீரங்களைக் கொடுத்து ( திருவாய் 3-2-7 ) ஒழிவற நிறைந்து அந்தர்யாமியாய் ஸத்தையை நோக்கிச் ( திருவாய் 3-10-1 ) சன்மம் பலபல செய்து. (திருவாய் 4-7-2 ) கண் காணவந்து ( நான்மு திருவந் 60 ) ஆள் பார்த்து அவதரித்து.
( இரண் திரு 59 ) அருள்புரிந்த சிந்தையடியார் மேல் வைத்து முகம் மாறுகிற சேதனரைச் சேரவிட்டுக் கொள்ளுகைக்கு இடம் பார்க்கிற எம்பெருமானுடைய ( பெரிய திரு 1-1-1 ) உய்வதோர் பொருளான ( இரண் திருவந் 41 ) அருளாலே யாரேனுமொருவர்க்கு. ( திருவிருத் 1 ) பொய்ந்நின்ற ஞானத்துக்கு அடியான ( திருவெழு ) முக்குணத்திரண்டவையகன்று.
( திருவாய் 5-2-5 ) உய்யும் வகையுணரும் ( திருவெழு ) ஒன்றினிலொன்றி. ( பெரிய திரு 1-11-11 )உணர்வெனும் பெரும்பதம் நாடி ( திருவாய் 2-3-2 ) அறியாதனவறிவிக்கும் ( திருவிருத் 93 ) ஞானத்துறையான ஆசார்யனைக் கிட்டினால். ( கண்ணினுண் 10 ) அவன் செயல் நன்றாகத்திருத்திப் ( பெரிய திரு 2-4-9 ) ‘பிறர் கேட்பதன்முன்’ என்று தனியிடத்தே கொண்டிருந்து
( பெரிய திரு 5-8-9 ) உளங்கொளன்பினோடின்னருள் சுரந்து ( பெரிய திரு 1-1-7 ) ‘பாடி நீருய்ம்மின்’ என்றருளிச்செய்யும்.
இத்திருமந்த்ரத்தினுடைய ஏற்றத்தையறிந்து பேணி, அதுகுள்ளீடான ( திருநெடுந் 4 ) அந்தணர் மாட்டந்திவைத்த மந்திரத் திலே பக்தியைப்பண்ணி இத்தையுபகரித்தவன் பக்கலிலே ( திருவாய் 2-3-2 ) ‘நீ செய்தன’ என்று க்ருதஜ்ஞனாய்ப் போருமவனுக்கு உஜ்ஜீவநமுண்டாகக் கடவது.
திருமந்த்ரத்தில் அர்த்தபஞ்சக ப்ரதிபாதநம்
எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குண்டான உறவையறியவொட்டாத விரோதியை ஒருவழியாலே கழித்துப் பெறும்பேற்றை இது வெளியிடுகை யாலே முமுக்ஷுவுக்கறியவேண்டுமஞ்சர்த்தமும் இதுக்குள்ளேயுண்டு.
அர்த்தபஞ்சக ப்ரதிபாதநப்ரகாரம்
இதில் – ஸ்வரூபம் சொல்லுகிறது ப்ரணவம் ; விரோதியையும் அது கழிகைக்கு உபாயத்தையும் சொல்லுகிறது நமஸ்ஸு ;
பரஸ்வரூபம் சொல்லுகிறது நாராயணபதம் ; புருஷார்த்தம் சொல்லுகிறது சதுர்த்தி. ப்ராப்யமும் விரோதியும் உபாயமும் பலமும் ஆத்மாவுக்காகை யாலே, ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு.
திருமந்த்ரத்தின் வாக்யார்த்தம்
ஶேஷத்வம் போலே அவனே உபாயமும் உபேயமுமென்றிருக்கை ஸ்வரூபமாகையாலும், அந்யஶேஷத்வமும் ஸ்வஸ்வாதந்தர்யமும் குலைகை கைங்கர்யம்போலே பேறாகையாலும், ஸ்வஸ்வரூபத்தையும் சொல்லிப் புருஷார்த்தத்தையும் சொல்லுகிறதென்று வாக்யார்த்தம்.
திருமந்த்ரத்தின் அக்ஷரபதஸங்க்யைகள்
( பெரிய திரு 1-8-9 ) ‘பேசுமின் திருநாமமெட் டெழுத்தும்’ என்கிறபடியே இது எட்டுத்திருவெழுத்தாய் ‘ஓம்’ என்றும். ‘ நம:‘ என்றும், ‘நாராயணாய’ என்றும் மூன்று பதமாயிருக்கும்.
ப்ரணவார்த்தம்
இதில் முதல் பதமான ப்ரணவம் ‘அ’ என்றும். ‘உ’ என்றும், ’ம்’ என்றும் மூன்று திருவெழுத்தாய் ( பெரியாழ் திரு 4-3-11 ) ‘நால்வேதக் கடலமுது’ என்னும்படி வேதஸாரமாய் ( பெரியாழ் திரு 4-7-10 ) மூன்றெழுத்தாக்கி’ என்கிறபடியே மூன்று பதமாய் மூன்று பொருளை வெளியிடக் கடவதாய் ( பெரியாழ் திரு 4-5-4 ) மூலமாகிய ஒற்றையெழுத் தாய், ஒரு பதமாய், ஒரு பொருளைக் காட்டக்கடவதாயிருக்கும். ஶப்தார்த் தங்களிரண்டாலும் ஜீவபரப்ராதாந்யம் கொள்ளக்கடவதிறே. ஓங்காரரதம்
( பெரிய திரு 2-10-8 ) பார்த்தன் செல்வத்தேர் போலேயிறே இருப்பது.
( திருவிருத் 85 ) “அடியேனடியாவியடைக்கலம்“ என்கிறபடியே ஆத்ம ஸமர்ப்பணத்துக்கு மந்த்ரமாய், சந்தஸ்ஸுவேதங்களில் ப்ரணவம் நானென்ற ( பெரியாழ் திரு 4-10-4 ) மூன்றெழுத்தாய முதல்வனோடே ( திருச்சந்த 116 ) வேறுசெய்யாமல் ஒரு பேரிலே இருப்பாக்குகையாலே இரண்டு பங்குக்கு ஒரு மூலப்ரமாணம் போலேயாய். வேதத்துக்குக் கீழும் மேலும் செப்பும் மூடியும் போலே ( பெரியாழ் திரு 4-10-7 ) செஞ்சொல் மறைப்பொருளை இது கொண்டிருக்கும்.
அகாரார்த்தம்
( பெரிய திரு 6-1-5 ) ‘ஓரெழுத்தோருரு’ என்னும்படி இதுக்கு ப்ரக்ருதியாய், முதலெழுத்தாய், எல்லாவற்றிலும் ஏறி, சொல் நிரப்பத்தையுண்டாக்குகிற
( திருக்குறுந் 18 ) துளக்கமில் விளக்கான அகாரம் – ( நாச் திரு 11-6 ) நான் மறையின் சொற்பொருளுக்கடியாய் ( திருவிருத் 96 ) அவையவைதோறு
( திருவாய் 3-2-7 ) நிறைந்து நின்ற ‘அக்ஷரங்களில் அகாரம் நான்’ என்ற
( பெரியாழ் திரு 4-3-11 ) மேலிருந்த விளக்கான எம்பெருமானைக் காட்டுகிறது. இது ‘அவ-ரக்ஷணே’ என்கிற தாதுவிலே பதமாகையாலே இந்த
ரக்ஷணமாகிற தொழில் ( திருவாய் 2-2-9 ) காக்குமியல்வினனான ஸர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கையாலே ( திருவாய் 2-8-5 ) ‘மூவாத்தனி முதலாய் மூவுலகும் காவலோன்’ என்கிறபடியே காரணவஸ்துவே ரக்ஷகமுமென்று தோன்றும். தேஶகாலாவஸ்தாப்ரகாராதிகாரிகளையிட்டு ரக்ஷணத்தைச் சுருக்காமையாலே ( திருவாய் 2-3-10 ) ‘துளிக்கின்ற வானிந் நிலம் ( திருவாய் 3-1-5 ) ‘வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய்’, ( திருவாய் 6-9-3 ) ‘ஞாலத்தூடே நடந்து நின்றும். கிடந்திருந்தும்’, ( முதல் திருவந் 60 ) ‘மன்னுயிர்க்கெல்லாம் அரணாய’ என்கிறபடியே எல்லா தேஶத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லாவளவிலும் எல்லா வழியாலும் எல்லாரையும் ரக்ஷிக்கும்படியைத் காட்டுகிறது. ( திருவாய் 2-2- ) ‘அருளாலளிப்பாரார்’
( நான்திரு 19 ) ‘உவந்தெம்மைக்காப்பாய்’ என்கிறபடியே அருளையும் உகப் பையும் பரிகரமாகக்கொண்டு ( திருவாய் 3-1-5 ) மலர் கதிரின் சுடருடம் பாலும், வருந்தாத ஞானத்தாலும், ( முதல்திருவந் 26 ) எழுவார்க்கு உடம் பைப் பூண்கட்டியும், ‘விடைகொள்வார்க்குச்’ ( திருவாய் 1-5-7 ) செடியாராக் கையைக் கழித்தும், வழுவாவகை நினைந்தார்க்குத் ( திருவாய் 7-5-10 ) தன் தாளின் கீழ்ச் சேர்த்தியையுண்டாக்கியும். ( திருவாய் 2-3-6 ) சேர்ந்தார்களை யென்றும் மகிழப்பண்ணியும். பிரிந்து கூடாதார் ( திருவாய் 8-3-6 ) பணிவும் பண்பும் தாமேயாயும் பண்ணும் ரக்ஷணம் சேதநர் நின்ற நின்றவளவுக் கீடாயிருக்கும்.
அகாரார்த்தம் ஸ்ரீய:பதியே
( பெரிய திரு 7-7-1 ) ‘திருவுக்கும் திருவாகிய செல்வன்’ ( திருவாய் 10-6-9 ) ‘திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்’ என்று அவனுக்கு நிரூபகமாகையாலும். த்யுமணியையும் மாணிக்கத்தையும் பூவையும் விடாத ப்ரபையும் ஒளியும் மணமும் போலே ( பெரிய திரு 8-9-2 ) ‘மணியையணி யுருவில்’ ( பெரிய திரு 5-6-7 ) ’திருமாலை’ என்னும்படியே ( பெரிய திரு 4-5-5 ) தன்னொடும் பிரிவிலாத திருமகளாகையாலும் ( திருவாய் 10-7-6 ) ‘ஊழியூழி தலையளிக்கும் திருமால்’ என்னும்படி ரக்ஷணதர்மத்துக்கு இவள் தர்மபத்நியாகையாலும், ( திருப்பல் 11 ) ‘திருமாலே நானுமுனக்கு’ ( பெரிய திரு 6-3-9 ) ‘திருமார்பா உனக்காகித் தொண்டுபட்ட’ என்னும் ஆத்மாவுக்கு மிதுநஶேஷத்வம் ஸ்வரூபமாகையாலும், ஸ்வரூபரூப விபவங்களைப் போலே ப்ரக்ருதி ப்ரத்யய தாதுக்களையும் விடாமையாலே இதிலே ஸ்ரீஸம்பந்தமும் அநுஸந்திக்கப்படும்.
லுப்தசதுர்த்யர்த்தம்
இதில் ஏறிக்கழிந்த சதுர்த்தி,–ரக்ஷிக்கப்படுகிற வஸ்துக்களடைய அவனுக்கு ஶேஷமென்று ( திருவாய் 4-5-10 ) ‘கண்டவாற்றால் தனதே யுலகு’ என்னும் படி ரக்ஷிக்கைக்கடியான உறவையறிவிக்கிறது. ரக்ஷிக்கிறவன் ஸ்வாமியாய், ரக்ஷிக்கப்படுகிறவர்கள் தாஸபூதராயிருக்கையிறே இரண்டு தலைக்கும் நிலை நின்ற ஸ்வரூபம். ( திருவாய் 8-8-2 ) அடியேனென்றிசையாதவனை ஆத்மாவையில்லை செய்த கள்ளனாகவிறே சொல்லுவது.
உகாரார்த்தம்
’உகாரம்’ அறுதிப்பாட்டைக் காட்டுகையாலே எம்பெருமானுக்கே ஶேஷமென்று பிறர்க்கான நிலையைக்கழிக்கிறது. ஒருவனுக்கடிமையான க்ருஹ க்ஷேத்ரம் முதலாவை பிறர்க்குமாக்கலாம்படி வந்தேறியாய் நிலை நில்லாதே கழிகிறாப்போலன்றிறே ஆத்மாவினுடைய ஶேஷத்வம்.
( பெரியாழ் திரு5-4-11 ) ‘சாயைபோல’ ( பெரிய திருவந் 21 ) ‘நிழலுமடிதாறும்’ என்னும்படி ( திருவிருத் 2 ) நிழல்போல்வனரான நாய்ச்சிமாருடைய ஶேஷத்வம் போலே அநந்யார்ஹமுமாயிருக்கும். ( பெரிய திரு 2-5-2 ) பிறர்க் கடைந்து தொண்டுபடுகை ஆத்மநாஶமாய். ( நான் திருவந் 68 ) புறந்தொழா தொழிகை தேட்டமாகையாலே ( சிறிய திருமடல் 54 ) ‘மற்றாரானுமல்லனே’ என்று தேறும்படி ( நாச் திரு 12-4 ) ‘அவன்முகத்தன்றி விழியேன்’ என்றிருக் கையாயிற்று ஸ்வரூபம். ( திருவாய் 10-7-3 ) ‘என்னை முற்றுமுயிருண்டு’ என்னும்படி எம்பெருமானுக்கு வாய்புகு சோறான ஆத்மாவைப் பிறர்க்காக்கு கையாவது ( நாச் திரு 1-5 ) மறையவர் வேள்வியில் புரோடாஶத்தை நாய்க் கிடுமாபோலே இருப்பதொன்றிறே.
மகாரார்த்தம்
‘மகாரம்’ – ககாரம் முதலான இருபத்துநாலெழுத்தும் – ( பெரிய திரு 1-8-7 ) பாருநீரெரி காற்றினேடாகாசமும், ( திருவாய் 7-8-9 ) துன்னுகரசரணம் முதலாகவெல்லாவுதுப்பும் ( முதல் திருவந் 12 ) செவி வாய் கண் மூக்கு உடல், ( திருவாய் 7-8-9 ) உன்னுசுவையொளியூறொலி நாற்றம். ( திருவாய் 10-7-10 ) பிரகிருதி மானாங்காரமனங்கள் என்கிற இருபத்துநாலு தத்த்வத் தையும் காட்டி, தான் இருபத்தைவரான ஆத்மாவைக் காட்டக்கடவதாகை யாலும். ‘மந – ஜ்ஞாநே’ என்கிற தாது ஜ்ஞாந்ததுக்கிருப்பிடமான ஆத்மாவைக் காட்டுகையாலும். ( திருவாய் 8-8-5 ) ‘சென்றுசென்று பரம்பர மாய்’ என்னும்படி ( திருநெடுந் 1 ) முன்னுருவில் பின்னுருவாய். ‘விஜ்ஞா நம்’ என்னும்படி அறிவால் மிக்கு, ஜ்ஞாநமாத்ரமன்றிக்கே ( திருவாய் 1-3-6 ) ‘உணர்ந்துணர்ந்து’ என்னும்படி நிலைநின்ற ஜ்ஞாதாவாய். ( திருவாய் 8-8-4 ) ‘தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து’ என்னும்படி ஆநந்த ரூபமான ஆத்மவஸ்துவைப் பிறர்க்குரித்தல்லாதபடி ஶேஷமாகச் சொல்லப் பட்டதென்கிறது.
( திருவாய் 8-8-1 ) கண்கள் சிவந்திற்படியே ஜ்ஞாநாநந்தாதிகளுக்கு முன்னே ஶேஷத்வம் சொல்லிற்று – மணத்தையும் ஒளியையுங்கொண்டு விரும்பப் படும் பூவும் மாணிக்கமும் போலே அவனுக்கானபோது விரும்பப்பட்டு, பிறர்க்கானபோது ( திருவாய் 4-8-1 ) ஏராளுமிறையோனிற்படியே கைவிடப் படும் ஆத்மாவென்று தோற்றுகைக்காக. ( திருப்பல்லாண்டு 10 ) அடியோ மென்றெழுத்துப்பட்டவன்று ஶேஷத்வம் எல்லார்க்கும் பொதுவாகையாலே. ஆத்மாக்கள் திரளையும். ( பெரியாழ் திரு 5-4-1 ) ‘என்னுடைமையையும்’ என்னும்படி ஆத்மாவுக்கு ஶேஷமான அசித்தையும் இம்மகாரந்தான் காட்டக் கடவது.
நம: ஶப்தார்த்தம்
ஸர்வரக்ஷகனான ஶ்ரிய:பதிக்கு அநந்யார்ஹஶேஷமாகையாகிற நிலை நின்றவுறவை ஆத்மாவை அறியவொட்டாத விரோதியை – ‘நம:’ என்று கழிக்கிறது. நமஸ்ஸு ‘ந’ என்றும். ‘ம:‘ என்றும் இரண்டு பதமாயிருக்கும். ‘ம:‘ என்று எனக்கென்கிறவித்தை ‘ந’ என்று கழித்து – ( திருவாய் 1-2-1 ) வீடுமின் முற்றத்திற்போலே கழித்துக்கொண்டு கழிக்கப்படுமத்தைக் காட்டுகிறது. அவன் உடையவனாய் தானுடைமையானமை நிலைநிற்பது – தனக்குத்தான் கடவனாகவும். தன்னதல்லாத ஆத்மாத்மீயங்களை ‘என்னது’ என்றும் நினைக்கிற அஹங்காரமமகாரங்களை ( திருவாய் 1-2-3 ) வேர் முதல் மாய்த்தாலாகையாலே, உகாரத்திலே கழியுண்ட பிறரிலே சொருகின தன்னை ‘நம:‘ என்று வெளியாகக் கழிக்கிறது. ஸம்ஸாரத்துக்கு விதையாய், காட்டுத்தீயும் ம்ருத்யுவும் போலே ஸ்வரூபத்தைச்சுட்டு உருவழிக்கிற ‘நான்
எனது’ என்கிறவை கழிந்தாலிறே ஸ்வரூபஸித்தியுள்ளது.
தனக்கும் பிறர்க்குமல்லனானால் அவனுக்குமவனுடையார்க்குமாக வேண்டுகையாலே. பகவச்சேஷதவம் பிராட்டியளவும் சென்றாப்போலே மிதுநஶேஷத்வமும் ( திருவாய் 6-9-11 ) திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டரளவுமோடி ( பெருமாள் திரு 2-10 ) மெய்யடியார்கள்தம் எல்லை யிலடிமையையும் இது காட்டகடவது. ஒருவன் தனக்கென்று எழுதிக் கொண்ட அடிமையும் காணியும், பார்யாபுத்ராதிகளுக்கும் விற்று விலை செல்லும்படியாக்கினால். அவனுக்கு நிலைநின்றதாமாபோலே ( திருவாய் 8-1-10 ) அறவிலை செய்த ( திருவாய் 4-9-6 ) அடிமையறக்கொண்ட ஆத்மாத் மீயங்களை ( பெரியாழ் திரு 4-4-10 ) ‘எந்தம்மை விற்கவும் பெறுவார்கள்’,
( திருநெடுந் 27 ) ‘ஈதெல்லாமுனதேயாக’ என்னும்படி ( திருப்பள்ளி 10 ) அடியார்க்காட்படுத்தாலிறே அவன் ( பெரிய திரு 3-6-9 ) நிலையாளாக வுகந்தானாவது.
எல்லாரும் தாஸபூதராயிருக்க ( பெரிய திரு 5-6-8 ) ‘அவர்கட்கங்கருளில்லா’ என்னும்படி சிலரை த்விஷத்துக்களென்று (பெரியாழ் திரு 1-8-5 ) அழல விழித்துச் சிலர் பக்கலிலே ( பெரிய திரு 3-10-1 ) என்றும் அருள் நடந்து
( பெரிய திரு 10-6-5 ) ‘என்தமர்’ ( பெரியாழ் திரு 4-9-2 ) ‘என்னடியார்’ ‘என்னுடைய ப்ராணன்கள்’. ‘என்னுடைய ஆத்மா’, ‘இரண்டாமந்தராதமா’ என்று அவன் விரும்புகையாலே ( பெரிய திரு 11-6-7 ) அவனை உள்ளத்து
( பெரிய திரு 2-6-1 ) எண்ணாதேயிருப்பாரோடுறவறவும் ( பெரிய திரு 2-6-2 ) எண்ணும் நெஞ்சுடையார்க்கு அடிமைப்படுகையும் ஸ்வரூபமென்னுமிடத்தை உகாரமும் நமஸ்ஸும் அறிவிக்கிறதென்றிறே (பெரிய திரு 8-10-3 ) திருவெட் டெழுத்தும் கற்ற ஆழ்வார் ‘மற்றுமோர் தெய்வமுளதென்றிருப்பாரோ டுற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை’ என்றது.
ஆத்மாவினுடைய ஶேஷத்வம் இவ்வளவும் சென்று நிலைநின்றாப்போலே. அவனுடைய ரக்ஷகத்வமும் நிலை நிற்பது ஸ்வரக்ஷணத்திலே தான் அந்வயியாதொழிந்தாலாகையாலே. இந்த ஸ்வாதந்தர்யத்தையறுத்து அவனே உபாயமென்னுமிடத்தையும் வெளியிடுகிறது நமஸ்ஸு. ஶரணம் புகச் சொல்ல ‘நமஸ்ஸைப் பண்ணினார்கள்’ என்கிற வழியாலே உபாயத்தைக் காட்டுகிறதாகவும் சொல்லுவர்கள்.
நடுவே கிடந்து ஸ்வரூபத்துக்கும் உபாயத்துக்கும் ப்ராப்யத்துக்கும் களையறுத்து ( திருப்பல் 11 ) ‘நல்வகையால்’, ( திருவாய் 3-3-6 ) ‘வேங்கடத்துறைவார்க்கு’, ( திருவாய் 10-3-7 ) ‘மேலைத்தொண்டுகளித்து’ என்று ஸ்வரூபமும் உபாயமும் ப்ராப்யமும் தானாய். ( திருவாய் 7-9-10 ) உற்றெண்ணில் ஆத்ம ஸமர்ப்பணத்துக்கும் தானுரியனல்லாத பாரதந்த்ர்யத் தின் மிகுதியை ( திருவாய் 5-7-10 ) ‘எனதாவியுமுனதே’. ( திருவாய் 2-9-9 ) ‘என்னுடைமையும் நீயே’ என்கிறபடியே காட்டி ஸ்வரூபத்தை யோட வைக்கையாலே இத்தை ஆந்தராளிக வைஷ்ணவ பதமென்று பூர்வாசார் யர்கள் விரும்புவர்கள்.
நாராயண பதார்த்தம்
‘நாராயண’ பதம் — தன்னை அடியானாக உணர்ந்தவன் ஶேஷிபக்கல் அடிமையை இரக்கும்படியைச் சொல்லுகிறது. நாராயணன் என்றது அகாரத்தில் சொன்ன ஶேஷியை வெளியிடுகிறது. ‘நர:‘ நார:, நாரா:‘ – என்று(ம்) அழியாத ஶேஷவஸ்துக்களினுடைய திரளைக் காட்டுகிறது. நானென்று சொல்லப்படுகிறவன் பக்கல் நின்றும் பிறந்தவற்றையும் தத்வங் களிலே முற்பட்ட ப்ரதாநமான அப்புக்களையும் நாரங்களென்னக்கடவது. என்றுமுண்டாய். ஒருபடிப்பட்டு, ஆவதழிவதாகாநிற்க ஸ்வரூப நாஶமின்றிக் கேயிருக்கிற இரண்டு விபூதியிலுள்ளவற்றையெல்லாம் சொன்னபடி.
( திருவாய் 1-1-2 ) ‘உணர் முழு நலம்’ என்கிற ஜ்ஞாநாநந்தாதிகளும்.
( திருவாய் 3-1-9 ) ‘மழுங்காத’ ( திருவாய் 2-7-11 ) ‘உயர்வற உயரும்’ என் கிற ஜ்ஞாந ஶக்த்யாதிகளும். ( திருவாய் 5-3-1 ) ‘ஆசறுஶீலாதிகளும்‘. இவற்றை வெளியிடுகிற ( திருநெடுந் 1 ) மணியுருவில் பூதமைந்தான
( திருவிருத் 14 ) ‘நீலச் சுடர்விடு மேனியும் ( திருவாய் 6-9-8 ) ‘வெறிகொள் சோதி’. ( திருநெடுந் 5 ) ‘மலர்புரையும்’ என்கிற ஸௌகந்த்ய ஸௌகுமார் யாதிகளும். ( திருவாய் 3-1-1 ) ‘முகச்சோதி மலர்ந்ததுவோ’ என்னும்படியா யிருக்கிற ( திருவாய் 5-5-9 ) சென்னி நீண்முடியாதியாய பூஷணங்களும்.
( திருவாய் 2-5-1 ) ‘அந்தாம வாள் முடி சங்காழி நூலாரம்’ என்கிற ஆபரணங் களோடொருகோவையான ஆயுதங்களும், ( பெரிய திரு 2-10-9 ) ‘பார்மகள் பூமங்கையோடு சுடராழி சங்கிருபால்’ என்னும்படி அநுபவிக்கிற நாய்ச்சி மார்களும். ( திருவாய் 8-1-1 ) ‘திருமகள் பூமி’ என்கிற சேர்த்தியிலே
( பெரியாழ் திரு 4-2-6 ) ஏவிற்றுச் செய்கிற நித்யஸூரிகளும், ( திருவாய் 10-9-11 ) ‘அடியரோடிருந்தமை’ என்னும்படி இவர்களோடு ஸாம்யம் பெற்ற முக்தரும். ( முதல் திருவந் 53 ) ‘சென்றால் குடையாம்’ என்று அவர்கள் உபகரணரூபமாகக் கொண்ட சத்ரசாமராதிகளும். ( திருவாய் 5-6-10 ) தேவர் குழாத்துக்கிருப்பிடமான திருமாமணி மண்டபமும். அதைச் சூழ்ந்த
( திருவாய் 10-9-8 ) கொடியணி நெடுமதிள் கோபுரமும். அதில் ( திருவாய் 10-9-5 ) வாசலில் வானவரும், ( திருவாய் 4-10-11 ) வைகுந்தமாநகரும்.
( திருவாய் 8-6-5 ) கோயில்கொள் தெய்வங்களினுடைய திவ்யவிமானங்க ளும். ( நாச் திரு 4-5 ) ‘மாடமாளிகை’ என்னும்படி நல் வேதியர்பதிகளைச் ( சிறிய திருமடல் 71 ) சூழ்ந்த ஆராமங்களும். ( திருவாய் 6-7-5 ) அந்தப் பூவியல் பொழிலை வளர்க்கிற ( திருவாய் 5-9-7 ) ஓதநெடுந்தடங்களும், அவற்றுக்கடியான விரஜையும். ( பெரிய திருவந் 68 ) வைகுந்தவானாடும், ( திருவாய் 10-8-11 ) சூழ் பொன் விசும்பான பரமாகாஶமும். ( திருவாய் 1-1-8 ) சுரரறிவருநிலையான மூலப்ரக்ருதியும், ( திருவாய் 8-1-6 ) மங்கியவருவான பத்தவர்கமும், ( திருவாய் 4-3-5 ) காலசக்கரமும் ( திருவாய் 10-7-11 ) மானாங்காரம் முதலான தத்த்வங்களும், அவற்றாலே சமைந்த ( திருச்சந்த 79) பத்தினான்றிசைக்கணின்ற புற ( திருவாய் 4-9-8 ) விமையோர் வாழ் தனி முட்டைக்கோட்டையும். ( திருவாய் 3-6-7 ) மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமான பதார்த்தங்களும். ( திருவாய் 6-9-5 ) எண் மீதியன்ற புறவண்டங்களுமாகச் சொல்லப்படுகிற இவை நாரங்களாகிறன.
( பெருமாள் திரு 1-11 ) ‘நலந்திகழ் நாரணன்’ ( திருவாய் 1-2-10 ) ‘வண்புகழ் நாரணன்’ ( திருவாய் 10-9-1 ) ‘வாழ்புகழ் நாரணன்’ ( திருவாய் 10-9-1 ) ‘நன்மேனியினன் நாராயணன்’ ( திருவாய் 3-7-4 ) ‘பல்கலன் நடையாவுடைத் திருநாரணன்’ ( திருவாய் 5-7-11 ) ‘தெய்வநாயகன் நாரணன்’ ( பெரியாழ் திரு 3-7-11 ) ‘நாராயணனுக்கு’ ( திருவாய் 4-3-3 ) ‘ஏகமூர்த்தியிருமூர்த்தி’ என்று தொடங்கி ( திருவாய் 4-3-3 / திருவாய் 1-3-3 ) ‘நடுக்கடலுள் துயின்ற நாராயணன்’ / ‘தானாமமைவுடை நாரணன் ( திருவாய் 10-5-2 ) ‘நாரணனெம்மான் பாரணங்காளன்’ ( திருவாய் 9-3-1 ) ‘நாராயணன் நங்கள் பிரான்’ ( பெரிய திரு 2-4-6 ) ‘நீரார் பேரான்’ என்று பலவிடங்களிலும் நாரங்களாகத் தோற்றுகிறவற்றை ( பெரிய திரு 6-10-9 ) ‘பொங்குபுணரிக் கடல் சூழாடை’ என்கிற பாட்டிலே திரளவருளிச் செய்தருளினார்.
அயந ஶப்தார்த்தம்
‘அயநம்’ என்று இருப்பிடமாய். நாரங்களுக்கு இருப்பிடமென்றும். நாரங்களை யிருப்பிடமாகவுடையவனென்றும் சொல்லக்கடவது.
( திருவாய் 4-9-6 ) ‘ நானுன்னையன்றியிலேன்- நீ என்னையன்றியிலை’ என்று ஒன்றையொன்று குலையில் இரண்டுதலையும் இல்லையாம்படி யிருக்கையாலே ( திருவாய் 9-6-4 ) ‘தன்னுளனைத்துலகும் நிற்க நெறிமை யால் தானுமவற்றுள் நிற்கும்’ என்கிற மேன்மையையும். நீர்மையையும் சொல்லிற்றாயிற்று. எல்லாவற்றுக்கும் காரணமாய். அந்தராத்மாவாய். அவற்றின் தோஷம் தட்டாமே நின்று நியமித்து. தானொளியையுடையனாய், ஸ்வாமியாய். எல்லா உறவுமாய், உபாயமுமாய், உபேயமுமாயிருக்கு மதெல்லாம் இதிலே தோற்றும்.
வ்யக்தசதுர்த்யர்த்தம்
“ஆய’ என்று மகாரத்தில் சொன்ன ஆத்மாவுக்கு அகாரத்தில் சொன்ன ஶேஷத்வம் நிலைநிற்பது கைங்கர்யத்திலே தான் அந்வயித்தாலாகையாலே அடிமையில் இரப்பைக் காட்டுகிறது. ( திருவாய் 9-2-3 ) ‘தொடர்ந்து குற்றேவல் ( திருவாய் 2-9-4 ) ‘ஆட்செய் எக்காலத்தும்’ ( முதல் திருவந் 53 ) ‘சென்றாலிருந்தால் நின்றால்’ ( திருவாய் 10-2-3 ) ‘ஊரும் புட்கொடியுமஃதே’ என்கிறபடியே எல்லா தேஶங்களிலும் திரைக்குள்ளோடு புறம்போடு வாசியற எல்லா அடிமைகளையும் ( திருவாய் 8-5-7 ) முகப்பே கூவிப் பணி கொண் டருளவேணுமென்கிற இரப்பை ( திருவாய் 3-3-1 ) ஒழிவில் காலத்திற்படியே காட்டக்கடவது.
மூலமந்த்ரார்த்த ஸங்க்ரஹம்
ஆக இத்திருமந்தரம் ஸர்வரக்ஷகனான ஶ்ரிய:பதிக்கு அநந்யார்ஹ ஶேஷ பூதனாய் ஶரீரேந்த்ரியாதிகளில் வேறுபட்டு ஜ்ஞாநாநந்தமயனாய். ஸ்வதந்த்ர னன்றிக்கே ஸர்வுப்ரகார பரதந்தரனான நான் உபயவிபூதிநாயகனான நாராயணனுக்கு ஸர்வவிதகைங்கர்யங்களிலும் அந்வயிக்கப்பெறுவேனாக வேணுமென்றிருக்கை ஆத்மாவுக்கு ஸ்வரூபமென்கிறது.
திருமந்த்ரத்தின் ஆபந்நிவர்த்தந ப்ரகாரம்
எம்பெருமானையொழிந்த பிறரை ரக்ஷகரென்றிருத்தல், தேஹாத்மாபிமாநம். அந்யஶேஷத்வம். ஸ்வஸ்வாதந்த்ர்யம். மமகாரம் நடத்தல், ஸ்ரீவைஷ்ண வர்களை ஸஜாதீயரென்றிருத்தல். தன் பேற்றுக்குத் தான் யத்நித்தல், பகவத் விபூதியில் சிலரோடே வெறுப்பு நடத்தல். ஸம்ஸாரிகளை உறவென்றிருத் தல், க்ஷுத்ரபோகங்களில் நெஞ்சு கிடத்தல் செய்யில் திருமந்த்ரத்தில் அந்வயமில்லையாகக்கடவது.
மூலமந்த்ரார்த்த நிகமநம்
( பெரியாழ் திரு 4-7-10 ) ‘மூன்றெழுத்து’ ( பெரிய திரு 8-9-3 ) ‘விடையேழன் றடர்த்து’ ( திருவாய் 2-9-9 ) ‘யானே என்னை’ ( திருவாய் 1-2-10 ) ‘எண்பெருக்கந்நலம்’ ( பெரிய திரு 1-1-6 ) ‘எம்பிரானெந்தை’ ( திருவாய் 3-3-1 ) ‘ஒழிவில் காலம்’ ( திருவாய் 3-3-6 ) ‘வேங்கடங்கள் ( பெரிய திரு 8-10-9 ) ‘நாட்டினாயென்னை’ என்கிற பாட்டுக்களைத் திருமந்த்ரார்த்தமாகப் பூர்வர்கள் அநுஸந்திப்பர்கள்.
அருளிச்செயல் ரஹஸ்யத்தில் திருமந்த்ரப்ரகரணம் முற்றிற்று.
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே ஶரணம்.