ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த
ப்ரமேய ஸாரம்
இதற்கு விஶதவாக் ஶிகாமணியான
ஶ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்.
தனியன்
நீங்காமலென்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும்
பூங்காவளம் பொழில்சூழ் புடைவாழும் புதுப்புளிமன்
ஆங்காரமற்ற வருளாள மாமுனியம்புதமே.
அவதாரிகை
ஸகல ஶாஸ்த்ர நிபுணராய் தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யவிதக்ரேஸராய், ஸமஸ்தஸம்ஸாரி சேதநோஜ்ஜீவன காமராய், தம்மை அடியிலே அங்கீகரித்தருளின எம்பெருமானார் திருவடிகளிலே சிரகாலம் ஸேவைபண்ணி, தத்வஹிதபுருஷார்த்த விஶேஷங்களெல்லாம் சரமபர்வபர்யந்தமாக அவரருளிச் செய்யக்கேட்டு தந்நிஷ்டராயிருக்கும் அருளாளப்பெருமா ளெம்பெருமானார் தம்முடைய பரமக்ருபையாலே ஸம்ஸாரிசேதநோஜ்ஜீவனார்த்தமாக ஸகலஶாஸ்த் ரங்களிலும் ஓரொரு ப்ரதேஶத்திலே தாத்பர்யரூபேண ப்ரதிபாதிக்கப்படுகையாலே ஸகலர்க்கும் அறியவரிதாம்படி யிருக்கிற அர்த்தவிஶேஷங்களை ஸங்க்ரஹித்து ஜ்ஞாநஸாரமாகிற ப்ரபந்தமுகேந வருளிச்செய்து தலைக்கட்டினவநந்தரம் ஸகலஶாஸ்த்ர ஸங்க்ரஹமா கையாலே ப்ரமாணஸாரமான திருமந்த்ரத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிற ப்ரமேயங்களில் ஸாராம்ஶத்தை ஸங்க்ரஹித்து இப்ரபந்தமுகேன வருளிச்செய்கிறார். ஆகையிறே இப்ப்ரபந்தத்துக்கு ப்ரமேயஸாரமென்று திருநாமமாயிற்று.
- அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார் – இவ்வாறு
கேட்டிருப்பார்க் காளென்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பாரென்றிருப்பன் நான்.
பதவுரை –
அவ்வானவர்க்கு – அகாரவாச்யனான ஸர்வேஶ்வரனுக்கு
மவ்வானவரெல்லாம் – மகாரவாச்யரான ஜீவாத்மாக்களெல்லாரும்
அடிமையென்று – ஶேஷபூதர்களென்று
உவ்வானவர் – கடகத்வமேஸ்வரூபமாயுள்ள ஆசார்யரானவர்கள்
உரைத்தார் – அருளிச்செய்தார்கள்
இவ்வாறு – இந்த ப்ரகாரத்தை
கேட்டு – உபதேஶமுகத்தாலே கேட்டு
இருப்பார்க்கு – அதிலே நிலைநின்றிருக்குமவர்களுக்கு
ஆளென்று – ஶேஷபூதர்களென்று
கண்டிருப்பார் – தங்களை தர்ஶித்திருக்குமவர்கள்
மீட்சியில்லா – புநராவ்ருத்தியில்லாத
நாடு – திருநாட்டிலேபோய்
இருப்பாரென்று – அடியார் குழாங்களுடன் கூடியிருக்குமவர்களென்று
நான் – எம்பெருமானார் திருவடிகளிலே ஸேவித்திருந்த நான்
இருப்பன் – ப்ரதிபத்தி பண்ணியிருப்பன்.
அவதாரிகை – முதற்பாட்டு. இதில் திருமந்த்ரத்துக்கு ஸங்க்ரஹமான ப்ரணவத்திலே ப்ரதிபாதிக்கப்படுகிற ப்ரமேயத்தில் ஸாராம்ஶத்தை அருளிச்செய்கிறார்.
வ்யாகாயானம் – (அவ்வானவர்க்கு) அகாரவாச்யனானவருக்கு “அ இதி ப்ரஹ்ம” (ருக்வேதம்) என்று அகாரத்தை ப்ரஹ்மஶப்தவாச்யனான ஸர்வேஶ்வரனோடே ஸமாநாதிகரித்துச் சொல்லிற்றிறே ஶ்ருதி. அந்த ஸாமாநாதிகரண்யந்தான் வாச்யவாசக ஸம்பந்தநிபந்தநமிறே. “ஸமஸ்த ஶப்தமூலத்வாத் அகாரஸ்யஸ்வபாவத: ஸமஸ்தவாச்யமூலத்வாத் ப்ரஹ்மணோபி ஸ்வபாவத: வாச்யவாசகஸம்பந்த: தயோரர்த்தாத் ப்ரதீயதே” (வாமநபுராணம்) என்னக்கடவதிறே.
(மவ்வானவரெல்லாம்) மவ்வானவரென்று மகார வாச்யரான ஜீவாத்மாக்களைச் சொல்லுகிறது. “மகாரோ ஜீவவாசக:” என்னக்கடவதிறே. இதுதான் ஏகவசனமாயிருந்ததேயாகிலும் ஜாத்யேகவசனமாய்க் கொண்டு ஸமஷ்டிவாசகமாயிருக்கையாலே த்ரிவி தாத்மவர்க்கத்தையும் சொல்லக்கடவதாயிருக்கும். ஆகையாலே மவ்வானவரெல்லாமென்கிறார்.
(உவ்வானவர்) உகாரவாச்யரானவர். இத்தால் ஆசார்யனைச் சொல்லுகிறது. எங்ஙனேயென்னில், உகாரம் லக்ஷ்மீ வாசகமாக ஶாஸ்த்ரஸித்த மாகையாலும், அவள்தனக்கு கடகத்வம் ஸ்வரூபமாகையாலும், தத்ஸாதர்ம்யமுண்டா கையாலே இவனுடைய கடகத்வத்துக்கு மூலம் அவள் திருவடிகளின் ஸம்பந்த விஶேஷமாகையாலே தத்ப்ரயுக்தமான ஐக்யமுண்டிறே. ஆகையால் தத்ஸாதர்ம்யத்தாலும், தத்ஸம்பந்தப்ரயுக்த ததைக்யத் தாலும் ஆசார்யனை உகாரவாச்யனென்கிறது.
எம்பெருமானார் ஒருநாள் உகப்பிலே முதலியாண்டானுக்கு அருளிச்செய்ததாக அவருடைய குமாரரான கந்தாடையாண்டான் பட்டருக்கு அருளிச்செய்த வர்த்தவிஶேஷங்களெல்லாம் ப்ரதிபாதிக்கிற ப்ரணவஸங்க்ரஹமாகிற ப்ரபந்தத்திலே ஆசார்யனை உகாரவாச்யனாகச் சொல்லாநின்றதிறே. இவரும் எம்பெருமானார் திருவடிகளிலே ஸேவித்தவராகையாலே அவரருளிச்செய்யக் கேட்டிருக் குமது கொண்டிறே இப்ரபந்தத்திலே இப்படியருளிச்செய்தது.
(அடிமையென்றுரைத்தார்) ஶேஷமென்றருளிச்செய்தார். ஸம்பந்தஜ்ஞாநம் பிறப்பிக்கை கடகக்ருத்யமிறே. ஈஶ்வரன் ஶேஷியாய் இத்தலை ஶேஷமாயிருந்தாலும் இஸ்ஸம்பந்தத்தை ஆசார்யன் உபதேஶத்தாலே உணர்த்தினபோதிறே இவனுக்கு ப்ரகாஶிப்பது. ஆகையாலே அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமையென்று உவ்வானவர் உரைத்தாரென்கிறார்.
(இவ்வாறு கேட்டிருப்பார்க்கு) இதுதான் உபதேஶகம்யமானதாலே இப்ப்ரகாரத்தை உபதேஶமுகத்தாலே கேட்டு, தந்நிஷ்டராயிருப்பார்க் கென்கிறார்.
(ஆளென்று கண்டிருப்பார்) அதாவது – அப்படியிருப்பார்க்கு ஶேஷமென்று தங்களை தர்ஶித்திருக்கு மவர்களென்கை. கீழ்சொன்ன பகவச்சேஷத்வம் தத்காஷ்டையான பாகவதஶேஷத்வ பர்யந்தமாயிருக்கையாலேயிறே இவரிப்படி யருளிச் செய்தது. திருமந்த்ரத்தில் பதத்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற அநந்யார்ஹஶேஷத்வ அநந்ய ஶரணத்வ அநந்யபோகத்வங்களாகிற ஆகாரத்ரயமும் ததீயாந்வய பர்யந்தமாயிறே இருப்பது. இதுதான் மூன்று பதத்திலும் ஆர்த்தமாகவருமித்தனையிறே. ஆகையாலே இப்பதத்திலார்த்தமாக ப்ரதிபாதிக்கப் படுகிறவித்தை அருளிச்செய்தாராயிற்று. ஆக இப்படித் தங்களைத் ததீயஶேஷத்வபர்யந்தமாக தர்ஶித்திருக்கு மவர்கள்.
(மீட்சியில்லா நாட்டிருப்பா ரென்றிருப்பன் நான்) புநராவ்ருத்தியில்லாத திருநாட்டிலேபோய் அடியார்கள் குழாங்களுடன் கூடியிருக்குமவர்களென்று ப்ரதிபத்தி பண்ணியிருப்பன் நான். நானென்கையாலே ஸ்வப்ரதிபத்தி விஶேஷத்தை யருளிச்செய்கிறார்.
எம்பெருமானார் திருவடிகளிலே ஸேவித்து ஸர்வஜ்ஞராய் பரமாப்தராயிருக்கையாலே தாமறுதியிட்டதே அர்த்தமென்று லோகம் பரிக்ரஹிக்கும்படியான மதிப்பராகையாலேயிறே “என்றிருப்பன் நான்” என்றருளிச்செய்தது.
@@@@@
இரண்டாம் பாட்டு
2. குலமொன்றுயிர் பலதங்குற்றத்தாலிட்ட
கலமொன்று காரியமும் வேறாம் – பலமொன்று
காணாமைகாணும் கருத்தார் திருத்தாள்கள்
பேணாமை காணும் பிழை.
பதவுரை:
குலம் – ஆத்மாவுக்கு நிருபாதிகமாயிருக்கும் ஶேஷத்வரூபமான குலம்
ஒன்று – ஒன்றேயுள்ளது
உயிர் – அந்த ஶேஷத்வாஶ்ரயமான ஆத்மாக்கள்
பல – அஸங்க்யாதர்
தம் குற்றத்தால் – தாங்கள் பண்ணின புண்யபாபரூப கர்மமடியாக
இட்ட – ஈஶ்வரன் இவர்களுக்குக் கொடுத்த
கலம் – ஶரீரமாகிற பாத்ரம்
ஒன்று – ஒன்றேயாகும்.(தேவாதி பேதத்தால் ஶரீரங்களனேகமானாலும் எல்லாம் ப்ரக்ருதிபரிணாமமாகையால் அத்தையிட்டு ஒன்றென்று சொல்லப்பட்டது)
காரியமும் – அந்தந்த தேஹபரிக்கரஹத்தா லுண்டாகும் புண்யபாபபலாநுபவ ரூபமான ஸுகது:க்காதிகளாகிற காரியமும்
வேறாம் – பலவகைப்பட்டிருக்கும் (இப்படி ஸம்ஸாரம் இடைவிடாமல் நடக்கைக்கடி சொல்லுகிறார் மேல்)
பலமொன்று- க்யாதிலாபபூஜாதிகளாகிற பலமொன்றிலும்
காணாமை – கண்வையாதே
காணும் கருத்தார் – இவ்வாத்மாவி நுஜ்ஜீவநத்திலேயே நோக்கான நினைவையுடைய ஆசார்யனது
திருத்தாள்கள் – திருவடிகளை
பேணாமைகாணும் – ஆஶ்ரயியாமை காணுங்கோள்
பிழை – இப்படி ஸம்ஸாரம் அவிச்சிந்நமாய்ச் செல்லுகைக்கடியான கூற்றம்.
அவதாரிகை – இரண்டாம் பாட்டு. மகாரவாச்யரில் பத்தசேதநரானவர்களுக்கு ஸம்ஸாரம் ஒழுக்கறாமல் செல்லுகைக்கடி ஸதாசார்ய ஸமாஶ்ரயணமில்லாமை என்கிறார்.
வ்யாக்யானம் – (குலமொன்று) நிருபாதிகமாய் நித்யமாய் இருக்கும் குலமொன்று. அதாவது – கீழ்ச்சொன்ன ஶேஷத்வம்; தொண்டக்குலமிறே. (உயிர்பல) ஆத்மாக்களனேகர் – அதாவது – அந்த ஶேஷத்வாஶ்ரயமான வாத்மாக்கள் அஸங்க்யாதரென்கை. (தங்குற்றத்தாலிட்ட கலமொன்று) அதாவது – தாங்கள் பண்ணின புண்யபாபரூப கர்மமடியாகத் தங்களை ஈஶ்வரனிட்டுவைத்த ஶரீரமாகிற கலமொன்றென்கை. தங்குற்றத்தாலிட்ட கலமொன்றென் கையாலே – ஈஶ்வரன் இவ்வாத்மாக்களை ஶரீரத்திலிடுவது அவ்வவருடைய கர்மங்களை யாராய்ந்து அதுக்கீடாக வென்னுமிடம் சொல்லுகிறது. கலமொன்றென்றது – தேவாதிஜாதி பேதத்தாலும் தத்ததவாந்தரபேதத்தாலும் அநேகமாயிருந்ததேயாகிலும் எல்லாம் ப்ரக்ருதிபரிணாம ரூபமென்னுமதில் பேதமில்லாமையாலே.
(காரியமும் வேறாம்) அந்த தேஹபரிக்ரஹத்தால் கொள்ளும் கார்யமும் பிந்நமாயிருக்கும். காரியமாவதுதான் கர்மபலாநுபவமிறே. அது வேறாகையாவது – புண்யபலா நுபவமும், பாபபலாநுபவமும், உபயபலாநுபவமாய்க்கொண்டு வேறுபட்டிருக்கை. காரியமுமென்றது – குலமொன்றா யிருக்க, உயிர்பலவானாப்போலே, குற்றத்தாலிட்ட கலமொன்றாயிருக்க தத்கார்யமான பலாநுபவமும் பலவகைப்பட்டிருக்குமென்று நினைத்து, ஶேஷத்வமே குலமான வாத்மாக்களுக்கு புண்யபாபரூபகர்ம ஸம்பந்தமும், அதடியான தேஹபரிக்ரஹமும், அதின் கார்யமான ஸுகது:க்காநுபவமும், இப்படி ஒழுக்கறாமல் நடப்பானேனென்னுமாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் மேல்.
(பலமொன்றென்று துடங்கி) அதாவது – ஓராத்மாவை அங்கீகரிக்குமளவில் க்யாதிலாப பூஜைகளாகிற பலமொன்றில் கண்வையாதே இவ்வாத்மாவினுடைய உஜ்ஜீவநமே ப்ரயோஜநமாக விஶேஷகடாக்ஷத்தைப் பண்ணும் நினைவையுடையனான வாசார்யனுடைய திருவடிகளை யாஶ்ரயியாமை காணுங்கோள் ஸம்ஸாரம் அவிச்சிந்நமாய்ச் செல்லுகைக்கடியான குற்றமென்கை. பலமொன்று காணாமைகாணும் கருத்தாரென்கையாலே – ஆசார்யவைபவம் சொல்லுகிறது. திருத்தாள்கள் பேணாமையென்ற விடத்தில், பேணுகையாவது – விரும்புகையாய், பேணாமையாவது – விரும்பாமை யாகையாலே ஆஶ்ரயியாமையைச் சொல்லுகிறது. பிழை – குற்றம்.
@@@@@
மூன்றாம்பாட்டு
3. பலங்கொண்டு மீளாத பாவமுளதாகில்
குலங்கொண்டு காரியமென்கூறீர் – தலங்கொண்ட
தாளிணையானன்றே தனையொழிந்த யாவரையும்
ஆளுடையானன்றே யவன்.
பதவுரை
பாலங் கொண்டு – ஐஸ்வர்யாதிகளிலேதேனு மொருபலத் தைக்கொண்டல்லது
மீளாத – (உபதேசாதிகளால் திருத்தினாலும்) மீளாமல் பற்றிநிற்கும் படியான
பாவம் – பாபமானது
உளதாகில் – உண்டாயிருக்குமாகில்
குலங்கொண்டு – போஷத்வமாகிற ஸம்பந்த மிருப்பதால்
காரியமென் – என்னப்ரயோஜநமுண்டு;
கூறீர் – சொல்லுங்கோள்;
தலங்கொண்ட – ஸமஸ்த லோகங்களையும் அளந்துகொ
தாளினையான் – திருவடிகளையுடையனான ண்ட
அவன் – அந்தஸர்வேஸ்வரன்
அன்றே – அப்படியளந்து கொண்ட காலத்திலே
தனையொழிந்த – தன்னையொழிந்த
யாவரையும் – ஸகலாத்மாக்களையும்
ஆளுடையானன்றே – தனக்கடிமையாக வுடையவனன்றோ (இப்படி ஶேஷத்வஸம்பந்தம் அநா திஸித்த மென்றறிந்திருக்கச்செய் தேயும் நம்மை ஸம்ஸாரத்தில் நின் றும் எடாமலிருப்பது ப்ரயோஜ நாந்தர ருசிகிடப்பதாலென்று கரு த்து).
அவதாரிகை – மூன்றாம்பாட்டு. ப்ரயோஜநாந்தரப்ராவண்யம் நடக்குமாகில் ஶேஷத்வமாகிற குலங்கொண்டு என்ன ப்ரயோஜநம்; திருவுலகளந்தருளின ஸர்வேஶ்வரன் தத்காலத்திலே ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தாத்மாக்களையும் ஸ்வஶேஷமாகவுடையவனன்றோ வென்கிறார்.
வ்யாக்யானம் – (பலங்கொண்டு மீளாத பாவமுளதாகில்) ஐஶ்வர்யாதிகளிலே ஏதேனுமொரு பலத்தைக் கைக்கொண்டு, வேண்டாவென்றாலும் அதினின்றும் மீளாமல் பற்றிநிற்கும்படியான பாபமுண்டாயிருக்குமாகில். அன்றிக்கே, பாவமென்றது பாவமென்றபடியாய், பலத்தைக்கொண்டு இதில் நின்றும் மீளாமல் பற்றிநிற்கும்படியான நினைவுண்டாயிருக்குமாகில் என்னவுமாம். (குலங்கொண்டு காரியமென்கூறீர்) ப்ரயோஜநாந்தரருசி கிடக்குமாகில், ஈஶ்வரன் இவ்வாத்மாவை ஸம்ஸாரத்தில் துவக்கறுத்துத் தன் திருவடிகளில் வாங்காமையாலே ஶேஷத்வமாகிற குலத்தால் என்ன ப்ரயோஜநமுண்டு சொல்லுங்கோளென்கை. அதுவென்? – ஶேஷத்வஜ்ஞாநமுண்டானால் இவன் நம்முடையவனென்றபிமானித்து ஈஶ்வரன் காரியம் செய்கைக்குடலாகாதோ வென்கிற ஶங்கையிலே யருளிச்செய்கிறார் மேல்.
(தலமென்று துடங்கி) (தலங்கொண்ட தாளிணையான்) பூமியும் உபரிதநலோகமுமான ஸகலஸ்தலத்தையும் அளந்துகொண்ட திருவடிகளிரண்டையு முடையவன். (அன்றே) அப்படி யளந்துகொண்டவக் காலத்தில்.
(தனையொழிந்த யாவரையும் ஆளுடையானன்றேயவன்) தன்னையொழிந்த ஸகலாத்மாக்களையும் தனக்கடிமையாக வுடையவனன்றோ வவனென்கை. இத்தால் திருவுலகளந் தருளினபோது எல்லார் தலைகளிலும் திருவடிகளைவைத்து அப்போதே எல்லாரையும் தனக்குச் சேஷமாக்கிக் கொண்டானாக நினைத்து ஸந்துஷ்டனாய் நின்றவன், இத்தைவரையாக இவ்வாத்மாக்களை ஸம்ஸாரத்தில்நின்றும் எடாதிருக்கிறது இவர்களுடைய அந்யபரதையறுந்தனையும் பார்த்திறே. ஆகையால், இவன்றனக்குச் சேஷத்வமுண்டானாலும் ப்ரயோஜநாந்தரபரதை யற்றா லொழிய இவனை ஸம்ஸாரத்தில் நின்றும் அவனெடாமையாலே ப்ரயோஜநாந்தரருசி கிடக்கவுண்டான ஶேஷத்வஜ்ஞாநத்தால் என்ன ப்ரயோஜந முண்டென்றதாயிற்று.
ஆக, மூன்று பாட்டாலே ப்ரணவார்த்தத்தை யருளிச்செய்தார். இனிமேல் நாலு பாட்டாலே நமஶ்ஶப்தார்த்தத்தை யருளிச்செய்கிறார். நமஸ்ஸுக்கர்த்தம் அநந்யஶரணத் வமிறே. அதுக்கு உபயோகியான அர்த்தவிஶேஷங்களை உபபாதித்தருளுகிறார்.
@@@@@
நாலாம் பாட்டு
4. கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே
தருமத்தாலன்றி யிறைதாள்கள் – ஒருமத்தால்
முந்நீர்கடைந்தானடைத்தான் முதல் படைத்தான்
அந்நீரமர்ந்தானடி.
பதவுரை
ஒருமத்தால் -மந்தரபர்வதமாகிற ஒருமத்தாலே
முந்நீர் – அகாதமான ஸமுத்ரத்தை
கடைந்தான் – தேவதைகளுக்காகக் கடைந்தவனாய்
அடைத்தான் – பிராட்டி நிமித்தமாக அக்கடலை மலைக ளாலே அடைத்தவனாய்,
முதல் – ஸ்ருஷ்டியின் முதலிலே
படைத்தான் – அந்தஜலத்தை ஸ்ருஷ்டித்தவனாய்,
அந்நீர் – அந்த ஜலத்திலே
அமர்ந்தான் – சேதநரக்ஷணார்த்தமாகக் கண்வளர்ந்த ருளினவனாய்,இப்படி ஆர்ரி தரக்ஷகனான ஸர்வேஸ்வரனுடைய
அடி – திருவடிகளை
இறை, – ஶேஷியானவவனுடைய
தாள்கள் – திருவடிகள்தானே
தருமந்தாலன்றி – தருகையாகிறவற்றாலொழிய [லும்
கருமத்தால் – ஸ்வயத்தரூபமான கர்மயோகத்தா
ஞானத்தால் – ஜ்ஞாக பக்தியோகங்களினாலும்
காணும்வகையுண்டே- காணும் ப்ரகாரமுண்டோ
அவதாரிகை – நாலாம் பாட்டு. ஶேஷியானவன் திருவடிகளைத்தானே தருகையாலொழிய உபாயாந்தரங் களால் காணவிரகுண்டோ வென்கிறார்.
வ்யாக்யானம் – (கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே) அதாவது – கர்மயோகத்தாலும், ஜ்ஞாநயோகத்தாலும், பக்தியோகத்தா லும் காணும் ப்ரகாரமுண்டோ வென்கை. ஞானத்தாலென்கிறவிதிலே பக்தியும் சொல்லுகிறது. “பக்திஶ்சஜ்ஞாநவிஶேஷ:” என்கிறபடியே அதுதான் ஜ்ஞாநவிஶேஷமாகையாலே. “கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜநகாதய:” (கீதா) “ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஶம் பவித்ரமிஹவித்யதே” (கீதா – 9.34) என்றும், “மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத்பராயண:” என்றும் கர்மாதிகளில் ஓரொன்றை பகவத்ப்ராப்தி ஹேதுவாகச் சொல்லாநிற்கும். இவற்றால் காணும் வகையுண்டோவென்று இவர் அருளிச்செய்தது, இவற்றினுடைய ஸ்வரூபத்தையும் பகவத்வைபவத்தையும் தெளியக்கண்டவராகையாலே. இவை பலவ்யாப்தமாய்ப் போருகிறது – ப்ரபத்தி இவற்றுக்கங்கமாய் நின்று கார்யம் செய்துகொடுக்கையாலே என்று கருத்து.
(தருமத்தாலன்றி இறைதாள்கள்) அதாவது – ஶேஷியானவன் திருவடிகள் தானே தருகையாகிறவற்றாலொழிய வென்றபடி. இறையென்று ப்ரதமபதத்திற்சொன்ன அகாரவாச்யனான ஶேஷியைச் சொல்லுகிறது. தாள்கள் தருமத்தாலன்றி என்றது – திருவடிகளே உபாயமென்கிற ப்ரமாணப்ரஸித்தியாலே. பூர்வவாக்யத்தால் உபாயவரணம் சொல்லுகிறவளவில் “சரணௌ ஶரணம் ப்ரபத்யே” என்னாநின்றதிறே. “ஆரெனக்கு நின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய்” (திருவாய் – 5.7.10) என்றும், “கழல்களவையே சரணாகக்கொண்ட” (திருவாய் – 5.8.11) என்றும் “அடிமேல் சேமங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்” (திருவாய் – 5.9.11) “சரணே சரண் நமக்கு” (திருவாய் – 5.10.11) என்றும், திருவடிகளே உபாயமென்னுமதை ஒருகால்போலே பலகாலும் ஆழ்வார் அருளிச்செய்தாரிறே.
(ஒரு மத்தால் முந்நீர் கடைந்தான்) தூர்வாஸ ஶாபோபஹதராய் வந்து ஶரணம் புகுந்த இந்த்ராதிகளுக்காக மந்தரபர்வதமாகிற ஒரு மத்தாலே ஒருவராலும் கலக்கவொண்ணாத ஜலஸம்ருத்தியையுடைய கடலைக் கடைந்தவன்.
(அடைத்தான்) “ஸீதாமுககமல ஸமுல்லாஸஹேதோஶ்ச ஸேதோ:” என்கிறபடியே பிரிவாலே தளர்ந்த பிராட்டி முககமல விகாஸத்துக்காக நீரைக்கண்டாலே வெருவியோடும் குரங்குகளைக்கொண்டு நீரிலே அமிழக்கடவ மலைகளாலே “அப்ரமேயோ மஹோததி:” (ராமாயண யு.கா – 16.31) என்கிறபடியே ஒருவரால் அளவிடவொண்ணாத ஆழத்தையும் அகலத்தையும் உடைத்தான கடலையடைத்தவன்.
(முதல் படைத்தான்) கரணகளேபரவிதுரராய், போகமோக்ஷஶூந்யராய்க் கிடந்த ஸம்ஸாரிசேதநரை கரணகளேபரப்ராப்தியாலே போகமோக்ஷபாகிகளாக்கு கைக்காக, “அப ஏவ ஸ ஸஸர்ஜாதௌ” (மநு – 1.8) என்கிறபடியே ஆதியிலே ஜலதத்வத்தை ஸ்ருஷ்டித்தவன்.
(அந்நீரமர்ந்தான்) ஸ்ருஷ்டரான விவர்களுடைய ரக்ஷணார்த்தமாக “வெள்ளத்தடங்கடலுள் விடநாகணைமேல் மருவி” (திருவாய் – 7.8.4) என்கிறபடியே அந்த ஜலத்திலே கண்வளர்ந்தருளினவன்.
(அடி) அவனுடைய திருவடிகளை. இத்தால் ப்ரயோஜநாந்தரபரராய் இன்றாஶ்ரயித்த தேவர்களோடு நித்யாஶ்ரிதையான பிராட்டியோடு நித்யஸம்ஸாரிகளான சேதநரோடு வாசியற எல்லாரையும் ரக்ஷித்தவனுடைய திருவடிகளையென்கை. “ஒரு மத்தால் என்று துடங்கி அந்நீரமர்ந்தானடி இறைதாள்கள் தருமத்தாலன்றி கருமத்தால் ஜ்ஞாநத்தால் காணும் வகையுண்டோ” என்றந்வயம்.
@@@@@
அஞ்சாம்பாட்டு
5. வழியாவதொன்றென்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவதொன்றென்றாலோமென்று – இழியாதே
இத்தலையாலேதுமில்லை யென்றிருந்ததுதான்
அத்தலையால் வந்தவருள்.
பதவுரை
வழியாவது – ப்ராப்திஸாதநமாவது
ஒன்றென்றால் – நான்காவதான ஹித்தோபாயமொன் றுதானென்று சொன்னால்
மற்றவை – ஸித்தோபாய வ்யதிரிக்தமான
முற்றும் – உபாயாந்தரங்களெல்லாவற்றையும்
ஒழியா – நிஸ்ஸேஷ்மாகப் பரித்யஜித்து. (அது தன்னிலும்)
அது – அந்த ஸித்தோபாயமானது
ஒன்றென்றால் – சேதாஸ்வீகாரத்தி லுபாயபுத்தியையும் ஸஹியாதபடி அத்விதீயமென்றால்
ஓமென்று – உடன்பட்டு
இழியாதே – ஹித்தோபாயம் ஸ்வீகாரஸாபேக்ஷ் மென்று அவ்வழியாலிழியாதே
இத்தலையால் – இத்தலையான சேதநரால்
ஏதுமில்லையென்று – ப்ராப்திஸாதநமாக வநுஷ்டிப்பது ஒன்று மில்லையென்று
இருந்ததுதான் – தங்கள் வெறுமையை அநுஸந்தித்திருந்த அவ்விருப்புத்தான்,
அத்தலையால் வந்த – அத்தலையான ஸர்வேஸ்வரனால் வந்த
அருள் – க்ருபையின் பலம்
அவதாரிகை – அஞ்சாம்பாட்டு. ஸித்தோபாயத்தின்படியைக் கண்டால் உபாயாந்தரங்களை ஸவாஸநமாகவிட்டு, அதுதன்னிலும் தன்னுடைய ஸ்வீகாரத்திலுபாயபுத்தியற்றுத் தன் வெறுமையை அநுஸந்தித்திருக்குமது ஸர்வேஶ்வரனுடைய க்ருபாபலமென்கிறார்.
வ்யாக்யானம் – (வழியாவதொன்றென்றால்) உபாயமாவது ஒன்றென்றால். அதாவது – கர்மஜ்ஞாநபக்திப்ரபத்திகளென்று நாலுபாயமாக ஶாஸ்த்ரம் சொல்லிற்றேயாகிலும், கர்மாதியான மூன்றும் கார்யஸித்தியில் ஈஶ்வரன்கை பார்த்திருக்குமவையாகையாலே அவற்றுக்கு ஸாக்ஷாத் உபாயத்வமில்லை. ஆனபின்பு ஸாக்ஷாதுபாயமாவது – சதுர்த்தோபாயமொன்றென்று சொன்னாலென்கை.
(மற்றவையும் முற்றுமொழியா) அதாவது – “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிறபடியே மற்றுமுண்டான உபாயாந்தரங்கள் எல்லாவற்றையும் ஒன்றொழியாமல் விட்டென்கை. மற்றவையுமென்று – ஸித்தோபாய வ்யதிரிக்தமான ஸகலோபாயங்களைச் சொல்லுகிறது. முற்றுமென்று – அவற்றைவிடும்போது நிஶ்ஶேஷமாக விடவேணுமென்கிறது. ஒழியாவென்றது – ஒழிந்தென்றபடியாய். பரித்யஜித் தென்றபடி.
(அதொன்றென்றால்) அந்த ஸித்தோபாயமானது ஏகபதத்தில் சொல்லுகிறபடியே சேதநருடைய ஸ்வீகாரத்தில் உபாயபுத்தியையும் ஸஹியாதபடி அத்விதீயமென்றால். (ஓமென்று) உடன்பட்டு. (இழியாதே) நம்முடைய ஸ்வீகாரமுண்டானாலன்றோ அது கார்யகரமாவதென்று இவ்வழியாலே தான் இவ்வுபாயத்துக்குள்ளிழியாதே.
(இத்தலையாலேதுமில்லை என்றிருந்ததுதான்) இப்பேற்றுக் குடலாகச் சொல்லலாவது இத்தலையா லொன்றுமில்லை என்று தன் வெறுமையை யநுஸந்தித்திருந்த அவ்விருப்புதான்., (அத்தலையால் வந்தவருள்) “அளிவருமருள்” (திருவாய் – 1.3.2) என்கிறபடியே நிர்ஹேதுகமாக அவன் தன் நினைவாலே வந்த க்ருபையினுடைய பலமென்கை. அருளென்றது – அருளின் பலமென்கை.
@@@@@
ஆறாம்பாட்டு
6. உள்ளபடியுணரி லொன்று நமக்குண்டென்று
விள்ளவிரகிலதாய் விட்டதே – கொள்ளக்
குறையேதுமில்லார்க்குக் கூறுவதென் சொல்லீர்
இறையேதுமில்லாத யாம்.
உள்ளபடி – ஸ்வஸ்வரூபத்தை உள்ளபடி
உணரில் – தர்ஶித்தால்
ஒன்று – பேற்றுக்கு உடலாவதொன்று
நமக்கு – அகிஞ்சநரான நமக்கு
உண்டென்று – உளதென்று
விள்ள – பிரிய நிற்க
விரகிலதாய்விட்டதே – வழியற்று விட்டதன்றோ?
கொள்ள – நம்பக்கல் கொள்ளவேண்டும்படியான
குறையேதுமில்லார்க்கு – குறை ஒன்றுமில்லாத ஸர்வேஶ்வரனுக்கு
இறையேதுமில்லாத – அவனுக்கு ஶேஷமான ஆத்மாத்மீயங்களில் ஏகதேஶமுமில்லாத
யாம் – ஶேஷபூதரான நாம்
கூறுவதென் – (நம்மை ரக்ஷிக்கைக்குடலாக) அவனைக்குறித்துச் சொல்லுவதென்?
சொல்லீர் – சொல்லுங்கோளென்று ஸந்நிஹிதரைப் பார்த்துச் சொல்லுகிறார்.
அவதாரிகை – ஆறாம்பாட்டு. ஸ்வரூபயாதாத்ம்ய தர்ஶியாய் இவ்வுபாயத்தில் அதிகரித்தவன் அநுஸந்தித்திருக்கும் ப்ரகாரத்தை ஸ்வகதமாக வருளிச்செய்கிறார்.
வ்யாக்யானம் – (உள்ளபடியுணரில்) ஸ்வரூபத்தை உள்ளபடி தர்ஶிக்கில். அதாவது – ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வாதிகளோடும் ஶேஷத்வத்தோடும் கூடியிருக்கிற மேலெழுந்த ஆகாரத்தையிட்டு தர்ஶிக்கையன்றிக்கே, ஸ்வரக்ஷணே ஸ்வயத்நகந்தாஸஹமான பாரதந்த்ர்யமே வடிவான வவ்வளவும் செல்ல தர்ஶிக்கிலென்கை.
(ஒன்று நமக்குண்டென்று விள்ளவிரகிலதாய் விட்டதே) பேற்றுக்குடலான தொன்று நமக்குண்டென்று வாய்விடுகைக்கு வழியற்று விட்டதேயென்கை. அன்றிக்கே, விள்ளுகையாவது – நீங்குகையாய், அவனபிமானத்திலே ஒதுங்கிகிடக்குமதொழியப் பேற்றுக்கு உடலாக நமக்கொன்றுண்டென்று பிரிய நிற்க விரகற்றுவிட்டதே என்னவுமாம். அதுவென்? நமக்கு ரக்ஷகனானாலும், “ரக்ஷமாம்” (பாரத.ஸபா – 66.41 என்கிறபடியே ஓருக்திமாத்ரம் இவனும் சொல்லவேண்டாவோ வென்கிற ஶங்கையிலே யருளிச்செய்கிறார் மேல்.
(கொள்ளக் குறையேதுமில்லார்க்கு) தான் ரக்ஷிக்குமிடத்தில் நம்பக்கலுள்ள தொன்றையும் கூட்டிக்கொள்ள வேண்டாதபடி நிரபேக்ஷரானவர்க்கு. (இறையேதுமில்லாத யாம்) ஆத்மாவோடு ஆத்மீயங்களோடு வாசியற ஸகலமும் அங்குத்தைக்கு ஶேஷமாகையாலே ஏகதேஶமுமொன்று மில்லாத நாம்.
(கூறுவதென் சொல்லீர்) நம்மை ரக்ஷிக்கைக்குடலாக அவரைக் குறித்துச் சொல்லுவதென்? சொல்லுங்கோளென்று ஸந்நிஹிதரைப் பார்த்து வருளிச்செய்கிறார். இத்தால், அவன் பரிபூர்ணனாய் நாம் தரித்ரரானபின்பு உபயஸ்வரூபாநுகுணமாக அவன்றானே ரக்ஷிக்குமித்தனை யொழிய நாம் சொல்லவேண்டுவதொன்றுண்டோ வென்கை.
@@@@@
ஏழாம்பாட்டு
7. இல்லையிருவர்க்கு மென்றிறையை வென்றிருப்பார்
இல்லையஃ தொருவர்க்கெட்டுமதோ – இல்லை
குறையுடைமைதானென்று கூறினாரில்லா
மறையுடைய மார்க்கத்தே காண்.
பதவுரை
இருவருக்கும் – ஶேஷஶேஷிகளிருவர்க்கும்
இல்லையென்று – ஓரில்லாமை உண்டென்று
(இவ்வநுஸந்தானத்தாலே)
இறையை – ஶேஷியானவனை
வென்றிருப்பாரில்லை – ஜயித்திருப்பார் ஒருவருமில்லை.
அஃது – அவ்வநுஸந்தாநம்
ஒருவர்க்கு – ஒருவருக்கு
எட்டுமதோ – எய்துமோ
குறைதான் – அவனுக்கு இத்தலையில் கொள்ளவேண்டும் குறைதான்
இல்லை – இல்லை.
உடைமைதான் – இவனுக்கு அத்தலைக்கு ஸமர்ப்பிக்கத்தக்க உடைமைதான்
இல்லை – இல்லை,
என்று – என்று
கூறினாரில்லா – அபௌருஷேயமான
மறையுடைய மார்க்கத்தே – வேதமார்க்கத்தில்
காண் – கண்டுகொள்.
அவதாரிகை – ஏழாம்பாட்டு. குறையேதுமில்லார்க்கென்றும், இறையேதுமில்லாதயாமென்றும், அருளிச்செய்த ப்ரஸங் கத்திலே இப்படி இரண்டுதலைக்குமுள்ள வில்லாமையை யநுஸந்தித்து, ஶேஷியானவனை ஜயித்திருப்பாரில்லை, அது ஒருவர்க்கு ஸித்திக்குமதோ வென்கிறார்.
வ்யாக்யானம் – (இல்லையிருவர்க்குமென்று) இரண்டு தலைக்கும் ஓரில்லாமை யுண்டென்றநுஸந்தித்து. (இறையை வென்றிருப்பாரில்லை) ஶேஷியானவனைத் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே வீசுகொம்பாய் நிற்கையைவிட்டுப் பரதந்த்ரனாய்வந்து நிற்கும்படி இவ்வநுஸந்தானத்தாலே ஜயித்திருப்பார் ஒருவருமில்லை.
(அஃதொருவர்க்கெட்டுமதோ) அந்தவநுஸந்தானம் ஒருவர்க் கெய்துமதோ? அதிதூரமன்றோவென்கை. இருவர்க்கு மில்லையென்ற வதுதான் ஏதென்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் மேல். (இல்லை குறையுடைமை தானென்று) அவனுக்கு இத்தலையில் ஒன்றும் கொள்ளவேண்டும் குறையில்லை. இவனுக்கு அத்தலைக்கொன்றும் கொடுக்கத்தக்க உடைமைதானில்லை யென்று.
(கூறினாரெல்லாம் மறையுடைய மார்க்கத்தேகாண்) அதாவது – அபௌருஷேயமாகையாலே விப்ரலம்பாதிதோஷ ஸம்பாவநாகந்தரஹிதமாய், அத ஏவ ஆப்ததமமாயிருக்கிற வேதமார்க்கத்தை தர்ஶித்துக்கொள் என்கை. மார்க்கத்தைக்காண் என்று ஸந்நிஹிதனாயிருப்பா னொருத்தனைப் பார்த்துச் சொல்லுமாப்போலே, ஸர்வர்க்குமுபதேஶமாக வருளிச்செய்தாராயிற்று.
@@@@@
எட்டாம்பாட்டு
8. வித்தமிழ வின்பம் துன்பம் நோய் வீகாலம்
தத்தமவையே தலையளிக்கும்- அத்தை விடீர்
இச்சியானிச்சியா தேத்தவெழில் வானத்
துச்சியானுச்சி யானாம்.
பதவுரை
வித்தம் – தநத்தினுடைய
இழவு – விநாஶமும்
இன்பம் – ஸுகமும்
துன்பம் – து:க்கமும்
நோய் – ரோகாதிகளும்
வீ காலம் – ஶரீரவிநாஶகாலமும் ஆகிய இவையெல்லாவற்றையும்
தத்தமவையே – தந்தாமுக்கடியான அந்தக் கர்மங்கள்தானே
தலையளிக்கும் – பலதஶையிலே கொடுக்கும்
அத்தை – அதில்
விடீர் – மநஸ்ஸு வைக்கவேண்டா
இச்சியான் – ப்ரயோஜநாந்தரங்களில் ஒன்றையுமிச்சியாதவன்
இச்சியாது – மோக்ஷாதிரூபமான ஒருப்ரயோஜநத்தையும் இச்சியாமல்
ஏத்த – வாய்படைத்த ப்ரயோஜநம்பெறும்படி ஸர்வேஶ்வரனைத் துதிக்க
எழில்வானத்து – விலக்ஷணமான பரமபதத்தில்
உச்சியான் – உயர்ந்த நிலத்திலே எழுந்தருளியிருக்கும் ஸர்வேஶ்வரனுக்கு
உச்சியானாம் – ஶிரஸாவஹிக்கத் தக்கவனாவான்.
அவதாரிகை – எட்டாம்பாட்டு. நாராயண பதார்த்தமான அநந்யபோகத்வத்தை யருளிச்செய்கிறார். கைங்கர்யமே புருஷார்த்தமென்றும் அது பண்ணும் க்ரமமுமிறே அதில் சொல்லுவது. அவையிரண்டையும் ஸங்க்ரஹேண வருளிச்செய்கிறார் இதில்.
வ்யாக்யானம் – (வித்தமித்யாதி) கைங்கர்யம் பண்ணுமதிகாரிக்கு ஶரீரத்தோடிருக்கும் நாள், வரும் வித்தலாப தத்வியோகாதிகளடியாக வந்த ஹர்ஷ ஶோகங்கள் பரமபுருஷார்த்தமான கைங்கர்யத்திற் செல்லுகிற மநஸ்ஸைப் பாரவடிக்குமவையாகையாலே அவை வந்தாலும் மநஸ்ஸு கலங்காமல் இவனிருக்கைக்குடலான விவற்றை முந்துறவருளிச் செய்கிறார். வித்தம் – தநம். அதாவது – ஸ்வர்ணரஜதாதிகள். இழவு – தத்விநாஶம். அதாவது – அஸ்திரமாகையாலே அவற்றுக்கு வருமிழவு. இன்பம் – அநுகூலவஸ்த்வநுபவமாகிற ஸுகம். துன்பம் – ப்ரதிகூலவஸ்த்வநுபவமாகிறது:க்கம். நோய் – ஶாரீரமான ரோகங்கள். வீகாலம் – ஶரீரத்தினுடைய விநாஶகாலம். வீவு – முடிவு. இவையெல்லாவற்றையும்.
(தத்தமவையே) தந்தாமுக்கடியான அந்த கர்மங்களே. (தலையளிக்கும்) விபாகதஶையிலே கொடுக்கும். ப்ராரப்தகர்ம பலங்களானவை வாராதொழியாதிறே. (அத்தை விடீர்) அதாவது – அதில் மநஸ்ஸு வைக்கவேண்டா வென்றபடி. இனிமேல் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது. (இச்சியான்) ஐஶ்வர்யாதிகளாகிற ப்ரயோஜநாந்தரங்களில் ஒன்றையும் இச்சியாதவன்.
(இச்சியாதேத்த) ஏத்துகிறவிதுக்குப் பரமபதாதிகளாகிற வொன்றையும் ப்ரயோஜநமாக விச்சியாதே ஸ்வயம் ப்ரயோஜநமாக வேத்த. ஏத்துகையாவதுதான் – வாசிக கைங்கர்யமிறே. “ஆழியங்கையம்மானை யேத்தாதயர்த்து – வாளாவிருந்தொழிந்தேன் கீழ்நாட்களெல்லாம்” (பெரிய திரு வந் – 82) என்றாரிறே ஆழ்வார். இதுதான் மாநஸிகவாசிககாயிக கைங்கர்யங்களுக்கு முபலக்ஷணம். இப்படி அடிமை செய்ய.
(எழில் வானத்துச்சியானுச்சியானாம்) அதாவது – “நாகஸ்யப்ருஷ்டே” (தை .நா) என்கிறபடியே விலக்ஷணமான பரமாகாஶத்திலுயர்ந்த நிலத்திலே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஶ்வரனுக்கு ஶிரஸாவாஹ்யனாமென்கை. இத்தால் இங்கேயிருந்து இப்படி அடிமைசெய்யுமவன் நித்யமுக்தரை யடிமைகொண்டு அங்கே எழுந்தருளியிருக்குமவனுக்கு அத்யாதரணீயனாமென்ற தாயிற்று.
@@@@@
ஒன்பதாம் பாட்டு
9. தத்தமிறையின் வடிவென்று தாளிணையை
வைத்தவரை வணங்கியிறாப் – பித்தராய்
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால்
வந்திப்பார்க்குண்டிழி யாவான்.
பதவுரை
தாளிணையைவைத்த – அஜ்ஞாநாந்தகாரம் போம்படி தம் திருவடிகளை வைத்தருளின
அவரை – ஆசார்யனை
தம் தம் இறையின் – நமக்கு ஸ்வாமி, நமக்கு ஸ்வாமி என்று முறை சொல்லத்தக்க ஸர்வேஶ்வரனை
வடிவென்று – திவ்யவிக்ரஹமென்று
வணங்கியிரா – க்ரமத்திலே அநுவர்த்தித்திராதே
பித்தராய் – ப்ராந்தராய்
நிந்திப்பார்க்கு – மாநுஷப்ரதிபத்திபண்ணி நிந்திப்பவர்களுக்கு
ஏறா – ஒருகாலும் கரையேற்றமின்றிக்கே இருப்பதாய்
நீள் – நெடுகச்செல்லாநிற்கும்
நிரயம் – ஸம்ஸாரமாகிற நரகம்தான்
உண்டு – உண்டு.
நீதியால் – முறைதப்பாமல்
வந்திப்பார்க்கு – அநுவர்த்தித்திருக்குமவர்களுக்கு
இழியா – புநராவ்ருத்தியில்லாத
வான் – பரமபதமானது
உண்டு – உண்டு.
அவதாரிகை – ஒன்பதாம் பாட்டு. கீழ் எட்டுப்பாட்டாலே பதத்ரயாத்மகமான திருமந்த்ரத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற ப்ரமேயங்களில் ஸாராம்ஶங்களை யருளிச்செய்தார். ததுபதேஷ்டாவான ஆசார்யனை பகவதவதாரமாக ப்ரதிபத்திபண்ணி ததநுரூபமாக அநுவர்த்தித்திராதே ஸஜாதீயபுத்தியாகிற நிந்தையைப் பண்ணுமவர்களுக்கும் தத்வைபவமறிந்து ததநுகுணமாக ஸேவித்துப் போருமவர்களுக்கு முண்டாவதான பலவிஶேஷங்களை யருளிச்செய்கையாலே ஆசார்யவைபவத்தை யருளிச் செய்கிறார் இதில்.
வ்யாக்யானம் – (தத்தமிறையின் வடிவென்று) “தம் தம்” என்கிற மெல்லொற்றை வல்லொற்றாக்கித் தத்தம் என்று கிடக்கிறது. ஆகையாலே, தந்தாமிறையின் வடிவென்றபடி. அதாவது – நாராயணனாகையாலே எல்லார்க்கும், “நம்முடையவிறை, நம்முடையவிறை” என்று ப்ராப்தி சொல்லிப் பற்றலாம்படி ஸாதாரணஶேஷியான ஸர்வேஶ்வரனுடைய திவ்யவிக்ரஹமென்கை. “ஸாக்ஷாந்நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும்” என்றும், “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ” என்றும் ஆசார்யனை பகவதவதாரமாக ஶாஸ்த்ரம் சொல்லாநின்றதிறே.
(தாளிணையை வைத்தவரை) “மருளாமிருளோட மத்தகத்துத்தன் தாள் அருளாலே வைத்தவவர்” என்கிறபடியே தங்களுடைய அஜ்ஞாநாந்தகாரமெல்லாம் போம்படித் தம்முடையத் திருவடிகளிரண்டையும் தங்கள் தலையிலே வைத்தருளின வாசார்யரானவரை.
(வணங்கியிராப்பித்தராய்) முறையிலே அநுவர்த்தித்திராத ப்ராந்தராய், “தாளிணையை வைத்தவவரை தத்தமிறையின் வடிவென்று வணங்கியிராப்பித்தராய்” என்கையாலே அர்த்தஸ்திதியில் பழுதுண்டாயன்று, அப்படி ப்ரதிபத்தி பண்ணி அநுவர்த்தித்திராதொழிகிறது இவர்களுடைய சித்தஸ்கலனமென்று நினைத்து அருளிச்செய்கிறார்.
(நிந்திப்பார்க்கு) மாநுஷப்ரதிபத்தியாகிற நிந்தையைப் பண்ணுமவர்களுக்கு வேறொன்றும் வேண்டா, இப்படி ப்ரதிபத்தி பண்ணுகைதானே யாயிற்று நிந்தை.
(ஏறாநீணிரயமுண்டே) அதாவது – இப்படி நிந்திக்கும வர்களுக்கு ஒருகாலும் கரையேற்றமின்றிக்கே, நெடுகச் செல்லாநிற்கும் ஸம்ஸாரமாகிற நரகமுண்டென்கை. ஏறாநீணிரயமென்கையாலே, யமன் தண்டலான நரகத்திற்காட்டில் இதுக்குண்டான வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது. அதுக்கொருகால் கரையேற்றமுண்டிறே, இது நித்யமாய்ச் செல்லுமித்தனையிறே. இத்தால் ஆசார்ய விஷயத்தில் மாநுஷப்ரதிபத்தி பண்ணும் மஹாபாபி களானவர்கள் ஒரு காலத்திலும் உஜ்ஜீவந யோக்யதையின்றிக்கே நித்யஸம்ஸாரிகளாய்ப் போவர்க ளென்றதாயிற்று.
(நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்) அதாவது – கீழ்ச்சொன்னபடியே அவதாரவிஶேஷமென்று ப்ரதிபத்தி பண்ணி முறைதப்பாமல், அநுவர்த்தித்துப் போருமவர்களுக்கு புநராவ்ருத்தியில்லாத பரமபதமுண்டென்கை. இத்தால் ஆசார்ய வைபவத்தை நன்றாகவறிந்து அவன் திருவடிகளிலே “தேவு மற்றறியேன்” என்று ஸேவித்துப் போரும் மஹாத்மாக்களானவர்கள் திருநாட்டிலேபோய் அங்குள்ளாரோடு ஸமானபோகபாகிகளா யிருப்பரென்ற தாயிற்று.
@@@@@
பத்தாம்பாட்டு
10. இறையுமுயிரு மிருவர்க்குமுள்ள
முறையும்முறையே மொழியும் – மறையும்
உணர்த்துவாரில்லா நாளொன்றல்ல ஆன
உணர்த்து வாருண்டான போது.
பதவுரை
இறையும் – அகாரவாச்யனான ஈஶ்வரனையும்
உயிரும் – மகாரவாச்யனான ஆத்மாவையும்
இருவர்க்குமுள்ள – இவ்விருவர்க்குமுண்டான
முறையும் – சதுர்த்தியால் சொல்லப்பட்ட ஶேஷஶேஷிபாவ ஸம்பந்தத்தையும்
முறையேமொழியும் – க்ரமமாக ப்ரதிபாதிக்கிற
மறையும் – வேதரூபமான திருமந்த்ரத்தையும்
உணர்த்துவாரில்லா நாள் – யதாவத்தாக அறிவிப்பாரில்லாத காலத்திலே
ஒன்றல்ல – (அவையெல்லாம்) ஒரு வஸ்துவாகாமல், அஸத்கல்பமாய்க் கிடந்தன
உணர்த்துவாருண்டானபோது – (இவையெல்லாம்) அறிவிப்பாருண்டானபோது
ஆன – உளவாயிற்றின.
அவதாரிகை – பத்தாம்பாட்டு. இப்படி ஆசார்யவைபவத்தை யருளிச்செய்த வநந்தரம் இவ்வாசார்யன் பண்ணும் உபகார வைபவத்தையும் லோகமெல்லாம் அறியும்படி ஸுஸ்பஷ்டமாக வருளிச்செய்து இப்ப்ரபந்தத்தை நிகமிக்கிறார்.
வ்யாக்யானம் – (இறையும்) அகாரவாச்யனான ஈஶ்வரனும், (உயிரும்) மகாரவாச்யனான வாத்மாவும், (இருவர்க்குமுள்ள முறையும்) அகாரத்தில் சதுர்த்தியாலே சொல்லப்பட்ட ஶேஷஶேஷி பாவமாகிற ததுபயஸம்பந்தமும் (முறையே மொழியும் மறையும்) ஆந்த ஸம்பந்தத்தையே க்ரமமாக ப்ரதிபாதிக்கிற வேதரூபமான திருமந்த்ரமும்.
(உணர்த்துவாரில்லா நாளொன்றல்ல) இவையெல்லாம் நித்யமாயிருந்ததேயாகிலும் இவற்றையறிவிப்பாரில்லாத காலத்திலே எல்லாம் அஸத்கல்பமாய்க்கிடந்தன.
(ஆனவுணர்த்துவாருண்டானபோது) இவையெல்லாம் அறிவிப்பாருண்டான காலத்திலே உளவாயிற்றனவென்கை. இவற்றை அறிவிக்குமவனாகிறான் ஆசார்யனிறே. அதுதான் இப்ப்ரபந்தத்தில் முதற்பாட்டாலே அருளிச்செய்தாரிறேதாமே, இத்தால்; அஜ்ஞாதஜ்ஞாபகனான ஆசார்யன் பண்ணும் உபகாரவைபவத்தை அருளிச்செய்தாராயிற்று.
பெரியஜீயர் அருளிச்செய்த
ப்ரமேயஸார வ்யாக்யானம் முற்றிற்று.
பெரியஜீயர் திருவடிகளே சரணம்.