[highlight_content]

ஞான ஸாரம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த
ஞான ஸாரம்

தனியன்
கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே |
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம் ||

 

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் |

சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே ||

 

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே. 

ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு” 1

 

நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச்
சாதகம்போல் நாதன்  தனதருளே பார்த்திருத்தல்
கோதிலடியார் குணம்

 

ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும்படி பிறத்தல் அன்னவன்தாள்
நீக்க மில்லா அன்பர் நிலை”

 

மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற
பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு”

 

தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை
மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின்
என்ன குறை வேண்டு மினி”

 

புண்டரிகை கேள்வன் அடியார் அப்பூமிசையோன்
அண்டமொரு பொருள் ஆதரியார் – மண்டி
மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல்”

 

தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்
காளானார் மற்றொன்றில் அன்புசெய்யார் – மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு”

 

 “முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்
கற்றைத் துழாய்சேர் கழலன்றி – மற்றொன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்ஙனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து”

 

ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்தளிக்கும்
வாச மலராள் மணவாளன் – தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றை
யெண்ணாதார் நெஞ்சத் திருப்பு”

 

நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன்தன் – தாளில்
பொருந்தாதார் உள்ளத்துப் பூமடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு”

 

தன் பொன்னடி அன்றி மற்றொன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்திட்டது அணு வெனிலும் – பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மார்மாக் கொண்டல் நிகர் மால்”

 

மாறாயிணைந்த மருத மிறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியை வேறாக
உள்ளாதா ரொண்ணிதியை யீந்திடினும் தானுகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்”

 

பண்டேயுயிரனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாமெனத் தெளிந்த தூமனத்தார்க்கு உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்தபிமானிக்கும்
உலகத்தவரோடுறவு”

 

 “பூதங்கள் ஐந்தும் பொருந்து உடம்பினாற் பிறந்த
சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம் – பேதங்கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண்”

 

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவனடியே யாகும் – படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர் கலியைச் சேர்ந்திட மாய்ந் தற்று”

 

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகு முயிர் – பூவின்மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே அடிமை நான்”

 

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வ மொழிந்திடுக
என்றும் இறவாதிருந்திடுக – இன்றே
இறக்கக் களிப்பும் கவர்வுமிவற்றால்
பிறக்குமோ தற் றெளிந்த பின்”

 

ஈனமிலா அன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வண்ணத்தாலும் – தானறிய
விட்டார்க் கெளியன் விடாதார்க் கறவரியன்
மட்டார் துழாயலங்கல் மால்”

 

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவையனைத்தும் – அல்லலெனத்
தோற்றி எரி தீயிற் சுடுமேல் அவர்க்கெளிதாம்
ஏற்றரும் வைகுந்தத் திருப்பு”

 

விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டுமிதமல்லால்
திருப்பொலிந்த மார்பனருள் செய்யான் – நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே யொழியுமோ தாய்”

 

ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள்பால்
வேரிச்சரோருகை கோன் மெய்ந்நலமாம் – தேரில்
பொறுத்தற்கரி தெனினும் மந்தனுடற் புண்ணை
அறுத்தற்கிசை தாதை யற்று” 

 

உடைமை நானென்றும் உடையானுயிரை
வடமதுரை வந்துதித்தா னென்றும் – திடமாக
அறிந்தவன் தன் தாளிலடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின்”

 

ஊழி வினைக்குறும்ப ரோட்டருவ ரென்றஞ்சி
ஏழை மனமே! யினித்தளரேல் – ஆழிவண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒருக்கால்
சொன்னதற்பின் உண்டோ துயர்”

 

வண்டுபடி துளப மார்பனிடைச் செய்த பிழை
உண்டு பலவென்று உளந்தளரேல் – தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்திருந்தும் காணுங்கண்
இல்லாதவன் காணிறை”

 

அற்றம் உரைக்கில் அடைந்தவர்பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ – எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை யீன்று உகந்த ஆ”

 

தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளத்து வைப்பு என்று
தேறியிருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறியிருப்பார் பணிகட்கு ஏய்ந்து”

 

நெறி அறியாதாரும் அறிந்தவர்பால் சென்று
செறிதல் செய்யாத தீ மனத்தார் தாமும் – இறையுரையைத்
தேறாதவரும் திருமடந்தை கோனுலகத்து
ஏறார் இடரழுந்துவார்”

 

சரணாகதி மற்றோர் சாதனத்தை பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை
முரண் அழியக்கட்டிய வேறோர் கயிறு கொண்டார்பதன்முன்
விட்ட படைபோல் விடும்”

 

மந்திரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்

சிந்தனை செய்கின்ற திருமாலும் – நந்தலிலாது

என்றும் அருள் புரிவர் யாவர், அவர் இடரை

வென்று கடிதடைவர் வீடு”

 

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் சென்னெறியும்- பீடுடைய
எட்டெழுத்தும் தந்தவனே என்று இராதருறவை
விட்டிடுகை கண்டீர் விதி”

 

வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனுமுதநூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன் இறைவன் தாளே
அரணாகும் என்னும் அது

 

மானிடவன் என்னும் குருவை மலர் மகள் கோன்

தானுகந்த கோலம் உலோக மென்றும் – ஈனமதா

எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்

நண்ணிடுவர் கீழாம் நரகு.”

 

எட்ட இருந்த குருவை இறையன்று என்று
விட்டு ஓர்  பரனை விருப்புறுதல் – பொட்டனத்தன்
கண் செம்பளித்திருந்து   கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று”

 

        “பற்று குருவைப் பரன் அன்று என்று இகழ்ந்து
          மற்றொர் பரனை வழிப்படுதல் – என்றே தன்
          கைப்பொருள் விட்டாரேனும் காசினியில் தாம் புதைத்த                
          அப்பொருள் தேடித் திரிவான் அற்று.”

 

         “என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரஞ்செய் நாரணனும்
                     அன்றும் தன்னாரியன்பால் அன்பு ஒழியில்- நின்ற
                     புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன் 
                     அனல் உமிழ்ந்து தான் உலர்த்தியற்று.”

 

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல்
 செல்லார் பொழில் சூழ் திருப்பதிக -ளெல்லாம்
 மருளாம் இருளோட மத்தகத்துத் தன்  தாள்
 அருளாலே வைத்தவவர்.”

 

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
 தெருளும் குணமும் செயலும் – அருள்புரிந்த
 தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
 எந்நாளும் மாலுக்கிடம்.”

 

தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
  தானே குருவாகித் தன்னருளால் – மானிடர்க்கா
 இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
  உண்ணுவதே சால வுறும்”

 

  “அலகை முலை சுவைத்தார்க்கு அன்பரடிக்கன்பர்
    திலத மெனத் திரிவர் தம்மை – உலகர் பழி
    தூற்றில் துதியாகும் தூற்றாது அவர் இவரைப்
    போற்றில் அது புன்மையேயாம்”

 

அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம்  – நல்ல
படியாம் மனுநூற்கவர் சரிதை பார்வை
செடியார் வினைத்தொகைக்குத் தீ”

ஞான ஸாரம் நிறைவடைந்தது

பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்

error: Content is protected !!