ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த
ப்ரமேய ஸாரம்
நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே
அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார்– இவ்வாறு
கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்
குலமொன்று உயிர்பல தன்குற்றத்தால் இட்ட
கலமொன்று காரியமும் வேறாம் –பலம் ஒன்று
காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள்
பேணாமை காணும் பிழை
பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என்? கூறீர் தளம் கொண்ட
தாளிணையான் அன்றே தனையொழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே அவன்
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே?
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் –ஒருமத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி
வழியாவது ஒன்று என்றால் மற்றவை முற்றும்
ஒழியா, அது ஒன்று என்றால் “ஓம்” என்று –இழியாதே
இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்
அத்தலையால் வந்த அருள்
உள்ளபடி உணரில் ஒன்று நமக்கு உண்டென்று
விள்ள விரகிலதாய் விட்டதே – கொள்ளக்
குறையேதும் இல்லார்க்குக் கூறுவது என்சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம்
இல்லை இருவருக்கும் என்று இறையை வென்றிருப்பார்
இல்லை அஃதொருவருக்கு எட்டுமதோ – இல்லை
குறையுடைமை தானென்று கூறினாரில்லா
மறையுடைய மார்க்கத்தே காண்
வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய்வீகாலம்
தத்தமவையே தலையளிக்கும் – அத்தை விடீர்
இச்சியானிச்சியாதேத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானால்
தத்தம் இறையின் வடிவு என்று தாளிணையை
வைத்தவரை வணங்கியராப் – பித்தராய்
நிந்திப்பார்க்குண்டு ஏறா நீணிரயம் நீதியால்
வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்
இறையும் உயிரும் இருவர்க்குமுள்ள
முறையும் முறையே மொழியும்– மறையும்
உணர்த்து வாரில்லாத நாளொன்றல்ல ஆன
உணர்த்துவார் உண்டானபோது
பிரமேயசாரம் நிறைவடைந்தது
பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்