ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
கலியனருளப்பாடு
ஶ்ரிய:பதியாய், அவாப்த ஸமஸ்தகாமனாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதநனாய், ஸமஸ்த கல்யாணகுண பரிபூர்ணனாயிருக்கிற ஸர்வேஶ்வரன் ஸகல ஆத்மாக்களோடு தனக்குண்டான ஸம்பந்த மொத்திருக்க, சிலர் தன்னை யநுபவித்து வாழ்ந்தும், சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு திருவுள்ளம் கலங்கி இவர்கள் நம்மைக் கிட்டி யநுபவிக்கும் விரகேதோ ? என்று பார்த்து, ஸமகாலீநர்க்கு ஆஶ்ரயணோபயோகியான விபவங்கள் போலன்றிக்கே “பின்னானார் வணங்கும் சோதி” என்கிறபடியே எல்லாக் காலத்திலும் எல்லா தேஶங்களிலும் எல்லார்க்கும் ஆஶ்ரயணம் ஸுலபமாம்படி பண்ணி, அர்ச்சாவதாரமாய் கோயில் முதலான திருப்பதிகள் தோறும், க்ருஹங்கள் தோறும் நித்ய ஸந்நிதி பண்ணி
ஆஶ்ரித பராதீநனாயும், பராங்குஶ பட்டநாதாதி பக்த முக்தராலும் அநேகாத்மாக்கள் உஜ்ஜீவிக்கும்படி ரகஷித்தருளா நிற்கிற காலத்திலே;
திருமங்கையாழ்வாரும் “வென்றியே வேண்டி வீழ்பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி” என்று ஸர்வேஶ்வரன் விபூதியடைய இவர் தொடைக்கீழே கிடக்கிறதோ! என்று சங்கிக்க வேண்டும்படி அதிசயிதாஹங்காரயுக்தராய், அதுக்கடியான தேஹாத்மாபிமாநத்தையுடையராய், ஆத்ம விஷயமாதல் ஈச்வர விஷயமாதல் ஓரு ஜ்ஞாநம் பிறக்கைக்கு யோக்யதையில்லாதபடி விஷயப் பிரவணராயிருக்க; இவரை இதுநின்றும் எடுக்கவிரகு பார்த்து, இவருக்கு விஷயங்களிலுண்டான ரஸிகத்வமே பற்றாசாகத் தன்னழகையும்,
ஸர்வார்த்த ப்ரகாஶகமான திருமந்த்ரத்தையும், ஸெளஶீல்யாதி குணாதிக்யத்தையும்;
திருமந்த்ரார்த்தத்துக்கு எல்லை நிலமான திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக்கண்ட இவரும் ஹ்ருஷ்டராய், இவர் “வாடினேன் வாடி” என்று தொடங்கி உகந்தருளிய நிலங்கள் தானே ஆஶ்ரயணியமென்று நினைத்து, “ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமாநம் ரங்க ஸம்ஜ்ஞிகம்” என்கிறபடி யே பகவதர்ச்சாவதார ஸ்தலங்களுக்கெல்லாம் ப்ரதாநமாய் “அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீரரங்கம்” என்று சொல்லுகிறபடியே பாகவத கோஷ்டிக் கெல்லாம் விரும்பி வாத்திக்கும் ஸ்தலமான திருவரங்கத்திருப்பதியிலே நித்யவாஸம் செய்தருளிக்கொண்டு, நாள்தோறும், “கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில் நீலமேனிஐயோ! நிறை கொண்டதென்னெஞ்சினையே” என்கிறபடியே, பெரியபெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திருவுள்ளம் குடிபுகுந்து அத்தலைக்கு மங்களாசாஸநபரராய், திருக்கோபுரம், திருமதிள் திருமண்டபங்கள், திருமடைப்பள்ளி முதலான கைங்கர்யங்களும் நடப்பித்துக் கொண்டு, “இருந்தமிழ் நூற்புலவன் மங்கையாளன்” என்கிறபடியே. ஒருவராலும் கரைகாணவொண்ணாதபடியிருக்கிற த்ரமிட ஶாஸ்த்ரத்தைக் கரைகண்ட ஜ்ஞாதிக்யத்தையுடையராய், தமிழ்க் கவிகளுக்கெல்லாம் தலைவராய், ‘நாலுகவிப் பெருமாள்’ என்று திருநாமம் பெற்று;
நம்மாழ்வார், பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச்செய்த ஶ்ரீஸூக்திகளான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்கிற நாலு ப்ரபந்தங்களிலும் ஶப்த ரஸம், அர்த்த ரஸம், பாவரஸம் என்கிற ரஸ விஶேஷங்களை எப்போதும் அநுபவித்துக்கொண்டு, விஶேஷமாக ஆழ்வார் திருவாய்மொழியைத் தலைக்கட்டினவளவிலே, “அந்தமில் பேரின்பம்” பெற்றவராகையாலே, அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக அநுஸந்தித்துக்கொண்டு போராநிற்க, நல்லடிக் காலத்திலே,
திருக்கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே பெருமாளும் நாச்சிமார்களும், திருமஞ்சனம் கொண்டருளி, “செங்கமலக் கழலில்” (பெரியாழ்.திருமொழி 1-5-10) படியே நன்றாக ஒப்பித்து நிற்க, அப்போது ஆழ்வாரும் திருநெடுந்தாண்டகம் என்கிற ப்ரபந்தத்தை இட்டருளி, ப்ரதமம் பெரியபெருமாள் திருச்செவி சாற்றியருளும்படி தேவகானத்தில் ஏறிட்டு அநுஸந்தித்து, திருவுள்ளமுகக்கும்படி நன்றாக திருவாய்மொழி முகத்தாலு மேத்தி நிற்க, பெரியபெருமாளும் ஆழ்வார் திறத்தில் திருவுள்ளம் குடிபுகுந்து, “ஆழ்வீர்! இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலேயிரா நின்றீர். நாம் உமக்குச் செய்யவேண்டுவது உண்டாகில் சொல்லும்” என்ன; ஆழ்வாரும் “நித்ய ஸம்ஸாரியாய் போந்த அடியேனைத் தேவரீர் இப்படி விஷயீகரித்த பின்பு ஒரு குறையுண்டோ? ஆகிலும், ஒரு விண்ணப்பமுண்டு” என்ன, பெருமாளும், “அத்தைச் சொல்லும்” என்ன, ஆழ்வாரும் “நாயந்தே! நாயன்தே!! தேவரீர் லோகாநுக்ரஹமாகச் செய்தருளின அர்ச்சாவதாரங்களில் ப்ரதானமான இந்த ஸ்தலத்திலே மார்கழி மாஸம் ஸுக்லபக்ஷத்தில் ஏகாதஶியன்று அத்யயநோத்ஸவம் கொண்டருளும் போது ஶடகோபன் சொல்லான திருவாய்மொழியையும் வேதபாராயணத்தோடு கேட்டருளி இதுக்கு வேதஸாம்யமும் அநுக்ரஹித்தருள வேணும்” என்ன, பெரிய பெருமாளும் திருவுள்ளம் உகந்து, “அப்படியே வேதஸாம்யம் அநுக்ரஹித்தோம், அத்யயநோத்ஸவத்தில் வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்” என்று அருளப்பாடு ப்ரஸாதித்தருளி, “கலியன் நம்மை தேவகாநத்திலே மிகவும் பாடுகையாலே, அவர் மிடறு நொந்தது; ஆனபின்பு, நாமின்று தரித்த ஶிஷ்டமான எண்ணெய்க்காப்பை அவர் திருமிடற்றிலே தடவுங்கோள்” என்று அருளப்பாடு ப்ரஸாதிக்க; பின்பு பெருமாள் பரிகரமும் அவர் திருமிடற்றிலே எண்ணெய்க்காப்பைச் சாத்த, அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்தருளினபின்பு, திருநகரியிலும், ஆழ்வார் அத்யயன உத்ஸவத்துக்குக்கோயிலேற எழுந்தருளும்படிக்கு, பெரிய பெருமாள் திருமுகப்பட்டயமும் எழுதி ஸந்நிதிப் பேரையும் திருநகரிக்கு அனுப்பி வைக்க; ஆழ்வாரும், திருமுகப்பட்டயத்தை ஶிரஸாவஹித்து, அத்யயன உத்ஸவத்துக்கு உதவும்படி, கோயிலேற எழுந்தருளினபின்பு, திருமங்கை மன்னனும், ஆழ்வாரை எதிர்கொண்டு, திருவடி தொழுது, ஸந்நிதியிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டுபோக, பெருமாளும் ஆழ்வாரைக் குளிரக் கடாக்ஷித்தருளி, தம் திருவுள்ளத்திலுகப்பாலே “நம்மாழ்வார்” என்று திருநாமம் சாற்றி திருமாலை, ஸ்ரீ ஶடகோபன், திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதிக்க, திருமங்கைமன்னனும் மற்றை நாள் ஏகாதஶி தொடங்கிப் பத்து நாளாக, ப்ராத:காலத்திலே வேதபாராயணமும், ராத்ரிகாலத்திலே திருவாய்மொழியும்,
அநுஸந்தானமாக காலவிபாகம் பண்ணி, வேதங்களை அநுஸந்தித்துச் சாற்றி,
திருவாய்மொழி அநுஸந்தித்துச் சாற்றும் போது, ஆழ்வார் முன்பு திருவாய்மொழியைத்
தலைக்கட்டினவளவிலே எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்தபடியை அநுகரித்து,
ஆழ்வாரைப் பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து, ஆழ்வார் ப்ரதி
ஸம்வத்ஸரம் அத்யயனோத்ஸவத்துக்கு எழுந்தருளி, திருவாய்மொழி அநுஸந்தானம்
நடக்கும்படி ப் பண்ணுவித்து, திருமாலை ஸ்ரீஶடகோபன் முதலான வரிசைகளெல்லாம்
பெரியபெருமாள் ப்ரஸாதித்து அருளப்பாடும் ப்ரஸாதித்தருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க; பின்பு, ஆழ்வாரும் க்ருதார்த்தராய், திருநகரியேற எழுந்தருளி, ப்ரதிஸம்வத்ஸரம் கோயிலுக்கு எழுந்தருளி, அத்யயநோத்ஸவத்தைப் பரிபாலநம் பண்ணிக்கொண்டு வர;
இப்படிச் சிலகாலம் சென்றபின்பு, கலிதோஷத்தாலே ஆழ்வார்கள் ஸ்ரீஸூக்திகளான திவ்யப்ரபந்தங்கள் லுப்தமாய், பஹுகாலம் அத்யயநாத்யாபநங்களின்றிக்கே, ஆழ்வாரும், அத்யயநோத்ஸவத்துக்குக் கோயிலேற எழுந்தருளாமலிருக்க; இப்படிச் சிலகாலம் சென்றவாறே ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீவேதவ்யாஸபகவான் லோகத்திலே, திரோஹிதங்களான வேதங்களை உத்3த4ரித்தாப்போலே, ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களை
உத்3த4ரிப்பதாகத் திருவுள்ளமாய், திருநகரியேற எழுந்தருளி, மதுரகவி ஸம்ப்ரதாயஸ்தரான, ஸ்ரீபராங்குசநம்பி ஸந்நிதியிலே “கண்ணிநுண்சிறுத்தாம்பு” என்கிற ஆழ்வார் விஷயமான திவ்யப்ரபந்தத்தை லபித்து, பெரியபெருமாள் திருமங்கைமன்னனுக்காகத் திருவாய்மொழிக்குப் பண்ணின அநுக்ரஹாதிசயத்தைக் கேட்டருளி மிகவும் திருவுள்ளம் உகந்து, யோகதஶையிலே ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, தந்முகமாக, ஆழ்வார்கள் பதின்மரும் ஆண்டாளும் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களையும் லபித்து, க்ருதார்த்தராய், ஸ்வஶிஷ்ய, ப்ரஶிஷ்ய முகத்தாலே அநேக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அத்4யயநாத்4யாபநங்களைப் பண்ணுவித்து, முன்புபோலே அத்யயநோத்ஸவத்திலே, ஆழ்வார் கோயிலேற எழுந்தருளும்
படிக்கும், வேதபாராயணத்தோடு கூட திருவாய்மொழி அநுஸந்தானம் நடக்கும்படி பண்ணி, பெரியபெருமாள் திருவாய்மொழிக்கு வேத ஸாம்யத்தை அநுக்ரஹிக்கையாலே, வேதங்களுக்கு உபக்ரம உத்ஸர்ஜநகால நியமம் உண்டானாப்போலே, “த்3ராமிடீ3ம் ப்3ரஹ்ம ஸம்ஹிதாம்” என்று ஓதப்பட்ட த்ராவிட வேதமான திருவாய்மொழிக்கும் திருக்கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே உத்ஸர்ஜநகாலமென்றும், மார்கழி மாதத்திலே அத்யயனோத்ஸவத்திலே உபக்ரம கால மென்றும், த்ராவிட வேதமான திருவாய்மொழியைத் திருக்கார்த்திகை உத்ஸர்ஜநம் பண்ணி, உபக்ரமகாலமான அத்யயன உத்ஸவத்திலே பெரியபெருமாள்
கேட்டருளுமளவும் ஸ்ரீவைஷ்ணவர்கள் நெஞ்சினால் நினைந்து வாயினால் மொழியாமலிருக்கும்படிக்கும், பெரியபெருமாள் ஆழ்வாருக்கு ப்ரதிவருஷம் திருமுகப்பட்டயம் ப்ரஸாதிக்கும்படியும் அன்று திருக்கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே பெரியபெருமாள் தாம் சாத்திக்கொண்ட எண்ணெய்க் காப்புஶேஷத்தைத் திருமங்கை மன்னன் திருமிடற்றிலே சாத்துவித்து, அவர் தம்மைப்பாடின இளைப்பெல்லாம் தீரும்படிப்பண்ணின கட்டளையை ப்ரதிஸம்வத்ஸரம் திருக்கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே பெரியபெருமாள் சாத்திக்களைந்த எண்ணெய்ச் ஶேஷத்தை ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவரான நம்மாழ்வார் திருமிடற்றிலே சாத்தி, அந்தச் ஶேஷத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தங்கள்
திருமிடற்றிலே சாத்தும்படிக்கும், ரி(ரு)காதி பேதேந சதுர்விதமான வேதங்களுக்கு ஶீக்ஷாதிகளும், இதிஹாஸ புராணங்களும், அங்கோபாங்கங்களாயிருக்குமாப்போலே, ஆழ்வார் அருளிச்செய்த நாலுப்ரபந்தங்களும், நாலு வேதஸ்தாநேயாகவும், திருமங்கை
மன்னன் அருளிச்செய்த ஆறு பிரபந்தங்களும் மற்றை ஆழ்வார்களும் ஆண்டாளும் அருளிச் செய்த ப்ரபந்தங்களும் அங்கோப்பாங்கங்களாகவும்: திருவாய்மொழிதானும், த்வயார்த்த விவரணம் என்றும் திருப்பல்லாண்டு முதல் பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் ஆக இப்ரபந்தங்கள் ப்ராயேண ப்ரணவார்த்த ப்ரகாஶகமாகையாலே, முதலாயிரம் என்றும், கண்ணிநுண்சிறுத்தாம்பு நமச்சப்தார்த்த விவரணம் என்றும் திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், முதலாழ்வார்கள் அருளிச்செய்த திருவந்தாதி மூன்றும், நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் பெரியதிருமடல் மந்த்ர ஶேஷவிவரணமென்றும், இதில் திருவந்தாதி மூன்று முதலாக, பெரியதிருமடலீறாக, சப்தரஸ ப்ரதாநமாயிருக்கையாலே, “இயற்பா”. என்றும் இப்படி இருபத்து மூன்று ப்ரபந்தங்களும் திருமந்த்ரார்த்த விவரணமென்றும்; இப்ரபந்தங்களிலே ஆழ்வார்களநுபவத்துக்கு விஷயமாய் எம்பெருமான் விரும்பிவர்த்திக்கிற ஸ்தலங்கள் பரமபதம், திருப்பாற்கடல் தொடக்கமான நூற்றெட்டு என்றும், திருவாய்மொழியொழிந்த ப்ரபந்தங்கள் திருப்பல்லாண்டு முதலாக திருநெடுந்தாண்டகமளவாக அத்யயநோத்ஸவத்துக்கு முன்பு பத்து நாளாகப் பெரியபெருமாள் கேட்டருளும்படிக்கும்; திருவந்தாதி முதலாக, பெரியதிருமடல் ஈறாக அத்யயநோத்ஸவாநந்தரம் மற்றை நாள் கேட்டருளும்படிக்கும்; ஆழ்வார் பதின்மர், ஆண்டாள், ஶ்ரீமந்மதுரகவிகள் ஆகப் பன்னிரண்டு திருநாமங்களும், அருளிச்செய்த இருபத்து மூன்று ப்ரபந்தங்களில் பாட்டு நாலாயிரம் என்றும்; ப்ராஹ்மணனுக்கு வேதவேதாந்தங்கள், இதிஹாஸ புராணங்கள் அதிகரிக்க வேண்டுமாப்போலே, ப்ரபந்நரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திவ்யப்ரபந்தங்கள் அதிகரிக்கவேணுமென்றும், இதில், திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி, எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்துவதாகையாலே, ப்ராத:காலத்திலே நித்யம்
அநுஸந்தேயமென்றும், எப்போதும் ப்ரபந்தாநுஸந்தானத்துக்கு முன்பு மங்களாசாஸநபரமான திருப்பல்லாண்டு அநுஸந்தேயமென்றும் திருவாய்மொழி அநுஸந்தானத்துக்கு பூர்வோத்தரங்களிலே ஆழ்வார் விஷயமான கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தேயமென்றும், இப்படி ஸ்ரீவைஷணவதர்ஶநத்திலே அநேக ஸ்ரீவைஷ்ணவ தர்மங்களை நியமித்த நியமநம்.
உய்யக்கொண்டார், மணக்கால். நம்பி, பெரியமுதலியார், பெரியநம்பி காலங்களிலும் செல்லா நிற்க; பின்பு எம்பெருமானார் காலத்திலும் நடந்து செல்லா நிற்க, ஒரு அத்யயன உத்ஸவத்துக்கு ஆழ்வார் சில அநுபபத்திகளுண்டாகையாலே கோயிலேற எழுந்தருளாமையாலே, எம்பெருமானார் தாமே கோயிலிலே ஒரு நம்மாழ்வாரைத் திருப்ரதிஷ்டை கொண்டருளப்பண்ணி அத்யயன உத்ஸவத்தை நடப்பித்து, திருமங்கை மன்னன் ஒழிந்த மற்றை ஆழ்வார்களையும் திருப்ரதிஷ்டைகொண்டருளப் பண்ணுவித்து, திவ்யதேசங்களிலும், ஆழ்வாரும் ஆண்டாளும், திருப்ரதிஷ்டை கொண்டருளும்படிக்கு நியமித்து, ஆழ்வார்கள், “சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை”, “திருவேங்கடம் மொய்த்த சோலை
மொய்பூந்தடம் தாழ்வரே” “ஏய்த்திளைப்பதன் முன்னமடைமினோ!” என்றும், “திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்வினை ஒயுமே!”, “திருவேங்கடம் நங்கட்குச் சமன் கொள்வீடுதரும் தடங்குன்றமே” என்றும், “வெற்பென்று வேங்கடம்பாடும்” என்றும் “தண்ணருவி வேங்கடம்” என்றும், “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்றும் “வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும்”, “வேங்கடத்துச்சி” என்றும் இப்படிப் பலவிடங்களில் திருமலை ஆழ்வாரோடு,
அதில் நித்யவாஸம்பண்ணும் எம்பெருமானோடு, ஒரு விஶேஷமின்றிக்கே தங்களுக்குப்
பரமப்ராப்யமென்று ப்ரதிபத்தி பண்ணியும், ப்ராக்ருத ஶரீரங்களோடு திருமலையை
ஸ்பர்ஶியோம் என்ற திருவுள்ளக் கருத்தை அறிந்து, திருமலையிலே ஆழ்வார்களைத்
திருப்ரதிஷ்டை கொண்டருளப் பண்ணுவியாமல், திருமலை அடிவாரத்திலே, அடிப்புளி
ஆழ்வார் அருகே திருமலையாழ்வாருக்கும் திருவேங்கடமுடையானுக்கும் மங்களாஶாஸநபரராய், திருமலையாழ்வாரோடு ஒரு திருமேனிகளாய் எழுந்திருக்கும்படி நியமித்தும், அவர்களுக்கும் திருப்ரதிஷ்டை செய்தருளப் பண்ணிவித்தும், அவர்களுக்கு நித்யதிருவாராதனம் கொண்ட ருளும்படிக்கும், கோயில்போலே மற்றும் திருப்பதிகள் தோறும் அத்யயனோத்ஸவத்திலே திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களெல்லாம், தத்தத் காலங்களிலே அநுஸந்திக்கும்படிக்கும், கோயில் முதலான திருப்பதிகளிலேயும் நித்யம்
ஸாயங்காலத்திலே திருமாலை சாத்தியருளி, திருவாலத்தி கொண்டருளுகிறதுக்கு உசிதமான திருப்பல்லாண்டு, பூச்சூடு, காப்பீடும், பெரியாழ்வார் தாம் பரமபக்தி தலையெடுத்து அருளிச்செய்ததாய், உபக்ரம மங்களாஶாஸந ப்ரபந்தஸமமாக, சென்னியோங்கு பத்துப்பாட்டும் திருப்பாணாழ்வார், பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹஸெளந்தர்யத்திலே ஈடுபட்டு, அநுஸந்தித்த அநந்தரத்திலே பேறுபெறுகையாலுண்டான ஏற்றமுடைய “அமலனாதிபிரான்” என்கிற பிரபந்தமும், “ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்” என்கிறபடி யே எம்பெருமானுக்கு நற்சீவனாய் நமக்கெல்லாம் ப்ரதாநாசார்யரான நம்மாழ்வார் விஷயமான “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்கிறப்ரபந்தமும், அந்தந்தத் திருப்பதிகள் விஷயமான திருமொழிகளும், சாயங் காலத்திலே நித்யம் அநுஸந்திக்கும்படிக்கும்; திருப்பதிகள்தோறும், திருமுளைத் திருநாளிலே பெருமாள் திருவீதியிலே எழுந்தருளும்போது செந்தமிழ்பாடுவாரான முதலாழ்வார்கள் ஸ்ரீஸூக்தியான இயற்பா முதலாக மூவாயிரமும், எம்பெருமான் ஸ்ரீபுஷ்பயாகம் கொள்ளும்போது வேதத்தோடே கூட திருவாய்மொழியும் அநுஸந்தேயமென்றும்; விஶ்வாமித்ரன் (கெளஸல்யா ஸுப்ரஜாராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே, உத்திஷ்ட நரசார்த்தூல) என்று சக்ரவர்ததித்திருமகன் திருப்பள்ளி உணருகையைக் காண ஆசைப்பட்டு எழுப்பினாப்போலே, ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வாரும், பெரியபெருமாள் திருப்பள்ளியுணர்ந்து, தம்மைக் குளிரக்கடாகூஷிக்க வேணுமென்று நினைத்து,
அவன் திருப்பள்ளி உணருகைக்கு அநுஸந்தித்த திருப்பள்ளியெழுச்சியையும், ஸ்ரீநந்தவ்ரஜத்தில் கோபிமார்கள் கிருஷ்ணன் அழகிலே துவக்குண்டு. அத்தாலே,
அநந்யார்ஹைகளாய் மார்கழி நீராட என்கிற வியாஜத்தாலே முற்பாடரை எழுப்பி, எல்லாரும்கூட க்ருஷ்ணனை எழுப்பி, அவன் பக்கலிலே தங்களுடைய ஸம்ஶ்லேஷத்தை அபேக்ஷித்துப் பெற்றபடியே அக்காலத்துக்குப் பிற்பாடான ஆண்டாளநுகாரரூபத்தாலே அவர்கள் அநுபவத்தை அருளிச் செய்ததான திருப்பாவையும், மார்கழி மாஸம்தோறும் கோயில்களிலும் க்ருஹங்களிலும் சிற்றம் சிறுகாலத்திலே எம்பெருமான் திருப்பள்ளி உணரும்போது நித்யம் அநுஸந்திக்கும்படிக்கும்: பெரிய பெருமாள் திருமங்கை மன்னனுக்காகத் திருவாய்மொழிக்குப் பண்ணின வேதத்வாநுக்ரஹமாத்ரமன்றிக்கே. ஆழ்வார் பெரிய முதலியாருக்கு வேதார்த்தங்களோடு துல்யமாக ப்ரஸாதித்தருளின திருவாய்மொழி அர்த்தத்தைப் பெரியமுதலியார் ஸம்ப்ரதாயத்திலே கேட்டருளின அர்த்தத்தை க்ரந்தஸ்தமாக்க வேணுமென்று நியமித்தபடியே, திருக்குருகைப்பிரான் பிள்ளானும், ஶ்ரீவிஷ்ணு புராண ஸங்க்யையாலே ஒரு வ்யாக்கியானமிட்டருளி, திருமுன்பே வைத்து எம்பெருமானாரும் அத்தைக்கடாக்ஷித்துத் திருவள்ளமுகந்து “நம்முடையாரெல்லாரும் இத்தை ஸ்ரீபாஷ்யத்தோடேகூட அதிகரித்து (செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்) என்கிறபடியே ஸம்ஸ்க்ருத த்ராவிட வேதாந்தத்வயத்தையம் ப்ரவசநம் பண்ணிக்கொண்டு போருங்கோள்” என்று இப்படி அநேகம் ஶ்ரீவைஷ்ணவ தர்மங்களை, ஸகல தேஶங்களிலும் ப்ரவர்த்தநம் செய்தருளியும் (வ்யாகுர்வதா தேந விபஶ்தோ3கை4: வேதா3ந்தமவ்யாஹதவாக்3விஹாரை: ரங்கேஶகைங்கர்ய து4ரந்த4ரேண யதீஶ்வரேணோஷிதமப்3த3ஷஷ்டி:) என்றும், “ராமாநுஜஸ்ஸப்தஶதை: யதீநாம்பீடைஶ் சதுஸ்ஸப்ததிஸ்ஸமேதை: ஏகாந்திபி4ர்த்3வாத3ஸபிஸ்ஸஹஸ்ரை: ஶ்ரீரங்க3 ஆஸ்தே யதிஸார்வபௌ4ம:” என்றும் சொல்லுகிறபடியே -திருவரங்கப் பெருநகரிலே அநேகம் முதலிகளோடேகூட வேதாந்தார்த்தங்கள் எல்லாம் ப்ரகாஶிக்கும்படி வ்யாக்யானம் செய்தருளிக்கொண்டு, பெரிய பெருமாள் திருச்செல்வமும், நித்யாபிவ்ருத்தமாம்படி மங்களாஶாஸநம் செய்தருளி வாழ்ந்துகொண்டிருக்க;
பின்பு எம்பெருமானார் அவதார ஸமாப்த்யநந்தரம், பெருமாளுக்கும், ஸ்ரீரங்கநாயகியாருக்கும், வரகுமாரரான ஸ்ரீபராஶர பட்டரும், எல்லார்க்கும் ஆசார்யகுமாரரான திருக்குருகை பிரான் பிள்ளான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், கந்தாடையாண்டான் முதலானார்கள் “ராமானுஜார்ய ஶ்ருதி மௌளி பா4ஷ்யமர்த்த2ம் ரஹஸ்யம் த்3ரமிடஶ்ருதேஶ்ச –ஸம்ப்ராப்ப தேநைவ குரூக்ருதாம்ஸ்தாந் ப4ஜே சதுஸ்ஸப்ததி பீட2 ஸம்ஸ்தா2ன்” என்கிறபடியே
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமாகிற ராஜகுலமாஹாதம்யமுடையவராய்
அவர் ஸந்நிதியிலே உபயவேதாந்தார்த்தங்களையம் லபித்து, ஆசார்யபத நிர்வாஹகராயிருந்து கொண்டு கோயிலிலே எம்பெருமானாரை நித்ய ஸேவார்த்தமாகவும், “ஶ்ரீமந்நாராயணனே பரதத்வம்” என்னும் அர்த்தத்தை ஸ்ரீபாஷ்யமுகேந ப்ரவசனம் பண்ணிக்கொண்டு லீலாவிபூதியிலே எழுந்தருளியிருக்கிறார் என்கைக்காகவும் எம்பெருமானார் அர்ச்சாரூபேண எழுந்தருளும்படிக்கும் பெரியபெருமாள் நியமன முண்டானபடியாலும், அர்ச்சாரூபேண
திருப்ரதிஷ்டை கொண்டருளப்பண்ணியும், மற்றும் திருப்பதிகள் தோறும் எம்பெருமானாரை திருப்ரதிஷ்டை கொண்டருளப் பண்ணுவித்தும் (அர்வாஞ்சோ யத்பத3ஸரஸிஜத்3வந்த்3வமாஶ்ரித்ய பூர்வே மூர்த்4நா யஸ்யாந்வயமுபக3தா தே3ஶிகா
முக்தி மாப்தா:) என்கிறபடியே தம்முடைய திருவடிகளில் ஸம்பந்த ஸம்பந்தமுடையவர்களுக்கெல்லாம் தாம் உத்தாரகராயும், தமக்கு முன்புள்ள முதலிகளுக்கு பவிஷ்யதாசார்யாவதாரம் என்னும்படி உத்தாரகராயும், “விஷ்ணுஶ்ஶேஷீ ததீ3ய: ஶுயப4கு3ணநிலயோ விக்3ரஹ: ஸ்ரீஶடா2ரி: ஸ்ரீமாந் ராமாநுஜார்ய: பத3கமலயுக3ம் பா4தி ரம்யம் யதீ3யம்-யஸ்மிந் ராமாநஜார்யே கு3ருரிதி ச பத3ம் பா4தி நாந்யத்ர தஸ்மாத் ஶிஷ்டம் ஸ்ரீமத் கு3ரூணாம் குலமித3மகி2லம் தஸ்ய நாத2ஸ்ய ஶேஷம்” என்கிறபடியே பகவதவதாரத்துக்கு ப்ரதிநிதியான ஆசார்யாவதாரமாய் இப்படி ஸகல ஜநஜீவாதுவான எம்பெருமானார் விஷயமான நூற்றந்தாதியைப் பெரியமுதலியார் கண்ணிநுண் சிறுத்தாம்பை அருளிச்செயல் நடுவே சேர்ப்பித்தாற் போலே திவ்யப்பிரபந்தங்களோடு ஒரு கோவையாயச் சேர்ப்பித்து அத்யயனோத்ஸவாநந்தரத்திலே, இயற்பா அநுஸந்தானாந்தரத்தில் அனுஸந்திக்கும்படிக்கும் திருவாய்மொழி அநுஸந்தாநாநந்தரத்தில் கண்ணிநுண்
சிறுத்தாம்பு அநுஸந்தேயமானாற் போலே ததநந்தரம் இதையும் அநுஸந்திக்கும் படிக்கும்; ப்3ராஹமணனுக்கு நித்யம் காயத்ரீ ஜபம் கர்த்தவ்யமானாப்போலே, ப்ரபந்நனுக்கு இதுவும் நித்யானுஸந்தேயமென்றும், “பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்காறொன்றுமில்லைமற்றச்சரணன்றி” என்று எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமென்றும் தாங்கள் அத்யவஸித்து, தங்களைப் பற்றினார்க்கு உபதேசித்தும் இப்படிச்சரமார்த்த விஶேஷங்களெல்லாவற்றையம் வெளியிட்டுக்கொண்டு,
படி2த்வா பா4ஷ்யம் தத்ப்ரவசநமஶக்தெள ஶட2ரிபோர் கி3ரி ஶ்ரத்3தா4 வாஸ: ப்ரபு4பரிசிதஸ்தா2நநிவஹே 1 ப்ரபோ4: கைங்கர்யம் வா ப்ரபத3நமநோரர்த்த2மநநம் ப்ரபந்நாநாம் வா மே ப4வது பரிசர்யாபரிசய: 11 குடீம் க்ருத்வா தஸ்மிந் யது3கி3ரிதடே நித்யவஸதிஷ் ஷட3ர்த்தா2: ஸ்ரீஶஸ்ய ப்ரபத3நவிதௌ4 ஸாத4கதமா:!! இதிப்ரோக்தேஷ்வேகம் ருசி விஷய மாலம்ப்ய பகவத் பராம் காலக்ஷேபம், குருதபவதநந்ய சரணா ஸ்வஹஸ்தேஷம் ப்ரீத்யா குரு சரண பக்த்யாச பவதாம் ஶரீராந்தே ஸ்ரீமான் பிரதி சதபரம் தாமஸஸுகம் இதி ஸ்ரீமான் ராமாநுஜ மநிரா……… விநதாந்த்ருதியவிநதாந் பணீந்த்ராம்ஶோ யோகீசரம ஸமயே. ப்ராஹதயயா, என்று
அருளிச்செய்தபடியே இதரமத நிரஸந பூர்வகமாக உபயவேதாந்தங்களையும் வ்யாக்யானம் செய்தருளிக் கொண்டு ஆழ்வார்கள் ஸ்ரீஸூக்திகளான திவ்ய ப்ரபந்தங்களையம் ப்ரவசநம் பண்ணிக் கொண்டு தத்தததிகாராநுகுணமாக ஹிதோபதேஶம் செய்தருளிக் கொண்டு எம்பெருமானார் தர்ஶநத்தை வர்த்திப்பித்துக்கொண்டு வந்தார்கள் என்று ஜீயர் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும் என்று பிள்ளை அருளிச் செய்வர்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.