ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
மாணிக்கமாலை
ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலப ஸ்ரீதரஸ் ஸதா ||
“தை வாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம்” என்கிறபடியே உபயவிபூதியும் ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கும். ஈஶ்வரன் திரு மந்த்ரம் இட்ட வழக்காயிருக்கும். திருமந்த்ரம் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கும். ஆகையாலே, உபயவிபூதிக்கும் நிர்வாஹகனான ஈஶ்வரனும், அவனை ப்ரதிபாதிக்கிற திருமந்த்ரமும் ஆசார்யனிட்ட வழக்காகையாலே திருமந்திரத்தால் ப்ரதிபாதிக்கிற ப்ராப்ய ப்ராபங்க ளிரண்டும் ஆசார்யனாலே என்னத்தட்டில்லை.
ஆசார்யனாவான்: “ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணுபக்தோ விமத்ஸர: | மந்த்ரஜ்ஞோ மந்த்ரபக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ் ஶுசி:” || “குருபக்திஸமாயுக்த: புராணஜ்ஞோ விஶேஷத:| ஏவம் லகூடிணஸம்பந்நோ குருரித்யபி தியதே” || என்கிறபடியே வைதி காக்ரேஸரனாய், பகவத்பக்தியுக்தனாய், மாத்ஸர்யவியுக்தனாய், ஸகலவேத ஸாரபூதமாய் ஸகல மந்த்ரங்களுக்கும் காரணமாய் இரண்டு பங்குக்கு ஒரு கையோலை போலே எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்கு உண்டான அவிநாபூதஸம்பந்தத்தைக் காட்டக் கடவதாய் முமுக்க்ஷுவுக்கு எய்ப்பினில் வைப்பான திருமந்திரத்தை பக்திஶ்ரத்தைகளோடே அர்த்தஸஹிதமாக அநுஸந்தித்துப் பெரிய மதிப்பனாய், அர்த்தகாமோபஹ தனன்றிக்கே லோகபரிக்ரஹம் உடையவனாயிருப்பானொருவன் ஆசார்யனாகக்கடவன்.
கூரத்தாழ்வான் எம்பெருமானார் திருவுள்ளத்திலே சீறியருளினா ரென்று கேட்டு “இவ்வாத்மா அவருக்கே சேஷமாயிருந்ததாகில் அவருடைய இஷ்டவிநியோகப்ரகாரம் கொண்டு கார்யமென்” என்றார். தன்னை ஆஶ்ரயித்து வைத்துத் தன் திறத்திலே தீங்கு நினைத்து த்ரோஹியான நாலூரானைப் பெருமாள் “ந க்ஷமாமி” என்று முனிந்தருள, பெருமாளோடே எதிரிட்டு “அவன் நான்பெற்ற லோகம் பெறவேணும்” என்று விண்ணப்பம் செய்தார். ஆக, இவ்விரண்டர்த்தத்தாலும் ஶிஷ்யாசார்யக்ரமத்துக்கு ஸீமாபூமி கூரத்தாழ்வான் என்று அருளிச்செய்வர். வடுகநம்பி “ஆசார்ய பதமென்று தனியே ஒரு பதம், அதுள்ளது எம்பெருமானாருக்கே யாயிற்று; ஆகையால் எம்பெருமானார் திருவடிகளே சரணமென்று விஶ்வஸித்திருங்கோள் ” என்றாயிற்று, தம்முடைய ஶிஷ்யர்களுக் அருளிச்செய்வது.
நல்லடிக்காலத்தில் நம்மாசார்யர்கள் அதிகாரிகளைப் பெற்றாலல்லது பகவத்ஸம்பந்தம் இருக்கும்படி சொல்லக்கடவதாயிராது. அதிகாரிக ளாவார்: கருந்தரையில் தாங்கள் நின்றநிலையை அநுஸந்தித்து “இந்நின்ற நீர்மையினியாமுறாமை” என்றும் “இன்றொடு நாளை யென்றே எத்தனை காலமும் போய்க்கிறிப்பட்டேன்” என்றும், “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்றும் “இன்னம் கெடுப்பாயோ ” என்றும் “இவை யென்ன உலகியற்கை” என்றும், “நாட்டுமானிடத்தோடெனக்கரிது” என்றும் “நாட்டாரோடியல்வொழிந்து” என்றும் “ஓ! ஓ! உலகின தியல்வே” என்றும், கூவி வெருவி இந்நிலத்திற்பொருந்தாமை தோற்றத்துவண்ட சேதனனுக்காயிற்று பகவத்ஸம்பந்தம் சொல்லு வது. அங்ஙனன்றிக்கே, வாய்க்கரையிலே பொரிபுறந்தடவின ஆநுகூல்யம் கண்டாதல், த்யாஜ்யமான அர்த்தகாமங்களிலே நசையாலேயாதல், நிலை நில்லாத ஒரு ப்ரபாவத்தை நச்சியாதல், ஒன்றாலே வந்ததுவும் துவட்சியில்லாக் கழனிமுண்டர்க்கு ஒரு நல் வார்த்தை சொன்னானாகில் தன் மதிப்பும் கெட்டு, தன் கூற்றிலே ஒதுங்கின பகவத்ப்ராப்தியும் நழுவவிட முடிந்து, கேட்கிறவனையும் நாஸ்திகனாக்குகிறானித்தனை.
ஆசார்யபேதமும் ஆத்மபேதத்தோபாதி. பிதாவை, மாதுலனை, மாமனாரை, ஸாவித்ர்யுபதேஶம் பண்ணினவனை, அத்யயனம் பண்ணுவித்தவனை, ஒருமந்த்ரம் உபதேஶித்தவனை, பகவந்மந்த்ரம் உபதேஶித்தவனை இப்படி ஆராய்ந்து பார்த்தால் அனேகராயிருப் பர்கள், இவர்கள் அடைய முமுக்ஷுகளுக்கு த்யாஜ்யர்கள். “இதுவென்? பகவந்மந்திரம் சொல்லுவித்தவனையும் அப்படிச் சொல்லலாமோ?” என்னில்: பகவதவதாரங்களும் பகவத்குணங்களும் எல்லையை என்றும் இறந்திருக்கும், பகவதவதாரங்கள்தோறும், பகவத்குணங்கள்தோறும் திவ்யசேஷ்டிதங்கள்தோறும் திருமந்திரங்க ளும் உளவாயிருக்கும். ஸம்ஸாரத்தில் ஸ்த்ரீபுமான்கள் ஸம்பஶ்லேஷ விஶ்லேஷ ரூபமான ஸ்ரீகோபாலமந்திரத்தை உபதேஶிப்பாரும், புத்ரப்ரதமான மந்திரத்தை உபதேஶிப்பாரும், ஐஶ்வர்யமென்ன, ஆரோக்யமென்ன, விஜயார்த்தமென்ன, ஶத்ரு நிரஸனமென்ன, இவற்றுக்குத்தக்க மந்திரங்களையும் உபதேஶிப்பா ரெல்லாம் ஸம்ஸாரத்தை அர்த்திப்பார்களாகையாலே ஆசார்யர்க ளாக மாட்டார்கள். இவ்வர்த்தம் திருமந்த்ரத்தைக் குறித்தன்று; விநியோகம் கொள்ளுகிற சேதனனுடைய நினைவைப்பற்ற, விபரீத ஸ்பர்ஶமுடைய எம்பெருமான், நீசஸ்பர்ஶமுடைய மந்த்ரம், நீச ஸ்பர்ஶமுடைய ஆசார்யன், இவர்கள் அடைய முமுக்ஷுக்களுக்கு த்யாஜ்யர்கள். விபரீதஸ்பர்ஶமுடைய எம்பெருமானாவான்: இதர தேவாலயங்களில் இருக்குமவன். நீசஸ்பர்ஶமுடைய மந்த்ரமாவது:- பகவத்பாகவதகைங்கர்யப்ராப்திக்கு அவ்வருகுண்டான ஆபாஸங்க ளடையச்சொல்லுமது. நீசஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான்:- இதுக்குப் புறம்புசில ஸம்ஸாரத்தில் மினுக்கங்களைத் தோன்றச் சொல்லுமவன்.
இனி, ஆசார்யன் ஆரென்னில்: பகவத்ப்ராப்திக்கு ப்ரதிபந்தகமான ஸ்வவ்யாபார நிவ்ருத்திரூபமான ப்ரபத்தியை உபதேஶிக்கிறவன் ஆசார்யனாவான்; “ஶ்ரிய:பதியான எம்பெருமானையே ரக்ஷகனென்று விஶ்வஸித்து நிர்ப்பரனாயிரும்” என்று அருளிச்செய்யுமவன், ஸதாசார்யன் ஸச்சிஷ்யனை பகவத்ப்ரஸாதத்தாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவனென்று மிகவும் ஆதரித்துக்கொண்டு போரும். ஸச்சிஷ்யனும் ஸதாசார்யனுடைய ஆதரத்தைக்கண்டு இறுமாவாதே தன் கருந்தரையை உணர்ந்து “பகவத் விமுகனாய் ஶப்தாதி, விஷயங்களிலே மண்டி உருமாய்ந்து கைகழிந்து நின்ற என்னை முதலடியிலே அத்வேஷம் பற்றாசாகக் கொண்டு தன்னுடைய நிரவதிகக்ருபையாலே ரத்தருளின மஹோபகாரகன்” என்றும், “ஆசார்யனாலே இப்பேறுபெற்றேன்” என்றும், “என்னைத் தீமனங் கெடுத்தாய்” என்றும், “மருவித்தொழும் மனமே தந்தாய் ” என்றும், “உனக்கென் செய்கேன்” என்றும், ஆசார்யன் பண்ணின மஹோபகா ரத்துக்கு ப்ரத்யுபகாரம் தேடிக் காணாமல் தடுமாறி, – குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம் | குருரேவ பர: காம: குருரேவ பராயணம், யஸ்மாத் ததுப- தேஷ்டா ஸௌ தஸ்மாத் குருதரோ குரு: II” என்கிறபடியே இஹபர லோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும், த்ருஷ்டா த்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் நினைத்திருக்கும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஹிதத்தைச் செய்யுமவன், ஶிஷ்யன் ஆசார்ய னுடைய ப்ரியத்தைச் செய்யுமவன்; “ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஆத்மயாத்ரையைத் தனக்கு தேஹயாத்ரையாக நினைத்திருக்கும்” என்று விஶ்வஸித்திருக்கிறதற்கு மேலில்லை. ஶிஷ்யனும் அப்படியே ஆசார்யனுடைய தேஹயாத்ரையைத் தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்திருக்கும். ஆசார்யனாவான், ஶிஷ்யனுடைய உயிரை நோக்கும். ஶிஷ்யன் ஆசார்யனுடம்பை நோக்கும். ஶிஷ்ய வஸ்துவை ஆசார்யன் விநியோகம் கொள்ளக் கடவனல்லன். “ஶிஷ்யவஸ்துவை விநியோகம் கொள்ளுகிறான்” என்றிருக்கும் ஆசார்யனுடைய அறிவையும் ஶங்கிக்க அடுக்கும். ஆசார்யனுக்குத் தன் வஸ்துவை உபகரிக்கிறேன் என்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் ஶங்கிக்க அடுக்கும். “ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” என்றும், “உற்று எண்ணில் அதுவும் மற்றாங்கவன்தன்னது” என்றும் ஶிஷ்யனுக்கு ப்ரதிபத்தியாகை யாலும், இந்த ருசியை விளைப்பித்தான் ஆசார்யனாகையாலும் ஆசார்யனுக்கும் ஶிஷ்யனுக்கும் ஒரு நினைவேயாகவேணும். ஆசார் யன் பொறைக்கு இலக்கான ஶிஷ்யனுக்கு பகவத்ஜ்ஞானமே கை வந்ததென்ன ஒண்ணாது. ஆசார்யன் கண்வட்டத்தில் வர்த்திக்கிற ஸசசிஷ்யனுக்கும் ஆசார்யன் ப்ரியமே செய்கையாலே கோபத்துக்கு ஹேதுவில்லை. ஆகையால் பொறை குமரிருந்து போமித்தனை. ஆசார்யன் அர்த்தகாமங்களில் நசையற்றவனாகையாலே த்யாஜ்ய மான அர்த்தகாமங்கள் ஹேதுவாகப் பொறுக்கவும் வெறுக்கவும் ப்ராப்தியில்லை. இனி இவனுடைய ஹிதரூபமாக வெறுத்தானாகி லும் அதுவும் ப்ராப்யாந்தர்க்கதமாகக்கடவது.
மட்டியூரரங்கத்தானும், மணிகையோசைப்பிள்ளானும், பெற்றியும், நஞ்சீயருமாக எழுந்தருளியிருக்கச்செய்தே நஞ்சியரைப் பார்த்து “ஒரு வைஷ்ணவன் ஓராசார்யன் ஸ்ரீபாதத்திலே பகவத்ஸம்பந்தத் தைப் பண்ணி வேறோராசார்யன் ஶ்ரீபாதத்திலே ஸ்வரூபபரிக்ஷையா யிருந்தது. இருவர் பக்கலிலும் இவன் அநுவர்த்திக்கும்படி எங்ஙனே?” என்று விண்ணப்பஞ்செய்ய “ஆரைத்தான் நீர் விடப்பார்க்கிறீர்? “முற்படக் கருந்தரையிலே ஒரு நல்வார்த்தையைச் சொல்லுமவர் ஶ்ரிய:பதியான எம்பெருமானுடை திருவடிகளையே விஶ்வஸித்து நிர்ப்பரனாயிரும்” என்று அருளிச்செய்யுமவர். பின்பு அவனைக் குறித்து ஒரு நல்வார்த்தை சொல்லுமவன் ‘நீரார் ஸ்ரீபாதத்திலே உடையார்? என்று கேட்டு இவனை ரக்ஷித்த ஆசார்யனுக்கு ஒரு ப்ரியம் செய்தானுமாய், இவன் ஹிதத்தின் மேலெல்லை நிலத்தைப் பிடித்து ‘உன் ஆசார்யன் திருவடிகளையே விஶ்வஸித்து நிர்ப்பரனா யிரும்’ என்றாயிற்று வார்த்தை சொல்லுவது. ஆகையால் இருவரும் உபாதேயதமர்” என்று அருளிச் செய்தார். “ஏகாக்ஷரப்ரதாதாரம் ஆசார்யம் யோவமந்யதே | ஶ்வாநயோநிஶதம் ப்ராப்ய சண்டாளேஷ்- வபிஜாயதே || என்னக் கடவதிறே. “முமுக்ஷக்களுக்கு மாதாபிதாக் கள் ஆர்?” என்று கேட்க “ஶரீரமேவ மாதாபிதரௌ ஐநயத:” என்கிற மாதாபிதாக்களும், ‘த்வம் மாதா ஸர்வலோகாநாம் தேவதேவோ ஹரி: பிதா’ ‘பிதா மாதா ச மாதவ:’ என்று பொதுவான மாதா பிதாக்களும் இவனுக்கன்று. அவர்களுமல்ல. இனியாரென்னில், திருமந்த்ரம் மாதாவாயும் பிதா ஆசார்யனும் என்று அருளிச்செய்வர். இத்தை நினைத்திறே நஞ்சியரை அனந்தாழ்வான் “திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயநிஷ்டராவீர்” என்று வாழ்த் திற்றும். “உத்பாதகப்ரஹ்மபித்ரோ: கரீயாந் ப்ரஹ்மத:பிதா” என்றும் உண்டு,
“முமுக்ஷுக்களுக்கு ஸம்ஸாரத்திலே இருக்கும் நாள் உசாத்துணை யார்? பொழுது போம்படி என்? என்று நஞ்ஜீயரைப் பிள்ளை கேட்க, முமுக்ஷவென்று ஒரு ஜாதியன்று; ஒரு ஆஶ்ரமமன்று; மோக்ஷத் திலே இச்சையுடையவனை முமுக்ஷுவென்றதித்தனை; இவனுக்கு உசாத்துணையும் இவனோடே சேர்ந்து போதுபோக்குமுள்ளதும் விரஜைக்கு அக்கரையிலே போனாலிறே. இவ்விருப்பிலே ஓராசை யுடையவனுக்கன்றோ துணை வேண்டுவதும் போதுபோக்குமுள்ள தும். இருக்கும் நாள் பிராட்டிக்கு லங்கையில் உசாத்துணையுண் டாகில் இவனுக்கும் ஸம்ஸாரத்தில் துணையுண்டு. அறிவு நடையாடின முமுக்ஷுவுக்கு ஸம்ஸாரம் பிராட்டிக்கு லங்கையோ பாதியிறே.! அவளுக்கு ராவணன் அபிமானித்த அஶோகவனிகையோ பாதி, இவனுக்கு இவ்வுடம்பு, அவளுக்கு மாரீசனுடைய தோற் றரவோபாதி இவனுக்கு விஷயப்ராவண்யம். ‘அகற்ற நீ வைத்த மாயவல்லைம் புலன்கள்’ என்னக் கடவதிறே. அவளுக்கு ராவணன் தோற்றரவோபாதி இவனுக்கு ஸம்ஸாரத்தின் தோற்றரவு. அவளுக்குத் தர்ஜனபர்த்ஸனாதிகளைப் பண்ணும் ராக்ஷஸிகளோ பாதி இவனுக்குப் புத்ரமித்ராதிகள், ஏகாக்ஷி, ஏககர்ணிகைகளோபாதி இவனுக்கு அஹங்காரமமகாரங்கள். அவளுக்கு ஸ்ரீவிபீஷணாழ்வா னும் பெண்மகளும் போலே இவனுக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் உசாத் துணையாயிருக்கும்படி, அவளுக்குத் திருவடி தோற்றரவோபாதி இவனுக்கு ஆசார்யன் தோற்றரவும். அவளுக்குத் திருவடி வர்ஷித்த ஸ்ரீராமகுணங்களோபாதி இவனுக்கு ஆழ்வார்கள் அருளிச்செயல்க ளும், ஸ்ரீராமாயண மஹாபாரதாதி, பகவத்கதைகளும். அவளுக்குக் திருவடி கொடுத்த திருவாழி மோதிரத்தோபாதி இவனுக்கும் ஆசார்யன் திருவுள்ளமான திருமந்திரம். அவளுக்குத் திருவாழி மோதிரம் சாத்தின மணிவிரலை நினைப்பது அணைத்ததிருத் தோளை நினைப்பது, அவ்வழியாலே திருமேனியை முழுக்க நினைப் பதாய் இலங்கையில் தனியிருப்பையும் மதியாதே பெருமாளோடே ஒரு படுக்கையிலே இருந்தாற்போலே இவன் திருமந்த்ரத்தில் ப்ரதமாக்ஷரத்தில் சொல்லுகிற ரக்ஷகத்வஶேஷித்வங்களை நினைத்து அந்த ரக்ஷகத்வஶேஷித்வங்களுக்கு இடைச்சுவரான அந்யஶேஷத்வ ஸ்வஸ்வாதந்தர்ய நிஷேதத்தைப் பண்ணித் தன்னை அநந்யார்ஹ ஶேஷமாக்கின அவதாரணத்தை நினையா, அவ்வநந்யார்ஹஶேஷ வஸ்துவுக்கு உஜ்ஜீவனம் நிருபாதிகஶேஷியானவனுக்குக் கிஞ்சித் கரிக்கை யென்கிற அர்த்தத்தைக் காட்டும் நாராயணபதத்தை நினையா, இப்படித் திருமந்திரத்தில் அர்த்தாதுஸந்தானத்தாலே ஸம்ஸாரத்தில் இருப்பையும் மதியாதே பாமருமூவுலகத்துள்ளே தெளிவுற்ற சிந்தையராய் வர்த்திப்பர்கள். பிராட்டிக்கு லங்கையிலே பொழுதுபோக்கு போலே முமுக்ஷுரவுக்கு ஸம்ஸாரத்திலே பொழுது போக்கு, ஸம்ஸாரிகளிற் காட்டில் முமுக்ஷுவுக்கு (இவ்விடத்தில் சில வார்த்தைகள் விட்டுப் போயிருக்கின்றன). லங்கையிலுள்ளார், தன்னிலமான வாசி தோன்ற உண்பாருறங்குவாராய், ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளோடே போதுபோக்காய், பிராட்டி ஊணுமுறக்கமுமின் றிக்கே, பத்துக்கோடி செந்நாய்க்கு நடுவே ஒரு மான்பேடை இருந்தாற்போலே, பெருமாள் தோள்வீரத்தை அநுஸந்தித்து, அவ்வீரத்துக்கு ஒரு இ(கு)றையான ப்ரவ்ருத்திநிவ்ருத்திகளுக்கு க்ஷமையன்றிக்கே துரும்பு நறுக்காதே இருந்தாற்போலே முமுக்ஷு வுக்கும் ‘உண்ணா நாள் பசியாவதொன்றில்லை என்றும், ‘நாட்டுமானிடத்தோடெனக்கரிது’ என்றும், ‘நாட்டாரோடியல் வொழிந்து என்றும், ‘கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ’ என்றுமிருக்கை, ஸம்ஸாரிகளுக்கு வாஸஸ்தானம் ஒரு க்ராம மாத்ரமாய், ஆஶ்ரயம் க்ஷேத்ரஜ்ஞனாயிருப்பானோர் எலியெலும்ப னாய், ப்ரயோஜனமும் வயிறு வளர்க்கையாயிருக்கும். முமுக்ஷு வுக்கு இருப்பிடம் எம்பெருமானேயாய், ஆஶ்ரயம் எம்பெருமானே யாய், பரயோஜனமும் கைங்கர்யமேயாயிருக்கும், ‘வைத்த பரிசிது காண்மின்’ என்று இந்நிலத்துப் பொருந்தாமையும், பொருந்தின நிலத்தில் புகப்பெறாமையும் வடிவிலே தோற்றும்படியாய் கண்கள் அகம்பொழுக ‘நினைந்திருந்தே சிரமம் திர்ந்தேன்’ என்றிருப்பர்கள். (என்று நஞ்சியர் அருளிச்செய்தார்.)
இவ்விருப்பில் பொருந்தாமை விளைப்பித்து இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே கருந்தரையிலே புகுந்து பகவத்விஷ யத்தை உபகரித்த ஆசார்யனுக்கு ஶிஷ்யன் பணணும் உபகார மேதென்னில் ஆசார்யவிஷயீகாரத்துக்கு இவ்வருகு ஶிஷ்யன் நல் வழிக்கு உறுப்பாக நடக்கும் நடக்கைகளடைய ஆசார்யனுக்கு உபகரித்தானாகவாயிற்று, ஆசார்யன் திருவுள்ளத்தில் அநுஸந்தித் திருக்குமது. அவையாவன:-
தன் முன்னடி பார்த்து நடக்கையும்; பிறருடைய குணாகுண நிரூ பணம் பண்ணாதொழிகையும்; ஸ்வதோஷத்தில் ஸர்வஜ்ஞனாயிருக் கையும், பரதோஷத்தில் அஜ்ஞனாயிருக்கையும்; அந்யஶேஷத்வம், ஸ்வஸ்வாதந்த்ர்யம், தேஹாத்மாபிமானம், ஆத்மஸ்துதி, பரநிந்தை என்கிற எல்லை மயக்குக்கள் பரிஹரித்து நடக்கையும், எம்பெருமா னுடைய வாய் புகு சோற்றைப் பறியாதொழிகையும்; அதாவது: எம்பெருமானுடைய வகுத்த ரக்ஷகத்வத்தை தான் தனக்கு ரக்ஷக னென்றிருக்கை; ஆசார்யனையும், திருமந்த்ரத்தையும், எம்பெருமா னையும், அவமானம் பண்ணாதொழிகையும்; ஆசார்யனை அவமானம் பண்ணுகையாவது:- தன் முன்னடி பார்த்து நடவா தொழிகையும், அவன் அருளிச்செய்த திருமந்திரத்தைத் தரை யில்லாத்தரையிலே சிந்தி இழக்கையும்; திருமந்த்ரத்தை அவமானம் பண்ணுகையாவது:- திருமந்திரத்தை மறக்கையும், திருமந்த்ரம் அருளிச்செய்த ஆசார்யனை அநாதரிக்கையும், திருமந்த்ரத்தால் ப்ரதிபாதிக்கிற அர்த்தத்தின் படியொழிய அந்யஶேஷத்வ ஸ்வஸ்வா தந்த்ரிய தேஹாத்மாபிமாநாதிகளிலே மொத்துண்டு கிட்டம் தின்ற மாணிக்கம் போலே உருமாய்ந்து போகையும்; எம்பெருமானை அவமானம் பண்ணுகையாவது:- அவனுடைய ரக்ஷகத்வத்துக்கு இடைச்சுவரான க்ஷேத்ரஜ்ஞரை ரக்ஷகராக நினைத்து அவர்கள் வாசல்கள் தோறும் நுழைந்து ஸர்வேஶ்வரனை ஸ்துதிக்கிற நாக்கை இட்டு, புரோடாசத்தை நாய்க்கிடுமாப்போலே க்ஷேத்ரஜ்ஞரை ஸ்துதிக்கையும்.
எம்பெருமானுக்கும் ஆத்மாவுக்கும் ப்ராப்தி அவிநாபூதமாயிருக்க, புருஷகாரம் வேண்டுவானென்னென்னில் இருக்கிற ஸம்ஸாரமும், எடுத்த உடம்பும், இந்த ப்ராப்திக்கு இடைச்சுவரான அந்யஶேஷத்வ ஸ்வஸ்வாதந்த்ர்யதேஹாபிமாநாதிகளை விளைப்பித்துத் தன்னை மறந்து உருமாயப்பண்ணுமதாகையாலே ஸாபராதனான தன் படியையும், அபராதத்தையும் அறிகைக்கு ஸர்வஜ்ஞனுமாய், அறிந்த படி அநுபவிப்பிக்கைக்கு ஸர்வஶக்தியுமாய், தான் ஸ்வதந்த்ரனுமா யிருக்கையாலே இவன் அபராதத்தைக் கண்டு அழியச்செய்யா மைக்குப் புருஷகாரம் வேணும். ஆனால் பிராட்டிக்கும் எம்பெருமா னுக்கும் ப்ராப்தி ஒத்திருக்குமாகில் பிராட்டியைப் புருஷகாரமாகச் சொல்லுவானென்னென்னில்: இருவர்க்கும் இரண்டு குணமுண்டாகை யாலே. எம்பெருமானுக்கு ஸ்வஸ்வாதந்த்ர்யமும் நீர்மையுமுண்டு, பிராட்டிக்கு வெறும் நீர்மையே வடிவாயிருக்கும். எங்ஙனே யென்னில், மத்யராத்ரியிலே காதுகரும் கூட இரங்கும்படியான ஶரணாகதியை முன்னிட்டுக் கொண்டு வந்த ஸ்ரீவிபீஷணாழ்வானை யுங்கூட ”வத்பதாம் பத்யதாம்” என்ன ஒரு நிலை நின்று கைக் கொண்டது பெருமாள் ப்ரக்ருதி, தன்னை நலிந்த ராக்ஷஸிகளைத் திருவடி நலியப்புக, பெருமாள் பரிகரமென்று மதியாதே “ந கஶ்சிந் நாபராத்யதி” என்று பிராட்டி ப்ரக்ருதி.
ஆனால் பிராட்டியும் ஆசார்யனும் இரண்டு புருஷகாரம் வேண்டுவா னென்னென்னில்: “ஶரண்யன் குறையும் ஶரணாக தன் குறையும் தீர்ந்து இருவர்க்கும் ஸ்வரூபம் பெறுகைக்காக” என்று அருளிச் செய்தார். குருபரம்பரையை முன்னிடவே ஶரணாகதன் குறைதீரும். பிராட்டியை முன்னிடவே ஶரண்யன் குறை தீரும். ஶரண்யனுக்குக் குறையுண்டோ ? என்னில்: நித்யவிபூதி போலே தெளிவிசும்பன் றிக்கே இருள்தருமாஞாலமான ஸம்ஸாரத்திலே வர்த்திக்கிற சேதநனை இந்நிலத்தின் தண்மை பாராதே பிழை எழுதும் ஸ்வா தந்தர்யம் ஶரண்யனுக்குக் குறை. அக்குறை பிராட்டியை முன்னி டவே தீரும். எம்பெருமான் இவ்வாத்மாவைப் பற்றும்போது பிராட்டியையும் ஆசார்யனையும் முன்னிட்டாயிற்றுப் பற்றுவது. ஆத்மா எம்பெருமானைப் பற்றும்போது பிராட்டியையும் ஆசார்ய னையும் முன்னிட்டாயிற்றுப் பற்றுவது. இவ்வர்த்தம் இளைய பெருமாள், ஸ்ரீவிபீஷணப்பெருமாள், ஸ்ரீகுஹப்பெருமாள், திருவடி, மஹாராஜருள்விட்டார் பக்கலிலும் காணலாம். எம்பெருமானுக்கு ரக்ஷித்தே ஸ்வரூபம் பெறவேணும், பிராட்டிக்கு ரக்ஷிப்பித்தே ஸ்வரூபம் பெறவேணும். ஆசார்யனுக்கும் இவ்வர்த்தம் அறிவிப் பித்தே ஸ்வரூபம் பெறவேணும், இவ்வர்த்தமறிந்து அத்யவஸித்த போதே ஸ்வரூபஸித்தி சேதனனுக்கு அர்த்தகாமத்தில் நசையறவே ஆஶ்ரயம் நிறம் பெறும். அஹங்காரமமகாரமற வைஷ்ணவத்வம் நிறம் பெறும். இவைதான் பகவத்ப்ராப்திக்கு ப்ரதிபந்தகங்களா யிருக்கும்.
பகவத்ப்ராப்திக்கு ப்ரதிபந்தகமான ஸ்வவ்யாபார நிவ்ருத்திப்ரபத்தி, “ப்ரபத்தியாவது, ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை” என்று ஆழ்வான் பணிக்கும். அதாவது:- அஜ்ஞனாய், அஶக்தனாய், அப்ராப்தனான தன்னை விட்டு, ஸர்வஜ்ஞனாய் ஸர்வ ஶக்தியாய் ப்ராப்தனுமான எம்பெருமானைப் பற்றுகை. ப்ரபத்திக்கு ஸ்வரூபம் ஏது? அங்கம் ஏது? ப்ரமாணம் ஏது? அதிகாரிகள் ஆர்? என்னில்: திருவடியைக் கட்டின ப்ரஹ்மாஸ்த்ரம் சணற்கயிறு காண விட்டுப் போனாப்போலே தன்னையொழிந்த உபாயாந்தரங்களை பொறா தொழிகை ஸ்வரூபம். இதரோபாயத்யாகம் அங்கம். ஸகல ப்ரமாண ப்ரதிபாத்யனான எம்பெருமான் தானே ‘மாமேவ யே ப்ரபத்யந்தே” என்று அருளிச்செய்கையாலே அதுதானே ப்ரமாணம், தானும் பிறரும் தஞ்சமென்றிருக்கும் நன்மைக்கு, எம்பெருமானுக்கு அவ்வருகு இல்லையென்றிருக்கையும், பிறருடைய அநர்த்தாப்யு தயங்கள் தன்னதென்றிருக்கையும் இவை தொடக்கமானவை (அதிகாரி ஸ்வரூபம்), அர்த்தஶ்ரத்தை பிறந்தபோது தே.ஹாத்மாபி மானம் போயிற்றில்லையாகக் கடவது, தன்ளையுள்ளபடி ஆராயு மன்றும் பிறருடைய குணாகுணநிரூபணம் பண்ண அவஸரமில்லை; ப்ராப்தியுமில்லை. எம்பெருமானை உள்ளபடி ஆராயுமன்றும் பிறருடைய குணாகுணநிரூபணம் பண்ண அவஸரமில்லை; ப்ராப்தியுமில்லை. சைதன்யம் நடையாடினவன் தன்னைப் பார்த்துத் தளர்தல் எம்பெருமானைப் பார்த்துத் தேறுதல் செய்யுமித்தனை யொழிய பொழுதைப் பழுதே போக்கான். இனி, பிறருடைய குணா குணநிரூபணம் பண்ணுகிறது, பகவத்ஜ்ஞானம் நெஞ்சிற்படாமை யாலே. உணர்த்தி அற்றவன் உறங்குகிறானாயிறேயிருப்பது. “மந ஜ்ஞாநே” என்கிற தாது.
அசித்துக்கும் ஒரு குணமுண்டு. ஈஶ்வரனுக்கும் ஒரு குணமுண்டு. அசித்து தன்னை அபிமானித்தாரைப் பிறர் காலில் துவளவொட்டாது. தேஹாத்மாபிமானி பிறர் காலில் துவளான் “ந நமேயம்” என்றிருக்குமதொழிய எம்பெருமானையாதல், ஸ்ரீவைஷ்ணவர்களை யாதல் வணங்கானே, எம்பெருமானும் தன்னை அபிமானித்தாரைப் பிறர் காலில் துவளவொட்டான். திருமந்த்ரநிஷ்டன் அஸத்துக்கள் காலில் வணங்காள். ஆத்மா ப்ரக்ருதியை அண்டைகொண்டு எம்பெரு மானை உறுமுதல், எம்பெருமானை அண்டைகொண்டு ப்ரக்ருதியை உறுமுதல் செய்யுமதொழிய ஒன்றில் நில்லாது. ஹிரண்யன் ப்ரக்ருதியை அண்டைகொண்டு எம்பெருமானோடே எதிரிட்டு முடிந்து போனான். ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான் எம்பெருமானை அண்டை கொண்டு ப்ரக்ருதியை எதிரிட்டு வாழ்ந்து போனான். ப்ரக்ருதியைச் செறியச்செறிய அந்தகாரம் மிகும். எம்பெருமானைச் செறியச்செறிய வெளிச்செறிப்பு மிகும். ஹிரண்யராவணாதிகள், கைகேயி, கூனி பக்க லிலே காணலாம். திரிஜடை, விபீஷணாழ்வான் பக்கலிலேயும் காணலாம். ப்ரக்ருதியினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களை ஆசார்யன் காட்டக்கண்ட சேதநனுக்கு இவ்வர்த்தம் நெஞ்சிற் படாதாகில் பகவத்ப்ராப்தியளவும் பயங்கெட்டிருக்க விரகில்லை. “தேறேலென்னை உன் பொன்னடிச்சேர்த்தொல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடல்” என்பது, “மங்கவொட்டு” என்பது, இந்நின்ற நீர்மை” என்பது, “இது கண்டாய் என்பதாய் வழித்தங்கு வல்வினை யை மாற்றானோ” என்பதாய், “நடுவேயோருடம்பிலிட்டு” என்று அஞ்சிக்கூப்பிடாநிற்பர்கள், பகவத் ஸம்பந்தம் பண்ணின பின்பு இவ்வுடம்பைக் கண்டுவைத்து அஞ்சாதே இருந்தவனுடைய ஜ்ஞானத்தை ஶோதிக்கவடுக்கும்.
ஆத்மா அச்சேத்யனாய், அதாஹ்யனாய், அக்லேத்யனாய், அஶோஷ்யனாய், ஸர்வகதனாய், ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய், பகவச்சேஷபூதனாயிருந்து வைத்து ப்ரக்ருதிஸம்பந்தத்தாலே மக்னனாய்க்கொண்டு உருமாய்ந்து “அஸந்நேவ ஸ பவதி” என்று உண்டாயிருக்கச்செய்தே இல்லாதார் கணக்காய் நின்ற நிலையை ஆசார்யன் காட்டக்கண்ட அனந்தரம் விரோதி கழிந்து ப்ராப்ய தேஶத்திலே புகுருமளவும், ராக்ஷஸிகள் மத்யையிலிருந்த பிராட்டி யுடைய தனியிருப்பைப் போலவும் காலாக்னிமத்யையிலகப் பட்டாரைப்போலவும் ஹாலாஹலவிஷத்தினிடை அகப்பட்டாரைப் போலவும் இதனுடன் பொருந்தாமை தோற்றப் பெருங்கூப்பீடாகக் கூப்பிட்டு இத்தை விடுவிக்கவல்ல மஹாபாகவதர்களான ஸத்துக்க ளுடைய ஸஹவாஸங்களால் பெற்ற பகவத்க்ருபையாலும், ஸ்வரூபயாதாத்ம்யத்தாலும் வெளிச்செறிப்புப் பிறந்து இவ்விரோதி யை விடுவித்துக் கொள்ளுகையிலே த்வரை விஞ்சிச்செல்லாநிற்கும். ”ஜ்ஞாநாத் மோக்ஷ: அக்ஞாநாத் ஸம்ஸார: ‘ என்கிறது. ஜ்ஞாநமாகிறது. ஜ்ஞேயமாகிற பகவதஸம்பந்தத்தை அறிந்து, ஸம்பந்தத்துக்கு விரோதியான ஸம்ஸாரஸம்பந்தம் பொறா தொழிகையிறே. அஜ்ஞாநாத் ஸம்ஸாரமாகிறது: பகவத்ஸம்பந்தத் துக்கு விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோட்டைச்செறிவு ஸம்ஸாரம் ஆகிறதென்றபடி, அநாத்மநி ஆத்மபுத்தியும், அஸ்வே ஸ்வம்புத்தியும் கர்மபரம்பரையும் ஸம்ஸாரஹேது. பகவத்ப்ரஸாத பரம்பரை மோக்ஷஹேது.
சேதநனுடைய அஹமர்த்தமறியலாவது, தே.ஹாத்மாபிமாநிகளோ டொத்த தனக்குக் தான்தேடும் நன்மைகள் அடையத் தனக்கு நாஶமென்றிருக்கை. நஞ்சீயர் ஸ்ரீபாதத்திலேயுடையாரொரு ஸ்ரீவைஷ்ணவர் தம்முடைய அந்திமதஶையில் “இவ்வவஸ்தையில் எனக்குத் தஞ்சமாக நீ வைத்திருக்கலாவது ஏது?” என்று விண்ணப்பம் செய்ய “இப்போது இந்நினைவும் கூட அறுகை” என்று அருளிச்செய்தார். அதாவது: ஜ்ஞானம் பிறந்த பின்பு ஜ்ஞாந கார்யமான கைங்கர்யம் கைபுகுரும் தேஶவிஶேஷத்திலே செல்லு மளவும் அறிவுநடையாடின சேதநனுக்கு ஆபத்தென்றபடி. ”ஆத்மநோ துர்தஶாபத்திம் விம்ரூஶ்ய ச ஹரேர்குணாந்” என்கிறபடியே, ஆதலால் தன்னுடைய நினைவு மாறினாலல்லது ”ஸ்மராமி”யும் “நயாமி” யும் பலியாதென்று அருளிச்செய்வர். இவ்வளவு உபாயத்தை ஓடவைத்தது ஏகபதம். உபேயத்தை ஓடவைத்தது மேலில் நமஸ்ஸு. உபாயத்தை நிலையிட்டார்கள், பிராட்டி, த்ரௌபதி, திருக்கண்ணமங்கையாண்டானுள்ளிட்டார்கள். உபேயத்தை நிலை யிட்டார்கள், இளையபெருமாள், பெரியஉடையார், சிந்தயந்தி, பிள்ளை திருநறையூரரையர். எங்ஙனேயென்னில் “ஶீதோ பவ” என்னவல்லவள் தன்னுடைய தனியிருப்பையும் மாற்ற வல்லளா யிருக்க, பெருமாளுடைய வீரத்துக்குக் கொத்தையாமென்று துரும்பு நறுக்காதிருந்தபடியாலும், லஜ்ஜையில்லாத கோஷ்டியிலே, லஜ்ஜையை உடையவன் கையிலே தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு நிர்லஜ்ஜையாயிருந்தபடியாலும், தன் பரபரப்பை மாற்றா, வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாது ஒதுங்கினபடியாலும், உபாயத்துக்கு ஸீமாபூமி அவர்கள், ‘நில்’ என்ன “குருஷ்வ” என்றபடி யாலும் “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்றபடியாலும் “க்ரியதாமிதி மாம் வத” என்றபடியாலும் ‘லஷ்மணேந கதாம் கதிம்” என்கிற படியான ப்ராப்தியாலும், *’ஸஹஜ கைங்கர்ய விதய:” என்கிற அர்த்தம் கைப்பட்டது அவர்க்கேயாகையாலும், பெரிய உடையாரும், சிந்தயந்தியும், பிள்ளை திருநறையூரரையரும் வகுத்த விஷயத் தைப் பிரித்துத் தந்தாமுடைய உடம்பைப்பேணாதபடியாலும், வகுத்த விஷயத்தைக் கண்ட மாத்ரத்திலே விரோதியான உடம்பை விடுகை யாலும், உபேயத்துக்கு ஸீமாபூமி இவர்கள்.
– இதரோபாயத்யாகபூர்வகமாக அவனே உபாயமாகவேணும் என்னும் உபேயப்ரார்த்தனையை “த்வயம்” என்கிறது. இவ்வர்த்தம் நெஞ்சில் பட்டவர் பிராட்டியைப் போலே துரும்பு நறுக்காதே ஒழியும், த்ரௌபதியைப்போலே தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டிருக்கும். திருக்கண்ணமங்கையாண்டானைப்போலே பரபரப்பற்று வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாது ஒதுங்கும். இளையபெருமாளும், பெரியவுடையாரும், பிள்ளை திருநறையூரரையரும், சிந்தயந்தியும் போலே தந்தாமை முடித்தும் ஸ்வரூபமழியாமல் நோக்கி நிற்பர்கள்.
ஆசார்யாங்கீகாரானந்தரத்திலே குருபரம்பரையையும், திருமந்திரத் தையும், சரமஶ்லோகத்தையும் அநுஸந்தித்து இருந்த இடமறியாமல் தன்னை ஒருங்கவிட்டுக்கொண்டு, தன்னைக் கரையேற்றவல்லனாய், அர்த்த காமோபஹதனல்லாதானொரு பரமஸத்வநிஷ்டன் கையிலே தன்னைப் பொகட்டு நிர்ப்பரனாயிருக்கைக்கு மேலில்லை. இவனுக் குப் பரிஹரிக்க வேண்டுவது: தேவதாந்தரபஜநம் பண்ணுவாரோட்டை ஸம்பந்திகளுடைய ஸஹவாஸம் விநாஶமென்றஞ்சித் தவிரவும், பகவத்ஸ்வத்தை வருந்தியாகிலும் அபஹரித்து ஜீவியாதொழி கையும், பகவத்ப்ராப்திக்கு விரோதியான விஷயப்ராவண்யம் தன்னை முடிக்குமென்று அஞ்சிப்போரவும், ஆசார்யனளவில் ப்ரக்ருதிப்ராக்ருதங்கள் நிமித்தமாக வரும் அநர்த்தம் பரிஹரித்துப் போரவும், நிலை நின்ற பகவதபசாரம் வருந்தியும் பரிஹரித்துப் போரவும் வேணும்.
“ஒரோரவதாரங்களிற்செய்த ஆனைத்தொழில்களெல்லாம் ஓரோ பாகவதாபசாம் பண்ணின பலம் அநுபவிப்பிக்கைக்காக” என்று ஜீயர் அருளிச்செய்வர், நல்லடிக்காலத்தில் நம்மாசார்யர்கள் ஸ்ரீவைஷ்ண வர்களைத் தங்களோபாதி ப்ரக்ருதிமான்களாக நினைத்திருக்கும் புல்லிமையின்றிக்கேயாயிற்று இருப்பது. ‘திருவுடைமன்னர்’, ‘செழுமா மணிகள்’, “நிலத்தேவர்’, ‘தெள்ளியார்’, ‘பெரு மக்கள்’, ‘பெருந்தவத்தர்’, ‘உருவுடையாரிளையார்’, ‘ஒத்து வல்லார்’, ‘தக்கார் மிக்கார்’, ‘வேதம் வல்லார்’, ‘வேதவிமலர்’, ‘சிறு மாமனிசர்’, ‘எம்பிரான்றன சின்னங்கள்’ என்று நம் குலநாதரான ஆழ்வார்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இப்படித் திருநாமம் சாற்றுகையாலே, கேவலம் தன்னோடொக்க ஒரு மனுஷ்யரென்று ஸ்ரீவைஷ்ணவர்களை நினைத்திருக்கை பாகவதாப சாரம். பகதபசாரம் பண்ணுகையாவது: எம்பெருமானுடைய நற்சீவ னான ஸ்ரீவைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணுமபசாரம். பாகவதாபசாரம் பண்ணுகையாவது: ஸ்ரீவைஷ்ணவர்களுடைய உயிர்நிலையான எம்பெருமான் திறத்துப் பண்ணுமபசாரம், பாகவதஸம்ஶ்லேஷம் பகவத்ஸம்ஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும். பகவத்ஸம்ஶ்லேஷம் பாகவதஸம்ஶ்லேஷ பர்யந்தமாயல்லது இராது. அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து, பகவத், வியப்லேஷத்தையும் பிறப்பித்து, இவனையும் முடித்துவிடும். பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத்ஸம்ஶ்லேஷத்தையும் பிறப்பித்து, அபாகவதவிஶ்லேஷத்தையும் பிறப்பித்து இவனையும் எடுத்துக் கரைமரம் சேர்த்துவிடும்.
இவ்வெல்லைமயக்கு ஆசார்யன் கண்வட்டத்திலே வர்த்திக்குமவ னுக்கு வாராது. ஆசார்யன் கண்வட்டம் விட்டால், நித்யஸம்ஸாரி யாய்ப் போமித்தளை. ஆசார்யனாவான், ஓட்டை ஓடத்தோடே ஒழுக லோடமாய், தன்னைக்கொண்டு முழுகுமவனன்று தன்னைக் கரை யேற்ற வல்லனாய், தன்னையடைந்தாரையும் கரையேற்ற வல்லனான ஜ்ஞரநாத் பரிபூர்ணனா யிருப்பானொருவன். ஆசார்ய னுடைய ஜ்ஞானம் வேண்டா ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும், கருடத்யானத்துக்கு விஷம் திருமாப்போலே ஆசார்யனை த்யானித் திருக்கவே ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக்கொள்ளலாம் என்று அருளிச்செய்வர்கள். “குரோரவஜ்ஞயா ம்ருத்யு: மந்தராவஜ்ஞா தரித்ரதா, குருமந்த்ர, பரித்யாகீ, ரௌரவம் நரகம் வ்ரஜேத்” என்றுமுண்டு.
அத்ருஷ்டமே தஞ்சமென்றிருப்பர்கள் நித்யமுக்தர்கள். த்ருஷ்டமே தஞ்சமென்றிருப்பர்கள் நித்யஸம்ஸாரிகள். முமுக்ஷவுக்கு த்ருஷ்டா த்ருஷ்டங்கள் செல்லாநிற்கச்செய்தே அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு த்ருஷ்டமுண்டானால், த்ருஷ்டத்தை விட்டு அத்ருஷ் டத்தைப் பற்றுமவன் முமுக்ஷு. அத்ருஷ்டத்தை மறையவருவ தொரு த்ருஷ்டமுண்டானால் அத்ருஷ்டத்தை விட்டு த்ருஷ்டத்தைப் பற்றுமவன் நித்யஸம்ஸாரி, இப்போது தன்னுடைய அஹமர்த்த மறியலாவது இவ்விரண்டர்த்தமும் ஒரு எல்லை வந்தாலல்லது காணவொண்ணாது. அல்லாதபோது இருந்ததே குடியாக வென்றி ருக்கவும், வைஷ்ணவர்கள் தாங்களும் தங்கள்படியாலே வைஷ்ண வர்களென்றிருக்கவும், ஒரு தட்டில்லை.
பரத்வாபஹாரிகள் ஶைவர். போகாபஹாரிகள் விஷயப்ரவணர். குணாபஹாரிகள் மாயாவாதிகள். தானும் எம்பெருமானும் அறிய வைஷ்ணவத்வமுண்டென்று அறியலாவது, த்யாஜ்யமான சில வற்றில் வந்தால் தானும் எம்பெருமானும் அறிய நசையற்றிருக்கை யும். உபாதேயம் யாதொன்று, அதிலும் வந்தால் தானும் எம்பெரு மானும் அறிய நசையுண்டா யிருக்கையும், தேஶாந்தரமும், தேஹாந் தரமும் உண்டென்று அறிந்து பயத்தோடே கூட வர்த்திக்க அடுக்கும்.
நம் முதலிகளுக்கு ஒரு மூர்த்திநியதியும், ஒரு மந்த்ரநியதியும், ஓர் ஆசார்யநியதியும் உண்டு. அவையாவன: பெருமாளும், த்வயமும், த்வயத்தை முதலடியிலே அருளிச்செய்த மஹோபகாரகனான ஆசார்யனும்.
எம்பெருமான் முதலடியிலே “க்ஷிபாமி” என்னும். புருஷகாரத்தை முன்னிடவே *”ததாமி” என்னும். பின்பு “நயாமி” என்னும். அவன் ரக்ஷிக்கைக்குப் பரிகரம் ஆர்த்தியல்லதில்லை. இது குறைவற இருவர் ஸ்வரூபமும் குறைவறும், “படைப்பொடு கெடுப்புக் காப்பவன்’ இத்யாதி, இத்தால் ருசிஜனகன் எம்பெருமானென்னு மத்தையும் ஸ்வவ்யதிரிக்த ஸகலபதார்த்தமும் அவனாலே ஜந்ய மென்றும் சொல்லிற்றாயிற்று. “இடைப்புக்கோர்” என்கையாலே ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களுக்கும் “நான் நான்” என்கிற ப்ரஹ்மாதி களன்றியே, மாதாபிதாக்களாக ப்ரமிக்கிறவர்களையும் சொல்லுகிறது.
ஆஹாரத்வாரம் உபாதேயம். விஹாரத்வாரம் த்யாஜ்யம். ஆகை யாலே, லஜ்ஜாபுரஸ்ஸர நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. காலத் துக்கும், கர்மத்துக்கும், வேதத்தில் பூர்வபாகத்திற் சொல்லப்பட்ட நாமத்துக்கும் ப்ரபன்னன் குடிமகனல்லன். ஆத்மவிஶ்வாஸமும் அத்யவஸாயமும் உடையராய், க்ருதஜ்ஞராயிருப்பார்க்கல்லது பகவத், விஷயம் சொல்லலாகாது என்று பலகாலும் அருளிச்செய்வர். ஆசார்யவிஶ்வாஸமும், அத்யவஸாயமும், தேவதாந்தரபஜன ஸம்பந்தமறுகையும், நிலைநின்ற பாகவதாபசாரம் பரிஹரித்துப் போரவும் வேணும். ஆசார்யனுக்கு இவனுபகரிக்குமதாவது:- அவன் தந்த வஸ்துவை நாற்சந்தியிலே வையாதொழிகை. பகவத்ப்ரஸாத,ம் பாகவதருசியைப் பிறப்பிக்கும். பாகவதருசி ஆசார்யாங்கீகாரத்தைப் பிறப்பிக்கும். ஆசார்யாங்கீகாரம் பகவத்ஸ்வீகாரத்தைப் பிறப்பிக்கும், பகவத்ப்ராப்தி தத்கைங்கர்யத்தைப் பிறப்பிக்கும். தத்கைங்கர்யம் விரோதி நிவ்ருத்தியை அபேக்ஷித்திருக்கும். ஸச்சிஷ்யன் ஸதா சார்யன் பக்கல் பண்ணும் விஶதஶ்ரவணம் “ஸதாபஶ்யந்தி”க்கே அந்வயிக்கும். இவ்வர்த்தம் ஸதாசார்யன் ஸந்நிதியுண்டாகத் தோற்றும்.
மாணிக்கமாலை முற்றிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.