முமுக்ஷுப்படி.
மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர்.
வ்யாக்யானம் – விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள்.
முமுக்ஷுப்படி.
தனியன்கள்.
திருமந்த்ரார்த்தம் தொடங்கும் போது அனுஸந்திக்கும் தனியன்கள்.
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் இத்யாதி ப்ரணதோஸ்மிநித்யம்.
ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரையின் ஒட்டுத் தனியன்.
லோககுரும் குருபிஸ்ஸஹ பூர்வைஹி கூரகுலோத்தம தாஸம் உதாரம் .
ஸ்ரீநகபத்யபிராமவரேஸௌ தீப்ரசயாந குருஞ்ச பஜேஹம்.
பிள்ளைலோகாசார்யர்-தனியன்.
லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே.
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நமஹ.
கூரகுலோத்தம தாஸர் தனியன்.
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம்.
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தேகூரகுலோத்தமம்.
திருவாய்மொழி பிள்ளை தனியன்.
நமஹ ஸ்ரீசைல நாதாய குந்தி நகர ஜந்மநே .
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே.
கோட்டூர் அழகிய மணவாளப்பெருமாள் தனியன்.
லோகாசார்ய பதாம்போஜ ராஜஹம்ஸாயிதாந்தரம்.
ஞாந வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்யவரம் குரும்.
திகழகிடந்தான் திருநாவீறுடையபிரான் தாதரண்ணர் தனியன்.
ஸ்ரீ ஜிஹ்வாவததீஷ தாஸம் அமலம் அஸேஷ ஸாஸ்த்ரவிதம்.
ஸுந்தர வர குரு கருணா கந்தளித ஞாந மந்திரம் கலயே.
சாற்றும் போது அநுஸந்திக்கும் தனியன்கள்.
கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தமதாதர்,
தீதில் திருமலையாழ்வார் செழுங்குரவை மணவாளர்,
ஓதுபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்,
போதமணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே.
வாழி உலகாசிரியன் வாழியவன் மன்னுகுலம்,
வாழி முடும்பை என்னும் மாநகரம் வாழி,
மனஞ்சூழ்ந்த பேரின்பமல்கு மிகு நல்லார்,
இனஞ்சூழ்ந்திருக்கும் இருப்பு.
ஓதுமுடும்பை உலகாசிரியன் அருள்,
ஏது மறவாத எம்பெருமான் நீதி வழுவாச்,
சிறுநல்லூர் மாமறை யோன் ,
பாதந் தொழுவார்க்கு வாரா துயர்.
அவதாரிகை.
மணவாள மாமுநிகள் அருளிச்செய்த முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகை.
ஸ்ரீயஹ-பதியாய், ஶ்ரீவைகுண்ட நிகேதநனாய், நித்யமுக்தாநுபாவ்யனாய், நிரதிஸயாநந்த யுக்தனாயிருக்கிற ஸர்வேஸ்வரன், அந்த நித்யஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்யகைங்கர்யரஸராய் வாழுகைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும், அத்தை இழந்து, அஸந்நேவ என்கிறபடியே அஸத் கல்பராய் கிடக்கிற ஸம்ஸாரி சேதனருடைய இழவை அனுஸந்தித்து அத்யந்த வ்யாகுலசித்தனாய், இவர்கள் கரணகளேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பக்ஷி போலே கிடக்கிற தஸையிலே கரணாதிகளைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வ்யபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக, அபௌருஷேயமாய் நித்யநிர்தோஷமாய், ஸ்வத:ப்ரமாணமான வேதத்தையும் ததுபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணாதிகளையும் ப்ரவர்த்திப்பித்தவிடத்திலும், அந்த ஸாஸ்த்ராப்யாஸத்துக்கு அனேக யோக்யதை வேண்டுகையாலே, அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதநர் உஜ்ஜீவிக்கை அரிதாயிருக்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யங்களையும் ஸுக்ரஹமாக இவர்கள் அறியலாம்படி
பண்ண வேணுமென்று ஸ்வரூப, உபாய, புருஷார்த்த யாதாத்ம்ய ப்ரதிபாதகமான ரஹஸ்யத்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று ப்ரகாஸிபித்தருளினான்.
அதில் திருமந்த்ரத்தை ஸ்ரீபத்ரிகாஸ்ரமத்திலே ஸ்வாம்ஸ பூதனான நரன் விஷயமாக ப்ரகாஸிப்பித்தான். த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வமஹிஷியான பிராட்டி விஷயமாக ப்ரகாஸிப்பித்தான். சரம ஸ்லோகத்தைத் திருத்தேர்த் தட்டிலே ஸ்வாஸ்ரிதனான அர்ஜுநன் விஷயமாக ப்ரகாஸிப்பித்தான். ஆகையாலிறே லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் என்று குருபரம்பராதியிலே ஈஸ்வரனை அனுஸந்திக்கிறது.
இனி இந்த ரஹஸ்யத்ரயந்தான் ஸப்தம் ஸுக்ரஹமாகயிருந்ததேயாகிலும் அர்த்தம் உபதேஸகம்யமாகையாலும், அதறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் அந்த ரஹஸ்யத்ரயத்திலும் பூர்வாசார்யர்களுடைய உபதேஸ பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை ஸர்வர்க்கும் ஸுக்ரஹமாகவும் ஸுவ்யக்தமாகவும் பிள்ளை லோகாசார்யர் தம்முடைய பரமக்ருபையாலே இப்ரபந்தமுகேந அருளிச் செய்கிறார். முன்பே ரஹஸ்யத்ரய விஷயமாக மூன்று ப்ரபந்தம் இட்டருளியிருக்கச்செய்தேயும் அதில் யாத்ருச்சிகப்படி அதிஸங்க்ரஹமாகையாலும், பரந்தபடி அதிவிஸ்த்ருதமாகையாலும் ஸ்ரீயஹ-பதிப்படி உபயதோஷமுமின்றிக்கே இருந்ததேயாகிலும் ஸம்ஸ்க்ருத வாக்ய பஹுளமாகையாலே பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமையாலும், த்ரிவிததோஷமுமில்லாதபடி இன்னமும் ஒரு ப்ரபந்தமிட வேணுமென்று திருவுள்ளம் பற்றி எல்லாவற்றுக்கும் பின்பிறே முமுக்ஷுப்படியாகிற இப்ரபந்தம் இட்டருளிற்று. ஆகையிறே அல்லாத ப்ரபந்தங்கள் கிடக்க, இத்தை எல்லாரும் அதிகரித்துப்போருகிறது. இன்னமும் பூர்வப்ரபந்தங்களில் அநுக்தமான அர்த்த விசேஷங்களும் இப்ரபந்தத்திலே உண்டாகையாலும், இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாயிருக்கும்.
வ்யாக்யாந அவதாரிகை முற்றிற்று.
திருமந்த்ர ப்ரகரணம்.
மூலம்:1. முமுக்ஷுவுக்கு அறியவேண்டும் ரஹஸ்யம் மூன்று.
வ்யாக்யானம்: முமுக்ஷுவுக்கு அறியவேண்டும் ரஹஸ்யம் மூன்று. முமுக்ஷுவாகிறான் மோக்ஷத்திலே இச்சையுடையனானவன். முசில மோக்ஷணே யிறே தாது. இத்தால் ஸம்ஸார விமோசநத்தில் இச்சை பிறந்தவனுக்கு என்றபடி. ஆத்மப்ராப்தி காமனுக்கும் முமுக்ஷுத்வமுண்டேயாகிலும், இவ்விடத்தில் அவன் விவக்ஷிதனன்று. அவனுக்கு ரஹஸ்யத்ரயஜ்ஞாநாபேக்ஷை இல்லையிறே. ஆகையால் இவர் முமுக்ஷுவென்கிறது, பகவத்ப்ராப்தி காமதயா ஸம்ஸார நிவ்ருத்தியில் இச்சை பிறந்தவனை. ஏவம்பூதனானவனுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யம் மூன்று என்றது. இவனுக்கு அவஸ்யம் ஞாதவ்யமாயுள்ளது ஸ்வரூபஉபாய புருஷார்த்தங்களாகையாலும் , அவற்றை இந்த ரஹஸ்யத்ரயம் உள்ளபடி ப்ரதிபாதிக்கையாலும் ரஹஸ்யத்ரயமுமே அறிய வேண்டுவது என்கை. ஸ்வஞாநம் ப்ராபக ஞாநம் ப்ராப்யஜ்ஞாநம் முமுக்ஷுபி: ஞாநத்ரயமுபாதேயம் ஏததந்யந்ந கிஞ்சந என்னக்கடவதிறே. ரஹஸ்யம் மூன்று என்று இவர் உத்தேஸிக்கிறது – திருமந்த்த்ரமும் த்வயமும் சரம ஸ்லோகமுமாகிற இவற்றை என்னுமிடம் மேலே ஸுஸ்பஷ்டம். இவற்றை ரஹஸ்யங்களென்கிறது – ஸகல வேதாந்த ஸாரார்த்த ப்ரதிபாதகதயா பரமகுஹ்யங்களாகையாலே. ஆக இவ்வாக்யத்தால், அதிகாரி நிர்தேஸமும், தத்ஜ்ஞாதவ்ய நிர்த்தேஸமும் பண்ணியருளினாராய்த்து.
அவதாரிகை: இனி, அந்த ரஹஸ்யத்ரயத்திலும் ப்ரதமரஹஸ்யம் ஏது என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார். ‘அதில் ப்ரதம ரஹஸ்யம் திருமந்த்ரம்’ என்று.
மூலம்:2. அதில் ப்ரதம ரஹஸ்யம் – திருமந்த்ரம்.
வ்யாக்யானம்: அதாவது-அந்த ரஹஸ்யத்ரயத்திலும் வைத்துக் கொண்டு, இவ்வதிகாரிக்கு ப்ரதமம் ஞாதவ்யமான ரஹஸ்யம் ஸ்வரூபயாதாத்ம்ய பரமாய், த்யாஜ்யோபாதேயவிபாக ஞாநத்தைப் பரிபூர்ணமாகப் பிறப்பிக்குமதான திருமந்த்ரம் என்கை. அநந்யார்ஹஸேஷத்வம்,அநந்யஸரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற ஆகாரத்ரயத்தையும் ப்ரதிபாதிக்கையாலே சேதநஸ்வரூபயாதாத்ம்ய ப்ரதிபாதநபரமாய் ததுநுகுணமான த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் ஸுஸ்பஷ்டமாக ப்ரதிபாதியா நின்றுள்ள இம்மந்த்ரத்தாலே ஸுஶிக்ஷிதமான ஸ்வரூபத்தை உடயவனுக்கிறே, மற்றை ரஹஸ்யங்களிரண்டாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற உபயோபேயங்களில் அபேக்ஷை ஜநிப்பது. ஆகையால் ஸ்வரூபயாதாத்ம்யபரமான திருமந்த்ரம், ப்ரதம ரஹஸ்யமென்னக் குறையில்லை. இன்னமும், ப்ரணவத்துக்கு மந்த்ரஸேஷம் விவரணமானாற் போலே மந்த்ரஸேஷத்துக்கு த்வயம் விவரணமாய், த்வயத்துக்குச் சரமஸ்லோகம் விவரணமாயிறே இருப்பது. அந்த ந்யாயத்தாலும், இதினுடைய ப்ராதம்யம் ஸித்தமிறே. ஆக இவை எல்லாவற்றையும் திருவுள்ளம் பற்றியாய்த்து ப்ரதம ரஹஸ்யம் திருமந்த்ரம் என்று இவர் அருளிச்செய்தது.
இத்தை மந்த்ரமென்கிறதுமந்தாரம் த்ராயத இதி மந்த்ரஹ, என்கிறபடியே ஸப்த ஸக்தியாலும் அர்த்த போதநத்தாலும் தன்னை அநுஸந்திப்பார்க்கு ரக்ஷகமாகையாலே, ஸப்த ஸக்தியாலே ரக்ஷகமாம், ஜபஹோமாதிகளாலே கார்யங்கொள்ளும் உபாஸகர்க்கு. அர்த்த போதநத்தாலே ரக்ஷகமாம், ஈஸ்வரனே உபாயோபேயமென்றிருக்கும் ப்ரபந்நர்க்கு. அர்த்தபோதநத்தாலே ரக்ஷகமாகையாவது, தேஹாஸக்தாத்ம புத்திர் யதி பவதிபதம் ஸாது வித்யாத் த்ருதீயம், ஸ்வாதந்த்ர்யாந்தோ யதி ஸ்யாத் ப்ரதமம் இதரசேஷத்வதீச்சேத் த்விதீயம், ஆத்மத்ராண உந்முகச்சேந்நம இதி ச பதம் பாந்தவாபாஸலோலஹ, ஸப்தம் நாராயணாக்யம் விஷய சபலதீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபந்நஹ, என்று பட்டர் அருளிச் செய்தபடியே தன்னை அநுஸந்திப்பார்க்கு தேஹாத்மாபிமாநமும், ஸ்வாதந்த்ர்யமும், அந்யஸேஷத்வமும், ஸ்வரக்ஷணே ஸ்வாந்யமும், அபந்துஸங்கமும், விஷயப்ராவண்யமும் மேலிடாதபடி பண்ணி ஸ்வரூபாநுரூபமாக நடக்கும்படி நோக்குகை.
அவதாரிகை: இனிமேல் இம்மந்த்ரத்தினுடைய வைபவத்தை விஸ்தரேண ப்ரதிபாதிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் இதனுடய அநுஸந்தான க்ரமகதநமுகத்தாலே, இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் திருமந்த்ரத்தினுடைய என்று தொடங்கி.
மூலம்:3. திருமந்த்ரத்தினுடைய சீர்மைக்குப் போரும்படி ப்ரேமத்தோடேபேணி அநுஸந்திக்கவேணும்.
வ்யாக்யானம்: திருமந்த்ரத்துக்குச் சீர்மையாவது – ருசோயஜும்ஷி ஸாமாநிததைவாதர்வணாநி ச, ஸர்வம்ஷ்டாக்ஷராந்த:ஸ்தம், என்கிறபடியே ஸகலவேத ஸங்க்ரஹமாய், மற்றெல்லாம் பேசிலும் – என்கிற படியே ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமாய்,
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோகுஹ்யாநாம் குஹ்யமுத்தமம், பவித்ரம் ச பவித்ராணம் மூலமந்த்ரஸ்ஸநாதநஹ, என்கிறபடியே மந்த்ரங்களில் வைத்துக்கொண்டு பரமமான மந்த்ரமாய், குஹ்யங்களில் வைத்துக்கொண்டு உத்தமமான குஹ்யமாய், பவித்ரங்களுக்கும் பவித்ரமாயிருக்கிற கௌரவம். சீர்மைக்குப் போரும்படி என்றது – தகும்படியென்கை. ப்ரேமத்தோடே பேணி அனுஸந்திக்கை யாவது – இத்தை அநுஸந்திக்குமளவில் ஸுஷ்கஹ்ருதயனாயிருந்து அநுஸந்திக்கையன்றிக்கே, இதின் வைலக்ஷண்ய ஞாநமடியாக இதின் பக்கல் தனக்குண்டான ப்ரேமத்தோடே, குஹ்யாநாம் குஹ்யமானவிது அநதிகாரிகள் செவிப்படாதபடி – மந்த்ரம் யத்நேந கோபயேத், என்கிறபடியே பேணிக்கொண்டநுஸந்திக்கை. இப்படி அநுஸந்திக்க வேணுமென்கையாலே ப்ரகாராந்தரேண அநுஸந்திக்கலாகாதென்கிற நியமம் தோற்றுகிறது.
அவதாரிகை: இப்படித் தன் பக்கல் ப்ரேமமுண்டாகவே இம்மந்த்ரம் இவனுக்குக் கார்யகரமாமோவென்ன அருளிச்செய்கிறார் மந்த்ரத்திலும் என்று தொடங்கி.
மூலம்: 4. மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ரப்ரதனான ஆசார்யன்பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் கார்யகரமாவது.
வ்யாக்யானம்: அதாவது – ஞாதவ்யார்த்த ஞாபகமான இம்மந்த்ரந்தன்னிலும், ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்களாகிற ஆகாரத்ரயயுக்ததயா இம்மந்த்ரத்துக்கு வாச்யவஸ்துவாயிருக்கிற, ஈஸ்வரவிஷயத்திலும் தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம், என்கிறபடியே இம்மந்த்ரம் ஆசார்யாதீநமாய் இருப்பதொன்றாகையாலே, இத்தை யதாப்ரதிபத்தியுக்தனாய்க் கொண்டு, தனக்கு உபகரித்த ஆசார்யவிஷயத்திலும் தத்தத் வைலக்ஷண்யாநுரூபமாக ப்ரேமம் அதிஸயேந உண்டானால், இம்மந்த்ரம் இவனுக்குக் கார்யகரமாவது என்கை.மந்த்ரே தத்தேவதாயாஞ் ச ததா மந்த்ரப்ரதே குரௌ, த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம் என்னக்கடவதிறே.
அவ: இனி, இம்மந்திரத்தினுடைய அவதரணப்ரகாரகதந முகத்தாலே இதினுடைய அப்ரதிம வைபவத்தை அருளிச் செய்கிறார் – ஸம்ஸாரிகள் – என்று தொடங்கி,
மூ: 5. ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ்சேரும்படி, தானே ஶிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டருளினான்.
வ்யா: ஸம்ஸாரிகளாகிறார் – அநாத்யசித்ஸம்பந்தத்தாலே ப்ரவாஹரூபேண வருகிற அவித்யாகர்மவாஸநாருசிவிவஶராய், ஜந்மமரணாதி, க்லேஶபாகிகளாய்த் திரிகிற பத்தசேதனர். (தங்களையும் ஈச்வரனையும் மறந்து) என்றது –
दासभूता: स्वत: सर्वे ह्यात्मान: परमात्मन:|
नान्यथा लक्षणम् तेषां बन्धे मोक्षे तथैव च ||
(தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:|
நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச||)- என்கிறபடியே ஸ்வதஸ்ஸித்தமான பகவத் ஶேஷத்வத்தை லக்ஷணமாகவுடையவராயிருக்கிற தங்களையும், पतिं विश्वस्य
(பதிம்விஶ்வஸ்ய), स्वामित्वं ब्रह्मणि स्थितं (ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்) இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே தங்களுக்கு நிருபாதிக ஶேஷியாயிருக்கிற ஈஶ்வரனையும் அறியாதே என்கை. ஆனால், அறியாமலென்னாதே மறந்தென்பான் என்? முன் ஒருகால் நினைத்துப் பின்பு அந்நினைவுக்கு ப்ரச்யுதி வந்தவிடத்திலிறே மறந்து என்னாலாவது என்னில்: “மறந்தேனுன்னை முன்னம்” என்கிறபடியே ஸ்வதஸ்ஸித்தமான ஸம்பந்தத்தையுணர்ந்தால் முன்பு, நினத்திருந்த அர்த்தத்தை மறந்தாற்போலே இருக்கும் ஸம்பந்தத்தில் உறைப்பை நினைத்து அருளிச் செய்தாராமித்தனை. (ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து) என்றது-கீழ்ச்சொன்ன அஜ்ஞாநத்தாலே வகுத்த ஶேஷியான ஈஶ்வர விஷயத்தில் கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தையும் ப்ராபிக்கப்பெறாதே – என்கை. புருஷார்த்தத்தினுடைய கெளரவத்தையும், அதுக்கிட்டுப் பிறந்துவைத்துக் கிட்டப் பெறாமல் கிடந்தபடியையும் நினைத்து, `இழந்து’ என்கிறார். (இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே) என்றது- ஸ்வஸ்வரூபபரஸ்வருப ஜ்ஞானமும் புருஷார்த்த ஞானமும் இல்லாமையாலே. ஸ்வஶேஷத்வாநு ரூபமான ஶேஷிவிஷய கைங்கர்யரூப புருஷார்த்தத்தை இழந்தோ மென்கிற அலாப க்லேஶதானுமின்றிக்கே என்கை. (ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட) என்றது –संसार सागरं घोरमनन्तक्लेशभाजनम् (ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜநம்) என்கிறபடியே அநந்தக்லேஶபாஜனமாய், ஒருவராலும், ஸ்வயத்நத்தால் கரைகாண அரிதாம்படியிருக்கிற ஸம்ஸாரமாகிற மஹாஸமுத்ரத்துக்குள்ளே விழுந்து தாபத்ரயாபிபூதராய்க் கொண்டு க்லேஶப்பட- என்கை. இத்தால், தங்களையும் ஈஶ்வரனையும் அறியாமையாலும், புருஷார்த்தத்தை அறியாமையாலும், ஸம்ஸார ஸமுத்ரத்துக்குள்ளே கிடந்து நோவுபடா நிற்க. விரோதியான ஸம்ஸாரந்தன்னையும் தந்நிஸ்தரணோபாயத்தையும் அறியாமையாலும், ஜ்ஞாதவ்யமான அர்த்தபஞ்சகத்திலும் ஒன்றையும் அறியாமற் கிடந்தார்களென்கை. प्राप्यस्य ब्रह्मणो रूपं(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்) இத்யாதிப்படியே ஸகல ஶாஸ்த்ரங்களும் ப்ரதிபாதிப்பது அர்த்த பஞ்சகத்தையுமிறே. இவ்வர்த்தங்களை இவர்களுக்கு ஸுக்ரஹமாக அறிவிக்கைக்காக, ஸகல ஶாஸ்த்ரஸங்க்ரஹமான திருமந்த்ரத்தை ஸர்வேஶ்வரன் வெளியிட்ட ப்ரகாரத்தைச் சொல்லுகிறது மேல், (ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே) என்றது – ईशेशितव्य संबन्धादनिदं प्रथमादपि (ஈஶேஶிதவ்யஸம்பந்தாத் அநிதம் ப்ரதமாதபி) என்கிறபடியே அநாதியாக ஸர்வரோடுமுண்டான ஈஶேஶிதவ்ய ஸம்பந்தத்தையுடையனான எம்பெருமான்.
एवं सम्सृतिचक्रस्थे भ्राम्यमाणो स्वकर्मभि:
जीवे दु:खाकुले विष्णो: कृपा काप्युपजायते
(ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே ப்ராம்யமாணோ ஸ்வகர்மபி:| ஜீவே து:காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே ||) என்கிறபடியே இவர்கள் படுகிற துக்கதர்ஶநமாத்ரத்தாலுண்டான தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே- என்கை. (இவர்கள் தன்னையறிந்து கரைமரம்சேரும்படி) என்றது – இப்படி ஸம்ஸார ஸாகரத்திலே கிடந்து நோவுபடுகிற இவர்கள் त्वामेव शरणम् प्राप्य निस्तरन्ति मनीषिण: (த்வாமேவ ஶரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:) என்றும்,
संसारार्णव मग्नानां विषयाक्रान्तचेतसां |
विष्णुपोतं विना नान्यत् किञ्चिदस्ति परायणम् ||
(ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்||) என்றும் சொல்லுகிறபடியே, ஸம்ஸார நிஸ்தரணோபாயபூதனான தன்னையறிந்து ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படும்படி- என்கை. (தானே ஶிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று) என்றது – “நரநாரணனாயுலகத்தறநூல் சிங்காமை விரித்தவன்” என்கிறபடியே நரநாராயணருபேண அவதரித்து நரனான தான் ஶிஷ்யனுமாய். நாராயணான தான் ஆசார்யனுமாய் நின்று – என்கை. (திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்) என்றது – ஸகல ஶாஸ்த்ரஸங்க்ரஹமாய், அந்த ஶாஸ்த்ர தாத்பர்யமான அர்த்தபஞ்சகத்தையும் ஸுஸ்பஷ்டமாக ப்ரதிபாதியாநிற்கும் திருமந்த்ரத்தை ப்ரகாஶிப்பித்தருளினான்- என்கை. அருளிச்செய்தானென்னாதே வெளியிட்டருளினானென்றது, இப்போதுதான் ஒன்றை நிர்மித்துச் சொன்னானல்லன். அநாதியானத்தை ப்ரகாஶிப்பித்தானித்தனை என்னுமிடமும், அதி குஹ்யமாயுள்ளத்தை இவர்கள் துர்க்கதி கண்டு ஸஹிக்க மாட்டாமையாலே ப்ரகாஶிப்பித்தானென்னுமிடமும் தோற்றுகைக்காக.
அவ: ஆனால், ஆசார்யனாய் நின்று வெளியிட்டருளிவிட அமையாதோ? ஶிஷ்யனாய் நின்றது எதுக்காக? என்ன, அருளிச் செய்கிறார்- `ஶிஷ்யனாய்’ என்று தொடங்கி.
மூ: 6. ஶிஷ்யனாய் நின்றது, ஶிஷ்யனிருக்குமிருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக.
வ்யா: அதாவது ஆசார்யனாய் நின்று வெளியிட்டருளின அளவன்றிக்கே தானே ஶிஷ்யனுமாய்க்கொண்டு நின்றது,
आस्तिको धर्मशीलश्च शीलवान् वैष्णव: शुचि:|
गम्भीरश्चतुरो धीर: शिष्य इत्यभिधीयते ||
(ஆஸ்திகோ தர்ம ஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ்ஶுசி:| கம்பீரஶ்சதுரோ தீரஶ் ஶிஷ்ய இத்யபிதீயதே||),
शरीरं वसु विज्ञानं वास: कर्म गुणानसून् |
गुर्वर्थं धारयेद्यस्तु स शिष्यो नेतर: स्मृत:||
(ஶரீரம் வஸுவிஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸுந்| குர்வர்த்தம் தாரயேத்யஸ்து ஸ ஶிஷ்யோ நேதர: ஸ்ம்ருத:||),
सद्बुद्धि: साधुसेवि समुचितचरितस्तत्व बोधाभिलाषी
शुश्रूषुस्त्यक्तमान: प्रणिपतनपर: प्रश्नकाल प्रतीक्ष:|
शान्तो दान्तोsनसूयु: शरणमुपगत:
शास्त्रविश्वास शाली शिष्य: प्राप्त:
परीक्षाम् कृतविदभिमतस्तत्वत: शिक्षणीय:
(ஸத்புத்திஸ் ஸாதுஸேவீ ஸமுசிதசரிதஸ்தத்வபோதாபிலாஷீ
ஶுஶ்ருஷூஸ்த்யக்தமாந: ப்ரணிபதநபர: ப்ரஶ்நகாலப்ரதீக்ஷ:|
ஶாந்தோ தாந்தோநஸுயுச்ஶரணமுபகதஶ்ஶாஸ்த்ர விஶ்வாஸஶாலீ ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் க்ருதவிதபிமதஸ் தத்வதஶ்ஶிக்ஷணீய||)
இத்யாதிகளிற் சொல்லுகிறபடிகளும், ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பலஸாதந ஶுச்ருஷையும், ஆர்த்தியும், ஆதரமும், அநஸுயையும் உடையனாயிருக்கையுமாகிற ஶிஷ்யலக்ஷணம் லோகத்திலுள்ளார் அறியாமையாலே, அத்தை ஸ்வாநுஷ்டாநத்தாலே அறிவிக்கைக்காக – என்கை. உபதேஶத்தாலே அறிவிக்குமளவில், ஸ்வோத்கர்ஷம் தேடிக்கொள்ள வந்தானித்தனையென்று நினைக்கவுங்கூடும்; அநுஷ்டாநத்தாலே அறிவிக்குமளவில், நமக்கும் இது வேணுமென்று விஶ்வஸித்துப் பரிக்ரஹிக்கைக்கு உடலாயிருக்குமிறே.
அவ: இப்படி ஶிஷ்யனாய் நின்று இம்மந்த்ரசிக்ஷை பண்ணி இவ்வழியாலே ஜ்ஞாநம் பிறக்கவேணுமோ? ‘ஞானக்கலைகள்’ என்கிறபடியே ஸகல ஶாஸ்த்ரங்களும் ஜ்ஞாநஸாதநமாயன்றோ இருப்பது: அவற்றை அப்யஸித்து அவ்வழியாலே ஜ்ஞாநம் பிறந்தாலோ? என்ன, ஶாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்துக்கும், இம்மந்த்ர ஜந்யஜ்ஞாநத்துக்கும் உண்டான விஶேஷத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் `ஸகல ஶாஸ்த்ரங்களாலும்’ என்று தொடங்கி.
மூ: 7. ஸகல ஶாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஜ்ஞாநம் ஸ்வயமார்ஜிதம் போலே, திருமந்திரத்தால் பிறக்கும் ஜ்ஞாநம் பைத்ருகதநம் போலே.
வ்யா: அதாவது – தத்வஜ்ஞாந ஜநகங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி, ஸகலஶாஸ்த்ரங்களாலும் சேதநருக்குப் பிறக்கும் ஜ்ஞாநம் ஸ்வயம் ஆர்ஜித தநம் போலே அத்யாயாஸலப்யமாயிருக்கும். ஆசார்யோபதேஶமடியாகத் திருமந்த்ரத்தால் பிறக்கும் ஜ்ஞானம் பைத்ருகதநம்போலே அநாயாஸலப்யமாயிருக்கும்- என்கை.
शास्त्रज्ञानम् बहुक्लेशम् बुद्धेश्चलन कारणम् |
उपदेशात् हरिं बुद्ध्वा विरमेत्सर्वकर्मसु ||
(ஶாஸ்த்ர ஜ்ஞாநம் பஹூக்லேஶம் புத்தேஶ்சலநகாரணம்|
உபதேஶாத் ஹரிம் புத்த்வா விரமேத் ஸர்வ கர்மஸு||) என்னக்கடவதிறே. இத்தால், ‘ஶாஸ்த்ரங்களிற்காட்டில் தத்ஸங்க்ரஹமான திருமந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்றாயிற்று.
அவ: ஆனால் ஶாஸ்த்ரங்களொழிந்தாகிறது: பகவந் மந்த்ரந்தான் இதொன்றுமன்றே, பின்னையும் பலவில்லையோ? என்கிற ஶங்கையிலே. மந்த்ராந்தரங்களிற்காட்டில் இதுக்கு உண்டான வைபவத்தை அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் பற்றி, `பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள்’ என்கிறார்.
மூ: 8. பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள்.
வ்யா: आस्तां ते गुणराशिवद्गुण परिवाहात्मनां जन्मनां सङ्ख्या (ஆஸ்தாம் தே குணராஶிவத்குணபரீவாஹாத்மநாம் ஜந்மநாம் ஸங்க்யா), बहवो नृप कल्याणगुणा: पुत्रस्य सन्तिते (பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே), तवानन्त गुणस्यापि षडेव प्रथमे गुणा:(தவாநந்தகுணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா:), बहूनि मे व्यतीतानि जन्मानि तव चोर्जुन (பஹூநிமே வ்யதீதாநி ஜந்மாநி தவசார்ஜுந) – என்றும், “எண்ணில் தொல்புகழ்” – என்றும், “எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய்” – என்றும் இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே பகவத் குணங்களும், குணபரீவாஹரூபங்களான அவதாரங்களும் அஸங்க்யாதமாயிருக்குமாபோலே. அவற்றை அனுபந்தித்திருக்கும் மந்த்ர விசேஷங்களும், अनन्ता वै भगवन्मन्त्रा: (அநந்தா வை பகவந்மந்த்ரா:) என்கிறபடியே அநேகங்களாயிருக்கும்- என்கை.
அவ: `அவையெல்லாந்தான் ஏகவர்க்கமோ?’ என்ன. `அவைதான் வ்யாபகங்களென்றும் அவ்யாபகங்களென்றும் இரண்டு வர்க்கம்’ என்கிறார்.
மூ: 9. அவைதான், வ்யாபகங்களென்றும் அவ்யாபகங்களென்றும் இரண்டு வர்க்கம்.
வ்யா: அதாவது- ஸர்வவ்யாபகமான பகவத்ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலே வ்யாபகங்களென்றும், பகவதவதாரகுண சேஷ்டிதங்களில் ஓரொன்றை ப்ரதிபாதிக்கையாலே அவ்யாபகங்களென்றும் உபயவர்க்கமாயிருக்கும் – என்கை.
அவ: `வர்க்கத்வயமும் தன்னிலொக்குமோ?’ என்ன, `அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஶ்ரேஷ்டங்கள்’ என்கிறார்.
மூ:10. அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஶ்ரேஷ்டங்கள்.
வ்யா: அதாவது, அவ்யாபகங்களாய் இருந்துள்ள ஸகல மந்த்ரங்களிலும் – नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु: प्रचोदयात् (நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி, தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்) என்று விஷ்ணு காயத்ரியில் ஓதப்படுகிற வ்யாபக மந்திரங்கள் முன்றும் ஶ்ரேஷ்டங்களாயிருக்கும் – என்கை.
இந்த விஷ்ணு காயத்ரியிலே நாராயண வாஸுதேவ விஷ்ணு ஶப்தங்கள் அந்த மந்த்ரத்ரயத்துக்கும் ப்ரதாநபூத நாமத்ரயங்களாகையாலே, ஸாதாரண ப்ரணவ நமஸ்ஸுக்களோடேகூடின மந்த்ரத்ரயத்துக்கும் உபலக்ஷணமாகக் கடவது.
அவ: `இந்த வ்யாபகமந்த்ரத்ரயமும் தன்னிலொக்குமோ’ என்ன, `இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு பெரிய திருமந்த்ரம் ப்ரதாநம்’ என்கிறார்.
மூ:11. இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு பெரிய திருமந்த்ரம் ப்ரதாநம்.
வ்யா: அதாவது அவ்யாபகங்களிற்காட்டில் ஶ்ரேஷ்டமாயிருந்துள்ள இந்த வ்யாபக மந்த்ரங்கள் மூன்றிலும் வைத்துக்கொண்டு. नारायणाय विद्महे (நாராயணாய வித்மஹே) என்று ப்ரதமோபாத்தமாகையாலும், அர்த்த பூர்த்யாதிகளாலும், नास्ति चाष्टाक्षरात्पर: (நாஸ்தி சாஷ்டாக்ஷராத்பர:), न मन्त्रोष्टाक्षरात्पर: (ந மந்த்ரோஷ்டாக்ஷராத் பர:) என்னும்படியான பெருமையையுடைய திருமந்த்ரம் ப்ரதாநமாயிருக்கும் – என்கை.
அவ: மற்றை வ்யாபகத்வயத்துக்கும் தாழ்வு எது? என்ன. `மற்றவையிரண்டுக்கும் அஶிஷ்டபரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு’ என்கிறார்.
மூ: 12. மற்றையவை இரண்டுக்கும் அஶிஷ்டபரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு.
வ்யா: அதாவது- வாஸுதேவவிஷ்ணுஶப்தங்களான மற்றை வ்யாபகமந்த்ரங்களிரண்டுக்கும். நாராயண ஶப்தம் போலே ஸ்வரூபரூபகுணாதிகளையெல்லாம் ப்ரதிபாதியாதே, ஸ்வருபமாத்ரத்தை ப்ரதிபாதிக்கையாலே, நிர்விஶேஷசிந்மாத்ரவஸ்துவாதிகளான குத்ருஷ்டிகள் மிகவும் ஆதரித்துப் போருகையாகிற அஶிஷ்டபரிக்ரஹமும், வ்யாப்யாத்யாஹாராதிஸாபேக்ஷதையாகிற அபூர்த்தியும் உண்டு- என்கை. “ஷடக்ஷரி-வ்யாப்ய பதார்த்தங்களையும், வ்யாபந ப்ரகாரத்தையும், வ்யாப்திபலத்தையும் வ்யாபகனுடைய குணங்களையும் சொல்லாதே. வ்யாப்திமாத்ர ப்ரகாஶகமாகையாலே அபூர்ணம். வ்யாபந ப்ரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும். வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசகஶப்தம் இல்லாமையாலும் सर्वं वसति (ஸர்வம் வஸதி) என்று அர்த்தபலத்தாலே ஸர்வஸப்தம் புகுந்தாலும், அதில் குணம் அந்வயியாமையாலும். இனி, குணஸித்திக்காக பகவச்சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும், வ்யாப்திபலத்தைச் சொல்லாமையாலும், திருத்வாதஶாக்ஷரியும் அபூர்ணம். இம்மந்த்ரம் அவை போலன்றியிலே, வ்யாப்யபதார்த்தங்களோடு, வ்யாபநப்ரகாரத்தோடு, வ்யாப்தி பலத்தோடு, வ்யாபகனுடைய குணங்களோடு வாசியற ஶாப்தமாகக் காட்டுகையாலே, அவற்றிற்காட்டில் இதுக்கு அர்த்தபௌஷ்கல்யநிபந்தநமான ஆதிக்யம் உண்டு” [பரந்த ரஹஸ்யம்] என்று மற்றை வ்யாபகமந்த்ரங்களிரண்டினுடைய அபூர்த்தியையும் திருமந்த்ரத்தினுடைய அர்த்தபூர்த்தியையும் ஸுஸ்பஷ்டமாக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தாரிறே.
அவ: ‘இது தனக்கு ஶிஷ்டபரிக்ரஹம் உண்டோ?’ என்ன, அருளிச்செய்கிறார் `இத்தை’ என்று தொடங்கி.
மூ:13. இத்தை வேதங்களும், ருஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும் விரும்பினார்கள்.
வ்யா: அதாவது, விஷ்ணுகாயத்ரியிலே வ்யாபகமந்த்ரத்ரயத்தையுஞ் சொல்லுகிறவளவில், ப்ரதமத்திலே நாராயணஶப்தத்தை ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கையாலும், विश्वं नारायणं (விஶ்வம் நாராயணம்) என்று தொடங்கி.
नारायण परं ब्रह्म तत्वं नारायण: पर:
नारायणपरो ज्योतिरात्मा नारायण: पर:
यच्च किम्चिज्जगत्यस्मिन् दृश्यते श्रूयतेपि वा
अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायण: स्थित:
(நாராயணபரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:| நாராயணபரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர:| யச்ச கிஞ்சிஜ்ஜகத்யஸ்மிந்த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா| அந்தர்பஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித:||) என்று ஸகல வேதாந்தஸாரபூதமான நாராயணாநுவாகத்திலும்.
एको हवै नारायण आसीन्नब्रह्म नेशानो नेमे ध्यावापृथिवी
(ஏகோ ஹவை நாராயண ஆஸீந்நப்ரஹ்மா நேஶாநோ நேமே த்யாவாப்ருதிவீ) என்று மஹோபநிஷத்திலும்,
चक्षुश्च द्रष्टव्यञ्च नारायण: श्रोत्रञ्च श्रोतव्यञ्च नारायण:
(சக்ஷுஶ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண:| ஶ்ரோத்ரஞ்ச ஶ்ரோதவ்யஞ்ச நாராயண:|) என்று தொடங்கி, दिशश्च प्रदिशश्च नारायण: (திஶஶ்ச ப்ரதிஶஶ்ச நாராயண:) என்று முடிவாக நடுவு அடைய ஸுபாலோபநிஷத்திலும், यस्यात्मा शरीरं यस्य पृथिवी शरीरं (யஸ்யாத்மா ஶரீரம் யஸ்ய ப்ருதிவீ ஶரீரம்) என்று தொடங்கி, यस्य मृत्यु: शरीरं (யஸ்ய ம்ருத்யு: ஶரீரம்) என்கிறது ஈறாக நடுவுள்ளபர்யாயங்கள்தோறும்
एष सर्वभूतान्तरात्मा अपहतपाप्मा दिव्यो देव एको नारायण:
(ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:) என்று அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும் வாஸுதேவ விஷ்ணுஶப்தங்களை அநாதரித்து, நாராயண ஶப்தத்தையிட்டு, பகவத்ஸ்வரூபாதிகளை நிர்த்தேஶிக்கையாலும், அபௌருஷேயமாய், நித்யநிர்த்தோஷமாய். ஸ்வத: ப்ரமாணங்களான வேதங்களும் விரும்பிற்றின.
यथा सर्वेषु देवेषु नास्ति नारायणात्पर:
तथा सर्वेषु मन्त्रेषु नास्ति चाष्टाक्षरात्पर:
(யதா ஸர்வேஷூ தேவேஷூ நாஸ்தி நாராயணாத்பர:| ததா ஸர்வேஷூ மந்த்ரேஷூ நாஸ்தி சாஷ்டாக்ஷராத்பர:||),
भूत्वोर्ध्वबाहुरद्यात्र सत्यपूर्वं ब्रवीमि व:|
हे पुत्रशिष्या: शृणुत न मन्त्रोष्टाक्षरात्पर:||
(பூத்வோர்த்வபாஹூரத்யாத்ர ஸத்யபூர்வம் ப்ரவீமிவ:| ஹே புத்ரஶிஷ்யா: ஶ்ருணுத ந மந்த்ரோஷ்டாக்ஷராத்பர:||),
सर्व वेदान्त सारार्थ: संसारार्णव तारक:
गतिरष्टाक्षरो नृणाम् अपुनर्भव काङ्क्षिणाम्
(ஸர்வவேதாந்த ஸாரார்த்தஸ்ஸம்ஸாரார்ணவதாரக:| கதிரஷ்டாக்ஷரோ ந்ருணாம் அபுநர்ப்பவ காங்க்ஷிணாம்||),
आर्ता विषण्णा: शितिलाश्च भीता: घोरेषु च व्याधिषु वर्तमाना:
सङ्कीर्त्य नारायण शब्दमात्रं विमुक्तदु:खा: सुखिनो भवन्ति
(ஆர்த்தா விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா: கோரேஷூ ச வ்யாதிஷூ வர்த்தமாநா:| ஸங்கீர்த்ய நாராயண ஶப்தமாத்ரம் விமுக்த து:காஸ்ஸுகிநோ பவந்தி||),
नारायणेति शब्दोsस्ति वागस्ति वशवर्तिनी
तथापि नरके घोरे पतन्तीति किमद्भुतम्
(நாராயணேதி ஶப்தோஸ்தி வாகஸ்தி வஶவர்த்திநீ| ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்||),
किं तत्र बहुभिर्मन्त्रै: किं तत्र बहुभिर्व्रतै:|
नमो नारायणायेति मन्त्र: सर्वार्थसाधक:||
(கிம் தத்ர பஹூபிர் மந்த்ரை: கிம் தத்ர பஹூபிர்வ்ரதை:| நமோ நாராயணாயேதி மந்த்ர: ஸர்வார்த்த
ஸாதக:||) இத்யாதிகளாலே வேதார்த்தோபப்ரும்ஹணங்களாயிருக்கிற ஸ்வப்ரபந்தங்களிலே பல விடங்களிலும் இத்தை ஶ்லாகித்துக்கொண்டு சொல்லுகையாலே. வேதார்த்த விஶதீகரண ப்ரவ்ருத்தரான வ்யாஸாதி பரமருஷிகளும் விரும்பினார்கள். “வண்புகழ் நாரணன்”, “செல்வ நாரணன்” என்று தொடங்கி “வாழ்புகழ் நாரணன்” என்று முடிவாக. ஆதிமத்யாவஸாநமாக நம்மாழ்வார் அருளிச்செய்கையாலும். “நாடுநகரமும் நன்கறிய நமோ நாராயணாய” என்று தொடங்கி “ஓவாதே நமோ நாரணாவென்பன்” என்று பெரியாழ்வாரும், “நாத்தழும்பெழ நாரணா” என்று தொடங்கி “நலந்திகழ் நாரணன்” என்று பெருமாளும், “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்கி “எட்டெழுத்துமோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்று திருமழிசைப்பிரானும், “நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” என்று உபக்ரமதஶையிலே ஒருகால் சொன்னாற்போலே ஒன்பதின்கால் சொல்லி “நாராயணாவோ! மணிவண்ணா! நாகணையாய்! வாராய்” என்று திருமங்கையாழ்வாரும் உபக்ரமத்தோடு உபஸம்ஹாரத்தோடு வாசியற அருளிச்செய்கையாலும், “நன்மாலைகொண்டு நமோ நாரணா வென்னும் சொன்மாலை கற்றேன்” என்றும், “நாரணாவென்றோவாதுரைக்குமுரையுண்டே” என்றும், “ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு”, “நாரணன் தன் நாமங்கள்”, “பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்” என்றும், “நாமம் பல சொல்லி நாராயணா” என்றும் முதலாழ்வார்களும் அருளிச்செய்கையாலும், “மயர்வறமதிநலமருளினன்” என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாக்ஷத்தாலே ஸமதிகத ஸமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்களெல்லாரும் விரும்பினார்கள். இதர மந்த்ரங்களை அநாதரித்து இத்தையே தந்தாமுக்குத் தஞ்சமாக அநுஸந்தித்து, உபதேஶவேளையிலும் தந்தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவநஹேதுவாக உபதேஶித்துப் போருகையாலே, அவ்வாழ்வார்களைப் பின்சென்ற ஆசார்யர்களெல்லாரும் விரும்பினார்களென்கை.
இத்தால் மந்த்ராந்தரங்களிற் காட்டில் இம்மந்திரத்துக்குண்டான வைபவஞ் சொல்லிற்றாய்த்து.
அவ: இனி வாச்யந்தன்னிலும் இதுக்குண்டான வைபவத்தை அருளிச் செய்கிறார் “வாச்ய ப்ரபாவம் போலன்று வாசக ப்ரபாவம்” என்று.
மூ:14. வாச்ய ப்ரபாவம் போலன்று வாசக ப்ரபாவம்.
வ்யா: அதாவது- இதுக்கு வாச்யனாயிருந்துள்ள ஈஶ்வரனுடைய பெருமை போலன்று தத்வாசகமான இதன் பெருமையென்றபடி.
அவ: அதுதான் ஏது என்னவருளிச்செய்கிறார் `அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்றுதவும்’ என்று.
மூ:15. அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்.
வ்யா: அதாவது இதுக்கு வாச்யனானவன் ஸந்நிஹிதனன்றிக்கே தூரஸ்தனாயிருந்த காலத்திலும் வாசகமான இது ஆஸந்நமாய் நின்று தன்னை வசித்தவர்கள் அபேக்ஷிதங்களை ஸாதித்துக்கொடுக்குமென்கை.
அவ: `இப்படி வாச்யன் தூரஸ்தனாயிருக்க, வாசகம் உதவின இடம் உண்டோ?’ என்று அருளிச்செய்கிறார் ‘த்ரெளபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமமிறே’ என்று.
மூ:16. த்ரெளபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமமிறே.
வ்யா: அதாவது- மஹாஸதஸ்ஸிலே துஶ்ஶாஸனன் வஸ்த்ராபஹாரம் பண்ணுகிறபோது. महत्यापदि सम्प्राप्ते स्मर्तव्यो भगवान् हरि: (மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவாந் ஹரி:) என்று முன்பே ஸ்ரீவஸிஷ்டமஹர்ஷி சொல்லி வைத்ததை நினைத்து,
शङ्ख चक्र गदापाणे द्वारका निलयाच्युत |
गॊविन्द पुण्डरीकाक्ष रक्ष मां शरणागताम् ||
(ஶங்கசக்ரகதா பாணே த்வாரகாநிலயாச்யுத| கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் ஶரணாகதாம்||) என்று ஶரணம் புகுந்த த்ரெளபதிக்கு அவ்வாபத்திலே गॊविन्देति यदाक्रन्दत्कृष्णा मां दूरवासिनम् (கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணாமாம் தூரவாஸிநம்) என்கிறபடியே வாச்யனான க்ருஷ்ணன் தூரஸ்தனாயிருக்கச் செய்தேயும், வஸ்த்ரத்தை வர்த்திப்பித்துக்கொடுத்தது, அவ்வவதாரத்துக்கு வாசகமான கோவிந்தனென்கிற திருநாமமிறேயென்கை. நாராயண ஶப்தார்த்தத்தில் ஏகதேஶத்துக்கு வாசகமான ஒரு திருநாமம் செய்தபடி கண்டால், இதன் ப்ரபாவம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறேயென்று கருத்து.
அவ: இன்னம் ஒரு ப்ரகாரத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் – `சொல்லும் க்ரமம் ஒழியச் சொன்னாலும்’ என்று தொடங்கி.
மூ:17. சொல்லும் க்ரமம் ஒழியச் சொன்னாலும் தன் ஸ்வருபம் கெட நில்லாது.
வ்யா: அதாவது- ஏதேனும் ஒரு மந்த்ரமும் தன்னைத் தஞ்சமாக விஶ்வஸித்துச் சொன்னவர்களுக்கொழியத் தன் கார்யம் செய்யாதேயாகிலும், இது அங்ஙனன்றிக்கே தன்னைத் தஞ்சமாக விஶ்வஸித்துச் சொல்லுகையாகிற க்ரமம் ஒழிய, साङ्केत्यं पारीहास्यञ्च स्तोभं हेलनमेव वा (ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யஞ்ச ஸ்தோபம் ஹேலநமேவ வா) என்கிறபடியே சொல்லிலும், சொன்னவர்களுக்கு ரக்ஷகமாகையாகிற தன் ஸ்வரூபத்தில் நழுவ நில்லாதென்கை.
அவ: இனி இதன் ஸர்வாபேக்ஷிதப்ரதத்வமாகிற வைபவத்தை அருளிச்செய்கிறார் இதுதான் என்று தொடங்கி.
மூ: 18. இதுதான் “குலந்தரும்” என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்.
வ்யா: அதாவது இம்மந்த்ரந்தான் “குலந்தரும்” என்று தொடங்கி ஆழ்வார் அருளிச்செய்தபடியே, அதிகாராநுகுணமான அபேக்ஷிதங்களையெல்லாம் கொடுக்கு மென்கை.
அவ: அத்தை விஶதீகரிக்கிறார் `ஐஶ்வர்ய’ இத்யாதியாலே.
மூ:19. ஜஶ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்.
வ்யா: அதாவது-
ऐहलौकिकमैश्वर्यम् स्वर्गाद्यं पारलौकिकम् |
कैवल्यं भगवन्तश्च मन्त्रोयं साधयिष्यति ||
(ஐஹலௌகிகமைஶ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பாரலௌகிகம்| கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோயம் ஸாதயிஷ்யதி||) என்கிறபடியே ஐஹிகமாயும் பாரலௌகிகமாயுமிருக்கும் ஐஶ்வர்யத்தையும், ஆத்மப்ராப்தி ரூபமான கைவல்யத்தையும், பரம புருஷார்த்தமான பகவல்லாபத்தையும் ஆசைப்பட்ட அதிகாரிகளுக்கு ஜபஹோமாதிகளாலே ஸ்வயம் ஸாதனமாய் நின்று, அவ்வோபுருஷார்த்தங்களைக் கொடுக்கு மென்கை.
அவ: இனி, கர்மாயத்யுபாய ஸஹகாரித்வ ரூபமான இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் `கர்மஜ்ஞான’ இத்யாதியாலே.
மூ: 20. கர்மஜ்ஞாநபக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக்கொடுக்கும்.
வ்யா: அதாவது- கர்மயோகத்தில் இழிந்தவர்களுக்கு ஜபஹோமாதிகளாலே தன்னை ஸஹாயமாகக் கொள்ளுமளவில், கர்மயோகாரம்ப விரோதியான பாபத்தைப் போக்கி, அந்தக் கர்மத்தினுடைய அவிச்சேதாபாதகமாய்க் கொண்டு அத்தைக் தலைக்கட்டிக் கொடுக்கும். ப்ரதமத்திலே, ஞானயோகத்திலே இழிந்தவர்களுக்குத் தன்னை ஸஹாயமாகக் கொள்ளுமளவில் கர்மஸாத்யமான ஜ்ஞாநாரம்பவிரோதி பாபநிவ்ருத்தியைப் பண்ணி அந்த ஜ்ஞானத்துக்கு நாடோறும் அதிஶயத்தைப் பண்ணாநின்றுகொண்டு, அத்தைத் தலைக்கட்டிக் கொடுக்கும். பக்தியோகத்திலே இழிந்தவர்களுக்குத் தன்னை ஸஹாயமாகக் கொள்ளுமளவில், பக்தியோகாரம்ப விரோதியான பாபத்தைப் போக்கி, பக்தி வ்ருத்தி ஹேதுவாய்க்கொண்டு அத்தைத் தலைக்கட்டிக்கொடுக்குமென்கை.
அவ: இங்ஙனன்றிக்கே, ப்ரபந்நர்க்கு இது செய்யும் உபகார வைபவத்தை அருளிச்செய்கிறார் `ப்ரபத்தியிலே’ என்று தொடங்கி.
மூ:21. ப்ரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்துக் காலக்ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்.
வ்யா: அதாவது- கீழ்ச்சொன்னவைபோலே துஶ்ஶகமுமாய், ஸ்வரூப விருத்தமுமாய் இருக்கையன்றிக்கே. ஸுஶகமுமாய், ஸ்வரூபாநுரூபமுமான ப்ரபத்யுபாயத்திலே இழிந்தவர்களுக்கு, ததநுரூபமான பகவத்பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப ஜ்ஞானத்தை விஶதமாகப் பிறப்பித்து அர்த்தாநுஸந்தாநாதிகளாலே போதுபோக்குகைக்கும் ஹேதுவாய். “எனக்கென்றுந் தேனும்பாலுமமுதுமாய திருமால் திருநாமம்” என்கிறபடியே ப்ரதிபாத்ய வஸ்துவைப்போலே ஸ்வயம் போக்யமாயிருக்கையாலே, போகத்துக்கும் ஹேதுவாயிருக்குமென்கை.
அவ: இனி, ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகத்வமாகிற இதன் வைபவத்தை அருளிச்செய்கிறார். மற்றெல்லாம் `பேசிலும்’ என்று தொடங்கி.
மூ: 22. “மற்றெல்லாம் பேசிலும்” என்கிறபடியே அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதுக்குள்ளே உண்டு.
வ்யா: அதாவது- “நின் திருவெட்டெழுத்துங் கற்று மற்றெல்லாம் பேசிலும்” என்கிறபடியே, ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உடலாக அறிய வேண்டும். அர்த்தவிஶேஷங்களெல்லாம் இம்மந்திரத்துக்குள்ளே உண்டென்கை.
அவ: `அறியவேண்டும் அர்த்தமெல்லாம் ஆகிறது எது?’ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார். அதாவது அஞ்சர்த்தம் என்று.
மூ:23. அதாவது – அஞ்சர்த்தம்.
வ்யா: ஸ்வஸ்வரூப பரஸ்வரூப புருஷார்த்தஸ்வரூப உபாயஸ்வரூப விரோதி ஸ்வரூபங்களாகிற அர்த்தபஞ்சகமும் என்றபடி.
प्राप्यस्य ब्रह्मणो रूपं प्राप्तुश्च प्रत्यगात्मन:
प्राप्तुपायं फलं प्राप्तेस्तथा प्राप्ति विरोधि च |
वदन्ति सकला वेदा: सेतिहासपुराणका:
मुनयश्च महात्मानो वेद वेदार्थ वेदिन:||
(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந:|
ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா:|
முநயஶ்ச மஹாத்மாநோ வேதவேதார்த்தவேதிந:||)
என்கிறபடியே, ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் ப்ரதிபாதிப்பது இவ்வர்த்த பஞ்சகத்தையுமாகையாலே. தத்ஸங்க்ரஹமான இம்மந்த்ரத்துக்கும் ப்ரதிபாத்யம் இதுவேயிறே. இம்மந்த்ரந்தான் ப்ரணவத்தாலே ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தையும். நமஸ்ஸாலே விரோத்யுபாய ஸ்வரூபங்களையும், நாராயண பதத்தாலே பரஸ்வரூபத்தையும், அதில் சதுர்த்தியாலே பலஸ்வரூபத்தையும் ப்ரதிபாதிக்கக் கடவதாயிறே இருப்பது.
அவ: இம்மந்த்ரார்த்த வைபவத்தை அருளிச்செய்கிறார் மேல் பூர்வாசார்யர்கள் என்று தொடங்கி.
மூ: 24. பூர்வாசார்யர்கள், இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு. தங்களைப் பிறந்தார்களாக நினைத்திரார்கள்; இதில் அர்த்தஜ்ஞானம் பிறந்த பின்பு, “பிறந்தபின் மறந்திலேன்” என்கிறபடியே இத்தையொழிய வேறொன்றால் காலக்ஷேபம் பண்ணியறியார்கள்.
வ்யா: – அதாவது- நாத யாமுன யதிவராதிகளான நம் பூர்வாசார்யர்கள். “அன்று நான் பிறந்திலேன்” என்கிறபடியே இம்மந்திரத்தில் அர்த்தமறிவதற்கு முன்பு தங்களைப் பிறந்தார்களாக நினைத்திரார்கள்: இதில் அர்த்தஜ்ஞானம் தங்களுக்குண்டான பின்பு, `பிறந்தபின் மறந்திலேன்’ என்று ஆழ்வார் திவ்ய ஸுக்தியில் சொல்லுகிறபடியே இம்மந்த்ரார்த்தத்தையொழிய மற்றொன்றால் காலக்ஷேபம் பண்ணியறியார்களென்கை. வேதஶாஸ்த்ரங்கள் ஆழ்வார் அருளிச்செயல்கள் இவற்றால் போதுபோக்கும்போதும் இம்மந்த்ரார்த்தத்தை உட்கொண்டே அநுஸந்திக்கையாலே (இத்தையொழிய வேறொன்றால் காலக்ஷேபம் பண்ணியறியார்கள்) என்னத்தட்டில்லை.
அவ: வாசகஶக்தி ஸர்வத்தையும் ஸாதித்துக்கொடுக்கவற்றாயிருக்க, இதினுடைய வாச்யத்திலே இவர்களூன்றுகைக்கு ஹேதுவேதென்ன அருளிச்செய்கிறார், `வாசகத்திற்காட்டில்’ என்று தொடங்கி.
மூ: 25. வாசகத்திற்காட்டில் வாச்யத்திலே ஊன்றுகைக்கடி, ஈஶ்வரனே உபாயோபேயமென்று நினைத்திருக்கை.
வ்யா: அதாவது- ஸர்வபலத்துக்கும் ஸ்வயம் ஸாதநமாயும், ஸாதநாந்தரங்களுக்கும் ஸஹகாரியாய் நின்று தலைக் கட்டிக்கொடுத்தும் போருகிற இதினுடைய வாசகஶக்தி தானே அமைந்திருக்கச்செய்தே, அதிலுங்காட்டில் கீழ்ச் சொன்னபடியே, இம்மந்திரத்தினுடைய வாச்யத்திலே பூர்வாசார்யர்கள் ஊன்றுகைக்கடி, உபேயாந்தரபரராய், இத்தை ஸாதநமாகக்கொண்டு ஸாதித்தல். உபாயாந்தரபரராய் இத்தை ஸஹகாரியாகக்கொள்ளுதல் செய்யுமவர்களைப் போலன்றிக்கே, உபாயோபேயங்களிரண்டும் ஈஶ்வரனேயென்று ப்ரதிபத்தி பண்ணியிருக்கையென்றபடி.
ஆக, “திருமந்திரத்தினுடைய சீர்மைக்குப் போரும்படி” என்று தொடங்கி, இவ்வளவும் வாய்வந்தபடி அனுஶந்திக்கவொண்ணாதபடியான இதனுடைய கௌரவத்தையும், ஈஶ்வரன் தானே ஶிஷ்யனுமாய், ஆசார்யனுமாய் நின்று வெளியிட்டருளுகையால் வந்த ஏற்றத்தையும், ஸகல ஶாஸ்த்ரங்களிலும், ஸகலமந்த்ரங்களிலும், வாச்யந்தன்னிலுங்காட்டில் இதுக்குண்டான பெருமையையும், அக்ரமமாகச் சொல்லிலும் தன்கார்யம் செய்யும் ஆதிக்யத்தையும், அபேக்ஷித ஸகலபலப்ரதத்வரூப மாஹாத்ம்யத்தையும், கர்மாத்யுபாய ஸஹகாரித்வரூபமான உத்கர்ஷத்தையும், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகதயா வந்த மாஹாத்ம்யத்தையும், ஏதத்ப்ரதிபாத்ய அர்த்தகெளரவ விஶேஷத்தையும் அருளிச் செய்கையாலே இம்மந்த்ரத்தினுடைய வைபவத்தை எல்லோரும் அறியும்படி தர்ஶிப்பித்தருளினாராயிற்று.
அவ: இனிமேல், இம்மந்திரத்துக்கு வாக்யார்த்தம் இரண்டுபடியாக அருளிச்செய்கிறார், `இதுதன்னில்’ என்று தொடங்கி.
மூ:26. இதுதன்னில் சொல்லுகிற அர்த்தம் – ஸ்வரூபமும் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும், ஸ்வரூபமும் உபாயமும் பலமுமென்னவுமாம்.
வ்யா: அதாவது- இம்மந்த்ரந்தன்னில் சொல்லுகிற அர்த்தம் – இவ்வாத்மாவினுடைய ஶேஷத்வ பாரதந்த்யங்களாகிற ஸ்வரூபமும், அந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாயிருந்துள்ள கைங்கர்யமாகிற ப்ராப்யமும்; அன்றிக்கே, ஶேஷத்வமாகிற ஸ்வரூபமும், அந்த ஸ்வரூபாநுரூபமான உபாயமும், உபாயலப்யமான பலமும் என்று சொல்லவுமாமென்கை. இதில் ப்ரதமயோஜநையில் ப்ரணவ நமஸ்ஸுக்களாலே ஸ்வரூபமும், நாராயண பதத்தாலே ப்ராப்யமும் சொல்லுகிறது. அநந்தரயோஜநையில், ப்ரணவத்தாலே ஶேஷத்வமும், நமஸ்ஸாலே உபாயமும், நாராயண பதத்தாலே பலமும் சொல்லுகிறது.
அவ: `பலவேஷந்தானிருக்கும்படி எங்ஙனே?’ என்ன அருளிச்செய்கிறார், `பலமிருக்கும்படி’ என்று தொடங்கி.
மூ: 27. பலமிருக்கும்படி ப்ரமேயஶேகரத்திலும் அர்ச்சிராதிகதியிலும் சொன்னோம்.
வ்யா: அதாவது- இவ்வாத்மாவுக்கு ப்ராப்யமான பலந்தான், அர்ச்சிராதிமார்க்கத்தாலே பரமபதத்திலே போய் பரிபூர்ண பகவதநுபவத்தைப் பண்ணி, அவ்வநுபவஜநித ப்ரீதிப்ரேரிதனாய்க்கொண்டு பண்ணும் அஶேஷ ஶேஷ வ்ருத்தியாகையாலே, அதிருக்கும்படியை ஸங்க்ரஹேண ப்ரமேயஶேகரமாகிற ப்ரபந்தத்திலும், விஸ்தரேண அர்ச்சிராதி கதியாகிற ப்ரபந்தத்திலும் விஶதமாகச் சொன்னோம்; அவற்றிலே கண்டுகொள்வதென்கை.
அவ: இனி, இம்மந்திரத்துக்கு ப்ரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாகத் திருவுள்ளம்பற்றி, ப்ரதமம் இதினுடைய அக்ஷரஸங்க்யையையும், பதஸங்க்யையையும் அருளிச்செய்கிறார், `இதுதான்’ என்று தொடங்கி.
மூ:28. இதுதான் எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும்.
வ்யா: அதாவது, இம்மந்த்ரந்தான்
ओमित्येकाक्षरं नम इति द्वे अक्षरे |
नारायणायेति पंचाक्षराणि |
इत्यष्टाक्षरं छन्दसा गायत्री चेति ||
(ஓமித்யேகாக்ஷரம், நம இதி த்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி, இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீசேதி),
ओमित्यग्रे व्याहरेत् नम इति पश्चात् नारायणायेत्युपरिष्टात्
(ஓமித்யக்ரே வ்யாஹரேத், நம இதி பஶ்சாத், நாராயணாயேத்யுபரிஷ்டாத்)
என்கிறபடியே எட்டுத்திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்குமென்கை. இதனுடைய அஷ்டாக்ஷரத்வம் சொல்லுகிறவிடத்திலே, ओमित्येकाक्षरं (ஓமித்யேகாக்ஷரம்) என்று ப்ரணவத்தை ஓரக்ஷரமாகவும், नम इति द्वे अक्षरे (நம இதி த்வே அக்ஷரே) என்று நமஸ்ஸை இரண்டக்ஷரமாகவும், नारायणायेति पंचाक्षराणि (நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி) என்று நாராயண பதத்தை அஞ்சக்ஷரமாகவும் ஶ்ருதி சொல்லுகையாலே. ஸமஸ்தபதமான நாராயண பதத்தில் நாரபதத்தைப் பிரித்து ஷடக்ஷரமாக்கி, ப்ரணவத்தையொழிய அஷ்டாக்ஷரத்வம் சொல்லுமவர்களுடைய பக்ஷம் அவைதிகமாகையாலே அநாதரணீயமாகக்கடவது.
இதில் பதத்ரயமும் எவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது? என்னும் ஆகாங்க்ஷையிலே, `மூன்று பதமும் மூன்றர்த்தத்தைச் சொல்லுகிறது’ என்கிறார்.
மூ: 29. மூன்று பதமும் மூன்று அர்த்தத்தைச் சொல்லுகிறது.
அவ: அவ்வர்த்தங்கள் தம்மை விஶதமாக அருளிச்செய்கிறார். `அதாவது – ஶேஷத்வமும், பாரதந்த்ர்யமும், கைங்கர்யமும்’ என்று.
மூ:30. அதாவது – ஶேஷத்வமும், பாரதந்த்ர்யமும், கைங்கர்யமும்.
வ்யா: `ஸ்வரூபமும் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும்’ என்று முதற்சொன்ன வாக்யார்த்தம் இத்தை நினைத்திறே.
அவ: இப்பதத்ரயத்திலும் ப்ரதமபதந்தான் எது? என்ன, `இதில் முதல் பதம் ப்ரணவம்’ என்கிறார்.
மூ:31. இதில் முதற்பதம் ப்ரணவம்.
வ்யா: ओमित्यग्रे व्याहरेत् (ஓமித்யக்ரே வ்யாஹரேத்) என்றிறே ஶ்ருதி சொல்லிற்று. ஸ்ம்ருதியும்
प्रणवाद्यम् नमोमद्यम् नारायण पदान्तिमं |
मन्त्रमष्टाक्षरम् विद्यात् सर्वसिद्धिकरं नृणाम् ||
(ப்ரணவாத்யம் நமோமத்யம் நாராயணபதாந்திமம்| மந்த்ரமஷ்டாக்ஷரம் வித்யாத் ஸர்வஸித்திகரம் ந்ருணாம்||) என்றதிறே.
அவ: இனி, ப்ரணவத்துக்கு அர்த்தம் அருளிச்செய்வதாக. இதனுடைய அக்ஷரத்ரயாத்மகதையை அருளிச்செய்கிறார், – இது `அ’ என்றும், `உ’ என்றும், `ம’ என்றும் மூன்று திருவக்ஷரம் என்று.
மூ: 32. இது `அ’ என்றும், `உ’ என்றும், `ம’ என்றும் மூன்று திருவக்ஷரம்.
வ்யா: இப்ரணவந்தான், அஸம்ஹிதாகாரத்தாலே முன்றக்ஷரமாய், மூன்றுபதமாய். மூன்றர்த்த ப்ரகாஶகமாய், ஸம்ஹிதாகாரத்தாலே ஏகாக்ஷரமாய், ஏகபதமாய், ஏகார்த்தப்ரகாஶகமாயிறே இருப்பது.
அவ: இந்த அக்ஷரத்ரயத்தினுடையவும் உத்பத்திக்ரமத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்கிறார் `மூன்று தாழியிலே’ என்று தொடங்கி.
மூ: 33. மூன்று தாழியிலே தயிரை நிறைத்துக் கடைந்து வெண்ணைய் திரட்டினாற்போலே மூன்று வேதத்திலும் மூன்று அக்ஷரத்தையும் எடுத்தது.
வ்யா: –
भूरिति ऋग्वेदादजायत | भुव इति यजुर्वेदात् |
सुवरिति सामवेदात् | तानि शुक्राण्यभ्यतपत्
तेभ्योभितप्तेभ्यस्त्रयो वर्णा अजायन्त| अकार उकार मकार इति|
तानेकधा समभरत्तदेतदोमिति ||
(பூரிதி ருக்வேதாதஜாயத | புவ இதி யஜுர்வேதாத் | ஸுவரிதி ஸாமவேதாத் | தாநி ஶுக்ராண்யப்யதபத் தேப்யோ அபிதப்தேப்யஸ் த்ரயோ வர்ணா அஜாயந்த | அகார உகார மகார இதி | தாநேகதாஸமபரத்ததேததோமிதி ||) என்றும்,
अकारन्चाप्युकारञ्च मकारञ्चप्रजापति:|
वॆदत्रयान्निरबृहत् भूर्भुवस्स्वरितीति च ||
(அகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி:| வேத த்ரயாந் நிரப்ருஹத் பூர்புவஸ் ஸ்வரிதீதி ச||) என்றும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளிற் சொல்லுகிறபடியே ருக்யஜுஸ்ஸாமரூபமான வேதத்ரயத்தில் நின்றும், “பூ: புவ: ஸுவ:” என்கிற வ்யாஹ்ருதித்ரயத்தையும் தோற்றுவித்து அந்த வ்யாஹ்ருதி த்ரயத்தையும் பொன்னோட வைக்குமாபோலே தன் ஸங்கல்பத்தாலே ஓட வைத்து, அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்களாகிற அக்ஷரங்கள் மூன்றும், அடைவே தோன்றும்படி பண்ணி, இப்படி ஸர்வேஶ்வரன் ஸமுத்தரித்தபடியைத் திருவுள்ளம் பற்றி பாத்ரத்ரயகதமான தயிரைத் தனித்தனியே கடைந்து, தத்ஸாரமான வெண்ணெயை வாங்கித் திரட்டினாற்போலே (மூன்று வேதத்திலும் மூன்றக்ஷரத்தையும் எடுத்தது) என்கிறார்.
அவ: இத்தால் பலித்ததை அருளிச்செய்கிறார், `ஆகையால் இது ஸகல வேதஸாரம்’ என்று.
மூ:34. ஆகையால், இது ஸகலவேத ஸாரம்.
வ்யா: அதாவது- அக்ஷரத்ரயமும் ஓரோ வேதத்தினுடைய ஸாரமாக ஸமுத்த்ருதமாகையாலே இவ்வக்ஷரத்ரயாத்மகமான ப்ரணவம் ஸகலவேத ஸாரம் – என்றபடி.
ஆக – “இது தன்னிற்சொல்லுகிற அர்த்தம்” என்று தொடங்கி இவ்வளவும் – இம்மந்திரத்தினுடைய வாக்யார்த்தத்தையும், அக்ஷர ஸங்க்யையையும், பதஸங்க்யையையும், பதத்ரயமும் அர்த்தத்ரய ப்ரதிபாதகமென்னுமத்தையும், அதில் ப்ரதமபதம் இன்னதென்னுமத்தையும், அதுதான் அக்ஷரத்ரயாத்மகமாய் இருக்குமென்னுமத்தையும், அவ்வக்ஷரத்ரயமும் வேதத்ரயஸாரமாக உத்பந்நமாகையாலே தத் ஸமுதாயமான ப்ரணவம் ஸகலவேதஸாரமென்னுமத்தையும் அருளிச்செய்தாராயிற்று.
அவ: இனி, இவ்வக்ஷரத்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச்செய்வதாகத் திருவுள்ளம்பற்றி ப்ரதமம் அகாரார்த்தத்தை அருளிச்செய்கிறார், `இதில் அகாரம்’ என்று தொடங்கி.
மூ: 35. இதில் அகாரம்-ஸகலஶப்தத்துக்கும் காரணமாய் நாராயணபதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே, ஸகலஜகத்துக்கும் காரணமாய் ஸர்வரக்ஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது.
வ்யா: அதாவது, இவ்வக்ஷரத்ரயத்திலும் வைத்துக்கொண்டு ப்ரதமாக்ஷரமான அகாரம்,
नामरूपञ्च भूतानां कृत्यानाञ्च प्रपन्चनम् |
वेदशब्देभ्य एवादौ देवादीनां चकार स: ||
(நாமரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்| வேத ஶப்தேப்ய ஏவாதௌ தேவாதீநாஞ்சகார ஸ:||) என்கிறபடியே லௌகிக ஸகலஶப்தங்களுக்கும் வேதம்காரணமாய்,
प्रणवाद्यास्तथा वेदा: (ப்ரணவாத்யாஸ் ததா வேதா:)
ओङ्कारप्रभवा वेदा: (ஓங்காரப்ரபவா வேதா:) இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே அந்த வேதங்களுக்கும் ப்ரணவம் காரணமாய், तस्य प्रकृतिलीनस्य (தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய) என்கிறபடியே அந்த ப்ரணவந்தனக்குத் தான் காரணமாயிருக்கையாலே अकारो वै सर्वा वाक् (அகாரோ வை ஸர்வா வாக்), समस्तशब्दमूलत्वादकारस्य स्वभावत: (ஸமஸ்தஶப்தமூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத:) என்கிறபடியே ஸகலஶப்தத்துக்குங்காரணமாய் ஸர்வேஶ்வரன் ஸமஸ்த வஸ்து ஶரீரதயா ஸர்வரக்ஷகனாயிருக்கும்படியை ப்ரதிபாதிக்கிற நாராயணபதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே
यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति (யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யே ந ஜாதாநி ஜீவந்தி), स एव सृज्य: स च सर्गकर्ता स एव पात्यत्ति च पाल्यते च (ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச ஸர்க்ககர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச) இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே எல்லா ஜகத்துக்கும் காரணமாய் எல்லார்க்கும் ரக்ஷகனாயிருக்கும் எம்பெருமானைச் சொல்லுகிறது- என்கை. இத்தால், இவ்வக்ஷரத்தில் ப்ரக்ருத்யர்த்தமான காரணத்வமும், தாத்வர்த்தமான ரக்ஷகத்வமும் சொல்லிற்றாயிற்று. இவ்வகாரத்துக்கு நாராயண பதஸங்க்ரஹதயா ரக்ஷகவாசித்வம் சொல்லும்போதும், தாதுஸித்தவேஷத்தை அவலம்பித்தே சொல்லவேணுமிறே.
அவ: `ரக்ஷிக்கையாவதுதான் எது’ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் `ரக்ஷிக்கையாவது’ என்று தொடங்கி.
மூ: 36. ரக்ஷிக்கையாவது- – விரோதியைப் போக்குகையும் அபேக்ஷிதத்தைக் கொடுக்கையும்.
வ்யா: அதாவது, ரக்ஷகத்வந்தான் அநிஷ்டநிவர்த்தகத்வ இஷ்டப்ராபகத்வரூபேண த்வி விதமாகையாலே, ஈஶ்வரன் சேதநரை ரக்ஷிக்கையாவது- அவர்களுக்கு து:க்காவஹமான விரோதியைப் போக்குகையும் ஸுகாவஹமான அபேக்ஷிதத்தைக் கொடுக்கையும்- என்கை.
அவ: `இவர்களுக்கு இவன் போக்கும் விரோதி எது? கொடுக்கும் அபேக்ஷிதம் எது?’ என்ன, அருளிச்செய்கிறார் `இவையிரண்டும் சேதநர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாயிருக்கும்’ என்று.
மூ: 37. இவையிரண்டும் சேதநர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாயிருக்கும்.
வ்யா: – சேதநர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாயிருக்கும் என்றது –தத்தததிகாரநுகுணமாகயிருக்கும்- என்றபடி.
அவ: இது தன்னை வ்யக்தமாக அருளிச்செய்கிறார் மேல் `ஸம்ஸாரிகளுக்கு’ இத்யாதி.
மூ:38. ஸம்ஸாரிகளுக்கு விரோதி ஶத்ருபீடாதிகள், அபேக்ஷிதம். அந்நபாநாதிகள், முமுக்ஷுக்களுக்கு விரோதி ஸம்ஸார ஸம்பந்தம், அபேக்ஷிதம் பரமபத ப்ராப்தி, முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்ய ஹாநி, அபேக்ஷிதம் கைங்கர்ய வ்ருத்தி.
வ்யா: அதாவது- தேஹாத்மாபிமாநாதிகளும் ஶப்தாதி விஷயாநுபவமுமே யாத்ரையாயிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு நிவர்த்யமான விரோதி ஶத்ருக்களால் வரும் நலிவு தொடக்கமானவை; ப்ராப்யமான அபேக்ஷிதம் சோறு தண்ணீர் முதலானவை- என்கை. `ஶத்ருபீடாதிகள்’ என்றவிடத்தில் `ஆதி’ ஶப்தத்தாலே ஆதிவ்யாதி முதலானவற்றால் வரும் பீடைகளைச் சொல்லுகிறது. `அந்நபாநாதிகள்’ என்கிறவிடத்தில் `ஆதி ஶப்தத்தாலே ஸ்ரக்வஸ்த்ர ஆபரண அங்கராக அங்கநாலிங்கநாதிகளைச் சொல்லுகிறது’.
`முமுக்ஷக்களுக்கு’ இத்யாதி. அதாவது:- ஸம்ஸாரத்தில் அடிக்கொதித்துப் பரமபதத்திலே போக ஆசைப்படா நிற்கும் முமுக்ஷுக்களுக்கு நிவர்த்யமான விரோதி பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமாய்க் கொண்டு இவ்விபூதியிலேயிருக்கையாகிற ஸம்ஸார ஸம்பந்தம்; ப்ராப்யமான அபேக்ஷிதம் பகவதநுபவாதிகளுக்கு அநுகூலமான பரமபதத்தை ப்ராபிக்கை- என்கை.
`முக்தர்க்கும்’ இத்யாதி. அதாவது- நிவ்ருத்த ஸம்ஸாரராயும், அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரகந்தராயும், பகவதநுபவஜநிதப்ரீதிகாரித கைங்கர்யபரராயுமிருக்கும் முத்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி, வகுத்த ஶேஷியான ஸர்வேஶ்வரன் திருவடிகளிலே ஸ்வரூபாநுரூபமாகப் பண்ணிக்கொண்டு போரும் கைங்கர்யத்துக்கு வரும் விச்சேதம்; அபேக்ஷிதம் உத்தரோத்தரம் அடிமை செய்து செல்லுகையாகிற கைங்கர்ய வ்ருத்தி- என்கை.
ஆக இப்படி அதிகாராநுகுணம் விரோதியைப்போக்கி அபேக்ஷிதத்தைக் கொடுக்கையால் ஈஶ்வரனே ஸர்வரக்ஷகனென்னுமிடம் சொல்லிற்றாயிற்று.
அவ: `இப்படி ஈஶ்ரவனேயோ பின்னையெல்லாரையும் ரக்ஷிக்கிறவன்,லோகத்திலே மாதாபித்ரு ப்ரப்ருதி தேவதாந்தர பர்யந்தமாக ரக்ஷகராய்ப் போருகிறவர்கள் பலருமில்லையோ?’ என்ன அருளிச் செய்கிறார் `ஈஶ்வரனை ஒழிந்தவர்கள் ரக்ஷகரல்லரென்னுமிடம் ப்ரபந்நபரித்ராணத்திலே சொன்னோம்’ என்று.
மூ:39. `ஈஶ்வரனையொழிந்தவர்கள் ரக்ஷகரல்லர்’ என்னுமிடம் ப்ரபந்நபரித்ராணத்திலே சொன்னோம்.
வ்யா: அதாவது- நிருபாதிகபந்துவாய், ஸர்வகாலமும் கைவிடாதே நோக்கிக்கொண்டு போரும் ஸர்வேஶ்வரனையொழிந்த ஒளபாதிகபந்துக்களான மாதாபித்ராதிகளும், அர்வாசீநரான தேவதாந்தரங்களும் ரக்ஷகரல்லரென்னுமிடம் ஸஹேதுகமாக ப்ரபந்நபரித்ராணமென்கிற ப்ரபந்தத்திலே சொன்னோம்; அதில் கண்டு கொள்வது- என்கை.
அவ: அநந்தரம், அர்த்தபலத்தாலே இப்பதத்தில் அநுஸந்திக்கப்படும் ஶ்ரிய:பதித்வத்தை அருளிச்செய்கிறார். `ரக்ஷிக்கும்போது’ என்று தொடங்கி.
மூ:40. ரக்ஷிக்கும்போது பிராட்டி ஸந்நிதி வேண்டுகையாலே, இதிலே ஸ்ரீஸம்பந்தமும் அனுஸந்தேயம்.
வ்யா: – அதாவது
लक्ष्म्या सह हृषीकेशो देव्या कारुण्य रूपया |
रक्षकस्सर्व सिद्धान्ते वेदान्तेsपि च गीयते ||
(லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஶோ தேவ்யா காருண்யரூபயா| ரக்ஷகஸ்ஸர்வஸித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே||)
என்கிறபடியே ரக்ஷகனான ஈஶ்வரன் சேதநரை ரக்ஷிக்கும் தஶையில் இவர்களுடைய அபராதங்களைக் கண்டாதல், தன் ஸ்வாதந்தர்யத்தாலேயாதல் உபேக்ஷியாமற்செய்கைக்கு உறுப்பான க்ருபையை ஜநிப்பிக்கும் புருஷகாரபூதையான பிராட்டிஸந்நிதி அவஶ்யாபேக்ஷிதமாகையாலே, ரக்ஷகனான அவனைச் சொல்லுகிற இவ்வகாரத்திலே அவனுடைய லக்ஷ்மீ ஸம்பந்தமும் அநுஸந்தேயம் என்கை. `லக்ஷ்மீ’ என்னாதே `ஸ்ரீ’ என்றது श्रयत इति श्री: (ஶ்ரயத இதி ஸ்ரீ:) என்கிறபடியே அவனை நித்யஸேவை பண்ணுகையாலே அவனோடு இவளுக்கு உண்டான அவிநாபாவமும், श्रीयत इति श्री: (ஸ்ரீயத இதி ஸ்ரீ) என்கிறபடியே சேதநருக்கு இவள் நித்ய ஸேவ்யையாயிருக்குமென்னுமதுவும் தோற்றுகைக்காக.
அவ: இன்னமும் இவ்வகாரத்தில் ஈஶ்வரனுடைய லக்ஷ்மி ஸம்பந்தம் நியமேந தோற்றுமென்னுமத்தை ஆப்தவசநத்தாலே தர்ஶிப்பிக்கிறார் `அத்ர’ இத்யாதியால்.
மூ:41. அத்ர பகவத்ஸோநாபதிமிஶ்ரர் வாக்யம் – அவன் மார்புவிட்டுப் பிரியில் இவ்வக்ஷரம் விட்டுப்பிரிவது.
வ்யா: அதாவது- இவ்விடத்திலே ஜ்ஞாநாதிகரான ஸ்ரீஸேநாபதிசீயர் அருளிச்செய்யும் வார்த்தை – “அகலகில்லேனிறையும் என்று அவன் திருமார்பிலே நித்யவாஸம் பண்ணும் இவள், அம்மார்பைவிட்டுப் பிரியிலாயிற்று, அவனுக்கு ப்ரதிபாதகமான இவ்வக்ஷரத்தைவிட்டுப் பிரிவது” என்று – என்கை. `என்று’ என்கிற இத்தனையுங்கூட்டாதபோது, கீழோடு இவ்வாக்யம் அந்வயியாது.
இத்தால், அவன் திருமார்பில் ஸம்பந்தம் இவளுக்கு நித்யமாகையாலே அவன் தோற்றுமிடத்திலே இவளும் தோற்றுகை நிஶ்சிதமாகையால், அவன் திருமார்பில் அந்வயத்தோபாதி அவனுக்கு வாசகமான அகாரத்தில் அந்வயமும் இவளுக்கு நித்யமென்றதாயிற்று.
அவ: இன்னமும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக ஈஶ்வர சேதந வாசகங்களான அகார மகாரங்களிரண்டிலும் இவளுக்கு உண்டான அநவரதாந்வயத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்கிறார் ‘பர்த்தாவினுடைய’ என்று தொடங்கி.
மூ: 42. பர்த்தாவினுடைய படுக்கையையும் ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாதேயிருக்கும் மாதாவைப்போலே ப்ரதம சரமபதங்களை விடாதேயிருக்கும் இருப்பு.
வ்யா: அதாவது- ஶேஷபூதையான தன் ஸ்வரூபத்துக்குச் சேரும்படி அவனை ரஸிப்பிக்கைக்காக பர்த்தாவினுடைய படுக்கையையும் விடாதே, ரக்ஷகையான தன் ஸ்வரூபத்துக்கும் போரும்படி தத்ரக்ஷணம் பண்ணுகைக்காக ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் மாதாவானவளைப்போலே, இவளும் பர்த்ருபூதனான ஈஶ்வரனுக்கு ப்ரதிபாதகமாயிருந்துள்ள ப்ரதமபதமான அகாரத்தையும், ப்ரஜாபூதரான சேதநர்க்கு ப்ரதிபாதகமாயிருந்துள்ள சரமபதமான மகாரத்தையும் தத்தத் விஷயத்தில் தனக்கு உண்டான ஸம்பந்தத்துக்கு ஈடாக ரஸிப்பிக்கை ரக்ஷிக்கையாகிற இவற்றைப்பற்ற, விடாதேயிருக்குமிருப்பு – என்கை.
அவ: கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தத்தை ஒருவிஶேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் ‘ஸ்ரீநந்தகோபரையும் கிருஷ்ணனையும் விடாத’ என்று தொடங்கி.
மூ: 43. ஸ்ரீநந்தகோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப்போலே.
வ்யா: அதாவது- பார்யையான தன் ஸ்வரூபாநுகுணமாக ரஸிப்பிக்கைக்காக பர்த்தாவான ஸ்ரீநந்தகோபரையும் விடாதே, மாதாவான தன் ஸ்வரூபாநுகுணமாக ரக்ஷிக்கைக்காகப் புத்ரனான க்ருஷ்ணனையும் விடாதே. “அம்பரமே” என்கிற பாட்டிற் சொல்லுகிறபடியே மத்யேவர்த்திக்கும் யசோதைப்பிராட்டியைப்போலே ப்ரதம சரமபத வாச்யரான ஈஶ்வர சேதநர்களிருவரையும் விடாதே இவளும் வர்த்திக்கும்படி- என்கை.
அவ: ஈஶ்வரஶேஷத்வமாத்ரமொழியப் பிராட்டிக்கும் ஶேஷமென்னுமிடம் இவ்வாசகத்தில் இன்றிக்கேயிருக்கச்செய்தேயும், இவளுக்கும் ஶேஷம் என்று நாம்கொள்ளுகிறபடி எங்ஙனே?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘ஒருவன்’ என்று தொடங்கி.
மூ: 44. ஒருவனடிமைகொள்ளும்போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணவோலையெழுதுவது; ஆகிலும், பணிசெய்வது க்ருஹிணிக்கிறே. அது போலே நாம் பிராட்டி அடிமையாயிருக்கும்படி.
வ்யா: – அதாவது, லோகத்திலே ஒருவன் தாஸதாஸிகள் முதலானதோரடிமையைக் கொள்ளும்போது தனக்கென்றே எழுதிக்கொள்ளுமதொழிய, தன் க்ருஹிணிக்கென்றன்று விலையோலை எழுதிக்கொள்வது; ஆயிருக்கச்செய்தேயும், அடிமைத் தொழில் செய்வது க்ருஹிணிக்கிறே; அதுபோலே ஈஶ்வரஶேஷம் என்னும் அளவை இவ்வகாரம் சொல்லிற்றேயாகிலும், நாம் பிராட்டிக்கு அடிமையாயிருக்கும்படி- என்கை.
அவ: கீழ்ச்சொன்ன ஹேதுக்களையெல்லாம் அநுவதித்துக்கொண்டு ஈஶ்வரனுக்கும், பிராட்டிக்கும் ஒருகாலும் ப்ருதக் ஸ்திதியில்லாமையை அருளிச்செய்கிறார்- ‘ஆகப் பிரித்து நிலையில்லை’ – என்று.
மூ: 45. ஆக, பிரித்து நிலையில்லை.
அவ: இந்த ப்ருதக்ஸ்தித்யபாவத்துக்கு இரண்டு த்ருஷ்டாந்த மருளிச்செய்கிறார் ‘ப்ரபையை’ என்று தொடங்கி.
மூ: 46. ப்ரபையையும், ப்ரபாவானையும், புஷ்பத்தையும் மணத்தையும் போலே.
வ்யா: அதாவது- ப்ரபைக்கும் ப்ரபாவானுக்கும் ப்ருதக்ஸ்திதி இல்லாதாப்போலவும், புஷ்பத்துக்கும் பரிமளத்துக்கும் ப்ருதக்ஸ்திதி இல்லாதாப்போலேவும் – என்கை. अनन्या राघवेणाहं भास्करेण प्रभा यथा (அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா), अनन्या हि मया सीता भास्करेण प्रभा यथा (அநந்யா ஹி மயாஸீதா பாஸ்கரேண ப்ரபாயதா) என்று ப்ரபாப்ரபாவான்களைப் போலே இருவருக்கும் ப்ருதக்ஸ்திதி இல்லையென்னுமிடம் இருவர் வாக்காலும் சொல்லப்பட்டதிறே. प्रसूनं पुष्यन्तीमपि परिमलर्द्धिं जिगदिषु: (ப்ரஸு நம் புஷ்யந்தீமபி பரிமளர்த்திம்ஜிகதிஷு:) என்கிறவிடத்திலே ஈஶ்வரனை புஷ்பஸ்தாநேயாகவும், பிராட்டியைப் பரிமளஸ்தாநேயாகவும் பட்டரருளிச் செய்கையாலே, புஷ்ப பரிமளங்களுக்குப் போலே, இருவர்க்கும் ப்ருதக்ஸ்திதி இல்லையென்னுமிடம் அர்த்தாத்ஸித்தம்.
அவ: இந்த ப்ருதக்ஸ்தித்யபாவத்தை அநுவதித்துக்கொண்டு இச்சேர்த்தியே சேதநர்க்கு உத்தேஶ்யமாய்த் தலைக்கட்டினபடியை அருளிச் செய்கிறார்-“ஆக, இச்சேர்த்தி உத்தேஶ்யமாய்விட்டது” என்று.
மூ: 47. ஆக, இச்சேர்த்தி உத்தேஶ்யமாய்விட்டது.
வ்யா: இச்சேர்த்தி உத்தேஶ்யம் என்கையாலே. இவர்களைத் தனித்தனியே விரும்புகை உத்தேஶ்யம் அன்று என்றபடி. இருவரையும் பிரித்து விரும்பினால், ராவண சூர்ப்பணகைகளுக்குப்போலே, அநர்த்தமே பலிக்குமத்தனை. இருவரையும் பற்றினாலிறே ஸ்ரீவீபீஷணாழ்வானைப் போலே வாழலாவது.
அவ: இனிமேல், இதில் விபக்த்யர்த்தம் அருளிச்செய்வதாக ப்ரதமம் விபக்திதன்னை நிர்த்தேசிக்கிறார் ‘இதிலே சதுர்த்தியேறிக் கழியும்’ என்று.
மூ: 48 இதிலே, சதுர்த்தியேறிக்கழியும்.
வ்யா: அதாவது- இவ்வகாரத்திலே சதுர்த்தியேறி सुपांसुलुक् (ஸுபாம்ஸுலுக்) இத்யாதி ஸுத்ரத்தாலே லுப்தமாய்ப்போம் – என்கை.
அவ: “விபக்த்யந்தரமெல்லாங்கிடக்க, இவ்வகாரத்தில் சதுர்த்தியேறினபடிதான் எங்ஙனே?’ என்கிற ஶங்கையை அநுவதிக்கிறார் சதுர்த்தியேறினபடியென்? என்னில்’ என்று.
மூ: 49. சதுர்த்தியேறினபடியென்? என்னில்.
அவ: அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார் ‘நாராயணபதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே’ என்று.
மூ: 50. நாராயணபதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே.
வ்யா: அதாவது- இவ்வகாரம். சதுர்த்யந்தமான நாராயணபதத்துக்கு ஸங்க்ரஹமாகையாலே, இதிலும் சதுர்த்தி ஏறிற்று – என்கை. இங்ஙன் அன்றாகில், இரண்டுக்கும் ஸங்க்ரஹவிவரணத்வம் ஸித்தியாதிறே.
அவ: ‘இத்தாற்சொல்லுகிற அர்த்தம்தான் எது?’ என்ன அருளிச்செய்கிறார் இத்தால் ஈஶ்வரனுக்கு ஶேஷமென்கிறது’ என்று.
மூ: 51. இத்தால், ஈஶ்வரனுக்கு ஶேஷமென்கிறது.
வ்யா: – அதாவது இதுதான் तादर्थ्ये चतुर्थी (தாதர்த்யே சதுர்த்தீ) ஆகையாலே இச்சதுர்த்தியால் ஈஶ்வரனுக்கு ஶேஷமென்னுமிடம் சொல்லுகிறது – என்கை.
அவ: सर्वं परवशम् दु:खं (ஸர்வம் பரவஶம் துக்கம்), सेवा श्ववृत्ति: (ஸேவா ஶ்வவ்ருத்தி) என்கிற லௌகிக ந்யாயத்தைக்கொண்டு ஶேஷத்வத்தை து:க்கரூபமாக நினைத்திருக்குமவர்கள் பண்ணும் ப்ரஶ்நத்தை அநுவதிக்கிறார் ‘ஶேஷத்வம் துக்கரூபமாகவன்றோ நாட்டில் காண்கிறதென்னில்’ என்று.
மூ: 52. ‘ஶேஷத்வம் து:க்கரூபமாகவன்றோ நாட்டிற் காண்கிறது’ என்னில்.
அவ: அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார் ‘அந்த நியமமில்லை’ என்று தொடங்கி.
மூ: 53. அந்த நியமம் இல்லை; உகந்தவிஷயத்துக்கு ஶேஷமாயிருக்கும் இருப்பு ஸுகமாகக் காண்கையாலே.
வ்யா: அதாவது- நாடுதன்னிலே “பணிமின் திருவருள்” இத்யாதிப்படியே அபிமத விஷயத்துக்கு ஶேஷமாயிருக்குமிருப்பு ஸுகரூபமாகக் காண்கையாலே, ஶேஷத்வமாகில் துக்கரூபமாயிருக்குமென்கிற நியமமில்லை- என்கை.
அவ: “அபிமத விஷயத்தில் ஶேஷத்வம் ஸுகமாகிறது. அவ்விஷயத்தில் குணமடியாக வந்ததாகையாலேயன்றோ” என்ன, அருளிச்செய்கிறார் ‘அகாரத்திலே’ என்று தொடங்கி.
மூ: 54. அகாரத்திலே கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே, இந்த ஶேஷத்வமும் குணத்தாலே வந்தது.
வ்யா: அதாவது- ஈஶ்வரனுடைய ரக்ஷகத்வப்ரதிபாதகமான அகாரத்திலே அந்த ரக்ஷணோபயோகியான கல்யாணகுணங்களைச் சொல்லுகையாலே, ஈஶ்வர விஷயமான இந்த ஶேஷத்வமும் அந்த குணங்களடியாக வந்தது – என்கை. ஆகையால், இதுவும் ஸுகரூபமாயிருக்கக் குறையில்லையென்று கருத்து.
அவ: ‘ஆனால், ஒளபாதிகமான இது ஸ்வரூபமன்றே?’ என்ன அருளிச் செய்கிறார் ‘ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்’ என்று.
மூ: 55. ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வருபம்.
வ்யா: அதாவது – உகந்தவிஷயத்தில் இதன் ஸுகரூபத்வத்துக்கு குணக்ருதத்வத்தை ஹேதுவாகச் சொல்லுகையாலே அந்த குணக்ருதத்வம் இங்கும் உண்டென்னுமிடத்துக்குச்சொன்ன இத்தனையொழிய, அர்த்தஸ்திதியை நிருபித்தால் स्वत्वमात्मनि सञ्जातं स्वामित्वं ब्रह्मणि स्तिथं (ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்), आत्मदास्यं हरे: स्वाम्यं स्वभावं च सदा स्मर (ஆத்மதாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச ஸதா ஸ்மர),
दासभूता: स्वत: सर्वे ह्यात्मान: परमात्मन: |
नान्यता लक्षणम् तेषां बन्धे मोक्षे तथैव च||
(தாஸபூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:| நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷே ததைவ ச||) இத்யாதிகளிலே இத்தை ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமாகச் சொல்லுகையாலே, ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வருபம் – என்கை.
அவ: ‘ஶேஷத்வமேயென்று அவதரிப்பானேன்? ஜ்ஞாநாநந்த ஸ்வரூபமான ஆத்மவஸ்துவுக்கு அல்லாதபோதும் ஸ்வரூபம் இல்லையோ? என்ன அருளிச்செய்கிறார் ஶேஷத்வமில்லாதபோது ஸ்வரூபமில்லை’ என்று.
மூ: 56. ஶேஷத்வமில்லாதபோது ஸ்வரூபமில்லை.
அவ: ஶேஷத்வமில்லாதபோது ஆத்மாபஹாரரூபமான ஸ்வாதந்த்ர்யபுத்தி நடக்கையாலே, ஸ்வரூபம் அழிந்துவிடும் என்னுமத்தை தர்ஶிப்பிக்கிறார் மேலிரண்டு வாக்யத்தாலே ‘ஆத்மாபஹாரமாவது’ என்று தொடங்கி.
மூ: 57. ஆத்மாபஹாரமாவது ஸ்வதந்த்ரமென்கிற நினைவு; ஸ்வதந்த்ரமாம்போது இல்லையாய்விடும்.
வ்யா: அதாவது
योन्यथा संतमात्मानमन्यथा प्रतिपद्यते |
किं तेन न कृतं चोरेणात्मापहारिणा ||
(யோ அன்யதாஸந்தமாத்மாநமந்யதா ப்ரதிபத்யதே| கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹரிணா||)
என்று ஸர்வபாப மூலமாகச் சொன்ன (ஆத்மாபஹாரமாவது) தன் ஸ்வருபம் ஸ்வதந்த்ரம் என்கிற ப்ரதிபத்தி; ஸ்வதந்த்ரம் ஆமளவில் असन्नेव (அஸந்நேவ) என்கிறபடியே ஸ்வரூபம் இல்லையாய்விடும் – என்கை. ஆகையால் ‘ஶேஷத்வமில்லாதபோது ஸ்வரூபமில்லை’ என்னத்தட்டில்லை என்று கருத்து.
ஆக, ப்ரக்ருத்யர்த்தமான ஈஶ்வரனுடைய காரணத்வமும், தாத்வர்த்தமான ரக்ஷகத்வமும், அர்த்தபலத்தால் வந்த ஸ்ரீய: பதித்வமும், ப்ரத்யயஸித்தமான சேதன ஶேஷத்வப்ரதிஸம்பந்தியான ஶேஷித்வமும் ஆகிற அகாரார்த்தத்தை அருளிச்செய்தாராயிற்று.
அவ: அநந்தரம் மத்யமாக்ஷரமான உகாரத்துக்கு அர்த்தம் அருளிச்செய்வதாக உபக்ரமிக்கிறார், ‘ஸ்தான ப்ரமாணத்தாலே உகாரம் அவதாரணார்த்தம்’ என்று.
மூ: 58. ஸ்தாநப்ரமாணத்தாலே உகாரம் அவதாரணார்த்தம்.
வ்யா: அதாவது- तदेव भूतं तदु भव्यमा इदं (ததேவ பூதம் தது பவ்யமா இதம்) என்றும்,
तदेवाग्निस्तद्वायुस्तत् सूर्यस्तदु चन्द्रमा: (ததேவாக்நிஸ்தத்வாயுஸ் தத் ஸுர்யஸ்தது சந்த்ரமா:) என்றும் இத்யாதிகளிலே ஏவகாரஸ்தாநத்திலே உகாரத்தை பிரயோகிக்கக் காண்கையாலே, ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம் அவதாரணத்தை அர்த்தமாக உடைத்தாயிருக்கும்- என்கை.
அவ: ‘அவதாரணத்துக்கு அர்த்தம் அயோகவ்யவச்சேதமாதல், அந்யயோக வ்யவச்சேதமாதல் ஆகையாலே, இவ்வவதாரணத்தாற் சொல்லுகிறது ஏது?’ என்ன, அருளிச்செய்கிறார். ‘இத்தால், பிறர்க்கு ஶேஷமன்றென்கிறது’ என்று.
மூ: 59. இத்தால், பிறர்க்கு ஶேஷம் அன்று என்கிறது.
வ்யா: அதாவது- அவதாரண வாசகமான இவ்வுகாரத்தால் கீழ் ஈஶ்வர ஶேஷமாகச் சொன்ன இவ்வாத்மவஸ்து, அந்யர்க்கு ஶேஷமன்று என்னுமிடத்தைச் சொல்லுகிறது- என்கை. சதுர்த்தியாலே ஈஶ்வரஶேஷத்வம் ப்ரதிபாதிதமாகச் செய்தே, அந்யஶேஷத்வம் ப்ரஸ்துதமாமோ? என்னில் லோகத்திலே ஒருவனுக்கு ஶேஷமான க்ருஹக்ஷேத்ர புத்ரதாஸாதிகள், வேறேயுஞ்சிலர்க்கு ஶேஷமாயிருக்கக் காண்கையாலே. அப்படிபட்ட அந்யஶேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ? என்று ஒரு ஶங்கை உதிக்குமிறே; ஆகையாலே தாத்ருஶமான அந்யஶேஷத்வம் இங்கில்லை என்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிறது உகாரம்.
அவ: அங்ஙனன்றிக்கே, இவ்வுகாரத்தாலே லக்ஷ்மீஶேஷத்வம் சொல்லுகிறது என்பாரும் உண்டென்கிறார், ‘பெரியபிராட்டியார்க்கு ஶேஷமென்கிறது என்றுஞ் சொல்லுவர்கள்’ என்று.
மூ: 60. பெரியபிராட்டியார்க்கு ஶேஷமென்கிறது என்றும் சொல்லுவர்கள்.
வ்யா:
अकारश्चित्स्वरूपस्य विष्णोर्वाचक इष्यते |
उकारश्चित्स्वरूपाया: श्रियो वाची तथा विदु:|
मकारस्तु तयोर्दास इति प्रणवलक्षणम् ||
(அகாரஶ்சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர்வாசக இஷ்யதே| உகாரஶ்சித்ஸ்வரூபாயா: ஶ்ரியோ வாசீ ததா விது:|| மகாரஸ்து தயோர்தாஸ இதி ப்ரணவலக்ஷணம்||) என்றும்,
अकारेणोच्यते विष्णु: सर्वलोकेश्वरो हरि: |
उद्धृता विष्णुना लक्ष्मीरुकारेणोच्यते सदा ||
मकारस्तु तयोर्विप्र श्रीनारायणयोस्सदा |
आत्मन: शेषभूतस्य वाचक: शृति चोदित: ||
(அகாரேணோச்யதே விஷ்ணுஸ் ஸர்வலோகேஶ்வரோ ஹரி:| உத்த்ருதா விஷ்ணுநா லக்ஷ்மீருகாரேணோச்யதே ஸதா|| மகாரஸ்து தயோர்விப்ர ஸ்ரீநாராயணயோஸ்ஸதா| ஆத்மநஶ்ஶேஷபூதஸ்ய வாசக: ஶ்ருதிசோதித:||) என்றும் இத்யாதிகளாலே பகவஶ்சாஸ்த்ரத்திலே அகாரத்தை பகவத்வாசகமாகவும், உகாரத்தை லக்ஷ்மீவாசகமாகவும், மகாரத்தை ததுபயேஶேஷபூத ஜீவவாசகமாகவுஞ் சொல்லுகையாலே, உகாரத்தை அவதாரண வாசகமாகக் கொள்ளாதே, லக்ஷ்மீ வாசகமாகக்கொண்டு, இவ்வுகாரத்தாலே பெரியபிராட்டியார்க்கு ஶேஷமென் கிறதென்றும் நிர்வஹிப்பர்கள் – என்கை.
அவ: அத்தைப் பற்றவும் பூர்வயோஜனையே முக்யமென்னுமத்தை அருளிச்செய்கிறார், ‘அதிலும் அந்யஶேஷத்வம் கழிகையே ப்ரதாநம்’ என்று.
மூ: 61. அதிலும் அந்யஶேஷத்வம் கழிகையே ப்ரதாநம்.
வ்யா: அதாவது- பெரியபிராட்டியார்க்கு ஶேஷமாகையாகிற அதிலுங்காட்டில் கீழ்ச்சொன்ன பகவச்சேஷத்வத்துக்கு விரோதியான அந்யஶேஷத்வம் கழிகையே ப்ரதாநாபேக்ஷிதம்- என்கை.
அவ: அந்யஶேஷத்வமிப்படி க்ரூரமோ? என்ன, க்ரெளர்யத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்கிறார், ‘தேவர்களுக்கு’ என்று தொடங்கி.
மூ: 62. தேவர்களுக்கு ஶேஷமான புரோடாஶத்தை நாய்க்கு இடுமாபோலே, ஈஶ்வரஶேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு ஶேஷமாக்குகை.
வ்யா: அதாவது- ஆராத்யரான இந்த்ராதி தேவர்களுக்கு போக்யதயா ஶேஷமாகக் கல்பிதமான புரோடாஶத்தை தர்ஶநஸ்பர்ஶநாதிகளுக்கு அநர்ஹமாம்படி நிஹீநமாயிருக்கிற நாய்க்கு இடுமாபோலே இருப்பதொன்று, ப்ராப்தஶேஷியான ஈஶ்வரனுக்கு ஶேஷமான ஆத்ம வஸ்துவை ஸர்வப்ரகாரத்தாலும் ஹேயரான ஸம்ஸாரிகளுக்கு ஶேஷமாக்குகை- என்கை.
அவ: ‘இப்படி க்ரூரமான அந்யஶேஷத்வம் கழிகையே ஆத்மாவுக்கு ப்ரதாநாபேக்ஷிதம்’ என்று கீழ்ச்சொன்ன அர்த்தத்தை ஸ்திரீகரிக்கிறார், பகவச்சேஷத்வத்திலும் அந்யஶேஷத்வம் கழிகையே ப்ரதாநம்’ என்று.
மூ: 63. பகவச்ஶேஷத்வத்திலும் அந்யஶேஷத்வம் கழிகையே ப்ரதாநம்.
வ்யா: அதாவது- லஷ்மீஶேஷத்வத்திலுங்காட்டில் ப்ரதாநம் என்ற அளவேயன்று. பகவான் தனக்கு ஶேஷமாயிருக்குமதிலுங்காட்டில் அந்யவிஷயத்தில் ஶேஷத்வம் கழிகை ஆத்மாவுக்கு ப்ரதாநாபேக்ஷிதம்- என்கை.
அவ: இதுக்கு ப்ரமாணம் காட்டுகிறார், “மறந்தும் புறந்தொழா மாந்தர் என்கையாலே” என்று.
மூ: 64. மறந்தும் புறந்தொழா மாந்தர் என்கையாலே.
வ்யா: அதாவது- யமகிங்கரஸம்வாதத்தைத் திருமழிசைப்பிரான் அருளிச்செய்த “திறம்பேன்மின்கண்டீர்” என்கிற பாட்டிலே பாகவத லக்ஷணம் சொல்லுகிறவளவில், ‘திருவடி தன்னாமம் மறந்தும் புறந்தொழாமாந்தர்’ என்று ஸ்வாமியுடைய திருநாமத்தை மறந்தார்களாகிலும் மற்றொரு விஷயத்தில் ஶேஷவ்ருத்தி பண்ணாதவர்கள் என்று சொல்லுகையாலே- என்கை.
அவ: ஈஶ்வரஶேஷமான ஆத்மவஸ்துவுக்கு ஸ்வஶேஷத்வ பரஶேஷத்வங்களிரண்டும் அந்யஶேஷத்வமாகையாலே உபயத்தையும் இவ்வுகாரம் கழிக்கிறதென்று சொல்லி நிகமிக்கிறார் ‘இத்தால் தனக்கும் பிறர்க்கும் உரித்தன்றென்கிறது’ என்று.
மூ: 65. இத்தால், தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.
வ்யா: அதாவது- அந்யஶேஷத்வ நிவர்த்தகமான இவ்வுகாரத்தாலே, அந்யரில் அந்யதமத்வம் அவிஶிஷ்டமாகையாலே இவ்வாத்மவஸ்து தனக்கும் உரித்தன்று, தன்னையொழிந்த ஸம்ஸாரிகளுக்கும் உரித்தன்று என்னுமிடம் சொல்லுகிறது – என்கை.
அவ: ஆக, உகாரார்த்தத்தை அருளிச்செய்தாராயிற்று. அநந்தரம், த்ருதீயாக்ஷரமான மகாரார்த்தத்தை அருளிச்செய்கிறார் ‘மகாரம்’ என்று தொடங்கி.
மூ: 66. மகாரம், இருபத்தஞ்சாம் அக்ஷரமாய் ஜ்ஞாந வாசியுமாய் இருக்கையாலே, ஆத்மாவைச் சொல்லுகிறது.
வ்யா: அதாவது-
भूतानि च कवर्गेण चवर्गेणेन्द्रियाणि च |
टवर्गेण तवर्गेण ज्ञानगन्धादयस्तथा ||
मन: पकारेणैवोक्तं फकारेण त्वहङ्कृति: |
बकारेण भकारेण महान् प्रकृतिच्यते ||
आत्मा तु स मकारेण पञ्चविंश: प्रकीर्तित:||
(பூதாநி ச கவர்கேண சவர்கேண இந்த்ரியாணி ச|
டவர்கேண தவர்கேண ஜ்ஞாநகந்தாதயஸ்ததா||
மந: பகாரேணைவோக்தம் பகாரேண த்வஹங்க்ருதி:|
பகாரேண பகாரேண மஹாந் ப்ரக்ருதிச்யதே||
ஆத்மாது ஸ மகாரேண பஞ்ச விம்ஶ: ப்ரகீர்த்தித:||)
என்றபடியே ப்ருதிவ்யாதிப்ரக்ருத்யந்தமான இருபத்துநாலு தத்வத்துக்கும் வாசகமாயிருந்துள்ள ககாராதிபகாரந்தமான இருபத்துநாலு அக்ஷரமும் போலன்றிக்கே மகாரம் இருபத்தஞ்சாமக்ஷரமாய். मन -ज्ञाने (மந- ஜ்ஞாநே) என்கிற தாதுவிலேயாதல், मनु -अवबोधने (மநு- அவபோதநே) என்கிற தாதுவிலேயாதல் நிஷ்பந்நமாகையாலே, ஜ்ஞாநவாஶியுமாயிருக்கையாலே. पञ्चविंशोयं पुरुष: (பஞ்சவிம்ஶோயம் புருஷ:), पञ्चविंश आत्मा भवति (பஞ்ச விம்ஶ ஆத்மா பவதி) என்கிறபடியே பஞ்சவிம்ஶகனாய், विज्ञानात्मा पुरुष: (விஜ்ஞாநாத்மா புருஷ:), विज्ञातारमरे केन विजानीयात् (விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்கிறபடியே ஜ்ஞாநஸ்வருபனுமாய் ஜ்ஞாநகுணகனுமாயிருக்கிற ஆத்மாவைச் சொல்லுகிறது- என்கை.
அவ: கீழ்ச்சொன்ன ஶேஷத்வம் ஸர்வஸாதாரணமாகையாலே த்ரிவிதாத்மவர்க்கத்தையும் இதிலே சொல்ல வேண்டுமாகையாலே அருளிச்செய்கிறார்,’ இதுதான் ஸமஷ்டிவாசகம்’ என்று.
மூ: 67. இதுதான் ஸமஷ்டிவாசகம்.
வ்யா: அதாவது- இப்படி ஆத்மவாசகமான இம்மகாரந்தான் ஆத்மஸமஷ்டிக்கு வாசகம்- என்கை.
அவ: ஏகவசநம் ஸமஷ்டி வாசகமாமோ?’ என்கிற ஶங்கையிலே அருளிச்செய்கிறார், ‘ஜாத்யேகவசநம்’ என்று.
மூ: 68. ஜாத்யேகவசநம்.
வ்யா: அதாவது- வ்ரீஹிஸமூஹத்தைச் சொல்லுகிறவன் ‘இது ஒரு நெல் என்றால்’, அந்த ஏகவசநம் ஜாதிபரமானாற்போலே, இதுவும் ஆத்மஜாதிபரமான ஏகவசநம் – என்கை.
அவ: ‘இம்மகாரத்தால், ஆத்மாவினுடைய எவ்வாகாரஞ் சொல்லுகிறது? என்ன, அருளிச்செய்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.
மூ: 69. இத்தால், ஆத்மா ஜ்ஞாதாவென்று தேஹத்தில் வ்யாவ்ருத்தி சொல்லிற்றாயிற்று.
வ்யா: அதாவது – பஞ்ச விம்ஶாக்ஷரமாய், ஜ்ஞாநவாசியுமாயிருந்துள்ள இம்மகாரத்தால், ‘ஶேஷத்வாஶ்ரயமான ஆத்மா ஜ்ஞாநாஶ்ரயபூதனானவன்’ என்று அசேதமான தேஹத்திற்காட்டில் ஆத்மாவின் வ்யாவ்ருத்தி சொல்லிற்றாயிற்று- என்கை.
அவ: ‘தேவோஹம், மநுஷ்யோஹம், ஸ்தூலோஹம், க்ருஶோஹம்- என்று தேஹத்திலே அஹம்புத்தி வ்யவஹாரங்கள் நடவாநிற்க, அஹமர்த்தபூதனான ஆத்மா, தேஹத்தில் வ்யாவ்ருத்தனென்று சொல்லுகிறபடிதான் எங்ஙனே? என்ன, அருளிச்செய்கிறார் ‘தேஹத்தில் வ்யாவ்ருத்தி தத்வஶேகரத்திலே சொன்னோம்’ என்று.
மூ: 70. தேஹத்தில் வ்யாவ்ருத்தி தத்வஶேகரத்திலே சொன்னோம்.
வ்யா: அதாவது- அநேக ஹேதுக்களாலே தேஹத்தினுடைய அநாத்மத்வத்தை ஸாதியாநின்றுகொண்டு, ஆத்மாவினுடைய தத்வ்யாவ்ருத்தியைத் தத்வஶேகரமாகிற ப்ரபந்தத்திலே வ்யக்தமாகச் சொன்னோம். அதிலே கண்டு கொள்வது- என்கை.
அவ: ‘தர்மிஸ்வரூபகதந பூர்வகமாக தத்தர்மமான ஶேஷத்வத்தைச் சொல்லுகை ப்ராப்தமாயிருக்க, இப்ரணவந்தன்னிலே ப்ரதமம் ஶேஷத்வத்தைச் சொல்லி, பின்னை ஆத்மாவைச் சொல்லுவானென்? என்கிற ஶங்கையிலே. அப்படி சொல்லுகைக்கு ஹேதுவை அருளிச்செய்கிறார் ‘மணத்தையும்’ இத்யாதி வாக்யத்ரயத்தாலே.
மூ: 71. மணத்தையும், ஒளியையுங்கொண்டு, பூவையும், ரத்நத்தையும் விரும்புமாபோலே, ஶேஷமென்று ஆத்மாவை ஆதரிக்கிறது அல்லாதபோது “உயிரினாற்குறைவிலம்” என்கிறபடியே த்யாஜ்யம்; அது தோன்ற ஶேஷத்வத்தைச் சொல்லிப் பின்னை ஆத்மாவைச் சொல்லுகிறது.
வ்யா: அதாவது- மணத்துக்கு ஆஶ்ரயமென்று பூவை விரும்புமாபோலேயும், ஒளிக்கு ஆஶ்ரயமென்று ரத்நத்தை விரும்புமாபோலேயும், ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயமென்றாயிற்று ஆத்மாவை ஆதரிக்கிறது; ஶேஷத்வாஶ்ரயமல்லாதபோது, “உயிரினாற் குறைவிலம்” என்று பகவச்சேஷத்வ ரஹிதமான ஆத்மாவால் அபேக்ஷையுடையோமல்லோம் என்கிறபடியே த்யாஜ்யனாய் விடுமித்தனை. இப்படியிருந்துள்ள ஶேஷத்வத்தின் ஊற்றந்தோற்ற, ஶேஷத்வத்தை முந்துறச் சொல்லி, பின்னை ஆத்மாவைச் சொல்லிற்று – என்கை.
அவ: பதத்ரயாத்மகமான இப்ரணவத்தாற் சொல்லித் தலைக்கட்டின அர்த்தத்தை அருளிச்செய்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.
மூ: 72. ஆக, ப்ரணவத்தால் “கண்ணபுரமொன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்குரியேனோ” என்கிறபடியே ஜீவபரஸம்பந்தஞ்சொல்லிற்று.
வ்யா: அதாவது- கீழ்ச்சொன்ன எல்லாவற்றாலும், ப்ரணவத்தால் “கண்ணபுரமொன்றுடையானுக்கு” என்று சதுர்த்யந்தமான அகாரார்த்தத்தையும், “அடியேன்” என்று ஶேஷத்வாஶ்ரயவாசியான மகாரத்தில் அர்த்தத்தையும், “ஒருவர்க்குரியேனோ” என்று அந்யஶேஷத்வ நிவர்த்தநமான உகாரார்த்தத்தையும் சொல்லாநின்று கொண்டு ப்ரணவார்த்தத்தை அநுஸந்தித்த திருமங்கையாழ்வார் ஸ்ரீஸூக்திப்படியே, ஜீவபரர்களுக்கு உண்டான ஶேஷஶேஷிபாவ ஸம்பந்தத்தைச் சொல்லிற்று – என்கை.
அவ: இன்னமும் பொய்கையாருடைய திவ்யஸூக்தியாலே ‘ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தி ஒரு மிதுநம்’ என்னுமிடந்தோற்ற இந்த ஜீவபரஸம்பந்தத்தை அருளிச்செய்கிறார் “இத்தால் தாமரையாள் கேள்வன்” என்று தொடங்கி.
மூ: 73. இத்தால், “தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்றதாயிற்று.
வ்யா: அதாவது, இப்ரணவத்தால், “தாமரையாள் கேள்வன்” என்று அகாரவாச்யனாய் ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தியான ஶ்ரிய:பதியையும், “ஒருவனையே நோக்கும்” என்று சதுர்த்யுகாரங்களாற் சொல்லுகிற அநந்யார்ஹஶேஷத்வ ப்ரயுக்தமான ஆத்மாவினுடைய ததேகபரதையையும், ‘உணர்வு’ என்று. அந்த ஶேஷத்வ- ஆஶ்ரயமாகமகாரத்தாற் சொல்லப்பட்ட ஜ்ஞாநைகநிரூபணீயனான ஆத்மாவையும் சொல்லுகிற ஸூக்தியிற்படியே, ஜீவபரஸம்பந்தம் சொல்லிற்றாயிற்று – என்கை.
அவ: அகாரத்தில் ப்ரத்யயார்த்த ப்ரதாநமாக ப்ரணவார்த்தத்தை யோஜித்தார் கீழ்; அதில் தாத்வர்த்தப்ரதாநமாக ப்ரணவத்துக்கு இன்னமும் ஒரு யோஜனை அருளிச்செய்கிறார், ‘அகாரத்தாலும்’ என்று தொடங்கி.
மூ: 74. அகாரத்தாலும், மகாரத்தாலும், ரக்ஷகனையும், ரக்ஷ்யத்தையும் சொல்லிற்று; சதுர்த்தியாலும், உகாரத்தாலும் ரக்ஷணஹேதுவான ப்ராப்தியையும், பலத்தையும் சொல்லிற்று.
வ்யா: அதாவது- அகாரத்தாலே ரக்ஷகனான ஈஶ்வரனைச் சொல்லிற்று; மகாரத்தாலே தத்ரக்ஷ்யமான ஆத்மவஸ்துவைச் சொல்லிற்று; சதுர்த்தியாலே ரக்ஷிக்கைக்கு ஹேதுவான ஶேஷத்வமாகிற ப்ராப்தியைச் சொல்லிற்று; இப்படி ரக்ஷிக்கிறதற்குப் பலம் – இவ்வாத்மவஸ்து அத்தலைக்கு அநந்யார்ஹமாக விநியோகப்படுகையாகையாலே. அநந்யார்ஹஶேஷத்வ வாசியான உகாரத்தாலே ரக்ஷணபலத்தைச் சொல்லிற்று – என்கை.
ஆக, இம்மந்திரத்திற் ப்ரதமபதமான ப்ரணவார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.
அவ: இனி, மேலிற்பதங்களுக்கும் அர்த்தம் அருளிச்செய்வதாக மந்த்ரஶேஷமும் இதுக்கு விவரணமாயிருக்கும்படியை முந்துற அருளிச்செய்கிறார். (இனிமேல் ப்ரணவத்தை விவரிக்கிறது) என்று.
மூ: 75. இனிமேல் ப்ரணவத்தை விவரிக்கிறது.
வ்யா: “இவ்விடத்தில் விவரணமாகிறது, ப்ரஸ்துதமான அர்த்தத்துக்கு உபயுக்தமான அர்த்தத்தைச் சொல்லிக் கொண்டு பூர்வோக்தமான அர்த்தத்தை விஶதீகரிக்கை” என்று தீபப்ரகாஶத்திலும்,
उक्तार्थ विशदी कार युक्तार्थान्तर बोधनम् |
मतं विवरणं तत्र महितानां मनीषिणाम् ||
(உக்தார்த விஶதீ கார யுக்தார்தாந்தர போதநம்|
மதம் விவரணம் தத்ர மஹிதாநாம் மநீஷிணாம்||)
என்று ரஹஸ்யத்ரயார்த்த விவரணக்ரமமருளிச்செய்த ப்ரபந்தத்திலும் விவரண லக்ஷணத்தை ஜீயரருளிச்செய்தாரிறே.
அவ: விவரிக்கிறபடிதான் எங்ஙனேயென்ன அருளிச்செய்கிறார் ‘உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு’ என்று தொடங்கி.
மூ: 76. உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு; அகாரத்தை விவரிக்கிறது நாராயணபதம்; மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி; நாரபதமென்றுஞ் சொல்லுவார்கள்.
வ்யா: அதாவது- அந்யஶேஷத்வத்வத்தைக் கழிக்கிறவிடத்தில் அந்யரிலே அந்யதமனாகச் சொல்லப்பட்ட தன்னை வெளியாகச் சொல்லிக் கழிக்கையாலே. உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு; ரக்ஷகனான ஈஶ்வரனுடைய ஸ்வரூபத்தையும், ரக்ஷ்யபூத சேதநாசேதநங்களையும் ரக்ஷணோபயோகியான குணாதிகளையும் ரக்ஷண ப்ரகாரத்தையும் விஶதமாகச் சொல்லுகையாலே, அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்; नाकिञ्चित्कुर्वत: शेषत्वम् (நாகிஞ்சித்குர்வதஶ்ஶேஷத்வம்), अकिञ्चित्करस्य शेषत्वानुपपत्ति: (அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி:) என்கிறபடியே கிஞ்சித்காரமில்லாதபோது ஶேஷத்வஸித்தி இல்லாமையால் தத்ஸித்திக்கு உறுப்பான கிஞ்சித்காரத்தை ப்ரதிபாதிக்கிற சதுர்த்தி, ஶேஷத்வாஶ்ரயமான ஆத்மவஸ்துவைச் சொல்லுகிற மகாரத்தை விவரிக்கிறது. மகார வாச்யனான ஆத்மாவினுடைய நித்யத்வம், ஏகரூபத்வம், பஹுத்வம் தொடக்கமானவற்றை ப்ரதிபாதிக்கையாலே மகாரத்தை விவரிக்கிறது நாரபதமென்றுஞ் சொல்லுவார்கள்- என்கை.
அவ: ‘அக்ஷரக்ரமத்திலே விவரியாதே வ்யுத்க்ரம்மாக விவரிப்பானேன்?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘அடைவே’ என்று தொடங்கி.
மூ: 77. அடைவே விவரியாதொழிகிறது- விரோதி போய் அநுபவிக்க வேண்டுகையாலே.
வ்யா: அதாவது- அக்ஷரக்ரமத்திலே விவரியாதொழிகிறது – அகார விவரணமான நாராயணபதத்தில் பகவதநுபவத்துக்கு விரோதியான அஹங்கார மமகாராதிகள் நமஸ்ஸாலே கழியுண்டுபோய்ப் பின்னை அநுபவிக்கவேண்டுகையாலே என்கை.
அவ: இனி, மத்யமபதமான நமஸ்ஸுக்கு அர்த்தம் அருளிச்செய்வதாக, அதில் அவாந்தரபதபேதத்தை அருளிச்செய்கிறார், “நமஸ்ஸு” “ந” என்றும், “ம:” என்றும் இரண்டு பதம், என்று..
மூ: 78. நமஸ்ஸு- “ந” என்றும், “ம:” என்னும் இரண்டு பதம்.
அவ: ‘இவ்விரண்டு பதங்களுக்கு அர்த்தம் எது?’ என்று அருளிச்செய்கிறார், ‘ம: என்கிற இத்தால்’, என்று தொடங்கி.
மூ: 79. ”ம:” என்கிற இத்தால், “தனக்கு உரியன் என்கிறது; ”ந” என்று அத்தைத் தவிர்க்கிறது.
வ்யா: – அதாவது “ம:” என்று ஷஷ்ட்யந்தமான இம்மகாரத்தால், மகாரவாச்யனான ஆத்மாவுக்குக் கீழ்ச்சொன்ன தாதர்த்ய ப்ரதிகோடியான ஸ்வார்த்தத்வம் தோற்றுகையாலே “தனக்கு உரியன்” என்னுமத்தைச் சொல்லுகிறது; “ந” என்று நிஷேதவாசியான நஞ்ஞாலே அத்தைக் கழிக்கிறது- என்கை.
அவ: உபயபதத்தாலும் சொன்ன அர்த்தத்தைச் சேரப் பிடித்து அருளிச்செய்கிறார், ஆக “நம:” என்கிற இத்தால், “தனக்கு உரியன் அன்றென்கிறது ”, என்று.
மூ: 80. ஆக “நம” என்கிற இத்தால், “தனக்கு உரியனன்று” என்கிறது.
வ்யா: பதக்ரமத்திலே அர்த்தஞ்சொல்லாதே, வ்யுத்க்ரமமாகச் சொல்லுகிறது நிஷேத்யத்தைச் சொல்லி நிஷேதிக்க வேண்டுகையாலே; க்ரமத்திலே சொல்லும்போது “வீடுமின் முற்றவும்” என்னுமாபோலே, நிஷேதபூர்வகமாக நிஷேத்யத்தைச் சொல்லுகிறதென்று யோஜிக்கவேணும். அது தானும் பரந்தபடியிலே இவர் தாமே அருளிச்செய்தார்.
அவ: ‘தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று’ என்று அந்யஶேஷத்வத்தை நிஷேதித்த உகாரத்தை விவரிக்கிறதாகில், பிறர்க்கு உரித்தன்றென்றத்தையும் விவரியாமல், ‘தனக்குரியனன்று’ என்ற இத்தையே விவரிப்பானேன்? என்கிற ஶங்கையிலே அருளிச் செய்கிறார் – ‘பிறர்க்கு உரியனானவன்று’ என்று தொடங்கி.
மூ: 81. பிறர்க்கு உரியனான அன்று தன் வைலக்ஷண்யத்தைக் காட்டி மீட்கலாம்; தனக்கென்னுமென்று யோக்யதையுங்கூட அழியும்.
வ்யா: அதாவது- அந்யஶேஷபூதனான அன்று, ஶேஷத்வத்துக்கு இசைகையாலே, அந்யரிற்காட்டில் தனக்குண்டான ஸர்வகாரணத்வ ஸர்வரக்ஷகத்வ ஸர்வஶேஷித்வாதியான வைலக்ஷண்யத்தைக் காட்டி, அந்நிலையில் நின்றும் மீட்கலாம். ‘தனக்குரியன்’ என்று நிற்குமன்று, त्वं मे (த்வம் மே) என்றால், अहं मे (அஹம் மே) என்னுமது ஒழிய ஶேஷத்வத்துக்கு இசையாமையாலே, மீட்கைக்கு யோக்யதையுங்கூட இல்லையாய்விடும் – என்கை.
அவ: ‘இந் நமஸ்ஸால் செய்கிற அம்ஶந்தான் எது?’ என்ன அருளிச்செய்கிறார் – ‘இத்தால் விரோதியைக் கழிக்கிறது’ – என்று.
மூ: 82. இத்தால் விரோதியைக் கழிக்கிறது.
அவ: இதுதான் ஒன்றோ? பலவோ? என்ன, அருளிச்செய்கிறார் – ‘விரோதிதான் மூன்று’ – என்று.
மூ: 83. விரோதிதான் மூன்று.
அவ: அம்மூன்றுந்தான் எது? என்ன அருளிச்செய்கிறார் – ‘அதாவது, ஸ்வரூப விரோதியும், உபாய விரோதியும், ப்ராப்ய விரோதியும்’ – என்று.
மூ: 84. அதாவது- ஸ்வரூப விரோதியும், உபாய விரோதியும், ப்ராப்ய விரோதியும்.
வ்யா: – இத்தால் ப்ரதமபதத்திற் சொன்ன ஸ்வரூபத்துக்கு விரோதியும், இப்பதத்தில் ஆர்த்தமாக ஸித்திக்கிற உபாயத்துக்கு விரோதியும், உத்தரபதத்தில் சொல்லுகிற ப்ராப்யத்துக்கு விரோதியுமென்கை. இந்நமஸ்ஸுதான் காகாக்ஷி ந்யாயத்தாலே பூர்வோத்தரபதங்களிற் சொல்லுகிற ஸ்வரூப ப்ராப்யங்களினுடைய விரோதிகளைக் கழிக்கக் கடவதாயிறே இருப்பது.
அவ: ‘இவ்விரோதித்ரயமும் கழிகையாவதுதான் எது?’ என்ன, அது தன்னை அடைவே அருளிச்செய்கிறார், மேல் மூன்று வாக்யத்தாலே.
மூ: 85. ஸ்வரூப விரோதி கழிகையாவது- “யானே நீ என்னுடமையும் நீயே” என்றிருக்கை; உபாயவிரோதி, கழிகையாவது- “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்” என்றிருக்கை; ப்ராப்ய விரோதி கழிகையாவது- “மற்றை நங்காமங்கள் மாற்று” என்றிருக்கை.
வ்யா: ‘ஸ்வரூபவிரோதி’ இத்யாதி. அதாவது- ஸ்வரூபத்துக்கு விரோதி “யானே என்தனதே” – என்றிருக்கையாகையாலே. அது கழிகையாவது – “யானே நீயென்னுடைமையும் நீயே” – என்று ஆத்ம ஆத்மீயங்கள் இரண்டும் அத்தலைக்கு ப்ரகாரதயா ஶேஷம் என்றிருக்கை – என்கை. “உபாய விரோதி” இத்யாதி. அதாவது- உபாயத்துக்கு விரோதி ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயமாகையாலே, அது கழிகையாவது – “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்று – ‘துக்கத்தைப் போக்குவாய் போக்காதொழிவாய். வேறோரு ரக்ஷக வஸ்துவையுடையேனல்லேன்’ என்றிருக்கை – என்கை. ‘ப்ராப்திவிரோதி’ இத்யாதி. அதாவது- ப்ராப்யத்துக்கு விரோதி ஸ்வப்ரயோஜநபுத்தியாகையாலே, அது கழிகையாவது – “மற்றை நங்காமங்கள் மாற்று” என்று – ‘உன்னுகப்புக்குப் புறம்பான எங்களுடைய ஆசையைப் போக்கு’ என்றிருக்கை – என்கை.
அவ: இப்படி ஸ்வரூபோபாய புருஷார்த்தங்கள் மூன்றுக்கும் விரோதியாகிறது இவனுடைய அஹங்கார மமகாரங்களாகையாலே. அதினுடைய க்ரெளர்யத்தையும் தந்நிவ்ருத்தியிலுண்டானநன்மையையும் அருளிச்செய்கிறார் – “ம:” என்கை ஸ்வரூபநாஶம், “நம” என்கை ஸ்வரூபோஜ்ஜீவநம் – என்று.
மூ: 86 “ம:” என்கை ஸ்வரூபநாஶம், “நம” என்கை ஸ்வரூபோஜ்ஜீவநம்.
வ்யா: அதாவது-
चेतनस्य यदा मम्यं स्वस्मिन् स्वीये च वस्तुनि |
मम इत्यक्षरद्वन्द्वं तदा मम्यस्य वाचकम् ||
(சேதநஸ்ய யதா மம்யம் ஸ்வஸ்மிந் ஸ்வீயே ச வஸ்துநி|
மம இத்யஷரத்வந்த்வம் ததா மம்யஸ்ய வாசகம்||)
என்கிறபடி ‘ம:’ என்கிற இதிலே அஹங்கார மமகாரங்கள் இரண்டுமுண்டாகையாலே அதிலே அந்விதனாகை – இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு நாஶம்; ‘நம:’ என்று அதில் அந்வயமற்றிருக்கை – ஸ்வரூபத்திற்கு உஜ்ஜீவநம் – என்கை.
द्वयक्षरस्तु भवेन्मृत्युस्त्रयक्षरं ब्रह्मण: पदम् |
ममेति द्वयक्षरो मृत्युर्न ममेति च शाश्वतम् ||
(த்வயக்ஷரஸ்து பவேந் ம்ருத்யுஸ் த்ரயக்ஷரம் ப்ரஹ்மண: பதம்|
மமேதி த்வயக்ஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச ஶாஶ்வதம்||) என்னக்கடவதிறே.
அவ: இப்படி ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளைக் கழிக்கிற அளவன்றிக்கே, இந்நமஸ்ஸுதான் ஸ்வரூபாதி த்ரயத்தையும் ப்ரகாஸிப்பிக்கும் என்கிறார். ‘இதுதான் ஸ்வரூபத்தையும், உபாயத்தையும், பலத்தையும் காட்டும்’ என்று.
மூ: 87. இதுதான் – ஸ்வரூபத்தையும், உபாயத்தையும், பலத்தையும் காட்டும்.
அவ: இது தன்னை உபபாதிக்கிறார், மேல் மூன்று வாக்யத்திலே.
- ”தொலைவில்லி மங்கலந் தொழும்” என்கையாலே, ஸ்வரூபம் சொல்லிற்று; “வேங்கடத்து உறைவார்க்கு நம” என்கையாலே, உபாயம் சொல்லிற்று; “அந்தி தொழுஞ்சொல்” என்கையாலே, பலம் சொல்லிற்று.
வ்யா: “தொலைவில்லி மங்கலம்” இத்யாதி. அதாவது – “தொலைவில்லி மங்கலந்தொழும்” என்று அவனுகந்தருளின நிலத்தளவும் செல்ல ஶேஷமாயிருக்கும்படியைச் சொல்லுகிறவளவில் ‘தொழும்’ என்று நமஸ்காரத்தைச் சொல்லுகையாலே, ஸ்வரூபம் சொல்லிற்று- என்கை. ‘வேங்கடத்து’ இத்யாதி: அதாவது “வேங்கடத்துறைவார்க்கு நம” என்று ‘திருவேங்கடமுடையானுக்கு ஶேஷம் நான்; எனக்குரியேனல்லேன்’, என்று ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தைச் சொல்லுகையாலே, அவனே உபாயமென்னுமிடம் ஸித்திக்கையாலே உபாயம் சொல்லிற்று- என்கை. ‘அந்தி தொழுஞ்சொல்’ இத்யாதி. அதாவது “அந்தி தொழுஞ்சொல்” என்று தாஸ்யரஸம் அதிஶயித்தால் அதனுடைய சரமதஶையிலே சொல்லக்கடவ “தொழுஞ்சொல்” என்று நமஶ்ஶப்தத்தைச் சொல்லுகையாலே. பலம் சொல்லிற்று என்கை.
அவ: இப்பதத்திலே, ததீயஶேஷத்வமும் ஆர்த்தமாக அநுஸந்தேயமாகையாலே, அத்தை அருளிச் செய்கிறார் ‘உற்றதும்’ – என்று தொடங்கி.
மூ: 89. ‘உற்றதும் உன்னடியார்க்கடிமை’ என்கிறபடியே இதிலே பாகவத ஶேஷத்வமும் அநுஸந்தேயம்.
வ்யா: அதாவது “நின் திருவெட்டெழுத்துங்கற்று நானுற்றதும் உன்னடியார்க்கு அடிமை” என்று ‘திருமந்திரங்கற்றதால் நான் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை என்னும் இவ்வர்த்தத்திலே’ என்கிறபடியே, அஹங்கார மமகாரங்கள் நிவ்ருத்தமாய், பகவச்சேஷத்வம் உள்ளபடி ப்ரகாஶிக்கிற இந்நமஸ்ஸிலே தத்காஷ்டையான பாகவத ஶேஷத்வமும் அநுஸந்திக்கவேணும்- என்கை.
அவ: இப்படி ஆர்த்தமாக அநுஸந்திக்கப்படும் பாகவத ஶேஷத்வந்தான், இந்நமஸ்ஸிலன்றிக்கே ஸ்தலாந்தரங்களிலே சொல்லுவாருமுண்டாகையாலே, அத்தை அருளிச்செய்கிறார். ‘இது அகாரத்திலே என்றுஞ்சொல்லுவார்கள்; உகாரத்திலே என்றுஞ் சொல்லுவர்கள்’ – என்று.
மூ: 90. இது – அகாரத்திலே என்றுஞ் சொல்லுவர்கள்; உகாரத்தில் என்றுஞ்சொல்லுவார்கள்.
வ்யா: அதாவது சதுர்த்தியாலே ஆத்மாவினுடைய பகவச்சேஷத்வத்தைச் சொல்லுகையாலே, பகவச்சேஷத்வகாஷ்டையான இந்த பாகவத சேஷத்வாநுஸந்தாநம் அகாரத்திலேயென்றும் சிலர் சொல்லுவார்கள். அநந்யார்ஹஶேஷத்வத்துக்கு எல்லை ததீய ஶேஷத்வபர்யந்தமாக நிற்கையாகையாலே, அநந்யார்ஹத்வ ப்ரதிபாதகமான உகாரத்திலேயென்றும் சிலர் சொல்லுவார்கள் – என்கை. ஆர்த்தமாகையாலே, அவ்வவஸ்தலங்களிலும் சொல்லலாயிருந்ததேயாகிலும் கந்தல் கழிந்தவிடத்திலே சொல்லுகையே உசிதமென்று கருத்து.
அவ: இந்நமஸ்ஸுக்குப் பூர்வத்திற் பிறந்த ப்ரதிபத்தியைப் பற்ற இதிற் பிறந்த ப்ரபத்திக்குண்டான வாசியை அருளிச் செய்கிறார், ‘ஈஸ்வரன் தனக்கேயாயிருக்கும்’ என்று தொடங்கி.
மூ: 91. “ஈஶ்வரன் தனக்கேயாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கேயாயிருக்கும்; ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும்” என்று முற்பட்ட நினைவு; அங்ஙனன்றிக்கே, அசித்தைப் போலே தனக்கேயாக எனைக் கொள்ளவேணுமென்கிறது நமஸ்ஸால்.
வ்யா: – அதாவது- स्वरूपं स्वातन्त्र्यं भगवत: (“ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத:”) என்கிறபடியே, ஸ்வாதந்தர்யமே ஸ்வரூபமான ஈஶ்வரன் ஸ்வார்த்தபரனாயே இருக்கும்; சைதந்ய ரஹிதமாகையாலே தனக்கே என்கைக்கு யோக்யதையின்றிக்கே பாரதந்தர்ய ஸ்வரூபமாயிருக்கும் அசித்து, பரார்த்தமாயே இருக்கும். சதுர்த்தியிற்சொன்ன ஶேஷத்வத்தையும், மகாரத்திற் சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தையும் உடையனான ஆத்மா ஜ்ஞாத்ருத்வபலத்தாலே, ஸ்வார்த்ததைக்கும், ஶேஷத்வத்தாலே பரார்த்ததைக்கும் பொதுவாயிருக்கும் என்று, நமஸ்ஸுக்குப் பூர்வபதத்திற் பிறந்த ப்ரதிபத்தி; அப்படியின்றிக்கே, பரார்த்ததைக வேஷமான அசித்துப் போலே, “தனக்கேயாகவெனைக் கொள்ளுமீதே” என்கிறபடியே, அத்தலைக்கே ரஸமாம்படி விநியோகங் கொள்ள வேணும் என்று அபேக்ஷிக்கிறது இந்நமஸ்ஸாலே – என்கை.
அவ: “தனக்கேயாக” என்றத்தை உபபாதிக்கிறார், “அதாவது” என்று தொடங்கி.
மூ: 92. அதாவது – போகதஶையில் ஈஶ்வரன் அழிக்கும்போது நோக்கவேணுமென்று அழியாதொழிகை.
வ்யா: இத்தால் அத்தலைக்கே ரஸமாம்படி விநியோகப்படுகையாவது – தன்னோடே கலந்து பரிமாறும் தஶையில் போக்தாவான ஈஶ்வரன் “ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்” என்கிறபடி. அடிமைகொள்வாரைப்போலே புகுந்து, தன் வ்யாமோஹத்தாலே தாழநின்று பரிமாறி, இத்தலையில் ஶேஷத்வத்தை அழிக்கும்போது, “நம் ஶேஷத்வத்தை நாம் நோக்கவேணும்”, என்று நைச்யம் பாவித்து இறாய்த்து அவன் போகத்தை அழியாதொழிகை – என்கை.
அவ: “இப்படி இவன் அழிக்கைக்கு ஹேதுவென்?” என்ன, அருளிச்செய்கிறார் – ‘அழிக்கைக்கு ஹேது’ என்று தொடங்கி.
மூ: 93. அழிக்கைக்கு ஹேது – கீழே சொல்லிற்று; மேலுஞ்சொல்லும்.
வ்யா: அதாவது- ஈஶ்வரன் மேல்விழுந்து விநியோகங்கொள்ளுகிற தஶையிலே இவன் நைச்யம்பாவித்து, இறாய்த்து அவன் போகத்தை அழிக்கைக்கு ஹேது. ‘ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்’ என்கையாலே கீழே ப்ரணவத்திலே சொல்லிற்று; சதுர்த்தியிலே கிங்கரஸ்வபாவனாகச் சொல்லுகையாலே. மேலிற் பதத்திலும் சொல்லும் – என்கை.
அவ: இனி இப்பாரதந்தர்ய ப்ரதிபத்தியினுடைய வைபவத்தைப் பலபடியாக அருளிச்செய்யாநின்றுகொண்டு, இப்பதத்தை நிகமித்தருளுகிறார் மேல்.
மூ: 94. இந்நினைவு பிறந்தபோதே க்ருதக்ருத்யன்; இந்நினைவில்லாதபோது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்; இந்நினைவிலே எல்லா ஸுக்ருதங்களும் உண்டு. இது இன்றிக்கே இருக்கப் பண்ணும் யஜ்ஞாதிகளும் ப்ராயச்சித்தாதிகளும் நிஷ்ப்ரயோஜநங்கள்; இதுதன்னாலே எல்லாபாவங்களும்போம், எல்லா பலங்களும்உண்டாம்.
வ்யா: – ‘இந்நினைவு பிறந்தபோதே க்ருதக்ருத்யன்” என்றது – “தனக்கேயாக எனைக் கொள்ளவேணும்” என்னும் இவ்வத்யந்த பாரதந்தர்ய ப்ரதிபத்தி பிறந்தபோதே தன்னுடைய ஹிதத்துக்கு உடலாகச் செய்யவேண்டுவதெல்லாம் செய்து தலைக்கட்டினவன்- என்கை.
‘இந்நினைவு இல்லாதபோது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்’ என்றது – இப்பாரதந்தர்ய ப்ரதிபத்தி இல்லாதபோது, किं तेन न कृतं पापं चोरेणात्मापहारिणा (கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா) என்கிறபடியே ஸகல துஷ்க்ருதங்களும் இவனாலே செய்யப்பட்டதாய் விடும் – என்கை.
‘இந்நினைவிலே எல்லா ஸுக்ருதங்களும் உண்டு’ என்றது – இது உண்டாகவே எல்லா ஸுக்ருதமும் பண்ணினாற்பிறக்கும் ப்ரீதி ஈஶ்வரனுக்கு விளைகையாலே. இந்தப் பாரதந்தர்ய ப்ரதிபத்தியிலே ஸகல ஸுக்ருதமும் உண்டு – என்கை.
‘இது இன்றிக்கேயிருக்குப் பண்ணும் யஜ்ஞாதிகளும் ப்ராயஶ்சித்தாதிகளும் நிஷ்ப்ரயோஜநங்கள்’ என்றது – இந்தப் பாரதந்தர்ய ப்ரதிபத்தி இன்றிக்கேயிருக்கசெய்தே, ஈஶ்வர ப்ரீணார்த்தமாக இவன் பண்ணும் யாகாதிகர்மங்களும், தன் பாபவிமோசநார்த்தமாகப் பண்ணும் க்ருச்ச்ரசாந்த்ராயணாதிகளாகிற ப்ராயஶ்சித்தாதிகளும் ஈஶ்வரப்ரீதிக்கும் ஸ்வபாபவிமோசநத்துக்கும் உடலாகாமையாலே நிஷ்ப்ரயோஜநங்கள் – என்கை.
“இது தன்னாலே எல்லாப் பாபங்களும் போம், எல்லாப் பலங்களும் உண்டாம்” என்றது – இந்தப் பாரதந்த்ர்ய ப்ரதிபத்தியாலே ஈஶ்வரன் இவனளவிலே அநுக்ரஹாதிஶயத்தைப் பண்ணுகையாலே அவனுடைய நிக்ரஹாத்மகமான ஸகல பாபங்களும் போம்; “உன்னடியார்க்கென் செய்வனென்றேயிருத்தி நீ” என்கிறபடியே இவனுக்கெத்தைச் செய்வோமென்று மேன்மேலும் உபகரிக்கையாலே, ஸம்ஸார நிவ்ருத்தி தொடக்கமாக கைங்கர்ய ப்ராப்தி பர்யந்தமாக, ஸகல பலங்களும் உண்டாம் – என்கை. ஆக மத்யமபதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.
அவ: அநந்தரம் நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார்- ‘நாராயணனென்றது’ என்று தொடங்கி.
மூ: 95. நாராயணனென்றது நாரங்களுக்கு அயநமென்றபடி.
வ்யா: அதாவது- நாராயண பதந்தான் “நாராணாம் அயநம் ய: ஸ: நாராயண:” என்றும், “நாரா: அயநம் யஸ்ய ஸ: நாராயண:” என்றும் தத்புருஷபஹுவ்ரீஹிரூப ஸமாஸத்வய ஸித்தமாகையாலே, அதில் தத்புருஷனில் அர்த்தத்தை முந்துற அருளிச்செய்கிறார் – ‘நாரங்களுக்கயநமென்றபடி’ என்று.
அவ: நாரங்களாகிறவை தாம் எவை? என்ன, அருளிச் செய்கிறார் – ‘நாரங்களாவன நித்யவஸ்துக்களினுடைய திரள்’- என்று.
மூ: 96. நாரங்களாவன நித்ய வஸ்துக்களினுடைய திரள்.
வ்யா: நாரபதம் “நர” என்றும், “நார” என்றும், “நாரா:” என்றுமாய் रिङ्-क्षये (ரிங்- க்ஷயே) என்கிற தாதுவிலே “ர” என்று பதமாய் க்ஷயிக்கும் வஸ்துவைச் சொல்லி நகாரம் அத்தை நிஷேதித்து “நர” என்று க்ஷயமில்லாத நித்ய வஸ்துவைக் காட்டி ஸமூஹார்த்தத்திலே ‘அண்’ ப்ரத்யயமும், ஆதிவ்ருத்தியுமாய் “நார” என்று நித்யவஸ்து ஸமூஹத்தைச் சொல்லி “நாரா:” என்று பஹுவசநமாகையாலே ஸமூஹ பாஹுள்யத்தைச் சொல்லுகையால், “நித்யவஸ்துக்களினுடையதிரள்” என்கிறார். இதில் “நித்ய” என்கையாலே நரஶப்தார்த்தமும், ‘வஸ்துக்கள்’ என்கையாலே நார ஶப்தார்த்தமும், அவற்றினுடைய ‘திரள்’ என்கையாலே பஹுவசநார்த்தமும் சொல்லப்பட்டதிறே.
அவ: ‘தாத்ருஶங்களானவை தாம் எவை?’ என்ன, அருளிச் செய்கிறார் – ‘அவையாவன’- என்று தொடங்கி.
மூ: 97. அவையாவன – ஜ்ஞாநாநந்தாமலத்வாதிகளும், ஜ்ஞாந ஶக்த்யாதிகளும், வாத்ஸல்ய ஸௌஶீல்யாதிகளும், திருமேனியும், காந்தி ஸெளகுமார்யாதிகளும், திவ்யபூஷணங்களும், திவ்யாயுதங்களும், பெரியபிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும், நித்யஸுரிகளும், சத்ரசாமராதிகளும், திருவாசல் காக்கும் முதலிகளும், கணாதிபரும், முக்தரும், பரமாகாஶமும், ப்ரக்ருதியும், பத்தாத்மாக்களும், காலமும், மஹதாதி விகாரங்களும், அண்டங்களும், அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்.
வ்யா: – (ஜ்ஞாநாநந்தாமலத்வாதிகள்) ஆவன – ஸ்வரூப நிரூபக தர்மங்கள். ஆதிஶப்தத்தாலே அநந்தத்வத்தைச் சொல்லுகிறது. (ஜ்ஞாநாஶக்த்யாதிகள்) ஆவன – நிரூபித ஸ்வரூப விஶேஷணங்களான ஸமஸ்த கல்யாணகுணங்களுக்கும் ப்ரதாநமா யிருந்துள்ள ஜ்ஞாநஶக்தி பல ஐஶ்வர்யவீர்யதேஜஸ்ஸுக்களாகிற ஷட்குணங்கள். (வாத்ஸல்யஸௌஶீல்யாதிகள்) ஆவன – அந்த ஷட்குண்யாயத்தமான வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸ்வாமித்வ ஸௌலப்யாத்யஸங்க்யேய கல்யாண குணவிஶேஷங்கள். (திருமேனி) ஆவது- அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹம். ஏகவசநம் ஜாத்யபிப்ராயமாய், நித்யமான திவ்யவிக்ரஹத்தையும் ஐச்சிகமாகப் பரிக்ரஹிக்கும் விக்ரஹாந்தரங்களையும் சொல்லுகிறது; அல்லாதபோது ஒரே ஸமூஹமாக எண்ணிவருகிற ப்ரகரணத்துக்குச் சேராது. இதுதான் நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர், ஆச்சான்பிள்ளை இவர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களிலே ஸுஸ்பஷ்டம். (காந்தி ஸெளகுமார்யாதிகள்) ஆவன – அந்த விக்ரஹகுணங்களான ஸௌந்தர்ய ஸெளகுமார்ய ஸௌகந்த்ய யெளவநாதிகள். (திவ்ய பூஷணங்கள்) ஆவன – ஆபரணசூர்ணையிலே பாஷ்யகாரர் அருளிச் செய்தபடியே கிரீடாதி நூபுராந்தமாக அத்திருமேனிக்குச் சாத்தும் அஸங்க்யேயமான திருவாபரணங்கள். (திவ்யாயுதங்கள்) ஆவன – அழகுக்கும் ஆஶ்ரிதவிரோதிநிரஸநத்துக்கும் உடலாயிருந்துள்ள ஶங்கசக்ரகதா- அஸி ஶார்ங்காதி- அஸங்க்யேய ஆயுத விஶேஷங்கள். (பெரியபிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்) ஆவார்-
श्री वल्लभ एवंभूत भूमि नीळा नायक
(ஸ்ரீவல்லப ஏவம் பூத பூமிநீளாநாயக),
देवि त्वामनु नीळया सह मही देव्यस्सहस्रं तथा
(தேவி த்வாமநு நீளயா ஸஹ மஹீ தேவ்யஸ்ஸஹஸ்ரம் ததா)
என்கிறபடியே ப்ரதாநமஹிஷியான பெரியபிராட்டியார் முதலாகத் தத்ஸமாநைகளான பூமிநீளைகளும், மற்றும் அநேகராகச் சொல்லப்படுகிறவர்களும். “லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீவர்க்கங்களும்” என்றிறே ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தது. (நித்யஸூரிகள்) ஆவார் – அநந்த கருட விஷ்வக்ஶேநாதிகளாயிருந்துள்ள அஸங்க்யேயரானஸுரிஜநங்கள். (சத்ரசாமராதிகள்) ஆவன – கைங்கர்ய உபகரணங்களான சத்ர சாமர தாலவ்ருந்த ப்ருங்காரபதத்க்ரஹாதிகள். (திருவாசல் காக்கும் முதலிகள்) ஆவார் – சண்ட ப்ரசண்ட பத்ர ஸுபத்ர ஜய விஜயாதிகள். (கணாதிபர்) ஆவார் – குமுதகுமுதாக்ஷ புண்டரீகவாமந ஶங்குகர்ண ஸர்வநேத்ர ஸுமுகஸுப்ரதிஷ்டிதாதிகள். (முக்தர்) ஆவார் – “கரைகண்டோர்” என்கிறபடியே ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்பட்டு நித்யஸூரிகளோடு ஸமாநாகாரராய், நிகிலகைங்கர்ய நிரதராயிருக்கும் அஸங்க்யேயரான சேதநர். (பரமாகாஶம்) ஆவது – பஞ்சோபநிஷந்மயமான பரமபதம். இதுதான் பஞ்சோபநிஷத்மயமாகையாலே ஸமூஹாத்மகமாயிறே இருப்பது. ஆகையால் ஸமூஹகணனைக்கு விரோதமில்லை. “பஞ்சோபநிஷந்மயமாகையாலே பரமபதமும் ஸமூஹாத்மகமாயிருக்கும்” என்றிறே ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தது.
ஆக, ‘ஜ்ஞாநாநந்தாமலத்வாதிகளும்’ என்று தொடங்கி இவ்வளவும் ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் நிரூபித ஸ்வரூப விஶேஷணங்களான கல்யாண குணங்களையும், அக்குணங்களுக்கு ப்ரகாஶகமான திவ்யமங்கள விக்ரஹத்தையும், விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளையும், அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின திவ்யாபரணங்களையும், அவ்வாபரணங்களோடு விகல்பிக்கலாம்படியான திவ்யாயுதங்களையும், இவையித்தனையும் காட்டிலெரித்த நிலவாகாதபடி அருகேயிருந்து அநுபவிக்கிற நாச்சிமாரையும், அச்சேர்த்தியிலே அடிமை செய்கிற நித்யஸூரிகளையும், அவர்களுக்குக் கைங்கர்யோபகரணங்களான சத்ரசாமராதிகளையும், “இச்சேர்த்திக்கு என்வருகிறதோ” என்று வயிறெரிந்து நோக்கும் திருவாசற்காக்கும் முதலிகளையும். அப்படி மங்களாஶாஸநபரராய், திருப்படைவீட்டுக்கடையக் காவலாயிருக்கும் கணாதிபரையும், நிவ்ருத்த ஸம்ஸாரராய் அவர்களோடு ஒரு கோர்வையாய் அடிமை செய்கிற முக்தரையும், அவ்வடிமைக்கு வர்த்தகமான பரமபதத்தையும் அருளிச்செய்தாராயிற்று.
லீலாவிபூதியிலுள்ளவற்றை அருளிச்செய்கிறார் மேல். (ப்ரக்ருதி) ஆவது – குணத்ரயாத்மகதயா ஸமூஹாத்மிகையாயிருக்கும் மூலப்ரக்ருதி. “குணத்ரயாத்மிகையாகையாலே மூலப்ரக்ருதியும் ஸமூஹாத்மிகையாயிருக்கும்” என்றிறே இதற்கும் ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தது. (பத்தாத்மாக்கள்) ஆவார்- உரைமெழுகிற்பொன்போலே, இப்ரக்ருதிக்குள்ளே உரு மாய்ந்து கிடக்கிற ஆத்மாக்கள். (காலம்) ஆவது – அஹோராத்ராதிவிபாகயுக்ததயா ஸமூஹாத்மகமாயிருக்கும் அசித் விஶேஷம். “அஹோராத்ராதிவிபாகங்கள் அநேகமாகையாலே, காலமும் ஸமூஹாத்மகமாயிருக்கும்” என்றிறே இதுக்கும் ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தது.
ஆக இவ்வளவும் ஸ்வரூபேண நித்யங்களான வஸ்துக்களைச் சொல்லிற்று.
மேல் ப்ரவாஹரூபேண நித்யங்களைச் சொல்லுகிறது. ஸ்வரூபேண நித்யத்வமாவது – ஸத்தான பதார்த்தத்தினுடைய உத்பத்தி விநாஶாத்யந்தாபாவம். ப்ரவாஹரூபேண நித்யத்வமாவது – உத்பத்தி விநாஶயோகியாகா நிற்கச் செய்தேயும் பூர்வகாலத்திலுண்டான நாமரூபலிங்காதிகளுடைய அநந்யதாபாவம்.
இதில் (மஹதாதி விகாரங்கள்) ஆவன – மஹத்தத்வந் தொடங்கி ப்ருதிவியளவாக உண்டான இருபத்துமூன்று தத்வமும். (அண்டங்கள்) ஆவன – இம்மஹதாதிகளாலே ஆரப்தங்களாய், अण्डानां तु सहस्राणां सहस्राण्ययुतानि च (அண்டாநாந்து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநி ச) என்கிறபடியே அஸங்க்யேயமாயிருக்கிற அண்டவிஶேஷங்கள். (அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்கள்) ஆவன – அண்டாந்தர்வர்த்திகளான தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள். ஆக, நாரபதார்த்தம் அருளிச்செய்தாராயிற்று.
அவ: மேல் அயநபதார்த்தத்தை அருளிச்செய்கிறார் – அயநமென்றது இவற்றுக்கு ஆஶ்ரயமென்றபடி – என்று.
- அயநம் என்றது- இவற்றுக்கு ஆஶ்ரயமென்றபடி.
வ்யா: அதாவது- அயநஶப்தம் ஆஶ்ரயவாஶியாகையாலே இவற்றுக்கு அயந மென்றது இவற்றுக்கு ஆஶ்ரயமென்றபடி – என்கை.
அவ: பஹுவ்ரீஹி ஸமாஸார்த்தத்தை அருளிச்செய்கிறார் – ‘அங்ஙனன்றிக்கே, இவை தன்னை ஆஶ்ரயமாகவுடையனென்னவுமாம்’ என்று.
மூ: 99. அங்ஙனன்றிக்கே, இவை தன்னை ஆஶ்ரயமாகவுடையனென்னவுமாம்.
வ்யா: அதாவது – இவற்றுக்கு ஆஶ்ரயமென்று தத்புருஷனாகச் சொல்லுகையன்றிக்கே, ‘இவை தன்னை ஆஶ்ரயமாகவுடையன்’, என்று பஹுவ்ரீஹியாகச் சொல்லவுமாம் – என்கை.
அதாவது – “இவற்றுக்கு ஆஶ்ரயம்” என்கிறவிடத்தில் குணங்களையும் சொல்லிற்றேயாகிலும், ‘இவைதன்னை ஆஶ்ரயமாகவுடையன்’ என்கிற இடத்தில், குணங்களையொழியச் சொல்ல வேணும்: அக்குணங்களுக்கு வ்யாப்யத்வம் சொல்லுமளவில், ஆத்மாஶ்ரயமும் அநவஸ்தையுமாகிற தோஷங்கள் வருமாகையாலே “தன் குணங்களிலே ஈஶ்வரன் வ்யாபிக்கும்போது குண விஶிஷ்டனாயே வ்யாபிக்க வேணும், நிர்க்குணமாய் வஸ்து இராமையாலே; அப்போது, வ்யாப்ய குணங்களே வ்யாபக குணங்களாய் வ்யாபககுணங்களே வ்யாப்ய குணங்களாயறுகையாலே, ஆத்மாஶ்ரய தோஷமுண்டாம்; அதுக்கு மேலே, தன் குணங்களிலே குணி வ்யாபிக்கவென்று புக்கால், ததாஶ்ரயமான குணங்களையும் குணி வ்யாபிக்கவேணும்: அந்த வ்யாபகனுடைய குணங்களையும் குணி வ்யாபிக்க வேணும். ஆகையாலே, அநவஸ்தாதுஸ்தமாம்”, என்று இது தன்னை ஸுஸ்பஷ்டமாக ஆச்சான்பிள்ளை அருளிச் செய்தாரிறே.
அவ: இவ்வுபய ஸமாஸத்தாலும் பலிதாம்ஶத்தை அருளிச் செய்கிறார் ‘இவையிரண்டாலும்’ என்று தொடங்கி.
மூ: 100. இவையிரண்டாலும் பலித்தது பரத்வஸௌலப்யங்கள்.
வ்யா: அதாவது- நாரங்களுக்கு அயநம்; ‘ நாரங்களை அயநமாகவுடையவன்’ என்கிற இவை இரண்டாலும் பலித்த அர்த்தம் – தன்னையொழிந்த ஸமஸ்த வஸ்துக்களுக்கும், தான் ஆதாரமாயிருக்கையாகிற பரத்வமும்; இப்படிப் பெரியனான தான் ஸகல சேதநாசேதநங்களிலும் தன்னையமைத்துக் கொண்டு புக்கிருக்கையாகிற ஸௌலப்யமும் – என்கை.
அவ: இன்னமும் ஒரு ப்ரகாரத்தாலே இந்த ஸமாஸத்வய பலிதங்களை அருளிச் செய்கிறார். ‘அந்தர்யாமித்வமும், உபாயத்வமும், உபேயத்வமுமாகவுமாம்’ என்று.
மூ: 101. அந்தர்யாமித்வமும், உபாயத்வமும், உபேயத்வமுமாகவுமாம்.
வ்யா: அதாவது- பஹுவ்ரீஹியும் தத்புருஷனுமாகிற உபயஸமாஸத்தாலும் பலித்தது – அந்தர்யாமி ப்ராஹ்மணாதிகளிற் சொல்லுகிறபடியே, அகில சேதநாசேதநங்களிலும் அந்தராத்மதயா அவஸ்திதனாய்க் கொண்டு நியந்தாவாயிருக்கையாகிற அந்தர்யாமித்வமும், इण् -गतौ (இண்கதெள) என்கிற தாதுவிலேயாதல், अय -गतौ (அயகதௌ) என்கிற தாதுவிலேயாதல் ஸித்தமான அயநபதத்தில் கரணேவ்யுத்பத்தியாலும் கர்மணிவ்யுத்பத்தியாலும் ப்ரகாஶிதமான உபாயத்வமும் உபேயத்வமுமாகவுமாம் – என்கை. பஹுவ்ரீஹி யோஜநை சொல்லுகிறவிடத்திலே யோக்யாதாநுகுணமாக நாரஶப்தத்தை குணங்களையொழிந்த வஸ்துக்களுக்கு வாசகமாகக் கொண்டாப்போலே தத்புருஷ யோஜநையிலும் அயநஶப்தத்தை உபாயோபேயவாசியாகக் கொள்ளுமளவில் யோக்யதாநுகுணமாக நார ஶப்தத்தை அசேதநங்களை ஒழிந்த சேதந வஸ்துக்களுக்கு வாசகமாகக் கொள்ளக் கடவது.
नारस्त्विति सर्वपुंसां समूह: परिकथ्यते |
गतिरालम्बनं तस्य तेन नारायण: स्मृत:||
(நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகத்யதே|
கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயணஸ் ஸ்ம்ருத:||)
என்றும்,
नार शब्देन जीवानां समूह: प्रोच्यते बुधै:|
तेषामयन भूतत्वान्नारायण इहोच्यते ||
(நாரஶப்தேந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புதை:|
தேஷாமயந பூதத்வாந் நாராயண இஹோச்யதே||)
என்றும் இத்யாதிகளிலே இவ்வர்த்தம் சொல்லப்படா நின்றதிறே.
அவ: கர்மணிவ்யுத்பத்தி ஸித்தமான ப்ராப்யத்வத்துக்கு ஸங்கோசமில்லாமையாலே ஸர்வ ப்ரகார விஶிஷ்டமாயிருக்கையாலும், பந்து லாபமும் ப்ராப்யமாயிருக்கையாலும், ஈஶ்வரனுடைய ஸர்வவித பந்துத்வமும் இப்பதத்திலே சொல்லும்படியை அருளிச் செய்கிறார் ‘எம்பிரான்’ – என்று தொடங்கி.
மூ: 102. “எம்பிரானெந்தை” என்கையாலே, ஈஶ்வரனே எல்லாவுறவுமுறையுமென்று சொல்லும்.
வ்யா: அதாவது நாராயணஶப்தார்த்தத்தை அநுஸந்திக்கிற திருமங்கையாழ்வார், “எம்பிரானெந்தையென்னுடைச் சுற்றமெனக்கரசு என்னுடைவாணாள்” என்கையாலே, ஈஶ்வரனே இவ்வாத்மாக்களுக்கு ஸர்வவிதபந்துவுமென்று இப்பதத்திலே சொல்லும் – என்கை.
அவ: ‘இப்படி பந்து பூதனாய்க் கொண்டு, இத்தலைக்கு அவன் செய்யுமது எது?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘நாம் பிறர்க்கானவன்றும், அவன் நமக்காயிருக்கும்’ என்று.
மூ: 103. நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காயிருக்கும்.
வ்யா: அதாவது, நாம் தன்னோடு ஒட்டற்றுப் பிறர்க்கு நல்லராயிருந்த காலத்திலும், அவன் நமக்கு நல்லனாயிருக்கும்- என்கை.
அவ: இப்படி நாம் அந்யபரரான அன்றும் நமக்கேயாயிருந்து அவன் செய்து போருமது தான் எது? என்ன, அருளிச் செய்கிறார் ‘இராமடம்’ – என்று தொடங்கி.
மூ: 104. இரா மடம் ஊட்டுவாரைப்போலே உள்ளே பதி கிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்.
வ்யா: அதாவது, நேர்கொடுநேர் தங்கள் பக்கல் வந்து அபேக்ஷிதங்களை வாங்கி ஜீவியாதே துர்மாநத்தாலே பட்டினியே திரியுமவர்களையும் விடமாட்டாமையாலே அசலறியாதபடி ராத்ரி மடத்திலே புஜிப்பிப்பாரைப்போலே தன் பக்கல் தலைசாயோம் என்று இச்சேதநர் ஸ்வாதந்த்ர்யமடித்துத் திரியா நிற்க. இவர்கள் கண்காணாதபடி அந்தராத்மாவாய்க்கொண்டு உள்ளே மறைந்திருந்து இவர்கள்ஸத்தையே தொடங்கி ரக்ஷித்துக்கொண்டு போரும் – என்கை.
ஆக, இந்நாராயண பதத்தாலே கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான ஈஶ்வரன் படியை அருளிச்செய்தாராயிற்று.
அவ: இனி, இதில் விபக்த்யம்ஶத்தாலே கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறபடியை அருளிச்செய்கிறார் ‘ஆய என்கிற இத்தால்’ என்று தொடங்கி.
மூ: 105. ‘ஆய’ என்கிற இத்தால் ‘சென்றாற்குடையாம்’ என்கிறபடியே எல்லா அடிமைகளும் செய்யவேணுமென்று அபேக்ஷிக்கிறது.
வ்யா: அதாவது- ‘ஆய’ என்கிற இந்தச் சதுர்த்தியாலே “சென்றாற் குடையாம்” என்கிற பாட்டிற் சொல்லுகிறபடியே திருவநந்தாழ்வானைப்போலே ஸர்வவித கைங்கர்யங்களும் செய்யவேணுமென்று அபேக்ஷிக்கிறது – என்கை.
அவ: ‘நமஸ்ஸாலே தனக்கென்ன ஒன்றை விரும்புகைக்கு ப்ராப்தியில்லாத அத்யந்த பாரதந்த்ர்யம் சொல்லியிருக்க, இக்கைங்கர்யத்தைத் தான் விரும்பி அபேக்ஷிக்கை ஸம்பவியாது’ என்று இருக்குமவர்கள் பண்ணும் ப்ரஶ்நத்தை அநுவதிக்கிறார். ‘நமஸ்ஸாலே தன்னோடு உறவில்லையென்று வைத்துக் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கக் கூடுமோவென்னில்’- என்று.
மூ: 106. ‘நமஸ்ஸாலே தன்னோடு உறவில்லையென்று வைத்துக் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கக் கூடுமோ?’ என்னில்;
அவ: அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார் – படியாய்க் கிடந்து – என்று தொடங்கி.
மூ: 107. ”படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்கிறபடியே கைங்கர்ய ப்ரார்த்தனை வந்தேறி அன்று; ஸ்வரூப ப்ரயுக்தம்.
வ்யா: – அதாவது “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே”, என்று அத்யந்த பாரதந்த்ர்யத்தோடே கைங்கர்ய ப்ரார்த்தனையையும் சொல்லுகிறபடியே கைங்கர்ய ப்ராத்தனை- ஸ்வபோக்த்ருத்வரூப அஹங்கார ப்ரயுக்தமாய்க் கொண்டு வந்தேறியானது அன்று. ஶேஷிக்கு அதிஶயத்தை விளைத்தல்லது தான் தரியாதபடியான தன் ஸ்வரூபத்தைப் பற்றி வந்தது – என்கை.
அவ: உக்தத்தை ஹேதுவாகக்கொண்டு, சதுர்த்தியின் கைங்கர்ய ப்ரார்த்தநா ப்ரகாஶகத்வத்தை அருளிச் செய்கிறார் ‘ஆகையால்’ என்று தொடங்கி.
மூ: 108. ஆகையால் “வழுவிலா அடிமை செய்யவேண்டு நாம்” என்கிற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது.
வ்யா: அதாவது- கைங்கர்ய ப்ரார்த்தனை வந்தேறி அன்றிக்கே, ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே, “வழுவிலா அடிமை செய்யவேண்டு நாம்” என்று, ‘அடிமையில் ஒன்றும் நழுவாதபடி ஸகலகைங்கர்யங்களும் செய்யவேண்டும் நாம்’, என்கிற ப்ரார்த்தனையை, இச்சதுர்த்தி ப்ரகாஶிப்பிக்கிறது – என்கை.
அவ: இனி, இந்தக் கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல் நடக்கைக்கு உறுப்பான ப்ராப்யருசியுடையார்படியை அருளிச்செய்கிறார் ‘கண்ணாரக்கண்டு’ என்று தொடங்கி.
மூ: 109. “கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதல்” என்கிறபடியே, காண்பதற்கு முன்பு உறக்கமில்லை, கண்டால் “ஸதா பஶ்யந்தி” ஆகையாலே உறக்கமில்லை.
வ்யா: அதாவது, “இமையோர்கள் குழாம், தொழுவதுஞ்சூழ்வதுஞ்செய் தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதல்”, என்று ‘நித்யஸுரிகளுடைய திரளானது நிரந்தரம் அநுபவம் பண்ணுகிற ஸர்வேஶ்வரனைக் கண்கள் நிறையும்படி கண்டொழியக் கழியாதபடியான காதலிலே நிலை நின்றவர்களுக்கும் கண்கள் உறங்குதலுண்டோ?’, என்னுமாபோலே, விஷயத்தைக் காண்பதற்குமுன்பு ஜ்ஞாநஸங்கோசரூபமான உறக்கமில்லை; கண்டகாலத்தில் सदा पश्यन्ति (ஸதா பஶ்யந்தி) என்கிறபடியே ஸதா அநுபவம் பண்ணுகையாலே உறக்கமில்லை – என்கை.
அவ: இன்னும் ஒரு ஹேதுவினாலே இவனுக்கு உறக்கமில்லாமையை அருளிச்செய்கிறார் ‘பழுதே’ – என்று தொடங்கி.
மூ: 110. ”பழுதே பல பகலும் போயின” என்று இழந்த நாளுக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை.
வ்யா: அதாவது, “செங்கண் அடலோதவண்ணரடி அரவணை மேற்கண்டு தொழுதேன், பல பகலும் பழுதே போயினவென்று அஞ்சி அழுதேன்”, என்று- ‘விஷயத்தைக் கண்டு அநுபவித்தவாறே, இப்படி அநுபவிக்கைக்கு உடலான அநேககாலமெல்லாம் வ்யர்த்தமே போய்விட்டதே!’ என்று இழந்த நாளை நினைத்து க்லேஶித்துக் கூப்பிடுகிறவனுக்கு மேலுள்ள நாளில் உறக்கம் வர வழியில்லை- என்கை.
அவ: இன்னும் இவ்விஷயத்தில் அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தை இசைவிக்கிறார் ‘அன்று நான்’ என்று தொடங்கி.
மூ: 111. “அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்னா நின்றார்களிறே.
வ்யா: அதாவது அவன் என்னை பெறுகைக்காகத் திருப்பதிகளிலே நிற்பது, இருப்பது, கிடப்பதாக நிற்க. அக்காலத்தில் நான் ஜ்ஞாந லாப ரூபமான ஜந்மத்தையுடையனாகப் பெற்றிலேன். அந்த ஜன்மமுண்டான பின்பு, அவனை ஒரு காலும் மறந்திலேன் என்று சொல்லா நின்றார்களிறே என்கை. ஆக ப்ராப்ய வைலக்ஷண்ய ஜ்ஞாநம் பிறந்தார்படி இதுவாகையாலே, இந்தக் கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல் நடக்கும் என்று கருத்து.
அவ: இனி, இந்தக் கைங்கர்யத்துக்கு தேஶகாலாதி நியமமில்லாமையை அருளிச் செய்கிறார் – இவ்வடிமைதான் – என்று தொடங்கி.
மூ: 112. இவ்வடிமைதான் “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி” என்கிறபடியே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் அநுவர்த்திக்கும்.
வ்யா: அதாவது- இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபாநுரூபபுருஷார்த்தமான இந்த கைங்கர்யந்தான், “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி” என்று – “ஒழிவில்லாத காலமெல்லாம் ஸர்வதேஶத்திலும் உடனாய் ஸர்வாவஸ்தையிலும் பிரியாது நின்று’ என்கிறபடியே, ஸர்வதேஶத்திலும், ஸர்வகாலத்திலும், ஸர்வாவஸ்தையிலும் நடந்து செல்லும்- என்கை.
அவ: பார்யைக்கு மங்களஸூத்ரதாரணம் பர்த்தாவுக்கு அநந்யார்ஹையென்று காட்டுமாபோலே திருமந்த்ரதாரணம் சேதநர்க்கு பகவதநந்யார்ஹத்வ ப்ரகாஶகம் என்னுமிடந்தோற்ற இத்தையொரு மங்களஸூத்ரமாக நிரூபித்தருளிச்செய்கிறார் – ‘எட்டிழையாய்’ என்று தொடங்கி.
மூ: 113. எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்களஸூத்ரம் போலே திருமந்திரம்.
வ்யா: அதாவது- பதினாறிழையாய் இரண்டு சரடாயிருக்கும் லௌகிகமான மங்களஸூத்ரம் போலன்றிக்கே, எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்களஸூத்ரம் போலே, எட்டுத் திருவக்ஷரமாய் மூன்றுபதமாயிருக்கிறது இத்திருமந்திரம் – என்கை.
அவ: ‘இப்படி நிரூபித்துச் சொன்ன இத்தால் எவ்வர்த்தம் சொல்லுகிறது?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.
மூ: 114. இத்தால், ஈஶ்வரன் ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று ரக்ஷிக்கும் என்கிறது.
வ்யா: அதாவது- இத்தை மங்களஸூத்ரமாகச் சொன்ன இத்தால், ஈஶ்வரன் இத்தோடு அந்வயமுடைய ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று கொண்டு ரக்ஷிக்கும் – என்று சொல்லுகிறது – என்கை.
அவ: இனி, இம்மந்த்ரத்தால் ப்ரதிபாதித்த அர்த்தத்தை ஸங்க்ரஹித்துச் சொல்லி இத்தை நிகமித்தருளுகிறார் ‘ஆக திருமந்த்ரத்தால்’ என்று தொடங்கி.
மூ: 115. ஆக, திருமந்திரத்தால் “எம்பெருமானுக்கே உரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே ஒழிய வேணும்; ஸர்வஶேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்” என்றதாயிற்று.
வ்யா: “ஆக” என்றது, கீழ்பரக்க அருளிச்செய்த எல்லாவற்றையும் தொகுத்து அருளிச்செய்கிறார் என்னுமிடந்தோற்ற. (எம்பெருமானுக்கே உரியேனான நான்) இதில் “எம்பெருமானுக்கு” என்று சதுர்த்யந்தமான ப்ரதமாக்ஷரத்தில் அர்த்தத்தையும், அவதாரணத்தாலே மத்யமாக்ஷரத்தில் அர்த்தத்தையும் ‘உரியேனான நான்’ என்று த்ருதீயாக்ஷரத்தில் அர்த்தத்தையும் சொல்லுகையாலே. ப்ரதம பதார்த்தத்தை ஸங்க்ரஹித்தபடி. (எனக்கு உரியனன்றிக்கே ஒழிய வேணும்) இதில் ‘எனக்குரியன்’ என்று ஷஷ்ட்யந்தமான மகாரார்த்தத்தையும், ‘அன்றிக்கேயொழிய’ என்கையாலே நகாரார்த்தத்தையும், ‘வேணும்’ என்கையாலே இவ்வர்த்தம் சேதநனுக்கு ப்ரார்த்தநீயம் என்னுமத்தையும் ப்ரதிபாதிக்கையாலே மத்யம பதார்த்தத்தை ஸங்க்ரஹித்தபடி. (ஸர்வஶேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்) இதில் ‘ஸர்வஶேஷியான நாராயணனுக்கே’ என்று கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியையும் கைங்கர்ய ப்ரார்த்தநா ப்ரகாஶிகையான சதுர்த்தியையும், ‘எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்’ என்று கைங்கர்ய ப்ரார்த்தநா ப்ரகாரத்தையும் சொல்லுகையாலே த்ரிதீய பதார்த்தத்தை ஸங்க்ரஹித்தபடி. (என்றதாயிற்று) – என்றது- என்று சொல்லிற்றாயிற்று – என்கை. விஸ்தரேண அருளிச்செய்ததை மீளவும் இப்படி ஸங்க்ரஹித்தருளிச் செய்தது இத்திருமந்த்ரார்த்தத்தை எல்லாருமறிந்து அநுஸந்திக்கைக்காக. ஆகையாலே எல்லார்க்கும் இவ்வர்த்தம் எப்போதும் அநுஸந்தேயம்.
திருமந்த்ரப்ரகரணம் வியாக்யானம் முற்றிற்று.
பெரியஜீயர் திருவடிகளே ஶரணம்.