முமுக்ஷுப்படி
மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர்
வ்யா– விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள்
த்வய ப்ரகரணம்
வ்யாக்யாந அவதாரிகை
ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்த அநந்தரம், அதில் மத்யம பதத்தாலும் த்ருதீய பதத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட உபாயோபேயங்களை விஶதமாக ப்ரதிபாதியா நின்றுள்ள த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்கிறார்.
‘முன்பு அருளிச்செய்த மூன்று ப்ரபந்தங்களிலும் திருமந்த்ராநந்தரம் சரமஶ்லோகத்தை அருளிச்செய்து பின்பு த்வயத்தை அருளிச்செய்தவர், இப்போது த்வயத்தை முந்துற அருளிச்செய்வான் என்?’ என்னில் – இரண்டு ப்ரகாரமும் அருளிச் செய்யலாயிருக்கையாலே. ஆச்சான்பிள்ளை, சீயர் முதலானாரும் இந்த ப்ரகாரமிறே அருளிச்செய்தது.
‘இவ்விரண்டு ப்ரகாரந்தனக்கும் கருத்து என்?’-என்னில், சரமஶ்லோகம் முன்னாக த்வயத்தைச் சொல்லுகிறது – வித்யநுஷ்டாந ரூபங்களாயிருக்கையாலே விதி முன்னாக அநுஷ்டாநத்தைச் சொல்லுகை ப்ராப்தமாயிருக்கையாலும், திருமந்த்ரம் ப்ராப்யபரமாய் சரமஶ்லோகம் ப்ராபகபரமாய் த்வயம் உபயத்தினுடையவும் அநுஷ்டாந ப்ரதிபாதகமாயிருக்கையாலும், த்வயம் முன்னாகச் சரமஶ்லோகத்தைச் சொல்லுகிறது- திருமந்த்ரத்தில் மத்யம த்ருதீயபதங்களுக்கு வாக்யத்வயம் விவரணமாய். அது தனக்குச் சரமஶ்லோகத்தில் அர்த்த த்வயம் விவரணமாயிருக்குமாகாரத்தாலே, ஆனபின்பு, இரண்டு ப்ரகாரமும்அநுஸந்திக்கத் தட்டில்லை. அதில் ஒரு ப்ரகாரத்தை மூன்று ப்ரபந்தத்திலும் அருளிச்செய்தவராகையாலே, மற்றை ப்ரகாரத்தையும் அருளிச் செய்யவேணுமென்று திருவுள்ளம்பற்றி, திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்த அநந்தரம் த்வயார்த்தத்தை அருளிச் செய்கிறார்.
அவதாரிகை முற்றிற்று.
அவ: அதில் ப்ரதமத்திலே, வைஷ்ணவனாயிருப்பான் ஒருவனுக்கு ஸ்வாதிகாரார்த்தமாக அவஶ்யாபேக்ஷிதமாய் உள்ளவற்றை, ஸுக்ரஹமாக அருளிச் செய்கிறார்- ‘புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விடுகையும்’ என்று தொடங்கி ஒரு சூர்ணையாலே.
மூ:116. புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விடுகையும், எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையும், பேறுதப்பாதென்று துணிந்திருக்கையும், பேற்றுக்கு த்வரிக்கையும், இருக்கும் நாள் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணாநுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகையும், இப்படி இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏற்றமறிந்து உகந்திருக்கையும், திருமந்திரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும், ஆசார்ய ப்ரேமம் கனத்திருக்கையும், ஆசார்யன் பக்கலிலும் எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய்ப் போருகையும், ஜ்ஞாநமும் விரக்தியும் ஶாந்தியும் உடையனாயிருக்கும் பரம ஸாத்விகனோடே ஸஹவாஸம் பண்ணுகையும் வைஷ்ணவாதிகாரிக்கு அவஶ்யாபேக்ஷிதம்.
வ்யா: புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விடுகையாவது – पितरं मातरं दारान् (பிதரம் மாதரம் தாராந்) இத்யாதிப்படியே, பாஹ்யவிஷய ஸங்கங்களையடைய மறுவலிடாதபடி ஸவாஸநமாகவிடுகை. எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையாவது- வேறொன்று தஞ்சமென்கிற நினைவு கலசாதபடி, நிருபாதிக ரக்ஷகனான ஸர்வேஶ்வரனையே தஞ்சமாக ஸ்வீகரிக்கை. இவ்விரண்டு வாக்யத்தாலும், சரமஶ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அர்த்தத்தைச் சொல்லுகிறதாகவுமாம்.
எங்ஙனேயென்னில்? ‘புறம்புண்டான பற்றுக்களையடைய’ என்று- ‘ஸர்வதர்மாந்’என்கிற பதத்தில் அர்த்தத்தையும், ‘வாஸனையோடேவிடுகையும்’ என்று‘பரித்யஜ்ய’என்கிற பதத்தில் அர்த்தத்தையும், ‘எம்பெருமானை’ என்று- ‘மாம்’என்கிற பதத்தில் அர்த்தத்தையும், ‘ஏ’ என்று ஏவகாரத்தாலே- ஏகபதத்தில் அர்த்தத்தையும், ‘தஞ்சம்’ என்கையாலே-‘ஶரண’பதத்தில் அர்த்தத்தையும், ‘பற்றுகையும்’ என்று- ‘வ்ரஜ’பதத்தில் அர்த்தத்தையும் அடைவே சொல்லுகையாலே.
பேறுதப்பாதென்று துணிந்திருக்கையாவது – உபாயபல்குத்வமும், உத்தேஶ்ய துர்லபத்வமும், ஸ்வக்ருத தோஷபூயஸ்த்வமும் அடியாக வரும் ஶங்காத்ரயமுமின்றிக்கே பலம் தப்பாமல் ஸித்திக்குமென்று விஶ்வஸித்திருக்கை. பேற்றுக்கு த்வரிக்கையாவது, – இப்படி விஶ்வஸித்து “பேறு ஸித்தித்தபோது காண்கிறோம்” என்று இருக்கையன்றிக்கே, “மாகவைகுந்தங் காண்பதற்கென் மனமேகமெண்ணும்”, “தாவி வையங்கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்கொள்ளுங்காலமின்னங் குறுகாதோ” என்கிறபடியே, க்ரமப்ராப்தி பற்றாமற் பதறுகை.
ஆக இவை இரண்டாலும் உபாயோபேயாதிகாராபேக்ஷிதங்களான மஹா விஶ்வாஸத்தையும், ப்ராப்யத்வரையையும் சொல்லுகிறது.
இருக்கும் நாள் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணாநுபவ கைங்கர்யங்களே பொழுது போக்கையாவது – பரமபதத்திலேபோய் பகவதநுபவ கைங்கர்யங்களைப் பண்ணுகையாகிற பேற்றில் த்வரை நடவா நிற்கச்செய்தேயும், இஶ்ஶரீரத்தோடே இருக்கும் நாள் “தானுகந்தவூர்” என்கிறபடியே ஸர்வேச்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்யதேஶங்களிலே “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை” என்று மண்டுகையாகிற ப்ராவண்யத்தையுடையனாய், அவ்வோ திவ்யதேஶங்களிலே நிற்கிறவனுடைய கல்யாணகுணாநுபவமும், அதடியாகக் கரணத்ரயத்தாலும் அவன் விஷயத்திற் பண்ணும் கைங்கர்யமுமே காலக்ஷேபவிஷயமாம்படியிருக்கை.
இப்படியிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களேற்றம் அறிந்து உகந்திருக் கையாவது – கீழ்ச்சொன்ன இவ்வாகாரங்களெல்லாம் உடையராயிருக்கும் வைஷ்ணவர்களைக்கண்டால், இந்தளத்திலே தாமரை பூத்தாற்போலே இந்த விபூதியிலே இங்ஙனேயும் சிலருண்டாவதேயென்று அவர்கள் வைபவத்தை அறிந்து, அவர்களளவில் ப்ரீதியுக்தனாயிருக்கை. கீழ்ச்சொன்னவையெல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாயிருப்பதொன்றிறே இது.
திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதனாகையாவது-மந்த்ராந்தரங்களினுடைய அருகும் மறந்தும் போகாதே, த்யாஜ்ய உபாதேயங்களைத் தெளிய அறிவிக்கும் திருமந்திரத்திலும் அதின் அர்த்தத்துக்கு விவரணமான த்வயத்திலும் நிஷ்டனாயிருக்கை.
ஆசார்யப்ரேமம் கனத்திருக்கையாவது – கீழ்ச்சொன்ன ஆகாரத்தையெல்லாம் உபதேஶத்தாலே தனக்கு உண்டாக்கின ஆசார்ய விஷயத்தில் यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ (யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரெள) என்கிறபடியே ப்ரேமம் அதிஶயித்திருக்கை.
ஆசார்யன் பக்கலிலும், எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய்ப் போருகையாவது,- நித்யஸம்ஸாரியான தன்னை நித்யஸூரிகள் பேற்றுக்கு அர்ஹனாம்படி இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே திருத்தின ஆசார்யன் பக்கலிலும், அத்வேஷாதிகளை விளைத்துக்கொண்டு வந்து ஆசார்ய விஷயத்தோடே சேர்த்த எம்பெருமான் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி உடையனாய்ப் போருகை. ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியுமுடையனாயிருக்கும் பரமஸாத்விகனோடே ஸஹவாஸம் பண்ணுகையாவது – தான் கலங்கினாலும் கலங்காமல் நோக்குகைக்கு உறுப்பாகவும், கீழ்ச்சொன்ன ஆகாரங்கள் தனக்கு வர்த்திக்கைக்கு உறுப்பாகவும் தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநமும் அப்ராப்தவிஷய விரக்தியும், இவைதானிரண்டும் நமக்குண்டென்று இறுமாப்பற்றிருக்கையாகிற ஶாந்தியும் உடையனாயிருக்கும் பரமஸத்வ நிஷ்டனாயிருப்பானொரு பாகவதனோடேகூட வஸித்துப் போருகை. ‘வைஷ்ணவாதிகாரிக்கு அஶ்யாபேக்ஷிதம்’ என்றது – இவையித்தனையும் வைஷ்ணவனென்றிருப்பானொரு அதிகாரிக்கு அவஶ்யம் உண்டாகவேணும் – என்கை.
அவ: இப்படியிருக்கும் இவனுக்கு அநுஸந்தாந விஷயம் வகுத்து அருளிச் செய்கிறார் மேல் – ‘இந்த’ என்று தொடங்கி.
மூ:117. இந்த அதிகாரிக்கு ரஹஸ்யத்ரயமும் அநுஸந்தேயம்.
வ்யா: அதாவது கீழ்ச்சொன்ன ஆகாரங்களையுடையனாயிருக்கும் இவ்வதிகாரிக்கு, அந்த ஜ்ஞாநாநுஷ்டாநங்களுக்கு வர்த்தகமான ரஹஸ்யத்ரயமும் அநுஸந்தாந விஷயமாக வேணும்- என்கை.
அவ: இனி த்வயத்திற் சொல்லுகிற அர்த்தத்தின் வீறுடைமையை அறிவிக்கைக்காக, ஶாஸ்த்ரம், திருமந்திரம், சரமஶ்லோகம் இவற்றிற் சொல்லுகிற ப்ராகாரங்களை அருளிச்செய்து கொண்டு சென்று, பின்னை அது தன்னை அருளிச் செய்கிறார் ‘எல்லா ப்ரமாணங்களிலும்’ என்று தொடங்கி.
மூ:118. எல்லா ப்ரமாணங்களிலும் தேஹத்தாலே பேறென்கிறது; திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறென்கிறது; சரமஶ்லோகத்தில் ஈஶ்வரனாலே பேறென்கிறது; த்வயத்தில் பெரியபிராட்டியாராலே பேறென்கிறது.
வ்யா: அதாவது, சேதநனுடைய விஶிஷ்ட வேஷத்திலே நோக்கான ஸகல ஶாஸ்த்ரங்களிலும், ஸாதநாநுஷ்டாந போக்யமான தேஹத்தாலே இவனுக்குப் புருஷார்த்த லாபம் என்கிறது. நிஷ்க்ருஷ்ட வேஷத்திலே நோக்கான திருமந்திரத்தில், இவன் ஸ்வரக்ஷணத்தில் நின்றும் கைவாங்கினாலொழிய ஈஶ்வரனுடைய ரக்ஷகத்வம் ஜீவியாமையாலே, தத்ப்ரவ்ருத்தி விரோதியான ஸ்வப்ரவ்ருத்தியை விட்டிருக்கும் ஆத்மாவாலே புருஷார்த்த லாபம் என்கிறது. ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கான சரமஶ்லோகத்தில், இவனுடைய ஸ்வீகாரமும் மிகையாம்படி, தானே கைக்கொண்டு ப்ராப்தி ப்ரதிபந்தக ஸகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு, தன் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளும் ஈஶ்வரனாலே புருஷார்த்த லாபம் என்கிறது. ஈஶ்வரனுடைய லக்ஷ்மீ விஶிஷ்ட வேஷத்திலே நோக்கான த்வயத்தில், விஶேஷண பூதையான பெரிய பிராட்டியாராலே புருஷார்த்த லாபமென்கிறது – என்கை.
அவ: உபாயம் ஈஶ்வரனாயிருக்க, இவளாலே பேறாகையாவதென் என்கிற ஶங்கையிலே அருளிச்செய்கிறார் ‘பெரியபிராட்டி’- என்று தொடங்கி.
மூ:119. பெரியபிராட்டியாராலே பேறாகையாவது, இவள் புருஷகாரமானாலல்லது ஈஶ்வரன் கார்யஞ்செய்யானென்கை.
வ்யா: அதாவது, இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்கள் இரண்டும் பண்ணுவான் ஈஶ்வரனேயாயிருக்கப் பெரியபிராட்டியாலே இவனுக்குப் பேறாகை ஆகிறது – இவனுடைய அபராதத்தைப் பாராதே ரக்ஷிக்கும்படி இவள் புருஷகாரமானால் ஒழிய, ஈஶ்வரன் இவன் கார்யஞ்செய்யான் என்றபடி- என்கை.
அவ: கீழ், ஸாமாந்யத்திலே வைஷ்ணவாதிகாரிக்கு அபேக்ஷிதங்களிறே சொல்லிற்று; விஶேஷித்து த்வயத்துக்கு அதிகாரியாமவனுக்கு அபேக்ஷிதத்தை அருளிச் செய்கிறார் – ‘த்வயத்துக்கு’ – என்று தொடங்கி.
மூ:120. த்வயத்துக்கு அதிகாரி ஆகிஞ்சந்யமும், அநந்யகதித்வமும் உடையவன்.
வ்யா: அதாவது, ஸித்தோபாயவரண ப்ரதிபாதகமான த்வயத்துக்கு அதிகாரி
अकिञ्चिनोऽगति: त्वमेवोपायभूतो मे भव (அகிஞ்சநோ’கதி: த்வமேவோபாயபூதோமே பவ), अकिञ्चिनोऽन्यगति:शरण्य (அகிஞ்சநோ’நந்யகதிஶ்ஶரண்ய) என்றும், ‘புகலொன்றில்லா அடியேன்’ என்றும் சொல்லுகிறபடியே ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் ஆகிற இரண்டும் உடையவன் – என்கை.
அவ: ‘இவையிரண்டின் வேஷமுந்தான் எங்ஙனே?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘இவையிரண்டும்’ என்று தொடங்கி.
மூ:121. இவை இரண்டும் ப்ரபந்ந பரித்ராணத்திலே சொன்னோம்.
வ்யா: அதாவது, உபாயாந்தர ராஹித்யமாகிற ஆகிஞ்சந்யத்தின் வேஷமும், ரக்ஷகாந்தர ராஹித்யமாகிற அநந்ய கதித்வத்தின் வேஷமும் ப்ரபந்ந பரித்ராணமாகிற ப்ரபந்தத்திலே ஸுஸ்பஷ்டமாகச் சொன்னோம். அதிலே கண்டு கொள்வது- என்கை.
அவ: இனி த்வயத்துக்கு வாக்யார்த்தம் அருளிச்செய்கிறார் – ‘இதில் முற்கூற்றால்’- என்று தொடங்கி.
மூ:122. இதில் முற்கூற்றால், பெரியபிராட்டியாரை முன்னிட்டு ஈஶ்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது; பிற்கூற்றால் அச்சேர்த்தியிலே அடிமையையிரக்கிறது.
வ்யா: அதாவது, இந்த த்வயத்தில் பூர்வ கண்டத்தாலே “ஸ்ரீமத்” என்று பெரியபிராட்டியாரை முன்னிட்டு, “நாராயண சரணௌ” என்று ஈஶ்வரன் திருவடிகளை ” ஶரணம் ப்ரபத்யே” என்று உபாயமாகப் பற்றுகிறது; உத்தர கண்டத்தாலே “ஸ்ரீமதே” என்று பெரியபிராட்டியாரும் அவனுமான சேர்த்தியிலே ”நாராயணாய” என்கிற சதுர்த்தியாலே கைங்கர்யத்தை அர்த்திக்கிறது- என்கை. ‘நமஸ்ஸு’கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி ப்ரதிபாதகமாகையாலே, ‘அடிமையை இரக்கிறது’ என்று இதிலே அந்தர்ப்பூதம்.
அவ: இனி, ப்ரதிபதம் அர்த்தம் அருளிச்செய்வதாகத் திருவுள்ளம்பற்றி, ஸ்ரீமத் பதார்த்தம் அருளிச்செய்ய உபக்ரமிக்கிறார் – ‘ஸ்ரீ என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்’ என்று.
மூ:123. ஸ்ரீ என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்.
வ்யா: ஸ்ரீஶப்தம் ஸம்பதாதிகளுக்கும் வாசகமாக லோகத்திலே நடந்துபோரக் காண்கையாலே, அத்தை வ்யாவர்த்திக்கைக்காக ‘ஸ்ரீ’ என்கிற இது பெரியபிராட்டியார்க்குத் திருநாமம் என்கிறார். ஆகையிறே “லக்ஷ்மீ: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர் ஹரிப்ரியா” என்று திருநாமங்களோடே ஸஹபடிதமாயிற்று. இதுதான் எல்லாத் திருநாமங்கள் போலன்றிக்கே श्रीरिति प्रथमं नाम ल्क्ष्म्या: (ஸ்ரீரிதி ப்ரதமம்நாம லக்ஷ்ம்யா:) என்கிறபடியே இவளுக்கு ப்ரதமாபிதாநமாயிருக்கும். अ इति भगवतो नारायणस्य प्रथमाभिधानं (அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதாநம்) என்று அகாரம் ஈஶ்வரனுக்கு ப்ரதமாபிதாநமானாற்போலேயாயிற்று, இவளுக்கும் இது ப்ரதமாபிதாநமாயிருக்கும்படி. அது அவனுடைய ரக்ஷகத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவங்களைச் சொல்லக் கடவதாயிருக்கும்; இது இவளுடைய புருஷகாரத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாங்களைச் சொல்லக்கடவதாயிருக்கும்.
அவ: இனி, இந்த ஸ்ரீஶப்தத்துக்கு அர்த்தம் அருளிச்செய்வதாக ப்ரதமம் இதன்மேல் வந்த வ்யுத்பத்தி த்வயத்தை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீயதே, ஶ்ரயதே’ என்று.
மூ:124. ஸ்ரீயதே, ஶ்ரயதே
வ்யா: அதாவது, “ஸ்ரீஞ்ஸேவாயாம்” என்கிற தாதுவிலே “ஸ்ரீயத இதி ஸ்ரீ:ஶ்ரயத இதி ஸ்ரீ:” என்று ஸித்தமான கர்மணி வ்யுத்பத்தியையும் கர்த்தரி வ்யுத்பத்தியையும் சொன்னபடி.
அவ: இவ்யுத்பத்தி த்வயத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘இதுக்கு அர்த்தம்’ என்று தொடங்கி.
மூ:125. இதுக்கு அர்த்தம் எல்லார்க்கும் இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய், இவள் தனக்கும் அவனைப்பற்றி ஸ்வரூப லாபமாயிருக்கும் என்று.
வ்யா: அதாவது, இவ்வுபய வ்யுத்பத்திக்கும் அர்த்தம்- “ஸ்ரீயதே” என்று எல்லாராலும் ஸேவிக்கப்படாநின்றாள் என்கையாலே, ஸகல சேதநர்க்கும் இவளைப்பற்றித் தங்களுடைய ஶேஷத்வரூப ஸ்வரூப லாபமாய் ‘ஶ்ரயதே’என்று ஈஶ்வரனை ஸேவியாநின்றாள் என்கையாலே, இவள் தனக்கும் ஈஶ்வரனைப் பற்றித் தன்னுடைய ஸ்வரூப லாபமாயிருக்கும்மென்று – என்கை. இவள்தனக்கு, சேதந விஷயத்தில் ஶேஷித்வமும் ஈஶ்வர விஷயத்தில் ஶேஷத்வமும் என்றும் உண்டாயிறேயிருப்பது. ஆகையால், இந்த ஸேவ்யத்வ ஸேவகத்வங்கள் இரண்டும் இவளுக்கு நித்யமாய்ச் செல்லா நிற்கும்.
அவ: ‘ஈஶ்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமுமாகிற ஆகார த்வயம் உண்டானாற்போலே, இவளுக்கும் புருஷகாரத்வமும் ப்ராப்யத்வமுமாகிற ஆகாரத்வயமும் உண்டாகையாலே, இதில் எவ்வாகாரத்தை நினைத்து இவளை இப்போது சொல்லுகிறது? என்ன அருளிச் செய்கிறார் ‘இப்போது இவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக’ என்று.
மூ:126. இப்போது இவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக.
வ்யா: ‘புருஷகாரமாக’என்கையாலே உபாயவஸ்து விஶேஷணமாயிருக்கிற ஆகாரத்தையிட்டு, இவளுக்கும் உபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பக்ஷம் நிரஸ்தம்.
அவ: ‘ஈஶ்வரனுடைய நாராயணத்வ ப்ரயுக்தமான ஸ்வாபாவிக ஸம்பந்தாதி ஜ்ஞானத்தை உடையனாய்க் கொண்டு, அவனை ஆஶ்ரயிக்கிற இச்சேதநனுக்கு இவளைப் புருஷகாரமாக முன்னிட வேண்டுகிறதுதானென்?’ என்ன, அருளிச் செய்கிறார் ‘நீரிலே’ என்று தொடங்கி.
மூ:127. நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக.
வ்யா: அதாவது, சீதளமான ஜலத்திலே சென்று அணுகவொண்ணாதபடியான நெருப்புக் கிளருமாபோலே. सुहृदम् सर्वभूतानां (ஸுஹ்ருதம் ஸர்வபூ4தாநாம்), समोऽहं सर्वभूतेषु (ஸமோஹம் ஸர்வபூ4தேஷு) என்கிறபடியே. ஸர்வபூத ஸுஹ்ருத்த்வம், ஸமாச்ரயணீயத்வே ஸமத்வமாகிற ஸ்வபாவ விஶேஷங்களாலே ப்ரஸந்நமாய்க் குளிர்ந்திருக்கிற திருவுள்ளத்திலே
परिपूर्णागसि जने हितस्रोतोवृत्त्या भवति च कदाचित् कलुषधी:
(பரிபூர்ணாக3ஸி ஜநே ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா ப4வதி ச கதா3சித் கலுஷதீ:4) என்கிறபடியே சேதநன் தீரக் கழியப்பண்ணின அபராதமடியாக क्षिपामि (க்ஷிபாமி), न क्षमामि (ந க்ஷமாமி) என்னும்படியான சீற்றம் பிறந்தால் அவ்வபராதத்தைப் பொறுப்பது. किमेतन्निर्दोष: क इह जगति (கிமேதந் நிர்தோஷ3:க இஹ ஜகதி) இத்யாதிப்படியே தன்னுடைய ‘உபதேஶாதிகளாலே அச்சீற்றத்தையாற்றி தயையை ஜநிப்பிக்கும் இவளுக்காக – என்கை. ஆகையாலே ஸம்பந்தஜ்ஞாநம் பிறந்தவனுக்கும் அபராத பயத்தாலே புருஷகார புரஸ்கரணம் அபேக்ஷிதமென்று கருத்து.
அவ: ‘இத்தலையிற் கார்யம் எறிட்டுக் கொண்டும் அத்தலையை வஶீகரித்தும் இரண்டு தலையையும் பொருத்துகைக்கு இவள்தான் கண்ணழிவற்ற புருஷகாரமோ?’ என்ன, அருளிச் செய்கிறார் ‘இவள் தாயாய்’ என்று தொடங்கி.
மூ:128. இவள் தாயாய் இவர்கள் க்லேஶம் பொறுக்க மாட்டாதே, அவனுக்குப் பத்நியாய் இனிய விஷயமாயிருக்கையாலே, கண்ணழிவற்ற புருஷகாரம்.
வ்யா: அதாவது, त्वं माता सर्वलोकानां (த்வம் மாதா ஸர்வலோகாநாம்) என்றும், अखिल जगन्मातरं (அகில ஜக3ந்மாதரம்) என்றும் சொல்லுகிறபடியே இச்சேதநர்க்கு இவள் மாதாவாய். “தந்தம் மக்களழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார்” என்கிறபடியே அந்த ஸம்பந்தமடியாக இவர்களுடைய க்லேஶங்கண்டால் ஸஹிக்க மாட்டாதே, विष्णु पत्नी (விஷ்ணு பத்நீ) என்கிறபடியே அவனுக்குப் பத்நியாய் “பித்தர் பனிமலர் மேற்பாவைக்கு” என்கிறபடியே அவன் தன் வைலக்ஷண்யத்தைக் கண்டு பிச்சேறித் தன்சொல்வழி நடக்கும்படி அபிமத விஷயமாயிருக்கையாலே, கண்ணழிவற்ற புருஷகாரம் என்கை.
அவ: ‘எல்லாம் செய்தாலும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனான ஈஶ்வரன், சேதநருடைய அபராதங்களை நிறுத்து அறுத்துத் தீத்துவன்” என்று நிற்குமளவில், இவளாலே பொறுப்பிக்கப்போமோ? என்ன, அருளிச் செய்கிறார் ‘திருவடியை’ என்று தொடங்கி.
மூ:129. திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே.
வ்யா: அதாவது, தன்னைப் பத்துமாஸம் தர்ஜநபர்த்ஸநம் பண்ணின அந்த ராக்ஷஸிகளுடைய அபராதங்களைக் கணக்கிட்டுச் சித்ரவதம் பண்ண உத்யோகித்து நின்ற சொல்மிறுங்கனான திருவடியையுமுட்பட क: कुप्येत् (க: குப்யேத்) என்றும், न कश्चिन्नापराध्यति (நகஶ்சிந்நாபராத்4யதி) என்றும் இத்யாதி உபதேஶத்தாலே பொறுப்பிக்குமவள் “மலராள் தனத்துள்ளான்” என்றும், ”மாமலர் மங்கை மண நோக்கமுண்டான்” என்றும், “அல்லிமலர்மகள் போக மயக்குக்களாகியும் நிற்கும்” என்றும் சொல்லுகிறபடியே தன் போக்யதையிலே குமிழிநீருண்டு, “நின்னன்பின்வழி நின்று சிலைபிடித்து எம்பிரானேக” என்கிறபடியே ”மாயா ம்ருகத்தின் பின்னே போ” என்னிலும் விளைவது அறியாதே அதன் பின்னே போம்படி தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கவல்லளென்னுமிடம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறே -என்கை. [“செய்தகவினுக்கில்லை கைம்மாறு” என்னும்படி இரண்டு தலைக்குந் தலை தடுமாறாக உபகரித்துத் தன் சொல்வழி போகவேண்டும்படியான திருவடியோடே மறுதலி(லை)க்குமவள் “தான் முயங்கும்” என்னும்படியான போக்யத்தைக்குத் தோற்று”எத்தைச்செய்வோம்” என்று தலைதடுமாறி “நின்னன் பின்வழி நின்று” “அதனின் பின்னே படர்ந்தான்” என்னும்படி விளைவதறியாதே முறுவலுக்குத் தோற்றுச் சொல்வழி போமவனைப் பொறுப்பிக்குமென்னுமிடஞ்சொல்லவேண்டாவிறே] என்று இது தன்னை இவர் திருத்தம்பியாரும் அருளிச் செய்தாரிறே.
ஆக, ஸ்ரீமத்பதத்தில் ப்ரக்ருத்யம்ஶத்தை அருளிச்செய்தார் கீழ், ப்ரத்யயாம்ஶத்தை அருளிச்செய்கிறார் மேல்; ‘மதுப்பாலே’ என்று தொடங்கி.
மூ:130. மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யமென்கிறது.
வ்யா: அதாவது, இம்மதுப்புத்தான் நித்யயோகே மதுப்பாகையாலே, இத்தால் புருஷகார பூதையான பிராட்டியும் ஈஶ்வரனுமான இருவருடைய சேர்த்தியும் எப்போதுமுண்டு என்னுமிடம் சொல்லுகிறது- என்கை.
அவ: இந்நித்யயோகத்தை உபபாதிக்கிறார் ‘இவளோடே கூடியே வஸ்துவினுடைய உண்மை’ என்று.
மூ:131. இவளோடே கூடியே வஸ்துவினுடைய உண்மை.
வ்யா: அதாவது,
श्रिय: पतिर्निखिल हेय प्रत्यनीक कल्याणैक तान:|
स्वेतरसमस्त वस्तु विलक्षणानन्त ज्ञानान्न्दैक स्वरूप:||
(ஶ்ரிய:பதிர்நிகி2லஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநஸ்|
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலஷணாநந்த ஜ்ஞாநாநந்தை3க ஸ்வரூப:) என்று ஸ்வரூப நிரூபகமான ஜ்ஞாநாநந்தாதிகளுக்கு முன்னே ஶ்ரிய:பதித்வத்தைச் சொல்லும்படி அவன் ஸ்வரூபத்துக்கு ப்ரதாந நிரூபகையாயிருக்கையாலே, இவளோடேகூடியே வஸ்துவினுடைய ஸத்பாவம் இருப்பது- என்கை.
ஆக, ஸ்வரூபாநுபந்தித்வ ப்ரயுக்தமான நித்யயோகத்தை அருளிச் செய்தாராயிற்று.
அவ: இனி இவளுடைய குணப்ரயுக்தமானநித்யயோகத்தை அருளிச் செய்கிறார் “ஈச்வர ஸ்வாதந்த்ர்யத்தையும்” என்று தொடங்கி.
மூ:132. ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் சேதநனுடைய அபராதத்தையுங்கண்டு அகலமாட்டாள்.
வ்யா: அதாவது, அபராதங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு, அ(நி)றுத்து அறுத்துத் தீர்க்கும் ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும், यद्ब्रह्मकल्प नियुतानुभवेऽप्यनाश्यम् (யத் ப்ரஹ்ம கல்பநியுதாநுபவேப்யநாஶ்யம்) இத்யாதிப்படியே கால தத்வமுள்ளதனையும் அநுபவியா நின்றாலும் சிறிது வரையிட்டுக் காட்டக் கடவதல்லாதபடி பண்ணி வைத்த இச்சேதநனுடைய அக்ருத்ய கரணாத்யபராதத்தையுங்கண்டு, “என்னாகப் புகுகிறதோ?”, என்னும் பயத்தாலே ஈஶ்வரனை விட்டு ஒரு க்ஷணகாலமும் அகலமாட்டாள்- என்கை.
அவ: இத்தால், சேதநனுக்குப் பலிக்குமத்தை அருளிச்செய்கிறார் ‘சேதநனுக்கு’ என்று தொடங்கி.
மூ:133. சேதநனுக்கு இவையிரண்டையும் நினைத்து அஞ்சவேண்டா.
வ்யா: அதாவது, இப்படி இவள் இருந்து நோக்குகையாலே, சேதநனுக்கு ஈஶ்வர ஸ்வாதந்தர்யமும் ஸ்வாபராதமுமாகிற இவை இரண்டையும் நினைத்து “என்னாய் விளையப்புகுகிறதோ” என்று அஞ்சவேண்டா- என்கை.
அவ: இனி, இம்மதுப்பின் தாத்பர்யாம்ஶத்தை அருளிச்செய்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.
மூ:134. இத்தால் – ஆஶ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது, காலம் பார்க்கவேண்டா என்கிறது.
வ்யா: இப்படிப் புருஷகார உபாய வஸ்துக்களினுடைய நித்ய யோகத்தை ப்ரதிபாதிக்கிற இம்மதுப்பால், இவ்விஷயத்தை ஆஶ்ரயிப்பார்க்கு, ஆஶ்ரயிக்கையில் ருசியே வேண்டுவது. “இரண்டுதலையும் கூடியிருக்கும் தஶையிலே ஆஶ்ரயிக்க வேணுமே” என்று ஆஶ்ரயணத்துக்குக் காலம் பார்த்திருக்க வேண்டாவென்கிறது- என்கை.
அவ: இனி, இவள் புருஷகாரத்வத்தின் ‘அவஶ்யாபேக்ஷிதத்வத்தை அறிவிக்கைக்காக, இவள் ஸந்நிதிக்கும் அஸந்நிதிக்குமுண்டான வாசியை அருளிச்செய்கிறார்,‘இவள் ஸந்நிதியாலே’ என்று தொடங்கி.
மூ:135. இவள் ஸந்நிதியாலே காகம் தலை பெற்றது; அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்.
வ்யா: देव्या कारुण्य रूपया (தேவ்யா காருண்ய ரூபயா) என்கிறபடியே க்ருபைதான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருப்பாளாய், ஸ்வதந்த்ரனான ஈஶ்வரனுக்கும் ஸ்வாதந்த்ர்யத்தையமுக்கி க்ருபையைக் கிளப்புமவளான இவள் ஸந்நிதியாலே, அபராதத்தைத் தீரக்கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காய்த் தலையறுப்புண்ணத் தேடின காகம் कृपया पर्यपालयत् (க்ருபயா பர்யபாலயத்) என்கிறபடியே க்ருபாவிஷயமாய்த் தலைபெற்றுப் போயிற்று; அப்படியிருக்கிற இவள் ஸந்நிதி இல்லாமையாலே போக்கற்றுச் செயல் மாண்டு நின்றநிலை ஒத்திருக்கச் செய்தேயும், காகத்தோபாதி அபராதமுமின்றிக்கேயிருக்க, ராம ஶரத்துக்கு இலக்காய் ராவணன் முடிந்து போனான்- என்கை.
ஆகையால் ஆஶ்ரயிப்பார்க்கு இவள் ஸந்நிதியே வேணுமென்று கருத்து. ஆக, ஸ்ரீமத்பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.
அவ: அநந்தரம் நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் – ‘புருஷகார பலத்தாலே’ என்று தொடங்கி,
மூ:136. புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம்.
வ்யா: அதாவது உபதேஶத்தாலும், அழகாலும் கண்ணழிவற வஶீகரித்துக் கார்யங்கொள்ளவல்ல புருஷகார பலத்தாலே ஆஶ்ரயணோந்முகனான சேதநன் அநாதிகாலம் பண்ணின அபராதங்களைப் பார்த்துச் சீறி, “அங்கீகரியேன்” என்று இருக்கும் ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யம் தலைமடிந்தால் அதன் கீழ் தலையெடுக்கப்பெறாத செறுப்புத் தீர்ந்து தலையெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம் – என்கை.
அவ: ‘அவைதாம் எவை?’ என்ன, அருளிச் செய்கிறார் ‘அவையாவன’ என்று தொடங்கி.
மூ:137. அவையாவன – வாத்ஸல்யமும், ஸ்வாமித்வமும், ஸௌஶீல்யமும், ஸௌலப்யமும், ஜ்ஞாநமும், ஶக்தியும்.
வ்யா: இவற்றில், வாத்ஸல்யமாவது- வத்ஸத்தின் பக்கல் தேநு இருக்கும் இருப்பு; அதாவது அதனுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும், க்ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும், எதிரிட்டவரைக் கொம்பிலும் குளம்பிலுங் கொண்டு நோக்குகையுமிறே; அப்படியே, ஈஶ்வரனும் தோஷத்தை போக்யமாகக் கொண்டு, “பாலேபோற்சீர்” என்கிற குணங்களாலே தரிப்பித்து कथञ्चन न त्यजेयं (கதஞ்சந ந த்யஜேயம்) என்றும், अभयं सर्वभूतेभ्य: (அபயம் ஸர்வபூ4தேப்4ய:) என்றும் சொல்லுகிறபடியே அநுகூலர் நிமித்தமாகவும் ப்ரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும். ஸ்வாமித்வமாவது – இவன் விமுகனான தஶையிலும் விடாதே நின்று, ஸத்தையை நோக்கிக்கொண்டு போருகைக்கு ஹேதுவான ஒரு பந்த விஶேஷம்; அதாகிறது – உடையவனாயிருக்குமிருப்பு; அத்வேஷம் தொடங்கிக் கைங்கர்ய பர்யந்தமாக உண்டான ஸ்வபாவ விஶேஷங்களையெல்லாம் உண்டாக்குகிறது இந்த பந்த விஶேஷமடியாக. ஸௌஶீல்யமாவது- உபயவிபூதி யோகத்தாலும் பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தியாலும் நிரங்குஶமாயிருக்கிற ஈஶ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து, “அவனெவ்விடத்தான் யானார்” என்று பிற்காலியாதபடி எல்லாரோடும் ஒக்க மேல்விழுந்து புரையறக் கலக்கையும், அது தன்பேறாக இருக்கையும், எதிர்த்தலையில் அபேக்ஷையின்றியிலே இருக்கக் கலக்கையும். ஸௌலப்யமாவது- கண்ணுக்கு விஷயமின்றிக்கேயிருக்கிற தான் கண்ணாலே கண்டு ஆஶ்ரயிக்கலாம்படி எளியனாயிருக்கை. ஜ்ஞாநமாவது- இச்சேதநனுக்குக் கழிக்கவேண்டும் அநிஷ்டங்களையும், கொடுக்கவேண்டும் இஷ்டங்களையும் நேராக அறிகைக்கு ஈடான ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும் ஒருகாலே அபரோக்ஷிக்கவல்ல அறிவு. ஶக்தியாவது- ஹேயரான நித்ய ஸம்ஸாரிகளை உபாதேயதமரான நித்யஸூரிகளோடு ஒரு கோவையாக்கவல்ல அகடிதகடநா ஸாமர்த்யம். இவற்றில் வாத்ஸல்யாதிகள் நாலும் ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகம்; ஜ்ஞாநாதிகள் இரண்டும் ஆஶ்ரித கார்யாபாதகம்; “நிகரில்புகழாய்” என்று தொடங்கி வாத்ஸல்யாதிகள் நாலையுமிறே, ஆஶ்ரயணத்துக்கு உடலாக ஆழ்வார் அருளிச்செய்தது.
ஜ்ஞாநஶக்திகள் இரண்டுஞ்சொன்ன இது, ப்ராப்தி பூர்த்திகளுக்கும் உபலக்ஷணம்; கார்யகரத்வத்துக்கு அவையும் அபேக்ஷிதங்களாகையாலே.
அவ: ‘இக்குணங்களுக்கு இவ்விடத்தில் விநியோகங்கள் எவை? என்ன, அருளிச் செய்கிறார் ‘குற்றங்கண்டு’ என்று தொடங்கி.
மூ:138. குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம்; கார்யஞ்செய்யுமென்று துணிகைக்கு ஸ்வாமித்வம்; ஸ்வாமித்வங்கண்டு அகலாமைக்கு ஸௌஶீல்யம்; கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம்; விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞாநஶக்திகள்.
வ்யா: அதாவது, ஆஶ்ரயணோந்முகனான இச்சேதநன் தன்தோஷத்தைப் பார்த்து அஞ்சாமைக்கு உறுப்பு, தோஷத்தை போக்யமாகக் கொள்ளும் வாத்ஸல்யம். “நங்கார்யம் செய்யுமோ செய்யானோ?”, என்று ஶங்கியாதே கார்யஞ்செய்யுமென்று விஶ்வஸிக்கைக்கு உறுப்பு இழவுபேறு தன்னதாம்படியான ஸ்வாமித்வம். உபயவிபூதிக்கும் கடவனாயிருக்கும் பெருமைக்கு ப்ரகாஶகமான ஸ்வாமித்வத்தைக் கண்டு ஸ்வநிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகலாமைக்கு உறுப்பு, தாழ நின்றவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வபாவமான ஸௌஶீல்யம். அதீந்த்ரியனென்று பிற்காலியாமல் கண்ணாலே கண்டு ஆஶ்ரயிக்கைக்கு உறுப்பு தன்வடிவைச் சக்ஷுர்விஷயமாக்குகையாகிற ஸௌலப்யம்; सर्वपापेभ्यो मोक्षयिष्यामि (ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி) என்கிறபடியே ப்ராப்தி விரோதியைப்போக்கி ப்ராப்யனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு, ப்ராப்தாவான இவன் கீழ்நின்ற நிலையும், மேல் போக்கடியும் அறிகைக்கும், அறிந்தபடியே செய்து தலைக்கட்டுகைக்கும் ஏகாந்தங்களான ஜ்ஞாநஶக்திகள் – என்கை.
அவ: ஸெளகர்யாபாதகங்களான குண சதுஷ்கத்திலும் ஸௌலப்யம் ப்ரதாநமாகையாலே அந்த ஸௌலப்ய காஷ்டையை அருளிச்செய்கிறார் ‘இங்குச்சொன்ன’ என்று தொடங்கி.
மூ:139. இங்குச் சொன்ன ஸௌலப்யத்துக்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்.
வ்யா: அதாவது, இப்பதத்தில் ஆஶ்ரயண உபயோகியாகச் சொன்ன ஸௌலப்யத்துக்கு ஸீமாபூமி “தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவந்தானே” என்கிறபடியே ஆஶ்ரிதர் உகந்தது ஒன்றைத் திருமேனியாகக் கொண்டு ஸதா ஸந்நிதி பண்ணியிருக்கும் அர்ச்சாவதாரம்- என்கை.
இதுதன்னை உபபாதிக்கிறார் – இதுதான் – என்று தொடங்கி.
மூ:140. இதுதான் பரவ்யூஹ விபவங்கள் போலன்றிக்கே கண்ணாலே காணலாம்படி இருக்கும்.
வ்யா: அதாவது, இவ்வர்ச்சாவதாரந்தான் தேஶவிப்ரக்ருஷ்டதையாலே கண்ணுக்கு விஷயமாகாத பரவ்யூஹங்களும், காலவிப்ரக்ருஷ்டதையாலே கண்ணுக்கு விஷயமாகாதபடி போன விபவமும் போலன்றிக்கே, ஆஸந்நமாய் அநவரத ஸந்நிதி பண்ணிக்கொண்டிருக்கையாலே, அநவரதம் கண்ணாலே காணலாம்படி இருக்கும்- என்கை.
அவ: ‘இக்குணங்களெல்லாம் அர்ச்சாவதாரத்திலே காணலாமோ?’ என்னஅருளிச் செய்கிறார் ‘இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்’ என்று.
மூ:141. இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்.
வ்யா: அதாவது, ஸௌகர்யாபாதகமாகவும் கார்யாபாதகமாகவும் சொன்ன இக்குணங்கள் எல்லாம், இவை காண்கையிலே அபேக்ஷையுடைய நமக்கு நம்முடைய பெருமாள் பக்கலிலே காணலாம்- என்கை.
அவ: பெருமாள் பக்கலிலே இக்குணங்களுக்கு ப்ரகாசகங்களாயுள்ளவற்றைச் சொல்லி, “இவற்றுடனே நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்” என்கிறார் – ‘திருக்கையிலே’ என்று தொடங்கி.
மூ:142. திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்து அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆஸநபத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்.
வ்யா: அதாவது, கார்யகரத்வ உபயோகியான ஜ்ஞாநஶக்திகளுக்கு ப்ரகாஶகமாம்படி திருக்கைகளிலே தரித்துக் கொண்டிருக்கிற ஶங்கசக்ராதி திவ்யாயுதங்களும், வாத்ஸல்ய ப்ரகாஶகமாம்படி வைத்து அஞ்சலென்ற கையும், ஸ்வாமித்வ ப்ரகாஶகமாகக் கவித்த முடியும், ஸௌஶீல்ய ப்ரகாசகமான முகமும் முறுவலும், அனைவர்க்குங்கண்டு பற்றலாம்படியான ஸௌலப்ய ப்ரகாஶகமான ஆஸந பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய்க் கொண்டு எழுந்தருளி நிற்கிற நிலையே அநந்ய கதிகளான நமக்கு ரஷகம்- என்கை.
அவ: உபாய உபேய நிஷ்டர்க்கு அபேக்ஷிதமான ஆகாரங்கள் இரண்டும் கீழ்ச்சொன்னபடியே நிற்கிற திருமேனியிலே தோற்றும் என்கிறார் ‘ரக்ஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திருமேனியிலே தோற்றும்’ என்று.
மூ:143. ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திருமேனியிலே தோற்றும்.
வ்யா: அதாவது, ரக்ஷண பரிகரமான திவ்யாயுதங்களோடும் ரக்ஷணத்துக்குக் கவித்த முடியோடுங் கூடியிருக்கையாலே ரக்ஷகத்வம் தோற்றுகையாலும் “அணியாராழியுஞ்சங்கமுமேந்தும்”, “முடிச்சோதியாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ” என்கிறபடியே அவை தானே அழகுக்கு உடலாய்; வைத்தஞ்சல் என்று கையும் முகமும் முறுவலும் ஆஸந பத்மத்திலே அழுத்தின திருவடிகளும் ஓரொன்றே அழகுக்கு எல்லை நிலமாயிருக்கையாலே போக்யத்வம் தோற்றுகையாலும். இரண்டும் திருமேனியிலே ப்ரகாஶிக்கும்- என்கை. ஆக, நாராயண பதார்த்தத்தை அருளிச்செய்தாராயிற்று.
அவ: இனி ‘சரணௌ’ என்கிற பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் ‘சரணௌ திருவடிகளை’ என்று.
மூ:144. சரணௌ – திருவடிகளை.
இந்த த்விவசனத்தாற் சொல்லுகிற அர்த்தத்தை அருளிச் செய்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.
மூ:145. இத்தால் சேர்த்தியழகையும், உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது.
வ்யா: அதாவது ‘சரணெள’ என்று இரண்டு திருவடிகளையும் சொல்லுகிற இத்தால், “இணைத்தாமரையடி” என்கிறபடியே இரண்டு தாமரைப்பூவை நிரைத்து வைத்தாற்போலேயிருக்கிற சேர்த்தியழகையும், த்விவசநம் இரண்டுக்கு மேல் மற்றொன்று புகுர ஸஹியாமையாலே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான உபாயபூர்த்தியையுஞ் சொல்லுகிறது – என்கை.
அவ: இனி, உபாயத்வ ஏகாந்தமான இதன் குணாதிக்யத்தை அருளிச் செய்கிறது ‘பிராட்டியும்’ என்று தொடங்கி.
மூ:146. பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது; திண்கழலாயிருக்கும்.
வ்யா: அதாவது ஸ்ரீமத் பதத்திலே புருஷகாரபூதையாகச் சொன்ன பிராட்டியும், அவள் தானே சிதகுரைக்கிலும் “என்னடியார் அது செய்யார்” என்னும்படி நாராயண பதத்திற்சொன்ன குணவிஶிஷ்டனான அவனும் கைவிடிலும், திருவடிகள் தன் வைலக்ஷண்யத்தாலே துவக்கிக்கொள்ளுகையாலே கைவிடாது; “வண்புகழ் நாரணன் திண்கழல்” என்கிறபடியே பற்றினாரை நழுவவிடாதே திண்மையையுடைத்தாயிருக்கும் – என்கை.
அவ: இந்த குணாதிக்யத்தைப் பற்றவுமன்றிக்கே, இவன் தன் ஸ்வரூபாநுகுணமும் திருவடிகளிலே இழிகையென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் – ஶேஷிபக்கல் – என்று தொடங்கி.
மூ:147. ஶேஷிபக்கல் ஶேஷபூதன் இழியும் துறை; ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாபோலே.
வ்யா: அதாவது ஶேஷிபக்கல் ஆஶ்ரயிக்க இழியும் ஶேஷபூதன் தன் ஸ்வரூபாநுகுணமாக இழியுந்துறை திருவடிகள்; ஸ்தநந்தய ப்ரஜை தாயினுடைய அவயவமெல்லாங் கிடக்கத் தனக்கு வகுத்ததாயுள்ள முலையிலே வாய் வைக்குமாப்போலே.
அவ: ‘திருவடிகளைச் சொன்ன இதுதிருமேனிக்கு உபலக்ஷணம்’ என்கிறார்,
மேல் ‘இத்தால்’ என்று தொடங்கி.
மூ:148. இத்தால், பிராட்டிக்கு இருப்பிடமாய், குணப்ரகாஶகமுமாய், ஶிஶுபாலனையும் அகப்படத் திருத்திச் சேர்த்துக்கொள்ளுந் திருமேனியை நினைக்கிறது.
வ்யா: அதாவது ‘சரணௌ’ என்று விக்ரஹ ஏகதேஶமான திருவடிகளைச் சொன்ன இத்தால் “திருவிருந்தமார்வன்” என்னும்படி ஸ்ரீமத் பதத்திற்சொன்ன புருஷகார பூதையான பிராட்டிக்கு இருப்பிடமாய், நாராயண பதத்திற்சொன்ன குணங்களுக்கு ப்ரகாஶகமாய், “பலபல நாழஞ்சொல்லிப் பழித்த ஶிஶுபாலன்” என்கிறபடியே ப்ரத்வேஷ பரனாய் நிந்தோக்திகளைப் பண்ணித்திரிந்த ஶிஶுபாலனையும் உட்பட “அலவலைமை தவிர்த்த அழகன்” என்கிறபடியே தன்னழகாலே த்வேஷாதிகள் போம்படி திருத்தி “திருவடி தாட்பாலடைந்த” என்கிறபடியே சேர்த்துக்கொள்ளும் ஸ்வபாவத்தையுடைத்தான திவ்யமங்கள விக்ரஹத்தை நினைக்கிறது- என்கை.
அவ: அநந்தரம், ‘ஶரணபதார்த்தத்தை அருளிச் செய்கிறார் ஶரணம்’ – என்று தொடங்கி.
மூ:149. ஶரணம் – இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கு தப்பாத உபாயமாக.
வ்யா: அதாவது,
उपाये गृहरक्षित्रो: शब्द: शरणमित्ययं |
वर्तते सांप्रतं चेष उपायार्थैक वाचक:||
(உபாயே க்3ருஹரக்ஷித்ரோஶ் ஶப்த3ஶ் ஶரணமித்யயம்|
வர்த்ததே ஸாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தை2க வாசக:||) என்கிறபடியே ஶரணஶப்தம் ரக்ஷிதாவுக்கும் க்ருஹத்துக்கும் உபாயத்துக்கும் வாசகமேயாகிலும், இவ்விடத்தில் உபாயத்துக்கே வாசகமாகையாலும், உபாய க்ருத்யம் இஷ்டாநிஷ்டப்ராப்தி பரிஹார கரணமாகையாலும், “இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக” என்று இப்பதத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார். இஷ்டாநிஷ்டங்கள்தாம் இன்னவையென்னுமத்தைப் பரந்தபடியிலே விஸ்தரேண அருளிச் செய்தார். ஶ்ரிய:பதிப்படியிலும் “அநிஷ்டமாகிறது அவித்யையும், அவித்யாகார்யமான ராகத்வேஷங்களும், புண்ய பாப ரூபமான கர்மங்களும், தேவாதி சதுர்வித ஶரீரங்களும், ஆத்யாத்மிகாதி து:க்க பரம்பரைகளும்; இஷ்டமாகிறது – அர்ச்சிராதி மார்க கமநமும், பரமபத ப்ராப்தியும், பரமாத்ம தர்ஶநமும், குணாநுபவ கைங்கர்யங்களும்” என்று ஸங்க்ரஹேண அருளிச்செய்தார். ஆகையால், இவ்விடத்திலும் அவை வக்தவ்யங்கள்.
அவ: கீழே நிர்த்தேஶித்த வஸ்துவை உபாயமாகச் சொன்னதன் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் ‘இத்தால், ப்ராப்யந்தானே ப்ராபகம் என்கிறது’ – என்று.
மூ:150. இத்தால், ப்ராப்யந் தானே ப்ராபகம், என்கிறது.
வ்யா: அதாவது கீழ்ச்சொன்ன விஷயத்தை உபாயமாகச் சொல்லுகிற இத்தால், ப்ராப்ய வஸ்துதானே ப்ராபகம் என்னுமிடஞ் சொல்லுகிறது- என்கை.
அவ: ‘கீழ் ப்ராப்ய ப்ரஸங்கம் உண்டோ?’, என்ன அருளிச் செய்கிறார். ‘கீழ்ச்சொன்ன மூன்றும் ப்ராப்யமிறே’ என்று.
மூ:151. கீழ்ச் சொன்ன மூன்றும் ப்ராப்யமிறே.
வ்யா: அதாவது, ஸமஸ்தபதமான பூர்வபதத்திற் சொன்ன லக்ஷ்மீ விஶிஷ்டத்வமும், கல்யாண குணயோகமும், திவ்யமங்கள விக்ரஹோபேதத்வமும் ஆகிற மூன்றும்.
श्रिया सार्धं आस्ते (ஶ்ரியா ஸார்த்த4ம் – ஆஸ்தே), सर्वान् कामान् अश्नुते (ஸர்வாந் காமாந் அஶ்நுதே), सदा पश्यन्ति (ஸதா பஶ்யந்தி) என்று இவனுக்கு அநுபவவிஷயமாகச் சொல்லப்படுகிறவையாகையாலே ப்ராப்யமிறே- என்கை.
அவ: ‘ஆனால் இத்தை உபாயமாக்குகிறதானேன்?’ என்ன அருளிச்செய்கிறார் ‘இவன் செயலறுதியாலே உபாயமாக்குகிறானித்தனை’ என்று.
மூ:152. இவன் ‘செயலறுதியாலே உபாயமாக்குகிறானித்தனை’.
வ்யா: அதாவது அகிஞ்சநனாய் அநந்யகதியாயிருக்கிற இவன், தன் செயல் மாட்சியாலே போக்யமான பாலை மருந்தாக்குவாரைப்போலே, ப்ராப்யமானது தன்னையே ப்ராபகமாக்குகிறானித்தனை- என்கை.
அவ: இதுதன்னாலே இவ்வுபாயத்துக்கு ஓரதிஶயம் சொல்லுகிறது என்கிறார் ‘சரணௌ ஶரணம் என்கையாலே’ என்று தொடங்கி.
மூ:153.“சரணௌ ஶரணம்” என்கையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தமான உபாயம் என்கிறது.
வ்யா: அதாவது, ” சரணௌ ஶரணம்” என்று ப்ராப்யவஸ்து தன்னையே ப்ராபகமாகச் சொல்லுகையாலே, ப்ராப்யம் வேறும் தான் வேறுமாயிருக்கும் உபாயாந்தரங்களிற்காட்டில் வ்யாவ்ருத்தமான உபாயம் இது என்னுமிடம் சொல்லுகிறது – என்கை.
அவ: அநந்தரம், க்ரியாபதத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘ப்ரபத்யே-பற்றுகிறேன்’ என்று.
மூ:154. ப்ரபத்யே- பற்றுகிறேன்.
வ்யா: இப்பதம் “பதகதெள” என்கிற தாது ஸித்தமாகையாலே கதிவாசியாகையாலும், உத்தமனாகையாலும் “பற்றுகிறேன்” என்று இதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்.
அவ: ‘இதுதான் மாநஸ வாசக காயிக ரூபையான த்ரிவித கதியையும் காட்டவற்றாகையாலே, அதில் எந்தக் கரணத்தால் உண்டான பற்றுதலைச் சொல்லுகிறது?’ என்ன அருளிச் செய்கிறார் ‘வாசிகமாகவும்’ என்று தொடங்கி.
மூ:155. வாசிகமாகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு அழிவில்லை (இழவில்லை); ”ஜ்ஞாநாந் மோக்ஷம்” ஆகையாலே, மாநஸமாகக்கடவது.
வ்யா: அதாவது, भव शरणम् (ப4வஶரணம்) இத்யாதிப்படியே ரக்ஷிக்கவேணும் என்று ப்ரார்த்திக்கையாகிற கேவல வாசிகமாகவும், अञ्जलि: परमा मुद्रा क्षिप्रम् देवप्रसादिनी (அஞ்ஜலி: பரமா முத்3ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ) என்கிறபடியே பகவத் ப்ரஸாத ஹேதுபூதமான அஞ்ஜலியை ப்ரயோகித்தல் நிஷாத காகாதிகளைப்போலே ரக்ஷகவஸ்து இருந்த இடத்தே வருதல் செய்கையாகிற கேவல காயிகமாகவும் பற்றினாலும் பலஸித்திக்கு அழிவில்லை. ज्ञानान्मोक्ष: (ஜ்ஞாநாந்மோஷ:) என்கிறபடியே, ஜ்ஞாநத்தாலே மோக்ஷம் என்கையாலே, மாநஸமான பற்றுதல் ஆகக்கடவது – என்கை. அதாவது, ஒரு புத்தி விஶேஷம். இந்த புத்தி விஶேஷந்தன்னைப் பரந்தபடியிலே விஸ்தரேண அருளிச்செய்தார், ஶ்ரிய:பதிப்படியிலும், “இந்த புத்தி விசேஷமாகிறது- அநந்யார்ஹஶேஷத்வ ஜ்ஞாநகார்யமாய், இதரோபாய வ்யாவ்ருத்தமாய், பகவத்ரக்ஷகத்வாநுமதிரூபமாய், ஸக்ருதநுஷ்ட்டேயமாய், வ்யபிசார விளம்ப விதுரமாய், ஸர்வாதிகாரமாய், நியமஶூந்யமாய், அந்திமஸ்ம்ருதி நிரபேக்ஷமாய், ஸூஶகமாய், யாச்ஞாகர்ப்பமாய், த்ருடாத்யவஸாய ரூபமாய் இருப்பதொரு ஜ்ஞாநவிசேஷம்”, என்று அருளிச்செய்தார். ஆகையால் இவ்விடத்தே அதுவும் அநுஸந்தேயம்.
அவ: இப்படி மாநஸ மாத்ரமே அமையுமோ? “சிந்தையாலும்” இத்யாதிப்படியே த்ரிவித கரணத்தாலும் ஸ்வீகரிக்கவேண்டாவோ? என்ன, அருளிச்செய்கிறார்- ‘உபாயம் அவனாகையாலும்’ என்று தொடங்கி.
மூ:156. உபாயம் அவனாகையாலும், இவை நேரே உபாயம் அல்லாமையாலும், இம்மூன்றும் வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை.
வ்யா: அதாவது, பலஸித்திக்கு உபாயம் – பற்றப்படுகிற ஈஶ்வரனாகையாலும் கரணத்ரயத்தாலும் உண்டான பற்றுதல்களான இவை ஆபாதப்ரதீதியில் உபாயம்போல் தோற்றிக்கழியுண்டு போமதொழிய, ஸாக்ஷாத் உபாயம் அல்லாமையாலும் பலஸித்திக்கு அத்யவஸாயாத்மகமான ஸ்வீகாரம் ஒன்றுமேயமையும். இம்மூன்றும் வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை- என்கை. அதவா, இப்படி ஓரொன்றிலே ஒதுக்கிச் சொல்லுகிறதென்? த்ரிவித கரணத்தாலும் பற்றுதலை சொன்னாலோவென்ன, ‘உபாயம்’ இத்யாதியாலே அருளிச்செய்கிறாராகவுமாம். அப்போதைக்கு ஓரொன்றே அமையும், இம்மூன்றும் வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை- என்கை. நிர்ப்பந்தம் இல்லை என்கையாலே, இந்த ஸ்வீகாரம் த்ரிவித கரணத்தாலும் உண்டானாலும் குறையில்லையென்னுமிடம் தோற்றுகிறது, “இப்ப்ரபதநம் கரண த்ரயத்தாலும் உண்டாகவுமாம்; ஏக கரணத்தாலே உண்டாகவுமாம்; பலஸித்திக்குக் குறையில்லை. அதிகாரிபூர்த்திக்குக் கரண த்ரயமும் வேணும். பலஸித்திக்கு ஏககரணமே அமையும். உபாயபூர்த்திக்கு ஶ்ரிய:பதித்வமும், வாத்ஸல்யாதி குணயோகமும் திவ்யமங்கள விக்ரஹமும் கரணத்ரயமும் அபேக்ஷிதமாயிருக்கிறாபோலே” அதிகார(ரி) பூர்த்திக்குக் கரணத்ரயமும் அபேக்ஷிதமாயிருக்கும்” என்றிறே பரந்தபடியில் இவர்தாம் அருளிச்செய்தது.
அவ: सकृदेव हि शास्त्रार्थ: कृतोऽयं तारयेन्नरम् (ஸக்ருதே3வஹி ஶாஸ்த்ராத்த2: க்ருதோ’யம் தாரயேந்நரம்), सकृदेव प्रपन्नाय (ஸக்ருதே3வ ப்ரபந்நாய) இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ப்ரபத்தி ஸக்ருத்கரணீயையாயிருக்க, வர்த்தமாநமாகச்சொல்லுகிறது ஏதுக்காக? என்ன, அருளிச் செய்கிறார்- ‘வர்த்தமான நிர்த்தேஶம்’ என்று தொடங்கி.
மூ:157. வர்த்தமான நிர்த்தேஶம் – ஸத்வம் தலையெடுத்து அஞ்சினபோது அநுஸந்திக்கைக்காக.
வ்யா: அதாவது लोक विक्रान्त चरणौ शरणम् तेऽव्रजं विभो (லோகவிக்ராந்த சரணௌ ஶரணம் தேவ்ரஜம் விபோ), “நின்னடியிணை அடைந்தேன்”, “அடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்கிறபடியே சொல்லாதே‘ ப்ரபத்யே’என்று வர்த்தமாநமாகச் சொல்லுகிறது – ப்ரக்ருதியோடேயிருக்கிற இவன் ரஜஸ்தமஸ்ஸுக்களாலே கலங்கி, உபாயோபாயங்களில் ஏதேனும் ஒன்றிலே அந்வயித்து, பின்னை ஸத்வம் தலையெடுத்து அநுதாபம் பிறந்து பயப்பட்ட காலத்திலே, प्रायश्चित्तिरियम् सात्र यत्पुन:शरणम् व्रजेत् (ப்ராயஶ்சித்திரியம் ஸாத்ர யத்புநஶ்ஶரணம் வ்ரஜேத்) என்கிறபடியே ப்ரபத்தியொழிய அதுக்குப் பரிஹாரம் இல்லாமையாலும், அதுதான் ஸக்ருத் க்ருதமான பின்பு புந:கரணம் ஆகாமையாலும் பூர்வ ப்ரபதநத்தை அநுஸந்திக்கைக்காகக் கொழுந்து படக்கிடக்கிறது- என்கை.
அவ: இன்னமும் இவ்வர்த்தமாநத்துக்குச் சில ப்ரயோஜநங்களை அருளிச்செய்கிறார் ‘உபாயாந்தரங்களில்’ என்று தொடங்கி.
மூ:158. உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும், காலக்ஷேபத்துக்கும், இனிமையாலே விடவொண்ணாமையாலும் நடக்கும்.
வ்யா: அதாவது, பூர்வ வாஸனையாலே அவஶமாக உபாயாந்தரங்களிலே மநஸ்ஸூ செல்லாமைக்காகவும், இவ்வநுஸந்தாநத்தாலொழியப் போதுபோக்க அரிதாகையாலே காலக்ஷேபத்துக்காகவும், இதனுடைய ரஸ்யதையாலே விடமாட்டாமையாலும், இவ்வநுஸந்தாநம் இடைவிடாமல் நடக்கக் கடவதாயிருக்கும் – என்கை.
அவ: ‘இங்ஙனன்றிக்கே, பலஸித்திக்குப் பலகாலம் அநுஸந்திக்க வேணுமென்றாலோ?’ என்ன, அருளிச் செய்கிறார் ‘பேற்றுக்கு’ என்று தொடங்கி.
மூ:159. பேற்றுக்குப் பலகாலும் வேணுமென்று நினைக்கில் உபாயம் நழுவும்.
வ்யா: அதாவது, கீழ்ச்சொன்ன ப்ரயோஜநங்களுக்காக அன்றிக்கே பேற்றுக்கு உறுப்பாகப் பலகாலும் அநுஸந்திக்கவேணுமென்று ப்ரபத்தி பண்ணில் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமான ஸித்தோபாயம் சணற்கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்த்ரம்போலே தன்னைக்கொண்டு நழுவும் – என்கை. ஆக, பூர்வவாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தாராயிற்று.
அவ: இனி, உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச்செய்வதாக உபக்ரமிக்கிறார் ‘உத்தர வாக்யத்தாலே ப்ராப்யஞ்சொல்லுகிறது’ என்று.
மூ:160. உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது.
வ்யா: ப்ராப்யமாவது, ஶ்ரிய:பதியாய், ஸர்வஸ்வாமியாய் இருக்கிற ஸர்வேஶ்வரன் திருவடிகளிற் பண்ணும் கைங்கர்யம்.
ப்ராபகவரணாநந்தரம் ப்ராப்யம் சொல்லுகிற இதுக்கு அபிப்ராயம் அருளிச்செய்கிறார். ‘ப்ராப்யாந்தரத்துக்கு அன்றென்கை’ என்று.
மூ:161. ப்ராப்யாந்தரத்துக்கு அன்றென்கை.
வ்யா: பூர்வவாக்யத்தில் ப்ரதிபாதிதமான ஸாதநம் பல சதுஷ்டய ஸாதாரணமாகையாலே, கீழ்ப்பண்ணின ப்ராபகவரணம் ப்ராப்யாந்தரத்துக்கு அன்று என்னுமிடஞ்சொல்லுகை, இப்போது ப்ராப்யம் சொல்லுகிற இதுக்கு ப்ரயோஜநம் என்றபடி.
அவ: ‘ப்ராப்யாந்தரங்களை விட்டு இந்த ப்ராப்யத்தை அபேக்ஷிக்கவேண்டுவானென்? என்கிற ஶங்கையிலே அருளிச் செய்கிறார் ‘உபாயாந்தரங்களை விட்டு’ என்று தொடங்கி.
மூ:162. உபாயாந்தரங்களைவிட்டுச் சரமோபாயத்தைப் பற்றினாப்போலே, உபேயாந்தரமான ஐஶ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது.
வ்யா: அதாவது, உபாயவரணம் பண்ணுகிறவளவில் அநந்ய ஶரணத்வரூபமான ஸ்வரூபத்துக்கு அநுகுணமாகக் கர்மஜ்ஞாநபக்திகளாகிற உபாயாந்தரங்களை விட்டுச் சரமமான ஸித்தோபாயத்தை பற்றினாற்போலே, உபேய ப்ரார்த்தனை பண்ணுகிறவளவிலும் அநந்யபோகத்வரூபமான ஸ்வரூபத்துக்கு அநுகுணமாக உபேயாந்தரமான ஐஶ்வர்ய கைவல்யங்களைவிட்டுச் சரமமான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது- என்கை.
அவ: நினைவறியும் ஈஶ்வரன் பக்கல் ப்ரார்த்தனை மிகையென்றிருப்பார் பண்ணும் ப்ரஶ்நத்தை அநுவதிக்கிறார் ‘இவன் அர்த்திக்கவேணுமோ? ஸர்வஜ்ஞன் இவன் நினைவறியானோ? என்னில்’ என்று.
மூ:163. இவன் அர்த்திக்கவேணுமோ? ஸர்வஜ்ஞன் இவன் நினைவறியானோ? என்னில்.
அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார் ‘இவன் பாசுரங்கேட்டவாறே திருவுள்ளமுகக்கும்’ என்று.
மூ:164. இவன் பாசுரங்கேட்டாவாறே திருவுள்ளம் உகக்கும்.
வ்யா: அதாவது ருக்ணதையாலே சோற்றில் ஆஶையற்றுக்கிடந்த ப்ரஜை ரோகந்தீர்ந்து பசிவிளைந்து “சோறு” என்று அபேக்ஷிக்கும் பாசுரங்கேட்டால் பெற்றதாய் உகக்குமாபோலே, அநாதிகாலம் ப்ராப்யாந்தர ப்ராவண்யமாகிற நோய் கொண்டு இந்த ப்ராப்யத்தில் நஶையற்றுக் கிடந்தவன் இதிலே ருசி பிறந்து தன் பக்கலிலே வந்து இத்தை அபேக்ஷிக்கிற பாசுரங்கேட்டவாறே, ஶேஷியான அவன் திருவுள்ளம் உகக்கும்; அதுக்காக அர்த்திக்கிறானித்தனை- என்கை.
அவ: இனி, இவ்வாக்யத்துக்கு ப்ரதிபதம் அர்த்தம் அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் பற்றி ப்ரதம பதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘ஸ்ரீமதே’ என்று.
மூ:165. ஸ்ரீமதே – பெரியபிராட்டியாரோடே கூடியிருந்துள்ளவனுக்கு.
வ்யா: அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார். ‘பெரிய பிராட்டியாரோடே கூடியிருந்துள்ளவனுக்கு’ என்று இங்கும் ஸ்ரீஶப்தத்துக்குப் பூர்வ வாக்யத்திற்சொன்ன வ்யுத்பத்தித்வயமும் அதில் அர்த்தமும் மதுபர்த்தமான நித்யயோகமும் அநுஸந்தேயம்.
அவ: இரண்டிடத்திலும் நித்ய யோகம் ஒத்திருக்கச்செய்தே அவ்வவதஶாநுகுணமாக இவளிருக்கும் இருப்பை அருளிச்செய்கிறார் – ‘அவன் உபாயமாமிடத்தில்’ என்று தொடங்கி.
மூ:166. அவன் உபாயமாமிடத்தில் தான் புருஷகாரமாயிருக்கும்; அவன் ப்ராப்யனாமிடத்தில் தான் ப்ராப்யையுமாய்க் கைங்கர்ய வர்த்தகையுமாயிருக்கும்.
வ்யா: – அதாவது, அவன் சேதநர்க்கு அநிஷ்டநிவ்ருத்தி இஷ்டப்ராப்திகளுக்கு உபாயமாமிடத்தில் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்கத்தை ஸஹியாமையாலே தான் உபாயபாவத்தில் அந்வயமின்றிக்கே, ஸாபராத சேதநருடைய அபராதங்களைப் பார்த்து அவன் சீறுமளவில், அத்தை ஸஹித்து அங்கீகரிக்கும்படியாகப் பண்ணும் புருஷகாரமாயிருக்கும்; அவன் சேதநர்க்குக் கைங்கர்ய ப்ரதிஸம்பந்திதயா ப்ராப்யனாமிடத்தில், அவனோபாதி கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியாய்க் கொண்டு தான் ப்ராப்யையுமாய், இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை அவன் திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப்படுத்தி உகப்பிக்கையாலே கைங்கர்ய வர்த்தகையுமாயிருக்கும் – என்கை. இது தன்னைப் பரந்தபடியிலே “பூர்வவாக்யத்தில் ஸ்ரீமச்சப்தம் சேதநருடைய அபராதத்தையும் ஈஶ்வரனுடைய ஸ்வாதந்தர்யத்தையுங்கண்டு, “இவர்கள் அவனுடைய க்ரோதத்துக்கு விஷயபூதராய் நஶித்துப்போகாதே, இவனைக் கிட்டி உஜ்ஜீவித்துப் போக வேணும்”, என்று ஸாபராதரான சேதநரை ஈஶ்வரனோடே சேர்க்கைக்காக என்று மொக்க விடாதேயிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது; இங்குத்தை ஸ்ரீமச்சப்தம் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வத்தைப் பற்றவும், இவர்கள் பண்ணுங்கைங்கர்யத்தை ஈஶ்வரன் திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப் படுத்துகைக்காகவும் அநுபவ விச்சேதத்தில் தனக்கு ஸத்தாஹாநி பிறக்கும்படி இருக்கையாலே, நிரந்தர ஸம்ஶ்லேஷத்துக்காகவும், அவனை க்ஷணகாலமும் பிரியாதே ஸர்வகாலமும் ஸம்ஶ்லிஷ்டையாயிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது” என்று விஸ்தரேண அருளிச்செய்தார்.
அவ: திருமந்திரத்தில் உத்தரபதத்துக்கு இவ்வுத்தரவாக்யம் விவரணமாயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார் ‘இதிலே’ என்று தொடங்கி.
மூ:167. இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விஶதமாக அநுஸந்திக்கிறது.
வ்யா: அதாவது, கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி ஒரு மிதுநமென்னுமிடத்தை ஶாப்தமாக ப்ரதிபாதிக்கிற இந்த வாக்யத்திலே, திருமந்திரத்தில் “நாராயணாய” என்று கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி ஒரு மிதுநமென்னுமிடம் ஆர்த்தமாகையாலே அவிஶதமாகச்சொன்ன ப்ராப்யத்தை விஶதமாக அநுஸந்திக்கிறது- என்கை. அங்கு “நாராயணனுக்கே அடிமை செய்யப் பெறுவேனாக வேணும்” என்கிற இவ்வளவொழிய, ‘அடிமை கொள்ளுமவன் ஸ்ரீமானாகவேணும்’என்றும், ‘அடிமை செய்யுமவன் நிர்மமனாகவேணும்’என்றும் சொல்லாமையாலும், அவை இரண்டும் இங்குச் சொல்லுகையாலுமிறே, அந்தப் பதத்துக்கு இவ்வாக்யம் விவரணமாயிற்று.
அவ: ‘இம்மிதுநத்துக்கே அடிமை செய்யவேணும் என்கிற நிர்ப்பந்தந்தானென்?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘இளையபெருமாளைப்போலே’ என்று தொடங்கி.
மூ:168. இளையபெருமாளைப்போலே இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை.
வ்யா: அதாவது,
भवांस्तु सह वैदेह्या गिरिसानुषु रंस्यते|
अहं सर्वं करिष्यामि जाग्रत: स्वपतश्च ते ||
(ப4வாம்ஸ்து ஸஹவைதே3ஹ்யா கி3ரிஸாநுஷு ரம்ஸ்யதே| அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்3ரதஸ் ஸ்வபதஶ்ச தே||) என்று பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப்போலே, இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபப்ராப்தம் – என்கை. மிதுந ஶேஷத்வம் ஸ்வரூபமானால் மிதுந கைங்கர்யமிறே ஸ்வரூப ப்ராப்தம்.
அவ: இன்னும் அச்சேர்த்தியிலே அடிமை செய்யுமளவிலுள்ள வாசியை அருளிச் செய்கிறார் ‘அடிமை’ என்று தொடங்கி.
மூ:169. அடிமைதான் ஸித்திப்பதும் ரஸிப்பதும் அச்சேர்த்தியிலே.
வ்யா: அதாவது ஸ்வதந்த்ரனான ஈஶ்வரன் உபேக்ஷியாமல் கைங்கர்யங் கொண்டருளும்படி பண்ணுமவள் இவளாகையாலே सीतामुवाच (ஸீ தாமுவாச), सीता समक्षम् काकुत्स्थमिदं वचनमब्रवीत् (ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தமிதம் வசநம் அப்3ரவீத்) என்று இவள் முன்னிலையாகத் தம்முடைய ஸ்வரூபாநுரூபமான அடிமையை அபேக்ஷித்துப் பெற்ற இளைய பெருமாளைப்போலே, இவன் ‘ப்ரார்த்திக்கிற அடிமைதான் ஸித்திப்பதும், மாதாபிதாக்கள் இருவருமான சேர்த்தியிலே ஶுஶ்ரூஷைபண்ணும் புத்ரனுக்குப்போலே, செய்கிற அடிமைதான் ரஸிப்பதும் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே- என்கை.
அவ: இனி, இரண்டாம் பதத்தை உபாதாநம் பண்ணுகிறார் – ‘நாராயணாய’ என்று. அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் – ‘ஸர்வஶேஷியாயுள்ளவனுக்கு’ என்று.
மூ:170. நாராயணாய – ஸர்வஶேஷியாயுள்ளவனுக்கு.
வ்யா: நாராயணத்வம், உபயவிபூதி நாதத்வமாகையாலே “ஸர்வஶேஷியாயுள்ளவனுக்கு” என்கிறார். கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியாவான் ஶேஷியிறே.
அவ: கைங்கர்யந்தான் அநுபவஜநித ப்ரீதிகாரிதமாகையாலும், அந்த ப்ரீதிதான் அநுபாவ்ய விஷயாதீநையாகையாலும், அநுபாவ்ய விஷயம் சொல்ல வேண்டுகையாலே அருளிச்செய்கிறார், ‘இதிலே திருமேனியையும் குணங்களையும் சொல்லும்’ என்று.
மூ:171. இதிலே திருமேனியையும் குணங்களையும் சொல்லும்.
வ்யா: அதாவது, கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிற இப்பதத்திலே, கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியாயிருக்கும் அநுபவத்துக்கு விஷயமான திவ்யமங்கள விக்ரஹத்தையும், கல்யாண குணங்களையும் சொல்லும்- என்கை. सदा पश्यन्ति (ஸதா பஶ்யந்தி) என்றும், सोश्नुते सर्वान् कामान् (ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந்) என்றும் இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே திவ்யமங்கள விக்ரஹமும் கல்யாண குணங்களும், रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति (ரஸம் ஹ்யேவாயம் லப்3த்3வாநந்தீ3 பவதி) என்கிற ஸ்வரூபத்தோபாதி கைங்கர்ய வர்த்தகங்களுமாய். போக்யங்களுமாயிறே இருப்பது; ‘குணங்கள்’ என்று ஸாமாந்யேந சொல்லுகையாலே ஜ்ஞாநஶக்த்யாதி குணங்களோடு வாத்ஸல்யாதி குணங்களோடு ஶெளர்யாதி குணங்களோடு வாசியற எல்லா குணங்களும் அநுபாவ்யங்களாயிருக்கையாலே பூர்வவாக்யத்தில் நாராயண பதத்தில் உபாய வரணத்துக்கு உபயுக்ததயா அநுஸந்தேயங்களான குண விஶேஷங்களும் இப்பதத்தில் ப்ராப்யதயா அநுஸந்தேயங்கள்; ஆஶ்ரயமான ஸ்வரூபத்துக்கு ஆகார த்வயமுண்டாயிருக்கிறாப்போலே ஆஶ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகாரத்வயமும் உண்டாயிறேயிருப்பது. இவையெல்லாம் பரந்தபடியிலே அருளிச்செய்தார்.
அவ: இனி இப்பதத்துக்குத் தாத்பர்யம் இன்னதிலே என்கிறார்- ‘ஶேஷித்வத்திலே நோக்கு’ என்று.
மூ:172. ஶேஷித்வத்திலே நோக்கு.
வ்யா: அதாவது, அநுபாவ்யத்வம் அவிஶிஷ்டமாகையாலே ஸகலகுணங்களும் ப்ரதிபாதிதமாயிருந்ததேயாகிலும், சதுர்த்யம்ஶத்தில் சொல்லுகிற வ்ருத்தி விஶேஷத்துக்கு மிகவும் அந்தரங்கமாயிருப்பது ஶேஷித்வமாகையாலே, அதிலே இப்பதத்துக்கு நோக்கு- என்கை.
அவ: இந்த ஶேஷித்வ கதநத்துக்கு ப்ரயோஜநமருளிச் செய்கிறார் ‘ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யமிறே ரஸிப்பது’ என்று.
மூ:173. ப்ராப்தவிஷயத்தில் கைங்கர்யமிறே ரஸிப்பது.
வ்யா: அதாவது, सर्वं परवशम् दु:खं (ஸர்வம் பரவஶம் து:க்க2ம்) என்றும்,सेवा श्ववृत्ति: (ஸேவா ஶ்வவ்ருத்தி:) என்றும் சொல்லுகிறபடியே நிஷித்தமான அப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் போலன்றிக்கே, छाया वा सत्वमनुगच्छेत् (சாயா வா ஸத்வமநுக3ச்சேத்) என்றும், सा किमर्थं न सेव्यते (ஸா கிமர்த்தம்ந ஸேவ்யதே) என்றும் சொல்லுகிறபடியே, விஹிதமான ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமிறே இவனுக்கு ரஸிப்பது- என்கை.
அவ: இனி இப்பதத்தில் விபக்த்யம்ஶத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார்,‘இந்தச் சதுர்த்தி’ என்று தொடங்கி.
மூ:174. இந்தச் சதுர்த்தி கைங்கர்யத்தை ப்ரகாஶிப்பிக்கிறது.
வ்யா: அதாவது, ஶேஷத்வ ஜ்ஞாந கார்யமான உபாய பரிக்ரஹத்துக்கு அநந்தரம் ப்ராப்தமாயுள்ளதாகையாலே, தாதர்த்ய ப்ரதிபாதகமன்றிக்கே, இந்தச் சதுர்த்தி பரிக்ரஹித்த உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தை ப்ரகாஶிப்பிக்கிறது – என்கை. கைங்கர்யத்தை ப்ரகாஶிப்பிக்கையாவது- கைங்கர்ய ப்ராத்தனையை ப்ரதிபாதிக்கை. கைங்கர்யமாவது- பகவந் முகவிகாஸ ஹேதுவான வ்ருத்தி விஶேஷம். இக்கைங்கர்யந்தான் एतत् साम गायन्नास्ते
(ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே) என்றும், नम इत्येव वादिन: (நம இத்யேவ வாதி3ந:) என்றும், येन येन धाता गच्छति | तेन तेन सह गच्छति|| (யேந யேந தா4தா க3ச்சதி தேந தேந ஸஹ க3ச்சதி) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வாசிக காயிக ரூபமாயிருக்கும்.
அவ: ‘இக்கைங்கர்யம் ப்ரார்த்தநீயமாகில் காதாசித்கமாகாதோ?’ என்ன அருளிச்செய்கிறார் ‘கைங்கர்யந்தான் நித்யம்’ என்று.
மூ:175. கைங்கர்யந்தான் நித்யம்.
வ்யா: அதாவது, ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகையாலும், अकिञ्चित् करस्य शेषत्वानुपपत्ति: (அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி:) என்கிறபடியே கிஞ்சித்காராபாவத்தில் அதுதான் அநுபபந்நமாகையாலும் கைங்கர்யம் ஆத்மாவுக்கு நித்யம் – என்கை. ஆகையாலிறே, नित्यकिङ्कर: प्रहर्षयिष्यामि (நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி) என்றும், नित्यकिङ्करो भवानि (நித்யகிங்கரோ பவாநி) என்றும் ஆசார்யர்கள் அருளிச்செய்தது.
அவ: ‘நித்யமாயிருக்குமாகில் ப்ரார்த்திக்கவேணுமோ?’ என்ன அருளிச்செய்கிறார்- ‘நித்யமாக ப்ரார்த்தித்தே பெறவேணும்’ – என்று.
மூ:176. நித்யமாக ப்ரார்த்தித்தே பெறவேணும்.
வ்யா: அதாவது, விஷயம் உத்துங்கமாயிருக்கையாலும், ஆஶ்ரயபூதனான சேதநன் அத்யந்த பரதந்த்ரனாயிருக்கையாலும் ப்ரார்த்தநா விஶேஷம் இல்லாதபோது கைங்கர்யம் ஸித்தியாமையாலும், நித்யமாக ப்ரார்த்தித்தே பெறவேணும் – என்கை.
அவ: இது நித்யப்ரார்த்தநீயமாகைக்கு நிதாநத்தை அருளிச்செய்கிறார் ‘ஶேஷிக்கு’ என்று தொடங்கி.
மூ:177. ஶேஷிக்கு அதிஶயத்தை விளைக்கை ஶேஷபூதனுக்கு ஸ்வரூபலாபமும் ப்ராப்யமும்.
வ்யா: அதாவது, नाकिञ्चित्कुर्वत: शेषत्वं (நாகிஞ்சித் குர்வதஶ்ஶேஷத்வம்) என்கிறபடியே ஶேஷிக்கு அதிஶயகரமல்லாத வஸ்துவுக்கு ஶேஷத்வம் இல்லாமையாலே, ஶேஷியான ஈஶ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விஶேஷங்களாலே ப்ரீதிரூபமான அதிஶயத்தை விளைக்கை ஶேஷ பூதனானவனுக்குத் தன் ஸ்வரூபலாபமுமாய், அவனுடைய முகோல்லாஸாநுபவத்துக்கு உறுப்பாயிருக்கையாலே ப்ராப்யமுமாயிருக்கும்- என்கை. ஆகையாலே நித்யப்ரார்த்தநீயமாயிருக்குமென்று கருத்து.
அவ: அநந்தரம் சரம பதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘நம:’ என்று. அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘கைங்கர்யத்தில் களையறுக்கிறது’ என்று.
மூ:178. நம: கைங்கர்யத்தில் களையறுக்கிறது.
வ்யா: அதாவது, நமஶ்சப்தம் ஸாமாந்யேந அஹங்கார மமகாரங்களைக் கழிக்கையாலே, திருமந்திரத்தில் மத்யம பதமான நமஶ்ஶப்தம்போலே ஸ்வரூப உபாய புருஷார்த்தவிரோதிகள் மூன்றையும் கழிக்கவற்றாயிருந்தேயாகிலும், இங்கு அங்ஙனன்றிக்கே, கைங்கர்ய ப்ரார்த்தநாநந்தரோக்தமாகையாலே, இந்தக் கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது- என்கை.
அவ: ‘கைங்கர்யத்துக்குக் களை எது?’ என்ன அருளிச்செய்கிறார் – ‘களையாவது தனக்கென்னப்பண்ணுமது’ என்று.
மூ:179. களையாவது தனக்கென்னப் பண்ணுமது.
வ்யா: தனக்கென்னப் பண்ணுகையாவது, भोक्ताऽहं मम भोगोऽयं (போ4க்தாஹம் மம போ4கோ3யம்) என்கிறபடியே, இத்தைத் தன்னுடைய ரஸத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை; பகவந் முக விகாஸ ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற ப்ரதிபத்தியொழிய, இதில் போக்த்ருத்வ ப்ரதிபத்தியும், மதீயத்வ ப்ரதிபத்தியும் நடக்குமாகில், அபுருஷார்த்தமாயிறே இருப்பது.
அவ: இன்னும் இந்தக் கைங்கர்ய ப்ராப்திக்கு விரோதிகளானவையும் இதிலே தள்ளுண்ணும் என்கிறார் ‘இதிலே அவித்யாதிகளும் கழியுண்ணும்’ என்று.
மூ:180. இதிலே அவித்யாதிகளும் கழியுண்ணும்.
வ்யா: அதாவது, அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந்நமஸ்ஸிலே,
अनात्मन्यात्म बुद्धिर्या अस्वे स्वमिति या मति:|
अविद्यातरुसंभूति बीजमेतत् द्विधा स्थितम् ||
(அநாத்மந்யாத்ம பு3த்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மிதி:|
அவித்4யா தருஸம்பூ4தி பீஜமேதத் த்3விதா ஸ்திதம்||),
என்கிறபடியே அநாத்மந்யாத்ம புத்த்யாதிகளை வடிவாகவுடைத்தாய்க் கர்மோத்பத்தி காரணமாயிருந்துள்ள அவித்யையும், தத்கார்யமான கர்மங்களும், தத்கார்யமாய்வரும் ப்ரக்ருதி ஸம்பந்தமும் எல்லாம் கழியுண்ணும் என்கை. ஆகையிறே, த்வயவிவரணமான கத்யத்திலே நமஶ்ஶப்தார்த்தத்தை அநுஸந்தித்தருளுகிறவளவில், मनोवाक्कायै: (மநோவாக்காயை:) இத்யாதி சூர்ணையாலே, அக்ருத்யகரணாத்யகில கர்மநிவ்ருத்தியையும், अनादि काल प्रवृत्त (அநாதி3காலப்ரவ்ருத்த) இத்யாதி சூர்ணையாலே, அவித்யா நிவ்ருத்தியையும், मदीयानादि (மதீ3யாநாதி3) இத்யாதி சூர்ணையாலே, ப்ரக்ருதி ஸம்பந்த நிவ்ருத்தியையும் பாஷ்யகாரர் ப்ரார்த்தித்தருளிற்று.
அவ: ஆனாலும் இதுக்கு ப்ரதாநார்த்தம் கைங்கர்யத்தில் ஸ்வப்ரயோஜந நிவ்ருத்தியாகையாலே, அத்தை உபபாதிக்கிறார் மேல். அதில் ப்ரதமத்திலே ‘கைங்கர்யம் பண்ணும்போது நாம் எப்படியாகவேணும்? என்ன, அருளிச்செய்கிறார் ‘உனக்கே நாமாட்செய்வோம்’ என்னும்படியேயாக வேணும் என்று.
மூ:181. “உனக்கே நாமாட்செய்வோம்” என்னும்படியே ஆகவேணும்.
வ்யா: அதாவது கைங்கர்யம் பண்ணுமளவில், “உனக்கே நாமாட்செய்வோம்”, என்று “உனக்கும் எங்களுக்குமாயிருக்கும் இருப்புத்தவிர்ந்து, உனக்கேயுகப்பாக நாங்கள் அடிமை செய்யவேணும்”, என்கிறபடியே, ஶேஷிக்கே உகப்பாகப் பண்ணவேணும்- என்கை. “தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே”, என்றிறே ஆழ்வாரும் அருளிச்செய்தது.
அவ: இனி இந்தக் கைங்கர்யத்துக்கு விக்நங்களை அருளிச் செய்கிறார் ‘ஸெளந்தர்யம்’ இத்யாதி வாக்யத்வயத்தாலே.
மூ:182. ஸௌந்தர்யம் அந்தராயம்; கீழ்ச் சொன்ன கைங்கர்யமும் அப்படியே.
வ்யா: அதாவது, அவனுடைய விக்ரஹ ஸௌந்தர்யமும் சித்தாபஹாரியாய்க் கைசோரப் பண்ணுகையாலே, கைங்கர்யத்துக்கு விக்நம்; இந்நமஸ்ஸுக்குக் கீழே சதுர்த்தியிற்சொன்ன கைங்கர்யமும் அபிமத விஷயபரிசர்யைபோலே ஸ்வரஸத்துக்கு உடலாயிருக்கையாலே, அவனுடைய முகமலர்த்தியே ப்ரயோஜநமாக இருக்குமதுக்கு அதுவும் விக்நம் – என்கை.
அவ: இப்படியாகையால், இவ்விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை இடைவிடாமல் நடக்கும்படியே அருளிச்செய்கிறார்- ‘கைங்கர்ய ப்ரார்த்தனைபோலே’- என்று தொடங்கி.
மூ:183. கைங்கர்ய ப்ரார்த்தனைபோலே, இப்பதத்தில் ப்ரார்த்தனையும் என்றுமுண்டு.
வ்யா: அதாவது, சதுர்த்தியிற்சொல்கிற கைங்கர்ய ப்ரார்த்தனை காதாசித்கமன்றிக்கே நித்யமாய்ச் செல்லுமாபோலே, இப்பதத்திற் சொல்லுகிற கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனையும், இங்கிருக்கும் காலத்தோடு ப்ராப்யபூமியிற்போன காலத்தோடு வாசியற எல்லாக் காலமும் நடக்கக்கடவதாயிருக்கும் – என்கை.
அவ: ‘கந்தல் கழிந்த அந்நிலத்திலும் ஸ்வபோக்த்ருத்வ உதயம் உண்டாமோ?’ என்ன அருளிச்செய்கிறார் “மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்னாநின்றதிறே” என்று.
மூ:184. ”மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு”, என்னாநின்றதிறே.
வ்யா: அதாவது, உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆநந்தத்துக்கு ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விளைத்து, ஸ்வரூபத்தை அழியாதபடி ஸாத்மிப்பிக்கும் பேஷஜமானவனே! என்று நித்யஸூரிகள்பேசும் பாசுரமாகச் சொல்லாநின்றதிறே- என்கை. ஆகையால் அவ்விஷய வைலக்ஷண்ய ப்ரயுக்தமாய் வரும் ஸ்வபோக்த்ருத்வ புத்தி அங்கும் விளைகையாலே, இப்பதத்தில் ப்ரார்த்தனை என்றுமுண்டு என்னுமிடம் ஸித்தமென்றதாயிற்று. ஆகையிறே, முக்தர்க்கு லக்ஷணம் சொல்லுகிறவிடத்திலே, नम इत्येव वादिन: (நம இத்யேவ வாதிந:) என்றது.
ஆக, புருஷகாரத்தையும் தந்நித்யயோகத்தையும், ததுத்பாவிதமான வாத்ஸல்யாதி குணங்களையும், அந்த குணப்ரகாசகமான திவ்யமங்கள விக்ரஹத்தையும், குண விக்ரஹ விஶிஷ்ட வஸ்துவினுடைய உபாயத்வத்தையும், அவ்வுபாய ஸ்வீகாரத்தையும், தத்பலமான கைங்கர்யத்துக்கு ப்ரதிஸம்பந்தி ஒரு மிதுநமென்னுமத்தையும், அவ்வஸ்துவினுடைய ஸர்வஶேஷித்வத்தையும், தத்விஷய கைங்கர்யத்தையும், கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும் சொல்லிற்றாயிற்று.
த்வய ப்ரகரணம் வ்யாக்யாநம் முற்றிற்று.
பெரியஜீயர் திருவடிகளே சரணம்.