பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
நவரத்நமாலை
ஶரணாகதனானவன் -1. தன்னையும், 2. தனக்கு விரோதியான தேஹத்தையும், 3. தேஹத்தைப் பற்றிவரும் பந்துக்களையும், 4. ஸம் ஸாரிகளையும், 5. தேவதாந்தரங்களையும், 6. ஸ்ரீவைஷ்ணவர்களையும், 7, ஆசார்யனையும், 8. பிராட்டியையும், 8. ஈஶ்வரனையும் நினைத் திருக்கும்படி எங்ஙனேயென்னில்
- உடம்பில் வேறுபட்டு நித்யனாய், ஒருபடிப்பட்டு அணுவாய், ஜ்ஞாநத்தையும் ஆநந்தத்தையும் வடிவாகவுடையனாய், ஜ்ஞாநத்துக்கும் ஆநந்தத்துக்கும் இருப்பிடமாய், எம்பெருமானை யொழிய வேறொன்று நினைத்தல் சொல்லுதல் செய்யமாட்டாதே எம்பெருமானுக்கேயுரியனாய், தன் காரியத்துக்குத் தான் கடவனன் றிக்கே அவனையே பலமாகவுடையனாயிருக்குமென்று தன்னை நினைப்பான்.
- தன்னை உள்ளபடி அறியவொட்டாதே விபரீத ஜ்ஞாநத்தை ஜநிப்பித்து இருபத்துநாலு தத்வங்களினுடைய திரளாய், அநித்யமாய், எப்போதுமொக்கப் பரிணமிக்கக்கடவதாய், ஒருநாளும் ஜ்ஞாநத்துக்கு இருப்பிடமன்றிக்கே அந்த து:க்கங்களை விளைப்பிக்கக் கடவதாய், ஶப்தாதிவிஷயங்களிலே மூட்டி நஶிப்பிக்குமென்று தன் தேஹத்தை நினைப்பான்.
- ஆத்மஜ்ஞாநத்தையும், பகவத்ஜ்ஞாநத்தையும், பகவத்விஷயத் தில் ருசியையும், த்வரையையும் குலைத்து, தேஹாத்மாபிமாநத்தை யும், அஹங்கார மமகாரங்களையும், காமக்ரோதாதிகளையும் விளைப்பித்து, பலபடியாலும் அநர்த்தத்தைப் பண்ணுவார்களென்று தேஹத்தைப் பற்றிவரும் பந்துக்களை நிக்னப்பான்.
- பகவதநுபவத்துக்கும் பகவத்கைங்கர்யத்துக்கும் விரோதிக ளாய் ஸம்ஸாரவர்த்தகராயிருப்பார்களென்று ஸம்ஸாரிகளை நினைப்பான்.
- 5. அஜ்ஞராய், அஶக்தராய், எம்பெருமான்பக்கலிலே பிறந்து அவன் கொடுத்த பதங்களையுடையராய், அவனோடே எதிரிட்டு துர்மாநிகளாய், தங்களைப் போரப்பொலிய நினைத்து நாட்டாரை ப்ரமிப்பித்து அநர்த்தத்தைப் பண்ணுவார் சிலரென்று தேவதாந்த ரங்களை நினைப்பான்.
- பகவத்ஜ்ஞாநத்துக்கும் இதர விஷய வைராக்யத்துக்கும் பகவத் பக்திக்கும் வர்த்தகராய், உசாத்துணையாய், ப்ராப்யத்துக்கு எல்லை நிலமாயிருப்பார்களென்று ஸ்ரீவைஷ்ணவர்களை நினைப்பான்.
- ‘தன் கடாக்ஷத்தாலே என்னைத் திருத்தி, ஸர்வேஶ்வரன் கைக் கொள்ளுகைக்கு யோக்யனாம்படி பண்ணி, அவன் திருவடிகளிலே சேர்த்து (திருவாய் 2.3.2) அறியாதன அறிவித்து, ஸ்வாமியாய், என்று மொக்க அடிமைகொள்ளும் மஹோபகாரகன்’ என்று ஆசாரியனை நினைப்பான்.
- நம்முடைய ஸர்வாபராதத்தையும் பொறுப்பித்து, ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் குலைத்து, அவனுடைய காருண்ய வாத்ஸல் யாதி குணங்களைக் கிளப்பி, நமக்குப் புருஷகாரபூதையாய், மாதாவாய், ஸ்வாமிநியாய், ப்ராப்யையாயிருக்குமென்று பிராட்டியை நினைப்பான்.
- ஸ்ருஷ்டி காலத்திலே ஶரீரத்தையும் இந்த்ரியங்களையும் தந்து, அந்தர்யாமியாய் நின்று ஸத்தையை நோக்கி, அத்வேஷத் தையும் ஆபிமுக்யத்தையும் ஸத்ஸங்கதி தொடக்கமான ஆத்ம குணங்களையும் பிறப்பித்து ஸதாசார்யனோடே சேர்த்து, நம்முடைய ஸர்வாபராதங்களையும் பொறுத்து, ஸம்ஸார ஸம்பந்தத்தையுங் கழித்து, அர்ச்சிராதிமார்க்கத்தையும் பரமபதத்தையும் குணாநுபவத் தையும் தந்து, யாவதாத்மபாவி நித்யகைங்கர்யங்கொள்ளும் ஸ்வாமி யென்று ஸர்வேஶ்வரனை நினைப்பான்.
நவார்த்தரத்நமாலேயம் ஸத்பிர்தார்யா ஸதா ஹ்ருதி |
பத்தா யேநாsதியஶஸா தம் ஜகத்குருமாஶ்ரயே ||
நவரத்நமாலை முற்றிற்று.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்