சரமச்லோகப்ரகரணம்
அவதாரிகை
பக்தியிலும் ப்ரபத்திக்கு நெடுவாசி உண்டு: ஆசார்ய ருசிபரிக்ரஹம்; ஸர்வாதிகாரம்; தேஹாவஸாநத்திலே பலம்; அந்திம ஸ்ம்ருதி வேண்டா; பரமசேதநம்; ஸித்த ஸ்வரூபம்; ஸஹாயாந்தர நிரபேக்ஷம்; அவிலம்ப்ய பலப்ரதம்; ஸ்வரூபாநுரூபமான உபாயம்; ப்ராப்யாநு ரூபமான உபாயம்.
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிற ஶ்லோகத்திற்சொல்லுகிற தர்மபரித்யாகம், ஶாஸ்த்ரவிரோதத்தாலும், அநுஷ்டானவிரோதத்தாலும், ப்ரகரணவிரோதத்தாலும் அயுக்தம். “யாவஜ்ஜீவமக்நிஹோத்ரம் ஜுஹுயாத்” “தர்மேண பாபமபநுததி” “யஜ்ஞேந தாநேந தபஸாநாஶகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி” “ஸர்வாபேக்ஷா ச. யஜ்ஞாதி, ஶ்ருதேரஶ்வவத்” என்று ஜ்ஞான ஸாதநமாகக் கர்மத்தை அவஶ்யாநுஷ்டேயமாக ஓதுகையாலும் “ப்ரஹ்ம விதாப்நோதி பரம்” “தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி” “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி” “ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்ய முபைதி” “அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது:” “வித்யாத் து புருஷம் பரம்” என்று. வேதநவிஶேஷத்தை பகவத் ப்ராப்தி ஸாதநமாக விதிக்கையாலும், “யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய:, தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” “பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஜ்ஞாநஸ்வரூபம் பரிபஶ்யதீஹ” “ஹ்ருதாமநீஷா மநஸாபி க்லுப்த:” என்று ப்ராப்திஸாதநமாக பக்தியை விதிக்கையாலும், இவற்றி னுடைய த்யாகம் ஶாஸ்த்ரவிருத்தம். “சுகோ முக்த: வாமதேவோ முக்த:” என்று முக்தராக ஶ்ருதரான ஶுகாதிகளோடு, உபமாநமஶேஷாணாம் ஸாதூநாம்” என்னப்பிறந்த ப்ரஹ்லாதனோடு, பரதஸௌபரிப்ரப்ருதிகளான அல்லாத முமுக்ஷுக்களோடு வாசியற, கர்மஜ்ஞாநாதிகளையே அநுஷ்டித்துப் போருகையாலே, தர்மத்யாகவிதி அநுஷ்டானத்தோடும் விரோதிக்கும். “நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:” “கர்மணைவ ஹி ஸம்ஸித்தி மாஸ்திதா ஜநகாதய:” ”ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே” “ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஶம் பவித்ரமிஹ வித்யதே” “ஜ்ஞாநாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா” “போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம் ருச்சதி” “பக்த்யா மாமபிஜாநாதி” “பக்த்யா த்வநந்யயா ஶக்ய:” “மத்பக்திம் லபதே பராம்” “மந்மநாபவ மத்பக்த:” என்று ஸாதரமாகவும் ஸவிஸ்தரமாகவும் பதினெட்டோத்தாலும் உபதிஷ்டமான கர்மாதித்யாகம் ப்ரகரணவிருத்தம். ஆக, ஶாஸ்த்ரவிரோதமும், கர்மஜ்ஞாநா நுஷ்டான விரோதமும், ப்ரகரணவிரோதமும் பிறக்கையாலே, இஶ்லோகத் துக்கு இவற்றோடு சேர்ந்த அர்த்தம் அர்த்தமாமித்தனை; விருத்தமான த்யாகம் அர்த்தமாகமாட்டாது என்று சிலர் சொன்னார்கள்.
ஶாஸ்த்ரவிரோதமும், அநுஷ்டானவிரோதமும், ப்ரகரணவிரோதமும் பிறவாமையாலே அது அர்த்தமாகாது. “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை தம் ஹ தேவமாத்மபுத்திரப்ரஸாதம் முமுக்ஷர் வை ஶரணமஹம் ப்ரபத்யே” “தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:” “ந்யாஸ இதி ப்ரஹ்மா” “தேவாநாம் குஹ்யம்” “ய ஏவம் வேத” “ப்ரஹ்மணோ மஹிமாநமாப்நோதி” “தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவந் மோஹஸ் ததாஸுகம்.” “யாவந்த யாதி ஶரணம் த்வாமஶேஷாகநாஶநம்.” “ஶரண்யம் ஶரணம் யாதோ கோவிந்தம் நாவஸீத தி.” “வ்ருதைவ பவதோ யாதா பூயஸி ஜந்மஸந்ததி:” – “தஸ்யாமந்யதமம் ஐந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ” “தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தபஶ்ஶ்ருதம்” “ஸா தேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம்” என்று ஸர்வதர்மபரித்யாகபூர்வகமாக அநுஷ்டேயையான ப்ரபத்தியையும், பகவத் ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரஸாதநமாக ஶாஸ்த்ரத்திலே விதிக்கையாலே ஶாஸ்த்ர விரோதமில்லை. கர்மஜ்ஞாநாதி விதாயகமான ஶாஸ்த்ரங்களுக்கும், தத்த்யாக பூர்வகமாக அநுஷ்டேயமான ப்ரபத்தியை விதிக்கிற சாஸ்த்ரத்துக்கும், அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலே, ப்ரபத்திஶாஸ்த்ரந்தான் துர்பலமானாலோவென்னில்: ஶாஸ்த்ரத்வம் அவிஶிஷ்டமாகையாலே ப்ரபத்திவிதாயக ஶாஸ்த்ரத்தோடே விரோதம் பிறக்கையாலே, கர்மஜ்ஞாநாதி விதாயகஶாஸ்த்ரந்தான் துர்பலமாயிருக்கை யாலே அதுவுமர்த்தமன்று.
இங்ஙனே விரோதம் சொல்லப்பார்க்கில், ஶ்யேந விதிக்கும், காமனாவிதிக்கும், மோக்ஷவிதிக்கும் அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலும், ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்ததர்மம், பிக்ஷுதர்மம் இவற்றுக்கு அந்யோந்யம் விரோதம் பிறக்கையாலும், “ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி” என்று பூதஹிம்ஸையை நிஷேதித்து வைத்து பஶுவிஶனத்தை விதிக்கையாலும், “யாவாஜ்ஜீவமக்நிஹோத்ரம் ஜுஹுயாத்” என்று அக்நிஹோத்ரஹோமத்தை விதித்துவைத்து, தத்த்யாகத்தை “ஸந்யஸேத் ஸர்வகர்மாணி” என்று விதிக்கையாலும், கர்மத்தை அநுஷ்டேயமாகச் சொல்லிவைத்து, தத்த்யாக பூர்வகமாக – அநுஷ்டேயமான ஜ்ஞாநயோகத்தை விதிக்கையாலும், உபாஸ்யவஸ்துவை “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் என்று ஸகுணமாகச் சொல்லிவைத்து, “நிர்க்குணம் நிரஞ்ஜநம்” என்று குணவிதுரமாகச் சொல்லுகையாலும், ஆக இவ்வோமுகங்களாலே ஆபாதசூடம் பரஸ்பர விருத்தமாகத் தோற்றுகை யாலே ஶாஸ்த்ரமாக த்யாஜ்யமாம். இவ்விரோதத்தை, குணபேதத்தாலும், வர்ணபேதத்தாலும், ஆஶ்ரமபேதத்தாலும், பாகபேதத்தாலும், ருசிபேதத் தாலும், அதிகாரிபேதத்தாலும் பிறக்கையாலே பரிஹரிக்கிறவோபாதி, இதுவும் அதிகாரிபேதத்தாலே பரிஹ்ருதம். ஆகையாலே, ஶாஸ்த்ர விரோத மில்லை. கர்மஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்த ஶுகாதிகளோபாதி, கண்டு முசகுந்தப்ரப்ருதிகளான முமுக்ஷுக்களோடு, துர்வாஸஶ்ஶாப தூஷிதரான தேவதைகளோடு வாசியற ப்ரபத்த்யநுஷ்டானம் பண்ணி பலிக்கக்காண்கை யாலே, அநுஷ்டான விரோதமில்லை. கர்மயோகாதிகளுக்கு ஸஹாநுஷ்டான மில்லாமையாலே, பாகக்ரமநிபந்தனமான அதிகாரிபேதத்தாலே பரிஹரிக் கிறவோபாதி, இதுவும் அதிகாரி பேதத்தாலே பரிஹ்ருதம். ஆகையாலே ப்ரகரணவிரோதமில்லை.
இப்படி ஆபாஸமான ஶாஸ்த்ரவிரோதாதிகளைப் பரிஹரிக்கைக்காகச் சிலர், “கீழ் விஹிதமான கர்மஜ்ஞாநாதிகள் த்ரைவர்ணிகவிஷயம்; இந்த த்யாக பூர்வகப்ரபத்திவிதாநம், அத்ரைவர்ணிக ரான ஸ்த்ரீஶூத்ராதிகள் விஷயம்” என்று விஷயவிபாகம் பண்ணினார்கள். இங்கு விதிவிஷயபூதனான அர்ஜுநன் த்ரைவர்ணிகரிலே அந்யதமனாகை யாலும், “ஸ்த்ரியோ வைஶ்யாஸ் ததா ஶூத்ரஸ் தேபி யாந்தி பராம் கதிம்” என்று அத்ரைவர்ணிகரான ஸ்த்ரீஶூத்ராதிகளுக்கும் பஜனாதிகாரமுண்டாகக் கீழே ஶ்ருதமாகையாலும், ப்ரஸஜ்ய ப்ரதிஷேதம் தர்மாநுஷ்டான யோக்ய ஸ்தலத்திலேயாகையாலும், அதுவும் அர்த்தமன்று.
கர்மபலத்யாகபூர்வகமாக அங்கப்ரபத்தியை விதிக்கிறது என்றார்கள் சிலர். இவ்விடத்தில் கர்மயோகப்ரஸ்தாவமில்லாமையாலும், உண்டானாலும், “மா பலேஷு கதாசந” என்று கீழே உக்தமாகையாலும், தர்மசப்தம் பலவாசியல்லாமையாலும், அதுவும் அர்த்தமன்று.
“கருச்ச்ரசாந்த்ராயணகூஶ்மாண்டவைஶ்வாநரி தொடக்க மான ப்ராயஶ்சித்ததர்மங்களை விட்டு, அந்த ஸ்தானத்திலே என்னையே பற்று” என்கிற பக்ஷமும், அர்ஜுநன் கர்மயோகவிரோதி துஷ்க்ருதத்தை உடையனல்லாமையாலும், மேல்விழுந்த ஊர்வசியையும் அநாதரிக்கும்படி ஜிதேந்த்ரியனாகையாலும், கீழ் ஶோகஜனகமான ப்ராயஶ்சித்தம் அப்ரஸ்துத மாகையாலும், தர்மஶப்தத்தை அவ்வளவிலே ஒதுக்கவொண்ணாமையாலும், அதுவும் அர்த்தமன்று.
“புக்த்வா சாந்த்ராயணம் சரேத்” போலே கர்மயோகாதி களிலே ப்ரம்ஶமுண்டாயிற்றாகில், தத்ப்ராயஶ்சித்தமாக ப்ரபத்தியை விதிக் கிறதென்கிற பக்ஷமும், “நேஹாபிக்ரமநாஶோSஸ்திப்ரத்யவாயோ ந வித்யதே” என்று ப்ராயஶ்சித்தநிரபேக்ஷமாகச் சொல்லுகையாலும், அதுவும் அர்த்தமன்று.
“ஜ்ஞாநயோக லாபத்துக்கு, தத்ஸாதநமான கர்மத்தை விட்டு என்னைப் பற்று” என்கிற பக்ஷமும், ஸாத்யமான ஜ்ஞானத் துக்கு வாசகஶப்தமில்லாமையாலும், ப்ரபத்தியை ஸ்வதந்த்ரமாக விதிக்கை யாலும், தர்மசப்தம் கர்மத்தளவிலே நில்லாமையாலும், விஹிதகர்மத்யாக மாகிற தூஷணம் வருகையாலும், அதுவும் அர்த்தமன்று.
“இத்தை விட்டேயாகிலும் பற்றுவான் என்று ஶரணாகதி ப்ரஶம்ஸை தான்” என்கிற பலமும், ப்ரஶம்ஸையால் ஶோகநிவ்ருத்தி பிறவாமையாலே அதுவும் அர்த்தமன்று
“பூர்ணாஹுதிந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு கர்ம த்யாகத்தில் தாத்பர்யமில்லை; ப்ரபத்த்யநுஷ்டானத்திலே தாத்பர்யம்.” என்கிற பக்ஷமும், கர்மத்யாகத்தையொழிய அநுஷ்டிக்க ஒண்ணாத ப்ரபத்திக்கு, பலத்தையொழியவே அநுஷ்டேயமான பூர்ணாஹூதி ந்யாயம் த்ருஷ்டாந்த மல்லாமையாலே, அதுவும் அர்த்தமன்று.
“ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ” “ரதோபஸ்த உபாவிஶத்” என்று பந்துஹத்யாபயத்தாலே யுத்தாந் நிவ்ருத்தனான அர்ஜுநனை யுத்தத்திலே ப்ரவர்த்திப்பிக்கைக்காக, ப்ரவ்ருத்த மான ப்ரபந்தமாகையாலும், கீழடைய “நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: | ஶரீரயாத்ராபி ச தேந ப்ரஸித்யேதகர்மண: ||” “தர்ம்யாத்தி யுத்தாச் ச்ரேயோந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே” “லோகஸங்க் ரஹமேவாபி ஸம்பஶ்யந் கர்த்துமர்ஹஸி” என்று கர்மம் அவஶ்யகர்த்தவ்ய மென்று சொல்லுகையாலும், “அத சேத் த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி | ததஸ் ஸ்வதர்மம் கீர்த்திஞ்ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||” “ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி” என்று கர்மாநுஷ்டா னத்தில் பாபிஷ்டனாமென்கையாலும் “யே த்வேததப்யஸுயந்தோ நாநு திஷ்டந்தி மே மதம், | ஸர்வஜ்ஞாநவிமூடாம் – ஸ்தாந்வித்தி நஷ்டாந சேதஸ: || என்று தானாதரித்து உபதேசித்த கர்மத்தை ஸாதரமாக அநுஷ்டி யானாகில் நஷ்டனாமென்றும், “மோஹாத்தஸ்ய பரித்யாகஸ் தாமஸ: பரிகீர்த்தித:” என்று, கர்மஸ்வரூபத்யாகத்தை தம:கார்யமாகச் சொல்லுகை யாலும், “ஸங்கம் தயக்த்வா பலஞ்சைவ ஸ த்யாகஸ் ஸாத்விகோ மத:” என்று பலஸங்காதித்யாகமே ஸாத்விகத்யாகமென்றும் விஶேஷித்துச் சொல்லுகையாலும், “ந ஹி தேஹப்ருதா ஶக்யம் த்யக்தும் கர்மாண்ய ஶேஷத:” “நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே” என்று, கரணங்கள் குர்வத் ரூபங்களாகையாலே கர்மத்தை நேராகவிட வொண்ணா மையாலும், விடில் பஞ்சமஹா யஜ்ஞாதிகளையும் விடவேண்டிவருமாகை யாலும், விட்டால் யஜ்ஞஶிஷ்டாஶியாகை தவிர்ந்து அகாஶியாய், ஆஹார ஶுத்தியால் வரும் ஸத்வஶுத்தி குலையும்படியாய் விடுகையாலும், “கர்த்த வ்யாநீதி மே பார்த்த நிஶ்சிதம் மதமுத்தமம்” என்று காமாநுஷ்டானமே தனக்கு உத்தமமாகச் சொல்லுகையாலும் “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ” என்று ஶ்லோகம் கேட்டவனந்தரத்திலே, நீ திருவுள்ள மானபடியே கர்மாநுஷ்டானம் பண்ணக்கடவேன்” என்று அர்ஜுநன் ப்ரதி வசனம் பண்ணுகையாலும், அந்த வசனாநுகூலமாக பாரதயுத்தம் ப்ரவ்ருத்த மாகையாலும், “மாமேவ யே ப்ரபத்யந்தே” “தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே” “தமேவ ஶரணம் கச்ச” என்று அங்கதயா விஹிதமான ப்ரபத்தியை ப்ரதானமாக விதிக்கக்கூடாமையாலும், துஷ்கரமான ஸாதனங்களாலே ஸாத்யமான அர்த்தத்தை ஒரு ப்ரபத்திமாத்ரம் ஸாதிக்கை அநுப்பன்னமாகை யாலும், கீழ் ஸாதநாந்தர துஷ்கரத்வாதிகளாலே ஶோகாவேஶம் பிறந்தமை ஶ்ருதமல்லாமையாலும், “துக்கமித்யேவ யத் கர்ம காயக்லேஶபயாத் த்யஜேத் | ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்” என்று, கர்மத்தினுடைய துஷ்கரத்வாதிகளாலே அத்தை விடில், த்யாகபலஸித்தி யில்லையென்று சொல்லுகையாலும், விஹிதார்த்தாநுஷ்டானம் ஸ்வரூப ஹாநியாகில், விதிநிஷேத ரூபமான ஶாஸ்த்ரங்களைக் குடநீர் வழிய வேண்டுகையாலும், “ஶரணம் வ்ரஜ” என்கிற விதிக்கு வையர்த்யம் பிறக்கை யாலும், ஏகபதத்துக்கு தேவதாந்தரவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸித்திக்கையாலும், இங்குச் சொல்லுகிற த்யாகம் கர்மஸ்வரூபத்யாகமாகமாட்டாது. “ஆகை யாலே, கீழுக்தமான ஸாதனங்களில் பலஸங்காதிகளையும் ஸ்வதந்த்ர ஸாதனத்வப்ரதிபத்தியையும் விட்டு, தத்ஸாதனஸமாராத்யனான என்னையே பலப்ரஸாதகனாக புத்தி பண்ணு; அத்தாலே ப்ரீதனான நான் அந்த கர்ம விஶேஷங்களையும், ப்ரதிபத்தி விஶேஷத்தையும் உடைய உன்னை மத்ப்ராப்திப்ரதிபந்தகமான ஸகல பாபங்களினின்றும் விமுக்தனாக்கக் கடவேன். இப்படி உன் ஸகலவிரோதிகளும் நான் போக்கும்படி எனக்கு ப்ரஸாதனமான கர்மயோகத்தில் கர்த்தவ்யாகர்த்தவ்யபுத்தியால் ஶோகிக்கக் கடவையல்லை” என்று. இது சரம சலோகமாகையாலே கீழே ஶாஸ்த்ரத் தால் உக்தமான அர்த்தத்தையடைய நிகமித்துத்தலைக்கட்டுகிறதென்று சிலர் சொன்னார்கள்.
இங்குச் சொல்லுகிற த்யாகம் கர்மஸ்வரூபத்யாகமாகக் கொள்ளாமையாலே, உபக்ரமத்தோடும், அவனுடைய உக்த்யநுஷ்டானத் தோடும் விரோதமில்லை. “அவஶ்யம் கர்த்தவ்யம்” “பண்ணாவிடில் பாபம் வரும்” என்கிற ஹேதுத்வயமும் “ஆத்மாவலோகனத்துக்கு உறுப்பாகக் கர்மத்தை அனுஷ்டித்தில்லையாகிலும், ஸ்வவர்ணஸ்வாஶ்ரமோசிததர்ம மாகையாலே உனக்கு “ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய” என்கிறபடியே “அவச்யம் கர்த்தவ்யம்; பண்ணாயாகில் அகரணே ப்ரத்யவாயம் வரும்” என்கிறதிலே அந்யபரமாகையாலே பரிஹ்ருதம். “கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:” என்கிற இதுவும், ஜ்ஞாநயோகத்திற்காட்டில் கர்மயோக ப்ரஶம்ஸாபரமாகையாலே பரிஹ்ருதம். தன் பக்கலிலே கத்ருத்வத்தை ஏறிட்டு அநுஷ்டிக்கச் சொன்ன திலே அஸூயை பண்ணுவாருண்டாகில் நஷ்டராவாரென்கையாலே அஸூயாநிபந்தனமான நாஶத்தைச் சொல்லுகிறதித்தனை போக்கி அநநுஷ்டானநிபந்தனமான நாஶத்தையன்று சொல்லுகிறது; நநுஷ்டான நிபந்தனமாகில், “தஸ்ய கார்யம் ந வித்யதே” என்று கர்மயோகத்தில் நிரபேக்ஷனாய் அத்தை விட்ட ஜ்ஞாநயோகாதிகாரிக்கும் நாஶம் வருகை யாலே பரிஹ்ருதம், இந்த ந்யாயத்தாலே “கர்மஸ்வரூபத்யாகம் தாமஸம்” என்கிற விடமும், “மோஹாத் தஸ்ய பரித்யா:” என்று மோஹம் ஹேது வாக விடில் என்று விஶேஷிக்கையாலே, நாஸ்திக்யநிபந்தனமான த்யா கத்தை தாமஸமென்கிறது. “பலஸங்காதி த்யாக பூர்வகமாக அநுஷ்டிக்கை ஸாத்விகம்” என்று சொன்னதுவும் நாஸ்திகவ்யாவ்ருத்திபரம், அங்ஙனன் றாகில் ஜ்ஞாநயோகநிஷ்டாதிகளுக்கும் ஸாத்விகத்வமின்றியிலே ஒழிய வேண்டுகையாலே. பகவத்ப்ரீணநகர்மத்தை நிஶ்ஶேஷமாக விடுகை பக்ஷமல்லாமையாலே, கரணங்கள் குர்வத்ரூபங்களாகையாலே வரும் விரோதமில்லை. “த்யாஜ்யம் தோஷவதித்யேகே” என்று ராகத்வேஷாதிகளோ பாதி இந்த கர்மம் ஆத்மாவுக்கு பந்தகம் என்கிறவர்களை வ்யாவர்த்திக்கிற தாகையாலே, “கர்த்தவ்யாநி” என்கிறத்தோடும் விரோதியாது. “ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே” என்று கர்மாங்கமான ஜ்ஞாநந் தன்னை கர்மத்துக்கு அங்கியாக விதித்தவோபாதி அங்காங்கிவிரோதமு மில்லை. “தப: கர்மாத்மகாநிவை, யாநி தேஷாமஶேஷாணாம் க்ருஷ்ணாநு ஸ்மரணம் பரம்” என்று தப:கர்மாதிஸாத்யமான பாபநிவ்ருத்தி, க்ருஷ்ணாநு ஸ்ம்ருதிமாத்ரத்தாலே பிறக்கும் என்றெழுதுகையாலே ப்ராபல்ய தௌர்பல்ய விரோதமில்லை. ஸாதநமான கர்மத்தை துஷ்கரத்வாதிபயத்தாலே விட்டு, தத்ஸாத்யமான ஜ்ஞானத்தை ஆசைப்படில் அது கிட்டாது என்கையாலே. “நைவ த்யாகபலம் லபேத்” என்கிறத்தோடும் விரோதியாது. முமுக்ஷுவுக்கு பலார்த்தமாக விஹிதமான கர்மங்களினுடைய த்யாகம் ஸ்வாதிகாராநுருப மாகையாலே ஸ்வரூபஹாநி யல்லாதவோபாதி, இவனுக்கும் ஸ்வாதிகார வ்யதிரிக்தவிஷயமான விதிநிஷேதங்கள் அனுஷ்டிக்கில் ஸ்வரூபஹாநி யாகையாலும், ஸ்வாதிகாராநுரூபமான விதிநிஷேத சாஸ்த்ரத்தை அநுஷ் டிக்கையாலும், விதிநிஷேதஶாஸ்த்ரவையர்த்யம் பிறக்கும் என்னவொண் ணாது. “மா ஶுசஸ் ஸம்பதம் தைவீமபிஜாதோஸி பாண்டவ” என்கிறவிடத் தில், மாசுச:” என்று ஶோகநிவ்ருத்தியைப் பண்ணக்காண்கையாலே, “தேவாஸுரவிபாக ஶ்ரவணத்தாலே ஶோகம் பிறந்ததாகாதே” என்று அநுமித்துக்கொண்டவோபாதி, இங்குமப்படியே அநுமிக்கலாயிருக்கையாலே ஶோகம் அப்ரஸ்துதமென்கிற விதுவும் தூஷணமாகாது. இச்லோகந்தான் நிகமனமாகவும் மாட்டாது. தர்மஶப்தம் தர்மகதமான ஸ்வாதந்த்ர்யத்தை வசிக்கமாட்டாமையாலும், ஸ்வபலமான பகவத்ப்ரீதியை ஸ்வதந்த்ரமாக ஸாதிக்கையாலும், கர்மத்துக்கங்கமாக இப்ரபத்திவிஶேஷத்தைச்சொல்லி, “இப்ரபத்தியோடே கூட கர்மத்தை அனுஷ்டி” என்னவேண்டியிருக்க, இப்ரபத்தியை ஸ்வதந்த்ர்யமாக விதிக்கையாலும், அஹம்ஹி ஸர்வயஜ்ஞா நாம் போக்தா ச ப்ரபுரேவ ச” என்று கீழே “எனக்கு ப்ரீதிஸாதனமாகக் கடவது இந்தக் கர்மாதிகள்; இதுக்கு பலப்ரஸாதகன் நான்” என்று உக்தமா கையாலும், ஏகபதத்துக்கு வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், “தேவதாந்தர வ்யாவ்ருத்தி” “யாந்தி மத்யாஜிநோபி மாம்” “போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம்” “யேப்யந்யதேவதாபக்தா: தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி” என்று ஏவமாதிகளாலே கீழே ஸாதிக்கையாலும், “நாநுஶோசிதுமர்ஹஸி” “நைவம் ஶோசிதுமர்ஹஸி” “ந த்வம் ஶோசிது மர்ஹஸி” என்று கீழே சோகிக்கக்கடவையல்லையென்று சொல்லுகை யாலும், “யத் த்வயோக்தம் வசஸ் தேந மோஹோயம் விகதோ மம” என்று “அத்யாத்மவிஷயமாக நீ திருவுள்ளமான வார்த்தைகளாலே என்னுடைய மோஹம் போயிற்று” என்று அவன் சொல்லுகையாலும், நிகமனத்தில் ப்ரயோஜநமில்லாமையாலும், அதுவும் அர்த்தமன்று.
ஆகையாலே “தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஶவ” என்று, அநுஷ்டேயமென்று சில ஹேதுக்களாலே சொல்லச் செய்தேயும் கர்மத்திலே கோரப்ரதிபத்தி பிறக்கையாலும், “சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்று நைநபரிகரமான மனஸ்ஸை மீட்கவொண்ணாதென்று பயப்படுகையாலும், “அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி, கச்சிந் நோபயவிப்ரஷ்ட: சிந்நாப்ரமி வ நஶ்யதி” என்று யோகப்ரஷ்டனானால் மேகஶகலம் போல் இவன் நசிக்குமோவென்று பயப்படுகையாலும், இவ்வோ இவ்வோமுகங்க ளாலே “பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்நாநவாந் மாம் ப்ரபத்யதே” என்கிறபடியே அநேகஜந்மஸாத்யமான ஸாதநாந்தரங்களினுடைய துஷ்கரத்வாதி, நிபந்தன மான பயம் அநுவர்த்திக்கையாலும், “யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஶ்சித:” “இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:” என்று இந்த்ரிய ஜயத்தைப் பண்ணவேணு மென்று யத்னம் பண்ணாநின்றாலும், இந்த்ரியங் கள் விஷயங்களிலே வலிய இவனை இழுக்குமென்பது, “தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா” என்று எனக்கு லீலோபகரண பூதையான இந்த ப்ரக்ருதி, ஸ்வயத்னத்தால் கடக்கவொண்ணா தென்பது, “ஈஶ்வரஸ் ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஶேர்ஜுந திஷ்டதி, ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா” என்று ஈஶ்வராதீனங்காண்ஜகத்து; தன்னால் செய்யலாவ தில்லை காணென்பது, “மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ்ச” என்று “ஜ்ஞாநாபோஹனாதிகளும் என்னாலே காண்; ஆகையாலே சேதநவ்யாபா ரைகஸாத்யமாய் இருப்பதொன்று இல்லைகாண்” என்பது, தத்தத்பரிஹார மாக “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:” “மாமேவ யே ப்ரபத் யந்தே மாயாமேதாம் தரந்தி தே” “தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே” “தமேவ ஶரணம் கச்ச ஸர்வபாவேந பாரத” என்று தன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை விதிப்பதாய்ப் போருகையாலே ப்ரபத்திவைலக்ஷண்ய ஜ்ஞாநம் பிறக்கையாலும், ஸுகரமான இது கிடக்க, துஷ்கரத்வாதிதோஷ பஹுளமான ஸாத்ய தர்மங்களிலே அந்வயிப்பியாநின்றால், “அவையோ என்னால் அநுஷ்டித்துத் தலைக் கட்டலாம்படியாயிருக்கிறதில்லை” என்று இவன் ஶோகாவிஷ்டனாக, இப்படி உக்தமான ஸாதனங்களிலே ஶோகம் பிறக்கும்படி பக்வனான பின்பு, “மோக்ஷஸாதநதயா கீழுக்தமான ஸாதனங் களை ஸாங்கமாகவும் ஸவாஸநமாகவும் விட்டு, அவற்றுக்கும் என்னைக் கொண்டு கார்யம் கொள்ளவேண்டும்படியுமாய், ஸ்வயம் நிரபேக்ஷனாய், நிருபாதிகவாத்ஸல்யாதி குணவிஶிஷ்டனான என்னையே அவ்வோ ஸாதந ஸாத்யமான அநிஷ்டநிவ்ருத்திக்கும் இஷ்டப்ராப்திக்கும் உபாயமாக த்ருடாத் யவஸாயத்தைப் பண்ணுமிதுவே உனக்குச் செய்யவேண்டுவது; பின்பு த்வத் ஸ்வீக்ருதனாய் த்வதபிமதஸாதன யோக்யனாம்படி ஜ்ஞானஶக்த்யாதிகுண பூர்ணனான நான், என் கையிலே ந்யஸ்தபரனான உன்னை மத்ப்ராப்தி விரோதிகளான ஸகலபாபங்களும் தானே விட்டுப்போம்படி பண்ணக் கடவேன்; ஆனபின்பு உக்தமான ஸாதநதுஷ்கரத்வாதிகளாலே ஶோகிக்கக் கடவை யல்லை” என்கிற இவ்வர்த்தமே சரமஶ்லோகத்துக்கு சரிதமான அர்த்தமாகக்கடவது.
அவதாரிகை முற்றிற்று.
‘ஸர்வதர்மாந்ஶப்தார்த்தம்
வ்யாக்யானம்:- (ஸர்வதர்மாநித்யாதி) ஸ்வீகாராங்கமான த்யாகத்தைச் சொல்லக் கடவதாய்க்கொண்டு, த்யாஜ்யாம்ஶத்தை உபாதானம் பண்ணுகிறது. இதில் தர்மஶப்தம், ஸாமாந்யேந பலஸாதனமான உபாயத்தைச் சொல்லுகிறது; அங்ஙனன்றியிலே, தர்மஶப்தம் “தர்மேண பாபமபநுததி” என்கிறவிடத்தில் தர்மஶப்தம் போலே க்ரியாமாத்ரவாசியா மன்று ஜ்ஞாந யோகாதிகளுக்கு தர்மத்வமின்றியிலே ஒழியும், இனி, “சோதநா லக்ஷணார்த்தோ தர்ம:” என்கிறபடியே ஸ்வஸாத்யதயா விஹிதமான கர்ம ஜ்ஞாநாதிமாத்ரவாசியாமன்று, “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” என்கிற ஸித்ததர்மத்திலே ஏறப்பெறாது; ஆகையாலே இத்தர்ம ஶப்தம், யாதொன்று ஶாஸ்த்ரீயமாய் பலஸாதனமாயிருக்கிறது. அத்தை வசிக்கக்கடவது. ஆக, பலஸாதனதர்மந்தான், ‘தர்ம’, ‘பரதர்ம’, ‘பரமதர்ம’ என்கிற பேதத்தாலே மூன்று வகைப்பட்டிருக்கும்; இதில் அதர்ம வ்யாவ்ருத்தமான ஸ்வர்க்காதி .க்ஷுத்ரபுருஷார்த்தஸாதனம் தர்மமாகிறது. பரதர்மமாகிறது:- விமோசகமாகையாலே, பந்தகமானதிற்காட்டில் விலக்ஷண மான பரமபுருஷார்த்த லக்ஷணமோக்ஷஸாதனம். பரமதர்மமாகிறது:- தர்மம் போலே க்ஷுத்ர புருஷார்த்தத்தையே ஸாதித்தல், பரதர்மம் போலே சேதநஸாத்யமாதலாகையன்றிக்கே ஸித்தமாகையாலும், பரமப்ரயோஜந ஸாதனமாகையாலும், தனக்கவ்வருகில்லாத பகவத்விஷயம். இந்த தர்ம ஶப்தத்துக்கு இவை மூன்றும் அர்த்தமேயாகிலும், இப்போது பரதர்மத்திலே நோக்காகக் கடவது. இங்ஙன் ஒதுக்கித் தருவாராரென்னில் அடியிலே முமுக்ஷுவானபோதே க்ஷுத்ரபலஸாதனமான தர்மம் கழிகையாலும், பரதர்மத்தை கோபலீவர்த்தந்யாயத்தாலே மேலே ஸ்வீகார்யமாக விஶேஷிக்கையாலும், த்யாஜ்யதயா பரதர்மத்தையே உபாதானம் பண்ணுகிறது. அங்ஙனன்றியிலே பரதர்மத்துக்கு அங்கதயா அந்விதமான பரமதர்மமும் த்யாஜ்யமாகையாலே அத்தையுங்கூட உபாதானம் பண்ணுகிறதென்னவுமாம்.
(தர்மாந்) என்கிற பஹுவசனத்தாலே ஸ்வஸாத்யத்தை ஸாதித்துத் தருமிடத்தில், பரஸ்பரநிரபேக்ஷமான ஸாதனஸமூஹத்தையும், தத்ததஸாதாரணமான அங்கவிஶேஷங்களையும் சொல்லுகிறது. அவையாவன:- “கர்மணைவ ஹி ஸம்ஸித்தி மாஸ்திதா ஜநகாதய:” என்று ஸ்வதந்த்ரஸாதனமாக உக்தமான கர்மமும், “ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரிஸாமாப்யதே” “ந ஹிஜ்ஞாநேந ஸத்ருஶம் பவித்ரமிஹ வித்யதே” “ஜ்ஞாநாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா” என்று கர்மஸாத்யமான ஜ்ஞாநமும், “உபாப்யாமேவ பக்ஷாப்யாமாகாஶே பக்ஷிணாம் கதி: ததைவ ஜ்ஞாநகர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” என்று “ஒரு பக்ஷி தன் பக்ஷத்வயங்களாலும் ஆகாஶத்தேறப் பறக்குமோபாதி, ஸ்வ ஸாதிதமான கர்ம ஜ்ஞானங்களாலே பரமாகாஶநிலயமான வஸ்துவைச் சென்று ப்ராபிக்கும்” என்று, பகவத் ப்ராப்திஸாதனமாகச் சொல்லப்பட்ட கர்ம ஜ்ஞாநஸமுச்சயமும், “பக்த்யா த்வநந்யயா ஶக்ய:,” – “ஸ்வதர்மஜ்ஞாந வைராக்யஸாத்யபக்த்யேககோசர:” என்கிறபடியே, கர்மஜ்ஞாந ஸஹக்ருதை யாய் பகவத்ப்ராப்திஸாதனமான பக்தியும், “ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோவேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந” என்று, விரோதிநிவ்ருத்திபூர்வகமாக பகவத்ப்ராப்திஸாதனமான அவதாரரஹஸ்ய ஜ்ஞாநமும், “ஏதத் புத்தத்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஶ்ச பாரத” என்று அபிமதபலலாபத்தாலே க்ருத க்ருதயனாக்குமென் கிற புருஷோத்தமவித்யையும், தேஶோயம் ஸர்வகாமதுக்” என்று, ஸர்வ காமபலப்ரதமாகச் சொல்லுகிற, புண்யக்ஷேத்ரவாஸமும், “ஸர்வபாபவிஶுத் தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” என்று, ஸர்வபாபவிமோசனபூர்வமாக பகவத்ப்ராப்தியை பலமாகச் சொல்லுகிற திருநாம ஸங்கீர்த்தனம் தொடக்க மாய், வர்ணபேதத்தாலும், ஆஶ்ரமபேதத்தாலும், பாகபேதத்தாலும், ருசிபேதத் தாலும் வந்த அதிகாரிபேதத்தாலும் அத்யந்தபின்னமாய், ஆத்மபேதத்தோ பாதி அஸங்க்யாதமான உபாயவிஶேஷங்கள். ஆக, “தர்மாந்” என்கிற பஹு வசனத்தாலே பகவத்வ்யதிரிக்தஸகலஸாத்யதர்மங்களையும் சொல்லிற்றா யிற்று.
ஆக, ப.ஹுவசனத்தாலே மோக்ஷஸாதநதயா ப்ரதானமான தர்மங்களை எடுக்கையாலே, தர்மவிஶேஷணமான ஸர்வ ஶப்தம் த்ரைவர்ணிகஸாதாரணமாய், “ஸந்த்யாஹீநோSஶுசிர் நித்ய மநர்ஹஸ் ஸர்வகர்மஸு,” “தே த்வகம் புஞ்ஜதே பாபாயே பசந்த்யாத்ம காரணாத்” என்று யோக்யதாபாதகமான ஸந்த்யாவந்தன பஞ்சமஹாயஜ் ஞாதிகளைச் சொல்லுகிறது. ப்ரதானமான கர்மாதிகளைச் சொன்ன போதே, இவற்றுக்கு யோக்யதாபாதகமான அவையும், “ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்” என்று ப்ரயோஜநாபாவத்தாலே தன்னடையே கழியும்படியாயிருக்க, தயாஜ்யதயா ப்ருதங்நிர்தேஶம் பண்ணுகிறது. அந்த ஸ்வீகாரத்துக்கு சைதந்யமாத்ரமேயிறே அபேக்ஷிதம்.
அங்ஙனன்றியிலே, யோக்யதாபாதகமான இந்த ஸந்த்யாவந்தனாதிகள் அபேக்ஷிதமாகில், இந்த ஸந்த்யாவந்தனாதிகள் தன்னையும் அநுஷ்டேயதயா ஸ்வீகரிக்கக் கூடாதே; அந்த ஸந்த்யாவந்த னாதிகள் ஸ்வீகாரத்திலே இழிகைக்கு யோக்யதாபாதகமான ஸந்த்யாவந்த னம் வேண்டுகையாலே. அவை அநபேக்ஷிதமாகையிறே, “துராசாரோபி ஸர்வாஶ் க்ருதக்நோ நாஸ்திக: புரா, ஸமாச்ரயே தாதிதேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி | நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: || என்று ஸர்வாதிகாரிகளுக்கும் ஆச்ரயணத்திலே அதிகாரமுண்டென்கிறது. அதுக்கு மேலே அநுஷ்டிக்கப்புகுகிற ஸ்வீகாரம் அதிக்ருதாதிகாரமுமாம். ஆக, அநுஷ்டிக்கப்புகுகிற ஸ்வீகாரத்துக்கு ஸந்த்யாவந்தனம் அநபேக்ஷித மென்கைக்காக ப்ருதங்நிர்தேஶம் பண்ணிற்று.
ஸாதநாந்தரங்களடைய த்யாஜ்யமாயறுமாகில், “ஶாந்தோ தாந்த உபரதஸ்திதிக்ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்மந்யேவாத் மாநம் பஶ்யேத் என்று ஸாதநாந்தரங்களுக்கும் அங்கமாக எழுதப்படுகிற ஶமதமாத்யாத்மகுணங்களும், ஸந்த்யாவந்தனாதிகளோபாதி த்யாஜ்யதயா ஸர்வஶப்தத்திலே உபாத்தமானாலோவென்னில் அவை ஆத்மகுணமாய் இவ்வதிகாரிக்கு ஸம்பாவித ஸ்வபாவங்களாய் வருமவையாகையாலே த்யாஜ்ய கோடியிலே புகாது; ப்ராப்ய கோடியிலே புகுமித்தனை. குணபூத மான இதுவும் த்யாஜ்யகோடியிலே புகுமாகில், ஆத்மகுணபூதமான ஶேஷ ஶேஷிபாவஜ்ஞாநாதிகளும் த்யாஜ்யமாகவேண்டிவரும்.
இந்த ஸர்வஶப்தந்தன்னிலே “லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஶ்யந் கர்த்து மர்ஹஸி” என்று லோகஸங்க்ரஹார்த்தமாகக் கர்த்தவ்யமான கர்மங்களும், புத்ரார்த்தமாகப் பண்ணும் பும்ஸவனாதி வ்யாபாரங்களும் தயாஜ்யதயா அநுஸந்தேயம் என்றியவென்னில்: “தஸ்ய கார்யம் ந வித்யதே” என்கிற படியே கர்மயோகபலமான ஜ்ஞாநயோகத்தைப்பெற்று, பின்பு, தத்ஸாதந மான கர்மயோகத்தில் நிரபேக்ஷனா யிருப்பானொருவன், நைரபேக்ஷ்யத் தாலே அந்தக் கர்மத்தை அநுஷ்டியாதொழியில், ஜ்ஞாநயோகத்தில் இழிகைக்கு வேணும் பாகமின்றியிலே இருப்பானொருவனும், யத்யதாசரதி ஶ்ரேஷ்டஸ் தத் ததேவேதரோ ஜந: | ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்த்ததே ||” என்கிற நியாயத்தாலே, “விலக்ஷணனான அவனுடைய ஆசாரமிறே நமக்கும் ஆசாரமாயறுவது” என்று இவனுடைய ஆசாரத்தைக் கணிசித்து, இவனோபாதி கர்மாநுஷ்டானத்தில் நின்றும் நிவ்ருத்தனாம். ஜ்ஞாநயோகத்துக்கு அநதிகாரியாய் வைத்து கர்மயோகத்தை விட்டவனா கையாலே இவன் நின்ற பழுவிலே ஏறமாட்டான்; அதிலே மூட்டும். கர்ம யோகத்தை விட்டான், ஆக, இரண்டுக்கும் ஆளன்றியிலே உபயப்ரஷ்டனாய் விநாஶத்தோடே தலைக்கட்டிவிடும். அவனுடைய நாஶத்துக்கு ஹேது, இந்த ஜ்ஞாநாதிகாரியினுடைய கர்மாநுஷ்டானமாகையாலே. தந்நாஶஜநிதமான பாபம், இவனை வந்து பற்றி இவனுடைய ஜ்ஞானயோகத்துக்கு ப்ரதிபந்தக மாம்; அது செய்யாமைக்காகவிறே, லோகஸங்க்ரஹார்த்தாதி ப்ரவ்ருத்தியில் இழிகிறது. ஸித்தமான ஸாதனத்தைப் பற்றினவனுக்கு அந்த பயமில்லாமை யாலும், இவ்வதிகாரி நிற்கிற நிலை ஜ்ஞாநயோகதஶை போலே துரநுஷ்டா னமல்லாமையாலும் த்யாஜ்யமாகக்கடவது; இனி ஆந்ருஶம்ஸ்யமே இவற்றி னுடைய அநுஷ்டானத்துக்கு ஹேதுவாகக்கடவது. ஆக, இப்படி “ஸர்வ தர்மாந்” என்று ஸாத்யமான ஸகலஸாதனங்களையும் உபாதானம் பண்ணிற்று.
‘பரித்யஜ்ய ஶப்தார்த்தம்
அனந்தரம் “பரித்யஜ்ய” என்று அதினுடைய த்யாகப்ரகாரத்தைச் சொல்லுகிறது. இங்கு த்யாகஶப்தத்தாலே சொல்லுகிறது, தர்மஸ்வருபத்யாகத்தையோ ? தர்மபலாதித்யாகத்தையோ ? தர்மத்தில் உபாயத்வபுத்தித்யாகத்தையோ ? என்னில்: இவ்வதிகாரிக்கு, யாவச்சரீரபாதம் காலக்ஷேபத்துக்காக பகவத்தோஷஹேதுபூதமானவை அநுஷ்டேயமாகை யாலே, தர்மஸ்வரூபத்யாகமாகமாட்டாது. பலாதிகள், ஸாதகனுக்குங்கூட த்யாஜ்யமாகக் கீழே உக்தமாகையாலே, பலாதித்யாகத்தைச் சொல்லுகிறதாக வொண்ணாது. ஆக, இங்கு தர்மங்களினுடைய உபாயத்வபுத்தித்யாகத்தைச் சொல்லுகிறது. அந்த உபாயத்வபுத்தித்யாகமாவது:- லாபஹேதுவான பகவத் ப்ரீதிக்கு ஸாதனமென்கிற ப்ரதிபத்தியைத்தவிருகை. ஆகையாலே ஸ்வரூப த்யாகத்தால் வரும் குறையும், பலாதித்யாகத்தைச் சொல்லுகிறதென்கிறத் தால் வரும் புநருக்தியுமின்றியிலே ஒழியும்.
உபாயத்வபுத்தித்யாகபூர்வகமாக போகபுத்யா இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயமான இத்தர்மம், பலாபிஸந்திஸம்யுக்தமான ஜ்யோதிஷ்டோமந்தானே ஜ்ஞாநாந்தர்க்கதமானால், “தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய” என்கிறபடியே கர்மாந்தரமாகிறவோபாதி, அந்த மோக்ஷஸாதநகர்மந்தானேயாகிலும், புத்திவிஶேஷத்தாலே கர்மாந்தரமாகக் கடவது. ஆக, அநுபாயத்வபுத்தியுக்தமான இந்த தர்மத்திற்காட்டில், உபாயத்வ புத்தியுக்தமான அந்த மோக்ஷஸாதநமான தர்மம் தர்மாந்தரமாகையாலே, தர்மஸ்வரூபத்யாகத்தைச் சொல்லுகிறதென்னவுமாம்.
அவன் உபாயத்வபுத்த்யா அநுஷ்டிக்கும்; இவன் போகபுத்த்யா அநுஷ்டிக்கும். அவன் விதிப்ரேரிதனாய் அநுஷ்டிக்கும்; இவன் ராகப்ரேரிதனாய் அநுஷ்டிக்கும். அவனுக்கு வர்ணாஶ்ரம தர்மம் நியமேந அநுஷ்டிக்கவேணும்; இவனுக்கு வர்ணாஶ்ரம தர்மாநுஷ்டானமாக வுமாம்; வைஷ்ணவகிஞ்சித்காரமாகவுமாம்; ப்ராதிகூல்ய நிவ்ருத்தியிலே நியமம். ஆநுகூல்யங்களில் ஏதேனுமாம். ஆகையிறே நம்மாசார்யர்கள் இவற்றை அநுஷ்டிப்பாரும் அநுஷ்டியாதாருமாய்ப் போருகிறது. அந்த நியம மில்லாமையிறே ஸாதகனான அக்ரூரன் ஸாத்யவஸ்து ஸந்நிஹிதமா யிருக்கச்செய்தேயும், தன்னுடைய க்ருத்யத்திலே அந்வயித்தது. ஆகையிறே, “ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்று ஆநுகூல்ய ஸங்கல்பத்தோபாதி, ப்ராதிகூல்யநிவ்ருத்தியையும் ஸம்பாவித ஸ்வபாவ மாகச் சொல்லுகிறது. ஆக, காம்யகர்மத்தோபாதி மோக்ஷஸாதந தர்மமும் இவனுக்கு த்யாஜ்யமாகையாலே, ஸாங்கமான அந்த தர்மத்யாகத்தை த்யாக ஶப்தத்தாலே சொல்லிற்றாயிற்று.
த்யாகவிஶேஷணமான “பரி” ஶப்தம் “பரி-ஸாகல்யே” என்கிறபடியே ஸாகல்யவாசியாய்க் கிடக்கிறது. கீழே “ஸர்வதர்மாந்” என்று. த்யாஜ்யதர்மங்களடைய எடுத்து த்யாகத்தைச் சொல்லுகையாலே, இஸ்ஸாகல்யஶப்தத்துக்கு “ஸகல தர்மங்களையும் விட்டு” என்கிறவிது அர்த்தமாகவொண்ணாது. ஆகையாலே கீழ் த்யாஜ்யதயா உபாதானம் பண்ணப்படாதே. அவச்யம் த்யாஜ்யமாயிருப்பதொன்று இதுக்கர்த்தமாகவேணும்.
அதில் “ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி” “ந ஸுராம் பிபேத்” “ந களஞ்ஜம் பக்ஷயேத்” என்றாப்போலே சொல்லுகிற நிஷேதவிதிகள் கீழ் த்யாஜ்யமாக எடாமையாலும், அந்த நிஷேதவிதியை அநுஷ்டிக்கில் தன்னுடைய பாபவிமோசனத்துக்குத் தான் ப்ரவர்த்தித்தானென்கிற ஸ்வரூப ஹாநி வருகையாலே, அவஶ்யம் இவ்வதிகாரிக்கு த்யாஜ்யமாகையாலும், அது ஸாகல்யசப்தத்துக்கு அர்த்தமானாலோவென்னில், அதுவும் அர்த்தமாக மாட்டாது. நிஷேதவிதித்யாகமாகிறது. நிஷித்தாநுஷ்டானமாகையாலே நிஷித்தாநுஷ்டான பலமான பாபம், ஈஶ்வரனுடைய நிக்ரஹமாகையாலே, அந்த நிக்ரஹம் இந்த அதிகாரிக்கு அபுருஷார்த்தமாகையாலே அது அர்த்தமன்று, நிக்ரஹஹேதுவானவை த்யாஜ்யமன்றாகில் பகவதபசார பாகவதாபசாராதிகளும் த்யாஜ்யமன்றியிலே ஒழியும். பூர்வார்ஜிதபாப விமோசனத்துக்கு யத்னம் பண்ணினானாகில், ஸ்வரூபஹாநியாமோபாதி, ஜ்ஞாநம் பிறந்தபின்பு நிக்ரஹஹேதுக்களிலே இழிகையும் ஸ்வரூபஹாநி யாகக்கடவது. இந்த நிஷித்தாநுஷ்டானந்தான் பகவந்நிக்ரஹஹேதுவாகை யாலே, இவ்வதிகாரிக்கு ஸ்வரூபமல்லாமையாலும், பற்றுகிற ஸாத னத்துக்கு ஸஹகாரியல்லாமையாலும், அந்த தர்மங்களோபாதி த்யாஜ்யமாகக்கடவது.
ஆகையாலே, ஸாகல்யஶப்தவாச்யம் வாஸனையாய், ஸவாஸநத்யாகத்தைத் சொல்லுகிறது. அதாகிறது:- லஜ்ஜா புரஸ்ஸரத்யாகம். ஸ்வரக்ஷணார்த்தையான ஸ்வப்ரவ்ருத்தி ஸ்வரூபஹாநி யென்றறிந்தால், “நெடுநாள் ஸ்வரூபஹாநியானவற்றை யாகாதே உபாயமாக நினைத்திருந்தது!’ என்று லஜ்ஜை பிறக்கக்கடவதிறே. பர்த்ருபோகத்தை உதரபோஷணத்துக்கு உறுப்பாக்குகையாகிறது. பதிவ்ரதைக்கு ஸ்வருப ஹாதியாமாப் போலேயிறே, போகரூபமான ப்ரவ்ருத்தியை ஸாதன மாக்குகையாகிறது.
“த்யஜ்ய” என்கிற “ல்யப்” பாலே, தர்மத்யாகம் ஸ்வீகாரத்துக்கு அங்கமானவன்று கர்த்தவ்யம்; அல்லாதபோது அயுக்த மென்னுமிடத்தைக் காட்டுகிறது. தர்மத்தை விட்டு ஸ்வீகாரத்தில் இழியாதே யிருக்குமாகில், உபயப்ரஷ்டனாகையாலே நாஶமே பலமாயறுமே. இத்தைப் பற்றவிறே நஞ்சீயர், “ஒன்றில் நாரகிகளுக்கு மூர்த்தாபிஷிக்தனாதல்; இல்லையாகில் பரமபதம் என் சிறு முறிப்படியே செல்லுதல் செய்யும்படி யிறே நான் நிற்கிற நிலை” என்றருளிச்செய்தது. அதாகிறது:- தர்மத்யாக பலமான பாபம் மேலிட்டு நரகம் வஸ்தவ்யபூமியாதல்: த்யாகபூர்வகமாக ஸ்வீக்ருதமான உபாயம் பலித்து, பரமபதம் வஸ்தவ்யபூமியாதலாமித்தினை யிறே என்கை. ஆக, “ல்யப்” பாலே மேல் சொல்லப்புகுகிற ஸ்வீகாரம் த்யாகாங்ககமென்னுமிடம் சொல்லிற்றாயிற்று
ஸ்வஸ்வரூபத்தைப்பார்த்தாலும், ஸாதனாந்தரங்களை விடவேண்டிவரும். அவற்றினுடைய ஸ்வரூபங்களைப்பார்த்தாலும், ஸாத னாந்தரங்கள் த்யாஜ்யமாயறும். பற்றப்புகுகிற உபாயஸ்வரூபத்தைப்பார்த் தாலும் ஸாதனாந்தரங்கள் தயாஜ்யமாயறும். ஸ்வஸ்வரூபத்தைப் பார்த்தால் நமஶ்ஶப்தத்தில் சொல்லுகிறபடியே ஸ்வரக்ஷணவ்யாபாரத்திலே இழிகை, ஸ்வரூபஹாநியாம்படி அத்யந்தபரதந்த்ரமாயிருக்கும். அவைதன்னைப் பார்த்தால், பஹுயத்னஸாத்யமாகையால் துஷ்கரமுமாம், -“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:” என்று சிரகாலஸாத்யமுமாய், இந்த்ரியஜயாதிகள் அபேக்ஷிதமாகையாலும், ஆதிபரதாதிகள் ப்ரஷ்டராகக் காண்கையாலும் ஸாபாயமுமாய், ப்ராரப்தகர்மாவஸாநாபேக்ஷமாகையாலே, ‘விலம்பபலப்ரதமுமாயிருக்கும். உபாயத்தைப்பார்த்தால், நித்யாநபாயிநியான பிராட்டியும் ஸஹகாரியாக ஸஹியாதபடி சணற்கயிறுகண்ட ப்ரஹ்மாஸ்த் ரம் போலே நிரபேக்ஷமாயிருக்கும். ஆக, தான் அநந்யஸாதனனாகையாலும், அவை துஷ்கரத்வாதிதோஷதூஷிதமாகையாலும், உபாயம் ஸஹகாரிநிர பேக்ஷமாகையாலும் தர்மத்யாகம். உபாயஸ்வீகாரத்துக்கு அங்கமாகக்கடவது.
‘மாம்’ ஶப்தார்த்தம்
அனந்தரம், த்யாகாங்ககமான ஸ்வீகாரத்தைச் சொல்லக்கடவதாகக்கொண்டு, தத்ப்ரதிஸம்பந்தியை “மாம்” என்று உபாதானம் பண்ணுகிறது. (மாம்) உனக்கு ஶாரதியாயிருக்கிற என்னை. இந்நிலையிலே ஆஶ்ரயணத்துக்கு ஏகாந்தமான ஸௌஶீல்ய ஸௌலப்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வங்களும் விலக்ஷணவிக்ரஹயோகமும் தோற்று கிறது. “அவாக்யநாதர:” என்கிறபடியே, தன்னுடைய குணஶிகரங்களில் ஸூரிஸங்கங்களைக் குமிழிநீரூட்டி, தான் நிஸ்தரங்கஜலதி போலே ஸ்வாநுபவானந்த வைபவத்தாலே அவிகாரியாயிருக்கும்படியான பெரிய வைபவத்தையுடையனாயிருக்கச் செய்தேயும், க்ஷுத்ரஸம்ஸாரிசேதநனான அர்ஜுநன், “ரதம் ஸ்தாபய மேச்யுத” என்று “தேரை நிறுத்து” “புரவியை விட்டுக் குளிப்பாட்டு” என்று ஏவிக் காரியம் கொள்ளலாம்படி எளியனாய்ப் பரிமாறுகையாலே, ஸௌஶீல்யம் தோற்றிற்று. “ந ஸந்த்ருஶே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்” என்றும் “யஸ்யாவதாரரூபாணி ஸமர்ச்சந்தி திவௌகஸ:, அபஶ்யந்த: பரம் ரூபம்” என்றும் சொல்லுகிற படியே, கனத்த ஞாநஶக்த்யாதிகளையுடைய ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமாம்படி தன் வடிவழகை ஆஶ்ரிதரான அர்ஜுநாதிகள் கண்ணுக் கிலக்காக்கி ஒதுங்குகைக்கும், ப்ரதிகூலரான துர்யோதனாதிகள் இலக்குக் குறிச்செய்கைக்கும் ஏகாந்தமாம்படி தன் வடிவைக் காட்டிக்கொண்டு நிற்கை யாலே ஸௌலப்யம் தோற்றிற்று. தர்மத்திலே அதர்மபுத்தி, பண்ணி யுத்தாந் நிவ்ருத்தனான அர்ஜுநனை அக்குறை பாராதே தன் பேறாக மேல் விழுந்து ஹிதம் சொல்லி மீட்கையாலே வாத்ஸல்யம் தோற்றிற்று. அர்ஜுநனுக்கு இழிதொழில் செய்கிற தஶையிலே ஸ்வவைபவோக்திபூர்வகமாக வைஶ்வ ரூப்யத்தைக் காட்டுகையாலே ஸ்வாமித்வம் தோற்றிற்று. ஸேனாதூளிதூ ஸரிதமாய் அலைகிற திருக்குழல்கற்றையும், ஸ்வேதபிந்துஸ்தபகிதமான திருமூக்கும், ஆஶ்ரித விரோதிதர்சனத்தால் சீறிச்சிவந்து, ஶீதளமாய்ச் சிதற அலர்ந்த தாமரைத்தடாகம்போலே கண்டவிடமெங்கும் அலையெறிகிற திருக்கண்களும், காளமேகம் போலே இருண்டு குளிர்ந்த திருமேனியும், அதுக்குப் – பரபாகமாம்படி ( பரபாகம் – மாறுபட்ட நிறங்களின் சேர்த்தியினால் ஏற்படும் சோபை. வர்ணச் சேர்த்தியழகு ) சாத்தின திருப்பீதாம்பரமும், தேருக்குக்கீழே நாற்றின திருவடிகளும், அதிலே சாற்றின சிறு சதங்கைகளும், தூக்கின உழவுகோலும், பிடித்த சிறுவாய்க்கயிறுமாய் நிற்கிற நிலையைக் காட்டுகை யாலே விலக்ஷண விக்ரஹ யோகமும் தோற்றுகிறது. தன் சிறுமை கண்டு இறாய்க்கவேண்டா; அவன் ஸுசீலனாகையாலே, துர்லபனென்றிறாய்க்க வேண்டா; அவன் ஸுலபனாகையாலே. தன் தோஷங்கொண்டு இறாய்க்க வேண்டா; அவன் வத்ஸலனாகையாலே. அப்ராப்தனென்று இறாய்க்க வேண்டா; ஸர்வஸ்வாமியாகையாலே. ஆஶ்ரயிக்கைக்கு ஶுபாஶரயமே தென்று கண்கலங்கவேண்டா; விலக்ஷணவிக்ரஹ யுக்தனாகையாலே. இந்த விலக்ஷணவிக்ரஹயோகத்தைச் சொன்னபோதே, அந்த விக்ரஹத்துக்கு நிரூபகபூதையாய், “அகலகில்லேனிறையம்” என்று திருமார்பிலே எழுந்தருளி யிருக்கிற பிராட்டியையும் சொல்லிற்றாயறுகையாலே, இவனுடைய பூர்வாபராதத்தை பொறுப்பித்துச்சேரவிடுகைக்குப் புருஷகார யோகமும் சொல்லிற்றாயிற்று.
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம்” என்கையாலே, பதர்க் கூட்டை விட்டு ஒரு மணிபர்வதத்தை ஆஶ்ரயணீயமாகச் சொன்னாப்போலே இருக்கிறது. ஸாதனாந்தரங்களாகிறன:- பதர்க்கூடு போலே ஸாத்யமுமாய், பலவுமாய், உள்வாயில் ஈஶ்வரஸஞ்சார மில்லாதவன்று அநுபஜீவ்யமாயிறே யிருப்பது. அங்ஙனன்றியிலே இவ்விஷயம் ஸித்தமுமாய், அத்விதீயமுமாய், கட்டடங்க உபஜீவ்யமு மாயிருக்கும்.
ஏக ஶப்தார்த்தம்
ஏகபதம், “த்வமேவோபாயபூதோ மே பவ” “த்வாமேவ ஶரணம் ப்ராப்ய” “மாமேவ யே ப்ரபத்யந்தே” “தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே” “தமேவ ஶரணம் கச்ச” என்று ஸ்வீகார்யவஸ்துவை நிர்தேஶித்து, அனந்தரம் அவதாரணத்தை எழுதிப்போருகிற ஸ்தான ப்ரமாணத்தாலே, அவதாரணார்த்தமாகிறது. இந்த அவதாரணத்தால் வ்யாவர்த்திக்கப் படுகிறது என்னென்னில்: “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்று ஸாதனாந்தரத்யாகம் கீழே உக்தமாகையாலே, அது வ்யாவர்த்யமாக மாட்டாமையாலும், “மாம்” என்கிற ஏகவசனத்தாலும், “மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய” என்று கீழடையத் தன்னுடைய ஸர்வஸ்மாத் பரத்வத்தைச் சொல்லுகையாலும், தேவதாந்தரவ்யாவ்ருத்திக்கு அவகாஶமே பிடித்தில்லாமையாலும், இந்த அவதாரணத்தால் வ்யாவர்த்திக்கப்படுகிறது:- “வ்ரஜ” என்று விஹிதமான ஸ்வீகாரத்தினுடைய அங்கபாவம்,
இதில் அங்கபுத்தி பிறக்கைக்கு ஹேதுவென்னென்னில்: “யதநந்தரம் யத்பவதி தத் தஸ்ய காரணம்” என்று “யாதொன்றுண்டான வனந்தரத்திலே யாதொன்றுண்டாம், அதுக்குக் கீழிலது காரணமாகக்கடவது:” என்கிற ந்யாயத்தாலே, ஸ்வீகாரத்தையொழிய அவனுடைய உபாயபாவம் ஜீவியாமையாலே, ஸ்வீகாரத்திலே அங்கபுத்தி, பிறக்கைக்கு யோக்யதை யுண்டு. யோக்யதையுண்டாகில், அங்கபாவம் கழிகிறபடியென்னென்னில் அங்கமாவது அங்கிக்கு கிஞ்சித்காரமாவதிறே. அந்த கிஞ்சித்காரந்தான் ஸ்வரூபோத்பாதகத்வாரத்தாலேயாதல், உத்பன்னமான ஸ்வரூபத்துக்கு வர்த்தகமாயாதல், வர்த்தித்ததுக்கு பலப்ரதானஶக்தி முகத்தாலேயாதலா யிருக்கும். அதில் பக்திக்கு, ஸாத்யமாகையால் உத்பத்த்யபேக்ஷையுண்டு; அஹரஹராதே யாதிஶயமாகையாலே, வ்ருத்த்யபேக்ஷை உண்டு. தான் சேதநமல்லாமையாலே பலப்ரதானவேளையிலே சேதனாபேக்ஷை உண்டு. ஆகையாலே அதுக்கு கர்மஜ்ஞாநாத்யங்கங்கள் அபேக்ஷிதமாகக்கடவது. இந்த உபாயம் ஸித்தமாகையாலே உத்பத்த்யபேக்ஷையில்லை; ஏகரூபமாகை யாலே வ்ருத்த்யபேக்ஷையில்லை; பரமசேதநமாகையாலே பலப்ரதானத்தில் அந்யஸாபேக்ஷதையில்லை. ஆக, அங்கங்களைக்கொண்டு கொள்வதொரு கார்யம் இவ்வுபாயத்துக்கு இல்லாமையாலே இந்த ஸ்வீகாரம் அங்கமாக மாட்டாது.
ஸ்வரூபோத்பத்தியாதிகளிலே அங்கநிரபேக்ஷ மாகில், இவ்வுபாயம் என்றுமொக்க ஜீவிக்கையாகாதொழிகைக்கு ஹேது வென்னென்னில்! உபாயத்வமாவது, ஒருவனுடைய அநிஷ்டத்தைக் கழிக்கை யும், இஷ்டத்தைக் கொடுக்கையுமாகையாலே, ஒரு அதிகாரி அபேக்ஷிதம்; .அது பெறாமையாலே உபாயத்வம் ஜீவிக்கையாகாதொழிந்தது. அதிகாரியா கில் அபேக்ஷிதம், ஸ்வீகாரம் செய்கிற கார்யமென்னென்னில்: ஐஶ்வர்யார்த்தி யிலும் கைவல்யார்த்தியிலும், பகவச்சரணார்த்தியாய் ஸாதநாநுஷ்டானம் பண்ணுமவனிற்காட்டிலும், இவ்வதிகாரியை வ்யாவ்ருத்தனாக்குகிறது, பகவல்லாபார்த்தமான இந்த ஸ்வீகாரமாகையாலே, “அருணயைகஹாயந்யா பிங்காக்ஷ்யா ஸோமம் க்ரீணாதி” என்கிறவிடத்தில், அருணத்வபிங்காக்ஷத் வாதிகள் ஸோமக்ரயத்துக்கு உறுப்பான பசுவுக்கு பஶ்வந்தரத்திற்காட்டில் வ்யாவர்த்தகவிஶேஷணமானாப்போலே, இதுவும் அதிகாரிக்கு வ்யாவர்த்தக விஶேஷணமாய்க் கிடக்கிறது. இனி அதிகாரி அங்கமாமன்று. தத்விஶேஷண மான இந்த ஸ்வீகாரமும் அங்கமாகக்கடவது. க்ஷுத்து அன்னத்துக்கு ஸாதனமாமன்றிறே, இந்த ஸ்வீகாரத்துக்கு ஸாதனத்வமுண்டாவது. ஸ்வீகா ரத்துக்கு அங்கதயா உபாயத்வம் கொள்ளப்பார்க்கில், “த்வமேவோபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி:, ஶரணாகதி:” என்று “அவனையே நிரபேக்ஷோ பாயமாகப் பற்றுகை ப்ரபத்தி” என்கிற லக்ஷணவாக்யத்தோடு விரோதிக்கும். ஆகையாலே ஈஶ்வரன் கார்யம் செய்கைக்கு ஆபிமுக்யஸூசகமாய்க் கிடக்கிறது.
‘ஶரண’ஶப்தார்த்தம்
ஶரணஶப்தம் “உபாயே க்ருஹரக்ஷித்ரோ: ஶப்த: ஶரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைகவாசக:” என்கிறபடியே இப்போது ஶரணஶப்தம் உபாயவாசகமாய், “மாம்” என்று ஸௌஶீல்யாதி, விஶிஷ்டமாகச் சொன்ன வஸ்துவுக்கு “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா” “ஸதா பச்யந்தி” “ஶ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே” என்கிறபடியே, உபேயபாவத்திலும் அந்வயமுண்டாகை யாலே அத்தை வ்யாவர்த்தித்து உபாய பாவத்திலே ஒதுக்கித்தருகிறது.
கீழ் “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிற விடத்தில் ப்ரஸ்துதமான ஸாதனாந்தரங்களே இத்தை உபாயபாவத்திலே ஒதுக்கித்தாராதோ? என்னில்: அர்த்தஸித்தமாய் வருகிறதிற் காட்டில், ஶப்த ஸித்தமாய் வருமது அழகியதாகையாலும், “ஏதம் ஹ வாவ ந தபதி; கிமஹம் ஸாது நாகரவம். கிமஹம் பாபமகரவமிதி” என்றும், “தஸ்ய கார்யம் ந வித்யதே” என்றும், “க்ஷேத்ரஜ்ஞ: கரணீ ஜ்ஞாநம் கரணம் தஸ்ய வை த்விஜ, நிஷ்பாத்ய முக்திகார்யம் வை க்ருதக்ருத்யம் நிவர்த்ததே” என்றும் சொல்லுகிறபடியே, ஆற்றுக்கு அக்கரைப்பட்டால் அதுக்கு நிஸ்தரண பரிகரமான தெப்பம் அநபேக்ஷிதமாமாப்போலே, “ஸாத்யாபாவே மஹோ பாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்” என்று ஸாத்யம் ஸித்தித்தால் ஸாதனத்தைக் கொண்டு அபேக்ஷையில்லாமையாலே ஸாதனத்யாகமும் ப்ராப்யாம் ஶத்திலே அந்விதமாகையாலும், உபாயத்வத்தில் ஒதுக்கித்தர மாட்டாது.
‘வ்ரஜ’ ஶப்தார்த்தம்
“வ்ரஜ” என்று மஹாவிஶ்வாஸபூர்வகமாய் ப்ரார்த்தனாகர்ப்பமாய், அத்யவஸாயாத்மகமாய், தான் உபாயஶரீரத்திலும், உபேயஶரீரத்திலும் அந்வயியாதே அதிகாரி விஶேஷணமாய், உபாயத்தில் ஒதுக்கித்தர அந்வயியாதே கீழ்ச்சொன்ன த்யாகத்தை அங்கமாகவுடைத் தாய், “மாம்” என்கிற வஸ்துவை விஷயமாகவுடைத்தாய், “ப்ரபத்யே” என்கிற க்ரியாபதத்திலே உக்தமான ஸ்வீகாரத்தை விதிக்கிறது. “வ்ரஜகதௌ” என்கிற தாதுவிலே கத்யர்த்தமாய், கரணத்ரயங்களிலே அந்யதமமாயிருப்பதொரு கரணத்தினுடைய கதிமாத்ரத்தைக்காட்டி பகவத்வைபவப்ரகாஶகமாதல், அங்ஙனன்றியிலே கரணத்ரயங்களினுடையவும் கதியைக்காட்டி பூர்ண ப்ரபத்தியைச் சொல்லுகிறதாகவுமாம். . ஆக, தர்மத்யாகம், ஸ்வீகாரத்துக்கு அங்கமாகக்கடவது. த்யாக விசிஷ்டமான ஸ்வீகாரம், அதிகாரிவிஶேஷண மாகக்கடவது. ஸ்வீகார விஶிஷ்டனான அதிகாரிக்கு வாத்ஸல்யாதி குண விஶிஷ்டவஸ்து உபாயமாகக்கடவது. ஆக, இப்படி பூர்வார்த்தம் அதிகாரி யினுடைய க்ருத்யாம்சத்தைச் சொல்லிற்று.
‘அஹம்’ ஶப்தார்த்தம்
அனந்தரம், உத்தரார்த்தம் உபாயத்தினுடைய க்ருத்யாம்ஶத்தைச் சொல்லி, அதிகாரியினுடைய க்ருத்யாம்ஶலேஶத்தையும் சொல்லுகிறது. இதில் “அஹம்” ஶப்தம் வ்ரஜவில் ஆர்த்தமாகப் புகுந்த அதிகாரியினுடைய மஹாவிஶ்வாஸத்துக்கு ஊற்றாய், மேல் சொல்லப் புகுகிற பாபவிமோசனத்துக்குப் பரிகரமான ஜ்ஞாநஶக்த்யாதிகுணவிசேஷங் களை, கீழ் “மாம்” என்று ஆஶ்ரயணீயமாக உக்தமான வஸ்துவுக்கு ப்ரகாஶிப் பிக்கிறது. ஆஶ்ரயிக்கைக்கு வாத்ஸல்யாதிகள் வேணும்; கார்யம் செய்கைக்கு ஜ்ஞாநஶக்த்யாதிகள் வேணும். “நிவர்த்யாம்ஶம் இன்னது; நிவர்த்தனப்ரகாரம் இன்னது; நிவர்த்தனாதிகாரி இன்னான்.” என்றறிகைக்கு ஸர்வஜ்ஞனாகவேணும். ஜ்ஞானம் பிறந்தால் ப்ரயோஜனமில்லையே, பங்கு கல்பனாய் அசக்தனாயிருக்குமாகில். ஆகையாலே ஜ்ஞாநாநுகுணமாகக் கார்யம் செய்கைக்கு ஸர்வஶக்தியாக வேணும். ஸர்வஶக்தியானாலும் இவனிடும் பச்சைகொண்டு குறைதீரவேண்டும்படி அபூர்ணனாயிருக்குமாகில், அவனுக்கீடாக இவனால் இடலாவதொன்றில்லாமையாலே, அவையிரண்டும் அகிஞ்சித்கரமாமிறே. அங்ஙனன்றியிலே ஒழியும்போது அவாப்தஸமஸ்த காமனாகவேணும். ! ஸர்வஜ்ஞனானாலும், ஸர்வஶக்தனானாலும், அவாப்த ஸமஸ்தகாமனானாலும், இச்சேதநனோடு ஒரு ஸம்பந்தமில்லாதவன்று அவை மூன்றும் கார்யகரமாகாதே; அதுக்காக ஸர்வஸ்வாமியாக வேணும். இவை நாலும் விபரீதபலமாகாதே, இவனுடைய ரக்ஷணத்துக்கு உறுப்பாம் போதைக்கு பரது:க்காஸஹத்வலக்ஷணமான பரமதயை உடையனாக வேணும், இல்லாதவன்று ஸர்வஜ்ஞத்வம் அக்குற்றங்களுக்கீடாக நரகாதி களில் தள்ளி அறுத்தறுத்துத்தீற்றுகைக்கு உறுப்பாயறும்; தீற்றாநின்றால் கண்பார்த்து நெகிழாமைக்கு உறுப்பாயறும்; அவாப்தஸமஸ்த காமத்வநிபந்த னமான நைரபேக்ஷ்யம்; இங்ஙன் செய்யாநின்றால் கடவதல்லவென்று நியமிப்பாரில்லாமைக்கு ஹேதுவாமித்தனை, ஸர்வஸ்வாமித்வப்ரயுக்தமான நிரங்குஶஸ்வாதந்த்ர்யம்; ஆகையாலே ஸர்வஜ்ஞத்வத்தை ரக்ஷணவிதயா விஷயமாக்குகைக்கும், ஸர்வ சக்தித்வத்தை ரக்ஷணவ்யாபாரத்திலே ஆக்கு கைக்கும், அவாப்த ஸமஸ்த காமதையை ப்ரயோஜநநிரபேக்ஷமாக ரக்ஷிக் கைக்கு உறுப்பாக்குகைக்கும் ஸர்வஸ்வாமித்வத்தைத் தன்பேறாக கார்யம் செய்கைக்கு உறுப்பாக்குகைக்கும் தயை வேணும். ஆகையாலே இக்கார்யம் செய்கைக்கு உறுப்பான இவ்வைந்து குணங்களும், ‘அஹம்’ ஶ்ப்தத்திலே அநுஸந்தேயம். ஆக, ஸர்வஜ்ஞனுமாய், ஸர்வஶக்தியுமாய், அவாப்த ஸமஸ்தகாமனுமாய், ஸர்வஸ்வாமியுமாய், பரமதயாவானுமான நான் என்கிறதாயிற்று.
‘த்வா’ஶப்தார்த்தம்
(த்வா) அஜ்ஞனுமாய், அசக்தனுமாய், மஹா விஶ்வாஸபூர்வகமாக, என்பக்கலிலே ந்யஸ்தபரனான உன்னையென்று, அதிகாரியைச் சொல்லுகிறது. ‘அஹம்’ ஶப்தத்தாலே பாபஶத்ருவையும் (த்வா) என்கையாலே பாபாஶ்ரயத்தையும் சொல்லிற்றாயிற்று.
‘ஸர்வபாபேப்ய:’ ; ஶப்தார்த்தம்
அனந்தரம் (ஸர்வபாபேப்ய:) என்று, நிரஸ்ய மான பாபஸ்வரூபத்தைச்சொல்லுகிறது. அதில் பாபஶப்தத்தாலே, பகவத் ப்ராப்திவிரோதியைச் சொல்லுகிறது. ஏதேனுமாக அபிமத விரோதியிறே, பாபமாவது (பாபேப்ய:) என்கிற பஹுவசனத்தாலே, பாபங்களினுடைய பாஹுள்யத்தைச்சொல்லுகிறது. அவையாவன:- ஜ்ஞாநாபாவரூபமாயும், அந்யதா ஜ்ஞாநரூபமாயும், விபரீதஜ்ஞாநரூபமாயும் மூன்று வகைப்பட்ட அஜ்ஞானமும், புண்யபாபரூபமாய், பாதகம், அதிபாதகம், மஹாபாதகம், உபபாதகமுள்ளிட்ட பேதங்களாலே நாநாவிதமாய், பூர்வோத்தராகரூபமான கர்மங்களும், தேவதிர்யங்மநுஷ்யஸ்தாவராத்மகமான சதுர்வித ஶரீர ஸம்பந்தமும், “அஜ்ஞாநவாஸனை, கர்மவாஸனை, ப்ரக்ருதிஸம்பந்த வாஸனை” என்றாப்போலே சொல்லுகிற வாஸனைகளும், விஷயபேதத்தால் விவிதபேதையான ருசியும், இவையடியாகப் பிறக்கவும் கடவதாய், இவற் றுக்கு வர்த்தகமானராகத்வேஷாதிகளும். ஆக, (பாபேப்ய:) என்று ஸாதகனுக் குங்கூட ஸாதாரணமாக நிவர்த்யமான பாபங்களைச்சொல்லிற்று.
‘ஸர்வ’ ஶப்தத்தாலே இந்த அதிகாரிக்கு ஈஶ்வரன் விஶேஷித்துக்கழிக்கும் பாபத்தைச் சொல்லுகிறது. அதாவது:- “போகேந த்விதரே க்ஷபயித்வாத, ஸம்பத்ஸ்யதே” என்கிறபடியே பூர்வாகோத்தராகங்களையொழிய, ப்ராரப்தகார்யமான புண்யபாபரூபகர்மம் ஸாதகனுக்கு அநுபவவிநாஶ்யமாயிருக்கும். அதில் இவனுக்கு ஶாரீராரம்பக மான கர்மாம்ஶமொழியநீக்கி, கர்மஶேஷமும் நிவர்த்யகோடியிலே புகும். ஜ்ஞாநம் பிறந்தபின்பு வாஸனா பலத்தாலே புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபமுண்டாகிலும், அதுவும் ஸர்வஶப்தவாச்யமாகக்கடவது, காலக்ஷேபார்த்த மாகப் பண்ணும் அநுகூலவ்ருத்திகளில் ஸாதனத்வபுத்தி, பிறந்ததாகிலும், அதுவும் ஸர்வஶப்தவாச்யமாகக்கடவது. புத்ராதிகள் பக்கல் பண்ணும் பும்ஸவநாதிகளில் ஆந்ருஶம்ஸ்யப்ரேரிதனாய் இழிகையொழிய, பாபபய ப்ரேரிதனாய் இழியில் அதுவும் ஸர்வஶப்தவாச்யமாகக்கடவது.
‘மோக்ஷயிஷ்யாமி’ ஶப்தார்த்தம்
(ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி) ஆக, இப்படிப்பட்டிருக்கிற பாபங்களினின்றும் விடுவிக்கக்கடவேன். இந்த ‘ணிச்’ சாலே, நெடுநாள் உன்னைப்பற்றி விடாதே கிடக்கிற பாபங்கள் தானே “நமக்கு ஆஶ்ரயமல்ல” என்று விட்டுப்போம்படி பண்ணுகிறேன். “நெடுநாள் பாபதர்ஶனத்தாலே உனக்குப் பிறந்த பயம் உன்னைக் கண்டு அதுக்குப் பிறக்கும்படி பண்ணக்கடவேன்” என்னுமிடம் தோற்றுகிறது. கீழ் ச்லோகத்தில் “மாமேவைஷ்யஸி” என்று ப்ரஸ்துதமான பகவத்ப்ராப்திக்கு ஒரு ஸாதன விஶேஷத்தை விதித்ததாகையாலே, இங்குச்சொல்லுகிற பாபவிமோசனம், பகவத்ப்ராப்திவிரோதிபாபவிமோசனமாகக்கடவது. ஆகையாலே, “ததா ஹேயகுணத்வம்ஸாதவபோதாதயோ குணா:, ப்ரதாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே” என்கிறபடியே, மலயோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை அழுக்கறக்கடைந்தால் தன்னடையே தத்கதமான ஒளி ப்ரகாஶிக்குமோபாதி, இவனுக்கும் அவித்யாதிகளாகிற திரோதானங்க ளடையக் கழிகையாலே, ஸ்வாஶ்ரயமான அபஹதபாப்மத்வாதிகளடையத் தன்னடையே ப்ரகாசிக்குமிறே. ஆகையாலே விரோதி நிவ்ருத்தியிறே அபேக்ஷிதம். அந்த ப்ராதான்யம் தோற்ற விரோதிநிவ்ருத்தியைச் சொல்லு கிறது. ஆகையிறே, “ஆவிஸ்ஸ்யுர் மம ஸஹஜ கைங்கர்யவிதய:” என்று பட்டர் அருளிச்செய்தது. ஆக (அஹம்) என்று சொன்ன உபாயவஸ்துவி னுடைய கார்யம் சொல்லிற்று.
,
‘மாஶுச:‘ ஶப்தார்த்தம்
அனந்தரம் (த்வா) என்று நிர்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்யாம்ஶத்தைச் சொல்லுகிறது (மாஶுச:) என்று. நிரபாயோபாயபூதனான நான் உன்னுடைய விரோதிநிவ்ருத்திபூர்வகமான அபிமதஸித்தியை ஸாதித்துத்தரக்கடவனாக ஏறிட்டுக்கொண்ட பின்பு ஸாபாயமான ஸாதனாந்தரங்களினுடைய துஷ்கரத்வாதிகளை அநுஸந்தித்து ஶோகிக்கக்கடவையல்லை: அந்த ஸாதனவிஶேஷங்களையொழிய நிரபாயோபாயம் இல்லாதவன்றன்றோ உனக்கு ஶோகிக்கவேண்டுவது. அவற்றை விட்டு என்னை ஆஶ்ரயிக்கையாலும், சோகிக்கவேண்டா. ஆஶ்ரயணீயனான நான் வத்ஸலனாகையாலே, உன்னுடைய தோஷங்கண்டு சோகிக்கவேண்டா. ஸுலபனாகையாலே, துர்லபனென்று சோகிக்க வேண்டா. ஸுஶீலனாகையாலே, உன்னுடைய சிறுமை கண்டு சோகிக்க வேண்டா. ஸர்வஸ்வாமியாகையாலே, அப்ராப்தனென்று ஶோகிக்க வேண்டா. அவாப்தஸமஸ்தகாமனாகையாலே, உன்னுடைய அபூர்த்தி கண்டு ஶோகிக்க வேண்டா. ஸர்வ ஶக்தியாகையாலே, உன்னுடைய அஶக்தி கண்டு ஶோகிக்க வேண்டா. நிருபாதிகபந்துவாகையாலும், பரமதயாவானாகையாலும், “கார்யம் செய்யுமோ? செய்யானோ?” என்று ஶோகிக்கவேண்டா. ஸர்வபாப விமோசகனாகையாலும் ஶோகிக்க வேண்டா, உன்னைப் பார்த்தாலும் ஶோகிக்க வேண்டா; என்னைப் பார்த்தாலும் ஶோகிக்க வேண்டா; விரோதி யைப் பார்த்தாலும் ஶோகிக்கவேண்டா. நீ என் பக்கல் ஸர்வபரந்யாஸம் பண்ணுகையாலே, உன்னைப் பார்த்தாலும் ஶோகிக்க வேண்டா; நான் ஸர்வஜ்ஞத்வாதி, குணவிஶிஷ்டனாகையாலே என்னைப் பார்த்தாலும் ஶோகிக்கவேண்டா; விரோதியாகிறது, என்னுடைய நி.க்ரஹரூபமாகையாலே “பொறுத்தோம்” என்னத்தீரும்; ஆகையாலே விரோதியைப்பார்த்தாலும் ஶோகிக்கவேண்டா. நீயும் இப்படி என்பக்கலிலே ந்யஸ்தபரனாய், விரோதி யும் இப்படி துர்லபமான பின்பு ஶோகம் அனுவர்த்திக்குமாகில், நீயும் எனக்கன்றியிலே, நானும் உனக்கன்றியிலே, உன்னையும் “ந நமேயம்” என்னப் பண்ணி என்னையும் “க்ஷிபாமி” “நக்ஷமாமி” என்னப்பண்ணின பாபம் மூர்த்தாபிஷிக்தமாயிருக்க, ஶோகியாதே அநாதி காலம் ஆனைக்கழுத்திலே இருக்கிறாயாய்ப்போந்த அஜ்ஞானத்தோபாதி போரும். கிம் பஹுநா; நான் உன் கார்யத்துக்குக் கடவனாயிருக்க நீ ஶோகிப்புதியாகில் உன் கார்யத்துக்கு நீயே கடவையாமித்தனை.
ஆக, ஸ்வீகாராங்கதயா த்யாஜ்யமான தர்மவிஶேஷங்களையும், அந்த தர்மங்களினுடைய த்யாகப்ரகாரத்தையும், அந்த தர்மத்யாகபூர்வமாகப் பற்றும் விஷயத்தினுடைய ஸௌலப்யாதிகுண யோகத்தையும், அந்த குணவிஶிஷ்டவஸ்துவிலுடைய ஸஹாயாஸஹத்வ லக்ஷணமான நைரபேக்ஷ்யத்தையும், நிரபேக்ஷவஸ்துவினுடைய உபாய பாவத்தையும், அத்தை உபாயத்வேந ஸ்வீகரிக்கையும், ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய ஜ்ஞாநஶக்த்யாதி குணயோகத்தையும், அந்த குண விஶிஷ்ட வஸ்துவின் பக்கலிலே ந்யஸ்தபரனான அதிகாரியையும், அந்த அதிகாரியினுடை விரோதிபாபஸமூஹத்தையும், அந்த பாபவிமோசன ப்ரகாரத்தையும், பாபவிமோசகனைப் பற்றின அதிகாரியினுடைய நைர்ப்பர்யத்தையும் சொல்லிற்றாயிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்
சரமஶ்லோகப்ரகரணம் ஸம்பூர்ணம்
பரந்த ரஹஸ்யம் முற்றிற்று
.