Page-1
செய்யதாமரைத் தாளிணை
வ்யாக்2யானம்
श्रीमते रम्यजामातृमुनये विदधे नम:।
यत्स्मृतिस्सर्वसिद्धीनामन्तराय निवारिणी।।
ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநயே வித3தே4 நம: ।
யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வஸித்3தீ4நாம் அந்தராய நிவாரிணீ ।।
ஶ்ரீஶைலேஶத3யாபாத்ரமென்று தொடங்கி அருளிச் செய்த ஸேனை முதலியார் நாயனார், ஜீயருடைய கல்யாண கு3ணங்களிலே தோற்று அடிமைபுக்கபடியை ப்ரகாஶிப்பிக்கிறாராய் நின்றார்.
________________________________________________________________
யாவரொருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கிவிடுமோ அந்த ஶ்ரீமந் மணவாளமாமுனிகளை வணங்குகிறேன்.
“ஶ்ரீஶைலேஶ தயாபாத்ரம் தீ4ப4க்த்யாதி3 கு3ணார்ணவம். யதீந்த்ரப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம்” (திருவாய்மொழிப்பிள்ளையின் கருணைக்கு இலக்கானவரும், ஞானம் ப4க்தி போன்ற கு3ணங்களுக்குக் கடல் போன்றவரும் யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவருமான அழகிய மணவாளமாமுனியை வணங்குகிறேன்) என்று ஸேனை முதலியார் நாயனார் பெரிய ஜீயரான மணவாளமாமுனிகளுடைய கல்யாண கு3ணங்களுக்குத் தோற்று, தாம் அடிமைப்பட்டபடியை வெளியிட்டார். (ஸேனை முதலியாருக்கு நாயனார் (ஸ்வாமி) நம்பெருமாள். ஆகையால், நம்பெருமாளே இங்கு ஸேனை முதலியார் நாயனார் என்று குறிப்பிடப்படுகின்றார்.)
Page-2
அவர்தம்மடியரான இவரும் அக்கு3ணங்களுக்கும் ஸௌந்த3ர்யாதி3களுக்கும் ஆஶ்ரயமான தி3வ்யமங்க3ள விக்3ரஹத்திலே ஈடுபட்டு, பாதா3தி3கேஶாந்தமாக அனுப4வித்துத் தம்முடைய பரிவின் மிகுதியாலே மங்க3ளாஶாஸநம் பண்ணினபடியை அடைவே அருளிச் செய்கிறார் இதில். ‘செய்ய தாமரை பாடிய சீரண்ணன்’ என்றிறே இவர்க்கு நிரூபகம். இப்படி
மங்க3ளாஶாஸநம் பண்ணுகிறவர் தம்முடைய ஶேஷத்வாநுகு3ணமாக ‘உன் பொன்னடி வாழ்க’ (பெரியாழ்வார் திருமொழி-5.2.8) என்னுமாப்போலே பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்க3ளாஶாஸநம் பண்ணுகையிலே ப்ரவ்ருத்தராகிறார்.
______________________________________________________________
“செய்ய தாமரைத் தாளிணை வாழியே” என்று தொடங்கும் இந்த வாழித் திருநாமத்தை அருளியவரும், (பிரதிவாதி பயங்கரம் அண்ணன்) கு3ணங்கள், அழகு முதலியவைகளுக்கு இருப்பிடமான மாமுனிகள் திருமேனியில் ஈடுபட்டுத் திருவடி தொடங்கி திருமுடிவரை அனுபவித்து, தம்முடைய பரிவின் மிகுதியால் மங்க3ளாஶாஸநம் செய்த படியை முறையே அருளிச்செய்கிறார். “செய்ய தாமரை பாடிய சீரண்ணன்” என்றன்றோ இவர் புகழப்படுகிறார். இவ்வாறு மங்க3ளாஶாஸநம் செய்பவர் தம்முடைய அடிமைத் தன்மைக்குச் சேர முதலில், “உன் பொன்னடி வாழ்க” என்று கூறியுள்ளது போல, “பொன்னடியாம் செங்கமலப் போதுகள்” என்று வழங்கப்படும் மணவாளமாமுனிகளுடைய திருவடிகளுக்கு மங்க3ளாஶாஸநம் செய்கிறார்.
Page-3
(செய்ய தாமரைத் தாளிணை வாழியே) ப்ரஜை முலையிலே வாய்வைக்கும் ‘நாண்மலராம் அடித்தாமரை’ (திருவாய்மொழி 3-3-9) இவையாய்த்து. “உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது” (திருவாய்மொழி 7-1-10) என்கிறபடியே இதுவும் ஸ்வரூபமாயிருக்கும். ‘இன்புறும் தொண்டர் சேவடியேத்தி’ (பெருமாள் திருமொழி 2-5), வாழ்த்துகையிறே நிலைநின்ற ஸ்வரூபம். (செய்ய தாமரைத் தாளிணை வாழியே) இவர் ‘அடியைத் தொடரும்படி’ (இராமாநுச நூற்றந்தாதி 63) ராக3ஸௌமநஸ்ய பத3ஸௌப்4ராத்ரங்கள் உண்டாயிற்று. அதாவது, அழகியதாய்ச் சிவந்த செவ்வித்
_________________________________________________________
(செய்ய தாமரைத் தாளிணை வாழியே) குழந்தை, தாயினுடைய அவயவங்களல்லாம் கிடக்க, முலையிலேயே வாய் வைப்பதுபோல இவரும் மாமுனிகளுடைய ‘நாண்மலராம் அடித்தாமரை’ போன்ற திருவடிகளையே முதலில் கூறுகிறார். ஆழ்வார் ‘உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது‘ என்று அருளிச் செய்துள்ளபடி. இதுவும் ஸ்வரூபமாகவேயிருக்கும். ‘இன்புறும் தொண்டர் சேவடியேத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே’ என்று அருளிச் செய்துள்ளபடி அடியவர்களுடைய திருவடிகளை ஏத்துகையே நிலைநின்ற ஸ்வரூபம். (செய்ய தாமரைத் தாளிணை வாழியே) இவர் மாமுனிகளுடைய ‘அடியைத் தொடரும்படி‘ அத்திருவடிகளுக்கு ராக3ஸௌமநஸ்யமும் (ராக3ம்–சிவப்பு; அன்பு) பத3ஸௌப்4ராத்ரமும் (பத3ம்– அடி, சொற்கள்) (ஸௌப்4ராத்ரம்–சேர்த்தி) உண்டாயிற்று. (இவர் மாமுனிகளுடைய திருவடிகளில் ஈடுபடும்படியாக)
Page 4
தாமரைப்பூப்போலே த3ர்ஶநீயமுமாய் போ4க்3யமுமாய்த் தாமரைப்பூவை நிறைத்து வைத்தாப்போலே சேர்த்தியழகையுமுடைத்தாய் உபாயபூர்த்தியையும் உடைத்தாயாய்த்துத் திருவடிகளிருப்பது. ‘உந்மீலத் பத்3மக3ர்பே4த்யாதி3’ (உத்தரதி3நசர்யா-5), ‘போதச்சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த சீதக் கமலத்தை நீரேறவோட்டி’ (பாதா3தி3கேஶமாலை) என்றும், ‘சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே’ என்றுமிறே அடியறிவார் வார்த்தை.
___________________________________________________________
அத்திருவடியிணைகள் அழகிய நிறமும், சேர்த்தியும் உடையனவாக இருந்தன என்றும், இவர் அத்திருவடிகளில் ஈடுபடும்படியாக இவருக்கு அன்பும், சொற்களின் சேர்த்தியும், அமைந்திருந்தன என்றும் இருபொருள்படும்படியான நயவுரை காண்க). மாமுனிகளுடைய திருவடிகள் மிகவும் அழகியதாய், சிவந்த செவ்வித்தாமரை போல் காண விரும்புமதாய், இனிமையானதுமாய், தாமரைப் பூவை நிறைத்து வைத்ததுபோலச் சேர்த்தி அழகையும், உபாய பூர்த்தியையும் உடையதாகவும் இருக்கின்றன என்பதை ‘செய்ய தாமரைத் தாளிணை’ என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். ‘‘உந்மீலத் பத்3மக3ர்ப4த்யுதிதலம்‘ (அப்போதலர்ந்த தாமரையின் உட்புறமுள்ள செவ்விபோல் சிவந்தவை) என்று மாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதன்றோ! ‘போதச்சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த சீதக் கமலத்தை நீரேறவோட்டி’ என்றும், ‘சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே’ என்றுமன்றோ அடியறிந்தவர்கள் கூறியுள்ளார்கள்! இப்படி இத்திருவடிகளுடைய
Page-5
இப்படி இதனுடைய ஸௌந்த3ர்யத்தையும், போ4க்3யதாப்ரகர்ஷத்தையும் அநுப4வித்த இவர் மங்க3ளாஶாஸநம் பண்ணியல்லது நிற்கமாட்டாரே. ‘உன் சேவடி செவ்வித் திருக்காப்பு’ (திருப்பல்லாண்டு) என்னுமாப்போலே. அன்றியே செய்ய என்கிற இத்தால் திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய், ஆஶ்ரிதரளவும் வந்து செல்லுகிற வாத்ஸல்யத்தையுடைத்து என்கை. இது அண்ணராய சக்ரவர்த்திக்குப் ப்ரத்யக்ஷம். முதலடியிலேயிறே எழுந்து ரக்ஷித்தருளிற்று. ‘வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே’ என்கிறபடியே தம்மையும்
________________________________________________________
அழகையும், இனிமையின் மிகுதியையும் அறிந்த இவர் மங்க3ளாஶாஸநம் செய்தல்லது நிற்க மாட்டாமையால் ‘உன் சேவடி செவ்வித் திருக்காப்பு‘ என்பதுபோல மங்க3ளாஶாஸநம் செய்கிறார். செய்ய என்பதற்குச் சிவந்த என்று பொருள் கொள்ளாமல், செம்மை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது அடியவர்கள் இருக்குமிடத்தளவும் தானே வந்து அருள்செய்யும் வாத்ஸல்யத்தை உடைய திருவடிகள் என்று பொருள்படும். மாமுனிகள் சரமதஶையில் எழுந்தருளியிருந்த போது அண்ணராய சக்ரவர்த்தி என்பவர் ஸேவித்து நிற்க, மடங்கிக் கிடந்த மாமுனிகள் திருவடிகள் தாமே நீண்டு அவர்தலையில் வைத்து அருள்புரிந்தமை இங்கு நினைக்கத்தக்கது. ‘வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே’ என்று அருளிச் செய்துள்ளபடி, முதன்முதலில்
Page-6
முந்துற வந்து விஷயீகரித்து திருவடிகளாயிற்று, ‘திருக்கமல பாதம் வந்து’ (அமலனாதிபிரான்), ‘அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரையன்ன பொன்னாரடி’ (பெரிய திருமொழி 7-3-5) என்னக் கடவதிறே. இவரிப்படித்தம்மை விஷயீகரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்கும(து)ளவா யிருக்கிற பொற்காலானது நம் சென்னித் திடரிலேயேறும்படி அருளாலே வைத்தருளுவதே என்று அவற்றினுடைய பாவநத்வ போ4க்3யத்வங்களை யநுப4வித்து அவற்றுக்குத் தம்மோட்டை ஸம்ப3ந்த4த்தாலே ஓர் அவத்3யமும் வாராதொழிய வேணும் என்று மங்க3ளாஶாஸநம்
______________________________________________________
தமக்கும் வந்து அருள் செய்தது திருவடிகளே என்கிறார் ‘திருக்கமல பாதம் வந்து’ என்றும், ‘அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரையன்ன பொன்னாரடி’ என்றும் ஆழ்வார்களும் திருவடிகள் தாமே வந்து தங்களுக்கு அருள் புரிந்தமையைக் கூறியுள்ளார்களன்றோ! தமக்கு அருள் செய்த தாமரைத் தாள்கள் தம்முடைய சென்னியிலே த4ரிக்குமளவாயிருக்கிறபடியை ‘அருளாலே வைத்தருளுவதே’ என்று அவற்றினிடைய பாவனத்வம் (தான் புனிதமாயிருக்கச் செய்தே மற்றவர்களையும் புனிதமாக்கும் தன்மை). போ4க்3யத்வம் (இனிமை) ஆகிய இரண்டையும் அனுப4விக்கிறார். அத்திருவடிகளுக்குத் தம்மோடு உண்டான தொடர்பால் குறையேதும் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்று மங்க3ளாஶாஸனம் செய்கிறார். ஆக, இவருக்கு ப்ராப்யம் (அடையத் தகுந்தது) ப்ராபகம்
Page -7
பண்ணுகிறாராகவுமாம். ஆகையாலிவர்க்குப் ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அடிதானேயாயிருக்கை.
இனித் திருவடிகளுக்கு இவ்வருகு க3ந்தவ்யபூ4மியில்லாமையாலே (மேலே) திருவரையோடே சேர்ந்து சிவந்து நிற்பதான திருப்பரியட்டத்தினழகிலே சென்று அச்சேர்த்திக்கு (மங்க3ளத்தை) ஆஶாஸிக்கிறார் ‘சேலை வாழி’ என்று. கால் வாசியிலே நில்லாமல் அரைவாசி தேடுமவரிறே. “திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி” என்று திருவரையில் உடையழகும் பரபா4க3மாயிறேயிருப்பது. சந்த்3ரனைச் சூழ்ந்த பரிவேஷம் போலேயாயிற்றுத் திருவரைக்குத்
_________________________________________________________
(அடைவிப்பது) இரண்டும் மாமுனிகளுடைய திருவடிகளே என்கிறார்.
இனி, திருவடிகளுக்குக் கீழே செல்வதற்கு இடமில்லாமையால், திருவடிகளுக்கு மேலே திருவரையுடன் சேர்ந்து நிற்பதான திருப்பரிவட்டத்தின் அழகிலே திருவுள்ளம் சென்று, திருப்பரிவட்டமும் திருவரையும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களத்தை விரும்புகிறார் சேலைவாழி என்று. கால்வாசியோடு நின்றுவிடாமல், அரைவாசி தேடுபவரன்றோ! (கால்களோடு நின்றுவிடாமல் அரை (இடை)க்குச் செல்கிறார் என்கிற நயவுரை காண்க) ‘திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி‘ என்று மாமுனிகள் தாமே அருளிச் செய்துள்ளபடி, வெளுத்த திருமேனியில் சாத்தியுள்ள சிவந்தவாடை, பகைத்தொடை (contrast) அழகுடன் கூடியன்றோ இருப்பது! சந்திரனைச்
Page-8
திருப்பரியட்டத்தோடே சேர்த்தி. “ஸுதா4நிதி4மிவ ஸ்வைர ஸ்வீக்ருதோக்3ர விக்3ரஹம்” (பூர்வதி3நசர்யா-3)என்னக் கடவதிறே. “ஈனமிலாத இளஞாயிறாரும் எழிலும் செக்கர்வானமுமொத்த துவராடையும்” (பாதா3தி3 கேஶமாலை) என்றும், “ஆதாம்ரவிமலாம்ப3ரம்” (பூர்வதி3நசர்யா-5)என்றும் அத்யாஶ்சர்யமாயிறே இருபப்து. இத்தால் “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” (பெரியாழ்வார் திருமொழி 5-2-8) வந்தமை தோற்றுகிறது. அதுக்கு மேலே கண்டவர்களைக்கால்
______________________________________________________________
சூழ்ந்துள்ள ஒளிவெள்ளம் போலன்றோ மாமுனிகள் திருவரையில் சாத்திய ஆடையிருப்பது. “ஸுதா4நிதி4மிவ ஸ்வைர ஸ்வீக்ருதோக்3ர விக்3ரஹம் ப்ரஸந்நார்க்க2 ப்ரதீ3காஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம்” (தேவரீருடைய இச்சையால் எடுத்துக் கொள்ளப்பட்ட அழகான தேவரீருடைய திருமேனி அமுதக்கடல்போல் குளிர்ந்த ப்ரகாஶத்தையுடைய சூரியனுடைய ஒளியுடன் கூடியதுபோல் உள்ளது) என்று மாமுனிகளுடைய திருமேனியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதன்றோ! ஈனமிலாத இளஞாயிறாரும் எழிலும் செக்கர்வானமுமொத்த துவராடை” என்றும் “ஆதாம்ரவிமலாம்ப3ரம்” (சிவந்துள்ள ஆடையுடன் கூடியவர்) என்றும் கூறப்பட்டுள்ளபடி மிக அழகாகவன்றோ மாமுனிகளின் துவராடை இருபப்து! “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்று அருளிச்செய்துள்ளபடி பீதகவாடை அணிந்த என்பெருமானே ஆசார்யராக வந்தவரித்தமை தோற்றுகிறது. அதற்குமேல்,
Page-9
தாழப் பண்ணற்றவான திருநாபி4யழகிலே போந்து அவ்வழகுக்குப் போற்றியென்கிறார். (திருநாபி4வாழி)யென்று. திருப்பரியட்டத்துடனே சேர்ந்திறே திருநாபி4 இருப்பது. “அந்திபோல் நிறத்தாடை” (அமலனாதிபிரான் -3) என்ற அநந்தரம் “உந்திமேலாது அன்றோ” (அமலனாதிபிரான் -3) என்றருளிச் செய்கிறார். அதுதான் அல்லாத அவயவங்களைக் காட்டில் அழகியதாய் “அழகாற்றில் திகழ்சுழி போலேயிறே உந்திச் சுழி” (பாதாதிகேஶமாலை-5) யிருப்பது. ஸௌந்த3ர்ய ஸாக3ரம் இட்டளப் பட்டு சுழித்தாற்போலேயிருக்கிற இதினுடைய வைலக்ஷண்யம் கண்ட இவர்க்கு வாழ்த்தியல்லது நிற்கப் போகாதே. இதுதான் மடவார்களுந்திச் சுழியிலே மநஸ்ஸை
_____________________________________________________
கண்ணால் கண்டவர்களை மயங்கி நிற்கச் செய்யும் திருநாபி4யின் அழகிலே சென்று. அவ்வழகுக்குப் போற்றி என்கிறார். திருநாபி4 வாழி என்று. திருப்பரிவட்டத்துடன் சேர்ந்தன்றோ திருநாபி4 இருப்பது. அழகிய மணவாளனுடைய வடிவழகை அனுபவித்த திருப்பாணாழ்வாரும் “அந்திபோல் நிறத்தாடையும் ” என்றவுடன், “அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழிலுந்தி” என்றருளிச் செய்தாரன்றோ! மற்ற அவயவங்களைக் காட்டிலும் அழகுடன் கூடியதாகவும், “அழகாற்றில்திகழ் சுழிபோல் உந்திச் சுழி” என்னும்படியாகவுமன்றோ திருநாபி4 இருப்பது! அழகு வெள்ளமானது இட்டளத்தில் (குறுகிய இடத்தில்) பட்டுச் சுழித்தாற்போல் இருக்கின்ற நாபி4ச்சுழியின் அழகைக் கண்ட இவருக்கு வாழ்த்தியல்லது நிற்கமுடியாது. மேலும் இது
Page-10
மீட்டுத் தன்னிடத்திலே ஆழங்காற்படுத்தவற்றாயுமிருக்கும்.
அநந்தரம் திருநாபி4க்கு மேலாய் விஶாலமாய் விமலமாய் ஸுந்த3ரமாயிருக்கிற திருமார்பையும் அத்தோடே சேர்ந்த திருயஜ்ஞோபவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார். (துய்யமார்வும் புரிநூலும்) என்று. மார்வுக்குத் தூய்மையாவது “ஹ்ருத3யேந உத்3வஹந்ஹரிம்” (விஷ்ணு புராணம் 1-19-12) என்று “நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானை” (மூன்றாம் திருவந்தாதி 81) உடைத்தாகை. அத்தாலே அவர்கள் ஹ்ருத3யம் ஸௌம்யரூபமாய் இருக்கும். அவ்வளவு மன்றியிலே “மார்வமென்பதோர் கோயிலிலே
______________________________________________________________
பெண்களுடைய உந்திச் சுழியில் ஈடுபட்டுச் சுழலுகிற மனத்தையும் மீட்டுத் தன்னிடத்தில் ஈடுபடுத்தும்படியான அழகையும் உடையதாக இருக்கும்.
அதற்குப் பிறகு, திருநாபி4க்கு மேலே உள்ளதாய், விஶாலமாகவும், தூயதாகவும் அழகாகவும் உள்ள திருமார்பையும், அதனோடு சேர்ந்த முப்புரிநூலையும் கண்டு காப்பிடுகிறார். (துய்ய மார்வும் புரிநூலும்) மார்விற்குத் தூய்மையாவது, “ஹ்ருத3யேந உத்3வஹந்ஹரிம்” (மார்வில் ஹரியைத் தாங்கிக்கொண்டு) என்று கூறப்பட்டுள்ளபடி. “நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானை” உடையதாக இருத்தல். அப்படி எம்பெருமானை நெஞ்சில் கொண்டிருக்கின்றபடியால் நெஞ்சு குளிர்ந்திருக்கும். அதுவுமல்லாமல் “மார்வமென்பதோர் கோயிலிலே மாதவன்
Page-11
மாத4வன் என்னும் தெய்வம்” (பெரியாழ்வார் திருமொழி 4-5-3) என்கிறபடியே இவர் திருவுள்ளத்தைக் கோயிலாகக்கொண்டு “அரவிந்தப் பாவையும் தானுமான” (பெரியாழ்வார் திருமொழி 5-2-10)சேர்த்தியுடனேயாய்த்து அவனெழுந்தருளியிருப்பது. விஶேஷித்து வக்ஷஸ்த2லம் மாத4வஸ்தா2நமாகையாலே உள்ளோடு புறம்போடு வாசியற மாத4வன் உறையுமிடமாய்த்து. “மங்க3ளம் மாத4வாராம மந: பத்3மாய மங்க3ளம்” “ஶ்ரீமத் ஸுந்த3ர ஜாமாத்ருமுநி மாநஸவாஸிநே ஶ்ரீநிவாஸாய” (வேங்கடேஶ மங்க3ளம்-13) என்றும் சொல்லக்கடவதிறே.
______________________________________________________________
மாத4வனென்னும் தெய்வத்தை நாட்டி” என்கிறபடியே. எம்பெருமான் இவர் திருவுள்ளத்தையே தனக்குக் கோயிலாகக்கொண்டு “அரவிந்தப் பாவையும் தானும்” என்றபடி. பிராட்டியும் தானுமான சேர்த்தியுடன் அன்றோ எழுந்தருளியிருப்பது மேலும். திருமார்வு மாத4வஸ்தா2நம் ஆகையால், (பன்னிரு திருமண்காப்புகளில் மார்வில் அணியும் திருமண்காப்பிற்குத் திருநாமம் மாத4வன் ஆகையால்) மாமுனிகளுடைய திருமார்வு உள்ளேயும் வெளியேயும் மாத4வன் எழுந்தருளியிருக்கும் இடமாகும். “மங்க3ளம் மாத4வாராம மந: பத்3மாய மங்க3ளம்” (மாத4வன் உறையும் மனமாகிற தாமரையை உடையவருக்கு மங்க3ளம்) என்றும், “ஶ்ரீமத் ஸுந்த3ர ஜாமாத்ருமுநி மாநஸவாஸிநே ஶ்ரீநிவாஸாய மங்க3ளம்” (அழகிய மணவாளமாமுனிகளின் திருவுள்ளத்தில் உறைபவனும், எல்லாவுலகங்களிலும்னுறைபவனுமான ஶ்ரீநிவாஸனுக்கு மங்க3ளம்) என்றும் கூறப்பட்டுள்ளதன்றோ! எம்பெருமான், வேறு
Page 12
அவன்றான் அநந்யப்ரயோஜநருடைய ஹ்ருத3யங்களிலும் ஆசார்ய பரதந்த்ரருடைய ஹ்ருத3யங்களிலுமாய்த்து அத்யாத3ரத்துடனே எழுந்தருளியிருப்பது. “விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றையெண்ணாதார் நெஞ்சத்திருப்பு” (ஞானஸாரம் 9) “தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பஞ் செய்பவர் நெஞ்செந்நாளும் மாலுக்கிடம்” (ஞானஸாரம் 37)என்னக் கடவதிறே. அந்த அநந்யப்ரயோஜநதையையும் ஆசார்ய பரதந்த்ரதையையுமாய்த்து இங்குத் தூய்மையாகச் சொல்லுகிறது. அதுக்கு மேலே “அழகாருமெதிராசர்க்கு அன்பு உடையான்” என்னும்படி இவர் திருவுள்ளம் யதீந்த்3ரப்ராவண்யத்தை யுடைத்தாயிருக்கையாலே,
_______________________________________________________________
பயன்களைக் கருதாதவர்களுடையவும், ஆசார்யர் இட்ட வழக்காக இருப்பவர்களுடையவும் நெஞ்சங்களில் மிகவிருப்பத்துடன் எழுந்தருளியிருப்பான். “விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றையெண்ணாதார் நெஞ்சத்திருப்பு” (ஞானஸாரம் 9) என்றும், “தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பஞ் செய்பவர் நெஞ்செந்நாளும் மாலுக்கிடம்” (ஞானஸாரம் 37)என்றும் கூறப்பட்டுள்ளதன்றோ! அப்படிப்பட்ட வேறுபயன் கருதாமையும் ஆசார்யன் இட்ட வழக்காயிருக்கையுமே இங்கு தூய்மையாகச் சொல்லப்படுகிறது. அதற்கும் மேல் மாமுனிகள் யதீந்த்ரரான எம்பெருமானிடத்தில் ஈடுபாடுடையவர் ஆகையால் அவருடைய திருமார்வு “அழகாருமெதிராசர்க்கு அன்பு உடையான்” என்றும். “இன்றவன்
Page-13
“இன்றவன் வந்திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே” (இராமாநுச நூற்றந்தாதி-106) என்கிறபடியே பரமஹம்ஸரான எம்பெருமானார் எழுந்தருளியிருக்கிற மாநஸபத்3மாஸநத்தை உடையதாயுமிருக்கும்.ராகா3தி3 தூ4ஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ்பதி3யாயிருக்குமாபோலே அங்க3ராக3ரஞ்ஜிதமான இவருடைய ஹ்ருத3யத்திலும் ஆஸ்பதி3யாயன்றியிரானாய்த்து. இப்படியிவன் எழுந்தருளியிருக்கையாலே ஸௌம்யஜாமத்ருமுநியுடைய ஹ்ருத3யம் அத்யந்த ஸௌம்யரூபமாய்ருக்கும் என்கை. ஆகையால், “நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” (திருப்பல்லாண்டு-2) என்கிறபடியே இவரும் இருவருமான சேர்த்திக்கு இருப்பிடமான
________________________________________________________________
வந்திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே” (இராமாநுச நூற்றந்தாதி-106) என்றும் கூறியுள்ளபடி.பரமஹம்ஸரான எம்பெருமானார் எழுந்தருளியிருக்கும் நெஞ்சத்தாமரையை உடையதாக இருக்கும் பிற பொருள்களில் ராக3ம் (ஆசை) உடையவர்கள் நெஞ்சில் எம்பெருமான் எழுந்தருளியிரான். அவனிடம் ஆசையே வடிவெடுத்திருக்கும் மாமுனிகளுடைய திருவுள்ளத்தில் அவன் வீற்றிருக்காமலிரான். இப்படி அவன் வீற்றிருக்கின்றபடியால் ஸௌம்யஜாமத்ருமுநியான மாமுனிகளுடைய திருவுள்ளம் மிகவும் ஸௌம்யமாக (குளிர்ந்து) இருக்கும் என்கிறது. ஆகையால்
“நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” (திருப்பல்லாண்டு-2) என்றது போல் பெருமாளும்
Page-14
திருமார்வைத் துய்யமார்வும் புரிநூலும் வாழி என்று மங்க3ளாஶாஸநம் பண்ணுகிறாராகவுமாம். இவர் மாநஸவாஸியாயிருக்கிறவனும் “புலம்புரி நூலவனிறே” (பெரிய திருமொழி 9-9-9). “அலர்மேல் மங்கையுறை மார்பன்” (திருவாய்மொழி 6-10-10) என்கையாலே அம்மாவொருத்திக்கிடமுடைத்தாயாய்த்து அம்மார்வு. இம்மார்வு இருவர்க்கும் இடமுடைத்தாயிருக்கும். “திருமாற்கரவு” (முதல் திருவந்தாதி 53) இத்யாதி. “மங்க3ளம் பந்நகேந்த்3ராய”, “அநந்தனாமவரே மணவாளமாமுனி” என்னக்
___________________________________________________________
பிராட்டியும் சேர்ந்து எழுந்தருளியிருக்கும் இடமான திருமார்வுக்கு “துய்ய மார்வும் புரிநூலும் வாழி” என்று மங்க3ளாஶாஸநம் செய்கிறார். இவர் மனத்தில் எழுந்தருளியிருப்பவனும் ‘புலம்புரி நூலவன்” அன்றோ! “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பன்” என்று கூறியுள்ளபடியால். எம்பெருமானுடைய மார்வு அம் மா (பிராட்டி) ஒருத்திக்கு மட்டுமே இடம் கொடுத்தது. ஆனால் மாமுனிகளுடைய திருமார்போ எம்பெருமான் பிராட்டி இருவருக்கும் இடம் கொடுத்தது. “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காஶனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம் திருமாற்கரவு” என்று கூறியுள்ளபடி திருவனந்தாழ்வான் இருவருமான சேர்த்தியிலே எல்லாக் கைங்கர்யங்களையும் செய்பவனன்றோ! “மங்க3ளம் பந்நகேந்த்3ராய” (ஆதி3ஶேஷனுக்கு மங்க3ளம்) என்றும், “அநந்தனாமவரே மணவாளமாமுனி”
Page-15
கடவதிறே. அத2வா (துய்ய மார்வும்) “ஶுபே4ந மநஸாத்4யாதம்” (விஷ்ணு புராணம் 5-6-28) என்கிறபடியே ஆஶ்ரிதருடைய அபராத4ங்களைப் பொறுத்து அவர்களுக்கெப்போது மொக்க நன்மையைச் சிந்திக்கிற ஸௌஹார்த3த்தை உடைத்தாகை. “உரஸா தா4ரயாமாஸ” (மஹாபா4ரதம்) என்றும் “நன்னெஞ்சவன்னம்” (பெரிய திருமொழி 7-2-7) என்றும் சொல்லுகிறபடியே இவையிரண்டுக்கும் தானேயாயிருக்கை. (துய்ய மார்வும்) “ஏராரும் செய்ய வடிவு” (ஆர்த்திப்ரப3ந்த4ம்- 30) என்னுமாப்போலே இங்கும் யாவத் போ4க3த்தைப் பற்றச் சொல்லவுமாம். “மந்த3ரகி3ரி மதி2த மஹார்ணவ உத்கீ3ர்ண ______________________________________________________________
(அனந்தன் என்ற பெயருடையவரே மணவாளமாமுனிகள் என்றும் கூறப்பட்டுள்ளபடியால், அத்திருவனந்தாழ்வானே அன்றோ மாமுனிகளாக அவதரித்துள்ளான். அலல்து துய்ய மார்வும் என்பதற்கு, “ஶுபே4ந மநஸாத்4யாதம்” (நல்ல மனத்தினால் நினைக்கப்பட்டு) (விஷ்ணு புராணம் 5-6-28) என்கிறபடி அடியவர்களுடைய அபராத4ங்களைப் பொறுத்து அவர்களுக்கு எப்போதும் நன்மையையே சிந்திக்கின்ற மார்வு என்றும் பொருள் கொள்ளலாம். “உரஸா தா4ரயாமாஸ” (அர்ச்சுனன் மீது விடப்பட்ட பா4ணங்களைத் தன் மார்வில் கண்ணன் ஏற்றான்) என்றும் “நன்னெஞ்சவன்னம்” (பெரிய திருமொழி 7-2-7) என்றும் கூறியுள்ளபடி தீமையைத் தவிர்ப்பதற்கும் நன்மையை உண்டாக்குவதற்கும் தானே கடவதாக நினைத்திருக்கை. (துய்ய மார்வும்) “ஏராரும் செய்ய வடிவு” (ஆர்த்திப்ரப3ந்த4ம்– 30)என்பது போல இங்கும் பொதுவான அழகைக் கூறுகிறார் என்றும் கொள்ளலாம். “மந்த3ரகி,ரி மதி2த மஹார்ணவ உத்கீ3ர்ண
Page 16
பே2நபிண்ட3 பாண்ட3ரஸுந்த3ர ஸுகுமார தி3வ்யவிக்3ரஹ” என்றிறே இருப்பது. ஆக இவற்றால் சொல்லிற்றாய்த்து பா3ஹ்யாப்4யந்தரஶுசியென்கை. இனித் திருமார்வோடு சேர்ந்திறே திருயஜ்ஞோபவீதமிருப்பது. “தாமரைத் தாரிடங்கொண்ட மார்வும் வண்புரிநூலும்” (பாதா3தி3கேஶமாலை) அப்படியோடே சேர்ந்த திருயஜ்ஞோபவீதம். படி = விக்3ரஹம் (துய்ய மார்வும் புரிநூலும்) “துஷாரகரநிகர விஶத3 தர விமலோபவீத பரிஶோபி4த விஶால வக்ஷஸ்த2ல” என்கிறபடியே சந்த்3ரனுக்குக் கிரணங்கள் தேஜஸ்கரமானாப் போலேயாய்த்து திருமார்வுக்குத்
______________________________________________________________
பே2நபிண்ட3 பாண்ட3ரஸுந்த3ர ஸுகுமார தி3வ்யவிக்3ரஹ” (மந்தர மலையாலே கடையப்பட்ட கடலிலிருந்து உண்டான நுரையினுடைய வெண்மையின் அழகுடன் கூடிய மென்மையான திருமேனி) என்றன்றோ திருமேனி இருப்பது! இதனால் திருமார்பின் உட்புறம் வெளிப்புறம் இரண்டின் சுத்தியும் சொல்லப்படுகிறது. இனித் திருமார்வோடு சேர்ந்திருக்கின்ற திருயஜ்ஞோபவீதத்தை அனுபவிக்கிறார். “தாமரைத் தாரிடங்கொண்ட மார்வும் வண்புரிநூலும்” (பாதா3தி3கேஶமாலை) என்று திருமார்வும் முப்புரிநூலும் சேர்த்து அனுபவிக்கப் பட்டிருக்கிறதன்றோ! “துஷாரகரநிகர விஶத3 தர விமலோபவீத பரிஶோபி4த விஶால வக்ஷஸ்த2ல” (சந்திரனுடைய கிரணங்களைப் போல் வெண்மையான, பரிசுத்தமான முப்புரிநூலினால் பிரகாஶிக்கின்ற விஶாலமான மார்பு) என்கிறபடி. சந்திரனுக்கு அவனுடைய
Page 17
திருயஜ்ஞோபவீதமிருப்பது. “ஶோபி4தம் யஜ்ஞஸூத்ரேண” (பூர்வதி3நசர்யா 6) என்னக்கடவதிறே. அன்றிக்கே இம்முந்நூலான மெய்ந்நூலாலேயிறே பொய்ந்நூல்களையும் கள்ள நூல்களையும் கருமமன்றென்று கழிப்பது. “வகுளத4ர த4வள மாலா வக்ஷஸ்த2லம் வேத3பா3ஹ்ய ப்ரவரஸமயவாதச்சே2த3நம்” என்னக் கடவதிறே. தம்முடைய ப்3ரஹ்மஸூத்ரத்தாலேயிறே இவனுடைய காமஸூத்ரங்களைக் கழிப்பது. ராஜேந்த்3ர சோழனிலே பா3ஹ்யருடைய ஸங்க3த்தாலே ஶிகா2யஜ்ஞோபவீதங்களைக் கழித்த ப்3ராஹ்மண புத்ரன் ஆழ்வானைக் கண்டு மீண்டும்
________________________________________________________________
கிரணங்கள் ஒளியூட்டுவது போல. திருமார்வுக்கு வெண்புரிநூல் ஒளியூட்டுகிறது. “ஶோபி4தம் யஜ்ஞஸூத்ரேண” (வெண்புரிநூலினால் அழகுபெற்று விளங்குகின்றவர்) என்று கூறப்பட்டுள்ளதன்றோ! இம்முநூலான மெய்ந்நூல்தான் (மூன்று வேத3ங்களால் தான் பே4த3ஶ்ருதி அபே4த3ஶ்ருதி, க4டக4ஶ்ருதி என்ற மூன்று வகையான ஶ்ருதிகளால்தான்) பொய்ந்நூல்களையும் கள்ளநூல்களையும் உண்மையல்ல என்று கழிப்பது. “வகுளத4ர த4வள மாலா வக்ஷஸ்த2லம் வேத3பா3ஹ்ய ப்ரவரஸமயவாதச்சே2த3நம்” (வெண்மையான மகிழ்மாலையை அணிந்த திருமார்வை உடையவர், வேத3த்திற்குப் புறம்பான சமயத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பவர்) என்று கூறப்பட்டுள்ளதன்றோ! தம்முடைய ப்3ரஹ்மஸூத்ரத்தாலே, நம்முடைய காமஸூத்ரத்தைக் கழித்து விடுகிறார். ராஜேந்திர சோழபுரம் என்ற ஊரில், புறச்சமயிகளோடு பழகி ஶிகை2யையும்
Page 18
அவற்றைத் த4ரித்து வர அவன் பிதாவானவன் ஆழ்வானைக் கண்டாயாகாதே என்றானிறே.
இனித் திருமார்வோடு சேர்ந்த திருத்தோள்களுக்கு அரண் செய்கிறார். (திருத்தோளிணை வாழியே) “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா . . . பல்லாண்டு” (திருப்பல்லாண்டு-1) என்னுமாப்போலே. (ஸுந்த3ரத் திருத்தோளிணை) “புஜத்3வயவித்4ருத விஶத3தர ஶங்கசக்ர” லாஞ்சனங்களை உடைத்தாய்த்துத் திருத்தோள்கள் இருப்பது. “தோளார் சுடர்த் திகிரி
_____________________________________________________________
யஜ்ஞோபவீதத்தையும் இழந்திருந்த ஒருவன் கூரத்தாழ்வானைக் கண்டவாறே.மனம் திருந்தி அவற்றை த4ரித்து வர, அவனைக் கண்ட அவனுடைய தந்தை. “இவ்வளவு திருந்தி வந்திருக்கிறாயே! ஒருவேளை நீ கூரத்தாழ்வானை ஸேவித்தாயோ?” என்றானாம். (பெரிய திருமொழி 8-1-10 பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் காண்க). இதுபோலவன்றோ மாமுனிகளும் தம்மை ஸேவித்தவர்களைப் பவித்திரர்களாக்கியருளியது.
இனி திருமார்வோடு சேர்ந்த திருத்தோள்களுக்கு அரண் செய்கிறார். (திருத்தோளிணை வாழியே) என்று. “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா . . பல்லாண்டு” (திருப்பல்லாண்டு-1) என்று பெரியாழ்வார் மங்க3ளாஶாஸனம் செய்தது போல இவரும் செய்கிறார். (ஸுந்த3ரத் திருத்தோளிணை) சங்கு சக்கர சின்னங்கள் நன்கு விளங்குவதாயன்றோ இரண்டு திருத்தோள்களும் திகழ்கின்றன!
Page-19
சங்குடைய ஸுந்த3ரனிறே” (ஞானஸாரம் 7) அவன்தான். “சிங்கார மாலைத் திருத்தோள்களும் அவற்றே திகழும் சங்காழியும்” (பாதா3தி3கேஶமாலை-7) என்று அநுபா3வ்யமாயிறே இருப்பது. (தோளிணை) “எப்போதும் கைகழலா நேமியான்” (பெரிய திருவந்தாதி-87) என்கிறபடியே இவர்க்குத் திருத்தோள்களானவை எப்பொழுதும் சங்காழி இலங்கு புயமாயிருக்கையாலே “வலத்துறையும் சுடராழியும் பாஞ்சசன்னியமும்” (திருப்பல்லாண்டு-2) இங்குமுண்டாயிருக்கை. அன்றிக்கே திருத்தோள்கள் தான் ப4க3வல்லாஞ்சனத்தில் ப்ரமாணமுமாய் அபவித்ரரை ஸுபவித்ரராக்கியும் து3ர்வ்ருத்தரை வ்ருத்தவான்களாக்கியும் போருமதாயிருக்கும்.
______________________________________________________________
“தோளார் சுடர்த் திகிரி சங்குடைய ஸுந்த3ரன்” எம்பெருமான். இவருடைய தோள்களும். “சிங்கார மாலைத் திருத்தோள்களும் அவற்றே திகழும் சங்காழியும்” (பாதா3தி3கேஶமாலை-7) என்று அனுப4விக்கத்தக்கதாயிருக்கும். (தோளிணை) “எப்போதும் கைகழலா நேமியான்” (பெரிய திருவந்தாதி-87) என்கிறபடியே இவருடைய திருத்தோள்களானவை எப்போதும் சங்கு சக்கர சின்னங்கள் இலங்குவதால், “வலத்துறையும் சுடராழியும் பாஞ்சசன்னியமும்” (திருப்பல்லாண்டு-2) இங்கும் உண்டாயிருக்கும். அன்றிக்கே, திருத்தோள்களானவை ப4க3வானுடைய சின்னங்களைத் தெரிவிக்கும் ப்ரமாணமுமாய், அபவித்திரரை (புனிதரல்லாதாரை) பவித்திரமாக்கியும் (புனிதராக்கியும்), தீயவரை நல்லவராக்கியும் கொடுக்கும்.
Page-20
அநந்தரம் திருத்தோள்களிலேகதே3ஶமான திருக்கையும் அதிலே த4ரித்த த்ரித3ண்ட3த்தையும் கண்டு அதுக்குத் தாம் க4டகா4க நிற்கிறார். (கையும் ஏந்திய முக்கோலும் வாழியே) வெறுங்கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு. அதிலே த்ரித3ண்ட3முமானால் அழகிரட்டிக்கச் சொல்ல வேண்டாவிறே. “அங்கைத் தலத்திடை ஆழிகொண்டான்” (நாச்சியார் திருமொழி- 12-4) என்னுமாப்போலே “காரும் ஸுரபி4யும் போலே விளங்கு கைத்தாமரையிலே சேர்ந்திருந்த தண்டும்” (பாதா3தி3கேஶமாலை-5) என்றிறே சேர்த்தியிருப்பது. இக்கைக்கண்ட இவரைக் கைவிட்டிருக்கமாட்டாரே. அன்றிக்கே “முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை
________________________________________________________________
பிறகு, திருத்தோள்களின் ஒரு பகுதியான திருக்கையும் அதிலே த4ரித்த முக்கோலையும் கண்டு மங்க3ளாஶாஸநம் செய்கிறார். (கையும் ஏந்திய முக்கோலும் வாழியே) வெறுங்கையே அழகால் ஈர்க்கவல்லதாயிருக்க அதிலே த்ரித3ண்ட3த்தையும் ஏந்தினால் அழகிரட்டிப்பாகச் சொல்ல வேணுமோ? “அங்கைத் தலத்திடை ஆழிகொண்டான்” (நாச்சியார் திருமொழி- 12-4) என்று எம்பெருமானைப் பற்றிக் கூறியுள்ளது போல் “காரும் ஸுரபி4யும் போலே விளங்கு கைத்தாமரையில் சேரும் திருத்தண்டும்” (பாதா3தி3கேஶமாலை-5) என்று மாமுனிகள் திருக்கையில் த்ரித3ண்ட3ம் அமைந்துள்ள சேர்த்தியினை அனுப4விக்கிறார். இக்கை கண்டு இவரைக் கைவிட்டிருக்க மாட்டார். (சாடூக்தி) அன்றிக்கே. “முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை
Page-21
வாழியே” என்கிறபடியே தனது தொண்டக்குலம் சூழவிருக்க அவர்களுக்குத் தமிழ் வேத3மான திருவாய்மொழியினுடைய வர்த்த2த்தை ஹஸ்தமுத்3ரையாலே உபதே3ஶித்தருளுவதும் அநுபா4வ்யமாயிறே இருக்குமிவர்க்கு. “உந்நித்3ர பத்3ம ஸுப4கா3ம் உபதே3ஶமுத்3ராம்” (யதிராஜ ஸப்ததி-25), “எழில் ஞான முத்திரை வாழியே” (ஆர்த்திப்ரப3ந்த4ம்-30) என்று சொல்லக் கடவதிறே. (ஏந்திய) பூவேந்தினாற்போலேயிருக்கை. (கையுமேந்திய முக்கோலும் வாழியே) “நின்கையில் வேல் போற்றி” (திருப்பாவை-24) என்னுமாப்போலே. அன்றிக்கே ‘கமலகரதல வித்4ருத த்ரித3ண்ட3 த3ர்ஶநத்4ருத
___________________________________________________________
வாழியே” என்கிறபடியே தமது அடியவர்கள் சூழ்ந்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு தமிழ் வேத3மான திருவாய்மொழியின் பொருளை ஹஸ்தமுத்3ரையால் உபதே3ஶித்தருளும் அழகை அநுப4விக்கிறார். “உந்நித்3ர பத்3ம ஸுப4கா3ம் உபதே3ஶமுத்3ராம்” (யதிராஜ ஸப்ததி-25) (அப்பொழுதலர்ந்த தாமரையின் அழகுடைய ஞானமுத்திரை) என்றும், “எழில் ஞான முத்திரை வாழியே” (ஆர்த்திப்ரப3ந்த4ம்-30) என்றும் கூறப்பட்டுள்ளதன்றோ! (ஏந்திய) பூவேந்தினாற்போலேயிருக்கை. “நின்கையில் வேல் போற்றி” (திருப்பாவை-24) என்று ஆண்டாள் கண்ணபிரான் கையிலேந்திய வேலுக்கு மங்க3ளாஶாஸநம் செய்ததுபோல் இவரும், மாமுனிகள் கையில் ஏந்திய முக்கோலுக்கு மங்க3ளாஶாஸநம் செய்கிறார். ‘கமலகரதல வித்4ருத த்ரித3ண்ட3 த3ர்ஶநத்4ருத ஸமஸ்த பாஷண்ட3
Page-22
ஸமஸ்த பாஷண்ட3 ஸுதூ3ரபரிஹ்ருத நிஜாவஸத” என்று ஒருக்கோலார் துடக்கமானாரையெல்லாம் ஓட்டுமதாயிருக்கும்.
(கருணை பொங்கிய கண்ணிணை வாழியே) கண்காணக் கைவிட்டார். “கார்போலும் செங்கையுறை முக்கோலும் வாழியே, கருணை குடிகொண்டருளும் கண்ணிணை வாழியே” என்று திருக்கைக்கு அநந்தர பா4வியாய்ப் பேசுவது திருக்கண்களையிறே. திருக்கைகளினாலே ஸ்பர்ஶித்தருளின பின்பிறே திருக்கண்களாலே கடாக்ஷித்து ரக்ஷித்தருளுவது. (கருணை
________________________________________________________________
ஸுதூ3ரபரிஹ்ருத நிஜாவஸத” (தாமரை போன்ற திருக்கையில் த4ரித்த த்ரித3ண்ட3த்தைக் கண்ட பாஷண்டி3கள் அனைவரும் வெகுதூரம் ஓடும்படியான இருப்பிடத்தையுடையவர்) என்றபடி ஒருக்கோலார் (அத்3வைதி3கள்) முதலானோர்களையெல்லாம் ஓட்டுமதாயிருக்கும் இம்முக்கோலை ஏந்தியிருக்கின்ற நிலை என்கிறார்.
(கருணை பொங்கிய கண்ணிணை வாழியே) கண்காணவிட்டார். (கண்ணால் கண்டு கொண்டிருக்கும்போதே கைவிட்டார்) என்றும், கண்ணைக் கண்டவுடன் கையை விட்டுவிட்டார் என்றும் இருபொருள்படும் நயவுரை. “கார்போலும் செங்கையுறை முக்கோலும் வாழியே, கருணை குடிகொண்டருளும் கண்ணிணை வாழியே” என்று திருக்கைக்கு அடுத்தபடியாகப் பேசுவது திருக்கண்களையே. திருக்கைகளினாலே தொட்டபின்பன்றோ திருக்கண்களாலே கடாக்ஷிப்பது! (கருணை பொங்கிய கண்ணிணை) கருணைக்
Page-23
பொங்கிய கண்ணிணை)கருணைக் கடலான இவருடைய க்ருபை பெருகும் ஆனைத்தாள்கள் இருக்கிறபடி “நிரந்தர கருணாம்ருத தரங்கி3ணீபி4ரார்த்3ரிதாபாங்கை3ரநுகூலமபி4ஷிஞ்ச” என்றாரிறே. இவரைப்போலே கண்ணுடையார் ஒருவரும் இல்லையே. இவர் கண்ணிறே எல்லார்க்கும் களைகண். கண்ணருளாலேயிறே எல்லாரையும் ரக்ஷித்தருளுவது. (கண்ணிணை) அலர்ந்த செவ்வித் தாமரைப் பூவிலே இரண்டு வண்டுகள் படிந்திருக்குமாப்போலேயாய்த்துத் திருக்கண்களானவை திருமுக மண்டலத்துக்கும் கண்காட்டிகளாயிருக்கிறபடி. “ஸ்மயமாந முகா2ம்போ4ஜம் த3யமாந
________________________________________________________________
கடலான இவருடைய கருணை பெருகுகின்ற ஆனைத்தாள்கள் (மதகுகள்) இருக்கிறபடி “நிரந்தர கருணாம்ருத தரங்கி3ணீபி4ரார்த்3ரிதாபாங்கை3ரநுகூலமபி4ஷிஞ்ச” (எப்பொழுதும் அமுதமன்ன கருணையானது பெருகுகின்ற உமது கடைக்கண் பார்வையால் அநுகூலனான என்னை நனைக்கவேண்டும்) என்று வேண்டப்பட்டுள்ளதன்றோ! மாமுனிகளைப்போலே கண்ணுடையார் எவரும் இலர். இவருடைய கண்ணே எல்லார்க்கும் களைகண். தம்முடைய கண்ணருளாலேயே (த3யையினாலேயே) எல்லாரையும் மாமுனிகள் காப்பது. (கண்ணிணை) அலர்ந்த செவ்வித் தாமரைப் பூவிலே இரண்டு வண்டுகள் படிந்திருப்பது போன்று திருமுக மண்டலத்திற்குத் திருக்கண்களானவை அமைந்திருக்கும். “ஸ்மயமாந முகா2ம்போ4ஜம் த3யமாந
Page-24
த்3ருக3ஞ்சலம்” (பூர்வதி3நசர்யா 10) என்கிறபடியிறே சேர்த்தியிருப்பது. திருக்கண்களையருளிச் செய்தது உத்தமாங்க3த்தில் அழகுக்கெல்லாம் உபலக்ஷணம். “வாழி செவ்வாய்” (பாதா3தி3கேஶமாலை 10) என்றும், “வார்காதும் திருநாமமணி நுதலும் வாழியே” என்றும் அவற்றையும் திருநாமாந்தரங்களிலே காணலாயிருக்கும். அத்தாலே அவையிரண்டையும் மங்க3ளாஶாஸநம் பண்ணியருளினார். இவர் ஜீயர் திருக்கண் மலரிலேயாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக்கொடுத்தது.
இவ்வளவும் ஸுரூபவைலக்ஷண்யத்தை அநுப4வித்து மங்க3ளாஶாஸநம் பண்ணினவிவர் இனி
______________________________________________________________
த்3ருக3ஞ்சலம்” (பூர்வதி3நசர்யா 10) (புன்முறுவலுடன் விளங்கும் தாமரை போன்ற முகமும் திருவுள்ளத்தில் பொங்கும் கருணையை வெளிப்படுத்துகின்ற திருக்கண்களும்) என்றன்றோ இவற்றின் சேர்த்தியிருப்பது. திருக்கண்களையருளிச் செய்தது உத்தமாங்க3மான ஶிரஸ்ஸிலுள்ள எல்லா அவயவங்களையும் சொன்னது போலாகும். “வாழி செவ்வாய்” (பாதா3தி3கேஶமாலை 10) என்றும், “வார்காதும் திருநாமமணி நுதலும் வாழியே” என்றும் திருமுகத்திலுள்ள பிற அவயவங்களுக்குப் பல்லாண்டு பாடியுள்ளமையை வேறு வாழித் திருநாமங்களிலே காணலாம். எனவே, திருக்கண்கள் இரண்டையும் மங்க3ளாஶாஸநம் பண்ணுகிறார்.
இவர் ஜீயர் திருக்கண் மலரிலே தோற்று ஜிதம் (வெல்லப்பட்டேன்) என்று எழுதிக்கொடுக்கிறார்.
இதுவரை ஸுரூபத்தின் (அழகிய திருமேனியின்) பெருமையை அநுப4வித்து மங்க3ளாஶாஸநம் செய்தவர். இனி
Page-25
ஸ்வரூபகு3ணமான ஜ்ஞான வைலக்ஷண்யத்தையும் அநுப4வித்து மங்க3ளாஶாஸநம் பண்ணுவாராக அதிலே இழிகிறார். “கட்கணென்றும் உட்கண்” (பெரியதிருவந்தாதி 28) என்றும் “நேத்ரேணஜ்ஞாநேந” என்றும் ஜ்ஞாந சக்ஷுஸ்ஸுக்கள் இரண்டுக்கும் த3ர்ஶநத்வம் ஒத்திருக்கையாலே ஒரு சேர்த்தியுண்டிறே. அத்தாலே (பொய்யிலாத மணவாளமாமுனி புந்தி) என்று ஜ்ஞானத்தைப் பேசுகிறார். புலன்=புத்3தி4=ஜ்ஞாநம். (பொய்யிலாத) இவர் விஷயத்தில் சொன்ன ஏற்றமெல்லாம் யதா2ர்த்தமாகவுண்டென்கை. இனிச்சொல்லமாட்டதார் குறையேயுள்ளது. அன்றிக்கே ஆஶ்ரிதரானவர்களுக்கு அஸத்வாதி தோ3ஷங்கள்
________________________________________________________________
ஸ்வரூபத்தின் கு3ணமான ஜ்ஞானத்தினுடைய பெருமையை அநுப4வித்து மங்க3ளாஶாஸநம் பண்ணுவதாக இறங்குகிறார். “கட்கணென்றும் உட்கண்” (பெரியதிருவந்தாதி 28) என்றும் “நேத்ரேணஜ்ஞாநேந” என்றும் கூறியுள்ளபடி ஜ்ஞாநம் கண்கள் இரண்டுக்கும் பார்க்கும் தன்மையுண்டாகையால் ஒரு சேர்த்தியுண்டு. அதனால் பொய்யிலாத மணவாளமாமுனி புந்தி என்று ஜ்ஞானத்தைப் பேசுகிறார். புலன்=புத்3தி4=ஜ்ஞாநம். (பொய்யிலாத) இவரைப்பற்றிக் கூறிய பெருமைகள் எல்லாம் உண்மையாகவே இவரிடத்தில் உண்டு என்கிறார். சொல்ல முடியாதவர்களுடைய குறையே தவிரப் பெருமைகளுக்குக் குறைவொன்றுமில்லை. அலல்து, தம்முடைய அடியவர்களுக்குப் பொய் முதலான குறைகள் ஏற்படாமல் தவிர்ப்பவர் என்றும் கொள்ளலாம். “காமாதி
Page-26
வராமல் நோக்கிப் போருகிறவர் என்னவுமாம். “காமாதி3 தோ3ஷஹரம் ஆத்மபதா3ஶ்ரிதாநாம்” (யதிராஜ விம்ஶதி-1) என்கிறபடியே “செறிந்தவர்தமேதத்தை மாற்றுபவராயிருப்பர்” (பாதா3தி3கேஶமாலை 1) (மணவாளமாமுனி) ரக்ஷகரன்றிக்கேயொழிந்தாலும் வடிவில் போ4க்3யதையும் திருநாம வைலக்ஷண்யமும் விடவொண்ணதாயிருக்கை. பொய்யிலாமை புந்திக்கு விஶேஷணமாகவுமாம். அப்போது “இராமாநுசன் மெய்ம்மதிக்கடல்” (இராமாநுச நூற்றந்தாதி-58) என்கிறபடியே “உண்மை நன்ஞானமான” (இராமாநுச நூற்றந்தாதி-73)யதார்த்த ஜ்ஞாநத்தை உடையவரென்கை. அதாவது, ‘மெய்ஞ்ஞான மின்றி வினையில் பிறப்பழுந்தி” (திருவாய்மொழி-3-2-7) என்கிறபடியே ஸம்ஸாரார்ணவ மக்3நரானவர்களை
________________________________________________________________
தோ3ஷஹரம் ஆத்மபதா3ஶ்ரிதாநாம்” (யதிராஜ விம்ஶதி-1) (தம்மை அடைந்தவர்களுடைய காமம் முதலிய கு3ணங்களைப் போக்குபவர்) என்று கூறியுள்ளபடி அடியவர்கள் ஏதத்தை மாற்றுபவராயிருப்பவர். மணவாளமாமுனி காப்பவராகவே இல்லாவிட்டாலும், வடிவில் இனிமையும் திருநாமத்தின் அழகும் கண்டால் விடமுடியாதபடி இருக்கும். பொய்யிலாமையைப் புந்திக்கு (ஞானத்திற்கு) அடைமொழியாகவும் கொள்ளலாம். அப்போது “இராமாநுசன் மெய்ம்மதிக்கடல்” (இராமாநுச நூற்றந்தாதி-58) என்கிறபடியே “உண்மை நன்ஞானமான” (இராமாநுச நூற்றந்தாதி-73) உள்ளபடியே அறியும் ஜ்ஞாநத்தை உடையவரென்கை. அதாவது, ‘மெய்ஞ்ஞான மின்றி வினையில் பிறப்பழுந்தி” (திருவாய்மொழி-3-2-7) என்கிறபடியே பிறவியாகிய
Page-27
“ஞானக்கையாலே” (திருவாய்மொழி 2-9-2) உத்3த4ரித்துப் போருமவரென்கை. சேதநர் படுமாபத்தைக் கண்டால் கையாலும் காலாலுமிறே இவர் எடுத்து ரக்ஷிப்பது. “ஞானக்கை தந்து வந்தருளி எடுத்த புந்தி வாழி” ஜ்ஞாமப்ரதா3நர்களாயிறே இவர்களிருப்பது. “தீ4ப4க்த்யாதி3 கு3ணார்ணவம்” (தனியன்) என்றும் புந்தி வாழி என்றும் அருளிச் செய்து போருகையாலே ஜ்ஞாநம் ஸாரபூ4த கு3ணமாகையாலே அத்தை ப்ரதா4நமாகச் சொல்லக் கடவது. “தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாஶகம்” என்கிறபடியே ஸுத்3த4 ஸத்வமயமான விக்3ரஹமாகையாலே உள்ளில் ப்ரகாஶித்வமென்னக் கடவதிறே (உள்ளுள்ளவற்றை ப்ரகாஶிப்பிக்க?). புந்தியென்று ஜ்ஞாநமாத்ரத்தையுஞ்
________________________________________________________________
பெருங்கடலிலே அழுந்தியவர்களை “ஞானக்கையாலே” (திருவாய்மொழி 2-9-2) தூக்கி எடுப்பவர் என்கை. சேதநர் படும் ஆபத்தைக் கண்டால் தம்முடைய திருக்கைகளாலும் திருவடிகளாலும் அன்றோ இவர் எடுத்து ரக்ஷிப்பது. “ஞானக்கை தந்து வந்தருளி எடுத்த புந்தி வாழி” என்கிறார். ஞாநம் மிக்கவர்களாகவன்றோ ஆசார்யர்கள் இருப்பது. “தீ4ப4க்த்யாதி3 கு3ணார்ணவம்” (தனியன்) (ஞானம் பக்தி இவைகளுக்குக் கடல் போன்றவர்) என்றும் புந்தி வாழி என்றும் கூறப்பட்டிருக்கையாலே மாமுனிகள் ஞானமே வடிவெடுத்தவர் என்பது கூறப்படுகிறது. “தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாஶகம்” என்று கூறியுள்ளபடி உள்ளே உள்ளவற்றையும் காட்டக் கூடிய ஸுத்3த4 ஸத்வமயமான திருமேனியை உடையவர் அன்றோ! புந்தி
Page-28
சொன்னது ப4க்த்யாதி3களுக்கும் உபலக்ஷணம். “மங்க3ளம் நிர்மல ஜ்ஞான ப4க்தி வைராக்3ய ராஶயே” என்னக் கடவதிறே. (வாழி) மங்க3ளாஶாஸநம் பண்ணியருளினார். ஜ்ஞாந ப4க்த்யாதி3களிறே ஆத்மாலங்காரமாமென்பது. “ஜ்ஞாந ப4க்த்யாதி3 பூ4ஷிதம்” என்னுமாப்போலே. அன்றிக்கே ஆசார்யயனுக்கடையாளம் அறிவும் அநுஷ்டா2நமும் என்றும் “ஞானமனுட்டானமிவை நன்றாகவே உடையனான கு3ரு” (உபதேஶரத்தின மாலை-61) என்றுமிறே ஆசார்யலக்ஷணமருளிச் செய்தது. ஆகையால் ஆஶ்ரிதருடைய அஜ்ஞாநத்தைப் போக்கி ஸம்ப3ந்த4 ஜ்ஞாநத்தை விளைவித்து கைங்கர்ய பர்யந்தமாக
_______________________________________________________________
என்று ஞானத்தை மட்டும் கூறியிருந்தாலும், ப4க்தி முதலிய கு3ணங்களையும் சேர்த்தே கொள்ளவேணும். “மங்க3ளம் நிர்மல ஜ்ஞான ப4க்தி வைராக்3ய ராஶயே” என்று கூறப்பட்டுள்ளதன்றோ! (வாழி) மங்க3ளாஶாஸநம் பண்ணியருளினார். ஜ்ஞாநம் ப4க்தி போன்றவைகள் தான் ஆத்மாலங்காரமாமென்பது. “ஜ்ஞாந ப4க்த்யாதி3 பூ4ஷிதம்” என்று கூறப்பட்டுள்ளதன்றோ. அல்லது ஆசார்யயனுக்கடையாளம் அறிவும் அதற்கேற்ற அநுஷ்டா2நமும். “ஞானமனுட்டானமிவை நன்றாகவே உடையனான கு3ரு” (உபதேஶரத்தின மாலை-61) என்றும் கூறப்பட்டுள்ளதன்றோ! அடியவர்களுடைய அஜ்ஞாநத்தைப் போக்கி, எம்பெருமானோடுள்ள தொடர்பைப் பற்றிய ஜ்ஞாநத்தை உண்டாக்கி, கைங்கர்யம் செய்தல் வரை நடத்திக் கொண்டு
Page-29
நடத்திக் கொண்டு போருவதெல்லாம் தம்முடைய ஜ்ஞாநாநுஷ்டானங்களாலே என்கை. (மணவாளமாமுனி புந்தி) என்கையால் இவருடைய ஜ்ஞாநம் அல்லாதாருடைய ஜ்ஞாநத்திற் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய், தத்வத்ரயஙளையும் அலகலாகக் காணவல்லதாய் “தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கிறபடியே ஶ்ரிய:பதியை விஷயமாகவுடைத்தாய், அதுதான் ததீ3யஶேஷத்வமாகிற சரமாவதியான எல்லை நிலத்திலே நிலைநின்று போருமதாயிருக்கும். தத்வத்ரயங்களோடு வசநபூ4ஷணங்கண்ட ஸகலஶாஸ்த்ராசார்யரென்னக் கடவதிறே. ஆக, இவையெல்லாவற்றாலும்
______________________________________________________________
போவதெல்லாம் தம்முடைய ஜ்ஞாந அநுஷ்டானங்களாலே என்கிறார். (மணவாளமாமுனி புந்தி) என்கையால் மற்றவர்களுடைய ஞானத்தைக் காட்டிலும் மிகவும் பெருமை பெற்றதாயும் சித், அசித், ஈஶ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களையும் அலகலாகக் காணவல்லதாயும், “தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்று கூறியுள்ளபடி பிராட்டியோடு கூடின எம்பெருமானையே பற்றியதாயும் அதுவும் எம்பெருமானுடைய அடியவர்களிடத்தில் அடிமைப்பட்டிருத்தலில் நிலைபெற்றிருப்பதாயும் மாமுனிகளுடைய ஞானம் இருக்கும் என்கிறார்.
தத்வத்ரயங்களோடு வசநபூ4ஷணங்கண்ட ஆசார்யரல்லரோ மாமுனிகள்! (தத்வத்ரத்திற்கும் ஶ்ரீவசநபூ4ஷணத்திற்கும் உரை கண்டவரன்றோ!) ஆக, இவை
Page-30
கீ3தையை அருளிய “கண்ணனென்கோ” (திருவாய்மொழி 6-8-6) என்னும்படி, “நிறைஞானத் தொருமூர்த்தியான” (திருவாய்மொழி 3-4-6) கீ3தோபநிஷதா3சார்யனோடு விகல்பிக்கலாம்படி ஜ்ஞாநநிதி4யாயிருக்கிற இவருடைய ஜ்ஞாநமானது கலிதோ3ஷம் தட்டாமல் நித்யமங்க3ளமாய்ச் செல்ல வேணுமென்று வாழ்த்தியருளினார் என்கை. கலிதோ3ஷத்தாலேயிறே சேதநருடைய ஜ்ஞாநம் அல்பீப4வித்துப் போவது. இவர் . . .பல்லவராயருக்கே கலிகண்டித்த திறல் வாழியே(?)” என்னக் கடவதிறே. கலிகன்றியான் அருளால் உயர்ந்தவரிறே இவர்தான். இனி இவர் இப்படித் தம்முடைய ஜ்ஞாநநுஷ்டா2நங்களாலே ஜ்ஞாந விபா4க3மற ஸகல சேதநரையும் ரக்ஷித்துக்கொண்டு
_______________________________________________________________
எல்லாம் நிறைந்திருப்பதால், “நிறைஞானத் தொருமூர்த்தி” (திருவாய்மொழி 3-4-6) என்று கூறியுள்ளபடி கீ3தோபநிஷத்தை அருளிய கண்ணபிரானோ இவர் என்று எண்ணும்படியான ஜ்ஞாநநிதி4யாக இருக்கின்ற இவருடைய ஜ்ஞாநத்திற்குக் கலியின் தோ3ஷத்தினால் யாதொரு குறையும் வாராமல் நித்யமங்க3ளமாய்ச் செல்ல வேணுமென்று “மணவாளமாமுனி புந்தி வாழி” என்று மங்க3ளாஶாஸநம் செய்கிறார். கலிதோ3ஷத்தாலேயே சேதநருடைய ஜ்ஞாநம் குறைந்து போகிறது. இவர் பல்லவராயருக்கே கலிகண்டித்த திறலைஉடையவரன்றோ! கலிகன்றி (திருமங்கையாழ்வார் அல்லது நம்பிள்ளை) அருளால் உயர்ந்தவரன்றோ இவர்தான். இப்படிப்பட்ட தம்முடைய ஜ்ஞாநத்தாலும் அநுஷ்டா2நத்தாலும் அறிவுள்ளவர்கள் அறிவற்றவர்கள் என்று வேறுபாடில்லாமல்
Page-31
போருகையால் வந்த புகழைச் சொல்லுகிறது. ஞாலமுண்ட புகழ்போலேயிருப்பதொரு புகழாய்த்திது. தன்புகழ் நயவாருடைய புகழ்போற்றி இருக்கிறபடி. அதாவது ஜ்ஞாந வைப4வத்தாலே வந்த புகழானது “தொல்புகழ் சுடர்மிக்கெழுந்தது” (இராமநுச நூற்றந்தாதி-61) என்கிறபடியே நிரவதி4கதேஜோரூபமாய் அப்ரதிஹதமாய் வாழ்வேணுமென்கை. புகழ்வாழி என்றவநந்தரம் வாழி என்றிரட்டிப்பாயிருக்கிறதுக்கு ப்ரயோஜநம் பல்லாண்டு பல்லாண்டென்கிறாராகவுமாம். அன்றிக்கே “நீள் புவியில் தன்புகழை நிறுத்துமவன் வாழியே” என்கிறபடியே கீழ்ச்சொன்ன யஶஸ்ஸுக்கு ஆதாரமாய் அநுக்தமான ஆத்மஸ்வரூப
________________________________________________________________
அனைவரையும் திருத்திக் காப்பதால் வந்த புகழைக் கூறுகிறார். இப்புகழ் எம்பெருமானுடைய உலகமுண்ட புகழ்போலே இருக்கின்ற புகழாகும். புகழை விரும்பாத மாமுனிகளுடைய புகழுக்குப் போற்றி என்கிறார். அதாவது, ஞானத்தினுடைய பெருமையால் வந்த புகழானது “தொல்புகழ் சுடர்மிக்கெழுந்தது” (இராமநுச நூற்றந்தாதி-61) என்கிறபடி எல்லையில்லாத பேரொளியுடன் ஒரு குறையும் ஏற்படாவண்ணம் வாழவேண்டும் என்கிறார். புகழ்வாழி என்றவுடனே மறுபடியும் வாழியே என்று இரண்டாம் முறை கூறுவது “பல்லாண்டு பல்லாண்டு” என்பதுபோல் ஆகும். அல்லது, “நீள் புவியில் தன்புகழை நிறுத்துமவன் வாழியே” என்கிறபடி தம்முடைய புகழுக்கு ஆதாரமாக உள்ளதும், இங்கு வெளிப்படையாகச் சொல்லப் படாததுமான மாமுனிகளின் ஆத்மஸ்வரூபத்தினுடைய பெருமையும் நீடுழியாகச் செல்ல
Page-32
வைலக்ஷண்யமும் அநவரத பா4வியாய்ச் செல்லவேணுமென்று ஆஶாஸிக்கிறாராகவுமாம். அடியே தொடங்கி இதுவேயிறே இவர்க்கு யாத்ரை. இத்தால் சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்க3ளாஶாஸநமே அநுகூலரானவர்க்கு அநவரத கர்த்தவ்யமென்று அருளிச் செய்து தலைக்கட்டி அருளினாராய்த்து.
வாழி செந்தாமரைத்தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறைமார்பு முக்கோலங்கை வாழி திண்டோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன்நாமம் மருவுநுதல்
வாழி பொற்கோயில் மணவாளமாமுனி வாழ்முடியே
ஜீயர் திருவடிகளே ஶரணம்
_________________________________________________________
வேண்டும் என்று மங்க3ளாஶாஸநம் செய்கிறார் என்றும் கொள்ளலாம். அடியே பிடித்து இவருக்கு இதுவே பணி. இப்படி மங்க3ளாஶாஸநம் செய்ததால்,
சரம பர்வமான மாமுனிகள் திறத்தில் மங்க3ளாஶாஸநம் செய்வதே அடியவர்களுக்கு எப்போதும் செய்ய வேண்டிய கைங்கர்யம் என்று அருளிச் செய்து தலைக்கட்டினார்.
(மாமுனிகளின்) சிவந்த தாமரை போன்ற திருவடிகள் வாழி. துவராடை (காஷாயவஸ்த்ரம்) வாழி. இடை வாழி. கொப்பூழ் (திருநாபி4) வாழி. யஜ்ஞோபவீதம் விளங்குகின்ற திருமார்பு வாழி. முக்கோல் ஏந்திய அழகிய திருக்கை வாழி. திண்ணிய தோள்கள் வாழி. சிவந்த திருப்பவளம் வாழி. அழகிய திருமண்காப்பு அணிந்த திருநெற்றி வாழி. திருவரங்கம் பெரியகோயிலில் உறையும் மணவாளமாமுனிகளின் திருமுடி வாழி. (இது பாதா3திகேஶமாலையில் உள்ள கடைசிப் பாடலாகும்).
ஜீயர் திருவடிகளே ஶரணம்