ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
रामानुज रहस्यत्रयम्
ராமாநுஜரஹஸ்யத்ரயம்
மூலம்
- ஓம் நமோ ராமாநுஜாய
2. ஸ்ரீமத்3 ராமானுஜ சரணௌ ஶரணம் ப்ரபத்3யே । ஸ்ரீமதே ராமாநுஜாய நம:।।
3. ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர। விபூ4திம் ஸர்வபூ4தேப்4யோ த3தா3ம்யேதத்3 வ்ரதம் மம।।
ஸ்ரீமத்3 ராமாநுஜ கு3ரவே நம:
வரதா3ர்ய கு3ரோ: புத்ரம் தத்பதா3ப்3ஜைக தா4ரகம்। ஜ்ஞாந ப4க்த்யாதி3 ஜலதி4ம் வந்தே3 ஸுந்த3ர தேஶிகம்।।
பாது3கே யதிராஜஸ்ய கத2யந்தி யதா2க்யயா। தஸ்ய தா3ஶரதே2: பாதௌ3 ஶிரஸா தா4ரயாம்யஹம்।।
ஞானத்3ருஷ்டி ஸ்ரீ அழகப்பங்கார் அருளிச் செய்த வ்யாக்2யாநம்
அநாத்3யவித்3யாஸஞ்சித-புண்யபாபரூப கர்மபரவஶனாய், தே3வதிர்யக்3 மநுஷ்ய ஸ்தா2வரரூப -சதுர்வித4 ஶரீரங்களைப் பரிக்3ரஹித்து பத்3த4 ஸம்ஸாரியாய், து3க்க2ஸாக3ரமக்3நனாய், தந்நிஸ்தரணோபாய மறியாத சேதநனுக்கு, நிர்ஹேதுக ப4க3வத் கடாஷத்தாலே அத்3வேஷாபி4முக்ய ஸத்ஸங்க3தி3களுண்டாய் ஸதா3சார்ய ஸமாஶ்ரயணம் பண்ணின சரமாதி4காரிக்கு மோக்ஷைகஹேதுவாய்,
பரம ரஹஸ்யமான ராமாநுஜ ரஹஸ்யத்ரயம் அறிய வேணும்.
அதில் மந்த்ரமிருக்கும்படி எங்ஙனேயென்னில்; –எட்டுத்திருவக்ஷரமாய், ஓம் என்றும், நம: என்றும், ராமாநுஜாய என்றும் மூன்று பத3மாய் இருக்கும். இதில் முதல் பத3மாய் ஏகாக்ஷரமான ப்ரணவம்
அகாரம் என்றும், உகாரம் என்றும், மகாரம் என்றும் மூன்று திருவக்ஷரமாய் மூன்று பத3மாய் இருக்கும். இரண்டாம் பத3மான நமஸ்ஸு ‘ந’ என்றும், ‘ம:’ என்றும் இரண்டு திருவக்ஷரமாய், இரண்டு பத3மாய் இருக்கும். மூன்றாம் பத3மான ராமாநுஜ பத3ம் அஞ்சு திருவக்ஷரமாய் ‘ராம’ என்றும் ‘அநுஜ’ என்றும் இரண்டு பத3மாய், மேல் ‘ஆய’ என்று சதுர்த்தி2யாயிருக்கும்.
இதுக்கு அர்த்த2ம் –இதில் முதல் பத3மான அகாரத்தாலே எம்பெருமானாரைச் சொல்லுகிறது.
“அகாரோ விஷ்ணு வாசக” (?) என்றும், “அக்ஷராணாம் அகாரோऽஸ்மி” (ப4க3வத் கீ3தை 10-33) என்றும் ,
“அகாரார்த்தோ2 விஷ்ணு: (அஷ்டஶ்லோகீ -1)என்றும் நாராயண வாசகமான அகாரம் எம்பெருமானாரைச் சொல்லுகிறபடி எங்ஙனேயென்னில் ; “ஸாஷாந்நாராயணோ தே3வ: க்ருத்வா மர்த்யமயீம் தநும்।
மக்3நாநுத்3த4ரதே லோகாந் காருண்யாச் சா2ஸ்த்ர பாணிநா।। ” (ஜயாக்ய ஸம்ஹிதை) என்றும்,
“ஆசார்யஸ் ஸ ஹரி: ஸாஷாத் சரரூபி ந ஸம்ஶய:” (?) என்றும் ,”பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” (பெரியாழ்வார் திருமொழி -5-2-8) என்றும் இப்படி ஸகல ப்ரமாணங்களாலே ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யனாகையாலே “தஸ்மின் ராமாநுஜார்யே கு3ருரிதி ச பத3ம் பா4தி (பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஶ்லோகம்) என்றும், ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் யதிராஜோ ஜக3த் கு3ரு:”என்றும்,”ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்3த4ர்த்தா நாத்ர ஸம்ஶய:” என்றும், “ஆசார்ய பதமென்று தனியே ஒரு பத3ம்; அதுள்ளது எம்பெருமானார்க்கே” என்றும் சொல்லுகிறபடியேஆசார்யத்வபூர்த்தி எம்பெருமானார்க்கே உண்டாகையாலே
அகாரவாச்யரெம்பெருமானாராகை ஸித்3த4ம்.
ஆனால் ஸகல ஜக3த்காரணத்வமும், ஸர்வரக்ஷகத்வமும், ஸர்வஶேஷித்வமும்,
ஶ்ரிய: பதித்வமும் அகாரத்திலே ப்ரதிபாதி3க்கையாலே எம்பெருமானாரிடத்தில் இவையுண்டாக வேண்டாவோயென்னில் உண்டு. எங்ஙனே யென்னில் ; ஈஶ்வரனே யில்லையென்றும்,
உண்டானாலும் நிமித்தமாத்ரம் என்றும், கர்மம் காரணமென்றும், சேதநன் காரணமென்றும், ப்ரதா4நம் காரணமென்றும் சொல்லுகிறவர்களுடைய மதங்களை ஶ்ருதி -ஸ்ம்ருதி -இதிஹாஸ- புராணங்களாலே நிரஸித்து, ஈஶ்வர ஸத்பா4வத்தை அங்கீ3கரிப்பித்து ஸகலஜக3த்காரணபூ4தனான ஈஶ்வரனை உண்டாக்கினபடியாலும், “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” ( கீதை 7-18) என்கிற ஈஶ்வரவாக்யத்தாலே ஈஶ்வரன் ஶரீரமும்,எம்பெருமானார் ஶரீரியுமாகையாலே, ஶரீரத்துக்குண்டான காரணத்வம் ஶரீரிக்கேயாகையாலும் ,ஆதி3 காரணத்வம் எம்பெருமானார்க்கே என்று சொல்லலாம். காரணமாகிறது உண்டாகப் பண்ணின வஸ்துவிறே.
கபர்த்தி3 மதகர்த்த3மம் கபிலகல்ப நாவாகு3ராம்
து3ரத்யயமதீ3த்ய தத் த்3ருஹிணதந்தரய3ந்த்ரோத3ரம் ।
குத்3ருஷ்டிகுஹநா முகே2 நிபதத: பரப்3ரஹ்மண:
கரக்3ரஹவிசக்ஷணோ ஜயதி லஷ்மணோऽயம் முநி: ।।
(யதிராஜஸப்ததி -38) என்றும் ப்ரமாணம் உண்டாகையாலே ஸகல ஜக3த் காரணத்வம் எம்பெருமானார்க்கேயுள்ளது.
ஸர்வ ரக்ஷகத்வம் எங்ஙனேயென்னில்; அதி4காரி நியமமின்றிக்கே ப்3ரஹ்ம -க்ஷத்ரிய- வைஶ்ய-ஶூத்3ராதி3களையும், ஸ்திரீ -பா3ல -வ்ருத்3த4- மூக-ஜட-அந்த4-ப3தி4ர -பங்கு -பஶு- பஷி- ம்ருகா3தி3களையும் ரக்ஷிக்கையாலே ஸர்வரக்ஷகத்வமும் உண்டென்கை.
ஸர்வ ஶேஷித்வம் எங்ஙனேயென்னில்:-நம்பெருமாள்,திருவேங்கடமுடையான்,
தேவப்பெருமாள், அழகர், திருக்குறுங்குடி நம்பி, திருநாராயணரான யாதவாத்3ரிநாத2ன் முதலானவர்கள் உப4ய விபூ4தியையும் கொடுத்தும், ஜாமாதாவாயும், ஶிஷ்யனாயும், குமாரனாயும் ஶேஷப்படுகையாலும்; நம்மாழ்வார் இவருடைய ப4விஷ்யத3வதாரத்தைக் கடாக்ஷித்து திருவாய்மொழியிலே “கலியும் கெடும் கண்டுகொண்மின்” (திருவாய் 5-2-1) என்றும், ‘கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்’ (திருவாய் 5-2-2) என்றும் இத்யாதி3களால் இவருடைய ஸம்ப4ந்த4த்தால் எல்லாரும் வீடு பெறுவர்கள் என்றும், ‘நமக்குமிவர் ஸம்ப4ந்த4த்தாலே உஜ்ஜீவனமென்றும் ‘பொலிக பொலிக பொலிக ‘(திருவாய்5-2-1)என்றும் மங்க3ளாஶஸனம் பண்ணி ஸ்ரீமந்நாத2முனிகளுக்கு மேலுள்ள அவதார ரஹஸ்யத்தையும் அறிவித்து ப4விஷ்யதா3சார்ய விக்3ரஹத்தையும் ப்ரஸாதி3த்தருள, அவர் உய்யக்கொண்டார்க்கும், அவர் மணக்கால்நம்பிக்கும், அவர் ஸ்ரீஆளவந்தார்க்கும், அவர் திருக்கோட்டியூர்நம்பிக்கும் ப்ரஸாதி3க்கையாலே முன்புள்ள முதலிகளும்; ஸமகாலத்திலே கூரேஶ-குருகேஶ- கோ3விந்த3 -தா3ஶரதி2கள் முதலான எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த2ரும், எழுநூறு த்ரிதண்ட3 ஸந்யாஸிகளும், பன்னீராயிரம் ஏகாங்கிகளும் , எண்ணிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களும், ராஜாக்களும், திருநாமதா4ரிகளும், ப4ட்டர், நஞ்ஜீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, பிள்ளைலோகாச்சார்யர் முதலான பின்புள்ள முதலிகளும் அவர்க்கே ஶேஷப்படுகையாலே ஸர்வ ஶேஷித்வமும் உண்டென்கை.
இவை இத்தனையுமுண்டானாலும் ஶ்ரியபதித்வம் சொல்லலாமோ யென்னில்; சொல்லலாம். ஸ்ரீ ஶப்3த3த்தாலே கூரத்தாழ்வானைச் சொல்லி அவருக்குப் பதி யென்று எம்பெருமானாரைச்சொல்லலாம். ஆனால் ஸ்ரீ ஶப்3த3த்தாலே கூரத்தாழ்வானைச் சொல்லுகிறபடி எங்ஙனேயென்னில்;’கந்தல் கழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையுடைய அவஸ்தை2 வரக் கடவதாய் இருக்கும். ஆறு ப்ரகாரத்தாலே பரிஶுத்3தா4த்ம ஸ்வரூபத்துக்கு தத்ஸாம்யமுண்டாயிருக்கும்’ என்று ஸ்ரீ வசநபூ4ஷணத்திலே (239,240) அருளிச் செய்தபடியே ஆழ்வானுக்கும் உண்டாகையாலும், ஈஶ்வரனுக்கு அநேக நாய்ச்சிமார் உண்டானாலும், அக்3ரமஹிஷி பெரியபிராட்டியாரானாப் போலே ‘அக்3ர்யம் யதீந்த்3ர ஶிஷ்யாநாம் ஆத்3யம் வேதா3ந்த வேதி3நாம்'(?) என்கிறபடியே எம்பெருமானார்க்கு ப்ரதா4ன ஶிஷ்யராகையாலும், ஈஶ்வரனை ஆஶ்ரயிக்கிறவர்களுக்கு பெரிய பிராட்டியார் புருஷகாரமானாலல்லது ஈஶ்வரன் கார்யம் செய்யான் என்கிறபடியே, எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயிக்கிறவர்களுக்கு ஆழ்வான் உபகாரம் வேண்டும்; “ஸ்ரீவத்ஸசிஹ்ந ஶரணம் யதிராஜமீடே” (யதிராஜ விம்ஶதி -2) என்றும்,”கூராதி4 நாத2 குருகேஶமுகாத்3ய பும்ஸாம் பாதா3னுசிந்நநபர: ஸததம் ப4வேயம் (யதிராஜ விம்ஶதி -3)என்றும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச் செய்கையாலும்,’மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின் பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி அல்லா வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே ‘ என்று நூற்றந்தாதி(7)யிலே அருளிச் செய்கையாலும், இப்படி மணவாள மாமுனி, திருவரங்கத்தமுதனார் முதலானவர்கள் ஆழ்வான் புருஷகாரமாகவே ஆஶ்ரயிக்கையாலும், எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயித்ததினாலே தமக்கு ஸ்வரூப லாப4மும், மற்றையவர்களுக்கெல்லாம் தம்மை ஆஶ்ரயித்தே ஸ்வரூபலாபமும் பெற வேண்டுகையாலே; ஸ்ரீஶப்3த3த்தாலே ஸ்ரீயதே, ஶ்ரயதே என்கிற வ்யுத்பத்தி த்3வயார்த்த2மும் இவரிடத்திலே உண்டாகையாலே ; ஸ்ரீ ஶப்3த3த்தாலே ஆழ்வானைச் சொல்லலாம். ஆனால் ‘புருஷகாரமாம்போது க்ருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும் ‘என்று ஸ்ரீவசநபூ4ஷணத்தில் (7) அருளிச் செய்தபடியே பிராட்டிக்கு இந்த மூன்று கு3ணங்கள் உண்டானாப் போலே ஆழ்வானுக்கும் இம் மூன்று குணங்களும் உண்டாகவேண்டாவோ என்னில், உண்டு. எங்ஙனேயென்னில்; க்ருபையாவது -பர து3க்க து3க்கித்வமும், பர து3: க்க அஸஹிஷ்ணுத்வமும் ஆகையாலே, வாழையிலை அறுத்து மூர்ச்சையாய் விழுந்ததினாலும், ஸர்ப்பாஸ்க3தமான மண்டூ3கத்தினுடைய ஆர்த்தநாத3த்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்து விழுந்தார் என்று வார்த்தாமாலையிலே அருளிச் செய்கையாலும் பரது3:கத்து3க்கி2த்வமும்; நான் பெறுகிற லோகம் நாலூரானும் பெற வேணுமென்று சொல்லுகையாலே பர து3:க்க2 அஸஹிஷ்ணுத்வமும் பிரகாஶித்தது. ஆகையால் இவ்விரண்டு வ்ருத்தாந்தத்தாலும் க்ருபை வெளிப்பட்டது.
மாஸோபவாஸம் இருக்கச் சொல்லி நியமித்தபடியே செய்திருக்கையாலே
பாரதந்த்ர்யமும் வெளியிடப்பட்டது. பாரதந்தர்யமாவது: – ஆசார்யன் நியமித்த படியே செய்கை. எங்ஙனேயென்னில்:-எம்பெருமானார் திருக்கோட்டியூர்நம்பி ஸந்நிதி4க்கு பதினெட்டு தரம் எழுந்தருளி, அவர் பக்கலிலே லபி4த்த சரமார்த்த2த்தை ஆழ்வான் “அடியேனுக்கு ப்ரஸாதி3த்தருள வேணும் “என்று விண்ணப்பம்செய்ய அப்படியே “ஸம்வத்ஸரம் தத3ர்த்3த4ம் வா மாஸத்ரயமதா2பி வா । பரீக்ஷ்ய விவிதோ4பாயை: க்ருபயா நிஸ்ப்ருஹோ வதே3த் ।।” என்கிறபடியே ஒரு ஸம்வத்ஸரமாவது, ஆறு மாஸமாவது, மூன்று மாஸமாவது விவிதோ4பாயங்களினாலே பரீக்ஷித்து நிஷ்காமனாய், அர்த்த2ங்களை ப்ரஸாதி3த்தருள வேணுமென்று ஶாஸ்திரப்ரதிபாத3நங்கள் உண்டாகையாலே, அப்படியே பரீக்ஷித்து ஶ்ருதமான அர்த்த2ங்களை ப்ரஸாதி3த்தருளத் திருவுள்ளமாய், ஆழ்வானுக்கு மாஸோபவாஸம் நியமிக்க ,நியமித்தபடியே இருந்தாராகையாலே பாரதந்த்ர்யம் ப்ரகாஶித்தது .
அநந்யார்ஹத்வமாவது :- க்ருமிகண்ட2 வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளைசாற்றி மேல்நாட்டுக்கு எழுந்தருளின போது, க்ருமிகண்ட2ன் பெருமாள் பரிகரத்தை நெருக்கிக் கொண்டு போருகையாலே, இந்தக் கலகம் உடையவராலேயன்றோ என்று அவர் திருவடி ஸம்பந்த4ம் உள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்கவிடவேண்டா என்று தி3வ்யாஞ்ஜை யிட்டுவைத்தார்கள்; கூரத்தாழ்வான் த3ர்ஶனத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமிகண்ட2னிடத்திலே புக்கு அவனாலே திருநயனங்களுக்கு உபத்3ரவம் வந்து ,மீண்டு கோயிலுக்கு எழுந்தருளி அங்குற்றைச் செய்தியறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளினவளவிலே, ஒருவன் ஆழ்வானை உள்ளே புகுராதேயென்று என்று தகைய , ஒருவன் தகையாதே கோயிலுக்குள் புகுருமென்ன, அவ்வளவில் ஆழ்வான் திகைத்துநின்று இங்குற்றை விஶேஷம் ஏதென்று திருவாசல்காக்குமவர்களைக் கேட்க , அவர்களும் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்ப3ந்த4ம் உள்ளவர்கள் ஒருவரையும் பெருமாளை ஸேவிக்கவிட வேண்டாவென்று தி3வ்யாஞ்ஜையிட்டு தகைந்து கிடக்கிறது என்ன , ஆகில் நீங்கள் என்னை புகுரச் சொல்லுவானென்னென்ன, ஆனாலும் நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல கு3ணங்கள் உடையராகையாலே புகுரச் சொன்னோமென்ன ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜலசந்த்3ரனைப்போலே நடுங்கி சிவிட்கென்று நாலடி மீண்டு, ஐயோ ஆத்ம கு3ணங்களுண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்ப3ந்த4த்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று, எனக்குண்டான ஆத்ம குணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்ப3ந்த4த்தை அறுத்துக் கொள்ளுகைக்கு ஹேதுவாய் விட்டதோ என்று வ்யாகுலப்பட்டு, தம்மை மிகவும் நொந்து கொண்டு எனக்கு, பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்ப3ந்த4மேயமையும்; இந்த ஸம்ப3ந்த4ம் ஒழிந்த ப4க3வத் ஸேவையும் வேண்டாவென்று திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தார் என்று அந்திமோபாயநிஷ்டை2யிலே அருளிச் செய்கையாலும்; ஒரு காலத்திலே எம்பெருமானார் திருவுள்ளத்திலே தம்மைச் சீறியருளினாரென்று ஆழ்வான் கேட்டு, இவ்வாத்மா அவர்க்கே ஶேஷமாய் இருந்ததாகில், அவருடைய விநியோக3 ப்ரகாரம் கொண்டு கார்யமென்னென்று அருளிச்செய்தார் என்று மாணிக்கமாலை, வார்த்தாமாலை, அந்திமோபாயநிஷ்டை முதலான ரஹஸ்யங்களிலே அருளிச் செய்கையாலே, இவ்விரண்டு வ்ருத்தாந்தத்தாலும் அநந்யார்ஹத்வம் வெளிப்படுகிறது. ஆகையால் ஸ்ரீ ஶப்3த3த்தாலே கூரத்தாழ்வானைச் சொல்லி, அவருக்குப் பதி என்கையாலே ஶ்ரிய: பதித்வம் சொல்லிற்று.
உகாரத்துக்கு அர்த்த2ம்: – அந்ய ஶேஷத்வ நிவ்ருத்தியும், அநந்யார்ஹ ஶேஷத்வமும். இவ்விடத்தில் அந்யஶேஷத்வ நிவ்ருத்தியாவது- ஈஶ்வரஶேஷ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. அநந்யார்ஹஶேஷத்வமாவது: – எம்பெருமானார்க்கே ஶேஷமென்று சொல்லுகிறது. ஈஶ்வரஶேஷத்வத்தை அந்யஶேஷம் என்று சொல்லுகிறபடி எங்ஙனேயென்னில்: – எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்துக் ‘வடுகா! அழகியமணவாளப் பெருமாள் உப4யநாய்ச்சிமாருடனே கூடச்சேர்த்தியிலே ஸர்வாப4ரணபூஷிதராய் நம் மட2த்து வாசலிலே எழுந்தருளுகிறார், வந்து ஸேவிக்க வொண்ணாதோ’ என்று அருளிச்செய்ய , ‘அடியேன் உங்கள் பெருமாளை ஸேவிக்க வந்தால் எங்கள் பெருமாள் பால் பொங்கிப் போகாதோ ‘என்று விண்ணப்பம் செய்கையாலும் ; ‘நித்ய ஶத்ருவாயிறேயிருப்பது’ என்று ஆசார்யஸேவைக்கு ப4க3வத்ஸேவை விரோதி4க்குமென்று ஸ்ரீவசநபூ4ஷணத்திலே (424) அருளிச்செய்கையாலே ஆசார்யஸேவைக்கு ப4க3வத்ஸேவை விரோதி4யாகை ஸித்3த4ம்.
இனி மகாரத்துக்கு அர்த்த2ம்:- ‘மந ஜ்ஞாநே’ என்கிற தா4துவினாலே ‘மகாரோ ஜீவ வாசக:(?) என்று ஆத்மாவைச் சொல்லுகிறது. ஜாத்யேகவசநமாகையாலே ஸகல ஆத்மாக்களைச் சொல்லுகிறது. மகாரம் ஸகலாத்ம வாசகமானாலும் ‘மகாரஸ்து தயோர் தா3ஸ:’ (பாஞ்சராத்ரம்) என்று எம்பெருமானார் திருவடிகளிலே உண்டான ப்ராவண்யம்தானே நிரூபகமாக யதீந்த்3ர ப்ரவணரென்று திருநாமத்தை உடையவரான மணவாள மாமுனியைச் சொல்லுகையே முக்2யார்த்த2மென்று ஸம்ப்ரதா3யஜ்ஞரான நம்மாசார்யர்கள் அருளிச்செய்வர்கள். ஆக, ப்ரணவத்தால் ஸகலாத்மாக்களும் எம்பெருமானார்க்கே ஶேஷமென்று சொல்லிற்றாயிற்று.
நமஸ்ஸுக்கு அர்த்த2ம்:- ‘ம:’ என்கையாலே தான் ஸ்வதந்த்ரன் என்கிறது. ‘ந’-‘அன்று’ என்கையாலே ஸ்வதந்த்ரனன்று என்கிறது. ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியான போதே பாரதந்த்ர்யம் ப்ரகாஶமாகையாலே இங்கு பாரதந்த்ர்ய பராகாஷ்டையான ததீ3யபாரதந்த்ர்யமே சொல்லுகிறது. இங்கு ததீ3யராவது ‘த்வத்தா3ஸ தா3ஸ க3ணநா சரமாவதௌ4 யஸ்தத்தா3ஸதைக ரசதாவிரதா மமாஸ்து’ (யதிராஜ விம்ஶதி -16) என்கிறபடியே எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த4 ஸம்ப3ந்தி4கள் எவர்களோ அவர்களுக்கே பரதந்த்ரன் என்கை.ஈஶ்வர பாரதந்த்ர்யம் ஸர்வாத்மஸாதா4ரணம். ராமானுஜபாரதந்த்ர்யம் கதிபயஸாதா4ரணம். ததீ3ய பாரதந்த்ர்யம் அஸாதா4ரணம். இவ்வர்த்த2ம் ‘இடங்கொண்ட கீர்த்திமழிசைக்கிறைவன் இணையடிப்போது ‘(12), ‘திக்குற்றகீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்’ (26), ‘நல்லார் பரவுமிராமானுசன்’ (80) இத்யாதி3களில் எம்பெருமானார் திருவடிகளுக்கே ஶேஷபூ4தரானார்க்கொழிய மற்றொருவர்க்கு அடிமை செய்யாதிடங்கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே என்று எம்பெருமானார் தா3ஸர்கள்
எந்தக்குற்றம், எந்த ஜன்மம் , எந்த ஆசாரமுண்டானவர்களானாலும் அந்தக் குற்றம், அந்த ஜந்மம், அந்தவாசாரம் தானே நம்மை ஆட்கொள்ளுமென்றும், எம்பெருமானார் திருநாமம் நம்பினவர்களை மறவாதவர்கள் எவர்களோ அவர்களுக்கே ஸர்வதே3ஶ, ஸர்வகால, ஸர்வாவஸ்தை2களிலும், ஸகலவித4கைங்கர்யங்களும் , த்ரிவித4கரணங்களாலும் செய்கிறேன் என்றும் அமுதனார் அருளிச்செய்கையாலும், ‘வாசா யதீந்த்3ர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதா3ரவிந்தயுக3ளம் ப4ஜதாம் கு3ரூணாம் ।
கூராதி4நாத2குருகேஶமுகாத்3யபும்ஸாம் பாதா3நுசிந்தன பரஸ் ஸததம் ப4வேயம் ।।’ (யதிராஜ விம்ஶதி 3 )என்றும், ‘த்வத்தா3ஸ தா3ஸ க3ணநா சரமாவதௌ4 ய: தத்3தா3ஸ தைகரஸதாऽவிரதா மமாஸ்து (யதிராஜ விம்ஶதி 16) என்றும் சொல்லுகிறபடியே மநோவாக்காயங்களாலே உம்முடைய திருவடியே ப4ஜித்துக் கொண்டிருக்கிற கூரத் தாழ்வான், திருக்குருகைப்பிரான் பிளான் முதலானவர்களுடைய
திருவடிகளை எப்போதும் த்4யானம் பண்ணுகிறேன் என்றும், உம்முடைய தா3ஸாநு தா3ஸ க3ணனையிலே சரமாவதி4 தா3ஸர்கள் எவரோ, அவருடைய தா3ஸ்யநிஷ்டை2யே எனக்கு வேணுமென்றும் மணவாளமாமுனிகளும் எம்பெருமானாரையே நோக்கி இப்படி விண்ணப்பம் செய்கையாலும், இந்த உப4யரிடத்திலும் ததீயபாரதந்த்ர்யம் காணப்பட்டது.
இந்நமஸ்ஸிலே அஹங்காரமமகாரநிவ்ருத்தியும், நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்த்ர்யமும், பாரதந்த்ர்ய பராகாஷ்டையான ததீ3ய ஶேஷத்வமும் ப்ரதிபாதி3த்தாலும் கீழ் ஸ்வரூபத்தை பிரதிபாதி3க்கையாலும், மேல் புருஷார்த்த2ம் ப்ரதிபாதி3க்கப்படுகையாலும், ப்ரதா4ந ப்ரதிபாத்3யம் உபாயமாகையாலும், ஸ்வரூப ப்ராப்யாநுரூபமான உபாயத்தைச் சொல்லுகிறது. ‘ஸ்வரூபத்துக்கும், ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்கவேணுமிறே ப்ராபகம்’ (ஸ்ரீ வ. பூ. 410) என்கிறபடியே எம்பெருமானார்க்கு ஶேஷமாகையே ஸ்வரூபமும், அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்த2முமாகையாலே இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே என்கை. எங்ஙனேயென்னில் “பேறொன்றுமற்றில்லை நின்சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச்சரணன்றி (இரா.நூ 45) என்று உபாயோபேயங்கள் இரண்டும் தேவரீர் திருவடிகளே என்று அமுதனார் அருளிச்செய்கையாலே, ஸ்வரூபாநுரூபமான உபாயம் எம்பெருமானார் திருவடிகளே என்றும் சொல்லுகிறது.
இதுவுமன்றிக்கே ‘ஸ்வாபி4மாநத்தாலே ஈஶ்வராபி4மானத்தைக் குலைத்துக் கொண்டவிவனுக்கு ஆசார்யாபி4மாந மொழியக் கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்” (ஸ்ரீ வ பூ 237) என்று அருளிச் செய்தபடியே அநாதி காலத்தில் நின்றும், ‘எனக்கு’ ‘நான்’ என்கிற ஸ்வாபி4மாநத்தாலே ஈஶ்வராபி4மாநத்தை அறுத்துக் கொண்ட இவனுக்கு எம்பெருமானார் அபி4மாந மொழிய வேறு க3தியில்லை என்று நம: பதா3ர்த்த2ம்.
ராமாநுஜபத3த்துக்கு அர்த்த2ம் –
ராமாநுஜபத3ம் அகார விவரணமாகையாலே பரப்3ரஹ்மத்தைச் சொல்லுகிறது. ராமாநுஜபத3த்துக்கு பரப்ரஹ்மம் என்று சொல்லுகிறது எங்ஙனேயென்னில்; ‘ராமஸ்ய அநுஜ: ராமாநுஜ:’ என்று நம்பி மூத்தபிரானுக்குத் திருத்தம்பியான க்ருஷ்ணனுக்கு வாசகம்;’வாஸுதே3வாய தீ4மஹி'(தை.உப.2-26) என்றும் ‘ப்3ரஹ்மண்யோ தே3வகீ புத்ரோ ப்3ரஹ்மண்யோ மது4ஸூத3ந: ‘(அத2ர்வ) என்றும் ‘க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்’ (பா4.ஆரண்ய 88-25) என்றும், ‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக3தோ மது4ராம்புரீம்’ (ஹரிவம்ஶம் 113-62) என்றும், ‘ராமக்ருஷ்ண ந்ருஸிம்ஹாஸ்து பூர்ணஷாட்கு3ண்ய மூர்த்தய:”(?) என்றும் சொல்லுகிறபடியே வாஸுதே3வனே பரப்ரம்ஹமென்றும், தே3வகீ புத்ரனே பரப்ரஹ்மமென்றும், ஸ்ரீக்ருஷ்ணனே பரப்ரஹ்மமென்றும், ஸ்ரீ க்ருஷ்ணனே ஸநாதந த4ர்மமென்றும், க்ஷீராப்3தி4ஶாயியான ஸ்ரீமந்நாராயணனே மதுரையிலே திருவவதரித்தருளினாரென்றும், ராமக்ருஷ்ணந்ருஸிம்ஹாவதாரங்கள் பூர்ணாவதாரங்கள் என்றும், இப்படிச் சொல்லப்பட்ட ஸ்ரீக்ருஷ்ணன் “பரித்ராணாய ஸாதூ4நாம் விநாஶாய ச து3ஷ்க்ருதாம் । த4ர்மஸம்ஸ்த்தா2பநார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3 ।।” ( கீதை 4-8) என்றும் “யதா3 யதா3ஹி த4ர்மஸ்ய க்3லாநிர் ப4வதி பா4ரத । அப்4யுத்தா2நாம் அத4ர்மஸ்ய ததா3த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ।।”(கீதை 4-7) என்றும் சொல்லுகிறபடியே துஷ்டநிக்3ரஹ ஶிஷ்டபரிபாலநத்துக்காக யுக3யுக3த்துக்கும் திருவவதரித்த க்ருஷ்ணாவதாரத்தில் அன்று அர்ஜுநனொருத்தனையுமே ஶிஷ்யனாக்கிக் கொண்டு அவனொருத்தனுக்குமே சரமார்த்த2த்தை ப்ரஸாதி3த்து ‘நாஸ்திகாய ந வக்தவ்யம் நா ப4க்தாய கதா3சந ந சாஶுஶ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்4யஸூயதே” (கீ3தை18-67) என்று நாஸ்திகருக்கும், என்னிடத்தில் ப4க்தி பண்ணாதவர்களுக்கும், கு3ருவான உனக்கு ஶுஶ்ரூஷை பண்ணாதவர்களுக்கும், என்னிடத்தில் அஸூயை பண்ணுமவர்களுக்கும் சொல்லவேண்டாவென்று அருளிச்செய்த குறைகள் எல்லாம் தீர்த்துக்கொள்ளுகைக்காக அந்த ராமாநுஜன் தானே இந்த ராமாநுஜாசார்யராய்த் திருவவதரித்து ப3ஹுப்ரயாஸத்தினாலே திருக்கோட்டியூர்நம்பி பக்கலிலே பதினெட்டு பர்யாயமெழுந்தருளி ப3ஹுபாயத்தாலே லபி4த்த சரமார்த்த2த்தை பூ4ரிதா3நமாக எல்லார்க்கும் ப்ரஸாதி3க்கையாலே எம்பெருமானார் தானே ஸ்ரீமந்நாராயணனாகை ஸித்3த4ம்.
அங்ஙனன்றிக்கே ராமாநுஜ பத3த்தில் ‘ராமா’ பத3ம் ஸ்திரீ வாசகமாகையாலே அத்தாலே சூடிக்கொடுத்த நாய்ச்சியாரைச்சொல்லி, ‘அநுஜ’ பத3த்தாலே அவளுக்குத் தம்பி1 சொல்லவுமாம். ஆனால் ஒரு வயிற்றில் பிறந்தவர்களையன்றோ, தம்பி தமக்கை என்று சொல்லுவது. நாய்ச்சியார் முன்பே பெரியாழ்வார் திருநந்தவனத்தில் திருத்துழாய் அடியிலே திருவவதரித்தருளினார். அநேக காலத்துக்குப் பின்பு ஆஸூரி கேஶவப் பெருமாளுக்குக் குமாரராய், காந்திமதியம்மாளுடைய திருவயிற்றிலே திருவதரித்த எம்பெருமானாரைத் தம்பி என்று சொல்லுகிறது எங்ஙனேயென்னில்: – தம்பி என்கிறது ச2ந்தாநுவர்த்தித்வம் சொல்லுகிறது. ச2ந்தாநுவர்த்தித்வமாவது – நினைவறிந்து நடக்கை. ஆனால் நாய்ச்சியார் நினைவை எம்பெருமானார் அறிந்தது எங்ஙனேயென்னில்: – “நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான் நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறுதடாநிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் ஏறுதிருவுடையான் இன்றுவந்து இவை கொள்ளும் கொலோ” என்றும், “இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் ஒன்றுநூறாயிரமாகக்கொடுத்து பின்னுமாளும்செய்வன் தென்றல்மணம்கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள் நின்றபிரான், அடியேன் மனத்தேவந்து நேர்படிலே” என்றும் நாய்ச்சியார் அழகருக்கு நூறு தடாவெண்ணையும், நூறுதடா அக்கார வடிசிலும் அமுது செய்யப் பண்ணவேணுமென்று நினைவுபண்ணி, தாம் அங்கு போகவேணுமென்றால் ப்ரேம பாரவஶ்யத்தாலே கால்நடை தந்து போகக்கூடாமல், நீர் இங்கு வந்து அமுது செய்தால் இங்கு வந்ததுக்கு கைக்கூலியாக ஒன்று நூறாயிரமாகக் கண்டருளப்பண்ணி பின்னையும் அடிமை செய்கிறேன்’ என்று அழகரை நோக்கி விண்ணப்பம் செய்தமாத்திரமொழிய, அவர் வந்ததும் இல்லை, தான் அமுது செய்யப்பண்ணவும் இல்லை . ஆகையால் அவர் திருவுள்ளம் அறிந்து எம்பெருமானார் தாமே அழகர் திருமலைக்கு எழுந்தருளி, நூறு தடாவெண்ணையும், நூறு தடாஅக்காரவடிசிலும் அமுதுசெய்யப் பண்ணுவித்து, பின்னையும் திருப்பணி, திருவாராத4நம் நடக்கக்கட்டளையிட்டுத் தாமும் மங்க3ளாஶாஸனம் பண்ணி, பின்னையும் சில மங்க3ளாஶாஸநபரரை அங்கு மங்க3ளாஶாஸனம் பண்ணிக் கொண்டிருக்க அருளிச்செய்து எழுந்தருளுகையாலே நாய்ச்சியார் நினைவை எம்பெருமானார் அறிந்தது ஸித்3த4ம். ஆகையாலன்றோ எம்பெருமானாரை நாய்ச்சியார் “வந்தாரோ நம் கோயில் அண்ணர்” என்றருளிச் செய்தது.
அங்ஙனன்றிக்கே இளைய பெருமாள் தானே இளையாழ்வார் என்னவுமாம். அது எங்ஙனேயென்னில்; அன்று இளையபெருமாள் சக்கரவர்த்தித்திருமகனுக்கு கைங்கர்யம் பண்ணினதொழிய, அவர்க்கு திருவாராத4நமாந நம்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்ததில்லை. ஆகையாலே, நம்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்கிறது சக்கரவர்த்தித் திருமகனுக்கு மிகவும் திருவுள்ளமாகையாலே, இளையாழ்வாராய்த் திருவவதரித்து, நம்பெருமாளுக்கு நித்யோஸ்வ, பக்ஷோத்ஸவ, மாஸோத்ஸவ, ஸம்வத்ஸரோத்ஸவங்கள், திருப்பணி, திருவாராத4நங்கள், அமுதுபடி, சாத்துபடி முதலான ஸகல வித4 கைங்கர்யங்களும் பண்ணுவித்து மங்க3ளாஶாஸநம் பண்ணிக் கொண்டு “அத்ரைவ ஸ்ரீரங்கே3 ஸூக2மாஸ்ஸ்வ” என்று ஸ்வாமி நியமிக்க அப்படியே கோயிலைப் பிரியாமல் எழுந்தருளியிருக்கையாலே இளையபெருமாள் தாமே இளையாழ்வார் என்னலாம்.
———————————————————————
குறிப்பு: இங்கு ராமானுஜ பத3த்தை வேற்றுமைத்தொகை (தத்புருஷஸமாஸம்) ஆகக்கொண்டு “ராமாயா: அநுஜ:” என்ற வ்யுபத்தியைத் திருவுள்ளம்பற்றியுள்ளார் க்3ரந்த2க்காரர். அதற்கு ச2ந்தாநுவர்த்தித்வம் என்ற உபபத்தியையும் கூறியுள்ளார். ஆனால் ‘பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று ஆண்டாளின் வாழித்திருநாமத்தில் கூறப்பட்டிருப்பதால் இப்பத3த்தை அன்மொழித்தொகை (பஹுவ்ரீஹிஸமாஸம்) ஆகக் கொண்டு “ராமா அனுஜா யஸ்ய ஸ:” (கோதை தங்கை எவருக்கோ, அவர்) என்று வ்யுபத்தி கூறுவர் பெரியோர்.
இதுவுமன்றிக்கே, ‘அநுஜ’ பத3த்தாலே ச2ந்தாநுவர்த்தித்வம் சொல்லுகையாலே
‘ஶேஷோ வா ஸைந்யநாதோ2 வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்த்விகை: ।விதர்க்காய மஹா ப்ராஜ்ஞை: யதிராஜாய மங்க3ளம் ।।(பாஷ்யகார மங்களம் 20) என்று பெரியோர் மங்க3ளாஶாஸநம் பண்ணுகிறவிடத்திலே இப்படி அருளிச் செய்கையாலே, நித்யகைங்கர்யபரரான நித்யஸூரிகளே உடையவர் என்று சொல்லவுமாம்.
“அடையார்கமலத்து அலர்மகள்கேள்வன் கையாழியென்னும் படையோடு நாந்தகமும், படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லும் புடையார் புரிசங்கமும் இந்தப்பூதலம் காப்பதற்கென்று இடையே இராமானுசமுனியாயின இந்நிலத்தே”(இரா. நூ 33) என்று தொடங்கி அமுதனார் அருளிச்செய்தபடியே பஞ்சாயுத4ங்களும் இவரே என்னவுமாம்.
“காவேரீ விரஜா ஸேயம் வைகுண்ட2ம் ரங்கமந்தி3ரம் । ஸ வாஸுதே3வோ ரங்கே3ஶ: ப்ரத்யக்ஷம் பரமம்பத3ம் ।। (ப்3ரஹ்மாண்ட புராணம்) என்கிறபடியே பரமபத3நாத2னான
ஸர்வேஶ்வரனே நம்பெருமாளாகையாலே திருவநந்தாழ்வானே எம்பெருமானாகை ஸித்3த4ம். “அநந்த: ப்ரத2மம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் । ப3லபத்3ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் ப4விஷ்யதி|।। (ப்ரஹ்மாண்ட புராணம்) என்கிற ஶ்லோகத்தில் “சதுர்த்த2 பாத3த்திற்கு பொருள் நாமே” என்று எம்பெருமானார் தாமே அருளிச்செய்கையாலும் திருவநந்தாழ்வான் எம்பெருமானாகை ஸித்3த4ம். இவ்வர்த்த2 விஷயமாக மற்றும் வேண்டிய ப்ரமாணங்கள் அநேகங்கள் உண்டு. அவையெல்லாம் விஸ்தர ப4யத்தாலே சொல்லுகிறிலோம்.
“நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுராக்ஷரீ । காமவஸ்தா2ம் ப்ரபத்3யந்தே ஜந்தவோ ஹந்த மாத்3ருஶ: ।।(?) என்றுஆழ்வான் அருளிச்செய்தபடியே ராமாநுஜ திருமந்த்ரத்துக்கு உண்டான பூர்த்தி ப4க3வந்-மந்த்ரங்களுக்கு இல்லை. ஆனால் “இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்த்ரம் ப்ரதா4நம்” (முமுக்ஷுப்படி 1-11) என்று ரஹஸ்யத்ரய விஷயமான முமுக்ஷுப்படியிலே பிள்ளை லோகச்சார்யரும், “நமந்த்ரோஷ்டாக்ஷராத் பர:” ” பூ4த்வோர்த்4வ பா3ஹுரத்யாத்3ய ஸத்ய பூர்வம் ப்3ரவீமி வ: । ஹே புத்ர ஶிஷ்யா: ஶ்ருணுத ந மந்த்ரோஷ்டாக்ஷராத் பர: ।।” என்னுமித்யாதி3களாலே ஏக கண்ட2மாக வ்யாஸ பராஶராதி3களான ரிஷிகளும் நாராயண அஷ்டாக்ஷரீ தன்னையே ஸர்வ மந்த்ரோத்க்ருஷ்டமாக ப்ரதிபாதி3க்க, ராமாநுஜ மந்த்ரத்துக்கு உள்ள பூர்த்தி இல்லை என்று சொல்லுகிறதுக்கு பொருள் எங்ஙனேயென்னில், “ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் “(கீதை7-18) என்று எம்பெருமானாரை ஈஶ்வரன் தன் ஹ்ருத3யத்திலே வைத்துக்கொண்டிருந்தாப்போலே நாராயண மந்த்ரமும் இந்த ராமாநுஜமந்த்ரத்தை தன் க3ர்ப்ப4த்துக்குளேவைத்துக் கொண்டிருந்த வதிஶயத்தாலே நாராயண மந்த்ரமே ஸர்வோத்க்ருஷ்டமென்று சொல்லலாம். ஆனாலும் மோக்ஷைக ஹேதுவான ராமாநுஜ மந்த்ரத்துக்குள்ள பூர்த்தி ப3ந்த4மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நாராயணமந்த்ரத்துக்கு இல்லை. எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஶ்வரனுக்கில்லை. ஆகையால் ஈஶ்வரன்பூர்த்தியும், பிராட்டிமார்பூர்த்தியும், நித்யஸூரிகள், ஆழ்வார்கள்பூர்த்தியும், ஆசார்யர்களுடைய ஸகலபூர்த்திகளும் எம்பெருமானார்க்கே உண்டென்கை.
“ஆய” பத3த்துக்கு அர்த்த2ம்
அவன் திருவடிகளில் கைங்கர்யத்தை ப்ரார்த்தி2த்தே பெற வேண்டும்”(முமுக்ஷு.2-63). என்கிறபடியே இப்படிக் கைங்கர்யத்தை யாசித்தே பெறவேண்டும். ” பரவாநஸ்மி காகுத்ஸ்த்த2 த்வயி வர்ஷஶதம் ஸ்தி2தே । ஸ்வயம் து ருசிரே தே3ஶே க்ரியதாமிதி மாம் வத3 ।।(ரா.ஆக.15-7) என்கிறபடியே நியமித்தபடியே செய்யவேணுமென்கை. “மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்குள்ளீடான வஸ்துவிலும் மந்த்ரப்ரத3னான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது” (முமுக்ஷு.1-4) என்றும் “மந்த்ரே தத்3தே3வதாயாம் ச ததா2 மந்த்ரப்ரதே3 கு3ரௌ த்ரிஷு ப4க்திஸ்ஸதா3 கார்யா ஸா ஹி ப்ரத2ம ஸாத4நம்”(?) என்றும் சொல்லுகிறபடியே இந்த மந்திரத்திலும் மந்த்ரப்ரதிபாத்3யரான எம்பெருமானாரிடத்திலும் மந்த்ரம் ப்ரஸாதித்த ஆசார்யரிடத்திலும் ப்ரேமம் அதிஶயேந உண்டானால் கார்யகரமாவது என்றிருக்கையாலே இந்த மந்த்ரப்ரத3னான ஆசார்யரிடத்திலே உத்தாரகத்வ பிரதிபத்தியும், மற்றையவரிடத்திலே உபகாரகத்வ ப்ரதிபத்தியும் உண்டாய் “தீ3ர்க்கத3ண்ட நமஸ்கார: ப்ரத்யுத்தாநமநந்தரம் ஶரீரமர்த்த2ம் ப்ராணஞ்ச ஸத்கு3ருப்4யோ நிவேத3யேத்”(?) என்கிறபடியே ஶரீரமர்த்த2 ப்ராணங்கள் ஆசார்யாதீ4நமாக வர்த்திக்கிறவதி4காரிக்கு “கையிலங்கு நெல்லிக்கனி”(உப.ர.62) என்றும் “வைகுந்த மாநகர் மற்றது கையதுவே “(திருவாய் 4-10-11) என்றும், “தானே வைகுந்தம் தரும்” (உப.ர.61) என்றும் செல்லுகிறபடியே ப்ராப்யம் கரதலாமலகமாயிருக்கும்; ஸம்ஶயமில்லை. ஆகையால் இந்த மந்த்ரத்தை யதா2ப்ரதிபத்தி யுக்தனாய் அநுஸந்தி4த்துக்கொண்டு விபரீதப்ரவ்ருத்தி நிவ்ருத்தனாய் ஈஶ்வரனுக்கும் பிராட்டிமார்க்கும் நம்மாழ்வாருக்கும் எம்பெருமானாருக்கும், மணவாளமாமுனிக்கும் ஸ்வாசார்யனுக்கும் உண்டான ஐக்யத்தையநுஸந்தி4த்து, ஈஶ்வரனுடைய பர வ்யூஹாதி3, பஞ்சஸ்த2ல பூர்த்திகளும், ஆழ்வாருடைய பூர்த்தியும், மணவாளமாமுனி பூர்த்தியும், ஸ்வாசார்ய பூர்த்தியும், எம்பெருமானார்க்கே யுண்டாகையாலே எம்பெருமானார்க்கே ஸர்வவித4 கைங்கர்யமுமம் பண்ணவேண்டும். எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் பண்ணும் போது திருவடிக்களுக்கு பண்ண வேண்டுகையாலும்,ஶேஷி பக்கல் ஶேஷபூதன் இழியும் துறை திருவடிகளாகையாலும் திருவடிகள் ஸ்தா2நமான ஸ்வாசார்ய பாரதந்த்ர்ய பராகாஷ்டை2யான அநுஷ்டா2னத்திலே த்ருடா3த்3யவஸாயபரனாய், நிற்கையன்றிக்கே ஸ்வரூபோபாய புருஷார்த்த2ங்கள் வேறொன்றில்லை .”தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும்நாள், அந்நேர் அறிந்தும் அதில் ஆசையின்றி ஆசாரியனை பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு “(உப.ர.64) என்றும் “ஆஸீநா வா ஶயாநா வா திஷ்ட2ந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரரைக ஶரணாவயம் “(நாரதீ3யம்) என்றும் சொல்லுகிறபடியே த்ரிகரணங்களினாலும் “அஸ்மத் கு3ருப்யோ நம:” என்கிற மந்த்ரம் தன்னையே காலக்ஷேபம் பண்ணுகிற அதி4காரிகள் ஜீவன்முக்தர் என்று அஸ்மதா3சார்யோக்தம். இந்த மந்த்ரம் த்யாக3 மண்ட3பமான பெருமாள் கோயில் திருவநந்தஸரஸ்ஸின் கரையிலே அநதி4காரிகளுக்கு சொல்லவேண்டாவென்று ஆணையிட்டுத் தம் திருவடிகளைத் தொடுவித்துக் கொண்டு
எம்பெருமானார் ஆழ்வானுக்கு ப்ரஸாதி3க்க, அவரும் அது தன்னையே தா4ரகமாக விஶ்வஸித்து நிர்ப்ப4ரராய் தம்மை விஶ்வஸித்திருக்கிறவர்களுக்கும் இந்த மந்த்ரம் தன்னையே ப்ரஸாதி3த்தருளுவர்.
திருமந்த்ரப்ரகரணம்முற்றிற்று.
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்.
த்3வயப்ரகரணம்
த்3வயம் இரண்டு வாக்யமாய், ஆறு பத3மாய், பத்து அர்த்த2மாய், இருபத்தஞ்சு திருவக்ஷரமாய் இருக்கும். அதில் பூர்வ வாக்யம் பதினைஞ்சு திருவக்ஷரமாய், உத்தர வாக்யம் பத்துத்திருவக்ஷரமாய் இருக்கும். எங்ஙனேயென்னில்: – ஸ்ரீமத்3 ராமாநுஜ சரணௌ ஶரணம் ப்ரபத்3யே என்றும், ஸ்ரீமதே ராமாநுஜாய நம: என்றும் இரண்டு வாக்யமாய், ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ என்றும், ஶரணம் என்றும் ப்ரபத்3யே என்றும், ஸ்ரீமதே என்றும், ராமாநுஜாய என்றும், நம:என்றும் ஆறு பத3மாய், “ஸ்ரீ”என்றும், “மத்”என்றும் “ராமாநுஜ”என்றும், சரணௌ என்றும், ஶரணம் என்றும், ப்ரபத்3யே என்றும், ஸ்ரீமதே என்றும், ராமாநுஜ என்றும், ஆய என்றும் நம: என்றும் பத்து அர்த்தமாய் இருக்கும்.
இதில் ப்ரத2மபத3மான ‘ஸ்ரீமத்’ என்கிறவிடத்தில் ஸ்ரீஶப்3த3ம் ஸம்பத்3 வாசகமாகையாலே உப4யவிபூ4த்யைஶ்வர்யத்தையும் சொல்லுகிறது. அங்ஙனன்றிக்கே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயைச் சொல்லுகிறது என்னவுமாம். கைங்கர்ய லக்ஷ்மியைச் சொல்லுகிறது என்னவுமாம். இவை இத்தனையும் சொன்னாலும் த்3வயத்துக்கு ப்ரத2மாக்ஷர வாச்யர், ஸ்ரீ வத்ஸாங்கா3சார்யர் என்று நஞ்ஜீயர் அருளிச் செய்கையாலே ஸ்ரீஶப்3த3த்தாலே கூரத்தாழ்வானைச் சொல்லுகையே முக்யார்த்த2மாகக்கடவது.
‘நித்யயோகே3 மதுப்’ என்கிறபடியே இந்த மதுப்பாலே நித்யயோக3த்தைச் சொல்லுகிறது. நித்யயோக3மாவது- பிரிந்திராத இருப்பு. ஆழ்வான் எம்பெருமானாரை பிரிந்திருக்கவில்லையோ என்னில் இல்லை. அது எங்ஙனேயென்னில்: –
“அர்ஜுந: கேஶவஸ்யாத்மா, க்ருஷ்ணஸ்யாத்மா கிரீடிண;” (?) என்கிறபடியே ஆழ்வான் திருவுள்ளத்தில் எம்பெருமானாரும், எம்பெருமானார் திருவுள்ளத்தில் ஆழ்வானும் பிரியாமல் இருக்கையாலும்; அங்ஙனன்றிக்கே ஆழ்வான் எம்பெருமானாருக்கு யஞ்ஞோபவீத ஸ்தா2நம் என்பது ப்ரஸித்த4மாகையாலே பிராட்டி ஈஶ்வரன் திருமார்பை விடாமல் இருக்குமாப்போலே ஆழ்வானும் எம்பெருமானார் திருமார்வை விடாமல் இருப்பர்.
இந்த கு3ணங்கள் இவரிடத்தில் உண்டாகைக்கு அடையாளம் எங்ஙனேயென்னில்: – இந்தகு3ணங்கள் இல்லாவிடில் சேதநர் ஆஶ்ரயிக்கவும், அவர்களை ரக்ஷிக்கவும் கூடாமையாலே ரக்ஷண த்4யாந ஸம்ஸ்பர்ஶ்ங்களாலே அவ்வவர்களை ரக்ஷித்தவிடங்களிலே காணலாம்.
‘சரண’ பத3த்தாலே திருவடிகளைச் சொல்லுகிறது. திருவடிகளைச் சொல்லவே தி3வ்யமங்க3ளவிக்3ரஹத்தைச் சொல்லுகை மறுத்தும் ‘சரண’ பத3த்தாலே மணவாளமாமுனியைச் சொல்லுகையே முக்2யார்த்த2ம் என்று ஸம்ப்ரதா3யாஜ்ஞரான நம்மாசார்யர்கள் அருளிச்செய்வர்கள். மணவாளமாமுனியைச் சொல்லவே ஸ்வாவசார்ய பர்யந்தம் விவக்ஷிதம்.
‘ ஶரண’ பத3த்தாலே உபாயத்தைச் சொல்லுகிறது. ‘ராமாநுஜ சரணௌ ஶரணம்’ என்கையாலே ஈஶ்வரனும் உபாயமன்றென்கை.
‘ப்ரபத்3யே’ பத3த்தாலே பற்றுகிறேன் என்று சொல்லுகிறது. “ஸக்ருதே3வ”(ராமசரமஶ்லோகம்) என்று ப்ரபத்தியொருக்காலேயாயிருக்க ‘பற்றுகிறேன்’ என்கிற வர்த்தமாநர்த்த2த்தாலே மற்றொன்று உபாயமென்கிற பு3த்3தி4 புகுராமல் நித்யமும் இதுவே காலக்ஷேபமாக அநுஸந்தி4க்கவேணுமென்று சொல்லுகிறது.
இந்த பூர்வவாக்யத்தில் ப்ரதிபாதி3த்த உபாயவரணம் உபேயார்த்த2மாகையாலே உத்தரவாக்யத்தில் ப்ராப்யத்தைச் சொல்லுகிறது. ப்ராப்யமென்றாலும் உபேயம் என்றாலும் பர்யாயம்.
‘ஸ்ரீமதே’ என்கிற பத3த்தாலே மிது2நமே ப்ராப்யமென்று சொல்லுகிறது. மிது2நமாவது – மேல்
எம்பெருமானாரையும், அவருக்கு சா2யா பரதந்த்ரரான கூரேஶாதி3களையும் கூட்டிக்கொள்கிறது.
‘ராமாநுஜ’பத3த்தாலே ஶேஷித்வத்தைச் சொல்கிறது. அது எங்ஙனேயென்னில்: – மேல் சதுர்த்தி2யில் ஶேஷபூ4தன் பண்ணுகிற வ்ருத்தியைச் சொல்லுகிறதாகையாலே ஶேஷவ்ருத்தியை கொண்டருளுகிறவன் ஶேஷியாகையாலே ஶேஷித்வத்திலே தாத்பர்யம். ப4ர்த்தாவுக்கு உபசாரம் செய்கிறது பா4ர்யைக்கு ஸ்வரூபமும் ஸுக2ரூபமுமாப்போலே தனக்கு ஶேஷியானவனுக்கு தா3ஸ்யம் செய்கிறது ஶேஷபூ4தனுக்கு ஸ்வரூபமும் ஸுக2ரூபமுமாகையாலே சேதநனுக்கு சரம ஶேஷி எம்பெருமானாரென்கை.
‘ஆய’ என்கிற சதுர்த்தியாலே கைங்கர்யப்ரார்த்த2னையைச் சொல்லுகிறது. கைங்கர்யம் தான் -மாநஸ -வாசிக -காயிக -ரூபத்தாலே மூன்றுவித4மாய் இதுதான் ஒன்றுக்கொன்று நாநாவித4மாய் இருக்கையாலே, ஸர்வதே3ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தை2களிலும் ஸர்வவித4 கைங்கர்யங்களும் நித்யமென்று சொல்லுகிறது.
‘நம’என்கிற பத3த்தாலே கைங்கர்ய-விரோதி4நிவ்ருத்தியைச் சொல்லுகிறது.
அதாவது கைங்கர்யம் தனக்கு இஷ்டமாகப் பண்ணுகை நரகத்தோடொக்கும். தனக்கும் அவனுக்கும் இஷ்டமாகப்பண்ணுகை ஸ்வர்க3த்தோடொக்கும். அவனுக்கே இஷ்டமாம்படி பண்ணுகை மோக்ஷத்தோடொக்கும் என்று ஸ்ரீவார்த்தாமாலையிலே அருளிச்செய்தபடியே “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்னும்படியே அவனுக்கே இஷ்டமாம்படி பண்ணவேணுமென்கை.
‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச்செய்கையாலே பூர்வவாக்யத்தில் எம்பெருமானார் திருவடிகளே உபாயமென்று சொல்லுகிறது;
உத்தர வாக்கியத்தில் மோக்ஷமும் அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே என்று சொல்லுகிறது. த்3வயத்தில் உபாயோபேயங்கள் இரண்டும் திருவடிகளே என்று சொல்லுகை ‘சரணௌ’ என்கிற த்3விவசநத்துக்கு தாத்பர்யம் என்று ஸம்ப்ரதா3யஜ்ஞரான நம்பூர்வாசார்யர்கள் அருளிச்செய்வர்கள்.
இந்த த்3வயம் மிதிலா ஸாலக்3ராமத்திலே எம்பெருமானார் வடுகநம்பிக்கு ப்ரஸாதி3க்க, அவரும் அந்த மந்த்ர – ப்ரதிபாத்3யமான திருவடிகளை மேலுள்ளவர்களும் ஸேவித்து கைங்கர்யம் பண்ணி உஜ்ஜீவிக்கும்படியாக திருவடிகளை ப்ரஸாதி3க்க வேணுமென்று விண்ணப்பம்செய்ய,
அப்படியே ஸ்ரீபாத3தீர்த்த2மும் திருவடிகளையும் ப்ரஸாதி3த்தருளினார் என்று ப்ரஸித்3த4ம் . இதுக்கு ப்ரமாணம் ஏதென்னில் இப்போதும் ஸாலக்3ராமத்தில் ஏறியருளப்பண்ணியிருக்கிற திருவடிகளும், ஸ்ரீ பாத3தீர்த்த2மிருக்கிற கிணறும் காணலாம். இது அறிந்து எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாசார்யராகையாலே ஸ்வாசார்ய பாரதந்த்ர்ய பராகாஷ்ட2தையுடையராயிருக்கையே எம்பெருமானார்க்கு மிகவும் திருவுள்ளமாயாகையாலே இந்த அநுஷ்டா2னத்தில் நிற்கையே த்3வயத்துக்குத் தாத்பர்யம்.
த்3வயப்ரகரணம் முற்றிற்று.
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்.
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
சரமஶ்லோகப்ரகரணம்
சரமஶ்லோகம் இரண்டு அர்த்த2மாய் பதினொறு பத3மாய் முப்பத்திரண்டு திருவக்ஷரமாய் இருக்கும். அது எங்ஙனே யென்னில்: – ‘ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர’ என்றும், ‘விபூ4திம் ஸர்வ பூ4தேப்4யோ த3தா3மி ஏதத் வ்ரதம் மம ‘என்றும் இரண்டு அர்த்3த4மாய் ஸர்வ கர்மாணி என்றும், ஸந்த்யஜ்ய என்றும், ராமானுஜ என்றும் இதி என்றும் ஸ்மர என்றும் விபூ4திம் என்றும் ஸர்வ பூ4தேப்4ய: என்றும், த3தா3மி என்றும், ஏதத் என்றும் வ்ரதம் என்றும், மம என்றும் பதினொரு பத3மாய் இருக்கும். இதில் பூர்வார்த்3த4த்தாலே அதி4காரி க்ருத்யத்தையும், உத்தரார்த்3த4த்தாலே உபாயக்ருத்யத்தையும் சொல்லுகிறது.
‘ஸர்வ கர்மாணி’ என்கிற பத3த்தால் கர்ம -ஞான- ப4க்தி- ப்ரபத்தி இவைகளைச் சொல்லுகிறது. ப்ரபத்தியையும் கர்மமென்று சொல்லலாமோ என்னில் செய்யப்படுகிறதெல்லாம் கர்மம் என்று சொல்லப்படுகிறதாகையாலே, ப்ரபத்தியையும் அப்படிச் சொல்லலாம்.
‘ஸந்த்யஜ்ய’ என்கிற பத3த்தாலே ருசி வாசனைகளோடும், லஜ்ஜையோடும் கூட மறுவலிடாதபடி விடவேணுமென்று சொல்லுகிறது. ப்ரபத்தியையும் கூட விடவேணுமென்று சொல்லலாமோவென்னில், ‘கலங்கி உபாய பு3த்4யா பண்ணும் ப்ரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும்’ என்றும், “ நெடுநாள் அந்யபரையாய் போந்த பா4ர்யை லஜ்ஜா ப4யங்கள் இன்றிக்கே ப4ர்த்ரு ஸகாஶத்திலே நின்று ‘என்னை அங்கீகரிக்கவேணும்’ என்று அபேஷிக்குமாபோலே இருப்பதொன்றிறே இவன் பண்ணும் ப்ரபத்தி” என்றும் இவன் அவனைப்பெற நினைக்கும் போது ப்ரபத்தியும் உபாயமன்று’ என்றும் ஸ்ரீவசனபூ4ஷண ரஹஸ்யத்தில் அருளிச்செய்கையாலும், கர்ம- ஞான பக்தி – ப்ரபத்திகள் நாலும் மோக்ஷோ பாயங்கள் என்று ஶாஸ்த்ரங்களிலே ப்ரதிபாதி3க்கையாலும்,மோக்ஷோபாயங்களை விடச்சொல்லுகிறவிடத்தில் ப்ரபத்தியும் தான் ஸ்வதந்திரனைப் பற்றுகிறதாகையாலே த்யாஜ்யம் என்று சொல்லப்படுகிறது. ‘ஸூலப4ம் ஸ்வகு3ரும் த்யக்த்வா துர்லப4ம் உபாஸதே । லப்3த4ம் த்யக்த்வா த4னம் மூடோ4 கு3ப்தமந்வேஷதி க்ஷிதௌ ।। என்றும் “சக்ஷுர் க3ம்யம் கு3ரும் த்யக்த்வா ஶாஸ்த்ர க3ம்யந்து யஸ்ஸ்மரேத் । கரஸ்த2முத3கம் த்யக்த்வா க4 நஸ்த2மபி வாஞ்சதி ।।” என்றும் சொல்லுகிறபடியே ப்ரத்யக்ஷஸாஷாத்காரமான ஆசார்யனைவிட்டு ஜ்ஞானஸாஷாத்காரமான ஈஶ்வரனைப் பற்றுகை, அஜ்ஞனாய், அஶக்தனாய், அப்ராப்தனான சேதநனுக்குக் கூடாமையாலும், இவை ஒன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து இவனுடைய இழவையும், இவனைப்பெற்றால் ஈஶ்வரனுக்குண்டான ப்ரீதியையும் அநுஸந்தி4த்து, ஸ்தநந்த்4ய ப்ரஜைக்கு வ்யாதி4யுண்டானால் அது தன் குறையாக நினைத்து, தான் ஒளஷத4 ஸேவை பண்ணும் மாதாவைப் போலே, இவனுக்காகத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரஷிக்கவல்ல பரமத3யாளுவான மஹாபா4க3வதன் அபி4மாநத்திலே ஒதுங்கி “வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்”(நாச்.திரு.11-10) என்று சொல்லுகிறபடியே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனிட்ட வழக்காக்குகை என்றும் அர்த்த2 பஞ்சகத்திலே அருளிச்செய்கையாலேயும் ஆசார்யாபி4மாந நிஷ்ட2னுக்கு ப்ரபத்தியும் த்யாஜ்யம் என்றதாயிற்று.
‘ ராமாநுஜ இதி ஸ்மர’ என்கிற பத3த்தாலே “பிதரம் மாதரம் தா3ரான் புத்ரான் ப3ந்தூ4ந் ஸகீந் கு3ரூந் । ரத்நாநி த4நதாந்யாநி க்ஷேத்ராணி ச க்3ருஹாணி ச ஸர்வ த4ர்மாம்ஶ ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் । லோகவிக்ராந்த சரணௌ ஶரணம் தேऽவ்ரஜம் விபோ4 ।।” என்று பித்ரு மித்ர களத்ர பஶு க்3ருஹ க்ஷேத்ர ரத்ந த4ந தாந்யாதிகளை விட்டு லோக விக்ராந்த சரணத்3வய ஸமாஶ்ரயணம் பண்ணி “த்வமேத மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்து4ஶ்ச கு3ருஸ் த்வமேவ। த்வமேவ வித்3யா த்3ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ ।।” என்றும் சேதநர் த்3ருட3 அத்4யவஸாயம் பண்ணமாட்டார்களாகையாலே, இவர்களுக்காகத்தாமே பித்ருமாத்திராதி3களாகிற ஸகலவித4 ப3ந்து4வும் நீயே என்று விண்ணப்பம் செய்தும், “மநோவாக்காயை: அநாதி3கால ப்ரவிருத்த அநந்த அக்ருத்யகரண க்ருத்யாகரண ப4க3வத3பசார பா4கவதாபசார அஸஹ்யபசார நாநாவிதா4நந்தாபசாராந் ஆரப்3த4கார்யாந், அநாரப்3த4கார்யாந் ,க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் அஶேஷத: க்ஷமஸ்வ ।। ” என்று மநோவாக்காயாதி3களாலே வருகிற அக்ருத்யகரணாதி3 ஸர்வாபராத4ங்களும் க்ஷமிக்கவேண்டும் என்று ப்ரபத்தி பண்ணின வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஶீல்ய ஸௌலப்4ய ஜ்ஞாந ஶக்திகளுண்டாயிருக்கிறவென்னை, ராமாநுஜ என்று ஸ்மரிக்கவே அமையும் என்று யருளிச்செய்கிறார். ஆனால் ஸ்மரணமாத்ரமே அமையுமோ ‘சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் (திருவாய்.6-5-11) என்கிறபடியே த்ரிகரணங்களினாலேயும் வேண்டாவோவென்னில், த்ரிகரணங்களில் வைத்துக்கொண்டு மந: கரணம் ப்ரதா4நமாகையாலும் மற்ற இரண்டும் இதுக்கே ஶேஷமாகையாலும், ஜ்ஞாநாந் மோஷமாகையாலும், முன் ப்ரபத்திக்கு விடச் சொன்னவை ஒன்றும் விடவேண்டா ‘ராமாநுஜ’ என்று மனஸ்ஸிலே நினைவு ண்டாகவே அமையும் என்றபடி.
‘விபூ4திம்’ என்கிற பத3த்தாலே நித்ய விபூ4தியைச் சொல்லுகிறது. ‘ஸர்வ பூ4தேப்4ய:’ என்கிற பத3த்தாலே எல்லார்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. த3தா3மி என்கிற பத3த்தாலே ப்ரஸாதி3க்கிறோம் என்று சொல்லுகிறது. ஆனால் பூர்வார்த்3த4த்தில் ‘ஸ்மர’ என்ற மத்4யமனாலே ஒருத்தனைச் சொல்லி, இங்கு ‘ஸர்வ பூ4தேப்3யோ த3தா3மி’ என்று எல்லார்க்கும் நித்யவிபூ4தியையும் ப்ரஸாதி3க்கும் என்று அருளிச்செய்தது யெங்ஙனேயென்னில்: – விபீ4ஷணாழ்வான் ஒருத்தனுமேயிறே ப்ரபத்தி பண்ணிற்று. கூடவந்த நால்வரும் ப்ரபத்தி பண்ணாமலருக்கச்செய்தேயும், அங்கீ3காரம் ஐவர்க்கும் ஸமமானாப்போலேயும், லோகத்தில் ஒருவன் ராஜஸேவை பண்ணி, கொண்டுவந்த பதா3ர்த்த2ம் அந்த ராஜாவை அறியாத புத்ர மித்ர களத்ராதி3கள் அநுப4வித்தாப்போலேயும் எம்பெருமானார் ஸம்ப3ந்த4ம் ஒருவனுக்குண்டானால் அவன் ஸம்ப3ந்த4 ஸம்ப3ந்தி4களுக்கும் பரமபத3ம் ஸித்3த4மென்று தாத்பர்யம்.
“ஏதத் வ்ரதம் மம” என்கிற பத3ங்களாலே இது நம்முடைய வ்ரதம் என்ற படி. “ஸத்யவாக்யோ த்3ருட3வ்ரத:” (ரா.பா3.1-2) என்றும், “ப்ரியவாதீ ச பூ4தாநாம் ஸத்யவாதீ3 ச ராக4வ:” (ரா.அ.2-32) என்றும் “ராமோ த்3விர்நாபி4 பா4ஷதே” (ரா. அ) என்றும் சக்கரவர்த்தித் திருமகனாருடைய வாக்யம் ஸத்யமானாப்போல், இவ்விடத்தில் “ஏதத்3 வ்ரதம் மம” என்று அருளிச்செய்த எம்பெருமானார் வாக்யமும் ஸத்யமாகையாலே எம்பெருமானாரும் சேதநரை ரக்ஷிக்கிறது சேதநனுக்காகவன்று, ரக்ஷிக்கிறதே தமக்கு வ்ரதமாகையாலே, தம்முடைய வ்ரதம் ஸித்3தி4க்கைக்காக ரக்ஷிக்கிறோம் என்று அருளிச்செய்கிறார். “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி (பெரு. திரு .10-10) என்று திருவயோத்4யையில் ஸ்தா2வர ஜங்க3மாதி3களை வைகுந்தத்தேற்றின சக்ரவர்த்தித் திருமகனாரைபோலே, அவர் திருவுள்ளக்கருத்தை அறிந்தருளின ராமானுஜாசார்யரும், ‘நம்முடைய அபி4மாநாந்தர்பூ4தரையும் நாமே ரக்ஷிக்கிறோம் நீங்கள் நிர்ப4ரராய் இருங்கோள்’ என்று அருளிச்செய்தருளினார்.
இவ்வர்த்த2ம் ஜ்ஞான மண்ட3பமான திருநாராயணபுரத்தில் ராத்ரிகாலத்திலே முதலியாண்டான், எம்பார், திருநாராயணபுரத்தரையர், மாருதியாண்டான், உக்கலம்மாள் இவர்கள் ஐவர்க்கும் ‘இது ஒருத்தர்க்கும் வெளியிட வேண்டாம் இதில் ப்ரபத்தி பிறக்கிறது துர்லப4மாய் இருக்கும்’ என்று அருளிச்செய்து நாம் ஸர்வோத்தாரகர், நம்மைப் பற்றி நிர்ப4ரராய் இருந்தால் ஒரு குறைகளும் இல்லாமல் ஈடேறலாம் என்று அருளிச்செய்தார். அன்று ஸ்ரீ க்ருஷ்ணன் “மாம் “என்று தன்னுடைய விக்3ரஹத்தை அர்ஜுநனுக்கு காட்டினாப்போலேயும், இந்த ஐவர்க்குமே இங்கு தொட்டுக்காட்டினபடியாலே, மஹாமதிகளான இவர்கள் கண்டு இனி நமக்கு எம்பெருமானார் திருவடிகளே ஶரணம் என்று விஶ்வஸித்து நிர்ப்ப4ரராய் இருக்கையாலே நமக்கும் இதுவே தஞ்சம். இவ்வர்த்த2ம் பரம ரஹஸ்யமென்று அஸ்மதா3சார்யோக்தம்.
இந்த ரஹஸ்யத்ரயமும் அஸ்ம தா3தி3களளவும் வந்து இறங்கினபடி யெங்ஙனேயென்னில்:- பெரியதிருமலைநம்பி எம்பாரை எம்பெருமானார்க்கு தா3ராபூர்வகமாக ஸமர்ப்பித்த பின்பு, எம்பார் திருமலை நம்பியைப் பிரிந்திருக்க மாட்டாமல் திரும்பி, திருமலை நம்பி ஸந்நிதி4க்கு எழுந்தருளினார்; அவரும் “விற்ற பசுவுக்கு புல்லிடுவாருண்டோ” என்று முக2ம் காட்டாமல் இருக்கிறபடியைக் கண்டு, இனி நமக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று மீளஎழுந்தருளி, திருமுன்பே நின்று இனி நான் நம்பியை அறியேன்; தேவரீர் திருவடிகளே கதி3யென்று எம்பெருமானார்க்கு விண்ணப்பம் செய்யக் கேட்டருளி எம்பெருமானாரும் இவருடைய அத்4யவஸாயத்துக்கு ஸந்தோஷித்து இந்த மந்த்ரத்3வயமும் எம்பெருமானார் எம்பாருக்கு ப்ரஸாதி3த்தருளினார். சரமஶ்லோகமருளிச்செய்த க்ரமம் கீழ் உக்தமானபடியினாலே இங்கு சொல்லுகிறிலோம். இந்த ரஹஸ்யத்ரயம் எம்பெருமானார் எம்பார்க்கு அருளிச்செய்ய, அவர் பட்டருக்கு, அவர் நஞ்ஜீயருக்கு, அவர் நம்பிள்ளைக்கு, அவர் வடக்குத்திருவீதி பிள்ளைக்கு, அவர் பிள்ளைலோகச்சார்யருக்கு, அவர் கூரகுலோத்தமதாஸருக்கு, அவர் திருவாய்மொழிப்பிள்ளைக்கு, அவர் மணவாளமாமுனிக்கு, அவர் வானமாமலை ஜீயர், கோயில் கந்தாடையண்ணன், பரவஸ்துபட்டர்பிரான்ஜீயர், அப்பிள்ளை, ப்ரதிவாதிபயங்கரம்அண்ணன், எறும்பியப்பா, போரேற்றுநைநாராசார்யர், அத்தங்கிசிங்கராசாரியர் முதலான அஷ்டதிக் கஜங்களுக்கும் ப்ரஸாதி3க்க அஸ்மதா3சார்யரளவும் வந்ததென்று அஸ்மதா3சார்யோக்தம்.
சரமஶ்லோகப்ரகரணம் முற்றிற்று.
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்.