ஶ்ரிய:பதிப்படி
- திருமந்த்ர ப்ரகணம்
உபோத்காதம் :– ஶ்ரிய: பதியாய் ஸர்வஸ்வாமியாய் யிருந்துள ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபத்தையும் அவனுக்கு அநந்யஶேஷமான தந்தாமுடைய ஸ்வரூபத்தையும் யதாவஸ்திதமாக ப்ரதிபத்திபண்ணி நித்யமுக்தரைப்போலே ஸ்வரூபாநுரூபமான பரிமாற்றத்திலே அந்வயித்து வாழப்பெறாதே இருவருடைய ஸ்வரூபத்தையும் விபரீதமாக ப்ரதிபத்திபண்ணி விபரீத வ்ருத்தப்ரவ்ருத்தராய் ஸ்வரூபவிரோதியான ப்ராக்ருத போகத்திலே மண்டி தாபத்ரய தப்தராய்ப் போருகிற பத்தாத்மாக்களிலே ஆரேனும் ஒருவனுக்கு நிர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஜநகமான ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து யதாஜ்ஞாந ஜநகமான ஸத்வம் தலையெடுத்து ஸத்வ கார்யமான வெளிச் சிறப்புப் பிறந்து த்யாஜ்யோபாதேய விபாக ஜ்ஞாநத்திலே கௌதுகமுண்டாய் அதடியாக ஸதாசார்யோபா ஸக்தி பிறந்து அவனுடைய ப்ரஸாதத்தாலே மூலமந்த்ரலாப முண்டானால் த்யாஜ்யோபாதேய விபாகத்தை பரிபூர்ணமாக அறிவிக்கக்கடவதான ப்ரதம ரஹஸ்யம் ப்ரதமத்திலே அநுஸந்தேயமாயிருக்கும்.
உபாயாநுஷ்டானத்துக்கும் உபேய ப்ரார்தநைக்கும் முன்பே அவற்றிற்கு ஆஶ்ரயமாய் ஜ்ஞாதவ்யமான ஆத்மஸ்வரூபத்தை பூர்ணமாக அறிவிக்கையாலே இத்தை ப்ரதம ரஹஸ்யமென்று சொல்லுகிறது.
இது தான் த்ரிவர்கத்துக்கும் கைவல்ய கைங்கர்யரூபமான அபவர்க த்வயத்துக்கும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்துக்கும் தெளிவிசும்பில் போலே இங்கேயிருந்து பரிபூர்ண பகவதநுபவம் பண்ணுகைக்கும் அமோக ஸாதநமாய் வ்யாபக வ்யதிரிக்தங்களிலும் வ்யாபகாந்தரங்களிலும் வ்யாவ்ருத்தமாய் வேத வைதிக ருசி பரிக்ருஹீதமாயிருக்கும்.
இதுக்கு அந்தர்யாமியான நாராயணன் ருஷி; தேவீகாயத்ரீ சந்தஸ்ஸு; பரமாத்மாவான நாராயணன் தேவதை; ப்ரணவம் பீஜம்; ஆய ஶக்தி:; ஶுக்ல வர்ணம்; மோக்ஷத்திலே விநியோகம். இதுதான் எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும். இதில் முதல் பதமான ப்ரணவம் மூன்று பதமாயிருக்கும் முதல் பதமான அகாரம் பகவத் வாசகம்; இரண்டாம்பதமான உகாரம் அவதாரண வாசகம்; மூன்றாம் பதமான மகாரம் ஆத்ம வாசகம்.
அகாரார்த்தம்
அகாரம் அவரக்ஷணே என்கிற தாதுவிலே பதமாய் முடிகையாலே, ரக்ஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது. ரக்ஷணம் தனக்கு ஸங்கோசமில்லாமையாலே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வாத்மாக்களுக்கு ஸர்வப்ரகாரத்தாலும் பண்ணும் ரக்ஷணத்தைச் சொல்லுகிறது.
ஜ்ஞாநாநந்தங்களிலும் காட்டில் ஈஶ்வர ஸ்வரூபத்துக்கு அந்தரங்க நிரூபகமாகையாலும் மேல் சொல்லுகிற ஶேஷத்வத்துக்கு விஷயம் மிதுநமாகையாலும், இதில் சொல்லுகிற ரக்ஷணத்துக்கு பிராட்டி ஸந்நிதிவேண்டுகையாலும், இதிலே லக்ஷ்மீ ஸம்பந்தம் அநுஸந்தேயம்.
லுப்த சதுர்த்யர்த்தம்
இதில் ஏறிக்கழிந்த சதுர்த்தி தாதர்த்யத்தைச் சொல்லுகிறது. விவரணம் சதுர்த்யந்தமாகையாலே, இதுவும் சதுர்த்யந்தமாகக்கடவது. “ப்ரஹ்மணே த்வா மஹஸ……ஓமி)தி”
உகாரார்த்தம்
அவதாரண வாசகமான உகாரம், கீழ்ச் சொன்ன பகவச்சேஷத்வத்துக்கு விரோதியான அந்யஶேஷத்வத்திநுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. ஒரு வஸ்து அநேகர்க்கு ஶேஷமாக லோகத்திலே காண்கையாலே லோக த்ருஷ்டாந்த ப்ரக்ரியையாலே ஶங்கிதமான அந்ய ஶேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. தேவ போக்யமான அன்னத்துக்கு ஶவஸ்பர்ஶம்போலே ஈஶ்வர போக்யமான ஆத்மவஸ்துவுக்கு தேவதாந்தர ஸ்பர்ஶம் ‘வானிடை வாழும்’ இத்யாதி.
மகாரார்த்தம்
த்ருதீய பதமான மகாரம் ”மந-ஜ்ஞாநே”என்கிற தாதுவிலே யாதல், மநு அவ போதநே என்கிற தாதுவிலே யாதல். பதமாய் நிஷ்பந்ந மாகையாலே ஜ்ஞாதாவாய் ‘சென்று சென்று பரம்பரமாய்” என்கிறபடியே- தேஹேந்த்ரியங்களில் காட்டில் விலக்ஷணமான ஆத்மாவைச் சொல்லுகிறது.
அன்றிக்கே ககாராதி பகாராந்தமான இருபத்துநாலக்ஷரமும் இருபத்துநாலு தத்துவத்திற்கு வாசகமாய் இருபத்தைந்தாம் அக்ஷரமான மகாரம் இருபத்தைந்தாம் தத்துவமான ஆத்மாவுக்கு வாசகமாகையாலே மகாரம் ஆத்மவாசக மென்றாகவுமாம்.
ஸர்வாத்மாக்களும் ஈஶ்வரனுக்கு அநந்யார்ஹ ஶேஷ பூதராகையாலே ஆத்ம ஸமஷ்டியைச் சொல்லுகிறது. சேதந ப்ரகாரமான அசித் தத்துவமும் பகவத் ஶேஷமாக இப்பதத்திலே அநுஸந்தேயம். உகாரத்திலே என்றும் சொல்லுவர்கள்.
ப்ரணவம் தன்னில் ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லி பின்பு பகவச் சேவஷத்வத்தைச் சொல்லாதே, முற்பட பகவச் சேவஷத்வத்தைச் சொல்லி பின்பு ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகையாலே “நசாத்மானம்’ என்கிறபடியே ஶேஷத்வமுண்டானபோது ஆத்மா உபாதேயனாய் அல்லாதபோது அநுபாதேய என்னுமிடத்தை ப்ரகாஶிப்பித்து நிற்கிறது.
ஆக ப்ரணவம் பகவச்சேஷத்வத்தையும் அந்யஶேஷத்வ நிவ்ருத்தியையும் ஶேஷத்வாஶ்ரயமான வஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லிற்று.
நம: பதார்த்தம்
கீழ்ச் சொன்ன ஸ்வாபாவிகமான பகவச்சேஷத்வத்தை அநாதிகாலம் அபிபூதமாம்படி பண்ணின விரோதியினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது நமஸ்ஸு. இது தான் [ந] என்றும் [ம:] என்றும் இரண்டு பதமாயிருக்கும். [ந] என்றது அன்றென்றபடி [ம:] என்றது எனக்கென்றபடி இரண்டும்கூட எனக்கன்று என்று அநுஷங்கத்தாலே அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. அஹங்காரம் கழியுண்டவாறே அதடியாக வருகிற மமகாரமும் கழியுண்ணும். அன்றிக்கே இது தான் அத்யாஹாரத்தாலே மமகார நிவ்ருத்தியைச் சொல்லுகிறதென்றவுமாம்.
இப்படி அஹங்கார மமகார நிவ்ருத்தி மாத்ரமே அன்றிக்கே, பகவச்சேஷத்வமும் அதனுடைய காஷ்டா பூமியான பாகவத ஶேஷத்வமும் இப்பதத்திலே அநுஸந்தேயம். அதில் கீழில் அஹங்காரம் ஶேஷத்வ விரோதியான அஹங்காரம் அன்றிக்கே ஈஶ்வரனே உபாயம் என்கிற ப்ரதிபத்திக்கு விரோதியான அஹங்காரமாய் அதுக்கழியுண்டால் ஈஶ்வரனே உபாயோபேயம் என்கிற ப்ரதிபத்தி பிறக்கக்கடவதாகையாலே ஆர்த்தமாக ஈஶ்வரனுடைய உபாயபாவத்தைச் சொல்லுகிறதென்றவுமாம்.
அன்றிக்கே “நமஶ்சக்ரு:” என்கிறபடியே ஸ்தாந ப்ரமாணத்தாலே நமஶ்ஶப்தம் ஶரண ஶப்த பர்யாயமாய் ஶாப்தமாக ஈஶ்வரனுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறதென்றவுமாம் .
மேற்சொல்லுகிற கைங்கர்யத்துக்கு விரோதியான அஹங்கார மமகார நிவ்ருத்தியும் கைங்கர்ய ப்ரார்த்தனையும் இப்பதத்திலே அநுஸந்தேயம்.
இதுதான் அகார நாராயண பதங்கள் போலே சதுர்த்யந்தமன்றிக்கே ஷஷ்ட்யந்தமாயிருக்கையாலே ஒருப்ரகாரத்தாலும் தன்னோடு தனக்கந்வயமில்லை என்கிறது. அன்றிக்கே இஷ்ஷஷ்டி தனக்கு தாதர்த்யமாகவுமாம்.
நாராயணஶப்தார்த்த்தம்
சதுர்த்யந்தமான நாராயணபதம் கீழ்ச் சொன்ன பகவதநந்யார்ஹ ஶேஷத்துக்கும் ததேகோபாயத்வத்துக்கும் அநுகுணமான கைங்கர்ய ப்ரார்த்தனத்தைச் சொல்லுகிறது, அதில் ப்ரக்ருத்யம்ஶம் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியைச் சொல்லுகிறது. ப்ரத்யயம், கைங்கர்ய ப்ரார்த்தனையைச் சொல்லுகிறது. இதுதான் ஷஷ்டி ஸமாஸ மாகவுமாம், பஹுவ்ரீஹி ஸமாஸமாகவுமாம். ஷஷ்டி ஸமாஸத்தில் நாரங்களுக்கு ஈஶ்வரன் அயநமென்று அர்த்தம். பஹுவ்ரீஹி ஸமாஸத்தில் நாரங்கள் தான் ஈஶ்வரனுக்கு அயநமென்று அர்த்தம். நாரமாவது நஶியாத வஸ்துக்களினுடைய திரள் . நரஶப்தம் நஶியாத வஸ்துவைச் சொல்லுகிறது. ர என்றது ரிங் க்ஷயே என்கிற தாதுவிலே பதமாகையாலே நரஶப்தம் நஶியாத வஸ்துவைச் சொல்லுகிறது, ஸமூஹார்தத்திலே ‘அண்’ ப்ரத்யயமாகையாலே நாரஶப்தம் நஶியாத வஸ்துக்களினுடைய திரளைச் சொல்லுகிறது. அதாகிறது ஜ்ஞாநாநந்தாமலத்வாதிகளும் ஜ்ஞாந ஶக்த்யாதி கல்யாணகுணங்களும் திவ்யமங்கள விக்ரஹமும் பூஷணாயுத மஹிஷிகளும், சத்ர சாமராதி பரிச்சதங்களும், நித்யரும் முக்தரும், பரமபதமும், ப்ரக்ருதி புருஷகாலங்களும் அன்றிக்கே, நார ஶப்தம் நித்யத்வத்தாலேயாதல் நியந்த்ருத்வத்தாலேயாதல் நைமித்திகத்வத்தாலேயாதல் நரஶப்தவாச்யனான ஈஶ்வரன் பக்கலிலே நின்றும் பிறந்த வஸ்துக்களைச் சொல்லுகிறதென்றவுமாம்.
அயநமென்றது இருப்பிடமென்றபடி ப்ராப்யமென்னவுமாம், ப்ராபகமென்னவுமாம்.
வ்யக்த சதுர்த்யர்த்தம்
இதில் சதுர்த்தி, ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வப்ரகாரத்தாலும் கைங்கர்யத்தையும் அதனுடைய ப்ரார்த்தனத்தையும் சொல்லுகிறது.
அகாரத்திலும் நார ஶப்தத்திலும் பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று; அகாரத்தில், ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநீ என்றது; நாரஶப்தத்தில் ஈஶ்வரனுக்கு ஶேஷபூதை என்றது. அகாரத்திலும் அயந ஶப்தத்திலும் ஈஶ்வரனைச் சொல்லிற்று. அகாரத்தில் ரக்ஷகனென்றது; அயந ஶப்தத்தில் தாரகனென்றது. பதத்ரயத்தாலும் ஆத்மாவைச் சொல்லிற்று. ப்ரணவத்தில், அநந்யார்ஹ ஶேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லிற்று; நமஸ்ஸில், ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியைச் சொல்லிற்று; மேல் பதத்தில், நித்யத்வ பஹுத்வங்களை சொல்லிற்று.
நிகமநம் :-
ஆக, திருமந்த்ரம் ஈஶ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான ஸம்பந்தத்தையும் ஸம்பந்தாநு ரூபமான உபாய ஸ்வரூபத்தையும் இரண்டுக்கும் அநுகுணமான உபேய ப்ரார்த்தனத்தையும் சொல்லித் தலைக்கட்டுகிறது.
அகாராத்தாலே ஸர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று ; அதிலே ஏறிக்கழிந்த சதுர்த்தியாலே, அவனுக்கு ஶேஷமென்றுமிடம் சொல்லிற்று; உகாராத்தாலே அவனையொழிந்தவர்களுக்கு ஶேஷமன்றென்றது. மகாரத்தாலே இப்படி அநந்யார்ஹ ஶேஷமான வஸ்து ஜ்ஞாநாஶ்ரயமான ஆத்மாவென்னுமிடம் சொல்லிற்று; நமஸ்ஸாலே, ஶேஷத்வ விரோதியான அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் பாகவத ஶேஷத்வ பர்யந்தமான பகவத் ஶேஷத்வத்தையும், ஈஶ்வரனுடைய உபாய பாவத்தையும் சொல்லிற்று. நார ஶப்தம் வ்யாப்யங்களான சேதநாசேதநங்களைச் சொல்லிற்று; அயந ஶப்தம், வ்யாபகமான பகவத்ஸ்வரூபத்தைச் சொல்லிற்று; சதுர்த்தி, கைங்கர்ய ப்ரார்தனத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறது.
- “விடையேழன்றடர்த்து” என்கிற பாட்டு ப்ரணவார்த்தமாக அநுஸந்தேயம். 2. யானே என்கிற பாட்டு நம: பதார்த்த்தமாக அநுஸந்தேயம்.3. ‘எம்பிரான் எந்தை’ என்கிற பாட்டு நாராயண ஶப்தார்த்தமாக அநுஸந்தேயம். 4. ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்கிற பாட்டு சதுர்த்யர்த்தமாக அநுஸந்தேயம்.
ஸ்வரூபத்தை யதாவாக அநுஸந்தியாமையாலே தாந்தி பிறக்கிறதில்லை. புருஷார்த்தத்தை யதாவாக அநுஸந்தியாமையாலே ருசி பிறக்கிறதில்லை. ஸாதநத்தை யதாவாக அநுஸந்தியாமையாலே விஶ்வாஸம் பிறக்கிறதில்லை. விரோதியை யதாவாக அநுஸந்தியாமையாலே பயம் பிறக்கிறதில்லை.
- சரம ஶ்லோக ப்ரகரணம்
உபோத்காதம் :- ஸகலஶாஸ்த்ர தாத்பர்ய பூமியான திருமந்த்ரத்தில் சொன்ன புருஷார்த்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமான ஸாதந விஶேஷத்தை ஸப்ரகாரமாக ப்ரதிபாதிக்கிறது சரமஶ்லோகம்.
தேஹாத்மாபிமானியான அர்ஜுனனைக் குறித்து ’அமலங்களாக விழிக்கும்’ என்கிறபடியே ஸகல பாபக்ஷபண நிபுணங்களான திவ்ய கடாக்ஷங்களாலும் அம்ருத நிஷ்யந்திகளான வசந விஶேஷங்களாலும் மோக்ஷருசிக்கு விரோதியான ஸகல ப்ரதிபந்தங்களையும் நஶிப்பித்து மோக்ஷ ருசியையுண்டாக்கி மோக்ஷ ஸாதநமான கர்ம ஜ்ஞாந பக்திகளை பரக்க க்ருஷ்ணன் அருளிச்செய்ய; அதைக் கேட்ட அர்ஜுனன் ஸர்பாஸ்யகதமான ஜந்துபோலே இருக்கிற தன்னுடைய துர்கதியையும் விரோதி தன்னால் கழித்துக் கொள்ள வொண்ணாதே யிருக்கிற யிருப்பையும் விஹிதோபாயம் துஶ்ஶகமாயிருக்கிற யிருப்பையும் ‘நாம்’ இவனை யிழந்து போவோம் இத்தனையாகாதே’ என்று அநுஸந்தித்து, ஶோகிக்க ‘நான் முன்பு உபதேஶித்த ஸாதந விஶேஷங்களை ஸவாஸநமாக விட்டு என்னையே நிரபேக்ஷ ஸாதநமாக பற்று, நானே எல்லா விரோதிகளையும் போக்குகிறேன் , நீ ஶோகியாதே கொள்’ என்று அர்ஜுனனுடைய ஶோகத்தை நிவர்த்திப்பிக்கிறான்.
[1] கீழ்ச் சொன்ன உபாயாந்தரங்கள் ஶோக ஜநகங்களல்லாமையாலும் [2] அவற்றை விடச்சொன்னால் ஶாஸ்த்ரங்களுக்கும் இஶ்ஶாஸ்த்ரத்தில் முன்புத்தை வசநங்களுக்கும் வையர்த்யம் வருகையாலும் [3] ப்ரபத்தி ஸ்வதந்த்ர ஸாதநமல்லாமையாலும் [4] எளிய வழியுண்டாயிருக்க அரிய வழியை வத்ஸலதரமான ஶாஸ்த்ரம் உபதேஶிக்கக் கூடாமையாலும், கீழ்ச் சொன்ன உபாயத்தை யொழிய உபாயாந்தரத்தை விதிக்கிறான் என்கிற பக்ஷம் சேராதென்று சிலர் சொன்னார்கள்.
[1] உபாயாநுஷ்டானத்துக்கு அயோக்யமாம்படி ஆத்ம ஸ்வரூபத்தை அத்யந்தம் பரதந்த்ரமாக உபதேஶிக்கக் கேட்கையாலும், ‘உபாயாந்தரங்களுக்கும் நானே ப்ரவர்தகன்’ என்று அருளிச்செய்ய கேட்கையாலும் இந்த்ரிய ப்ராபல்யத்தை அநுஸந்தித்து அஞ்சுகையாலும், எல்லா அவஸ்தைகளிலும் ப்ரபத்தியை யொழிய உபாயமில்லை என்னுமிடம் நிழலெழும்படி அருளிசெய்ய கேட்கையாலும், உபாயாந்தரங்கள் அநேக தோஷங்களோடே கூடியிருக்கையாலும், விரோதி தன்னால் கழித்துக் கொள்ள வொண்ணாமையாலும், ஜ்ஞாநவானாயிருக்கிற இவனுக்கு ஶோகம் பிறக்கை ஸம்பாவிதமாகையாலே உபாயாந்தரங்கள் ஶோக ஜநகங்களன்று என்கிறது அர்த்தமன்று.
[2] ஶாஸ்த்ராந்தரங்கள் தன்னிலே ‘உபாயாந்தரங்களைவிட்டு ப்ரபத்தியை பண்ணுவான் என்’ என்று சொல்லுகையாலும், இதுதான் பி4ந்நாதிகாரி விஷயமாகையாலும் ஶாஸ்த்ராந்தரங்களுக்கும் பூர்வ வசநங்களுக்கும் வையர்த்தமில்லை.
[3] ‘அநந்ய ஸாத்யே’, ‘அஹமஸ்ம்யபராதாநாமாலய:’ இத்யாதி ப்ரமாணங்கள் மோக்ஷஸாதந மாகச் சொல்லுகையாலே ப்ரபத்தி ஸ்வதந்த்ர ஸாதநமன்று என்கிற இதுவும் அர்த்தமன்று.
[4] இவ்வுபாயந்தான் துஶ்ஶகமாயிருக்கையாலும் ஶாஸ்த்ரம் இவன் நின்ற நின்றவளவுக்கீடாக வல்லது உபதேஶியாமையாலும், அரியவழியை உபதேஶிக்கக்கூடாதென்று அர்த்தமன்று.
அர்ஜுனன் ப்ரதமத்திலே சரணம் புகுருகையாலும், பக்தியோகம் கேட்ட அநந்தரம் கண்ணும் கண்ணநீருமாய் கையில் வில்லோடே கூடச்சோர்ந்து விழுகையாலே அவனை உளனாக்க வேண்டுமாகையாலும், த்ரௌபதி குழலைமுடித்து தன் ஸ்வரூபம் நிறம்பெற வேண்டுகையாலும், பரம ரஹஸ்யத்தை மறைக்காமல் வெளியிட்டான்.
ப்ரதமத்திலே இத்தை உபதேஶியாதே உபாயாந்தரத்திலே பரந்தது இவன் நெஞ்சை சோதிக்கைக்காக.
இதுக்கு அதிகாரி இது கேட்டதற்கு முன்பு அஞ்சுமவனும், பின்பு அஞ்சாதவனும்.
இதில் பூர்வார்த்தம் அதிகாரி க்ருத்யத்தைச் சொல்லுகிறது. உத்தரார்த்தம் ஈஶ்வர க்ருத்யத்தைச் சொல்லுகிறது.
ஸர்வதர்ம ஶப்தார்த்தம்
[௧] ஸர்வதர்மான் – எல்லா தர்மங்களையும், தர்மமாவது ஶாஸ்த்ர விஹிதமுமாய், பலஸாதநமா யிருப்பதொன்று. இங்கு மோக்ஷ பலஸாதநமான கர்மஜ்ஞாந பக்திகளைச் சொல்லுகிறது. ஸர்வஶப்தம் அவற்றிற்கு யோக்யதா பாதகங்களான தர்மங்களைச் சொல்லுகிறது. ஸாதந த்யாகத்திலே யோக்யதா பாதக தர்ம த்யாகமும் அந்தர்பூதமாயிருக்கச்செய்தே தனித்துச் சொல்லுகிறது. ப்ரபத்திக்கு அவை வேண்டாவென்று தோற்றுகைக்காக அல்லாதபோது, ஸ்த்ரீ ஶூத்ராதிகளுக்கு அதிகாரமில்லையாமிறே. பஹுவசநத்தாலே அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை: தேஶவாஸம், திருநாம ஸங்கீர்த்தனம், தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது.
பரித்யஜ்ய பதார்த்தம்
[௨] ‘பரித்யஜ்ய’ விட்டு, பரிஶப்தம் வாஸநா ருசிகளோடே கூட விடவேணுமென்றுமிடத்தைச் சொல்லுகிறது. அவை கிடக்குமாகில் மேல் சொல்லுகிற ஸாதந விஶேஷத்தில் அந்வயமின்றிக்கே யொழியக்கடவது. ‘அநாதி காலம் அநுபாயங்களிலே உபாயபுத்தி பண்ணினோமென்று லஜ்ஜா புரஸ்ஸரமான த்யாகத்தைச் சொல்லுகிறது’ என்று ஆழ்வான் பணிக்கும். த்யஜித்தோமென்கிற புத்தியும் த்யாகத்தோடொக்கும் ‘ல்யப்’ உபாயாந்தர த்யாகம் மேல் பற்றப்புகுகிற உபாயத்துக்கு அங்கமென்றுமிடத்தைச் சொல்லுகிறது. ப்ரபத்தியாவது- ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை என்று அனந்தாழ்வான் வார்த்தை.
மாம் பதார்த்தம்
[௩] மாம் –என்னை த்வயத்தில் ப்ரதம பதத்திலே சொல்லுகிற அர்த்தவிஶேஷங்களெல்லாம் இப்பதத்திலே அநுஸந்தேயங்கள். அதாவது ஶ்ரிய:பதித்வமும், வாத்ஸல்யாதி குணசதுஷ்டயமும், திவ்ய மங்கள விக்ரஹமும், “ஏஷ நாராயண ஶ்ஶ்ரீமான் ” என்கையாலே ஶ்ரிய:பதித்வம் அநுஸந்தேயம். அதர்ம புத்தியாலே தர்மத்திலே நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனன் குற்றம் பாராதே அபேக்ஷிதார்த்தங்களைத் தானே அருளிச்செய்கையாலே, வாத்ஸல்யம் அநுஸந்தேயம். தன்னுடைய பரத்வத்தை பலகாலம் அருளிச் செய்த அளவன்றிக்கே, அர்ஜுனன் ப்ரத்யக்ஷிக்கும்படி பண்ணுகையாலே ஸ்வாமித்வம் அநுஸந்தேயம். ‘ஹே க்ருஷ்ண ஹே யாதவ’ என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி அவனோடே கலந்து பரிமாறுகையாலே ஸௌஶீல்யம் அநுஸந்தேயம். அப்ராக்ருதமான திருமேனியைக் கண்ணுக்கிலக்காம்படி பண்ணுகையாலே ஸௌலப்யம் அநுஸந்தேயம். மாம் என்று காட்டுகிறது ஸாரத்ய வேஷத்தோடே நிற்கிற நிலையை ஆகையாலே, திவ்யமங்கள விக்ரஹம் அநுஸந்தேயம்.
ஏக பதார்த்தம்
[௪] ஏகம் -இவ்வுபாயத்தை சொல்லுமிடமெல்லாம் அவதாரண ப்ரயோகம் உண்டாகையாலே, ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம் போலே இதுவும் அவதாரண வாசகமாம். ‘வ்ரஜ’ என்கிற பதத்தில் சொல்லப்புகுகிற ஸ்வீகாரத்தில் உபாய புத்தி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. உபாயாந்தரோபகார ஸ்ம்ருதியும் உபாய பரிக்ரஹமும் உபாயாந்தரத்தோடொக்கும் ‘ஏகஶப்தம் உபாயோபேயங்களினுடைய ஐக்யத்தையும் உபாய ப்ராதாந்யத்தையும் சொல்லுகிறது’ என்றும் சொல்லுவர்கள்.
ஶரண ஶப்தார்த்தம்
[௫] ஶரணம் -உபாயமாக ; உபாயமாகிறது. அநிஷ்ட நிவாரகமுமாய் – இஷ்ட ப்ராபகமுமாயிருக்குமது.
வ்ரஜ ஶப்தார்த்தம்
[௬] வ்ரஜ- புத்திபண்ணு. இந்த புத்தியாகிறது – த்யாஜ்ய கோடியிலும் அந்வயியாதே ப்ராபகாந்தர பரித்யாக பூர்வகமாய் பகவத் ரக்ஷகத்வாநுமதி ரூபமாயிருப்பதொரு அத்யவஸாயாத்மக ஜ்ஞாந விஶேஷம். இதுதான் உபாயாந்தரங்கள் போலே அஸக்ருத்கரணீயமன்று, கந்யகா ப்ரதாநாதிகள் போலே ஸக்ருத்கரணீயம். அல்லாத போது முன்புத்தையது. கார்யகரமன்றிக்கே யொழியும்.
அஹம் பதார்த்தம்
[௭] அஹம்-ஸர்வஜ்ஞத்வாதி குண விஶிஷ்டனான நான், மாம் என்கிறவிடத்தில் வாத்ஸல்யாதி குணங்களை சொல்லிற்று; இதில் ஜ்ஞாந ஶக்த்யாதி குணங்களைச் சொல்லுகிறது. வாத்யல்யாதிகள் இல்லாத போது உபாய பரிக்ரஹமென்றிக்கே ஒழிகிறாப்போலே, ஜ்ஞாந ஶக்த்யாதிகள் இல்லாதபோது விரோதி நிவ்ருத்தியன்றிக்கே ஒழியும். இங்குச் சொல்லுகிற ஶக்தியாவது – சேதனனுடைய அவிவாத ஜநநத்துக்கும் விரோதி நிவ்ருத்திக்கும் அடியான ஸாமர்த்யம்.
த்வா பதார்த்தம்
[௮] த்வா உபாயாந்தரங்களை விட்டு என்னையே உபாயமாக பற்றியிருக்கிற உன்னை. கீழில் பதத்தில், ஜ்ஞாநஶக்திகளும் ப்ராப்தியும், நைரபேக்ஷ்யமும் சொல்லிற்று. இங்கு அஜ்ஞாநாஶக்திகளும் அப்ராப்தியும், ஆகிஞ்சன்யமும் சொல்லுகிறது.
ஸர்வ பாப ஶப்தார்த்தம்
[௯] ஸர்வ பாபேப்ய: – எல்லா பாபங்களில் நின்றும் இங்கு பாபங்களாகச் சொல்லுகிறது- பகவல்லாப விரோதிகளை ‘சார்ந்த இரு வல்வினைகளும்” என்று முமுக்ஷுவுக்கு பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யமாகச் சொல்லுகையாலே புண்ய பாபங்களிரண்டையும் பாப ஶப்தத்தாலே சொல்லுகிறது. பஹுவசநத்தாலே அவற்றினுடைய பன்மையைச் சொல்லுகிறது. அதாகிறது அவித்யா கர்ம வாஸநாருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்கள். ஸர்வஶப்தத்தாலே- கீழே த்யாஜ்யமாக விஹிதங்களாய் போக்யதா புத்தியாலே அநுஷ்டேயமான தர்மங்களில் ஸ்வார்த்ததா ப்ரதிபத்தியையும், உபாய புத்தியையும், ஆவ்ருத்த ப்ரவ்ருத்தியையும், ப்ராரப்தத்தையும் லோக ஸங்க்ரஹார்த்தமாக அநுஷ்டேயமான கர்மங்களில் ஸ்வார்த்ததா ப்ரதிபத்தியும் , பகவத் பாகவத விஷயங்களில் உபசார புத்த்யா பண்ணுகிற அபசாரங்களையும், பரி என்கிற உபஸர்கத்தாலும் ஏகஶப்தத்தாலும் த்யாஜ்யமாக சொன்னவற்றினுடைய அநுவ்ருத்தியையும் அவஶிஷ்டமான உத்தராகத்தையும் சொல்லுகிறது. இப்படி கொள்ளாதபோது மாஶுச: என்கிறவிது சேராது. பாபங்களிலே சிறிது கிடப்பது, அதிகாரி குறையாலேயாதல், ஈஶ்வரன் குறையாலேயாதலிறே. த்யாக ஸ்வீகாரங்கள் பூர்ணமாகையாலே. அதிகாரி பக்கல் குறையில்லை, ஜ்ஞாநஶக்திகள் பூர்ணமாகையாலே ஈஶ்வரன் பக்கல் குறையில்லை.
மோக்ஷயிஷ்யாமியின் அர்த்தம்
[௧௦] மோக்ஷயிஷ்யாமி – முக்தனாம்படி பண்ணக்கடவேன், ‘சும்மனாதே கைவிட்டோடி’ ‘கானோவொருங்கிற்றுங்கண்டிலமால்’ என்கிறபடியே அநாதி காலார்ஜிதமான கர்மங்கள் உன்னைக் கண்டு அஞ்சி, போன இடம் தெரியாதபடி தன்னிடையே விட்டுப்போம்படி பண்ணுகிறேன். விரோதி நிவ்ருத்தியும் அபிமத ப்ராப்தியும் இரண்டும் பலமாயிருக்க ஒன்றைச் சொல்லுவானென் என்னில்; ஒன்றைச் சொன்னால், மற்றையது தன்னிடையே வருகையாலே சொல்லிற்றில்லை. ‘மாமேவைஷ்யஸி’ என்று கீழில் உபாயத்துக்குச் சொன்ன பலமொழிய இவ்வுபாயத்துக்கு வேறு பலமில்லாமையாலே சொல்லிற்றில்லை என்னவுமாம். ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவானென் என்னில் அது அதிகமாகையாலே சொல்லிற்று. விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ்ஸித்தமாகையாலே தனித்துச் சொல்லவேண்டாவிறே.
மாஶுச: ஶப்தார்த்தம்
[௧௧] மாஶுச: – ஶோகியாதே கொள். உபாயாந்தரங்களை விடுகையாலும், என்னையே உபாயமாகப் பற்றுகையாலும், விரோதியை நேராகப் போக்குகிறேன் என்கையாலும், உனக்கு சோகிக்க ப்ராப்தியில்லை. உனக்கு கர்தவ்யமில்லாமையாலே உன்னைப்பார்த்து ஶோகிக்க வேண்டா, எனக்கு ஜ்ஞாநஶக்தி கருணாதிகளில் வைகல்யமில்லாமையாலே என்னைப்பார்த்து ஶோகிக்க வேண்டா. விரோதியாகிறது- என்னுடைய நிக்ரஹமாகையாலும் அதில் கிடப்பதொன்றில்லாமையாலும் அத்தைப்பார்த்து ஶோகிக்கவேண்டா. அநாதிகாலம் ஶோகியாதிருந்துபோலே இருப்பதொன்று- இப்போது நீ ஶோகிக்கையாவது. நீ ஶோகித்தாயாகில் உன் கார்யத்திலே நீ அதிகரித்தாயாவுதி. ஶேஷபூதனுடைய பேறு ஶேஷியது. பேறுடையவனது இழவு. இழவுடையவனுக்கு ஶோகமுள்ளது. ஆன பின்பு நீ ஶோகிக்கக்கடவாயோ? தனத்தை இழந்தால் தனவானன்றோ ஶோகிப்பான், தனந்தான் ஶோகிக்குமோ? ஸர்வ ப்ரகாரத்தாலும் நான் உன்னைக்கை விடேன் அச்சம் கெட்டிரு’ என்று ‘வாரேற்றிளமுலையாய் வருந்தேனுன் வளைத்திறமே’ என்கிறபடியே அர்ஜுனன் கண்ணீரைத் துடைக்கிறான்.
‘வார்த்தை அறிபவர்’ என்கிறபாட்டும் ‘அத்தனாகி” என்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.
3-த்வய ப்ரகணம்
உபோத்காதம் :– அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷ மாயிருந்துள்ள வேதத்திலும் * வேதார்த்தத்தை உபப்ரும்ஹிக்கக்கடவதான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களிலும் அவகீதமாக ப்ரஸித்தமாய், எம்பெருமானுடைய ஸர்வஸ்வம்மாய், ஆழ்வார்களுடையவும் ஆசார்யர்களுடையவும் தனமாய், பகவதநந்யார்ஹ ஶேஷபூதமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அத்யந்தம் அநுரூபமாயிருந்துள்ள ஸாதந விஶேஷத்தையும் ஸாத்ய விஶேஷத்தையும் அடைவே வாக்யத்வயமும் ப்ரதிபாதிக்கிறது.
பூர்வாசார்யர்கள் ரஹஸ்யத்ரயத்தையும் தங்களுக்கு தனமாக நினைத்து போருவர்கள்.
அதில் ப்ரதம ரஹஸ்யமான திருமந்த்ரம் ப்ராப்ய ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது. சரமஶ்லோகம், ப்ராபக ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது. அவை இரண்டிலும் ருசி உடையனான அதிகாரி அவற்றை விஶதமாக அநுஸந்திக்கிறபடியைச் சொல்லுகிறது த்வயம். இம்மூன்றையும் தஞ்சமாக நினைத்துப் போரா நிற்கச் செய்தேயும் ஸர்வாதிகாரமாகையாலும் ஆசார்யருசி பரிக்ரஹீதமாகையாலும், இத்தையே மிகவும் தஞ்சமாக நினைத்துப் போருவர்கள். புத்தி பூர்வகமான அபசாரங்களுக்கும் பரிஹாரமாகையாலும் கர்மாவஸாநத்தில் அன்றிக்கே ஶரீராவஸாநத்திலே மோக்ஷமாகையாலும் இதுவே தஞ்சம்.
ரகு-ராக்ஷஸ ஸம்வாதம், வ்யாக்ர-வானர ஸம்வாதம், நஹுஷ-ப்ருஹஸ்பதி ஸம்வாதம். கபோதோபாக்யாநம், மறவன் முசல்குட்டியை விட்டுப் போந்தேன் என்ன அது கேட்டு பட்டர் அருளிச்செய்த வார்த்தையும் ஶ்ரீ பாஷ்யகாரர் சரம ஸமயத்திலே ‘எப்போதும் த்வயத்தை அநுஸந்திக்கை எனக்குப்ரியம்’ என்று அருளிச் செய்த வார்த்தையும் பெரியகோயில் நாராயணரைக் குறித்து ஶபதபுரஸ்ஸரமாக ‘த்வயமொழியத் தஞ்சமில்லை’ என்றருளிச் செய்த வார்த்தையும் ஸசேலஸ்நாந பூர்வகவாக ஆர்த்தியோடே உபஸந்நனான சிறியாத்தானுக்கு ஆஞ்ஜையிட்டு ‘த்வயமொழியத் தஞ்சமில்லை’ என்று எம்பார் அருளிச் செய்த வார்த்தையும். ‘திருமந்த்ரத்திலே பிறந்து, த்வயத்திலே வளர்ந்து, த்வயநிஷ்டராவீர்” என்று நஞ்சீயரைக் குறித்து அநந்தாழ்வான் ப்ரஸாதித்த வார்த்தையும் தொடக்கமான பூர்வாசார்ய வசநங்கள் ருசி விஶ்வாஸங்களுக்கு உறுப்பாக இவ்விடத்திலே அநுஸந்தேயங்கள்.
இது தான் பூர்வவாக்யம் மூன்று பதமும், உத்தர வாக்யம் மூன்று பதமும் ஆக ஆறு பதமாயிருக்கும். அதில் முதல் பதம், புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்யயோகத்தையும் ஆஶ்ரயணீயனான எம்பெருமானுடைய குணவிக்ரஹங்களையும் சொல்லுகிறது. இரண்டாம்பதம் அத்திருவடிகள் உபாயமென்றுமிடத்தைச் சொல்லுகிறது. மூன்றாம் பதம் அத்திருவடிகளை உபாயமாக பரிக்ரஹிக்கும்படியைச் சொல்லுகிறது. நாலாம் பதம் உபாய பரிக்ரஹ பலமான கைங்கர்யத்துக்கு விஷயம் மிதுன மென்னுமிடத்தைச் சொல்லுகிறது. அஞ்சாம் பதம் அவ்வஸ்து ஸர்வ ஸ்வாமி என்னுமிடத்தையும் கைங்கர்ய ப்ரார்த்தனையும் சொல்லுகிறது. ஆறாம்பதம் கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது.
ஶ்ரீ ஶப்தார்த்தம்
[௧] அதில் ப்ரதம பதத்தில் ஶ்ரீ ஶப்தம் “ஶ்ரீயதே ஶ்ரயதே” என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் – பிராட்டி சேதனனுக்கு ஆஶ்ரயணீயையாயிருக்கும் இருப்பையும் , ஈஶ்வரனை எப்போதுமொக்க ஆஶ்ரயித்துக் கொண்டிருக்கும் இருப்பையும் சொல்லுகிறது. “ஶ்ரீயதே” என்றது. ஆஶ்ரயிக்கப்படா நின்றாள் என்றபடி,. “ஶ்ரயதே” – என்றது ஆஶ்ரயியா நின்றாள் என்றபடி. புருஷகாரமாம் போதைக்கு இருவரோடும் ஸம்பந்தமுண்டாகவேணும். சேதநரோடே மாத்ருத்வ ஸம்பந்தமுண்டாயிருக்கும்; ஈஶ்வரனோடே மஹிஷீத்வ ஸம்பந்தமுண்டாயிருக்கும்.
ஶ்ருணோதி, ஶ்ராவயதி என்கிற நிருக்தி விஶேஷங்களாலே, ஶ்ரீயதே, ஶ்ரயதே என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்தத்தைச் சொல்லுகிறது.
ஶ்ருணோதி என்றது கேளாநிற்கும் என்றபடி; ஶ்ராவயதி என்றது- கேட்பியா நிற்கும் என்றபடி. ஆஶ்ரயிக்க விழிந்த சேதனன், தன்னபராதத்தையும் ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் நினைத்து அஞ்சி இரண்டுக்கும் பரிஹாரமாக பிராட்டியுடைய காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்குண்டான ஸம்பந்த விஶேஷத்தையும் முன்னிட்டுக் கொண்டு ஈஶ்வரன் பக்கல் புகலறுத்துக் கொண்ட எனக்கு அஶரண்ய ஶரண்யையான தேவரீர் திருவடிகள் ஒழிய புகலில்லை என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை கேளாநிற்கும்; ஸர்வஜ்ஞனான ஈஶ்வரனையும் கூட நிருத்தரனாம்படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விஶேஷங்களாலும் தன்னுடைய போக்யதா ப்ரகர்ஷத்தாலும் மற்றுமுண்டான உசிதோபாயங்களாலும் இவள் இவன் அபராதங்களை அவன் திருவுள்ளத்திலே படாதபடி பண்ணி இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தையைக் கேட்டும்படி பண்ணாநிற்கும். சேதனனுக்கு இருவரோடு ஸம்பந்தமுண்டாயிருக்கச் செய்தேயும் மாத்ருத்வ நிபந்தநமான வாத்ஸல்ய அதிரேகத்தாலும் ஈஶ்வரநோபாதி காடிண்ய மார்தவங்கள் கலந்திருக்கை அன்றிக்கே, இவள் பக்கலுள்ளது மார்தவமேயாய் இத்தலையில் கண் குழிவு காண மாட்டாதபடி யிருக்கையாலும் தன் பக்கலிலே தீரக்கழிய அபராதத்தை பண்ணின ராவணனுக்கும் அகப்பட ஹிதோபதேஶம் பண்ணும்படி குற்றங்கள் திருவுள்ளத்தில் படாதபடி யிருக்கையாலும், ராக்ஷஸிகள் அபராதத்தில். நின்றும் மீளாதிருக்கச் செய்தே அவர்கள் அஞ்சின அவஸ்தையிலே ‘பவேயம் ஶரணம்ஹிவ: என்று அபய ப்ரதாநம் பண்ணும் படியிருக்கையாலும், திருவடியோடே மன்றாடி அவர்களை ரக்ஷித்து தலைக்கட்டுகையாலும், நில்லென்ன பெருமாள் தாமே பிராட்டி முன்னிலையாகப் பற்றுகையாலே இளைய பெருமாளைக் கூடக்கொண்டு போருகையாலும் ஶ்ரீ விபீஷணப் பெருமாள் குடும்பத்வாரா பிராட்டிக்கு ஆநுகூல்யத்தைப் பண்ணி பெருமாளை ஶரணம் புகுருகையாலும் காகம் அபராதத்தை பண்ணிவைத்து பிராட்டி ஸ்ந்நிதியாலே தலை பெற்று போகையாலும் அத்தனை அபராதமின்றிக்கே யிருக்க இவள் ஸந்நிதி இல்லாமையாலே ராவணன் தலை அறுப்புண்ணக் காண்கையாலும், மற்றுமிவை தொடக்கமான ஸ்வபாவ விஶேஷங்கள் எல்லாவற்றாலும், ஈஶ்வரனை ஆஶ்ரயிக்கும்போது பிராட்டி புருஷகார பூதையாகக் கடவள்.
மதுப்பின் அர்த்தம்
[௨] மதுப்பு – புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்யயோகத்தைச் சொல்லுகிறது. “அகலகில்லேன் இறையும் ‘ என்கிறபடியே இவளென்றும் ஒக்க ஈஶ்வரனைப் பிரியாதிருக்கையாலே ஆஶ்ரயிக்க இழிந்த சேதனனுக்கு இவள் ஸந்நிதியில்லை என்று பிற்காலிக்க வேண்டாதே ருசிபிறந்தபோதே ஆஶ்ரயிக்கலாம்படி யிருக்கும்.
நாராயண பதார்த்தம்
[௩] நாராயண பதம்-சேர்க்கக்கடவ பிராட்டிதானே சிதகுரைத்தாலும் ‘செய்தாரேல் நன்று செய்தார்’ என்று அவளோடே மறுதலைத்து நோக்கும் எம்பெருமானுடைய வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஶீல்ய ஸௌலப்யங்களாகிற குணங்களைச் சொல்லுகிறது.
வாத்ஸல்யமாவது -வத்ஸத்தின் பக்கல் தேனு இருக்குமிருப்பு ; அதாகிறது அதனுடைய தோஷத்தைப் போக்யமாகக் கொள்ளுகையும், க்ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும், எதிரிட்டவர்களைக் கொம்பிலும் குளம்பிலும்கொண்டு நோக்குகையுமிறே; அப்படியே, ஈஶ்வரனும், இவனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு, ‘பாலே போல் சீர்’ என்கிறபடியே குணங்களாலே தரிப்பித்து ‘அபயம் ஸர்வ பூதேப்ய:’ என்கிறபடியே அநுகூலர் நிமித்தமாகவும் ப்ரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும்.
ஸ்வாமித்வமானது இவன் விமுகனான தஶையிலும் விடாதே நின்று ஸத்தையை நோக்கிக்கொண்டு போருகைக்கு ஹேதுவாயிருப்பதொரு பந்தவிஶேஷம் ; அதாகிறது- உடையவனாயிருக்குமிருப்பு ; அத்வேஷம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தமாக உண்டான ஸ்வபாவ விஶேஷங்களையெல்லாம் உண்டாக்குகிறது. இந்த பந்த விஶேஷமடியாகவிறே.
ஸௌஶீல்யமாவது உபய விபூதி யோகத்தாலும் பெரிய பிராட்டியாரோட்டை சேர்த்தியாலும் நிரங்குஶ ஸ்வதந்த்ரனாயிருக்கிற ஈஶ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து “அவன் எவ்விடத்தான் யான் ஆர் ” என்று பிற்காலியாமே எல்லாரோடுமொக்க மேல் விழுந்து புரையறக் கலக்கையும் அது தன் பேறாக விருக்கையும் எதிர்த்தலையில் அபேக்ஷையின்றிக்கேயிருக்கக் கலக்கையும்.
ஸௌலப்யமாவது கண்ணுக்கு விஷயமின்றிக்கே யிருக்கிற தான் கண்ணாலே கண்டு ஆஶ்ரயிக்கலாம்படி எளியனாகை.
அதனுடைய பூர்த்தியுள்ளது அர்ச்சாவதாரத்திலேயிறே. ‘மாம்’ என்று காட்டின ஸௌலப்யம் பரத்வம் என்றும்படியிறே அர்ச்சாவதார ஸௌலப்யமிருக்கும்படி. அர்ஜுனனொருவனுக்கு மேயாய்த்து அந்த ஸௌலப்யம், நீ எனக்கு வேண்டாவென்கிறவர்களையும் விடமாட்டாத ஸௌலப்யமிறே இது. அது காதாசித்கம் இது எப்போதுமுண்டு.
சரண பதார்த்தம்
[௪] சரணௌ- திருவடிகளை ருசிஜநகமுமாய், ப்ராப்யமுமாய் இருக்கிறாப்போலே ப்ராபகமுமாயிருப்பது திருமேனியிறே. திருமேனியைச் சொல்லுகிறதாகில் திருவடிகளுக்கு வாசகமான ஶப்தத்தாலே சொல்வானென் என்னில் மேல் ப்ரபத்தி பண்ணப்புகுகிற அதிகாரி அநந்யார்ஹ ஶேஷத்வ ஜ்ஞாநத்தை உடையவனாகையாலே ஸ்வாமி ஸந்நிதியில் இவன் பாசுரம் இப்படி அல்லதிறாமையாலே சொல்லுகிறது. ‘திருநாரணன் தாள்’ ‘திருவுடை அடிகள் தம் நலம்கழல்’ ‘கழல்கள் அவையே ஶரணாகக்கொண்ட’ ’நாகணை மிசை நம்பிரான் சரணே ஶரண்’ “அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று சொல்லுகிறபடியே திருவடிகளிறே உபாய மாயிருப்பது.
ஶரண ஶப்தார்த்தம்
[௫] ஶரணம் -உபாயமாக, உபாயமாகிறது – அநிஷ்டத்தைப்போக்கி இஷ்டத்தைப் பண்ணித்தருமது. அநிஷ்டமாகிறது – அவித்யையும், அவித்யா கார்யமான ராக த்வேஷங்களும் புண்யபாப ரூபமான கர்மங்களும், தேவாதி சதுர்வித ஶரீரங்களும், ஆத்யாத்மிகாதி து:க பரம்பரைகளும்; இஷ்டமாகிறது புண்யபாப நிவ்ருத்தியும், ஶரீர விஶ்லேஷமும் அர்ச்சிராதி மார்ககமனமும் பரமபத ப்ராப்தியும் பரமாத்ம தர்ஶநமும் குணாநுபவ கைங்கர்யங்களும் அதில் ப்ரதாநமாக இஷ்டமாயிருப்பது கைங்கர்யம் : அதுக்குறுப்பாகையாலே இஷ்டங்களாயிருக்கும் மற்றுள்ளவை.
ப்ரபத்யே பதார்த்தம்
[௬] ப்ரபத்யே – பற்றுகிறேன், பதல்-கதௌ என்கிற தாதுவுக்கு அர்த்தம்-கதி, இங்கு கதியாக நினைக்கிறது, புத்தி விஶேஷத்தை. இந்த புத்தி விஶேஷமாகிறது – அநந்யார்ஹ ஶேஷத்வ ஜ்ஞாநகார்யமாய் இதரோபாய வ்யாவ்ருத்தமாய், பகவத் ரக்ஷகத்வாநுமதிரூபமாய் ஸதநுஷ்டேயமாய் வ்யபிசார விளம்ப விதுரமாய் ஸர்வாதிகாரமாய் நியம ஶூந்யமாய் அந்திம ஸ்ம்ருதி நிரபேக்ஷமாய், ஸுஶகமாய், யாச்ஞாகர்பமாய் த்ருடாத்யவஸாய ரூபமாயிருப்பதொரு ஜ்ஞாநவிஶேஷம். இந்த ஜ்ஞாநத்தில் ப்ரயோஜநாம்ஶமாயிருப்பது ஒரு விஶ்வாஸம். உக்த்யாபாஸ வசநாபாஸ பக்த்யாபாஸங்களாலும் ஈஶ்வர பரீக்ஷை தொடக்கமானவற்றாலும் இத்த்யவஸாய விஶேஷம் குலையாதிருந்த போதாய்த்து பலஸித்தியுள்ளது. இங்குச் சொல்லுகிற ப்ரபத்தி கரணத்ரயத்தாலே உண்டாகவுமாம். ஏக கரணத்தாலே உண்டாகவுமாம். பலஸித்தியில் குறையில்லை. இப்பதத்தில் வர்த்தமான நிர்தேஶத்தாலே – காலக்ஷேப ஹேதுவாகவும் போகஹேதுவாகவும் ஈஶ்வர ப்ரீதிஹேதுவாகவும் , யாவச்சரீர பாதம் இந்த புத்திவிஶேஷம் அநுவர்த்திக்கு மென்றுமிடம் ஸூசிதமாகிறது என்கையாலே பலத்துக்கு ஒருக்கால் அமையும்.
உத்தர வாக்யார்த்தம்
[௭] உத்தர வாக்யம், ப்ரபத்தி கார்யமாய் ஶ்ரிய:பதி விஷயமாயிருந்துள்ள கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறபடியைச் சொல்லுகிறது. கீழ்ச் சொன்ன ஸாதநம் பலசதுஷ்டய ஸாதாரண மாயிருக்கையாலே, இவனுக்கபேக்ஷிதமான பலவிஶேஷத்தை நியமிக்கிறது.
ஶ்ரீமதே பதார்த்தம்
இதில் ப்ரதம பதம் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தி மிதுநமென்னுமிடத்தைச் சொல்லுகிறது. ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தி மிதுநமானால் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியும் மிதுநமாயிருப்பது. “கோலத்திருமாமகளோடு உன்னைக்கூட”. ”ஒண்டொடியாள் திருமகளும் நீயும்’ “திருமாற்கரவு” என்கிறபடியே – தனித்து இவர்களுக்கு ப்ராப்யத்வமில்லை. ‘அல்லிமாமலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண்டு’ என்கிறடியே – இச்சேர்த்தியிலே பற்றினாலிறே ஶ்ரீ விபீஷணப் பெருமாளைப் போலே உஜ்ஜீவித்துப் போகலாவது. அல்லாதபோது, ராவண, ஶூர்பணகிகளைப்போலே விநாஶமே பலமாயிருக்கும். பூர்வ வாக்யத்தில் மதுப்பு ஆஶ்ரயிக்குமவர்களை ஈஶ்வரனோடே சேர்க்கைக்காகப் பிரியாதிருக்குமிருப்பைச் சொல்லுகிறது; இந்த மதுப்பு, இவன் பண்ணும் கைங்கர்யத்தை ஈஶ்வரன் திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப் படுத்தி கைங்கர்யம் கொள்ளுகைக்காகப் பிரியாதிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது.
நாராயண பதார்த்தம்
[௮] இரண்டாம்பதம், கைங்கர்ய வர்த்தகமாக அநுபாவ்யமாயிருந்துள்ள குணவிக்ரஹவிபூதி யோகத்தைச் சொல்லுகிறது. கீழ் உபாய பரிக்ரஹத்துக்கு ஏகாந்தமாகச் சொன்ன குணங்களும் இங்கே ப்ராப்யத்வேந அநுஸந்தேயங்கள், கீழில் மற்றை குணங்களிலும் காட்டில் ஸௌலப்யம் ப்ரதாநமாயிருக்கும் இங்கு ஸ்வாமித்வம் ப்ரதாநமாயிருக்கும்.
சதுர்த்தியின் அர்த்தம்
[௯] இதில் சதுர்த்தி கைங்கர்ய ப்ரார்தநத்தைச் சொல்லுகிறது. “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்” என்கிறபடியே இச்சேதனன் அபிநிவேஶாதிஶயத்தாலே தேஶகாலாவஸ்த ப்ரகார நியமவிதுரமாக ப்ரார்த்திக்கக் கடவனாயிருக்கையாலே, ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வப்ரகாரத்தாலும் பண்ணும் வ்ருத்தி விஶேஷத்தைச் சொல்லுகிறது. ஶேஷத்வ ஜ்ஞாநகார்யமான உபாய பரிக்ரஹத்துக்கு அநந்தரம் ப்ராப்தமாயிருக்கையாலே, இந்த சதுர்த்திக்கு தாதர்த்யம் அர்த்தமாக மாட்டாது. உத்துங்க தத்த்வத்தைக் குறித்து பரதந்த்ரனான சேதனன் பண்ணுகிற வ்ருத்தி விஶேஷமாகையாலே விஷய ஸ்வபாவத்தாலும் ஆஶ்ரய ஸ்வபாவத்தாலும் ப்ரார்தநையே அர்த்தமாகக்கடவது.
நமஶ்ஶப்தார்த்தம்
[௧௦] நிரதிஶய போக்யமான பகவத் விஷயத்தை விஷயீகரித்திருக்கையாலும், நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகமான ஸ்வரூபத்தை ஆஶ்ரயமாக உடைத்தாயிருக்கையாலும், அத்யர்த ப்ரியரூபமான கைங்கர்யத்தில் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வப்ரயோஜநத்வ புத்தியை நிவர்த்திப்பிக்கிறது நமஸ்ஸு. பகவந் முகவிகாஸ ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயமென்கிற ப்ரதிபத்தி யொழிய அதிலே போக்த்ருத்வ ப்ரதிபத்தியும் மதீயத்வ ப்ரதிபத்தியும் நடக்குமாகில் அபுருஷார்த மாயிறேயிருப்பது. ஸ்வரூப விரோதியென்றும், ஸாதந விரோதியென்றும், ப்ராப்திவிரோதி யென்றும், ப்ராப்யவிரோதியென்றும், சதுர்விதமாயிருக்கும் விரோதி. அதில் திருமந்த்ரத்தில் உகாரத்தாலும், நமஸ்ஸாலும் ஸ்வரூபவிரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது. சரம ஶ்லோகத்தில் அர்த்த த்வயத்தாலும் ஸாதந விரோதி நிவ்ருத்தியையும் ப்ராப்தி விரோதி நிவ்ருத்தியையும் ப்ரதிபாதிக்கிறது; ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியை சொல்லுகிறது – இந்த நமஸ்ஸு. அதாதது ‘ஏறாளுமிறையோனிற்படியே’ அவனுக்குறுப்பல்லாத ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யமென்கை. போக விரோதியான ஶேஷத்வாநுஸந்தாநமும் ஆத்ம ஸமர்ப்பணம் போலே ஸ்வரூபவிருத்தம்.
ஆக, புருஷகார ஸ்வரூபத்தையும், உபாய ஸ்வரூபத்தையும், உபாய பரிக்ரஹத்தையும் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியையும், கைங்கர்யத்தையும், அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியையும் சொல்லித் தலைக்கட்டுகிறது.
பூர்வ வாக்யத்துக்கு அர்த்தமாக ‘அகலகில்லேன்’ என்கிற பாட்டை அநுஸந்திப்பது. உத்தர வாக்யத்துக்கு அர்த்தமாக ‘சிற்றம் சிறுகாலே’ என்கிற பாட்டை அநுஸந்திப்பது.
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே ஶரணம்
ஶ்ரிய:பதிப்படி ஸம்பூர்ணம்