தனி த்வயம்

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

தனி த்வயம்அவதாரிகை

லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே

ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।।

ஸகலவேத ஶாஸ்த்ரங்களும் தாமஸ ராஜஸ ஸாத்விக புருஷர்‌களுக்கு அவ்வோ குணாநுகுணமாக புருஷார்த்தங்களை விதித்தது. எல்லார்க்குமொக்க அபிமதமான மோக்ஷம் தான் து:க நிவ்ருத்தியும் ஸுகப்ராப்தியுமிறே, இதுவிறே ப்ரியமாகிறது. இத்தை லபிக்குமுபாயத்தை ஹிதமென்கிறது.

இதில்‌தாமஸ புருஷர்கள் பரஹிம்ஸையை ஸாதநமாகக்கொண்டு அத்தாலே வரும் தனாதிகளை ப்ரியமான புருஷார்த்தமாக நினைத்திருப்பர்கள் -இதுக்கு வழியிட்டுக்கொடுக்கும் வேதமும் ஶ்யேந விதியென்கிற முகத்தாலே.

ராஜஸ புருஷர்கள் இஹலோக புருஷார்த்தமாக புத்ரபஶ்வந்நாதிகளையும், பரலோக புருஷார்த்தமாக ஸ்வர்காதி போகங்களையும் நினைத்திருப்பார்கள். இதுக்கு உபாயமாக ஜ்யோதிஷ்டோமாதி முகங்களாலே வழியிட்டுக்கொடுக்கும் வேதமும்.

ஸாத்விக புருஷர்கள் அந்த ஜ்யோதிஷ்டோமாதி க்ரமம் தன்னையே மோக்ஷத்துக்கு ஸாதநமாக அபிஸந்தியைப்பண்ணி பலஸங்க கர்த்ருத்வத்யாக பூர்வகமாக பகவத் ஸமாராதந புத்திபண்ணி அத்தாலே க்ஷீணபாபராய் ஜ்ஞாநம் பிறந்து அநவரத பாவநாரூபையானபக்தி பக்வமாய் ஸாக்ஷாத்கார ஸமானமாய்ச் செல்லாநிற்க அந்திமாவஸ்தையில் பகவத்விஷயமான அந்திமஸ்ம்ருதி அநுவர்த்த்திக்குமாகில் பகவல்லாபமாயிருக்கும். இதுக்கு இப்படி செய்வானென்று வழியிட்டுக்கொடுக்கும் வேதமும்.

ஶுத்த ஸாத்விக புருஷர்கள் நிர்ஹேதுக பகவப்ரஸாத லப்த ஜ்ஞாநத்தாலே கர்மஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸித்தரூபனான ஈஶ்வரனே உபாயமாய் அநந்யகதிகளுமாய் ஸ்வரக்ஷண ப்ராப்தியில்லாத நமக்கு உபாயமென்றத்யவஸித்திருந்து ஸாதகனான அவனைப்போலே கர்மவாஸனை யாதல் அந்திம ஸ்ம்ருதியாதல் வேண்டாதே ஈஶ்வரன் தலையிலே அந்திம ஸ்ம்ருதியையேறிட்டு இஶ்ஶரீராவஸாநத்திலே திருவடி திருவநந்தாழ்வான் பிராட்டி துடக்கமானாருடைய பகவதநுபவஜநித ப்ரீதிகாரிதமான நித்யகைங்கர்யத்தை லபிப்பர்கள். இதுக்கு வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் இப்புருஷார்தத்துக்கு ததுபாயகாரமான  ஸ்வீகாரமான ப்ரபத்தியை ஸாதநமாக ஆதரித்து அவனே உபாயமென்று நிஶ்சயித்தார்கள்.

எங்ஙனே என்னில், ஶ்ருதியிலே உபாஸந வாக்யத்திலே நின்று ‘ஸத்யம் தபோதமஶ்ஶமோதாநம்’ இத்யாதிகளைச் சொல்லிற்று. ஸத்யமாவது பூதஹிதமானது, [தபஸ்]ஸாவது-காய ஶோஷணம், தமம் – விரக்தி, ஶமம் – ஶாந்தி, தாநம்- ஸத்துக்கள் விஷயமாகக்கொடுக்குமவை.  இப்படிகளாலுபாஸிக்குமிடத்தில் யம நியமாஸந ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணாத்யான ஸமாதிகளான அஷ்டாங்க யோகத்தையும் விதித்தது- இதுதன்னை முகபேதத்தாலே ஶ்ரவண மநந நிதித்யாஸந தர்ஶந மித்யாதிகளையும் சொல்லக்கடவது. ஶ்ரவணமாவது தத்த்வ ஹிதங்களையுள்ளபடி கேட்கை, மநநமாவது அவ்வர்த்தத்தை விதேயமாக மநநம் பண்ணுகை. நிதித்யாஸந மாவது அவ்வர்த்தத்திலே நிஷ்டனாகை, த்ருவாநு ஸ்ம்ருதியாவது அவ்வர்த்தத்தில் அநவரதபாவித்வம், தர்ஶந ஸமானாகாரமாவது கண்டாப்போலே இருக்கை. இப்படிகளாலே அநேகங்களை ஒன்றுக்கொன்று  ஶ்ரேஷ்டமாகச் சொல்லிக்கொண்டு போந்து மானஸமென்கிற ஶப்தத்தாலே ஆத்மஜ்ஞாநத்தைச் சொல்லிற்று, அதுக்கு மேலான தர்ஶந ஸமானாகாரமான சரமாவதியிலே வருந்திப்புகுந்தாலும் அவ்வளவிலே ப்ரம்ஶமுண்டாகில் ஆதிபரதனைப்போலே அத:பதிக்குமத்தனை. இவ்வுபாயம்தான் த்ரைவர்ணிகாதிகாரமுமாய் அநுஷ்டிக்குமிடத்தில் துஷ்கரமுமாயும் துர்லபமுமாயும் அஸாத்யமுமாயும் பலவாயும் விளம்பமாயும் அத்தனை பலப்ரதான ஶக்தியில்லாமையாலும் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தமாயும் அந்திமஸ்ம்ருதி வேண்டுகையாலும் ப்ரத்யவாய பரிஹார ப்ரசுரமாயிருக்கையாலும் இவ்வருமைகளையநுஸந்தித்து தளும்பினார்க்கு  ‘மாதாபித்ருஸஹஸ்ரேஷு’  என்கிற  மாதா பிதாக்களிலும் ஆயிரம் மடங்கேற்றமாக முகம்கொடுக்கும் மாதாவாகையாலே வேதமும் உபநிஷத் பாகத்திலே ந்யாஸ ஶப்தத்தாலே ப்ரபத்தியை ‘ந்யாஸ இத்யாகுர்மநீஷிணோ ப்ரஹ்மாணம், ந்யாஸ இதி ப்ரஹ்மா’ என்று ந்யாஸ ஶப்தத்தாலே ப்ரபத்தியைச் சொல்லிற்று, கீழ்ச்சொன்ன உபாயங்களோபாதி ப்ரபத்தியும் அந்யதமமாகிறதோ வென்னுமபேக்ஷையிலே உத்க்ருஷ்டோபாயம் ப்ரபத்தியென்னு மிடத்தை ந்யாஸ ஶப்தத்தாலே சொல்லிற்று.

ப்ரபத்திபண்ணும் ப்ரயோகமிருக்கும் படியென்னென்னுமபேக்ஷையிலே ’பதிம் விஶ்வஸ்ய, ப்ரஹ்மணே த்வா மஹஸ ஓமித்யாத்மானம் யுஞ்ஜீத’ என்று ப்ரபத்திபண்ணும் ப்ரயோகம் சொல்லிற்று எங்ஙனே என்னில், விஶ்வ பதார்த்தங்களை யுடையனாயிருக்கிற ப்ரஹ்மமுண்டு ஸர்வரக்ஷகன் அவன் திருவடிகளிலே ’ஓமித்யாத்மானம்’  என்று உனக்கு வாசகமான மந்த்ரத்தை சொல்லிக்கொண்டு (யுஞ்ஜீத) ஸமர்பிப்பானென்று சொல்லி மஹிமா வாகை யாவதென்னென்னும் அபேக்ஷையிலே ‘நிரஞ்ஜந:, பரமம் ஸாம்யமுபைதி’  என்றும், ‘ப்ரஹ்மவேத ப்ரஹைவ பவதி’ என்றும், ’தத்பாவ பாவமாபந்ந:’ என்றும்’, ‘மம ஸாதர்ம்யமாகதா:’ என்றும், ‘தம்மையே யொக்கவருள் செய்வர்’ என்றுமிப்படி அவனோடொத்த பரம ஸாம்யாபத்தியாகிற பலத்தை சொல்லி ப்ரபத்திக்கு அதிகாரிகளாரென்னு மபேக்ஷையிலே வதார்ஹனும் நின்ற நிலையிலே ஶரணம் புக்கால் ஶரண்யன் சேதநனாகில் இவன் குற்றம் கண்டு விட்டுக்கொடானென்று ஶரணாகதியினுடைய வைபவத்தை ஶ்ருதியிலே சொல்லிற்று.

எங்ஙனே என்னில் ’தேவாவையஜ்ஞாத்ருத்ரமந்தராயந்’ ’ஸ ஆதித்யா நந்வாக்ராமத, தேத்விதைவத்யான் ப்ராபத்யந்த’, ‘தாந்நப்ரதி ப்ராயச்சந், தஸ்மாதபி வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதி ப்ரயச்சந்தி’  என்று தேவர்களுடைய யாகத்திலே ருத்ரன் தனக்கு ஹவிர்பாகமுண்டென்று வர இவனுக்கு அவர்கள் ஹவிர்பாகம் கொடோமென்ன நீங்கள் வத்யரென்று அவர்‌களைச் சொல்லித் தொடர்ந்தான். அவர்களும் த்விதை வத்யரென்கிற அஶ்விநிகள் பாடே போய் ஶரணம் புக அவர்களும், எங்கள் பக்கலிலே ப்ரபந்நரான இவர்‌களை விட்டுகொடோமென்று ருத்ரனோடேயும் அலைந்து நோக்கினார்கள்.  ‘தேவாவை த்வஷ்டாரமஜிக்ராம்ஸந், ஸ பத்நீ ப்ராபத்யத, தன்ன ப்ரதி ப்ராயச்சந்’ ‘தஸ்மாதபி வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதி ப்ரயச்சந்தி’ என்று தேவர்‌கள் யாகம் பண்ணுகிற வளவிலே தேவதச்சன் தனக்கு ஹவிர்பாகம் உண்டென்றுவர, அவனுக்கு ஹவிர்பாகம் கொடோமென்று அவர்களெல்லாருமாகத் துரத்தினார்கள். அவன் அந்த தேவ பத்நிகள் பக்கலிலே போய் ஶரணம் புக்கான். இவன் வத்யன் விட்டுத்தர வேணுமென்ன, என்று எங்கள் பக்கலிலே ப்ரபத்தி பண்ணின இவனை விட்டுத்தாரோமென்று அவர்களோடேயுமலைந்து நோக்கினார்கள், என்னுமிவ்வர்த்தம் ஶ்ருதி ஸித்தமாகையாலே வத்யனும் ப்ரபத்த்யதிகாரி யென்னுமிடம் சொல்லிற்று.

 ப்ரபத்தி பண்ணுகைக்கு ஶரண்யராரென்றுமபேக்ஷையிலே ஶ்வேதாஶ்வதரோபநிஷத்திலே ‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’  என்று ப்ரஸித்தனான ப்ரஹ்மாவையாவனொருவன் முன்புண்டாக்கினான்  ஸர்வருக்கும் ஶரண்யனவனே யென்னுமிடம் சொல்லிற்று, சதுர்த்தம்ஶ புவந ஸ்ரஷ்டாவான சதுர்முகனும் இவனாலே ஸ்ருஜ்யனாகையாலே இவனையொழிந்தார்க்கு ஸ்ருஜ்யத்வ கர்மவஶ்யத்தையுண்டாகையாலே அவர்களில் ஶரண்யராக வல்லாரில்லை என்னுமிடம் சொல்லிற்று. ‘யோவை வேதாம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’ யாவனொருவன் அந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைக் காட்டிக்கொடுத்தான்; இத்தால் ருசிஜநகநுமிவனே என்கிறது. ஜ்ஞாந ப்ரதநாகையாலே ருசிஜநகனென்னத்தட்டில்லையே. வேதசக்ஷுஸ்ஸைக்கொடுத்து ஸ்ருஷ்டிப்பித்தானென்கையாலும், இவர்களுக்கு ஸம்ஹர்த்தாவாகையாலும், இவர்கள் ஸம்ஹார்யராகையாலும் இவர்கள் பண்ணுமவாந்தர ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்கு அந்தராத்மதயா நின்று பண்ணுகையாலும், இவர்களவனுக்கு ஶரீரபூதராகையாலும், இவர்களவனுக்கு ஶேஷமாகையாலும், அவன் ஶுத்தஸத்வமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனாகையாலும், இவர்கள் குணத்ரயோ பேதமான ப்ராக்ருத ஶரீரத்தையுடையராகையாலும், அவன் ஹேய ப்ரத்யநீக கல்யாணகுணங்களை யுடையனாகையாலும், இவர்கள்  ஹேயகுண விஶிஷ்டராகையாலும் அவன் புண்டரீகாக்ஷனாகையாலும், இவர்கள் விரூபாக்ஷராகையாலும், அவன் ஶ்ரிய: பதியாகையாலும், இவர்கள் நிஶ்ஶ்ரீகராகையாலும் அவன் உபநிஷத் ஸித்தனாகையாலும், இவர்கள் ஆகமொத்த வைபவராகையாலும், அவன் உபயவிபூதி நாயகனாகையாலும், இவர்கள் அண்டாந்தர் வர்த்த்திகளாகையாலும், அவன் மோக்ஷப்ரதனாகையாலும், இவர்கள் ஸம்ஸார வர்த்தகராகையாலும், ஶிவஶம்ப்வாதிகளாலே சொல்லுகிற பரத்வமும் குணயோகத்தாலும், ப்ரகாரவாசிகஶப்தங்கள் ப்ரகாரி பர்யந்தமாகக் கண்டபடி யாலே ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தாத்மாக்களுமிவனுக்கு ரக்ஷ்யம், ஶ்ரிய: பதியாய் புருஷோத்தமனான நாராயணனே ஸர்வரக்ஷகன், அவனே ஶரண்யனென்னுமிடத்தைச் சொல்லிற்று.

இனி ஶரண்யன் பக்கலிலே இறே ஶரணம்புக அடுப்பது, ஆகையாலே வேதாத்மா ஶரணம் புகுகிறான். ‘தம் ஹ தேவமாத்ம புத்தி ப்ரஸாதம்’ தானேவுபாயமென்கிற வ்யவஸாயமான புத்திப்ரஸாதத்தை எனக்குப்பண்ணித் தந்தான் என்கையாலே வ்யவஸாயப்ரதனும் அவனென்னுமிடம் சொல்லிற்று. ‘முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே’ என்று ப்ராப்யருசியுடையவன் அதிகாரியென்னுமிடம், தோற்றுகைக்காக மோக்ஷார்த்தியான நான் ஶரணம் புகுகிறேனென்றான்.

 ஆக, இத்தால் மோக்ஷோபாயம் ப்ரபதநமென்னு மிடத்தையும், ப்ரபத்திக்கதிகாரி முமுக்ஷுவென்னுமிடத்தையும் சொல்லிற்று.

இப்படி ஶ்ருதிஸித்தமான ப்ரபதநத்தை இவ்வுபநிஷத்தையடியொற்றி உபப்ருஹ்மணம் பண்ணின ருஷிகளும் மஹாபாரத ராமாயணாதிகளிலே நின்றும் வெளியிட்டார்கள்.

எங்ஙனே என்னில் ‘கோந்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஶ்சவீர்யவான் – தர்மஜ்ஞ:’ என்று மூன்று குணத்தினுடைய விவரணம் ஶ்ரீராமாயணம். குணவானென்கிறது, ஶீலகுணத்தை வீர்யவானென்கிறது. அந்த ஶீலம் கண்டொதிங்கினவர்களுடைய விரோதிவர்கத்தைக் கிழங்கெடுத்து அவர்‌ களைக் காற்றூட்ட வல்லனாகிறது. ‘தர்மஜ்ஞ:’ என்று ஸம்ஸாரிகளுடைய துர்கதியைக்கண்டு இவற்றுக்கு நம்மையொழிய புகலில்லை இனி நம்மாலே நம்மைப்பெறு மத்தனை என்று ஶரணாகதி தர்மமே பரம தர்மமென்றிருப்பரென்கிறது. ஶீலவத்தை யாகிறது அபிஷேக விக்நம் பிறந்ததென்று வெறுப்பின்றியே `வநவாஸோ மஹோதய:’ என்று காடேறப்புறப்பட்டுபோவது; ‘ஆவாஸந்த்வஹமிச்சாமி’ என்று ருஷிகள் பக்கலிலே சென்று தாழநிற்பது; ‘கிங்கரௌ ஸமுபஸ்திதௌ’ என்பது ஜந்மவ்ருத்தங்களில் குறைநிற்கிறவர்களை. ‘உகந்த தோழ நீ ‘ என்பது; இப்படிகளாலே ஶீலவத்தையை மூதலித்தது. மாரீச ஸுபாஹுக்கள் வதம் துடக்கமாக ராவணவத பர்யந்தமாக நடுவுண்டானப் ப்ரதிகூல நிரஸநத்தாலே வீர்யவத்தையை மூதலித்தது. காக விபீஷணாதிகளை ஸ்வீகரிக்கையாலே தர்மஜ்ஞத்தையை மூதலித்தது.

எங்கே கண்டோமென்றில், ஸர்வலோக ஜனனியான பிராட்டி திறத்திலே காகம் அபராதம் பண்ணுகையாலே பரம க்ருபாளுவான பெருமாள் திருவுள்ளத்தாலும் இவன் வத்யனென்று ப்ரஹ்மாஸ்த்ரத்தைவிட `ஸ தம் நிபதிதம் பூமௌ ஶரண்யஶ் ஶரணாகதம், வதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் ।। ஸ பித்ரா ச பரித்யக்தஸ்ஸுரைஶ்ச ஸமஹர்ஷிபி:। த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவஶரணம் கத:।।” என்கிற படியே புறம்பு புகலற்று வந்து விழுந்தவித்தை ஶரணாகதியாக்கி ரக்ஷித்து விட்டான். ஶரண்யனென்கையாலே, காக விஷயமான ஸ்வீகாரம் கண்டோம்.

‘ப்ரதீயதாம் தாஶரதாய மைதிலீ’ என்று பெருமாளையும் அவருடைமையையும் சேர்ந்திருக்க இசையாயென்று  ராவணனுக்கு  ஹிதம் சொல்லக் கேளாதே ‘த்வாந்து திக் குலபாம்ஸநம்’ என்று பரிபவித்து புறப்படவிட ‘பரித்யக்தா மயா லங்கா’ என்று விட்டுப் புறப்படுகிறபோது ஒருதலை நெருப்புப்பட்டுப்பற்றி  வேவ புறப்படுவாரைப்போலே அங்கடி கொதித்துப் புறப்பட்டு, ‘ராவணோநாம துர்வ்ருத்த:’ என்று தன்னிகர்ஷத்தை முன்னிட்டுக்கொண்டு ‘ஸோஹம் புருஷிதஸ்தேந தாஸவஶ்சாவமானித: த்யக்த்வா புத்ராம்ஶ்ச தாராம்ஶ்ச  ராகவம் ஶரணம் கத:।।’ என்று ஶரணம் புகுந்தவனை முதலிகள் இவன்  ஜந்ம வ்ருத்தங்களிருந்தபடியாலும் வந்தவரவு யிருந்தபடியாலும் இவனுடைய நினைவு இருந்த படியாலும் வந்த காலமிருந்தபடியாலும் ஶரணாகதனுடைய வார்த்தை ஜீவிக்கும் கோஷ்டியென்று அதிலே கலந்து நலியலாமென்று வந்து ஶரணம் புகுந்தபடியாலும், கனத்த மதிப்பரோடே வரித்தலாடதட்டுப்படுமென்று பார்த்து தன்னவய வங்களோபாதி விரகறிந்து தப்பலாம்படி நாலுபேரைக்கொண்டு வந்தபடியாலும் ராவணன் தம்பியாய் அவன் சோற்றையுண்டு  அவன் ஆபத்காலத்திலே விட்டுப்போர ஸம்பவமில்லாமையாலும் இவன் நம்முயிர் நிலையிலே நலிய வந்தானென்று நிஶ்சயித்து ‘வத்யதாம்’ என்றுகொண்டு ஸர்வ ப்ரகாரத்தாலும் இவனைக் கைக்கொள்ள வொட்டோமென்று நிற்க, நீரிவனை விடுகைக்கு உறுப்பாக யாதொரு அநுபபத்தி சொன்னீர் அவை நமக்கு ஸ்வீகரிக்கைக்குடலாமித்தனை. அவன் வத்யனேயாகிலும் மித்ரபாவமுடையவனாய் வந்தவனை ‘நத்யஜேயம்’ என்று அவனை விடில் நமக்கு ஸத்பாவமில்லை என்று ப்ரக்ருதியிருந்த படியைச் சொல்லி, ‘ஆர்தோ வாயதிவாத்ருப்த: பரேஷாம் ஶரணம் கத:’ என்கிற படியே ஆர்தனாய் வரவுமாம் செருக்கனாய் வரவுமாம் நம்பக்கலிலே ஶரணம் புகுந்தவனை ‘அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா’ என்று ப்ராணனைழிய மாறி ரக்ஷிப்பன், ‘ப்ராணாநபி’ என்றாய் விட்டது, ஶரணாகதனுக்கும் தம்மை யழிய மாறி ரக்ஷிக்குமது தன்னேற்றம். செய்ததாகப் போந்திராமையாலே, ‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிசயாசதே।  அபயம்  ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ।।’ என்று ப்ரக்ருத்யநுரூபமான ப்ரதிஜ்ஞையைப் பண்ணி “கண்டோர் வசநமுத்தமம்” என்று கண்டூபாக்யாநத்தைச் சொல்லி ; ‘பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் ஶரணாகதம்’ இவைதானெவையென்னில், பத்தாஞ்சலி புடம் என்றது காயிகமான ப்ரபத்தி தீநமென்றது மானஸமான ப்ரபத்தி, யாசந்தம் என்றது வாசிகமான ப்ரபத்தி; ‘ஶரணாகதம்’ கீழே இவை மூன்றையும் சொல்லிவைத்து ஶரணாகதம் என்கையாலே, ‘தே வயம் பவதா ரக்ஷ்யா பவத்விஷய வாஸிந:’ என்றுகந்தருளின தேஶங்களிலே அபிமானித்த வெல்லைக்குள்ளே கிடந்து விடுகையும் ஶரணாகதி, அவைத்திலே யொன்றுண்டாகிலும் விடேனென்ற விடத்திலும் மஹாராஜர் தெளியாமையாலே இவருடைய ப்ரக்ருத்யநுகுணமாக இவரைத் தெளிவிப்போமென்று பார்த்தருளி பண்டு கலங்கின விடத்தில் நம்முடைய ஶக்தியைக்கண்டு தெளிந்தார்‌. அத்தை புரஸ்கரிக்கவே தெளிவரென்று பார்த்து, ’பிஶாசாந் தாநவான் யக்ஷாந் ப்ருதிவ்யாம் சைவராக்ஷஸாந்’ என்றித்யாதிப்படியே எதிரிகளுடைய ஒருகலத்திலே யுண்டு வொருமுகம் செய்து வந்தாலும் ‘அங்குள்யக்ரேணதாந் ஹந்யாம்’ நம்சிறுவிரலிலே கதேஶத்துக்கு மிரை போரார்கள் காணுமென்று தம்முடைய பலத்தைச்சொல்லவே ராமபாக்யத்தாலே மஹாராஜர் தெளிந்துவந்து விபீஷணன் நம்மிலும் பரிவனாய் வந்தான், பெருமாள் கடுகக் கைக்கொண்டருளும்படி விண்ணப்பம் செய்வோமென்று பெருமாள் பாடேவந்து கடுகக் கைக்கொண்டருளீரென்று  விண்ணப்பம் செய்ய, நாம் அவன் வந்தபோதே கைக்கொண்டோம், உம்முடைய அநுமதி பார்த்திருந்தோமித்தனை காணும் ‘ஆநயைநம்’ அவன் நிற்கிற நிலைகண்டால் எனக்காறி யிருக்கலா யிருந்ததோ கடுகக்கொண்டு புகுரீரென்ன, மஹாராஜரும் பரிகரமும் பகிரங்கமென்னும்படி ராமபரிஸரத்தில் அவனே அந்தரங்கனென்னும்படி கைக்கொண்டு, ‘செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை’ என்கிற படியே அபிஷிக்தனாக்கி ரக்ஷித்தானென்கையாலே ஶரண்யனுடைய ப்ரபாவமும் ஶரணாகதநுடைய ப்ரபாவமும் சொல்லிற்று.

இப்ரகரணம் தன்னில் சொல்லிற்றாயிற்ற தாத்பர்ய மென்னென்னில், ப்ரஹஸ்தாதிகளினுடைய வாக்யங்களிலே ஆஸுர ப்ரக்ருதிகளோடு ஸஹவாஸம் பண்ணலாகாதென்னுமிடம் சொல்லி, தன்னை நலிய நினைத்தவனுக்கும்கூட ஹிதஞ்சொன்ன ஶ்ரீவிபீஷணாழ்வான் படியாலே ஸத்துக்களோடே ஸஹவாஸம் பண்ணவேணுமென்னுமிடம் சொல்லி, இவன் சொன்ன ஹிதம்கேளாத ராவணன் படியாலே ஆஸுர ப்ரக்ருதிகளுக்கு ஹிதம் சொல்லலாகா தென்னுமிடம் சொல்லி “யத்ரராம:” என்று பெருமாளிருந்தவிடத்தே வருகையாலே பகவத்ஸந்நிதியுள்ள தேஶமே ப்ராப்யமென்னுமிடம் சொல்லி “பரித்யக்தா மயா லங்கா”  என்று விட்டுபோந்தபடியாலே பகவத்குணாநுபவத்துக்கு விரோதமான தேஶம் த்யாஜ்யமென்னுமிடம் சொல்லி,  இருந்தபடியெழுந்திருந்து வருகையாலே அதிகாரத்துக்கு புநஶ்சரணாதிகளில்லை யென்னுமிடம் சொல்லி, ஶரணாகதனை வத்யதா மென்கை பகவத் விஷயத்தில் பரிவரிருக்கும்படிசொல்லி, வத்யதாமென்றவர் தம்மை அநுவர்த்த்தித்து புகிருகையாலே ததீயரை புருஷகாரமாகக்கொண்டே பற்ற வேணுமென்னுமிடம் சொல்லி மஹாராஜரை இசைவித்துக் கொள்ளுகையாலே அவனும் ததீயரை புருஷகாரமாகக் கொண்டல்லது கைக்கொள்ளானென்னுமிடம் சொல்லி ‘ராவணோ நாம துர்வ்ருத்த: ‘ என்று சொல்லிக்கொண்டு வருகையாலே ஶரணம் புகுவார் தந்தாமுடைய நிக்ருஷ்டதையை முன்னிட்டுகொண்டு ஶரணம் புகவேணுமென்னுமிடம் சொல்லி, ஆக இப்படிகளாலே அதிகாரிக்கு வரும் விஶேஷணங்கள் சொல்லிற்று.

ப்ரபத்தி பண்ணினார் விஷயத்தில் தாம்‌செய்யும் திறங்களறிந்திருக்கையாலே, ‘ஸுக்ரீவம் ஶரணம்கத:’,  ‘ஸுக்ரீவந்நாதமிச்சதி’ என்று தமக்கொரு ஆபத்துவந்தாலும் ப்ரபத்தியை பண்ணுமித்தனை. ஶரணாகதனும் தனக்கு பலித்ததென்ன  ‘ஸமுத்ரம் ராகவோராஜா ஶரணம் கந்து மர்ஹதி’ என்று ஶரண்யனுக்குபதேஶிப்பது மித்தையே. ராவணனைப் போலன்றிக்கே  ‘ப்ரக்ருத்யாதர்மஶீலஸ்து’ என்று தர்ம ஶீலராகையாலே அலச்சாயல் பட்டிருந்தது. ஶரணாகதி கொண்டுகந்த கடலுக்கு ஒருகுளப்படியன்றோ இக்கடலென்னாக் கடலின் காலிலே விழுந்து ஶரணம் புகுவரிவர். அந்த நோயாசை யிறேயிது, ஸர்வேஶ்வரன் ஸ்வாதந்த்ர்யத்தாலே  முசித்து ஆஶ்ரிதபாரதந்த்ரயத்தை யாசைப்பட்டு; ‘பிதரம் ரோசயாமாஸ’ என்று வந்து பிறந்தான். அங்கே முடியை வைக்கப் பார்த்தார்கள். கைகேயீ வரவ்யாஜத்தாலே அத்தை தப்பினான். ‘ஆவாஸந் த்வஹமிச்சாமி’ என்று ருஷிகளுக்கு பரதந்த்ரராக வாசைப்பட்டான்.

அவர்‌களே ‘ந்யாயவ்ருத்தாயதா ந்யாயம், பூஜயாமாஸுரீஶ்வரம்’  என்று ஸ்வாதந்த்ர்யத்தை வெளியிடத் தொடங்கினார்கள். அவர்களைவிட்டு அறிவிலாக்குரங்கின் காலைப் பிடிப்போமென்று பார்த்தான். அவன் தாஸோஸ்மி யென்று எதிரே காலைப்பிடித்தான். அத்தைவிட்டுக் கடலொருதேவதை, நம்மைக் கும்பிடு கொள்ளுமென்று பார்த்து அதின் காலைப்பிடித்தான். அவன் சதிரனன்றோ, வந்து முகம் காட்டினால் ஶரண்யராவுதோமென்று முகம் காட்டானே. இவருக்கு பழைய ஸ்வாதந்த்ர்யம் தலையெடா.  கொண்டுவா தக்கானை என்பரே.  நாம் ஶரண்யராய் அவன் நியாம்யனாய் வந்தால் அவன் தன் ஸ்வரூபம் நஶிக்கும். தொடுத்த அம்புக்கிலக்கானோமாகில் ரூபநாஶமிறே யுள்ளதென்று முகம் காட்டுமே முகம்காட்டுந் தனைபோதுமிறே ஸ்வாதந்த்ர்ய முள்ளது. வந்து முகம்காட்டினால் முன்புத்தை அபராதத்தை அறியானே. கோழைகளைப்போலே, உனக்கன்றுகாண் இவ்வம்புக்கிலக்காக உன்னெதிரிகளை காட்டென்று மித்தனையிறே. இதுவிறே ஶ்ரீராமாயணத்தில் ஸங்க்ரஹேண ப்ரபத்திவிஷயமாக நின்றநிலை.

மஹாபாரதத்தாலும் ஆபந்நரானார்க்கு வஸிஷ்டாதிகளுபதேஶிப்பது ப்ரபத்தியை.

எங்ஙனே என்னில், ‘ஸர்வேஷாமேவலோகாநாம் பிதா மாதா ச மாதவ:। கச்சம்த்வ மேநம் ஶரணம் ஶரண்யம் புருஷர்ஷபா:।।’ என்று விதிக்க அநுஷ்டான வேளையிலே “த்ரௌபத்யாஸ் ஸஹிதாஸ்ஸர்வே நம: சக்ருர் ஜநார்தநம் ‘ என்று நமஸ்ஸு ஶரண பர்யாயமாகை யாலே ப்ரயோகித்தார்கள்.

த்ரௌபதியும் அந்தபெரிய ஸபையிலே துஶ்ஶாஸநனென்பானொரு முரட்டுப்பயல் வாசாமகோசரமான பெரிய பரிபவத்தைப்பண்ண, தர்மம் ஜயிக்கிறது என்றிருந்த பர்த்தாக்கள் ஐவரும், தர்மமில்லை என்றிருந்த நூறுவரும், தர்மாதர்ம விவேகம் பண்ணமாட்டாத த்ரோணபீஷ்மா திகளும், இப்படி நிர்லஜ்ஜரான ஸபையிலே ப்ரபத்தியை வெளியிடப்பிறந்த பாக்யவதியாகையாலே லஜ்ஜை யுடையவனை நினைத்து ‘ஶங்க சக்ரகதாபாணே’ என்கையில் வளையோபாதியோ உன் கையில் ஆயுதமும். என் பரிபவத்தைப் போக்குதல், உன் கையில் திருவாழியைப் போக்குதல் செய்யவேணும். த்யாகக்கொடி கட்டிக்கிடக்க புறங்கால்‌ வீங்குவாரைப் போலே திருவாழியேந்தி இருக்க, நான் பரிபவப்படுவதே? “எப்பொழுதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவானிறே. ‘த்வாரகா நிலய’ இப்போது முதலியார் வர்த்த்திக்கிறது, ஶ்ரீவைகுண்டத்திலேயா, ‘அச்யுத’ பற்றினாரைக் கைவிடோமென்றது பண்டோ, இன்றன்றோ. ‘கோவிந்த’ கோவிந்தாபிஷேகம் பண்ணிற்று தளர்‌ந்தாரை நோக்குகைக்கன்றோ, கடலிலே வர்ஷித்தாப்போலே நித்யஸூரிகளை ரக்ஷிக்கவோ ‘புண்டரீகாக்ஷ’ இக்கண்  படைத்தது ஆர்த ரக்ஷணம் பண்ணவன்றோ, துஶ்ஶ்ஸநாதிகளையிடுவித்து பரிபவிக்கைக்கோ. ‘ரக்ஷமாம் ஶரணாகதாம்’ என் கை விட்டேனென்று ப்ரபத்தியைப்பண்ணினாள்.

‘கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணாமாம் தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான்நாப ஸர்பதி’ என்று ஶரண்யப்ரபாவமும் சொல்லிற்றிறே.

அத பாதகபீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயண பரோபவ’ என்று தர்மபுத்ரனுக்கு தர்மதேவதை ஸர்வபர ந்யாஸத்தைபண்ணி யிராயென்றானிறே. ’தஸ்மாத்வம் லோக பர்தாரம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஶ்ரிய:பதிம் – கோவிந்தம் கோபதிம் தேவம் ஸததம் ஶரணம் வ்ரஜ- தமானந்தமஜம் விஷ்ணுமச்யுதம் புருஷோத்தமம் – பக்திப்ரியம் ஸுரஶ்ரேஷ்டம் பக்த்யாத்வம் ஶரணம் வ்ரஜ’  என்றும், “ஸோஹந்தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ நச ஸாமர்த்யவான் க்ருபாமாத்ர மநோவ்ருத்தி: ப்ரஸீதமே’ என்றும்‌;

ஶ்ரீஶாண்டில்ய பகவானும், ஸம்ஸாரிகளுடைய துர்கதியையும் பகவல்லாபத்தில் சீர்மையையுமநுஸந்தித்து தான் க்ருபாளுவாகையாலே, ‘வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம ஸந்ததி:, தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸம்சிந்த்ய ஶரணம் வ்ரஜ’ கெடுவிகாள் ஸம்ஸார பாந்தராய் ஜநித்துப்போருகிற நீங்கள் ஒரு ஜந்மத்தை பூவுக்கிட்டோம் போலவன்று ஒருப்ரபத்தியைப்பண்ணி பிழைக்க வல்லிகோளே என்று தன் செல்லாமையாலே சொன்னானிறே.

க்ருஷ்ணனும் , ‘மாமேவ யே ப்ரபத்யந்தே, மாயாமேதாம்தரந்திதே’ என்று நான் கர்மானுகுணமாகப் பிணைத்த ஸம்ஸார துரிதமொருவராலும் விடுத்துக்கொள்ள வொண்ணாது. என்னையே உபாயமாகப் பற்றினார்க்கு நானே போக்கிகொடுப்பேனென்றும், ‘மாமேகம் ஶரணம் வ்ரஜ’ என்று தூஶித்தலையிலே ப்ரபத்தியை பலவிடங்களிலும் விதித்துப் போருகையாலும் இம்மஹாபாரதத்துக்குமிதுவே தாத்பர்யம்.

ஜிதந்தையிலும். ஶ்வேதத்வீபவாஸிகள் ஸர்வேஶ்வரனுடைய புறப்பாட்டிலே கண்ணழகுக்குத் தோற்று ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஶ்வபாவந’ என்பது ‘ஸர்வதா சரணத்வம்த்வம் வ்ரஜாமி ஶரணம் பரம் ;  நகாம கலுஷம் சித்தம்’ என்பது ‘தவ சரணத்வந்த்வம் வ்ரஜாமி’ என்பதாய் அடிதோறும் அடிதோறும் ப்ரபத்தி பண்ணுவர்கள்.

இப்ரபத்தி தன்னை ‘அஹமஸ்ம்யபராதாநாமாலயோऽகிஞ்சநோऽ கதி:-த்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்தனா மதி:- ஶரணாகதிரித்யுக்தா ஸா தேவேஸ்மின் ப்ரயுஜ்யதாம்’ என்று ருத்ரன் அதிகாரி ஸ்வரூபத்தையும் ப்ரபத்தி லக்ஷணத்தையும், இத்தை ஸர்வேஶ்வரன் பக்கலிலே ப்ரயோகிப்பானென்று சொன்னானிறே.

‘அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிஶ்வாஸபூர்வகம் – ததேகோபாய தாயாச்ஞா ப்ரபத்தி: ஶரணாகதி:’ என்றிவ்விரண்டு ஶ்லோகமும் ப்ரபத்தியிநுடைய லக்ஷணவாக்யம்.

‘ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம், ரக்ஷிஷ்யதீதி விஶ்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா. ஆத்ம நிக்ஷேப கார்பண்யே ஷட்விதா ஶரணாகதி:’ என்று இது ப்ரபத்திக்கு அங்கம். ப்ரபந்நனான பின்பு பிறக்கும் ஸம்பாவித ஸ்வபாவங்கள் சொல்லிற்று.

ஶ்ருதியும், இத்தை உபப்ரும்ஹணம் பண்ணின ருஷிகளுமித்தை ஆதரித்து, அவர்கள் ஆதரிக்குமளவன்றிக்கே ‘தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாஶ்ச’ என்று ஆப்தபரிக்ரஹமே ப்ரபலப்ரமாணம், வேதம், இவர்கள் பரிக்ரஹத்துக்கு ஸங்கோசித்துப் போமித்தனை என்கையாலே இதுக்கு ஆப்த பரிக்ரஹம் ப்ரபலம்.

எங்ஙனே என்னில் – தர்ம புத்ரன் ‘ஶ்ருத்வா தர்மானஶேஷேண பாவனானி ச ஸர்வஶ:’ என்று புருஷார்த்த ஸாதநங்களையும் மற்றும் பரம பாவநமானவற்றையும் ஶ்ரீபீஷ்மரோடே அதிகரித்து ‘புநரேவாப்யபாஷத’ என்று திரியிட்டுக்கேட்டான். கீழ் ஸர்வத்தையும் அதிகரித்தானாகில்  திரியிட்டுக் கேட்டதுக்குக் கருத்தெனென்னென்றில், நான் ஶாஸ்த்ர கம்ய ஜ்ஞாநத்தாலே அதிகரித்தது புருஷார்த்தமாகமாட்டாதென்று.

‘கோதர்மஸ்ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ என்று கீழ்ச் சொன்ன தர்மங்களெல்லாவற்றிலும் வைத்துக்கொண்டு உனக்கபிமதமாக நிர்ணயித்திருக்க வேணுமேதென்ன ‘ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோऽதிக தமோ மத:’ என்று தர்மங்களில் வைத்துகொண்டு அதிகமாக. நினைத்திருக்கும் அர்த்தம் இதுவே காண் என்று சொன்னான்.

அசலையான பக்தியாலே ஆஶ்ரயிக்கப்பாராயென்று உபதேஶிக்கையாலே ஆசார்யருசி பரிக்ருஹீதமே ப்ரபல ப்ரமாணம்.

ஸ்வஶக்தியால் பிறந்த ஜ்ஞாநமின்றிக்கே நிர்ஹேதுக பகவத்ப்ரஸாத லப்த ஜ்ஞாநமுடையராய் நமக்கு பரமாசார்யர்களான ஆழ்வார்களும் ஸம்ஸார பயபீதராய் ப்ரபத்தியைப்பண்ணுவது, ப்ராப்யத்தில் த்வரையாலே ப்ரபத்தியைப் பண்ணுவதாகா நிற்பார்கள்.

எங்ஙனே என்னில் ‘நெறி வாசல் தானேயாய் நின்றானை’ என்றும் ‘மாலடியே கைதொழுவான்’ என்றும் ‘அம்பர மொன்றில்லையடை’ என்றும் – ‘தன்னிலங்கை வைத்தான் ஶரண்’ என்றும் பொய்கையாழ்வார் ‘பனிமலராளங்க வலங்கொண்டானடி-பைங்கமலமேந்திப்பணிந்தேன்’ என்றும் ’அவரிவரென்றில்லை யரவணையான் பாதமெவர்‌ வணங்கி’ என்றும், ‘அன்றிடர் அடுக்கவாழியான் பாதம்பணிந்தன்றே’ என்றும் பூதத்தார்‌ ’அரணாம் நமக்கு என்றும் ஆழிவலவன்’ என்றும் ‘சக்கரத்தான் தாள் முதலே நங்கட்டுச்சார்வு’ என்றும்‌ பேயார்‌ ‘பழகி யான் தாளே பணிமின்’ என்றும் ‘அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சலென்ன வேண்டுமே’ என்றும், திருமழிசைப்பிரான், ‘திருபொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்’ என்றும் ‘உன்னருள் புரிந்திருந்து’ என்றும்‌ பெரியாழ்வார் “நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்றும் ‘வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழடி வீழ்ச்சி விண்ணப்பம்’ என்றும் நாச்சியார், ‘திருக்கமல பாதம் வந்து’ என்று திருப்பாணாழ்வார்‌, ‘கற்றினம் மேய்த்தவெந்தை  கழலிணைபணிமின்’ என்றும் ‘சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான்’ என்றும் ’உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி’ என்றும் ஶ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார்’, ‘உன் ஶரணல்லால் ஶரணில்லை’ என்றும் ’உன் பற்றல்லால் பற்றில்லை’ என்றும் உன் இணையடியே யடையலல்லால்’ என்றும்: ’மற்றாரும் பற்றிலேனென்றவனைத் தாள் நயந்தகொற்ற வேற்றானை’ என்றும் குலஶேகரப்பெருமாள், ’நலம் புரிந்திறைஞ்சும் திருவடியடைந்தேன்’ என்றும், ’நாயேன் வந்தடைந்தேன்’ என்றும், ‘ஆற்றேன் வந்தடைந்தேன்’ என்றும், ‘உலகமளந்த பொன்னடியே யடைந்துய்தேன்’ என்றும், “கண்ணனே களைகண் நீயே’ என்றும், “நின்னடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே’ என்றும் திரு மங்கையாழ்வார்‌, ‘அலர்‌மேல் மங்கையுறை மார்‌பா’ என்றும்’, ‘புகலொன்றில்லா வடியேனடிக்கீழ் அமர்‌ந்து புகுந்தேனே’ என்றும், ‘நாகணை மிசை நம்பிரான் ஶரணே ஶரண் நமக்கு’ என்றும், ‘முகில்‌ வண்ணனடியை யடைந்தருள் சூடியுய்ந்தவன் ‘ – என்றும்’, ‘கழல்‌கள்  அவையே ஶரணாகக்கொண்ட குருகூர் ஶடஹோபன்’ என்றும், ‘ஆறெனக்கு நின் பாதமே ஶரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும், ‘உன்னாலல்லால் யாவராலுமொன்றும் குறைவேண்டேன்’ என்றும், ‘ஆத்தன்றாமரையடியன்றி மற்றிலமரணே’ என்றும், “ஆவிக்கோர்‌ பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்’ என்றும் நம்மாழ்வார், ‘மேவினேனவன் பொன்னடி’ என்றும், ‘அன்பன் தன்னை அடைந்தவர்‌கட்கெல்லாம் அன்பன்” என்றும் ஶ்ரீமதுரகவிகள்.

ஆக, இவ்வாழ்வார்களைப் பின்சென்ற ஆளவந்தாரும் ‘ந தர்ம நிஷ்டோஸ்மி, அகிஞ்சநோऽநந்ய கதி:, தவசரணயோ:” என்று, ‘அஶரண்யஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்யே’ என்றும், ‘லோகவிக்ராந்த சரணௌ ஶரணம் தே வ்ரஜம் விபோ” என்றும் எம்பெருமானாரும்.

ஆக, இப்படி வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆசார்யர்களும், ‘லோகே ஸத்த்வம் பரோதர்ம:’ என்றும் ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’  என்றும், ‘க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்’ என்றும் விரோதி நிவ்ருத்தி பூர்வகமான நிரதிஶய புருஷார்த்தமான கைங்கர்யத்தை பெற்று உஜ்ஜீவிக்கைக்கு இதுவல்லது ஸித்தோபாயமில்லை, ஆதலாலிப்படி ப்ராமாணிகனான சேதநனுக்கு ப்ரபத்தியை பற்றவடுக்கு மென்றறுதியிட்டார்கள்.

நம்மாசார்யர்‌கள் இங்ஙனே இருப்ப தொரு நிர்பந்தமுண்டு.

லோகயாத்ரையில் பரிமாற்றங்களடைய வேதயாத்ரையில் சேர்‌த்து அநுஸந்தி ப்பதொன்றுண்டு.

அதெங்ஙனே என்னில், பாதிரிக்குடியிலே, பட்டர் ஒருவேடனகத்திலே வர்ஷத்துக்கொதுங்கி யெழுந்தருளியிருக்கச்செய்தே வேடனைப்பார்த்து, இவ்விடங்களிலே விஶேஷமென்னென்று கேட்டருள, இங்கே புதுசாக ஒரு விஶேஷம் கண்டேன், காட்டிலொரு ம்ருகம் பிடிக்கப்போனேன், அங்கே முயல் குட்டியைப்பிடித்து கூட்டிலே விட்டேன்; இதினுடைய தாய் பலகாலம் துடர்ந்துவர அத்தைப்பின் சாய்ந்து உள் வாசலளவும் வந்து புகுரப்புக்கவாறே முன்னே வந்து தண்டனிட்டுக் கிடந்தது. பின்னை யித்தை விட்டேனென்று அவ்விஶேஷத்தை விண்ணப்பம் செய்தான். இத்தைக்கேட்டு பட்டரும் வித்தராயருளிச்செய்கிறார்; ‘மாமேகம் ஶரணம் வ்ரஜ’ என்கிற  ஜ்ஞாநம் முயலுக்கில்லை. ‘அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய:’ என்கிற  ஜ்ஞாநம் வேடனுக்கில்லை; இவையன்றிக்கே இருக்க காதுகனாயிருக்கிற இவனிது செய்யக்கடவனானால், பரம சேதநனானவன் பக்கலிலே ப்ரபத்தியை உபயோகித்தால் என்னாகக்கடவனோ வென்று வித்தரானார்.

தானும் தன்னுடைய ஸ்த்ரீயுமாக ஒருகாட்டிலே இருக்க நாம் சென்றுபுக்கவாரே துணுக்கென்றெழுந்திருந்து பஹுமானங்களைப் பண்ணிச்செய்தானிவன்.  நம் வாசியறிந்து செய்தானொருவனல்லன் இவன்,  ஜந்மமிது, பரஹிம்ஸை பண்ணி ஜீவிக்கும் வ்ருத்தம், இப்படி இருக்க இவன் நம்மைக் கொண்டாடிற்றுத் தானபிமானித்த நிழலுக்குள்ளொதுங்கினோ மென்றிறே. இனி பரம சேதநனாய் பரம க்ருபாளுவான ஸர்வேஶ்வரனபிமானித்துகந்தருளின திவ்யதேஶங்களைப் பற்றி வர்த்த்திக்கிற ஶ்ரீவைஷ்ணவர்‌களளவிலே இவனென்னினைத்திருக்கிறானோ வென்று வித்தரானார்.

மற்றைநாளையில் ப்ரயாணத்திலே தூரவெழுந்தருளின ஆயாஸத்தாலே அமுதுசெய்து ஜீயர் மடியிலே கண் வளர்ந்தருளினார், அப்போது விடிந்தது, கேட்டேன், என்னை எழுப்புற்றிலீர், கால்  நடையே வழிநடந்த விடாயை மதியாதே என்பக்கலிலே இத்தனை பரிவராயிருந்த விடம் உமக்கு நாம் சொன்ன த்வயத்தை விஶ்வஸித்த மனமிறே என்றருளிச்செய்தார்.

பட்டர்‌ தாம் எம்பாரோடே ரஹஸ்யம் கேட்டாராயிறே  இருப்பது.  இப்படி இருக்கச்செய்தே எம்பெருமானார் இவர் பதஸ்தராகிறபோது இவர் கையிலே புஸ்தகத்தை கொடுத்துச் செவியிலே த்வயத்தைச் சொல்லி பெருமாள் திருவடிகளிலே கொண்டு புக்கு “நான் இவருக்கு வேண்டும் வித்தையைக் கொடுத்தேன். நீரிவருக்கு வேணுமாயுஸ்ஸை கொடுத்தருளவேண்டும்” என்று பெருமாள் திருவடிகளிலே காட்டிகொடுத்து த்வயத்தைச் சொல்லி ஶரணம் புக்கார்‌.

சிறியாத்தான் எம்பார்‌ ஶ்ரீபாதத்திலே ஶ்ரீபாஷ்யம் வாஶித்துச்சமைந்து போகக்காலமானவாறே தீர்த்தமாடி ஈரப்புடைவையோடே தண்டனிட்டுக் கிடந்தான்: “இது என் தாஶரதி, எழுந்திராய் உனக்கு அபேக்ஷை என்?” என்று கேட்டருள, “ம்லேச்ச தேஶத்தேறப்போகப் புகாநின்றேன், அங்கு நமக்குத் தஞ்சமாக ஒருவார்த்தை கேட்கலாவாரில்லை, திருவுள்ளத்தில் ப்ரியதமமாகவும் ஹிததமவாகவும் அறுதியிட்டிருக்கு ம் அர்த்தத்தை எனக்கருளிச்செய்ய வேணுமென்ன, (எம்பெருமானார்‌ ஶ்ரீபாதமே, பெரியபிராட்டியார்‌ ஶ்ரீபாதமே, பெருமாள் ஶ்ரீபாதமே) த்வயத்தில் அறுதியிட்டிருக்கும் அர்த்தத்துக்கு மேற்பட ஶ்ரேஷ்டமாயிருப்பதொரு அர்த்தமில்லை என்றருளிச்செய்தார்.

சிறியாத்தானை அழைத்து “திருக்கண்ணபுரத்திலே ஆய்ச்சி ஶ்ரீபாதத்தேறப்போய் வரவல்லையே, உனக்குக் கூலி கொடுக்கும்” என்றருளிச்செய்தார். அப்படியே அவ்வருகேபோய் ஆய்ச்சி ஶ்ரீபாதத்திலே ஸேவித்து விடைகொண்டு போரப் புக்கவாறே சிறியாத்தானுக்கருளிசெய்த வார்த்தை- “எம்பெருமான் நாராயணனாயிருக்க அநாதிகாலம் அவ்வுறவை யறுத்துக் கொண்டிருந்த சேதநனை அவன் திருவடிகளிலே பிணைக்கைக்கு பற்றாசு  பிராட்டியுண்டென்று நிர்பரனாயிரு” என்றருளிச்செய்தார். இத்தை கேட்டருளி எம்பார் “தட்டுகூலிக்கு மவ்வருகே போய்த்து’ என்றருளிச் செய்தார். இப்படியே இருப்பதொரு அர்த்தமில்லையாகில் ஸம்ஸாரி சேதநனுக்குள்ளதடைய எம்பெருமானுடைய நிக்ரஹத்துக்கு ஹேதுக்களாய்கிடக்க எம்பெருமானை ப்ராபிக்கவேறொரு பொருளில்லை என்றருளிச்செய்தார்‌.

பெற்றி ஶ்ரீபாதத்திலே ஆஶ்ரயித்தாளொரு கொற்றியம்மைக்கு குருபரம்பரை முன்னாக த்வயத்தை அருளிச்செய்துவிட்டார், அவள் சிறிதுநாள் கழித்தவாரே எனக்கு பிராட்டி திருமந்த்ரத்தையருளிச்செய்யவேணுமென்று கேட்க, இவளுக்கினி பிராட்டி திருமந்த்ரத்தைச் சொல்லுவோமாகில், இன்னுமொரு மந்த்ரத்தைச் சொல்லென்று இத்தை அனாதரித்துப் போமென்று பார்த்து, எல்லா மந்த்ரங்களிலுள்ளதெல்லாம் உண்டென்னும் நிஷ்டை பிறக்கைக்காக “பிராட்டிதிருமந்த்ரமும் உனக்கு சொன்னத்வயத்தில் அந்தர்கதம். அங்கே சொன்னோம் காண்” என்றருளிச்செய்தார்‌. பிராட்டி திருமந்த்ரத்தை ஜபித்து, கொள்ளும் பலத்தை இது தன்னையே ஜபித்துக்கொள்ளென்று அருளிச்செய்தார்.

வீராணத்து அருளாளப்பெருமாள் எம்பெருமானார் நஞ்ஜீயர் ஶ்ரீபாதத்திலே ஆஶ்ரயிக்கைக்கு நம்பிள்ளையை புருஷகாரமாக கொண்டுவந்தார்‌.  இவனைக்காட்டிக்கொடுத்து இவனுக்கு ஹிதத்தையருளிச்செய்ய வேணுமென்ன ஸம்ஸாரிகளிலொருவருக்கும் ஹிதம் சொல்லலாகாதென்று ஸ்வப்நம் கண்டேன். அவனுக்கு நீர் சொல்லும்” என்று அருளிச்செய்தார். “ஶ்ரீபாதத்திலே ஆஶ்ரயிக்கவந்தவனுக்கு, எழுந்தருளி இருக்கச்செய்தே நான் சொல்லுகையாவதென்? அவனுக்கு ஶ்ரீகோபால மந்த்ரத்தையாகிலுமருளிச் செய்யலாகாதோ? ஶ்ரீபாதத்திலே ஆஶ்ரயித்தானாய் போந்தபடி”  என்று விண்ணப்பம் செய்ய, ஆனால் அப்படிச் செய்கிறோமென்று ஆயர்‌ தேவன் திருவடிகளிலே கொண்டு குரு பரம்பரை முன்னாக த்வயத்தையருளிச்செய்தார். இத்தைக்கண்டு “அருளிச்செய்யப் புக்கதொன்று,  தலைக்கட்டிற்று ஒன்றாயிருந்தது”  என்ன, “என்னையொழியப்போமாகில் போகிறதென்றிருந்தேன், இனித்தான் சொல்லவேண்டின பின்பு நான்‌ விஶ்வஸித்திருக்குமதொழிய வேறொன்றைச் சொன்னோமாகில் அவனை விப்ரலம்பித்தேனாகாதோ என்றருளிச்  செய்தார்.

நம்பிள்ளை நஞ்ஜீயரை “அல்லாத தர்ஶநங்களுக்கு அதிகாரிகளும் போரவுண்டாய் ப்ரமாணங்களும் போரவுண்டாயிரா நின்றது, நம் தர்ஶநத்துக்கு ப்ரமாணங்களும் சுருங்கி அதிகாரிகளும் சுருங்கி இருப்பானென்? என்று கேட்க, அதிகாரிகளன்றியிலேயொழிந்தது ஸம்ஸாரிகள் ஜ்ஞராகையாலே. எங்ஙனே என்னில், ஜ்யோதிஷ்டோமாதிகளைப் பண்ணி ஸ்வர்கத்தை லபிப்பானென்று ஶாஸ்த்ரங்கள் சொன்னால் அவ்வளவும் போகாதே, ஜ்யோதிஷ்டோமாதிகள் பண்ணி புத்ர பஶ்வாந்நாதிகளைப் புருஷார்த்தமாகப் பற்றி போரா நின்றார்கள். ஸ்வர்கம் தான் நரகஸ்தாநமென்னும்படியாயிருக்கிற அபுநராவ்ருத்தி லக்ஷணமோக்ஷத்துக்கு அதிகாரமுண்டாகப் போகிறதோவென்று அருளிச்செய்தார். ப்ரபத்திக்கு ப்ரமாணாபேக்ஷையில்லை என்றிருப்பன். ‘யஸ்ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித், ஆநந்தோ ப்ரஹ்ம, ஸமஸ்த கல்யாண குணாத்மகோऽஸௌ’ என்கிற  நிர்தோஷ ப்ரமாணத்தாலே அவன் ஸர்வஜ்ஞன், ஸர்வஶக்தன், ப்ராப்தன், ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்னுமிடம் ப்ரஸித்தம் -நாமஜ்ஞரஶக்தரென்னுமிடமும் நமக்கே தெரியும் ; ஆகையாலே அமிழ்ந்துமவன் நெடியவன் கையைப்பிடிக்கச் சொல்லவேணுமோ, தன்னாபத்தே உபதேஶிக்குமென்று அருளிச்செய்தார்.

எம்பெருமானார்க்கு இங்ஙனே இருப்பதொரு நிர்பந்தம் உண்டு, எங்ஙனே என்னில், கண்ணழிவற்றானொரு வைஷ்ணவனைக் கண்டாலவனுக்கு ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஓருருத்வயத்தை அருளிச்செய்வர். பிறருடைய துர்கதியைக் கண்டால் திருவுள்ளத்தாலிரங்கி யருளிச்செய்வதும்  த்வயத்தை. பெரியகோயில் நாராயணன் மகனை ஏகாயனரோடே கூடியிருக்கக்கண்டார், அவனை கையைப்பிடித்துக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே புக்கு ‘பாலனாகையாலே உனக்கொரு ப்ரமாணங்களால் ஸ்தாபிக்கப் போகாது;  நான் ஸகலவேத ஶாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இவ்வாத்மாவுக்கு தஞ்சம் த்வயத்துக்கவ்வருகு கண்டிலேன். நீயும் அத்தை விஶ்வஸித்திரு” என்று ஶ்ரீஶடகோபனை யெடுத்துச் சூழறுத்துக் கொடுத்தார். அவருமன்று தொடங்கி த்வய நிஷ்டராய்ப் போனார்.

எம்பெருமானார் வெள்ளை சாத்திப் போஶல ராஜ்யத்தேற எழுந்தருளி திருநாராயண புரத்திலே எழுந்தருளி இருக்கச்செய்தே அம்மங்கியம்மாள், பிறிவாற்றாமையாலே திருமேனியும் வெளுத்து வைத்யர்களும் பரிஹாரம் பண்ணவென்றுபக்ரமித்தவாறே  “நிதானமறிந்து பரிஹரிக்கவேண்டாவோ; எம்பெருமானார் பிறிவாற்றாமையாலே வந்தது, அவர் திருவடிகளிலே கொண்டுபோய் விடுங்கோள்” என்றார். அங்கேற நடந்தவிடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே அந்தவிடத்திலே எம்பெருமானாரைக்கண்டு அரவணைத்துத் தழுவிக்கொண்டார்.  உடம்பில் ஶோகம் போய்த்து. என்னைப் பிரிந்து உடம்பு வெளுத்து இத்தனை தூரம் வந்தவருக்கு நாம் பண்ணுமுபகாரம் என்னென்று பார்த்தருளி முன்பு சொன்ன த்வயத்துக்கு மேற்படக் கண்டிலோம் அது தன்னையே இன்னம் கேட்டலாகாதோவென்று ஓருருத்வயத்தை அருளிச்செய்தார்.

ஆழ்வான் பரம பதத்தேறப் போகைக்கு பெருமாள் பாடே வீடு பெற்றுக் கூட்டத்திலே வந்திருக்கச்செய்தே “இனி பெருமாளை நம்மால் விலக்கப்போகாது. இனி அந்திம காலத்திலே என்னையழைத்து வாருங்கோள்” என்று அந்திம ஸமயத்திலே எழுந்தருளி ஆழ்வானுக்குச்செவியில்‌ த்வயத்தை அருளிச்செய்தார்‌. அருகிருந்த முதலிகள் இஸ்ஸமயத்திலே த்வயத்தைச் சொல்ல வேணுமோவென்று கேட்க, “ஆழ்வான் ப்ரக்ருதியறியீர்களோ, இத்தஶையிலே த்வயத்தைச் சொன்னால் கர்பூர நிகரத்தை நாவிலே யிட்டாப்போலே இருக்கும் காண்” என்றருளிச்செய்தார்.

எம்பெருமானார் அந்திம தஶையிலே முதலிகளடையத் திரண்டிருந்து “எங்களுக்குத் தஞ்சமாய்த் திருவுள்ளத்துக்கு ப்ரியமாயிருப்ப தொன்றை நாங்கள்  விஶ்வஸித்திருக்கும்படி அருளிச்செய்யவேணு” மென்று கேட்க, “எல்லாரும் பாஷ்யத்திலே வாஸநை பண்ணுகையே நமக்கு ப்ரியம், அதுக்கு மாட்டாதார் திருநந்தவனம் செய்து திருப்படிதாமம் பறித்துத் திருமாலை எடுக்கையும் ப்ரியதரமாயிருக்கும்; அதெல்லாருக்குமொக்கச் செய்யப்போகாது, த்வயத்திலே வாஸநை பண்ணி விஶ்வஸித்திருக்கை மிகவும் ப்ரியதமமாயிருக்கும்” என்று அருளிசெய்தார்.

அனந்தாழ்வான் போஶல ராஜ்யத்திலே எழுந்தருளினபோது ஜீயருடைய பூர்வாஶ்ரமத்தில் ஐஶ்வர்யமும் இவர் செருக்கும் இருக்கும்படி அநுஸந்தித்தும் போந்தானாய் ஜீயரிவற்றையடையவிட்டு ஸந்யஸித்தெழுந்தருளின போது அனந்தாழ்வான் கண்டு உன்னுடைய மார்தவமும் உன்னுடைய செருக்கும் கிடக்க ஸந்யஸித்தாயென்றருளிச் செய்து  இனிசெய்யலாவதில்லையிறே என்று குளிரநோக்கி திருவேங்கமுடையானே இவனை பார்த்தருளவேணு மென்று வேண்டிக்கொண்டு, “திருமந்த்ரத்திலே பிறந்து, த்வயத்திலே வள‌ர்ந்து த்வயநிஷ்டனாவாயென்று வாழ்த்தினான். “கோயிலேறப் போனாலொரு மடமும் கார்யமுமாகக் கடவது, அப்போது பட்டரை த்ருஷ்டா த்ருஷ்டங்களி ரண்டுக்கும் கடவரென்று நினைத்துப்போவதொரு போக்குண்டு; அதிலே ஒன்றை, பட்டரைக் கொண்டு கொள்வது,  ஒன்றை பெருமாளைக் கொண்டு கொள்வது. அங்ஙனே  செய்யாதபோது நீரொரு கோடி த்ரவ்யத்தை பட்டர் கையிலே கொடுத்தாலு மவர் செருக்காலே அரைக்ஷணத்திலே யழித்து விடுவர், உம்முடைய கார்யத்திலாராயாத போது நீர் பட்டரை வெறுப்புதிராகிலும் உமக்கு விநாஶமாம். பெருமாளோடே வெறுத்தபோது பட்டரைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்” என்று பணித்தான்.

சிறியாண்டான். அம்மாள் அந்திமதஶையிலே பணித்தவார்த்தை, “திருவேங்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை அநுஸந்தித்தானாகில் எனக்கு பழைய நரகம் போராது. இன்னமும் சில நரகம் ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்றிரானின்றேன், என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை அநுஸந்தித்தானாகிலெனக்குப் பழைய திருநாடு போராது, இன்னமும் சில திருநாடு ஸ்ருஷ்டிக்க வேணுமென்றிரானின்றேன்.

மருதூர் நம்பி அந்திம தஶையிலே தம்முடைய ஊரிலே எம்பெருமானாரெழுந்தருளி இருக்கச்செய்தே விண்ணப்பம் செய்த வார்த்தை, “மூன்று ஜந்மம் திருவடிகளிலே ப்ராதிகூல்யம் பண்ணின ஶிஶுபாலன் திருவடிகளைப் பெறாதொழிகை வழக்கோ” வென்ன அப்போதே திருவடிகளை பெற்றார்.

நம்பி திருவழுதி வளநாடு தாஸர்க்கும் பிள்ளை திருநறையூரரையர்க்கும் பட்டரருளிச்செய்த வார்த்தை, ”பொய்யே யாகிலும் அவனுகந்தருளினதொரு கோயிலிலே புக்குப்புறப்பட்டுத் திரியவே அந்திம தஶையிலே எம்பெருமான் முகம் காட்டும்; அவன் முகம் காட்டவே இவ்வாத்மா திருந்துமென்று எம்பெருமானுக்கில்லாததுமாய் இவ்வாத்மாவுக்குள்ளதுமாய் அவனைப் பெறுகைக்குப் பெருவிலையனுமாயிருக்குமுபாயம் அஞ்சலி’ என்றருளிச் செய்தார், கருட முத்ரைக்கு பாம்பு அகப்படுமாப்போலே ஸர்வஶக்திகனான ஸர்வேஶ்வரனும், ‘அஞ்சலி: பரமாமுத்ரா” என்கிறபடியே அகப்படும்.

ஆக, இப்படி ஆசார்யருசி பரிக்ருஹீதமாயாய்த்திருப்பது த்வயம்; இதினுடைய ஆநுபூர்வியைச் சொல்லி அதுக்குள்ளீடான அர்த்தத்தைச் சொல்லி விடவமையாதோ? இவ்விதிஹாஸங்களெல்லாம் திரள நீர் சொன்னதுக்கு ப்ரயோஜநமென்னென்னில், புறம்புள்ள ப்ரமாணங்கள் கிடக்கச்செய்தே இத்தனையும் ஆப்தர்‌ பரிக்ரஹித்துப் போந்த தொன்றாகாதே என்று கேட்கிறவனுடைய நெஞ்சிலே இதினுடைய வைபவம் பட்டு ருசிவிஶ்வாஸங்களுக்குறுப்பாக.

திருக்கண்ணபுரத்திலே செருகவம்மானெல்லா வபராதங்களையும் “க்ஷமஸ்வ” என்று வேண்டிக்கொள்வதும்  செய்தார்‌. க்ஷமித்தோமென்று பகவதுக்தியுமுண்டாயிருந்தது.

‘நக்ஷமாமி கதாசந’ என்று என்னடியார் திறத்தில் அபராதம் பண்ணினவர்‌களை ஒருக்காலும் பொறேனென்றுண்டாயிருந்தது. இது  சேருகிறபடி என்னென்று கேட்க ஶ்ரீவைஷ்ணவர்‌கள் திறத்திலே அபசாரத்தைப் பண்ணிவைத்துத் தான் முன்னின்று ஶரணம் புகுமன்று பொறேனென்றது. புருஷகாரத்தை முன்னிட்டுக்  கொண்டு ஶரணம் புகுருகையாலே இவர்‌க்கு, “க்ஷமஸ்வ” என்னத் தட்டில்லை, அவனுக்கும் பொறுத்தோமென்னத் தட்டில்லை. ஆகையாலே அஸஹ்யாபசாரத்துக்குமிதுவே பரிஹாரம். ப்ரஜைபண்ணின குற்றம் தாய் பொறுத்தால்  பின்னை யாராய் வாரில்லை இறே.

பக்திநிஷ்டனுக்கு கர்மாவஸாநத்திலே மோக்ஷமாவானேன் ப்ரபந்நனுக்கு ஶரீராவஸாநத்திலே மோக்ஷமாவானேன்?  ‘தஸ்யதாவதேவ சிரம்’ அவனுக்கவ்வளவே விளம்பம் ‘அத ஸம்பத்ஸ்யே”  அநந்தரம் ஸம்பந்நனாகக் கடவன் என்கிற  ஶ்ருதி இருவருக்கும் பொதுவன்றோ; கர்மவஸநே  மோக்ஷமென்னவுமாம், ஶரீராவஸநே மோக்ஷமென்னவுமாம் என்று இத்தை நியமிப்பாராரென்ன, பக்திநிஷ்டநுக்கிருக்கவிருக்க உபாஸநம் பக்வமாகையாலே பலம் உண்டு, ப்ரபந்நனுக்கு கர்தவ்யமொன்றில்லாமையாலும், ஈஶ்வரனுக்கு அஜ்ஞாநா ஶக்திகளில்லாமையாலும் இங்கொரு ப்ரயோஜந மில்லாமையாலும், ப்ரபந்நனுக்கு ஶரீராவஸாநத்திலே மோக்ஷம். ஆனால் ஜ்ஞாநம் பிறந்தபோதே ஶரீரம் போகாதொழிவானென்னென்னில், பகவத்விஷயத்திலே  தீவ்ர ஸம்ஸர்கமில்லாமையாலே இவனுக்குள்ள மாத்ரந்தான் கர்ம க்ஷயம் பிறந்தவாரே ஶரீரம் விடுமாகில் அநந்தரம் நரக மாயிருக்கு மாகிலத்தைத்தப்பி எம்பெருமானைப் பெறலாயிருக்குமாகில், பெற்றாலாகாதோ வென்னென்றே இவனிருப்பது. இப்போதே ப்ரக்ருதியை விடவேணுமென்னும்‌ த்வரை ப்ரபத்தி காலத்தில் பிறவாமையாலும் இவனிருந்தால் பின்னையும்  சில அநுகூலரைக் கிடைக்குமென்று ஈஶ்வரனுக்குமிருக்கையாலே ப்ரியமாயிருக்கும். ஆனால் இருக்கும் தனை நாளும் ஸுகோத்தரமாக வையாதொழிவானென்னென்னில், து:கோத்தரமாயிருக்கச் செய்தேயு மித்தை விடமாட்டாதவன் இதிலே அல்ப ஸுகம்காணுமாகில் பின்னையவ்வருகு  நினையானே. அவனுக்கு ஹிதமே பார்க்குமவனாகையாலே உபாஸகனுக்கு இருக்க விருக்க விதிலே உபாஸநம் பக்வமாகிற வோபாதியிவனுக்கு மிருக்க விருக்க இதிலே ருசி பிறக்கைக்குடலாம்;  நம்மையே உபாயமாகப் பற்றினானாகில் இனிமேலொரு போகியான வநுபவம் கொடுக்க விருந்தோமாகிலினி ஶரீரம் விடுந்தனையும் கர்மாநுகுணமாக ஜீவிக்கிறானென்று உதாஸீநனாயிருக்கும்.

நஞ்ஜீயர் உபாஸகனுக்குச்சொன்ன கர்மமடைய ப்ரபந்நனுக்கு தேஹயாத்ராஶேஷமாக ரஹஸ்யத்திலே யுண்டென்றருளி ச்செய்வர். திருமந்த்ரத்தை யிடைக்கைப் பத்து கொண்டெண்ணுகை கர்மயோகம், அதினுடைய அர்த்தாநுஸந்தாநம் பண்ணுகை ஜ்ஞாநயோகம், அவர்த்தமிருக்கை பக்தியோகம், பக்திபரவஶராய் எம்பெருமானே நிர்வாஹக னென்று துணிகை ப்ரபத்தி.

ப்ரபந்நர்‌தான் த்ரிவிதராயிறே இருப்பது. பக்திபரவஶராய் ஸாதனானுஷ்டான க்ஷமரல்லாமையாலே ஶரணம் புகுவாரும் ஸ்வரூப ஜ்ஞாநத்தாலே அவனை பற்றியிருப்பாரும், இவை யிரண்டுமொழியத் தந்தாமுடைய அஜ்ஞாநாஶக்திகளையும் அவனுடைய ஜ்ஞாநஶக்த்யாதிகளையும் முன்னிட்டுகொண்டு ஶரணம் புகுவாருமாய் த்ரிவிதராயிருப்பர். உபாயம் எம்பெருமானே. அங்கமவனுடைய ஜ்ஞாநஶக்த்யாதி குணங்கள்.

திருமந்த்ரத்தை யொழிந்த ஶாஸ்த்ரங்களடைய சேதநநுடைய ஜ்ஞாநஶக்த்யாதிகள் கொண்டெம்பெருமானை பெறலாமென்றது.  திருமந்த்ரமிவனுடைய பாரதந்த்ர்ய ஜ்ஞாநத்தாலே பெறலாமென்றது, சரம ஶ்லோகமிவனுடைய பாரதந்த்ர்யமும் விலக்காமைக்குறுப்பா மித்தனை; பகவத்ப்ரபத்தியே சரமமான உபாயமென்கிறது.  த்வயத்திலிவனுக்கு விடச்சொன்னவர்த்தமும்  அழகியதாகப் பற்றவும் போகாது.  நாமோ அஜ்ஞர் அஶக்தர் அப்ராபர்;  ஈஶ்வரன் ஸ்வதந்த்ரன், நாமென் செய்யக்கடவோமென்று அஞ்சுவார்க்கு அஞ்சவேண்டாதபடி தோஷமே பச்சையாக, நின்ற நிலையிலே, பெறலாமென்கிறது.

ஆகையாலே க்ரியையாலும் ஜ்ஞாநத்தாலும் துணிவினாலும் பெறவேணும், இதில் ருசிமாத்ரமுடையார்க்கு பாஶுர மாத்ரத்தாலே பெறலாமென்கிறது த்வயம். “மாதவனென்றதே கொண்டு’ என்றும் ‘ஶரணமித்யபி வாசமுதீரயந்’ என்றும் சொல்லக்கடவதிறே.

வாச்யங்களில் ஸர்வேஶ்வரனுக்கு அவ்வருகில்லாதாப்போலே உபாதேயமான வாசக ஶப்தங்களில் த்வயத்துக்கவருகில்லை. ‘மாசதிரிது பெற்று  நம்முடை வாழ்வு வாய்க்கின்ற  வா’ என்னக்கடவதிறே. தன்னாலே எம்பெருமானைப் பெறப்பார்க்கை இளிம்பு, தன்னைப் பொகட்டு எம்பெருமானாலே எம்பெருமானைப் பெறபார்‌க்க்கை சதிர்.  இவனுடைய வபராதமும் ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யமும் ஜீவியாதபடி பண்ணவல்ல பெரியபிராட்டியார் ஸம்பந்தம் கொண்டே எம்பெருமானைப் பெறப்பார்க்கை மாசதிர்‌.

ஜ்ஞாந கர்மானுக்ருஹீதையான பக்தியோகத்தை முமுக்ஷுவுக்கு பகவத்ப்ராப்தி ஸாதநமென்று ஶாஸ்த்ரங்கள் சொல்லாநிற்க, நம்மாசார்யர்‌களும் ஆழ்வார்களும், இவர்‌களுக்குள்ள ஜந்மவ்ருத்த ஜ்ஞாநங்களில் குறைந்த ப்ரபந்நராயிருப்பாரும் இப்ரபத்தியை  விஶ்வஸித்து நிர்பரராயிருக்கிறது என்கொண்டென்னில், அநாதிகாலம் பண்ணின புத்திபூர்வாபராதங்களுக்கு ப்ராயஶ்சித்தமாகையாலும், ஸர்வாதிகாரமாகையாலும் ஆசார்யருசி பரிக்ருஹீதமாகையாலும் கர்மாவஸாநம் பார்த்திராதே, தேஹாவஸாநத்திலே மோக்ஷத்தை தருகையாலும் மற்றை யுபாயங்களுக்கு அங்கமாக விதித்து இவ்வுபாயதுக்கு அத்தைத் தவிர்த்துக் கொடுக்கையாலும் விரோதியிநுடைய ப்ராபல்யத்தாலும் தன்னுடைய ரக்ஷணத்தில் தனக்கு ப்ராப்தியில்லாமையாலும் ரக்ஷகனுக்கு ரக்ஷிக்கை முறைமையாகையாலும் நம்மாசார்யர்‌கள் த்வயத்தையே தஞ்சமாக நினைத்திருப்பர்கள்.

எம்பெருமானுடைய க்ருபை உபாயம். க்ருபைக்கடி இவனுடைய கதிஶூந்யதை. இவனுடைய ஸுக்ருதமானாலோவென்னில்  ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டுமப்ரயோஜகம். எங்ஙனே என்னில் ருஷிகளையும் காக விபீஷணாதிகளையும் மொக்க ரக்ஷிக்கையாலே.

திருமம்ந்த்ரம் ப்ராப்ய ப்ரதானம் சரமஶ்லோகம் ப்ராபக ப்ரதானம் த்வயமிவையிரண்டிலும் ருசியுடையாரிவ்விரண்டையும் சேரவநுஸந்திக்கும்படி சொல்லுகிறது. திருமந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறது. ஸ்வரூபாநுரூப மான உபாயவிதாநம் பண்ணுகிறது சரமஶ்லோகம். விஹிதமான உபாயத்தினுடைய அநுஷ்டானம் த்வயம். திருமந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறதென்கிற விடம் ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறதோ பர ஸ்வரூபம் சொல்லுகிறதோவென்னில்,  பரஸ்வரூபம் ஸித்தமாகையாலே அதில் ஸாதிக்கவேண்டுவதில்லை. இவனுடைய ஸ்வரூபமிறே திரோஹிதமாய்க் கிடக்கிறது. அத்திரோதாயகம்போய் நிஷ்க்ருஷ்டவேஷமான ஸ்வரூபமின்னதென்றறிய வேண்டுகையாலே ஆத்மஸ்வரூபம் சொல்லுகிறது.

பர ஸ்வரூபம் சொல்லுகிறதென்றாலும் ஈஶ்வரஸ்வரூபம் ஸம்பாதிக்கிறதொன்றிறே. அறியாதவனுக்குச் சொல்லுகிறதாகையாலே பரஸ்வரூபம் சொல்லுகிற திருமந்த்ரம், ப்ராப்ய ப்ராதாந்யமென்றபோதே ப்ராபகம் அப்ராதாந்யேந உண்டாகக் கடவது. எப்பதத்திலே என்னில் திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலே, ம: என்று ஷஷ்டீ விபக்தி, எனக்கென்கையாலே, அத்தை நகாரம் நிஷேதிக்கையாலே தன்னோடு தனக்குண்டான அந்வயத்தை தவிர்க்கிறது, தான் என்றுவைத்து தன்னோடு தனக்கந்வயமில்லை யென்னுமிடதுக்குக் கருத்தென்னென்னில் தன்னோடு தனக்கந்வயமில்லை யென்றவிடம் ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத பாரதந்த்ர்யத்தை சொன்னபடி. இப்பரதந்த்ர வஸ்துவுக்கு ஸ்வதந்த்ரன் ரக்ஷகனாக வேண்டுகையாலே அவ்வழியாலே ஈஶ்வரனுடைய உபாயபாவம் ஆர்த்தமாகவும் சொல்லிற்றாகக்கடவது. அங்ஙன் அன்றியே  ஸ்தாந ப்ரமாணத்தாலே ஶாப்தமாகவும் சொல்லக்கடவது. ஸ்தாந ப்ரமாணம் கொண்டு ஶாப்தமாதல் ஆர்த்தமாதல் செய்யவேண்டுகையாலே அப்ராதாந்யேந ப்ராபகம். ப்ராப்ய ப்ரதானமே திருமந்த்ரம். திருமந்த்ரம்  ஸ்வரூபஜ்ஞாந வைஶத்யஹேதுவென்ற நுஸந்திக்கக்கடவோம். த்வயம் இவத்தினுடைய அர்தாநுஸந்தாநமென்றஸந்திக்கக்கடவோம்.  சரமஶ்லோகமிவைத்துக்கு ப்ரமாணமென்றநுஸந்திக்கக்கடவோம். திருமந்த்ரம் ஸகலவேத தாத்பர்யமென்றநுஸந்திக்கக்கடவோம். சரமஶ்லோகம் ஶரண்யனுக்கு அபிமதமென்றநுஸந்திக்கக்கடவோம்.  த்வயம் ஆசார்யருசி பரிக்ருஹீதமென்றநுஸந்திக்கக்கடவோம்.

ஆக, எல்லார்க்கு மபிமதலாபத்துக்கும் அநபிமத நிவ்ருத்திக்குமவனே உபாயமாக ஸ்வீகரிக்கை. இது தன்னில் நிஷ்டையிலருமையாலே இது தான் ரஹஸ்யமுமாய் அதிக்ருதாதிகாரமுமாயிருக்கும்.

த்வயமென்று திருநாமமானபடி எங்ஙனே என்னில் உபாயோபேயமான அர்த்தத்வயத்துக்கும் வாசகமான வாக்ய த்வயத்தையுடையதாகையாலே. இத்தால் கர்மாத்யுபாயாபாஸ நிவ்ருத்திபூர்வகமான உபாயத்துக்கும் ஐஶ்வராத்யுபேயாபாஸ நிவ்ருத்திபூர்வகமான உபேயத்துக்கும் தந்த்ரேண புஷ்கலமாகச் சொல்லுகையாலே வாக்யத்வயமென்று திருநாமமாய்த்து. இது தான் நம்மாசார்யர்களுக்கு நித்யாநுஸந்தாந முமாயிருக்கும். இது சொன்னவன் ஆசார்யனாகவுங்கடவன், கேட்டவன் ஶிஷ்யனாகவும் கடவதாயிருப்பதொரு வ்யவஸ்தையுண்டு. இதுத்தான் வாக்யத்வயமென்று மந்த்ரத்வமுண்டு. திருமந்த்ரத்தினுடைய விஶதாநுஸந்தாநமாகையாலே. மந்த்ரத்வமாவது ‘மநனான்மந்த்ர’ மாதல் ‘மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:’ ஆதல்; யாவதாயுஷம் மநநம் பண்ணினாரையும் தரிப்பிக்குமதாகையாலே மந்த்ரத்வமுண்டென்கிறது.

ருஷிச்சந்தோ தேவதைகளில்லை யாவானேனென்று நஞ்சீயரைக் கேட்க இது சொல்லுகிறவர்த்தத்துக்குக் கூட்டுவேண்டுமன்றோ இதுக்குக் கூடவேண்டுவதென்றருளிச்செய்தார் .

த்வயத்திலர்த்தத்தை புத்திபண்ணி ஶப்தாந்தரத்தாலே திருமுன்பே விண்ணப்பம் செய்யலாமோவென்று நஞ்ஜீயரைக் கேட்க, இஶ்ஶப்தம் தன்னாலே விண்ணப்பம் செய்யவேணுமென்றருளிச்செய்தார். இப்பாசுரத்துக்குச் சுரக்குமர்த்தம் வேறொரு பாசுரத்துக்குச் சுரவாது காண் என்று அருளிச்செய்தார்.

அவதாரிகை ஸம்பூர்ணம்

தனி த்வயம்

பூர்வவாக்யம்

            இதுத்தான் ஆறுபதமாய் பத்தர்த்தமநுஸந்தேயமாயிருக்கும். ’ஶ்ரீ மந்நாராயண சரணௌ’ என்று ஸமஸ்த பதம், மேலடைய வ்யஸ்த பதம், நாலிரண்டர்த்தம் சேர்ந்திருக்குமது  ஸமாஸபதம், இது தன்னில் முதல் பதம் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாயிருக்கும். ஶ்ரீ என்றவிடம் ப்ரக்ருதி, மந், என்றவிடம் ப்ரத்யயம்.

            ஶ்ரீ என்கிற  திருநாமத்துக்கு (ஶ்ரிஞ் ஸேவாயாம்) என்கிற தாதுவிலே முடிக்கையாலே ஸேவ்யமானை என்கிறது. ஆராலே ஸேவிக்கப்படும், ஆரை ஸேவிக்குமென்னுமபேக்ஷையிலே ‘ஶ்ரீயத இதி ஶ்ரீ:” என்றும் ‘ஶ்ரயத இதி ஶ்ரீ:’ என்றும்‌ வ்யுத்பத்தியாய்; இதில், ஶ்ரீயதே என்று தன்னையொழிந்த த்ரிவிதாத்மவர்க்கத்தாலும்  ஆஶ்ரயிக்கப்படுமவளென்கிறது. ஶ்ரயதே என்கையாலே இவள்தான் எம்பெருமானை –யாஶ்ரயியாநின்றாளென்று, ஶ்ரீ என்னும் திருநாமத்தையுடையளாயிருக்கும். இத்தால் தன்னையொழிந்த த்ரிவித சேதநருடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிவளுடைய கடாக்ஷாதீநமாயிருக்குமென்னுமிடத்தையும் இவள் தன்னுடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகள் அவனுடைய கடாக்ஷாதீநமாய் இருக்குமென்னு மிடத்தையும் சொல்லிற்று.

ஆக, இவர்‌களைக்குறித்துத்தான் ஸ்வாமினியாய் அவனைக்குறித்துத்தான் பரதந்த்ரையாயிருக்கையே இவள் திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்திதியென்னுமிடத்தைச்சொல்லிற்று.

 இத்திருநாமம் தான் புருஷகாரத்தைக் காட்டுகிறது. தன்னையொழிந்தார்‌க்குத் தான் ஸ்வாமினியாயவனைக் குறித்துப் பரதந்த்ரை என்றும் காட்டில் புருஷகாரத்தைக் காட்டுமோ இஶ்ஶப்தமென்னில், புருஷகாரமாவாருடைய லக்ஷணமிதுக்குண்டாகையாலே. புருஷகாரமாவார்க்கு இரண்டிடத்திலும் குடல் துடுக்குண்டாகவேணும், தன்னையொழிந்தாரோடு தனக்குக் குடல் துடக்கில்லையாகில் கார்யம் தீரக்கழியச்செய்யக் கூடாது. கார்யங் கொள்ளுமிடத்தில் தனக்கு ப்ராப்தியில்லை யாகில் கார்யம் வாய்க்கச் செய்விக்கக் கூடாது. ஆக விரண்டிடத்தில் ப்ராப்தியும் புருஷகாரமாவார்க்கு அபேக்ஷிதமாகையாலே இத்திருநாமந்தான் புருஷ காரத்தைச் சொல்லிற்று.

 இன்னமும்‌  ‘நிருக்தத்திலே இவ்வர்த்தம் தன்னை முக்தகண்டமாகச்சொல்லிற்றெ’ன்று  நஞ்ஜீயரருளிச்செய்வ தொன்றுண்டு. அதாவது, ஶ்ருணோதீதி ஶ்ரீ:, ஶ்ராவயதீதி ஶ்ரீ: என்னும்‌ வ்யுத்பத்தியாலும் அதில் ஶ்ருணோதீதி ஶ்ரீ:, என்று ஸம்ஸாரபயபீதரான சேதநர்கள் தந்தாமுடைய ஆர்த்தியையும் அபராதத்தையும் ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் அநுஸந்தித்து இப்படி இருக்கிற எங்களை அவன் திருவடிகளிலே சேர்க்கவேணுமென்று திருமுன்பே  விண்ணப்பம் செய்தால் ஆபிமுக்யம் பண்ணிச் செவிதாழ்த்துக் கேட்குமென்னுமிடத்தையும், ஶ்ராவயதீதி ஶ்ரீ  என்று தான் கேட்ட வார்த்தையையவன்‌ செவியிற் படுத்திப் பொறுப்பித்துச் சேர்க்குமிடத்தையும் சொல்லுகிறது என்பார்கள்.

இவ்வர்த்தம் வ்யுத்பத்தி ஸித்தமேயன்று, ப்ரமாண ஸித்தமும், ‘ஹ்ரீஶ்சதே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ, அஸ்யேஶாநா ஜகத: என்று ஜகத்துக்கீஶாநை என்கையாலே இவர்களைக்குறித்து ஸ்வாமினி என்னுமிடத்தைச் சொல்லிற்று.

 ‘நித்யை வைஷா ஜகந்மாதா விஷ்ணோஶ்ரீரநபாயிநீ, விஷ்ணுபத்நீ’ என்கையாலே அவனைக் குறித்துப் பரதந்த்ரை யென்னுமிடம் சொல்லிற்று.

 இப்படியொழிய சேதநரோடு ஸமாநை என்னுதல் ஈஶ்வரனோடு ஸமாநை என்னுதல் சொல்லுவது சேராது.

ஆனால், ‘பும்ஸ்த்வ  ப்ரதானேஶ்வரேஶ்வரீ’ என்று அவனிலும் இவளுக்கு ஆதிக்யம் சொல்லுகிற ப்ரமாணங்கள் சேருகிறபடி எங்ஙனே என்னில், அவளுடைய போக்யதையிலுண்டான வைபவத்தைப் பற்ற  அவனுக்கு உண்டான ப்ரணயத்வபாரதந்த்ர்ய மாமித்தனை. ‘பித்தர் பனிமலர்‌ மேற்பாவைக்கு’ என்றும், ‘மலராள் தனத்துள்ளான்’ என்றும் ‘மாமலர் மங்கை மணநோக்க முண்டான்’ என்றும் ‘அல்லிமாமல‌ர் மகள் போக மயக்குக்களாகியும் நிற்குமம்மான்’ என்றும் சொல்லுகையாலே தன் போக்யதையாலே அவன் நெஞ்சை துவக்கிக்கொண்டாய்த்திருப்பது. அவன் ஸ்வரூபமெல்லை காணவொண்ணாத வைபவம் போலே இவளுடைய ஸ்வரூபமணுவாயிருக்கச்செய்தே இவளுடைய போக்யதையிலுண்டான வைபவம் சொல்லிற்றாகக்கடவது. அவன் ஸ்வரூபமெல்லை காணிலும் காணவொண்ணாது காணுமிவளுடைய போக்யதையிலேற்றக்கமிருக்கும்படி.  இவளுடைய ஸ்வரூபமணுவாயிருக்கச் செய்தே போக்யதையாலே அவனதில் இவள் ஸ்வரூபத்துக்கு வைபவம் சொல்லலாமோவென்னில் , முருக்கம் பூவுக்கும் செங்கழுநீர் பூவுக்கும் நிறமொத்திருக்கச் செய்தே தனக்கு விஶேஷமான பரிமளத்தாலே செங்கழுநீர் பெருவிலையனாய்த் தென்றால் வேறொன்றாலே வந்த உத்கர்ஷ மாகாதிறே. அப்படி இவள் ஸ்வரூபமுமவனுக்கு ஶேஷ மாயிருக்கச் செய்தேயும் இவனிலும் இவளுக்கு ஏற்றம் சொல்லிற்றென்றால் வேறொன்றாலே வந்த உத்க்ர்ஷமாகாதிறே. ஆகையாலே, ஜகத்துக்கு  இருவருக்கும் ஶேஷமாயிருக்கையாலே ஜகத்துக்கு பூஜ்யையாயிருக்கும். ஸ்வரூபேண ப்ரணயித்வத்தாலே அவனுக்கு பூஜ்யையாயிருக்கும் “த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ருணாம் தேவதாசயா’ என்றும் ‘தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரிபாஷா ஸமந்வித:, ஶப்தோயம்’ என்று பூஜ்யவாசகமா யிருக்கையாலே “பூஜ்யை” என்கிறது.

இது ப்ரமாண ஸித்தமேயன்று லோகஸித்தம். எங்ஙனே என்னில், ப்ரஜைகளைக்குறித்துத் தாய் ஸ்வாமினியாய், பர்த்தாவைக்குறித்து பரதந்த்ரையா யிருக்கச்செய்தே இவள் போக்யதையைப்பற்றவன் பரதந்த்ரனானானென்ன, அவளுடைய ஸ்வாதந்த்ர்யம் சொல்லாதிறே. இவன் ப்ரணயத்வமா  மித்தனை இறே. இப்ரணயித்வத்தாலே ப்ரஜைகளுக்கு ரக்ஷணமாய்த் தலைக்கட்டுகிறது. எங்ஙனே என்னில், தாஸதாஸிகள் பணிசெய்கைக்காகவும், புத்ராதிகளுடைய வ்யுத்பத்திக்காகவும் பிதாவானவன் நியமியத்தால் மாதாவின் நிழலிலேயொதுங்கி நின்று அவனிவளுக்கும் உதவியனான வளவிலே இவற்றின் குற்றத்தைப் பார்க்கக்கடவதோவென்று யிவள் காட்டிக்கொடுக்கக் காணானின்றோமிறே, ஆகையாலே, புருஷகாரமும் லோகஸித்தம். ஆக இப்பதத்தால் புருஷகாரம் சொல்லிற்று.

ஆக, இங்குற்றை ஶ்ரீமத்பதத்துக்கு அவனிவளுக்கு ஏற்றமென்னென்னில், ப்ராப்தி இருவருக்கு மொத்திருக்கச் செய்தே இவற்றினுடைய அபராதங்களைபொறுப்பித்து அவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கு மேற்றஞ் சொல்லிற்று, இனிமேல் ப்ரத்யயம், ‘ஶ்ரீயதே’ என்கிற  வர்த்தமானத்தை வ்யாக்யாநம் பண்ணுகிறது. ‘மந்’ என்று மதுப்பைச் சொல்லுகிறது.  ‘நித்யயோகே மதுப்’ என்னக்கடவதிறே. “இறையுமகலகில்லேனெ” ன்றும், “நித்யாநபாயிநீ”  என்றும் சொல்லுகிறபடியே ஒருக்காலும் பிரியாதிருக்குமென்கிறது. இத்தால் பலித்ததென்னென்னில் புருஷகார பூதையான இவள் நித்யவாஸம் பண்ணுகையாலே ஆஶ்ரயிப்பார்குக் காலம் பார்க்க வேண்டாமென்கிறது. அதாவது, ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் தந்தாமுடைய ஸம்ஸாரித்வத்தையும் அநுஸந்தித்துக் கைவாங்க வேண்டாதபடி யிருக்கை. அவனுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும் தந்தாமுடைய ஸாபராதத்வத்தையும் அநுஸந்தித்து யிழக்க வேண்டாதபடி யிருக்கை. ஆகையாலே, அவனும் ஸர்வகாலமும், ஆஶ்ரயணீயனுமா யிருக்கும். இவளுடைய ஸந்நிதியாலே ஸர்வகாலமும் ஆஶ்ரயிக்கலா யிருக்கும். ஏதேனும் காலமும் ஏதேனுமதிகாரமுமாம்.

ருசி பிறந்த போதே இவர்‌களையவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கும் , பாஶுரமென்னென்னில், ஒருதலை ஜந்மம் ஒருதலை மரணம், நடுவே காமக்ரோத லோப மோஹ மத மாத்ஸர்யங்கள், தேவர்‌ பெருமையிது அவைத்தின் சிறுமையிது, உமக்கு ஸத்ருஶமான பச்சை இவர்களாலிடப் போகாது, இவர்‌களிடும் பச்சை கொண்டு, வயிறு நிறையும் ஸாபேக்ஷரல்லர்‌ நீர், ஆன பின்பு இவர்களைப் பார்த்தாலும்மை வந்து கிட்டவொண்ணாது,  உம்மைப்பார்த்தாலும், உம்மை வந்து கிட்டவொண்ணாது, நாமே இவற்றுக்கு விலக்கடிகளைப் பண்ணிவைத்து இவர்‌களைக் கைவிடுகையாவது, உம்முடைய நாராயணத்வமொருவாயாயும் உம்முடைய ரக்ஷண ஸ்வரூபத்தையும் இழக்குமித்தனைகாணும், உம்முடைய ஸ்வரூப ஸித்த்யர்த்தமாக விவர்களைக் கைக்கொள்ளவேணும் காணும், உம்முடைய பேற்றுக்கு நான் காலைக்கட்டி இரக்கவேண்டிற்றோவென்று இவள் சொன்னாலவன் சொல்லுமதேதென்னில், ‘அதண்ட்யாந்தண்ட யந்ராஜா’ என்கிறபடியே ஸாபராதரைத் தண்டிக்கச் சொல்லுகிற ஶாஸ்த்ரம் ஜீவியாதபடியோ நாம், ஸ்வரூபம் ஸம்பாதிப்பதென்னும் ஆனால் ஶாஸ்த்ரம் ஜீவிக்க வேணுமாகில் உம்முடைய க்ருபையும் ஜீவித்து ஶாஸ்த்ரமும் ஜீவிக்கும்படி வழியிட்டுத் தருகிறேன், அத்தைச்செய்யப்பாருமென்னுமிவள், ஆனால் “சொல்லிக்காணெ” ன்றுமவன்.  உம்முடைய பக்கலிலே வைமுக்யத்தைப் பண்ணி விஷய ப்ரவணராயிருக்கிறவர்கள் பக்கலிலே தண்டிக்கச் சொல்லுகிற ஶாஸ்த்ரத்தை விநியோகம் கொள்வது உம்முடைய பக்கலிலே ஆபிமுக்கியத்தைப் பண்ணி என்னைப் புருஷகாரமாகக் கொண்டும்மை ஆஶ்ரயித்தவர்கள் பக்கலிலே  உம்முடைய  க்ருபையை விநியோகம் கொள்வதென்று அவனை கேட்பித்துச் சேர விடும்.

இப்படி காரியப்பாடாகச்சொல்லி புருஷகாரமாகைக்காகவே நித்யவாஸம் பண்ணுகிறது; அவனுக்கு போகரூபமாகவன்றோவென்னில்  ; ஆம், போகரூபமாகை எங்ஙனே என்னில், அவளோட்டை ஸம்ஶ்லேஷத்தாலே அவனுக்குப் பிறந்த ஹர்ஷத்துக்குபோக்குவீடாக இவளுக்கென்ன உபகாரத்தைப் பண்ணுவோமென்று தடுமாறுவதொரு தடுமாற்றமுண்டு. அதுதான் ப்ரணயகலஹத்தில் பரிமாறும் பரிமாற்றத்திலே என்று தோற்றுமோபாதி இவன் தடுமாறி நோக்கும் அந்நோக்கு இவள் கண்ணிலே தோற்றும். அப்போதைத் தடுமாற்றத்துக்கு போக்கடி காட்டாதபோது அவனுடைய ஆஶ்ரயமிழக்க வருமென்னுமத்தாலே “இவற்றினுடைய அபராதத்தைப் பொறுத்துக் கைக்கொள்ளீர்” என்று தன் திருப்புருவத்தாலே ஒரு நெளிநெளிக்கும், இவன் அவள் புருவம் நெளிந்தவிடத்திலே குடநீர் வழிக்கும் அவனாகையாலே இவற்றையும் ரக்ஷித்து தானுமுளனாம். இது காணுமிவளுக்கு மிவனுக்குமுண்டான சேர்த்தியிருந்தபடி. ஆகையாலிருவகைக்கும் ப்ரணயத்வம் செல்லா நிற்கச் செய்தே இருவருடைய ஹர்ஷமும் வழிந்து புறப்பட்டுச் சேதநருடைய ரக்ஷணமாய்த் தலைக்கட்டும். ஆனாலிருவருக்கும் ப்ரணய ரஸமுண்டானபோது இவற்றினுடைய ரக்ஷணமாய் அல்லாதபோது ரக்ஷணம் குறைந்தோ விருப்பதென்னில், இவளோட்டை ஸம்ஶ்லேஷம் நித்யமாகையாலே அநுபவம் நித்யமாயிருக்கும், அநுபவம் நித்யமாகையாலே ஹர்ஷமும் நித்யமாயிருக்கும், ஹர்ஷமும் நித்யமாகையாலே ஹர்ஷத்தாலே வந்த நோக்கும் நித்யமாயிருக்கும். அந்நோக்கு நித்யமாகையாலே ரக்ஷணமும் நித்யமாயிருக்கும்.

இந்நித்ய ரக்ஷணம் மதுப்பில் நித்யயோகத்தாலே வந்த ரக்ஷணத்திலேற்றம். எங்ஙனே என்னில், இதிறே ஸர்வாத்மாக்களுக்கும் பற்றாசு, அங்கனன்றிக்கே  த்ரிபாத்விபூதியையும் தன் ஸ்வரூபாநுரூபகுண விபூதிகளாலே அநுபவித்துச் செல்லாநிற்கச்செய்தே ஜகத்ரக்ஷணமும் திருவுள்ளத்திலே பட்டு நிர்வஹித்துக்கொண்டு போகுகிறாப்போலே இவளுமவனுடைய போக்யதையை விளாக்கொலை கொண்டநுபவியா நிற்கச்செய்தேயும் ப்ரஜைகளுடைய ரக்ஷணமும் திருவுள்ளத்திலே பட்டு நிர்வஹித்துக்கொண்டு போரக்கடவதாய்த்து வஸ்துஸ்வபாவமிருக்கும்படி. ப்ரஜைகள் விஷயத்தில் தான், ‘தேவ தேவ திவ்ய மஹீஷீம் ” என்கிற  மேன்மை அநுவர்த்தியாது. ப்ராப்தியிறே அநுவர்த்திப்பது. எல்லார்க்கும் ஒக்க வரையாதே தாயாயிருக்கும்.

பூர்வாவஸ்தையைப் பார்த்து அஞ்சவேண்டாதே மடியிலே சென்றணுகலாயிருக்கும், அஶரண்ய ஶரண்யையிறே. பகவத்விஷயத்திலும், புறம் புகலார்க்கும் புகலாயிருக்குமந்த ஸர்வஸாதாரணமான ப்ராப்தியின்றியே, விஶேஷ ஸம்பந்த முண்டு, “செய்தாரேல்‌ நன்று செய்தார்” என்கிறவனுடைய கையும் வில்லுமாய்ச் சீறினாலுமிவள் திருவடிகளிலே புகலாயிருக்கும். ஆகையாலே ஜந்மவ்ருத்தங்களில் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசியற நின்ற நிலையிலே பகவத்ஸமாஶ்ரயணம் பண்ணலாவது, அவளோட்டை ஸம்பந்தத்தாலும், இவள்  திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகையாலுமிறே. ஆகையாலே, ஸர்வாதிகாரம் ஸூசிப்பிக்குமது இப்பதத்திலேயாயிருக்கும்.

ஆக இப்பதத்தாலே புருஷகாரம்சொல்லி மதுப்பாலே அவனுக்கு மறுக்க வொண்ணாத புருஷகாரத்தினுடைய நித்யயோகம் சொல்லிற்று.

இப்படி புருஷகார பூதையாயிருக்கிற இவள் தானொரு  குறை சொல்லும்போதும், ‘என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்‌’ என்னும்‌ வாத்ஸல்யாதிஶயத்தை யுடையனாகையாலே. மேல் நாராயணனென்கிறது. “தன்னடியார் திறத்தகத்து” அவன் தன்னடியாரென்கைக்குமிவள் சிதைகுரைக்கைக்கும் ஒருசேர்த்தியில்லையிறே. பெற்றத்தாய் நஞ்சிடக் கூடாதிறே. இனி இவள் அனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் இவற்றினுடைய ஸாபராதத்வத்தையுமநுசந்தித்து இவற்றின் பக்கலில் என்னாய் விளைகிறதோவென்று அதிஶங்கைப் பண்ணி இவனைச் சோதிக்கிறாளிறே. அவன் இவளுடைய மார்தவத்தையு மௌதார்யத்தையும் அநுஸந்தித்து இனி இவள் இவற்றின் பக்கலெவ்வளவாயிருக்கிறாளோ என்றிவளை அதிஶங்கை பண்ணுமவன், தன்னபேக்ஷைக்காக இவர்கள் ரக்ஷணம் பண்ணுகிறானோ, தன்னபேக்ஷையில்லாத போது ரக்ஷணம் திருவுள்ளத்திலுண்டோ இல்லையோவென்று சோதிக்கிறாளாகவுமாம்.

ஆக இப்படி ஒருவரை ஒருவ‌ர் அதிஶங்கைப் பண்ணி நோக்குமிருவருடைய நிழலையும் பற்றியிறே உபய விபூதியும் கிடக்கிறது, தன்னை புருஷகாரமாகக்கொண்டு அவனையுபாயமாகப்பற்றினவன்  அநந்ய ப்ரயோஜநரை யொருவரையொருவரதிஶங்கை பண்ணி நோக்கும்படியிறே. இனியிவளவனை அதிஶங்கைப் பண்ணிச் சிதைகுரைக்குமன்று நம்மைப் பற்றினார்க்கு அக்குறையில்லை காணென்று அவளோடும் கூட மன்றாடும் குணாதிக்யம் சொல்லுகிறது. அக்குற்றமென்கிறானிரே, இவள் சொன்ன குற்றம் தன்  வாயால் சொல்லமாட்டாமையாலே. இல்லை நானிப்போது கண்டேனென்று ஸாக்ஷி பூர்வகமாகக் காட்டிக்கொடுத்தாலும் அவனால் தன்  தர்மாதர்மங்களும் ஒரு பரலோகமும் ஒரு பரதேவதையும் இல்லையென்று செய்கிறார்‌களோ?  ப்ராமாதிகத்துக்கு நாமுளோமென்றன்றோ செய்கிறது, ஆன பின்பு கூட்டுகை உங்கள் தேவையாமித்தனை போக்கி ஒரு மிதுனத்துக்கு இவர்‌கள் குழைச் சரக்காயிருக்க, பிரிக்கை உங்கள் தேவையோவென்று, கூட்டின ஶ்ரீவைஷ்ணவர்களோடும் கூட்டின பிராட்டியோடும் மறுதலித்து நோக்கும் குணாதிக்யம் சொல்லுகிறது.

‘நாராயண’ வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸௌலப்ய ஸ்வாமித்வங்கள், இவை நாராயண ஶப்தார்த்தம் ஆனாலும் இந்நாராயண ஶப்தத்துக்கு ஸௌலப்யத்திலே நோக்கு.

வாத்ஸல்யமாவது வத்ஸத்தின் பக்கல் தாயிருக்குமிருப்பை ஈஶ்வரன் ஆஶ்ரித‌ர் பக்கலிலே இருக்குமென்கிறது. அதாவது, சுவடுபட்ட தரையில் புல் தின்னாத  பசுதன் கடையாலே புறப்பட்ட கன்றினுடைய தோஷத்தைத் தன் வாயாலே தழும்பற நக்கித் தன்முலைப்பாலாலே தரிப்பிக்குமாபோலே ஆஶ்ரிதருடைய தோஷங்களைத் தனக்கு போக்யமாக விரும்பித் தன்  கல்யாண குணங்களாலே அவர்களைத் தரிப்பிக்கை. எங்கே கண்டோமென்னில் ‘தஸ்யதோஷ:’ அவனுடைய தோஷமன்றோ ஶரணாகதநுடைய தோஷமன்றோ, அது நமக்கு அபிமத விஷயத்திலழுக்கன்றோ, என்று மேல்விழுந்து விரும்பும் படியிறே வாத்ஸல்யமிருப்பது. தமக்குப் பரிவரான மஹாராஜரையும், தம்பால் ஸக்தையான பிராட்டியும் விட்டு அவன் தோஷமேதேனுமாகிலும் இன்று  வந்த ஶரணாகதனை விடில் நாமுளோமென்று, அநுகூலரோடேயுமலைந்து ரக்ஷிக்கும் படியிறே வாத்ஸல்யகுணமிருப்பது.

‘ஶீலம் ஹி நாம-மஹதோ மந்தைஸ்ஸஹ நீரந்த்ரேண ஸம்ஶ்லேஷ ஸ்வபாவத்வம் ஶீலம்’. அதாகிறது சிறியவனோடே பெரியவன் வந்து கலவா நின்றால் தன்பெருமை இவன் நெஞ்சில் படாமே நம்மோட்டையாவனொருவனென்று புரையறக்கலக்கலாம்படி யிருக்கை, அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்யஸூரிகளுக்கும் அவ்வருகாய் அப்ராக்ருதனாய் உபய விபூதி போகத்தாலும் பெரிய ஏற்றத்தையுடையனாய், ‘அவன் எவ்விடத்தான்’ என்னும்படியிருக்கிறவன் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் அவ்வருகே கழியப் போனானென்றும்‌ இவனோடே வந்து கலவா நின்றாலிவன் அஞ்சி இறாய்க்க வேண்டாதபடி தானே மேல்விழுந்து புரையறக்கலக்கை ஶீலகுணமாவது. இப்படி கலக்கப் பெற்றது இவனுக்குக் கார்யம் செய்ததாகவன்றியே அதுதன் பேறாக நினைத்துயிருக்கை ஸுஶீலம்.

ஸ்வாமித்வமாவது, கர்ஷகன் பயிர்‌த்தலையிலே குடில் கட்டிநோக்குமாப்போலே, உடைமை உனக்கு  அல்லேனென்று  முடித்துக் கொண்டவன்றும் தன்னுடைமையாவது தோற்றத் தானிவற்றை விடமாட்டாதே இவற்றினுடைய ரக்ஷண சிந்தை பண்ணியிருக்கிற இருப்பு அதாவது- இவனுக்கு தன் ஸௌஹார்தத்தாலே யாத்ருச்சிக ஸுக்ருதத்தையுண்டாக்கி, அதனடியாக அத்வேஷத்தையுண்டாக்கி, அதனடியாக ஆபிமுக்யமுண்டாக்கி, அதனடியாக ருசியையுண்டாக்கி, அதனடியாக ஸத்ஸம்பாஷணத்தையுண்டாக்கி, அதனடியாக ஆசார்ய ஸமாஶ்ரயணத்தையுண்டாக்கி, ஸம்யக் ஜ்ஞாநத்தைப்பிறப்பித்து, ஸித்த ஸாதநத்திலே நிஷ்டையைப் பிறப்பித்து, கண்ணழிவற  ப்ராப்யத்திலே ருசியைப் பிறப்பித்து. விரோதி நிவ்ருத்தியைப் பண்ணிக்கொடுத்து, அர்ச்சிராதி மார்க்க ப்ரவேஶத்தை யுண்டாக்கி, லோக ப்ராப்தியை பண்ணிக் கொடுத்து, ஸ்வரூப ப்ரகாஶத்தைப் பிறப்பித்து, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தியையும் பிறப்பித்து, இவைதொடக்கமான பகவதநுபவத்தையும் இவ்வநுபவஜநிதமான ப்ரீதியாலே பண்ணப்படுவதான நித்ய கைங்கர்யத்தை ஏவிக்கொள்வதாக வந்திப்படிக்கு பரம ஶேஷித்வம் ஸ்வாமித்வமாவது.

ஸௌலப்யமாவது, அதீந்த்ரியமான பரம வஸ்து இந்த்ரிய கோசரமானபடி எளிய ஸம்ஸாரி களுக்கும்  கண்டாஶ்ரயிக்கலாம்படி தன்னை எளியனாக்கிக்கொடுக்கை, அதாகிறது-”மாம்” (மாம்) என்றுகொண்டு ஸேநாதூளியும் கையுமுழவு கோலுமாய் ஸாரதியாய் நிற்கிற நிலையையிறே உபாயமாக பற்றென்று விதிவாக்யத்தில் சொல்லிற்று. அந்த ஸௌலப்யத்தையாய்த்து இங்குச் சொல்லுகிறது. அது தான் பரத்வம் என்னலாம் படியிறே இங்குற்றை நாராயண ஶப்தத்தில் ஸௌலப்யம்.

எங்ஙனே என்னில், அங்கு ’மய்யாஸக்தமநா: பார்த்த’ என்று கொண்டு தன் பக்கலிலே ஆஸக்தமான மநஸ்ஸையுடைய அர்ஜுனன் ஒருவனையும் நோக்கியிறே ஸுலபனாய்த்து. இங்கு எல்லார்க்கும் ஒக்க ஸுலபனாய் இருக்கும். அங்கு முன்புமில்லை பின்புமில்லை. நாமறியாத நாளிலுமுண்டாய், நாமறிந்த நாளிலும் உண்டாயிருக்கிற ஏற்றம் இந்த ஸௌலப்யம். இக்குணங்களுண்டானாலும் கண்ணுக்கு விஷயமானாலல்லது போக்கி இக்குணங்கள் ஜீவியாமையாலே ஸௌலப்யம் ப்ரதானமாகிறது.

இக்குணங்கள் உபாயமாமிடத்தில் , ஸௌலப்யம், எளியனானவிவனளவிலே தன்னை எளியனாக்குகையாலே இவனே உபாயமென்கிறது. ஸுஶீலம், இப்படிகலக்கிறவிது, தன் பேறாகக்கலக்கையாலே அவனே உபாயமென்கிறது. ஸ்வாமித்வம் , ஸம்ஸாரி சேதநனை நித்யஸூரிகள் கோர்வையிலே கொண்டு போய் வைத்தால் நிவாரகரில்லாத நிரங்குஶ ஸ்வாமித்வமுபாயமென்கிறது.

ஆக இங்குச்சொன்ன நாலு குணங்களும் பற்றுகைக்கு பற்றாசான வோபாதி ஜ்ஞாநஶக்த்யாதி குணங்களும் மோக்ஷ ப்ரதத்வத்திலே விநியோகம், எங்ஙனே என்னில், இவனும் விடுமதறிந்து விடுகைக்கும் பற்றுமதறிந்து பற்றுகைக்கும் ஸர்வஜ்ஞனாகவேணும், ஜ்ஞானமுண்டானாலும் ப்ரயோஜந மில்லை ஶக்தனன்றாகில். அது அநாதி காலார்ஜிதமான பாபங்களை துணித்துத்தாவி அக்கரைப்படுத்தும்போது, ஸர்வஶக்தியாக வேணும். ஶக்தனானாலும் ப்ரயோஜநமில்லையிறே நிரபேக்ஷனன்றாகில், நிரபேக்ஷனாகிலும் ப்ரயோஜநமில்லையிறே ப்ராப்தியில்லையாகில். ஆக ஸர்வஜ்ஞத்வமும், ஸர்வஶக்தித்வமும், அவாப்த ஸமஸ்தகாமத்வமும், ஸர்வஶேஷித்வமும், இவை நாலுகுணமும், ஸர்வஸாதாரணமான ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்.

ஓரளவிலே ஆஶ்ரிதகத மோக்ஷப்ரதத்வத்துக்கும் உடலாயிருக்கும் ஸஹாயாந்தர நிரபேக்ஷமாக பலப்ரதன் அவனாகில் இவர்‌களுக்கும் அவனுக்கும் ப்ராப்தி யொத்திருந்ததாகில். புருஷகாரா பேக்ஷையென்னென்று நஞ்ஜீயர் பட்டரைக் கேட்க, ”வாரீர் ஜீயரே அவள் ஸந்நிதிக்கும், அவன் ஸந்நிதிக்கும் உள்ள வாசி அந்வய வ்யதிரேகங்களாலே கண்டுகொள்ளீர்” என்று அருளிச்செய்தார்‌. அதாவது, ஜனனிபக்கல் அபராதம் காகத்துக்கும்‌ ராவணனுக்கும் ஒத்திருக்கச் செய்தேயவள் ஸந்நிதியுண்டாகையாலே அபராதத்தில் கைதொடனான காகம் ப்ரபந்நர்‌ பெறும் பேற்றைப் பெற்றுப்போய்த்து. அத்தனை அபராதமின்றிக்கே கடக்கநின்று கதறிப்போந்த ராவணன் அவள் ஸந்நிதியில்லாமையாலே தலையறுப்புண்டான்.

இனிதான் மாத்ரு ஸந்நிதியிலே ப்ரஜைகளையழிக்கமாட்டாமையும் ஒன்றுண்டிறே பிதாவுக்கு. இனி, ‘தமேவஶரணம் கத:’ என்றதும்.’ந நமேயம்’ என்றதும் அப்ரயோஜகம்.

எங்ஙனேயென்னில் காகத்துக்குதவுகிறபோது அகவாயில் நினைவு அதுவிறே. இல்லையாகில்  ‘ஸ்வகமாலயம் ஜகாம’  என்றுப் போகப்பொறானே. செயல் மாட்சியாலே விழுந்ததித்தனையிறே. இம்மாத்ரம் இராவணனுக்கும் உண்டாயிருக்க அது காரியமாய்தில்லையிறே இவள் ஸந்நிதியில்லாமையாலே. இது காணுமவள் ஸந்நிதிக்கும் அவன் ஸந்நிதிக்கும் வாசியென்றருளிச்செய்தார்.

மற்றும் பற்றினாரையடைய வாராய்‌ந்து பார்த்தவாரே இவள் முன்னாகவாயிருக்கும். மஹாராஜருள்ளிட்ட முதலிகளும் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் இவள் முன்னாக வாய்த்துப் பற்றிற்று. அந்வய வ்யதிரேகங்களில் பலா பலங்களன்றியே ஆஶ்ரயித்த ஏற்றமுண்டு. எங்ஙனேயென்னில், அவனுடைய ஶீலாதிகுணங்களோடே ஹேயகுணங்கள் கலசியிருக்குமாப்போலே யல்லவாய்த்து இவளுடைய ஶீலாதிகுணங்களிருப்பது. அவனுடைய நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யமும் ‘க்ரோதமாகாரயத்தீவ்ரம்’ என்று அழித்துக் கார்யம் கொள்ளலாயிருப்பன சிலவுமுண்டிறே. அதுவுமில்லையிறே யிவளுக்கு. அதுண்டாகில் இவளுக்கும்  ஒரு புருஷகாராபேக்ஷை வேண்டியிருக்குமிறே. அதில்லாமையாலே இவள் புருஷகார மாகவேணும் , இல்லையாகில் பலஸித்தியில்லை.

எங்கே கண்டோமென்னில், ராவண கோஷ்டியிலே `ப்ரதீயதாம் தாஶரதாய மைதிலீ’ என்று பிராட்டிக்காகப் பரிந்தும், தூதரை ஹிம்ஸிக்கலாகாதென்று திருவடிக்காகபரிந்தும்  வார்த்தை சொன்னவனைத் துறந்து ‘த்வாம் து திக் குலபாம்ஸநம்’ என்று புறப்படவிட, ராவணபவநத்தில் நின்றும் புறப்பட்டு வந்து மநோவாக்காயங்கள் மூன்றாலும் ஶரணம் புகுந்த ஶ்ரீவிபீஷணாழ்வானைக் குறித்து ‘ந த்யஜேயம் கதஞ்சந’ என்று ரக்ஷித்த நீர்மையிறே. பெருமாளுக்குள்ளது.  இவளுக்கு அங்கனன்று. மநோவாக்காயம் மூன்றிலும் ராவணாபஜயத்தையும் ஸ்வப்நம் கண்டோமென்று பயப்பட்டு த்ரிஜடை விண்ணப்பம் செய்ய, அவளும் “அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோபயாத்”, “ப்ரணிபாத ப்ரஸந்நாஹி மைதிலீ ஜநகாத்மஜா” என்று நம்மாலே நலிவு படுகிறவிவள், தானே நம்மை ரக்ஷிக்கும் காணுங்கோளென்று சொல்லியும், இவ்வுக்தியேயன்றியே பிராட்டி தானும் இவர்கள் நடுவேயிருந்து “பவேயம் ஶரணம் ஹி வ:’ என்று நான் உளளாக நீங்களஞ்ச வேண்டாவென்று அருளிச்செய்தும் இவ்வுக்திமாத்ரமாய்ப் போகையன்றிக்கே, ராமவிஜயமுண்டாய்‌ ராவணனும் பட்டான், மஹாராஜருள்ளிட்ட முதலிகளுக்கும் ஒருகுறைகளில்லை என்று நம்மைதிலிக்குச் சொல்லிவா என்று திருவடியை வரவிட, அவன் வந்து விண்ணப்பம் செய்ய, இதைக் கேட்டருளி ஹர்ஷத்தாலே இவனுக்கு என்ன உபகாரத்தைப் பண்ணுவோமென்று தடுமாறுகிறவளவிலே “எனக்குப்பண்ணும் உபகாரமாகிறது தேவர்‌ விஷயத்திலே நலிந்த இவர்களை விட்டுக் காட்டித் தருகையே எனக்குப் பண்ணும் உபகாரமாகிறது” என்ன, அதைக்கேட்ட பின்பு, அவன்பண்ணின உபகார பரம்பரைகளையும் பார்த்திலள், இவர்கள் இப்போது நிற்கிற ஆர்த்தியே திருவுள்ளத்தில் பட்டு, ‘க: குப்யேத்வா நரோத்தம’ என்றும், ’நகஶ்சிந் ந பராத்யதி’ என்றும், பெருமாளுக்கந்தரங்க பரிகரமான திருவடியோடே மறுதலித்து ரக்ஷித்தவிவள், நம்முடைய குற்றங்களைத் தன் சொல் வழிவரும் பெருமாளைப் பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கச் சொல்லவேணுமோ. இதிறே இவள் நீர்மை இருந்தபடி.

இதுவேயன்று தன் பக்கலிலே அபராதத்தை பண்ணின ராவணனைக்குறித்து ’மித்ரமௌபயிம் கர்தும்’ என்றும், ’தேந, மைத்ரீ பவதுதே’ என்றும், அவனுக்கு ‘மாஶுச:’ என்னும்‌ வார்த்தை சொன்னவளிறே. ஆகையாலே நித்யஸாபராத ஜந்துக்களுக்கு, நித்ய ஸஹவாஸம் பண்ணுமிவள் புருஷகாரமாக வேணும். கல்யாண குணவிஶிஷ்டனுமாயிருக்கிற ஈஶ்வரன் உபாயமாமிடத்தில், இப்புருஷகாரபூதையானவிவள், இவனுடைய ஆபரணங்களோபாதி அநந்யார்ஹ ஶேஷபூதையாகில், இவள் புருஷகாரமானாலல்லது பலஸித்தியில்லை. பலத்துக்கு பூர்வக்ஷண வர்த்தியாயிருக்கும் அதிலேயிறே உபாயபாவமிருப்பது.

ஆனால் இப்புருஷகாரத்துக்கு உபாய ஶரீரத்திலே அந்தர்பாவம் உண்டாக வேண்டாவோவென்னில் , குணங்களும் விக்ரஹங்களும் அசேதநமாகையாலே, உபாயஸ்வரூபத்திலே அந்தர்பாவமுண்டு. குணாநாமாஶ்ரய ஸ்வரூபமாகையாலே இவளுக்கும் ஸ்வரூபாநுபந்தித்வம் உண்டேயாகிலும் இவள் சேதனாந்தர கோசரையாகையாலே உபாயஶரீரத்தில் இவளுக்கு அந்தர்பாவமில்லை. இவள் புருஷகாரத்திலே ஸாதநபாவம் கிடையாதேயாகிலும் இவள் ஸந்நிதியை அபேக்ஷித்துக்கொண்டாய்த்து உபாயம் ஜீவிப்பது; ஆகையால் இவள் பக்கல் ஸாதநபாவம் கிடையாது. எங்ஙனேயென்னில், ராஜ மஹிஷியை புருஷகாரமாகக்கொண்டு ராஜாவின் பக்கலிலே பலஸித்தியுண்டாமென்று சென்றால், அவன் பக்கல் இரக்கமில்லாதபோது புருஷகாரத்துக்கு பலப்ரதானஶக்தியில்லாமையாலே இப்புருஷகாரத்திலே ஸாதநபாவம் கிடையாது. அந்யநிரபேக்ஷமாக பலப்ரதனாகையாலே அவனே உபாயம்.

‘சரணௌ’  என்று ’மாம்’  என்கிற விடத்தில் ஸாரத்ய வேஷத்தோடே நிற்கிற விக்ரஹத்தையும் இப்பதத்திலே அநுஸந்தேயம். ’சரணௌ’  என்கிறவிது திருவடிகளிரண்டையும் என்றபடி;  ஸ்தநந்தய ப்ரஜைக்கு ஸ்தநம்போலே அடிமையிலே அதிகரித்தவனுக்கு திருவடிகளினுடைய உத்தேஶ்யத்தையைச் சொல்லுகிறது. ஶேஷபூதன் ஶேஷிபக்கல் கணிசிப்பது திருவடிகளிரண்டையுமிறே. மாதாவினுடைய ஸர்வாவயவங்களிலும் ப்ரஜைக்கு ப்ராப்தியுண்டாயிருக்க விஶேஷித்து. உத்தேஶ்ய ப்ராப்தி ஸ்தநங்களிலே உண்டாகிறது, தனக்கு தாரகமான பாலை மாறாமலுபகரிக்கையாலேயிறே. அப்படி, ஶேஷபூதனுக்கும் ஶேஷியிநுடைய ஸர்வாவயவங்களிலும் ப்ராப்தியுண்டாயிருக்க விஶேஷித்து திருவடிகளில்‌ உத்தேஶ்ய ப்ராப்தி, இவனுக்கு தாரகமான கைங்கர்யத்தை மாறாமல் கொடுத்துப் போருகையிறே. இத்தால் திவ்யமங்கள விக்ரஹ ஸத்பாவம் சொல்லிற்று.

கீழ்ச் சொன்ன புருஷகாரமும் குணங்களும் இல்லையேயாகிலும் விக்ரஹந்தானே போரும் உபாயமாகைக்கு. எங்கே கண்டோமென்னில், சிந்தயந்தி தன் ஸ்வரூபாநுஸந்தாநத்தை பண்ணியன்றிறே முடிந்தாள். க்ருஷ்ணனுடைய ஸ்வரூபகுணங்களிலே அகப்பட்டவள் அன்று; காமுகையாகையாலே அவன் விக்ரஹத்திலே அகப்பட்டாள், அவ்வடிவழகுதானே அவள் விரோதியையும் போக்கி அவ்வருகே மோக்ஷத்தையும் கொடுத்ததிறே. ‘சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்மஸ்வரூபிணம், நிருச்ச்வாஸ தயாமுக்திம் கதாந்யா கோபகந்யகா’ என்கிறபடியே ஸ்வரூப ஸ்வபாவங்களறியாத சிந்தயந்தி யாகையாலே விக்ரஹந்தானே ஸ்வரூபகுணங்களுக்கும் ப்ரகாஶமுமாய், ஸம்ஸாரிகளுக்கு ருசி ஜநகமுமாய், முமுக்ஷுக்களுக்கு ஶுபாஶ்ரயமுமாய், நித்யர்க்கும், முக்தர்க்கும் போகரூபமுமாயிருக்கும். எங்கேகண்டோமென்னில்; ’ஆயதாஶ்ச ஸுவ்ருத்தாஶ்ச பாஹவ:’ என்று நெஞ்சுபறியுண்டு அகப்பட்டது. விக்ரஹத்திலே. ‘ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’ தான் மதித்தார்க்கு பரிசிலாகக் கொடுப்பது விக்ரஹத்தை. அங்குள்ளார்‌ ஸதாபஶ்யந்தியிறே.

ஆக இவ்வுபாயத்துக்கும் உறுப்பாயிருக்கையாலே அவற்றை ஒதுக்கிக் கூற்றுத்து உபாயத்திலே நோக்கென்னும் இடம் தோற்றச் சொல்லுகிறது இஶ்ஶரணஶப்தம்.

“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ ஶப்தஶ்ஶரணமித்யயம், வர்த்ததே ஸாம்ப்ரதம் சைஷ உபாயார்த்தைக வாசக:’ இஶ்ஶரண ஶப்தம் உபாயத்தையும், க்ருஹத்தையும், ரக்ஷிதாவையும் சொல்லுகிறது. ரக்ஷகமென்றும் உபாயமென்றும் பர்யாயமென்று சொல்லிப்போருவர்கள். அங்ஙன் அன்றியே , ரக்ஷகநும், வேறேயாய் உபாயமும் வேறேயாயிருக்கவேண்டியிருந்தது. இப்ரமாணத்தால், ரக்ஷகனென்றால், ஸாதாரண ரக்ஷணத்துக்கு, உபாஸகனுக்கும் ப்ரபந்நனுக்கும் பொதுவாயிருக்கும், உபாயமென்று விஶேஷித்தால் ப்ரபந்நனுக்கு உகவாயிருக்கும். எவ்வுபேயத்துக்காக வென்னில் , இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயம். அநிஷ்டமாவது தேஹாத்மாபிமானம் துடக்கமாக கைங்கர்யத்தில் அஹங்கார கர்ப்பம், ஈறாக நடுவுண்டான விரோதியான பாபங்கள், அவையாவன, அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்,  இவற்றின் கார்யமான, கர்பம், ஜந்மம், பால்யம், யௌவநம், ஜரை, மரணம், நரகம், இவற்றோடொக்க அநுவர்த்த்தித்துப் போருகிற தாபத்ரயங்கள், இவற்றுக்குக் காரணமான அவித்யை.

இவற்றினுடைய ஸ்வரூபமிருக்கும்படி யென்னென்னில்’; அவித்யையாகிறது அஜ்ஞாநம், அதாகிறது-அநாத்மந்யாத்ம புத்தியும், அஸ்வே ஸ்வபுத்தியும், அவையாகிறன, தானல்லாததைத் தானென்று ப்ரமித்தும், தன்னதல்லாதத்தைத் தன்னதென்கையும் ஈஶ்வரனையுடைத்தான தன்னை அபஹரித்தும் விபூதியை அபஹரித்துக் கொண்டிருக்கையும். இதுக்குள்ளே எல்லா விரோதியும் பிடிபடும். இது தன்னை உபதேஶத்தில் “நீர்‌நுமதென்றார்’.  எங்ஙனேயென்னில் அவித்யாவாஸநை, கர்மவாஸநை, தேஹவாஸநை; அவித்யாருசி கர்மருசி தேஹருசி. யதாஜ்ஞாநம் பிறந்தவாறே அவித்யை  நஶிக்கும்; புண்யபாபங்கள் ப்ரக்ருத்யநுகூலமாயிருக்கையாலே அநுகூலங்கள்  கண்டவாறே அவைநஶிக்கும். அநுகூலமாவது பகவத்பக்தியாகவுமாம், திருநாமம் சொல்லவுமாம். அன்றிக்கே அவன்தானே உபாயமாகவுமாம். இனியிவற்றுக்கு அடியான ப்ரக்ருதியாகிறது இந்த ஶரீரம். நரகாத்யநுபவத்துக்குவரும் யாதநாஶரீரம்;  ஸ்வர்காத்யநுபவதுக்குவரும் புண்யஶரீரம், இவற்றுக்குக் கிழங்கான ஸூக்ஷ்மஶரீரமும்;  இவையித்தனையும் நஶிக்கை அநிஷ்டநிவ்ருத்தி யாவது.

இனியிஷ்டப்ராப்தியாவது, ப்ராப்தியாதத்தை ப்ராபிக்கை. அதாவது, பரஹிம்ஸை நிவ்ருத்தி பூர்வகமாக கைங்கர்யமெல்லையாக ஸ்வரூபாநுரூபமாக இவ்வதிகாரிக்கு அவன் பிறப்பிக்கும் பர்வங்கள்; அவையாவன, தேஹாத்மாபிமானத்தைப் போக்கி ஆத்மயாதாத்ம்ய  ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸித்தோபாயத்திலே நிஷ்டையைப் பிறப்பித்து, விஷய ப்ராவண்யத்தை போக்கி, தன் பக்கலிலே ப்ராவண்யத்தை யுண்டாக்கி,  லோகப்ராப்தியை பண்ணிக்கொடுத்து ஸ்வரூபப்ரகாஶத்தையும் பிறப்பித்து, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தியையும் பிறப்பித்து, இவை பூர்வகமாக பகவதநுபவத்தையும் பிறப்பித்து, பகவதநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யத்தையும் கொடுத்துவிடுகை, இவன் பற்றின உபாயத்தின் க்ருத்யம்.  “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்கிறது இவற்றிலே அந்தர்கதம்; அபஹத பாப்மத்வாதி குண ஸாம்யமும், ஜ்ஞாநபலைஶ்வர்யாதி குணஸாம்யமும், போகஸாம்யமும் இவையிறே ஸாம்யாபத்திகள். ‘பரஞ்ஜ்யோதிரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே’ என்கிறபடியே, கைங்கர்யமும் அபஹதபாப்மத்வாதி குணங்களும், பரபக்த்யாதி குணங்களும், ஸ்வரூப ப்ராப்திகளிலே, அந்தர்கதமாய் ப்ரகாஶிக்குமவை. இனி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளும் நித்யமாயிருக்கும், ஸ்வரூபத்தோடே ஸஹஜமாயிருக்கையாலே. ஆனாலிவை நித்யமாகிறபடி எங்ஙனேயென்னில், ஒருக்கால் அநுபவித்த குணங்கள் ஒருக்கால் அநுபவியா நின்றால் நித்யாபூர்வமாய் வருகையாலே பரபக்த்யாதிகுணங்கள் நித்யமாயிருக்கம். ஸாலோக்ய ஸாரூப்ய ஸாயுஜ்ய மானவை கைங்கர்யோப யோகியாகையாலே கைங்கர்யதிலே அந்தர்கதம். “அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விஶோகோ விஜிகத்ஸோऽபிபாஸ ஸத்யகாமஸ்ஸத்ய ஸங்கல்ப:”.  அபஹத பாப்மாவென்றது போகப்பட்ட பாபத்தையுடையவன், விஜர:-விடப்பட்ட ஜரையையுடையவன், விம்ருத்யு: -விடப்பட்ட ம்ருத்யுவை யுடையவன், விஶோக: -விடப்பட்ட ஶோகத்தையுடையவன், விஜிகத்ஸ:- போகப்பட்ட பசியையுடையவன், அபிபாஸ: -போகப்பட்ட பிபாஸையையுடையவன், ஸத்யகாம: -நினைத்தவை அப்போதேயுண்டாயிருக்கை, ஸத்ய ஸங்கல்ப: -உண்டானவற்றைக் கார்யம் கொள்ளுமாப்போலே இல்லாதவற்றை உண்டாக்கவல்லனாகை. இவைதான் ஸ்வத: அன்றிக்கே இருக்கிற விஷயத்தைச் சொல்லுவானென்னென்னில், கர்மவஶ்யனுக்குள்ளது அகர்மவஶ்யனான ஈஶ்வரனுக்கில்லையென்று இவனுக்கு ஜ்ஞாநம் பிறக்கைக்காக குணங்கள் தான் ஶேஷபூதனான சேதநனுக்கும்  உண்டாய் அவனுக்கும் உண்டாயிருக்கும். இவை எட்டு குணமும் சேதநனுக்கு உபாயகதம். நிஷ்க்ருஷ்டவேஷத்திலில்லையென்கை. அவனுக்கு விநியோகம் ரக்ஷணத்திலே, சேதநனுக்கு ஸத்யஸங்கல்பங்களாகிறது அவன் நினைத்த கைங்கர்யமுண்டா யிருக்கை, இனி ஜ்ஞாநஶக்த்யாதி குணங்கள் அவனுக்கு ஜகத்ரக்ஷணத்திலே; இவனுக்கு கைங்கர்யத்திலே.

அவனுக்கு ஜ்ஞாநமாவது ‘யோ வேத்தியுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண’ என்கிற படியே எல்லாவற்றையும் அறிந்துகொண்டிருக்குமாப்போலேயிவன்  செய்யக்கடவ கைங்கர்யங்களை ஒரு போகியாக அறிய வல்லனாயிருக்கும்,  பலமாவது. அவனித்தை தரித்து ரக்ஷிக்குமாகில் அவன் கைர்யத்துக்கு தாரண ஸாமர்த்யத்தையுடையனாயிருக்கும். ஐஶ்வர்யமாவது-அவன் ஸ்வவ்யதிரிக்தங்களை நியமித்துக் கொண்டிருக்குமாகில் அவனுக்குக் கரணங்களை நியமித்துக்கொண்டு அடிமைசெய்யவல்லனாயிருக்கும். அதாவது. கைங்கர்யத்துக்கநுரூபமாக அநேக ஶரீர பரிக்ரஹங்கள் நியமிக்கவல்லனாயிருக்கை. வீர்யமாவது அவனிவற்றை ரக்ஷிக்குமிடத்தில் விகாரரஹிதனாய் ரக்ஷிக்குமாகில் இவனும்  கைங்கர்யங்களைச் செய்யாநின்றால் ஒருவிகாரமின்றிக்கே யிருக்கை. ஶக்தியாவது-அவன், சேராதவற்றைச் சேர்ப்பித்து ரக்ஷிக்குமாகில், இவனும்  அநேகமடிமைகளை எக்காலத்திலும் செய்யவல்ல அகடிதகடநா ஸாமர்த்யத்தை உடையனாகை. தேஜஸ்ஸாவது-அவன் அநபிபவநீயனாயிருக்குமாகில், இவனும்  கைங்கர்யங்களை ஒருபோகியாக செய்கிற தேஜஸ்ஸை உடையனாயிருக்கும்.

இனி விக்ரஹத்தில் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும்.  குணங்களும் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும்.  ஜ்ஞாநஶக்த்யாதிகளும் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும். ஆகையாலே பரம ஸாம்யாபத்தியை பண்ணிக்கொடுக்குமென்கிறது. ஶேஷித்வ ஶேஷத்வங்கள் கிடக்கச்செய்தே ஸாம்யாபத்தையுமுண்டாகிறது. ஸஜாதீயம் கலந்தாலல்லது ரஸவிஶேஷமுண்டாகாது. இரண்டு தலைக்கும் போக்யம் பிறக்கைக்காக ஸாம்யாபத்தியுண்டாய்த்தென்றால் ஶேஷ ஶேஷித்வங்களென்கிற முறை மாறாது. எங்ஙனேயென்னில், இவனை கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அவனுக்கு ஶேஷித்வம்; அவனுக்கு கைங்கர்யத்தைப் பண்ணிக் கொண்டு இவனுக்கு ஶேஷத்வம்.  இருவருக்குமிரண்டும் வ்யவஸ்திதம். அவனோடு ஸமமென்னவொண்ணாது.

இஷ்டப்ராப்திக்கொடுக்கையாவது. இவன் ஸ்வீகரித்த உபாயத்தில் நிலைநின்றவனுடைய அதிகாராநுகுணமாக அவன் பண்ணிக்கொடுக்குமவை.

ஆக இந்த ஶரணஶப்தம் உபாயபாவத்தைச் சொல்லுகையாலே கீழ்ச் சொன்ன நாராயணஶப்தம் தொடங்கி இவ்வளவும் உபாயபரமாக அநுஸந்தேயம். இவனுடைய உஜ்ஜீவநார்த்தம் லக்ஷ்மீ ஸம்பந்தமும் அநுஸந்தேயம்.

இப்படி உபாயம் ஸித்தமாயிருக்க அநாதிகாலம் பலியாதொழிந்தது இவனுடைய ப்ரபத்தி யில்லாமையிறே. அந்த ப்ரபத்தியைச் சொல்லுகிறது மேல். ப்ரபத்யே  என்கையாலே, ‘ப்ரபத்யே’ என்றது அடைகின்றேன் என்றபடி. அதாவது, அங்குற்றை ப்ரஜையிநுடைய அநுஷ்டானம், ‘கத்யர்த்தா புத்த்யர்த்தா:’ என்கிறபடியே. அத்யவஸாயமான ஜ்ஞாநவிஶேஷத்தை சொல்லுகிறது.  ‘ப்ரபத்யே’ இப்ப்ரபத்திதான் மானஸமோ வாசிகமோ காயிகமோ என்னில், மூன்றுமாம், ஒன்றுமாம். ஒன்றமையுமாகி லிரண்டுமில்லை , மூன்றும்‌ வேணுமாகில் ஒன்று போராது, ஆனாலென் சொல்லுகிறதென்னில் ஒன்றுள்ளவிடத்திலும் – பலஸித்திகண்டோம், மூன்றுள்ளவிடத்திலும் பலஸித்திகண்டோம். ஆகையாலே இவற்றில்  ஒருநிர்பந்தம் பெரிதன்று. ஒன்றிலும் ஸாதநபாவமில்லை. மூன்றிலும் ஸாதநபாவமில்லை, அவனுடைய அநுக்ரஹமே ஹேதுவாமித்தனை. ஜ்ஞானான்மோக்ஷமாகையாலே மானஸமாகக்கொள்ளக்கடவோம். ஆனால் பலத்துக்கு ஸாதநமன்றாகில் . இவை வேண்டுகிறதென்னென்னில், இவ்வதிகாரி முமுக்ஷுவென்றறியும்போது ஸம்ஸாரிகளில் வ்யாவ்ருத்திவேணும்.  சேதநனென்றறியும் போது அசித்யாவ்ருத்திவேணும். இனி அசித்வ்யாவ்ருத்தமானஜ்ஞாநம், சேதந தர்மமாகையாலே ஸ்வரூபமாமித்தனை. ஸ்வரூபாதிரேகியான ஈஶ்வரன் பக்கலிலே உபாயபாவம் கிடக்குமித்தனை.  ‘ப்ரபத்யே’ என்கிற  பதம் மானஸத்தைக்காட்டு மோவென்னில் , ‘பத்ல்ரு கதௌ’ என்கிற  தாதுவிலே ஒருகதி விஶேஷமாய், கத்யர்த்தமாய், புத்யர்த்தமாகிறது. புத்தியாகிறது, ‘வ்யவஸாயாத்மிகா புத்தி:’ என்றும்’, ‘புத்திரத்த்யவஸாயிநீ’  என்றும்‌ சொல்லுகையாலே, மநோவ்யாபாரமான அத்யவஸாயத்தைச் சொல்லுகையாலே, ப்ரபத்திக்கு மானஸமே அர்த்தம். இம்மானஸ ஜ்ஞாநமிருக்கும்படி யென்னென்னில்‌: க்ரியா ரூபமான கர்மமாதல், கர்மத்தாலே க்ஷீண பாபனாய்ப் பிறக்கும் ஜ்ஞாநமாதல், கர்மஜ்ஞாந ஸஹக்ருதையானஅநவரத பாவநா ரூபையான பக்தியாதல். இவை மூன்றும், கைங்கர்யத்துக்கும் உபயோகியாய் ஸாதநதயா விஹிதமுமாயிருக்கையாலே, இவற்றில் உபாய புத்த்யா த்யாக பூர்வகமாய், தான் உபாயமன்றியிலே ஸித்தோபாய ஸ்வீகாரமுமாய், அதிகாரிக்கு விஶேஷணமுமாய், அத்யவஸாயாத்மகமுமாய் இருப்பதொரு ஜ்ஞாநவிஶேஷம் ப்ரபத்தியாகிறது. ப்ரபத்யே என்கிற வர்த்தமானம், போஜந ஶயனாதிகளிலே அந்யபரனானபோதொழிய, ஶரீரமும் பாங்காய், ஸத்த்வோத்தரனாய் முமுக்ஷுவாகையாலே அவனை விஸ்மரித்திருக்கும் போதில்லையிறே. ஆகையாலே தானுணர்ந்திருந்தபோது அவனே உபாயமென்றிருக்கிற நினைவு மாறாதிருக்குமிறே, அத்தைச் சொல்லுகிறது ஸம்ஸாரபயமும் ப்ராப்யருசியும் கனக்கக் கனக்க “த்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்தநாமதி:’ என்கிற  லக்ஷண வாக்யத்துக்கு உறுப்பாய் ப்ரார்த்தனை உருவச் செல்லவேணும். நினைக்கிறது அவனையாகையாலே நெஞ்சு விட்டுப்போம்படியாம்; பரத்வம் எட்டாது, வ்யூஹம் கால்கடியார்க்கு; அவதாரம் அக்காலத்திலுதவினார்க்கு; அர்ச்சாவதாரம் உகந்தருளின நிலங்களிலே புக்கபோது, திருவடிகளைபிடித்துக்கொண்டு கிடக்குவும் போகாதே; இனியவனுக்கெங்குமொக்கச் செய்யலாவது ஜ்ஞானானுஸந்தாநமிறே; அத்தைச் சொல்லுகிறது வர்த்தமானம். இதுவுமப்படியே அநுவர்த்தந மாகிறதாகில் பலஸித்தியளவும் செல்ல அநுவர்த்த்திக்கிற உபாஸநத்திற் காட்டில் இதுக்கு வாசி என்னென்னில், ரூபத்தில் பேதிக்கலாவதொன்றில்லை, ஹேதுவை விஶேஷிக்குமத்தனை. ‘நிதித்யாஸிதவ்ய:’ என்று விதிபரமாய் வருவதொன்றது. இவ்வநுஸந்தாநம் ராகப்ராப்தம். அது ஸாதநதயா விஹிதமாகையாலே அநுஸந்தாந விச்சேதம் பிறந்தால் பலவிச்சேதம் பிறக்கும்;  ராகாநுவர்த்தந மாகையாலே அநுஸந்தாநவிச்சேதம் பிறந்தால் பலவிச்சேதமில்லை ப்ரபந்நனுக்கு, ஸாதநம் அவனாகையாலே. இதுக்கு வேதாந்தத்தில் ந்யாயம் கோசரிக்கிறவிடமெங்ஙனே யென்னில், ‘ஸம்போக ப்ராப்திரிதிசேந்ந வைஶேஷ்யாத்’ என்று ஜீவாத்மாவோபாதி பரமாத்மாவுக்கும் அசித் வ்யாவ்ருத்தி யொத்திருக்கச் செய்தே, இத்தோட்டை ஸம்பர்க்கத்தாலே வரும் து:க ஸுகாத்யநுபவங்கள் அவனுக்குவாராது. ஸ்பர்ஶ மொத்திருக்கச்செய்தே, வாராதொழிவானென்னென்னில், உபாயம் தன்னில்‌ ராகம் பிறக்கிறது விஷய வைலக்ஷண்யத்தாலேயிறே; அவ்வோபாதி இந்த ஸாதநத்தாலே, லக்ஷ்மீபதியாய் குணாதிகமுமாய் விக்ரஹோபேதமுமாய் ஸித்தரூபமுமாயிருப்பதொன்றாகையாலே அசேதன க்ரியாகலாபமுமா யிருக்கிற ஸாதநத்திற் காட்டில் இதிலே ராகம் பிறக்கச் சொல்லவேணுமோ. திரைமேல் திரையான மிறுக்குக்கள் மேல்‌வந்து குலைக்கப் பார்த்தாலும், ப்ரமாணங்கள் வந்து குலைக்கப் பார்த்தாலும் அவன் தானே வந்து குலைக்கப் பார்த்தாலும், குலைக்க வொண்ணாதபடியான நிஷ்டையைச் சொல்லுகிறது க்ரியாபதம்; பிள்ளைத்  திருநறையூர் அரையரைப்போலே. ஆக பூர்வார்த்தமுபாயத்தைச் சொல்லுகிறதென்றதாய்த்து.

பூர்வ வாக்யம் ஸம்பூர்ணம்

 

தனி த்வயம்உத்தர வாக்யம்

இதன் ஒட்டு தாத்பர்யம்

            இந்த உபாயந்‌தான், ஐஶ்வர்யாத்யுபேயாபாஸங்களுக்கும் பொதுவாயிருக்கையாலே, அவற்றினுடைய த்யாகபூர்வகமாக மேல் நிரதிஶயமான உத்தம புருஷார்தத்தை விவக்ஷிக்கிறது “ஶ்ரீமதே” என்று.

 இவ்வைஶ்வர்யாதி புருஷார்த்தங்களை ஶாஸ்த்ரம் ஆதரியாநிற்க, உபேயாபாஸமென்று கழிப்பானென்னென்னில், இவைதான் அல்பாஸ்திரத்வாதி தோஷ தூஷிதங்களாயிருக்கையாலும், ஸ்வரூப ப்ராப்தமல்லாமையாலும், த்யாஜ்யம்.  தேஹாத்மாபிமானிக்கு புத்ர பஶ்வந்நாதிகள் புருஷார்த்தமாயிருக்கும். தேஹம் அஸ்திரமென்னும் ஜ்ஞாநம் பிறந்தவாறே, அவை அவனுக்கு த்யாஜ்யமாயிருக்கும். இனி பரலோக புருஷார்த்தங்களில் வந்தால் நரகம் அநிஷ்டமாயிருக்கையாலே அதில் ருசியே பிறந்ததில்லை. ஐஶ்வர்யமாகிற ஸ்வர்காத்யநுபவத்தில் வந்தால் ஊர்வஶி ஸாலோக்யத்திலே ஸுகப்ராந்தி கிடக்கையாலே ருசியுண்டாயிருக்கும். அத்தை லபித்தநுபவிக்கப்புக்கில் தேவதை துஶ்ஶீலதேவதையாகையாலே தன்னை உபாஸித்துத்தான் கொடுத்த பலத்தை அநுபவிக்கும் ஸாம்யாபத்தி பொறுக்கமாட்டாமையாலே. யயாதியை ‘த்வம்ஸ’ என்று தள்ளினாப்போலே தள்ளும். இது தப்பி அநுபவிக்க புக்கன்றோ, ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஶந்தி’ என்று புண்யக்ஷயம் பிறந்து நரகத்திலே விழப்புகுகின்றோம் என்கிற  பயத்தோடே இருந்தநுபவிக்கையாலே, உயர்‌க்கழுவில் ஸுகம்போலே து:க விஶேஷமாயிருக்குமத்தனை. ஸுகலவமுண்டானாலும் , வகுத்த புருஷார்த்தமல்லாமையாலே ஸ்வரூப ப்ராப்தமன்று, லோக விநாஶம் உண்டாகையாலே அஸ்திரம்.  இனி ப்ரஹ்மலோக ப்ராப்தியில் வந்தால் அநுபவம் செல்லாநிற்கச்செய்தே க்ஷுத்  பிபாஸையாலே ஸ்வமாம்ஸத்தைப் பக்ஷித்து பின்னையும் போயிருக்கும் என்று சொல்லுகையாலும், பூர்ணமான நிஷ்க்ருஷ்ட ஸுகமல்லாமையாலம், ஸ்வரூப ப்ராப்தமல்லாமையாலும், த்யாஜ்யம்.  இங்ஙன் ஒத்த த்வரிதபரம்பரைகளும் இன்றியிலே, அசித் வ்யாவ்ருத்தி விஶேஷணமான ஆத்மவஸ்து, விலக்ஷண மாகையாலே, ப்ராப்தியிலே ருசியுண்டாயிருக்கும். அத்தை லபித்தநுபவிக்கப்புக்கால், பகவதநுபவமும் அங்குள்ளாருடைய பரிமாற்றமும் ப்ரகாஶியாநிற்க, அவ்வநுபவத்துக்கு யோக்யதையுண்டாயிருக்கக்கிடயாமையாலே கீழ்ச் சொன்னவற்றிற்  காட்டில் தனக்குண்டான ஸுகமடைய, விதவாலங்காரம் போலே அவத்யமாய், து:கமாய், முடிவில்லாத நரக ஸமான மாயிருக்கையாலே அதுவும் த்யாஜ்யம். கீழ்ச் சொன்னவைபோலே அல்பமன்றியே நிரதிஶயமுமாய் அஸ்திர மன்றியே நித்யமுமாய், ஸ்வரூபத்துக்கநநுரூபமன்றியே அநுரூபமுமாய், புநராவ்ருத்தியின்றியே அபுநராவ்ருத்திலக்ஷணமோக்ஷமுமான, உத்தம புருஷார்த்தத்தை விவக்ஷிக்கிறது. உத்தர வாக்யம்.

உத்தர வாக்யத்தின் ஒட்டு தாத்பர்யம் ஸம்பூர்ணம்

உத்தர வாக்யத்தின் ப்ரதிபத வ்யாக்யானாரம்பம்

             ‘ஶ்ரீமதே’ என்றது கீழ் புருஷகாரபூதையானாப்போலே, நித்ய ப்ராப்யமென்கிறது.

இவள் ப்ராப்யையென்னுமித்தை இஶ்ஶப்தம் காட்டுமோவென்னில் , ஶ்ரீமதேயென்கிற விபக்தியாலும் ஆயவென்கிற சதுர்த்தி யாலும், தாதர்த்யத்தைக்காட்டுமித்தனை. இரண்டும் ஏகவிபக்தியாகையாலே நாராயண பதத்துக்கு ஶ்ரீ ஶப்தம் விஶேஷணமாகையாலே ஶ்ரீமந்நாராயணன் பொருட்டு என்றாய்த்து ஶ்ரீஶப்தம் காட்டுவது. ப்ராப்யை யென்று இஶ்ஶப்தம் காட்டாதாகில் அவனோபாதி ப்ராப்யையென்னு சொல்லுகிறவர்த்தம் சேருகிறபடியெங்ஙனே யென்னில்; அவன் ப்ரதான ப்ராப்யனாய்த்ததும் ஸ்வாமி யாகையாலேயிறே. இவளும் இவனுக்கு மஹிஷி யென்னும், இவர்களைக்குறித்து ஸ்வாமினியென்னும் இஶ்ஶப்தமே, இவளுடைய ப்ராப்யதையை சொல்லத்தட்டில்லை. எங்ஙனேயென்னில், கீழ் ஶ்ரீஶப்தத்திலே இவளைக் குறித்து ஸ்வாமினியென்றும், விஷ்ணுபத்நியென்கிற வ்யுத்பத்தி யாலும், ப்ரமாணத்தாலும் ஸித்தமான அர்த்தத்துக்கு வாசகமான ஶ்ரீமச்சப்தத்தை இங்கே ப்ரயோகிக்கையாலே, இஶ்ஶப்தமே இவளுடைய ப்ராப்யதயைச் சொல்லுகிறது. தன்னை யொழிந்தார்க்கு  ப்ராப்ய ஸித்திகளுடைய கடாக்ஷமாயிருக்கும், இது தன்னை நம்மாழ்வார்‌ ‘கோலத்திருமாமகளோடு உன்னைக்கூடி’ என்றும், இளைய பெருமாளும் ‘பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே’  என்று பெருமாள் ப்ராப்யரானவோபாதி பெரிய பிராட்டியார் ப்ராப்யை யென்றருளிச் செய்தார்கள். இவ்வடிமை கொள்ளச்சேர விருக்கிற விருப்பை ‘ஶ்ரியா ஸார்தம் ஜகத்பதி:’ இத்யாதிகளாலே இவள் ப்ராப்யதையெங்கும், ஒக்க வ்யாப்தம். அவனுடைய ப்ராப்யதை ஸ்வதஸ்ஸித்தம்.  அதுக்கு ஏகாயனனுமிசையுமே. இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லுகையாலேயிறே இதுக்கு ப்ராதாந்யம். மாதா பிதாக்களிருவரையும் சேரவநுவர்த்த்திக்கும் புத்ரனைப்போலே ஸ்வாமியும் ஸ்வாமினியும் சேர்ந்தசேர்த்தியிலே அடிமை செய்கை ஶேஷபூதனுக்கு ஸ்வரூபம். ஸாதந தஶையில் புருஷகாரத்தை அபேக்ஷித்தவோபாதி, ஸாத்ய தஶையிலும் இருவருமான சேர்த்தியபேக்ஷிதம். ஶ்ரீமதே என்கிற மதுப்பாலே கீழில் மத்பதத்திலர்த்தம் போலே. இங்கு இருவருமான சேர்த்தியால் வந்த போக்யதை நித்யமென்கிறது. இப்படியிச் சேர்த்தியொழிய தனித்தவளே ப்ராப்யையென்று பற்றுதலும், அவனே ப்ராப்யமென்று பற்றுமதுவும் விநாஶம். எங்கே கண்டோமென்னில், பிராட்டியொழிய பெருமாள் பக்கலிலே போக்ய புத்தி பண்ணின ஸூர்ப்பணகை நஶித்தாள்; பெருமாளைப் பிரித்துப் பிராட்டி பக்கலிலே போக்ய புத்தி பண்ணின ராவணன் நஶித்தான். உடலையும் உயிரையும் பிரித்தார்க்கு விநாஶமில்லாதில்லையிறே.  ‘அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபாயதா। அநந்யாஹி மயாஸீதா பாஸ்கரேண ப்ரபாயதா ।।’ என்றிருவருடைய ஸத்பாவமும் இதுவான பின்பு இனியிவர்களை பிரிக்கையாவது வஸ்துவினுடைய ஸத்பாவத்தை இசையாமலித்தனையிறே. இவ்வஸ்து ஸத்பாவத்தை இசைந்தார்க்கு மிதுநமேயிறே ப்ராப்யம்.

 நாராயணனென்றுயெல்லாவழியாலும் வகுத்த ஸர்வாத்ம ஸ்வாமியென்கிறது. கீழ் பற்றுகைக்கு ஸௌலப்யம் ப்ரதானமானவோபாதி, இங்கும் அடிமை செய்கைக்கு வகுத்த ஶப்தம் அபேக்ஷிதமாகையாலே ஸ்வாமித்வத்திலே நோக்கு. வகுத்த ஸ்வாமியென்கையாலே இவனை யொழிந்த அஸேவ்யஸேவை  அபுருஷார்த்தமென்கிறது. திருமந்த்ரத்தில் நாராயண ஶப்தவாச்யமான அர்த்தவிஶேஷங்கள் நாராயண ஶப்தத்தில் உபதேஶியா தொழிவானென்னென்னில், அங்கு ஸ்வரூபம் சொல்லுகிறதாகையாலே சேதநாசேதநமான நித்யபதார்த்தங்களினுடைய ஸமூஹங்கள் பலவைத்துக்கும் ஆவாஸ பூமியாயிருக்கிறானென்று ஸர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று. இங்கு அசித் வ்யாவ்ருத்தனான சேதநனுக்கு ப்ராப்யம் சொல்லுகையாலே ஸர்வாத்ம ஸ்வாமித்வம் சொல்லிற்று, கீழ் நாராயணபதத்தில் சொன்ன  குணங்களும் இப்பதத்திலே ப்ராப்ய பரமாகவநுஸந்தேயம். அவன்தான் நிற்கும் நிலையிலே குணங்கள் நிற்பது. ப்ராப்யமான ஆகாரமும் ப்ராபகமான ஆகாரமும் அவன் தனக்குண்டானாப்போலே அவன் குணங்களுக்குமுண்டு. அங்கும் தன் குணங்களை ப்ராப்யபரமாகச் சொல்லுகிறது. ”ஸோऽஶ்நுதே ஸர்வான் காமான் ஸஹ, ப்ரஹ்மணாவிபஶ்சிதேதி” என்றும், ‘பிணங்கியமரர் பிதற்றுங்குணம்” என்றும்  குணாநு பவமே ப்ராப்யமாகச் சொல்லிற்றிறே.

நித்யஸூரிகளநுபவிக்கக் கடவ குணங்களை நித்ய ஸம்ஸாரியை முக்தனாக்கி இக்குணங்களை இவர்களளவிலே மட்டும் செய்து கொடுத்து ஸாக்ஷாத்கரித்தநுபவிக்கையாலே ஸௌலப்யம் ப்ராப்யம்.  சேறு தோய்ந்த இவனை ப்ராகல்ப்யமேயாயிருக்கிற நித்யஸூரிகளுடைய கோர்வையிலே ஒருவனாக்கி அநுபவிக்கையாலே ஶீலகுணம் ப்ராப்யம். அநுபவிக்கிற இவனுடைய தோஷம் பார்த்தல், தன் வைலக்ஷண்யம் பார்த்தல் செய்யாதே இவனை அநுபவிக்கையாலே வாத்ஸல்யம் ப்ராப்யம். இவனுடைய அஸேவ்ய ஸேவைகளைத்தவிர்த்து ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யத்தைக் கொடுத்து அடிமைகொள்ளுகையாலே வகுத்த ஸ்வாமித்வம் ப்ராப்யம். இந்த ஜ்ஞாநஶக்யாதிகுணங்களை அநுபவிக்கிற இவனுக்கு போக்த்ருத்வ ஶக்தியையும் கொடுத்து அநுபவிக்கையாலே. அவற்றோடு இவற்றினுடைய கார்யாவஸ்தையான ஶீலாதிகுணங்களோடு, வாசியற, எல்லாம் கட்டடங்க இவனுக்கு ப்ராப்யம்; ஈஶ்வரன் தான் ப்ராப்யனாகிறது இக்குணங்க ளுக்காஶ்ரயபூதனென்றிறே. நித்யஸம்ஸாரியை முக்தனாக்கி அநுபவிப்பிக்கையாலே வேறே குணங்கள் ப்ராப்யமாய்த்தென்னில், ஸ்வேந ரூபேணகுணங்களடைய ப்ராப்யமென்னுமிடம் கண்டோமிறே. நித்யஸூரிகள் குமிழி நீருண்கையாலே ஸம்ஸாரி சேதநநை இதுக்கு நிலவனாக்கி அநுபவிப்பிக்கிற உபகார ஸ்ம்ருதிக்காக விட்ட பாசுரங்களிறே இவை.  ஒன்றும் செய்யாத போதும் போக்யதையிறே குணங்களுக்கு வேஷம். அவன் குணமென்று இவை போக்யமான பின்பு குணாநாமாஶ்ரயமானவன் ஸ்வரூபத்துக்கு போக்யதையே நிரூபகமென்னுமிடம் சொல்லவேண்டாவிறே. நாராயண ஶப்தத்தில் அநந்தரத்தில் விக்ரஹத்தையே ஸ்பஷ்டமாகச் சொல்லாதொழிவானென்?  விக்ரஹம் ப்ராப்யமாயிருக்கவென்னில்  இதுக்கு ஸாதநமான பூர்வார்தத்திலே விக்ரஹ வைலக்ஷண்யத்தைச் சொல்லுகையாலே ப்ராபகமான வஸ்துதான் ப்ராப்யமாகையாலே, இங்கு ஶப்தேந சொல்லிற்றில்லையேயாகிலும் இங்கு உண்டென்னுமிடம் அர்தாத் ஸித்தம். விக்ரஹத்துக்கு போக்யதையே வேஷமாயிருக்கையாலே. இங்கு ஸித்தமாயிருந்தது, அதிகாரியினுடைய கதிஶூந்யதையாலே உபாயமாகவேண்டுகிறது. அதுவும் அவனுக்கு அபாஶ்ரயமாம்படி உபதேஶிக்க வேண்டுகையாலே ஶப்தேனச் சொல்லிற்று.  ப்ரஸித்தமான விக்ரஹத்துக்குப் பூரிக்கவேண்டாதே இந்த விக்ரஹத்துக்கு இங்ஙனேயிருப்பதொரு ஏற்றமுண்டு, மாணிக்கச் சொப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே ஸ்வரூபகுணங்களுக்கு ப்ரகாஶகமாயிருக்கையாலே.  இக்குணங்களினுடைய போக்யதை எல்லையறிந்து விக்ரஹத்தளவும் செல்லப் பெற்றதில்லை. விக்ரஹத்தையவன்தான் ஆவிஷ்கரித்து ஸதா பஶ்யந்திக்கு விஷயமாக்கின போது அநுபவிக்குமத்தனை, ஆக இந்நாராயண ஶப்தத்தாலே ஸர்வாத்ம ஸ்வாமித்வம் சொல்லிற்றாய்த்து.

 ‘ஆய’  என்கிறது சதுர்த்தியாகையாலே நித்யகைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறது. இச்சதுர்த்திக்கு தாதர்த்யம் அர்த்தமாயிருக்க நித்யகைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறதென்கைக்கு, கைங்கர்யத்தைக்காட்டுமோ வென்னில் , ‘வ்ருக்ஷாய ஜலம்’ என்றால், வ்ருக்ஷத்தின் பொருட்டென்னுமாப் போலே ‘நாராயணாய’ என்றால் நாராயணனுக்கு ஶேஷமென்று காட்டுமத்தனையன்றோ வென்னில் , ஸ்வரூபம் ததர்த்தமானபோதே ஸ்வரூபாநுபந்தியாய் வரும் ஸ்வபாவங்களும் ததர்த்தமாகக் கடவதிறே; ஶேஷபூதனுக்கு ஶேஷவ்ருத்தியிறே ஸ்வரூபம்; புஷ்பம் பரிமளத்தோடே அலருமாபோலே ஸ்வரூப ப்ராப்தியாவது கைங்கர்ய ப்ராப்தியாகக்கடவது. கைங்கர்யம் ஸஹஜமாகையாலே ததர்த்தமாவது ஶேஷத்வம் சொன்னவிடத்திலே ஶேஷவஸ்துவைச் சொல்லிற்றாய், அது சொன்னவிடத்திலே ஶேஷவ்ருத்தியைச் சொல்லிற்றாய், அவ்வழியாலே கைங்கர்யம் சொல்லிற்றாகக்கடவது.

ஆனால் ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமான ஸகல கைங்கர்யங்களையும் பண்ணப்பெறுவேனாகவேணுமென்கிற ப்ரார்த்தனையைக் காட்டுமோ இஶ்ஶப்தமென்னில், இந்த ஸ்வரூப ஸ்வபாவந்தான் ஒரே காலத்திலேயாய், வேறொரு காலத்திலின்றிக்கே இருக்குமோ வென்னில் , எல்லா தேஶத்திலும் உண்டென்றுவந்து புகுந்து ‘உடனாய்’ என்கிறபடியே, இத்தேஶங்களில் ஓரோரவஸ்தைகளில் ஓரோரிடங்களிலேயாய்;  ஓரோரடிமையின்றிக்கே இருக்குமோ வென்னில் , ஸகல கைங்கர்யங்களும் உண்டென்று வந்துபுகுந்து ‘வழிவிலாவடிமை’ என்கிற படியே ப்ரணவத்தாலும், நமஸ்ஸாலும், ஶுத்தஸ்வரூபரான நமக்கென்று போகாதிகாரியைச் சொல்லுகிறது. அவ்விடத்திலே ‘செய்ய வேண்டும் நாம் ” என்று, திருப்பாவாடை யினிதென்று சொல்லுமா போலே. இவன் கைங்கர்யமினிதென்று இவனெல்லாவடிமையையும் பாரித்தால் அவன் கொள்ளுமோ, உத்துங்க தத்த்வமன்றோவென்னில் , இவனிருந்து ப்ரார்த்திக்கவே அவன் கொள்ளுமிடத்தைப் பற்றவே ப்ரார்த்தனைபுகுந்தது.

இஶ்ஶப்தத்துக்கு ஶேஷத்வம் அர்த்தமாயிருக்க, கைங்கர்யத்தை கால தேஶங்களையிட்டுப் பெருக்கி அநுஸந்திக்கிறதுக்கு ப்ரயோஜநமென்னென்னில். கலியன் பைபைய்யாகக்குவிக்க வேணும் என்னுமா போலே தனக்கு ஸ்வரூபாநுரூபமுமாய்‌ ஸர்வாதிகாரமுமான கைங்கர்யத்திலேயிறே போக்யதையில் வைபவத்தாலே வந்த அபிநிவேஶம்.

 பகவதநுபவமும் கைங்கர்யமா யிருக்கச்செய்தே, அது ஈஶ்வரனுக்குமொத்துத் தனக்கும் ப்ரீதியுண்டாகையாலே இப்ப்ரீதிகாரிதமான கைங்கர்யமுண்டாய்த்து. இனி கைங்கர்யத்துக்கு அவ்வருகில்லையே ப்ராப்யம்.

கீழ்ச்சொன்னபிராட்டியும், குணங்களும், விக்ரஹமும், ஈஶ்வரனும் ப்ராப்யமன்றோவென்னில், இக்கைங்கர்யத்துக்கு அர்த்தகராகையாலே ப்ராப்யரானார்களித்தனை. கைங்கர்யமே ப்ராப்யம். அர்சிராதி ஸாலோக்யாதி பரபக்த்யாதிகள் ப்ராப்யமான வோபாதி பகவல்லாபமும். ப்ராப்யமான ஆகாரம். கைங்கர்யமே ப்ரதான ப்ராப்யம். ஸாலோக்யாதிகளில் ஸாயுஜ்யம் ப்ரதானமாகச் சொல்லுகிறது கைங்கர்யமாகையாலேயிறே. “ஸாயுஜ்யம் ப்ரதிபந்நாயே தீவ்ரபக்தாஸ் தபஸ்விந: கிங்கரா மமதே நித்யம் பவந்தி நிருபத்ரவா:” என்கிறபடியே.  ஸாயுஜ்யமாவது கூட்டரவு; கூடினால் அல்லது கைங்கர்யம் ஸித்தியாது. ஸ்த்ரீ புமான்கள் ஒன்றானார்கள் என்றால் ஏகத்ரவ்யமானார்கள் என்றிறே. ஒருமிடறானார்களென்று பொருளாய்த்து, அப்படியே இக்கைங்கர்யம் கொள்ளவிருக்கிற ஶேஷியுடைய நினைவும், கைங்கர்யம் செய்த ஸ்வரூபம் பெறவிருக்கிற ஶேஷபூதநுடைய நினைவும். ஒன்றாய்,  அதாவது, ஶேஷியினுடைய நினைவு தனக்கு நினைவாய் அவனுடைய போக்யமே தனக்கு போக்யமாய் தலைக்கட்டுகை ஒருமிதுனம், போக்யம் மிக்கு உந்மஸ்தக ரஸமாய் கலவா நின்றால், பிறக்குமினிமை இருவர்க்குமொக்குமிறே. அதில் பரதந்த்ரனான இவனுக்கு பிறக்குமினிமை பாரதந்த்ர்யத்தோடே சேர்ந்திருக்கவேணுமிறே. அதாவது, இவன் செய்யுமடிமைகண்டு அவனுகந்தால், பின்னை அனனுகந்தபடி கண்டுகக்கையிறே இவனுக்கு ஸ்வரூபம். கைங்கர்ய விஷயமாக வங்கீ புரத்து நம்பி பணிக்கும் படி, ‘கிம்குர்ம இதி கைங்கர்யம் ” என்று பகவதநுபவ ப்ரீதியாலே தடுமாறி என்செய்வோமென்றிருக்கை என்று; அங்ஙனன்றிக்கே  மானஸமாயும் வாசிகமாயும் காயிகமாயுமிறே செய்யும் அடிமைகள். ‘ஸோऽஶ்நுதே ஸர்வான் காமான் ஸஹ, ப்ரஹ்மணா விபஶ்சிதா’ என்று மாநஸமான வடிமை, “ஹா3வு, ஹா3வு, ஹா3வு, அஹமந்நம், அஹமந்நம், அஹமந்நாதோ ऽஹமந்நாதோ ऽஹமந்நாத:” என்றும் ‘நம இத்யேவ வாதிந:,’ என்றும், இவை வாசிகமானவடிமை. “யதா தருணவத்ஸா வத்ஸம்,  வத்ஸோவாமாதரம், சாயாவா ஸத்த்வமநு கச்சேத், கச்சந்த மநுவ்ரஜேத், ததாப்ரகாரமிதிவத்‌’ என்றும், ‘யேநயேந தாதா கச்சதி தேந தேந ஸஹகச்சதி” என்கிற இவை காயிகமானவடிமை.

ஆக, இவையாய்த்து கைங்கர்யம். இவை செய்யுமிடத்தில், ‘தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே’ என்கிற படியே ஸ்ரக் சந்தனாதிளைப்போலே அவனுக்குக் கைதொடுமானமாயிருக்கை. அதாவது, விநியோகம் கொள்ளுமவனுக்கே உறுப்பாய் தனக்கென்ன வேறொரு ஆகாரமின்றிக்கேயிருக்கை. அப்படி ‘படியாய்’ என்கிற படியே அசித் ஸமாதியிலேயாம்படி  தன் ஸ்வரூபத்தை ஶிக்ஷித்தால், பின்னை, அவனுகந்தபடி கண்டுக்குமென்னத் தட்டில்லையிறே. புருஷார்த்தமாகைக்கு.

இதுக்குவரும் விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது நமஸ்ஸு. ‘நம:’(நம:) என்கிறது  கைங்கர்யத்தில் நானென்கிற விரோதியைப் போக்கித் தந்தருளவேணுமென்கிறது. அஹங்கார கர்பமான கைங்கர்யம் புருஷார்த்தமன்றே. ஆகையாலே அவ்வளவும் செல்லவுள்ள அஹங்கார மமகாரங்களைப் போக்கித் தந்தருள வேணுமென்கிறது. அஹங்காரத்தை நிஷேதிக்கையாலே அத்தால் வந்த மகாரமும் இந்நமஸ்ஸிலே நிஷேதமாய்த்து. அஹங்கார மமகாரங்களாகிற சேற்றிலே. அநாதிகாலம் புடையுண்டு கிடந்த சேதநனை நமஸ்ஸாகிற நீரிலே கழுவுகையாலே ஆசுமாசும் அற்றபடி.

இவன் முக்தனாய் ப்ராப்யாநுபவம் பண்ணும்போதும் எனக்கென்னுமது அங்குண்டோவென்னில் , அங்கில்லை. இக்கைங்கர்யம் பெற வேணுமென்றபேக்ஷிக்கிறவன் விரோதியோடே இருந்தபேக்ஷிக்கிறவனாகையாலே, தேஹாத்மாபிமானம் துடக்கமாக கைங்கர்யத்தில் அஹங்கார கர்பமீராக நடுவுண்டான விரோதிகளைப் போக்கித் தந்தருளவேணு மென்று உபாஸந வேளையாகையாலே அபேக்ஷிக்கிறான். திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலே ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று. இந்நமஸ்ஸிலே ப்ராப்ய விரோதியான ஸ்வப்ரயோஜத்தைத் துடைத்தது.

            கைங்கர்யமாவது ‘ப்ரஹர்ஷயிஷ்யாமி’ என்றும், ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்றும், “உந்தன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் ‘ என்றும், ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே’ என்றும்,  “உனக்கே நாமாட் செய்வோம்’ என்றும், ‘தூயன ஏந்தி’ என்றும், ‘நீத: ப்ரீதி புரஸ்க்ருத:” என்றும், ‘சாயா வாஸத்வமநுகச்சேத்’ என்றும் ‘ப்ரியதே ஸததம் ராம:’ என்றும் ‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய் ” என்றும், ‘க்ரியதாமிதிமாம் வத’ என்றும், ‘ஏவமற்றமரராட் செய்வார்’ என்றும், “ரமமாணாவ நேத்ரய:” என்றும் இவையிறே இவனடிமை செய்யும்போது இருக்கும்படி, இத்தால் சொல்லுகிறது பாரதந்த்ர்ய காஷ்டைகள்.

     ஆக, பருஷகாரம் சொல்லி, அதினுடைய நித்யத்வம் சொல்லி, அப்புருஷகாரம் மிகையென்னும்படியான வாத்ஸல்யாதிகுணயோகம் சொல்லி விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்லி, இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் நிரபேக்ஷமான உபாயம் சொல்லி, தத்ஸ்வீகாரம் சொல்லி, ஸ்வாமித்வபூர்த்தி சொல்லி, கைங்கர்ய ப்ரார்த்தனை சொல்லி கைங்கர்ய விரோதி போனபடி சொல்லித் தலைக்கட்டுகிறது.

     ஷட்குணரஸாந்நமான அஹமந்நத்திலே நெஞ்சுவையாதே ஸ்வாமிகாக்குகை, ”தேனும் பாலும் கன்னலும்  அமுதுமாகித் தித்திப்ப” “’அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது” என்று பின்பாதரணீயம்.

தனி த்வயம் ஸம்பூர்ணம்

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.