பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
தத்வத்ரயம்
அசித்ப்ரகரணம் 2.
- அசித்து – ஜ்ஞாநஶூந்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும்.
- இது ஶுத்தஸத்வமென்றும், மிஶ்ரஸத்வமென்றும், ஸத்வஶூந்ய மென்றும் த்ரிவிதம்.
- இதில் ஶுத்தஸத்வமாவது – ரஜஸ்தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்தஜநகமாய், கர்மத்தா லன்றிக்கே கேவல பகவதிச்சையாலே விமாந, கோபுர, மண்டப, ப்ராஸாதாதிரூபேண பரிணமிக்கக்கடவதாய், நிரவதிக தேஜோ ரூபமாய், நித்யமுக்தராலும் ஈஶ்வரனாலும் பரிச்சேதிக்கவரிதாய், அத்யத்புதமாயிருப்பதொன்று.
- இத்தைச்சிலர் ஜடமென்றார்கள்; சிலர் அஜடம் என்றார்கள்.
- அஜடமானபோது – நித்யர்க்கும், முக்தர்க்கும், ஈஶ்வரனுக்கும், ஜ்ஞாநத்தை யொழியவும் தோற்றும்.
- ஸம்ஸாரிகளுக்குத் தோற்றது. –
- ஆத்மாவிலும், ஜ்ஞாநத்திலும் பிந்நமானபடியென்? என்னில்;
- ‘நான்’ என்று தோற்றாமையாலும், ஶரீரங்களாய்ப் பரிணமிக்கை யாலும், விஷயங்களையொழியவும் தானே தோற்றுகையாலும்,ஶப்த ஸ்பர்ஶாதிகள் உண்டாகையாலும் பிந்நமாகக் கடவது.
- மிஶ்ர ஸத்வமாவது – ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் மூன்றோ டுங்கூடி பத்தசேதநருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்குத் திரோதாயக மாய், விபரீதஜ்ஞாநஜநகமாய், நித்யமாய், ஈஶ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய், ப்ரதேஶபேதத்தாலும், காலபேதத்தாலும் ஸத்ருஶமாயும், விஸத்ருஶமாயுமிருக்கும் விகாரங்களை உண்டாக்கக் கடவதாய், “ப்ரக்ருதி – அவித்யை – மாயை” என்கிற பேர்களை உடைத்தாயிருக் கும் அசித் விஶேஷம்.
- ப்ரக்ருதியென்கிறது – விகாரங்களைப் பிறப்பிக்கையாலே அவித்யை என்கிறது – ஜ்ஞாநவிரோதியாகையாலே; மாயை என்கிறது – விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே.
- இதுதான் “பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரிய மைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்காரமனங்களே” (திருவாய் 10-7-10) என்கிறபடியே, இருபத்து நாலு தத்வமாயிருக்கும்.
88. இதில் ப்ரதமதத்வம் – ப்ரக்ருதி.
- இது – அவிபக்த தமஸ்ஸென்றும், விபக்த தமஸ்ஸென்றும், அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை உடைத்தாயிருக்கும்.
- இதில் நின்றும் குணவைஷம்யத்தாலே மஹதாதி விகாரங்கள் பிறக்கும்.
- குணங்களாகிறன – ஸத்வ – ரஜஸ் – தமஸ்ஸுக்கள்.
- இவை ப்ரக்ருதிக்கு ஸ்வரூபாநுபந்திகளான ஸ்வபாவங்களாய், ப்ரக்ருத்யவஸ்தையில் அநுத்பூதங்களாய், விகாரதஶையில் உத்பதங் களாயிருக்கும்.
- ஸத்வம் – ஜ்ஞாந ஸுகங்களையும், உபய ஸங்கத்தையும் பிறப்பிக்கும்.
- ரஜஸ்ஸு- ராகத்ருஷ்ணா ஸங்கங்களையும், கர்மஸங்கத்தையும் பிறப்பிக்கும்.
- தமஸ்ஸு – விபரீதஜ்ஞாநத்தையும், அநவதாநத்தையும், ஆலஸ் யத்தையும், நித்ரையையும் பிறப்பிக்கும்.
- இவை ஸமங்களானபோது – விகாரங்கள் ஸமங்களுமாய், அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்; விஷமங்களான போது–விகாரங்கள் விஷமங்களுமாய், ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்.
- விஷம விகாரங்களில் ப்ரதமவிகாரம் – மஹாந்.
- இது ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று த்ரிவிதமாய், அத்யவஸாய ஜநகமாய் இருக்கும்.
- இதில் நின்றும் – வைகாரிகம், தைஜஸம், பூதாதி, என்று தரிவித மான அஹங்காரம் பிறக்கும்.
- அஹங்காரம் – அபிமாந ஹேதுவாயிருக்கும். –
- இதில் – வைகாரிகத்தில் நின்றும் “ஶ்ரோத்ர த்வக் சக்ஷர் ஜிஹ்வா க்ராணங்கள்” என்கிற ஜ்ஞாநேந்த்ரியங்களைந்தும் “வாக் பாணி பாத பாயூபஸ்தங்கள்” என்கிற கர்மேந்த்ரியங்களைந்தும், மநஸ்ஸும் ஆகிற பதினொரு இந்த்ரியங்களும் பிறக்கும்.
- பூதாதியில் நின்றும் ஶப்ததந்மாத்ரை பிறக்கும்; இதில் நின்றும்- ஆகாஶமும், ஸ்பர்ஶதந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் வாயுவும், ரூபதந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் தேஜஸ் ஸும், ரஸதந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் – அப்பும், கந்த, தந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் – ப்ருதிவி பிறக்கும். –
- ஸ்பர்ஶ தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும் – ஆகாஶம் தொடக்கமான நாலு பூதங்களுக்கும் கார்யமாய். வாயு தொடக்கமான நாலு பூதங்களுக்கும் காரணமாய் இருக்கும் என்றுஞ் சொல்லுவர்கள்.
- தந்மாத்ரங்களாவன – பூதங்களினுடைய ஸூக்ஷ்மாவஸ்தைகள்,
- மற்றை இரண்டு அஹங்காரமும் ஸ்வகார்யங்களைப் பிறப்பிக் கும்போது, ராஜஸாஹங்காரம் ஸஹகாரியாயிருக்கும்.
- ஸாத்விகாஹங்காரம் ஶப்ததந்மாத்ராதி, பஞ்சகத்தையும் அடைவே ஸஹகாரியாய்க்கொண்டு, ஶ்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங் களைந்தையும் ஸ்ருஷ்டிக்கும்; தத் ஸஹக்ருதமாய்க்கொண்டு வாகாதி கர்மேந்த்ரியங்களைந்தையும் ஸ்ருஷ்டிக்கும் ; இவற்றை யொழியத் தானே மநஸ்ஸை ஸ்ருஷ்டிக்கும் என்றுஞ் சொல்லு வர்கள்.
- சிலர் – இந்த்ரியங்களிலே சிலவற்றை பூதகார்யம் என்றார்கள்.
- அது ஶாஸ்த்ரவிருத்தம் .
- பூதங்கள் ஆப்யாயகங்களித்தனை.
- இவை கூடினாலல்லது கார்யகரமல்லாமையாலே, மண்ணை யும், மணலையும், நீரையுஞ் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிச் சுவரிடு வாரைப்போலே, ஈஸ்வரன் – இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஒரு அண்டமாக்கி, அதுக்குள்ளே சதுர்முகனை ஸ்ருஷ்டித்தருளும்.
- அண்டத்தையும், அண்ட காரணங்களையும் தானேயுண்டாக்கும்; அண்டத்துக்குட்பட்ட வஸ்துக்களைச் சேதநர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்கும்.
- அண்டங்கள்தான் – அநேகங்களாய், பதினாலு லோகங்களோடே கூடி ஒன்றுக்கொன்று பதிற்றுமடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப்பட்டு, ஈஶ்வரனுக்கு க்ரீடா கந்துக ஸதாநீயங்களாய், ஜலபுத்பதம்போலே ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்.
- பூதங்களில் ஆகாஶம் – அவகாஶஹேது, வாயுவஹநாதி, ஹேது, தேஜஸ்ஸு – பசநாதிஹேது, ஜலம் – ஸேசந பிண்டீகரணாதி ஹேது, ப்ருதிவி – தாரணதிஹேது என்பர்கள்.
114, ஶ்ரோத்ராதி, ஜ்ஞாநேந்த்ரியங்களைந்துக்கும் – அடைவே ஶப்தாதிகளைந்தையும் க்ரஹிக்கை தொழில்; வாகாதி கர்மேந்த்ரியங் களைந்துக்கும், விஸர்க்க – ஶில்ப – கதி உக்திகள் தொழில்; மநஸ்ஸு – இவை இத்தனைக்கும் பொது.
- ஆகாஶாதி பூதங்களுக்கு – அடைவே ஶப்தாதிகள் குணங்களா யிருக்கும்.
- குணவிநிமயம் – பஞ்சீகரணத்தாலே.
- ஆகாஶம் கறுத்துத் தோற்றுகிறதும் – அத்தாலே.
- முன்புற்றை தந்மாத்ரைகளோடே கூடிக் கொண்டு, உத்தரோத்தர தந்மாத்ரைகள்–ஸ்வவிஶேஷங்களைப் பிறப்பிக்கையாலே குணாதிக்ய முண்டாயிற்று என்றும் சொல்லுவர்கள்.
- ஸத்வஸூந்யமாவது – காலம்.
- இது, ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய், கலாகாஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய், நித்யமாய், ஈஶ்வரனுக்கு க்ரீடாபரிகரமாய், ஶரீரபூதமாயிருக்கும்.
- மற்றை இரண்டு அசித்தும் ஈஶ்வரனுக்கும், ஆத்மாவுக்கும், போக்ய போகோபகரண போகஸ்தாநங்களா யிருக்கும்.
- போக்யங்களாகிறன – விஷயங்கள்; போகோபகரணங்களாகிறன சக்ஷுராதிகரணங்கள்; போகஸ்தாநங்களாகிறன – சதுர்தஶ புவநங்களும், ஸமஸ்த தேஹங்களும்,
- இதில் முற்பட்ட அசித்துக்கு – கீழெல்லையுண்டாய், சுற்றும் மேலும் எல்லேயின்றிக்கேயிருக்கும்; நடுவில் அசித்துக்கு – சுற்றுங் கீழும் எல்லையின்றிக்கே மேல் எல்லையுண்டாயிருக்கும்; காலம் – எங்குமொக்கவுண்டாயிருக்கும்.
- ”காலந்தான் – பரமபதத்திலே நித்யம், இங்கு அநித்யம்” என்றும் சொல்லுவர்கள்.
- சிலர் காலத்தை இல்லையென்றார்கள்.
- ப்ரத்யக்ஷத்தாலும், ஆகமத்தாலும் ஸித்திக்கையாலே அது சொல்லவொண்ணாது.
- பலரும் திக்கென்று தனியே ஒரு த்ரவ்யம் உண்டென்றார்கள்.
- பல ஹேதுக்களாலும், ஆகாஶாதிகளிலே அந்தர்பூதமாகையாலே அதுவும் சேராது.
- சிலர் – “ஆவரணாபாவம் ஆகாஶம்” என்றார்கள்.
- பாவரூபேண தோற்றுகையாலே அதுவும்சேராது.
- வேறே சிலர், இதுதன்னை -நித்யம், நிரவயவம், விபு, அப்ரத்யக்ஷமென்றார்கள்.
- பூதாதியிலே பிறக்கையாலும், அஹங்காராதிகளில் இல்லாமை யாலும், கண்ணுக்கு விஷயமாகையாலும், அவை நாலும் சேராது.
- த்வகிந்த்ரியத்தாலே தோற்றுகையாலே, வாயு அப்ரத்யக்ஷ மென்கிறவதுவும் சேராது.
- தேஜஸ்ஸு பெளமாதிபேதத்தாலே பஹுவிதம்.
- அதில் – ஆதித்யாதி, தேஜஸ்ஸு ஸ்திரம், தீபாதிதேஜஸ்ஸு அஸ்திரம்.
- தேஜஸ்ஸுக்கு – நிறம் சிவப்பு, ஸ்பர்ஶம் ஒளஷ்ண்யம்,
- ஜலத்துக்கு – நிறம் வெளுப்பு, ஸ்பர்ஶம் ஶைத்யம், ரஸம் மாதுர்யம்.
138, பூமிக்கு – நிறமும், ரஸமும் ப.ஹுவிதம்.
- ஸ்பர்ஶம் – இதுக்கும், வாயுவுக்கும், அநுஷ்ணா ஶீதம்.
- இப்படி அசித்து மூன்றுபடிப்பட்டிருக்கும்.
அசித்ப்ரகரணம் முற்றிற்று.