பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
யாத்ருச்சிகப்படி
திருமந்த்ரப்ரகரணம்
யாத்ருச்சிக பகவத் கடாக்ஷத்தாலே பகவதாபிமுக்யம் பிறந்து ஸதாசார்ய ஸமாஶ்ரயணம் பண்ணின முமுக்ஷுவுக்கு ரஹஸ்ய த்ரயமும் அநுஸந்தேயம். அதில், ஸ்வரூபஶோதநார்த்தமாக ப்ரவ்ருத்தமாகையாலே ப்ரதமத்திலே அநுஸந்தேயமான திருமந்த்ரம் – ஸ்வரூபத்தையும், ஸ்வரூபாநுரூபமான பரமபுருஷார்த்தத்தையும் ப்ரதிபாதிக்கிறது.
அப்பரமபுருஷார்த்தத்துக்கு அநுரூபமான சரமஸாதந ஸ்வீகாரத்தை விதிக்கிறது – சரமஶ்லோகம்.
விஹிதோபாய பரிக்ரஹத்தையும், ஸப்ரகார புருஷார்த்த ப்ரகாரத் தையும் ப்ரதிபாதிக்கிறது – த்வயம்.
அதில் திருமந்த்ரம் – எட்டுத் திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக் கும். அதில் முதல் பதமான ப்ரணவம் – மூன்று பதமாயிருக்கும். அதில் ப்ரதமபதமான அகாரம் – ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வா வஸ்தைகளிலும் ஸர்வப்ரகாரத்தாலும் ஸர்வாத்மாக்களையும் ரக்ஷித்துக்கொண்டு போருகிற ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமென்கிறது. இரண்டாம் பதமாய் அவதாரணார்த்தமான உகாரம் – வேறே சிலர்க்கு ஶேஷமன்றென்கிறது. மூன்றாம் பதமாய், இருபத்தஞ்சாமக்ஷரமாய், ஜ்ஞாநவாசியாயிருந்துள்ள மகாரம் – கீழ்ச்சொன்ன அநந்யார்ஹ ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயம் தேஹாதி விலக்ஷணமான ஆத்மவஸ்து வென்கிறது.
இரண்டாம் பதமான நமஸ்ஸு ‘ந’ – என்றும், ‘ம:‘ என்றும் இரண்டு பதமாயிருக்கும். ‘ந’ என்றது – அன்றென்றபடி. ‘ம:‘ என்றது – எனக் கென்றபடி. இரண்டும் கூடி எனக்கன்று என்றபடி. எனக்கன்று என்கை யாவது எனக்கு நான் கடவனல்லனென்றிருக்கை
மூன்றாம் பதமான நாராயணபதம் – “ஸர்வஶேஷியான நாராயண னுக்கு நித்யகைங்கர்யம் பண்ணவேணும்” என்று ப்ரார்த்திக்கும்படி யைச் சொல்லுகிறது. நாராயணனென்றது – நாரங்களுக்கு அயந மென்றபடி. நாரங்களாவன – நஶியாத வஸ்துக்களினுடைய திரள். அவையாவன – திவ்யாத்மஸ்வரூபத்தையொழிந்த ஸர்வவஸ்துக் களும், அயநமென்றது – இவற்றுக்கு ஆஶ்ரயமென்றபடி. அங்ஙனன் றிக்கே, இவைதன்னை ஆஶ்ரயமாகவுடையன் என்னவுமாம். இத்தால் – மேன்மையும் நீர்மையும் சொல்லிற்றாய்த்து. இதில் சதர்த்தி – “ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வப்ரகார கைங்கர்யங்களையும் கொண்டருளவேணும்’ என்று ப்ரார்த்திக்கும் படியைச் சொல்லுகிறது.
ஆக, ‘ஸர்வரக்ஷகனான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதனாய் எனக்குரியனன்றிக்கேயிருந்துள்ள நான், ஸர்வ ஶேஷியான நாராயணனுக்கே நித்யகைங்கரியம் பண்ணப் பெறுவே னாக வேணும்’ என்று ப்ரார்த்தித்ததாய்த்து.
சரமஶ்லோகப்ரகரணம்
(ஸர்வதர்மாந்) கர்ம ஜ்ஞாந பக்திகளை ஸப்ரகாரமாக உபதேஶிக்கக் கேட்ட அர்ஜுநன், அவற்றின் அருமையாலும், தன் ஸ்வரூபத்துக்குச் சேராமையாலும், ஸாத்யலாப நிமித்தமாக ஶோகிக்க, “நான் முன்பு உபதேஶித்தவற்றை ஸவாஸநமாக விட்டு என்னையொருவனை யுமே உபாயமாகப் பரிக்ரஹி, நான் உன்னுடைய ஸர்வ விரோதிகளையும் போக்குகிறேன், நீ ஶோகியாதே கொள்” என்று இவனுடைய ஶோகத்தை நிவர்த்திப்பிக்கிறான்.
(ஸர்வதர்மாந்) எல்லா தர்மங்களையும். கீழ்ச்சொன்ன ஸபரிகரங்க ளான எல்லா உபாயங்களையும். (பரித்யஜ்ய) ருசி வாஸநைகளோடு விட்டு. (மாம்) உன் கார்யத்திலே அதிகரித்துக்கொண்டு நிற்கிற என்னை. (ஏகம்) ஒருவனையுமே. (ஶரணம்) உபாயமாக. (வ்ரஜ) அத்யவஸி. (அஹம்) ஸர்வஶக்தியான நான். (த்வா) என்னை யொழிந்த உபாயோபேயங்களை விட்டிருக்கிற உன்னை. (ஸர்வபாபேப்ய:) என்னைக் கிட்டுகைக்கு விரோதியாயிருந் துள்ளவை எல்லாவற்றில்நின்றும். (மோக்ஷயிஷ்யாமி) விடுவிக்கக்கடவேன், (மாஶுச:) நீ ஶோகியாதேகொள்.
ஆக, ‘ஸாங்கமான ஸர்வோபாயங்களையும் ஸவாஸநமாக விட்டு, வாத்ஸல்யாதி, கல்யாணகுணவிஶிஷ்டனான என்னை ஒருவனை யுமே, நிரபேக்ஷஸாதநமாக ஸ்வீகரி, ஸர்வஶக்தித்வாதி, கல்யாண குணவிஶிஷ்டனான நான், என்னையே உபாயமாகப் பற்றியிருக்கிற உன்னை, ஸமஸ்தப்ரதிபந்தகங்களில் நின்றும் முக்தனாக்குகிறேன், நீஶோகியாதேகொள்’ என்று அர்ஜுநனுடைய ஶோகத்தை நிவர்த்திப் பிக்கிறான்.
த்வயப்ரகரணம்
த்வயம், உபாய பரிக்ரஹத்தையும், உபேயப்ரார்த்தநத்தையும் ப்ரதிபாதிக்கிறது. இரண்டு அர்த்தத்தையும் ப்ரதிபாதிக்கையாலே இரண்டு வாக்யமாயிற்று. இரண்டு வாக்யமாகையாலே த்வயமென்று திருநாமமாயிற்று. இதில் பூர்வவாக்யம் மூன்று பதமாய், உத்தரவாக்யம் மூன்று பதமாய், ஆக ஆறுபதமாயிருக்கும்.
இதில் முதல்பதம் – பெரிய பிராட்டியாருடைய புருஷகார பாவத்தையும், ஈஶ்வரனுடைய வாத்ஸல்யாதிகுணசதுஷ்டயத் தையும், திவ்யமங்களவிக்ரஹயோகத்தையும் சொல்லுகிறது.
இதில் ஸ்ரீஶப்தம் – (ஸ்ரீயதே, ஶ்ரயதே) என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும், பெரியபிராட்டியாருடைய மாத்ருத்வப்ரயுக்தமான பந்தவிஶேஷத்தாலே இவர்கள் குற்றம் பாராதே எல்லார்க்குமொக்க ஆஶ்ரயணீயையாயிருக்கும் இருப்பையும், பத்நீத்வமாகிற பந்த விஶேஷத்தாலே ஸ்வரூபஸித்த்யர்த்தமாகவும் சேதநரக்ஷணார்த்த மாகவும் ஈஶ்வரனை ஆஶ்ரயித்துக்கொண்டிருக்கும் இருப்பையும் சொல்லுகிறது. “மதுப்”பாலே – ஈஶ்வரனுக்கும் பிராட்டிக்குமுண்டான நித்யஸம்பந்தத்தைச் சொல்லுகிறது. “நாராயண” ஶப்தம் – பிராட்டி தானே, அபராதங்களையிட்டு அகற்றப் பார்த்தாலும், (பெரியாழ் திரு 4.9.2). “என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று நோக்கக்கடவனான ஈஶ்வரனுடைய வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸெள ஶீல்ய ஸௌலப்யங்களைச் சொல்லுகிறது. “சரண” ஶப்தம் – ஸ்வரூபகுணங்களிலுங்காட்டில் தானே கார்யஞ்செய்யக் கடவதான விக்ரஹவைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. (ஶரணம்) உபாயமாக. உபாயமாகிறது – அநிஷ்டநிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் பண்ணித்தருமது. (ப்ரபத்யே) பற்றுகிறேன். பற்றுகையாவது – மாநஸாத்யவஸாயம்,
(ஸ்ரீமதே) பெரிய பிராட்டியாரோடே ஸம்ஶ்லிஷ்டனானவனுக்கு. இத்தால் – கைங்கர்ய ப்ரதிஸம்பந்திமிதுநமென்னுமிடத்தைச் சொல்லுகிறது. (நாராயணாய ) ஸர்வஶேஷியாயிருந்துள்ளவனுக்கு. இத்தால் – கைங்கர்யம் பண்ணுகைக்கு வகுத்த விஷயமென்கிறது. இதில் சதுர்த்தி, – தேஶகாலாவஸ்தாப்ரகார நியம விதுரமான நித்ய கைங்கர்ய ப்ரார்த்தநத்தை ப்ரதிபாதிக்கிறது. “நமஶ்” ஶப்தம் – கீழ்ச்சொன்ன கைங்கர்யத்தில் விரோதிநிவ்ருத்தியைச் சொல்லுகிறது. கைங்கர்யத்துக்கு விரோதியாகிறது – போக்த்ருத்வ ப்ரதிபத்தியும், மதீயத்வ ப்ரதிபத்தியும்.
ஆக, ஶ்ரீய:பதியாய் ஸர்வஸுலபனான நாராயணன் திருவடிகளையே அபிமதஸித்திக்கும் தத்விரோதி நிவ்ருத்திக்கும் உபாயமாக அத்யவ ஸிக்கிறேன், ஶ்ரீய:பதியாய் ஸர்வஸ்வாமியான நாராயணனுக்கு நித்யகைங்கர்யம் பண்ணப்பெறுவேனாக வேணும்; அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்களும் நிவ்ருத்தமாகவேணும் என்று ஸப்ரகார ஸாதந ஸ்வீகார பூர்வகமாக ஸ்வரூபாநுரூபமான நித்யகைங்கர்ய ப்ரார்த்தநத்தை ப்ரதிபாதிக்கிறது.
யாத்ருச்சிகப்படி முற்றிற்று.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.