[highlight_content]

ஶ்ரீ தொட்டாசார்யர் 01

ஶ்ரீ:

 

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ்ரீமத் வரவரமுநயே நம:

 

ஶ்ரீ ஶுத்த ஸத்வம் தொட்டாசார்யர் அருளிச்செய்த

யதிராஜ விம்ஶதி வ்யாக்யானம்

 

தனியன்

 

எறும்பியிலப்பா அருளிச்செய்தது

ய: ஸ்துதிம் யதிபதிப்ரஸாதி3நீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம்

தம் ப்ரபந்நஜநசாதகாம்பு33ம் நௌமி ஸௌம்யவரயோகி3புங்க3வம்

வ்யாக்யானம் – (ய:) “யதிவரதத்வவிதே:” (வரவரமுநி ஶதகம் 2) என்றும் “கருணைக ஸிந்தோ:” (வரவரமுநி ஶதகம்- 100) என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானாருடைய அவதாரவிஶேஷமாகவும், அவர் தம்முடைய யாதாத்ம்யதர்ஶியாகவும், தயாம்புராஶியாகவும் ப்ரஸித்தரான யாதொரு அழகிய மணவாள மாமுனிகள்.  யச்சப்தம் ப்ரஸித்த பராமர்ஶியிறே.  (யதிபதிப்ரஸாதிநீம்) யதீநாம்பதி: – யதிபதி:, யதிபதே: ப்ரஸாத: அஸ்யாம் அஸ்தீதி – யதிபதிப்ரஸாதிநீ, தாம் என்று வ்யுத்பத்தியாய், ஜிதேந்த்ரியர்களுக்கு உத்தரோத்தரம் இந்த்ரிய நிக்ரஹ விரோதம் வாராமல் பண்ணியும், மேன்மேலும் இந்த்ரிய நிக்ரஹம் அவிச்சின்னமாக அபிவ்ருத்தமாம்படி பண்ணியும் ரக்ஷகரான எம்பெருமானாருடைய ப்ரீதி விஷயமானவென்னுதல்.  “யதிபதிம் ப்ரஸாதயதீதி யதிபதிப்ரஸாதிநீ, தாம்” என்று வ்யுத்பத்தியாய் தன்னை அநுஸந்தித்தவர்கள் பக்கல் எம்பெருமானாரை அநுக்ரஹஶீலராம்படி பண்ணவற்றான வென்னுதல்.

இத்தால், இவர் எம்பெருமானாருடைய  நிரபேக்ஷ உபாயத்வத்தையும் ஸம்ஸாரிகளுடைய ஸர்வப்ரகாராநதிகாரத்வத்தையும், “அந்வயாதபி  சைகஸ்ய ஸம்யங் ந்யஸ்தாத்மநோஹரௌ  ஸர்வ ஏவ ப்ரமுச்யேரந் நரா: பூர்வேபரேததா” (பாரத்வாஜ ஸம்ஹிதா – 1.1.31) என்கிறபடியே இவர் ஸம்பந்தமே ஸர்வோத்தரமாகிறபடியையும் திருவுள்ளம் பற்றி இப்ரபந்தாநுஸந்தாநமாத்ரத்தாலேயாகிலும் எம்பெருமானார் ஸம்பந்தமுண்டாக அமையும் என்று அவர் தமக்கு ப்ரஸாதஜநகமான இப்ரபந்தத்தை அருளிச் செய்தார் என்கிறது. இரண்டு யோஜனையிலும் இப்ரபந்தம் எம்பெருமானாருக்கு அத்யந்தாபிமதமாகையாலே அத்தை அநுஸந்தித்தவர்கள் பக்கல் எம்பெருமானார் தன்னடையே ப்ரஸாதத்தைப் பண்ணுவாரென்கிறது.

(ப்ரஸாதிநீம்) “தாமரையாளாகிலும் சிதகுரைக்கும்” (பெரியாழ்வார் திரு – 4.9.2) என்னுமாப்போலே இச்சேதநனை நாம் கடாக்ஷிப்பதில்லை என்றிருக்கும் எம்பெருமானாரையும் இப்ரபந்தம் ஸ்வஶ்ரவணமாத்ரத்தாலே அவன்தன்னிடத்தில் ப்ரஸாதத்தைப் பண்ணியல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணுவிக்குமென்கிறது.

  இவ்வர்த்தம் ராமாநுஜாஷ்டகத்தில் ப்ரஸித்தமிறே.  இதுதன்னை “சுரக்கும் திருவும் உணர்வும்” (இரா.நூ– 43) என்று அமுதனார் அருளிச்செய்தாரிறே.

(யதிராஜ விம்ஶதிம்) ப்ரதி ஶ்லோகமும் யதிராஜ ஶப்தத்தையிட்டுச் சொல்லுகையாலே யதிராஜவிம்ஶதி என்கிற திருநாமமுடையவென்னுதல், அநுஸந்தாத்ரு விஷயத்தில் ப்ரேமம் கரைபுரண்டு ஓராயிரத்திற்படியே இருபது படியாய்த்து.  எம்பெருமானார் இவன் தனக்கு ரக்ஷகராம்படியுமென்கிறது.  இதில் படியென்று திருமேனி.  (ஸ்துதிம்) ஸ்தோத்ரத்தை.  “ஸ்தூயத இதி ஸ்துதி:” என்று.  எம்பெருமானாருடைய குணாநுபவரூபமான இப்ரபந்தத்தை (வ்யாஜஹார) இஶ்ஶப்தம் “ஜஹார, ஆஜஹார, வ்யாஜஹார” என்று த்ரிப்ரகாரமாயிருக்கையாலே “எந்தை திருவாய்மொழிப்பிள்ளை யின்னருளால் வந்த உபதேஶமார்க்கத்தை” (உபதேஶ.ரத் – 1) என்கிறபடியே பூர்வாசார்யர்களுடைய உபதேஶபரம்பரா ப்ராப்தமான அர்த்தத்தை ஸம்ஸாரிகளுடைய துர்கதியைக் கண்டு பொறுக்கமாட்டாதே இப்ரபந்தரூபேண அருளிச்செய்தாரென்கிறது.

அவ்வழியாலே, உபகாரகராய் அத ஏவ (ப்ரபந்நஜந சாதகாம்புதம்) ப்ரபந்ந ஜநங்களுக்கு – பராபிமாநமே உத்தாரகம் என்றிருக்குமவர்களாகிற சாதகங்களுக்கு வர்ஷுகவலாஹகரான; ப்ரபந்ந ஜநங்களை சாதகங்களாகவும், இவரை அம்புதமாகவும் நிரூபிக்கையாலே சாதகங்களுக்கு வர்ஷபிந்து வன்றிக்கே தாரகமில்லாதாப்போலேயாய்த்து ப்ரபந்நஜநங்களுக்கு  பராபிமாநமின்றியே உஜ்ஜீவனோபாயமில்லையென்கையும்.   அம்புதமாவது – ஸமுத்ரோதகத்தை தான் பருகி ஸ்வஸம்பந்தத்தாலே அதன் லாவண்யத்தைப் போக்கி மாதுர்யத்தை உண்டாக்கி அத்தை ஸர்வோபபோக்யமாகக் கொடுக்குமாப்போலே இவரும் யதீந்த்ராக்ய பத்மாகரகதமான பகவத் காருண்யரஸத்தைத் தாமநுபவித்து, அதில் ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்தாலே  வரும் அவைரஸ்யத்தை மாற்றி ஸாபராதசேதநரக்ஷணோபயோகியாக்கி அத்தை ஸர்வர்க்கும் கொடுக்குமவரென்கையும்.  நிரபேக்ஷாபராதர் என்கையும்  பரஸம்ருத்தியே ஸ்வஸம்ருத்தியா யிருக்குமவரென்கையும், தாம் நூதநமாக ஓரர்த்தத்தைக் கல்பித்து உபதேஶிக்கையன்றிக்கே, உபதேஶபரம்பராப்ராப்தமான அர்த்தத்தையே உபதேஶித்தாரென்கையும் தோற்றுகிறது.  அன்றிக்கே, ஸம்பந்திகளான ஜநங்களாகிற சாதகங்களுக்கு வார்ஷுகவலாஹகரான என்றுமாம்.  அப்போதைக்கு எம்பெருமானாருடைய கல்யாணகுணங்களைத் தாம் அநுபவித்து, அவைகளை தத்ஸம்பந்திகளுக்கு போக்யமாக உபதேஶிக்குமவரென்கிறது.  “பகவத் வந்தநம் கார்யம் குரு வந்தநபூர்வகம்” என்று ததீய விஷயத்திலுமொக்குமிறே.  (ஸௌம்யவரயோகி புங்கவம்) மஹோபகாரகராகையாலே ஸதாதர்ஶநீயராய் இவ்விரண்டாகாரத்தாலே  பெருமதிப்புத் தம் திருவுள்ளத்தில் தட்டாதவராய், பரஸம்ருத்தியே ப்ரயோஜநமாயிருக்கிற அழகிய மணவாள மாமுனிகளை (நௌமி) பெரிய ஜீயர் திருவடிகளை ஆஶ்ரயித்து அதிகதபரமார்த்தரான எறும்பிலியப்பா, யதிவரப்ரஸாத ஜநகமான .  இப்ரபந்தத்தை உபகரித்தருளின மஹோபகாரத்துக்கு தோற்றுத் தம்மை அத்தலைக்கு ஶேஷமாக்கிக் கொடுக்கிறார். “ணு – ஸ்தௌ” இறே.  இத்தால்அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது.  அதாவது – ஸ்வஸ்மிந் ஸ்வார்ஹதா  நிவ்ருத்தி, ஶாணோல்லீடமான மணிக்கு ஒளி ஸ்வாபாவிகமிறே.

தனியன் வ்யாக்யானம் முற்றிற்று.

 

யதிராஜவிம்ஶதி வ்யாக்யாநாவதாரிகை

ஶ்ரீய:பதியாய், பரமகாருணிகனான ஸர்வேஶ்வரன் அந்தமில் பேரின்பமான த்ரிபாத்விபூதியிலே ஶ்ரீவைகுண்டாக்ய திவ்ய நகரத்திலே ஸஹஸ்ரஸ்தம்ப  ஶோபிதமான திருமாமணிமண்டபத்திலே ஸஹஸ்ரபணாமண்டல மண்டிதனான திருவநந்தாழ்வானாகிற கோப்புடைய சீரிய சிங்காஸனத்தில் ”திருமகள் மண்மகளாயர்மடமகள்” (திருவாய் – 1.9.4) என்கிற லக்ஷ்மீ பூமி நீளா ஸமேதனாய் ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்து “க்ருஹீத தத்தத் பரிசார  ஸாதனைர்  நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம்” (ஸ்தோத்ர ரத் – 43)  என்கிறபடியே சத்ரசாமர தாள வ்ருந்தாத்யனேக கைங்கர்யோபகரண ஶோபிதஹஸ்தரான அயர்வறுமமரர்களாலே அநவரத பரிசர்யமாண சரணநளிநனாய்க் கொண்டு “ஏதத்ஸாமகாயந்நாஸ்தே” (தை.ப்ருகு) “ஸாமவேதகீதனாய” (திருச்சந்த விரு – 14) “தன்னையின்கவி பாடினவீசனை” (திருவாய் – 7.9.1) “யானாய்த் தன்னைத் தான் பாடி தென்னாவென்னுமென்னம்மான்” (திருவாய் –10.7.5) என்கிறபடியே ஸஹஸ்ரஶாகோபநிஷத்ரூபமான திருவாய்மொழி கேட்டருளாநிற்க “ஸ ஏகாகீ ந ரமேத” (மஹோபநிஷத்) “ஆற்றமிக்காளும்” (திருவாய் – 4.5.1) “நாதிஸ்வஸ்தமநா:” (?) என்கிறபடியே தேஶாந்தரகதனான புத்ரனிடத்தில் பித்ரு ஹ்ருதயம் செல்லுமாப் போலே ஸம்ஸாரி சேதநரிடத்தில் திருவுள்ளம் குடி புகுந்து உண்டதுருக்காட்டாதே ஸம்பந்தமொத்திருக்க இவர்கள் இவ்வநுபவத்தை இழந்திருக்கிறது தந்தம்மையறியாமையாலே யன்றோவென்று போர நொந்து திருவுள்ளமிரங்கி, “இனியாகிலும் இவர்கள் உஜ்ஜீவிக்கும் விரகறியும்படி என் என்று விசாரித்து, “சென்றால் குடையாமிருந்தால் சிங்காசனமாம்”  (முதல்திருவந்தாதி –53)  “நிவாஸ ஶய்யாஸன பாதுகா” (ஸ்தோத்ர ரத் – 40) இத்யாதியிற்படியே தம் திருவடிகளிலே ஒழிவில் காலத்திற்படியே எல்லா அடிமைகளும் தாமொருவருமே செய்வதாகப் பாரித்துக் கொண்டிருக்கிற திருவநந்தாழ்வானைக் கடாக்ஷித்தருள, அவனும் ”ததஸ்ததிங்கிதம் தஸ்ய ஜாநந்நேஷ ஜகந்நிதே: தஸ்மிந் தாமநி ஶடாராதே: புரே புநரவாதரத்” (யதீந்த்ரப்ரவணப்ரபாவம்) “பூத்வா பூயோவரவரமுநிர் யோகினாம் ஸார்வபௌம:” (ஶ்ரீஶைலேஶாஷ்டகம் – 1) என்கிறபடியே பாவஜ்ஞனாகையாலே ஸம்ஸாரிகளை *—த்தவர்களுக்கு  (ஶிதிலம்)  இருப்பிடமான இவ்விபூதியிலே மாறன் மறை பயிலுமவராகையாலே ஆழ்வார் திருவவதாரஸ்தலமான திருநகரியிலே அழகிய மணவாள மாமுனிகளாய் திருவவதரித்து திருவாய்மொழிப்பிள்ளை  சீரருளாலே யதிவரதத்வசித்தமராய் ஸம்ஸாரிகள் துர்கதியைக் கண்டுத் திருவுள்ளமிரங்கி இவர்கள் “ரக்ஷ்யாபேக்ஷம் ப்ரதீக்ஷதே” (லக்ஷ்மீ தந்த்ரம் – 17.80) என்கிறபடியே  ரக்ஷ்யாபேக்ஷ ப்ரதீக்ஷரான பகவத்விஷயத்துக்கு ஆளாகாமையைத் திருவுள்ளம் பற்றி, இனி இவர்களுக்கு “காரேய் கருணை இராமாநுசா” (இரா.நூ – 25) என்கிறபடியே “க்ருபாமாத்ராசார்யரான எம்பெருமானார் ஸம்பந்தமின்றி மற்றொரு உஜ்ஜீவனோபாயமில்லை” என்று அறுதியிட்டு உபதேஶாதிகளாலே அறிவிக்கப் பார்க்கில் ஸ்வோத்கர்ஷாதிகளையிட்டு அந்யதாகரிப்பரென்று “யத்யதாசரதி ஶ்ரேஷ்ட:”  (கீதா – 3.21) என்கிற ந்யாயத்தைத் திருவுள்ளம் பற்றி ஸ்வாநுஷ்டாநத்தாலே  திருத்தப் பார்க்கிறார்.  இப்ரபந்தத்தில் – விஷயத்தில் எம்பெருமானார்க்கு க்ருபை பண்ணியல்லது நிற்கவொண்ணாதபடியான இவ்வர்த்தத்தை அருளிச் செய்கிறாராகவுமாம்.

எம்பெருமானாருடைய உபாயத்வமாய்த்து ப்ரதிபாதிக்கப்படுகிறது உபக்ரமோபஸம்ஹாரங்களில். அநிஷ்ட நிவ்ருத்திபூர்வக இஷ்டப்ராபகத்வம் ஶுத்தமாகத் தோற்றுகையாலே, எங்ஙனேயென்னில் – உபக்ரமத்தில் ”ஶ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமாவிலாஶய பராங்குஶ பாதபக்தம்”  என்று ததீயபர்யந்தமான பகவத்கைங்கர்யத்தை ப்ரஸக்திபண்ணி, மேல் “காமாதி தோஷ ஹரம்” என்று தத் விருத்தங்களான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்கையாலும், முடிவில் “தாமந்வஹம் மம விவர்தய நாத தஸ்யா: காமம் விருத்தமகிலம் ச நிவர்த்தய த்வம்” என்கையாலும் உபாயம் எம்பெருமானார் என்கிறது.

த்வயத்தில் பூர்வோத்தரகண்டங்களாலே உபாயோபேயங்களுடைய ஐக்யம் சொல்லப்படா நிற்க, இங்கு உபாயம் எம்பெருமானாரும் உபேயம் எம்பெருமான் என்கையும் சேருமோவென்னில், சேரும்.  அங்கும்  திருவடிகளை உபாயமாகவும் ஶ்ரீய:பதியை உபேயமாகவும் சொல்லிற்றிறே.  அங்குத் திருவடிகள் அநந்யங்களன்றோ வென்றால் இவர் தாமும் திருவடிகளாகையாலே அநந்யராகக் குறையில்லை.  ஆகையாலேயிறே “விஷ்ணுஶ்ஶேஷீ” (பெரியவாச்சான்பிள்ளை அருளியதாக ஶ்ரீவைஷ்ணவஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்) என்கிற ஶ்லோகம் திருவவதரித்தது.

அன்றிக்கே, இவர் தாமே உபாயமும் உபேயமுமாகையாலே ஐக்யமென்னவுமாம்.  சரமோபாயோபேயங்கள், ப்ரதமோபாயோ பேயங்களுக்கு ஶேஷங்களாகையாலே ப்ரபத்தி ஶாஸ்த்ர விரோதமில்லை.

இனி, உபாயத்துக்கு வேண்டுவது – விஷய பூர்த்தியும், அபராத பூயஸ்த்வமும், ஆகிஞ்சன்யமும், அநந்யகதித்வமும், உபாயோபேய ப்ரார்த்தனை (உபேய ப்ரார்த்தனை) யுமாகையாலே அதில் முதலிரண்டு ஶ்லோகத்தாலே விஷயபூர்த்தியையும், மேல் ஶ்லோகத்ரயத்தாலே ப்ராப்ய ப்ரார்த்தனையையும், மேல் ஶ்லோக ஸப்தகத்தாலே  தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும், தம்முடைய தோஷபூர்த்தியையும், மேலொரு ஶ்லோகத்தாலே விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனையையும், மேலிரண்டு ஶ்லோகத்தாலே தம்முடைய அநந்யகதித்வத்தையும், மேலொரு ஶ்லோகத்தாலே விரோதி நிவ்ருத்திபூர்வக ப்ராப்யசரமாவதி ப்ரார்த்தனையையும், மேலொரு ஶ்லோகத்தாலே அத்தலையில் கார்யகரத்வோபயோகியான ஶக்தி விஶேஷத்தையும், மேலொரு ஶ்லோகத்தாலே எம்பெருமானுடைய ஸ்வஸம்பந்தி பரம்பரா விஷயமாக ப்ரவ்ருத்தமான பகவதேகோபாயத்வ ப்ரார்த்தனையே தத்ஸம்பந்திகளுக்கு ரக்ஷகமென்னுமத்தையும், மேலொரு ஶ்லோகத்தாலே ஆசார்யருசிபரிக்ருஹீதமாமதுவே தத்ஸம்பந்திகளுக்கு ப்ராப்ய மென்னுமத்தையும் அருளிச்செய்து, நிகமத்தில் அடியேனுடைய அஜ்ஞானாதிகளை கடாக்ஷித்து இவன் அநந்யகதிகனென்று திருவுள்ளம் பற்றி, இப்ரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை அங்கீகரித்தருளவேணுமென்று விண்ணப்பம் செய்து தலைக்கட்டுகிறார்.

இதில் ப்ரதிஶ்லோகமும் எம்பெருமானாரை “யதிராஜ” “யதீந்த்ர” என்று ஸம்போதிக்கிறது;  “யதத இதி – யச்சதீதி – யதி:” என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் சொல்லப்படுகிற ப்ரஹ்ம ப்ராப்தி ப்ரபதநமும், இதர விஷய வைராக்யமுமே இவருக்கு ப்ரகாஶ ஹேதுவாகையாலேயென்றாதல், ஸ்வார்த்த ப்ரயத்நத்தையும், இதர விஷயத்தோடே சேர்ந்து அதில் நின்றும் வ்யாவ்ருத்தராய், பரார்த்தைக ப்ரயத்நபரராயிருக்குமதுவே தத்ஸம்பந்திகளுக்கு பற்றாஶென்று இருக்குமவராகையாலே யென்றாதல், இதிறே இங்குத்தைக்கு அஸாதாரணமான குணம்.

திருவாய்மொழி நூற்றந்தாதி திருவாய்மொழிக்கு ஸங்க்ரஹமானாப்போலவும், உபதேச ரத்தினமாலை குருபரம்பரா ஸங்க்ரஹமானாப்போலேயும், இப்ரபந்தம் ப்ரபந்நகாயத்ரீ ஸங்க்ரஹமாயிருக்கும்.

அவதாரிகை முற்றிற்று.

 

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்ஶதி

 

  1. ஶ்ரீமாத4வாங்க்ரிஜலஜத்3வய நித்யஸேவா

ப்ரேமாவிலாஶய பராங்குஶபாத34க்தம் |

காமாதி3தோ3ஷஹரம் ஆத்மபதா3ஶ்ரிதானாம்

ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்4நா ||

அவதாரிகை – முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞானபூர்த்தியையும், அதினுடைய ஸம்ப்ரதாய ப்ராப்தியையும் அத்தால் இவர் பெற்ற நன்மையையும் அருளிச்செய்யா நின்றுகொண்டு ப்ராரீப்ஸித க்ரந்த பரிஸமாப்த்யர்த்தம்  ஆசார்யாபிவாதநரூப மங்களத்தைச் செய்தருளுகிறார்.

வ்யாக்யானம் – (ஶ்ரீமாதவேத்யாதி) மாயா தவ: மாதவ: என்கிற வ்யுத்பத்தியாலே ஶ்ரீய:பதிக்கு வாசகமான மாதவ ஶப்தத்துக்கு விஶேஷமாகையாலே ஶ்ரீ ஶப்தம் ஶ்ரீய:பதியினுடைய “திருவுக்கும் திருவாகிய செல்வா” (பெரிய திரு – 7.7.1) என்றும் “க:ஶ்ரீஶ்ரீய: (ஸ்தோ.ர –12) என்றும் ”ஶ்ரீய:ஶ்ரீயம்” (ஸ்தோ.ர – 45) என்றும் சொல்லுகிறபடியே ஸர்வமங்களாவஹையான பெரியபிராட்டிக்கும் மங்களாவஹன் என்கிற மேன்மையைச் சொல்லுகிறது.  அன்றிக்கே, ஶ்ரீ ஶப்தம் லக்ஷணயா ஶ்ரீமத்வாசகமாய் மேல் சொல்லப்படுகிற பிராட்டி ஸம்பந்தத்தாலே  தலையெடுத்த வாத்ஸல்யாதி குண ஸம்ருத்தன் ஶ்ரீய:பதி என்னுமத்தைச் சொல்லுகிறது.  அதுவுமன்றிக்கே, ஶ்ரீ ஶப்தம் மா ஶப்தத்துக்கு விஶேஷணமாய் ஶ்ரீயானமாவென்று பிராட்டியுடைய ப்ராப்யத்வ புருஷகாரத்வோபயோகிகளான ஸேவ்யஸேவநாதி பாவங்களையும் ஜ்ஞானஸ்வரூப ஜ்ஞானகுணகத்வாதிகளையும் சொல்லுகிறது.

அங்ஙனுமன்றிக்கே, “ஶ்ரியா மாதவ:” என்று வ்யுத்பத்தியாய் ஶ்ரீ ஶப்தத்தாலே “யதிதம் ஸௌந்தர்ய லாவண்யயோ:” (ஶ்ரீ ஸ்தவம் – 7) என்கிறபடியே ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குண ஸம்ருத்தியைச் சொல்லி, அத்தாலே பிராட்டிக்கு  வல்லபனென்னுமத்தைச் சொல்லுகிறது.  அங்ஙனுமன்றிக்கே மாதவஶப்தம் ரூட்யா பகவத்வாசகமாய் “ஶ்ரியாயுக்தோமாதவ:”  என்று மத்யமபதலோபஸமாஸமாய், ஶ்ரீய:பதியினுடைய  என்றுமாம்.

அங்ஙனுமன்றிக்கே, ஶ்ரீ ஶப்தம் அங்க்ரித்வய ஶப்தத்துக்கு விஶேஷணமாய் திருவடிகளுடைய பரஸ்பரஸாஹித்யத்தால் வந்த ஶோபாதிஶயத்தைச் சொல்லவுமாம்.  மாதவ ஶப்தத்தாலே த்வயத்தில் பூர்வோத்தரகண்டங்களில் ஶ்ரீமச்சப்தார்த்தமும் குணஸம்ருத்திவாசகமான ஶ்ரீஶப்தத்தாலே பூர்வோத்தரகண்டங்களில் நாராயண ஶப்தார்த்தமும் சொல்லப்பட்டது.  ஆக, ஸமஸ்த கல்யாணகுணாத்மகனான ஶ்ரீய:பதியினுடையவென்கையாலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஒரு மிதுநமென்கிறது.

 (அங்க்ரிஜலஜ) ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்யாதிகளாலே தாமரைக்கு ஒரு போலியான திருவடிகளுடைய.  மாதவாங்க்ரி என்கையாலே திருவடிகளுடைய உத்தேஶ்யத்வமும், ஜலஜஸாம்யத்தாலே அநுத்தேஶ்யமா யிருந்ததேயாகிலும் விடவொண்ணாத போக்யதாதிஶயமும் சொல்லப்படுகிறது.  (த்வய) இரண்டினுடைய.  இத்தால்  – ஸஹாயாந்தரநைரபேக்ஷ்யமும்  ஸத்ருஶாந்தரராஹித்யமும் பரஸ்பரஸாஹித்யத்தால் வந்த ஶோபாதிஶயமும் சொல்லப்படுகிறது.  அங்க்ரிஜலஜத்வய வென்கையாலே சரண  ஶப்தமும் த்விவசனார்த்தமும் சொல்லப்படுகிறது.

(நித்ய) “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” (திருவாய் – 3.3.1) “ஸர்வேஷு  தேஶகாலேஷு ஸர்வாவஸ்த்தாஸு சாச்யுத கிங்கரோஸ்மி”  (ஜிதந்தே) என்கிறபடியே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் உளதான “நித்யோநித்யாநாம்” (ஸ்வே. -6.13) “ஒண் பொருள் ஈறில” (திருவாய் – 1. 2.10) என்கிறபடியே ஸ்வரூபம் நித்யமானால் தன் நிரூபக தர்மமும் நித்யமாய்ச் செல்லுமிறே.  (ஸேவா) தாஸ்ய பர்யாயமான ஸேவா ஶப்தத்தாலே “வழுவிலாவடிமை” (திருவாய் – 3.3.1) என்கிறபடியே ஸ்வபோக்த்ருத்வ கந்தரஹிதமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது.

இதுதான் ஸமஸ்தகல்யாணகுணாத்மகனான ஶ்ரீய:பதி விஷயத்தில் செய்யுமதாகையாலே ஸுகரூபமாயும், ஸ்வரூபாநுரூபமாயுமிருக்கும்.  இதுதான் த்வயத்தின் பூர்வ கண்டத்தில் “ஶரணம் ப்ரபத்யே” என்கிற பதங்களுடைய அர்த்தமும் உத்தரகண்டத்தில் நமஶ்ஶப்தார்த்தத்தோடு கூடின சதுர்த்யர்த்தமும் சொல்லப்படுகிறது.  பஜந பர்யாயமான ஸேவா ஶப்தம் உபாயவாசியிறே.  இதுதானும் ஈஶ்வர க்ருஷி பலமாகையாலே ப்ராப்யாந்தர்கதமாயிறே இருப்பது.  ஆக, இவ்வளவால் த்வயார்த்தம் சொல்லப்படுகையாலே, உபாஸகனுக்கு ஸ்மர்தவ்யவிஷய ஸாரஸ்யத்தாலே உபாஸநம் அத்யந்த ப்ரியமாயிருக்கிறாப்போலே ப்ரபந்நாதிகாரிகளுக்கு த்வயம் அத்யர்த்த ப்ரியம் என்கிறது.  ப்ரபந்நஜநகூடஸ்தரிறே ஆழ்வார்.  (ப்ரேம) ப்ரேம ஶப்தத்தாலே ப்ராப்தமுமாய் போக்யமுமாய்  ஸ்வரூபாநுரூபமான நித்ய கைங்கர்யத்திலே ப்ரேமை இல்லாவிடில் தரிக்கமாட்டாதபடியான ப்ரேமத்தைச் சொல்லுகிறது.  இத்தால் ப்ராப்த த்வராதிஶயத்தைச் சொல்லுகிறது.  (ஆவிலாஶய) ஆஶயமாவது – அபிப்ராயம்.  அதாவது நிஶ்சயாத்மக ஜ்ஞானம்.  இத்தால் ஈஶ்வரனே உபாயோபேயங்கள் என்கிற அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது.  ஆவிலமாவது – ப்ராப்யத்வராதிஶயத்தாலே அநந்யோபாயத்வ விரோதியான மடலெடுக்கை முதலான ஸ்வயத்நத்திலே அந்வயிக்கை.

ஆனால் இது கூடுமோவென்னில் ஸ்வஸ்வரூபத்தைப் பற்றிவரும் கலக்கமாய்த்து த்யாஜ்யமாகிறது.  அத்தலையில் வைலக்ஷண்யமடியாக வருமவையெல்லாம் ப்ராப்யாந்தர்கதமாகையாலே கூடும்.  ஆக இப்படிக் கலங்கின ஆஶயத்தையுடையவரான  (பராங்குஶ) பரர்களுண்டு – ஈஶ்வரனுக்கு குணமில்லை, விக்ரஹமில்லை, விபூதியில்லை, முதலிலே அவன்தானுமில்லையென்னும் குத்ருஷ்டிகளும் ஶூந்யவாதிகளும்.  அவர்களுக்கு அங்குஶமாகையாவது – மத்தகஜத்தின் தலையிலே அங்குஶத்தை நாட்டி மதத்தை நிரஸித்து, அத்தை ஸ்வவஶமாக்கிக் கொள்வாரைப்போலே ஈஶ்வரன் இவரையிட்டு குமதிகளுடைய துர்மதத்தைப் போக்கி அவர்களை ஸ்வவஶமாக்கிக் கொள்ளுகைக்கு ஸாதனமாயிருக்கை.  இவர்தாம் “உயர்வற உயர்நலம்” (திருவாய் – 1.1.1) என்று தொடங்கி குண விக்ரஹ விபூதிவிஶிஷ்ட ஈஶ்வரனை அவன் மயர்வற மதிநலம் அருளக் கண்டு அநுபவித்து, பிறர்க்கும் உபதேஶித்து ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலாக்கினாரிறே.  ஆகையால் அங்குஶமென்னக் குறையில்லை.

அன்றிக்கே, பரனுண்டு – ஈஶ்வரன்.  அவனுக்கு அங்குஶமானவரென்னுமாம்.  அப்போதைக்கு அங்குஶமாவது – ஆனையின் தலைமேலே தானிருந்து தந்நுதியாலே அத்தை வஶீகரிக்குமாப்போலே இவரும் தம்முடைய ஜ்ஞானபக்திவைராக்யங்களாலே ஈஶ்வரனை தலைதுலுக்கும்படி பண்ணி “எமர் கீழ்மேலெழுபிறப்பும் கேசவன் தமர்” (திருவாய் – 2.7.1) என்று தம் வாயாலே சொல்லலாம்படி பண்ணி வஶீகரித்தாரொருவர் என்கிறது.  ஆக, ஈஶ்வரசேதநரிருவரையும் வஶீகரித்த ஆழ்வாருடைய; ஈஶ்வரசேதநரிருவரையும் வஶீகரித்து, ஒன்றோடொன்றைச் சேரவிடுமவனிறே ஆசார்யன்.  இவர்தாம் பரமாசார்யரிறே.

(பாதபக்தம்) திருவடிகள் விஷயமான பக்தியே தமக்கு நிரூபகமாய் இருப்பவராய், இத்தால் பரமாசார்யரான ஆழ்வாருக்கு பகவத்ப்ரேமம் நிரூபகமானாப்போலே எம்பெருமானாருக்கு ஆழ்வார் திருவடிகளில் பக்தியாய்த்து நிரூபகமென்கிறது.  “பக்தம்” என்று ஸாமான்யமாகச் சொல்லுகையாலே ஈஶ்வர விஷயத்திலாழ்வாருக்குண்டான பரபக்தி பரஜ்ஞான பரமபக்திரூபாவஸ்தாத்ரயவிஶிஷ்டமான பக்தி இவர் தமக்கு ஆழ்வார் விஷயத்திலுண்டென்கிறது.  இவர் தாம் மாறனடிபணிந்துய்ந்தவரிறே.  ஆக பூர்வார்த்தத்தாலே “ஆசார்யஸ்ய ஜ்ஞானவத்தாமநுமாய” (ஶ்ரீ பாஷ்யம்) என்றும், “ஞானமநுட்டானமிவை நன்றாகவேயுடையனான குருவை யடைந்தக்கால்” (உப.ரத் – 61) என்றும் சொல்லுகிறபடியே ஸஹேதுகமாக இவருடைய ஜ்ஞானபூர்த்தியையும் அதினுடைய ஸம்ப்ரதாயபரம்பராப்ராப்தியையும் அருளிச்செய்தாராய்த்து.  ஸ்வாஶ்ரித விஷயத்தில் இவர் செய்யும் உபகாரத்தைச் சொல்லுகிறது மேல் (காமாதித்யாதியால்) காமமாவது – அபேக்ஷாத்மஜ்ஞாநம்.  அதாவது – விஷயாந்தரஸ்ப்ருஹை.  அத்தை ஆதியாக உடைத்தான தோஷங்களுண்டு – க்ரோத லோப மோஹ மத மாத்ஸர்யங்கள்.  அவைகளைப் போக்குமவராயென்னுதல்.  காமத்தை ஸ்வகாரணமாக வுடைத்தான தோஷங்களுண்டு – க்ரோதலோபாதிகள்.  அவற்றைப் போக்குமவராய் என்னுதல்.  காமமடியாகவிறே க்ரோதலோபாதிகள் உண்டாவது.  அவற்றுக்கடியான காமத்தைப் போக்கவே அவை தன்னடையே போக்கினவையாமிறே.

காமம் உபலக்ஷணமாய், அத்தாலே அரிஷட்வர்க்கத்தைச் சொல்லி, ஆதி தோஷ பதங்களாலே அதுக்கு ஹேதுவான அஹங்காரத்தைச் சொல்லி, ஹரமென்று அத்தைப் போக்குமவரென்னுதல்.  இவை எல்லாவற்றாலும் அஹங்கார மமகார நிவர்த்தகரென்கிறது.  கீழ் “நித்ய ஸேவா” என்று பகவத் கைங்கர்யத்தைச் சொல்லி, “பராங்குஶ பாதபக்தம்” என்று – அதின் வ்ருத்திரூபமான ததீய கைங்கர்யத்தைச் சொல்லி, இங்கு “காமாதி தோஷஹரம்” என்று தத்ப்ரதிபந்தக  நிவாரகரென்கையாலே கீழ்ச்சொன்ன ததீயபர்யந்தமான பகவத்கைங்கர்யத்துக்கு இவரே ப்ராபகரென்கிறது.

இப்படி சொல்கிறதுதான் ஆருக்கென்னில் (ஆத்மபதாஶ்ரிதானாம்) தம் திருவடிகளை ஆஶ்ரயித்தவர்களுக்கென்கிறார்.  “பதாஶ்ரிதானாம்” என்று திருவடிகள் ஸம்பந்தத்தையே நிரூபகமாகச் சொல்லுகையாலே வர்ணாஶ்ரமாதி நியதிகளில்லை என்கிறது.  இத்தால் ப்ரதம பர்வமோபாதி சரமபர்வமும் ஸர்வாதிகாரமென்கிறது.  ஆத்மபத – தம் திருவடிகளை.  ஆஶ்ரிதானாம் – மாதாபிதேத்யாதிப்படியே ஸர்வப்ரகார ப்ராப்யமாக பற்றினவர்களுக்கு “ந தேவலோகாக்ரமணம்” (ரா.அ – 31.5) என்கிறபடியே தத்விருத்தமான காமாதி தோஷங்களுக்கு நிவாரகரென்னுமாம்.  அப்போது ஸேவையும் பக்தியும் இவருக்கு நிரூபகங்கள்.  இத்தால் இவர்தாமே உபாயமும் உபேயமுமென்கிறது.

இவ்விடத்தில் எம்பெருமானார் ஸம்பந்தமாகிறது – எம்பெருமானாருடைய ஸாக்ஷாத் ஸம்பந்தமும், அவராலே ஆசார்ய பதத்திலே நியுக்தரான எழுபத்திநாலு ஸிம்ஹாஸநஸ்த்தருடைய ஸம்பந்தி பரம்பரையிலே தானும் ஒருவனாகை.  இத்தாலே நியுக்தருடைய ஸம்பந்தி பரம்பரா ஸம்பந்தமும் கார்யகரமென்கிறது.

இவர் தமக்கு வாசகமான திருநாமமேதென்ன, (ராமாநுஜம்) க்ருஷ்ணாவதாரத்துக்கு அல்லாத திருநாமங்களும் கிடக்க கோவிந்தன் என்கிற திருநாமம் “கோவிந்தேதி யதாக்ராந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்” (பார.உத் – 58.22) என்கிறபடியே ப்ரதாநமானாப்போலே “ந சேத் ராமாநுஜேத்யேஷா” (ஶ்ரீவரவர முனி விஷயக முக்தகம் – 5) என்னும்படி இவ்வவதாரத்துக்கு ப்ரதாநமாய்க்காணும் ராமாநுஜனென்கிற திருநாமமிருப்பது.

(யதிபதிம்) ஜிதேந்த்ரியரில் தலைவரான எம்பெருமானாரை.  ஜிதேந்த்ரியராவார் – சக்ஷுராதி இந்த்ரியங்களை ரூபாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே சேர்க்குமவர்கள்.  அவர்களில் தலைவராகையாவது – ஸர்வேந்த்ரியாப்யாயகமான பகவதநுபவமே தமக்கு புருஷார்த்தமென்றிருக்கையன்றிக்கே, அநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யத்தாலுண்டான அத்தலையில் முகவிகாஸமே தனக்குப் புருஷார்த்தமென்றிருக்கை.

(யதிபதிம்) ஆஶ்ரித ப்ரயத்ந ஸாபேக்ஷரன்றிக்கே தாமே மேல் விழுந்து ரக்ஷிக்கும் ஸ்வபாவரான எம்பெருமானாரை என்றுமாம்.  (ராமாநுஜம் யதிபதிம்) “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு” (மூன்றாம் திரு – 14) என்கிறபடியே ஸர்வாங்க ஸுந்தரரான பெருமாளிடத்திலே திருவுள்ளத்தை வைத்து திருவவதரித்தவராகையாலே இதரவிஷயவிரக்தரான எம்பெருமானாரை என்னுமாம்.

“த்வயி கிஞ்சித்ஸமாபன்னே கிம் கார்யம் ஸீதயா மம” (ரா.யு – 41.4) “அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ” (ரா.பா – 1.85) என்று அவன் ஸ்வார்த்த நிரபேக்ஷனாய் பரார்த்தைகபரனாய் இருக்குமாப்போலேயாய்த்து அவனை அநுஸரித்து திருவவதரித்த இவர் ஸ்வார்த்த நிரபேக்ஷராய் பரார்த்தைகபரராயிருக்கும்படி என்னவுமாம்.

அன்றிக்கே, இவர் ஆஶ்ரிதர்க்கு இஷ்டாநிஷ்டப்ராப்தி பரிஹாரங்களைச்செய்யும்படிஎங்ஙனேயென்ன,(ராமாநுஜம்)அதுவோ திருநாமத்தாலே அறியலாமென்கிறார்.  “ராமாம் அநுஸ்ருத்ய ஜாத: ராமாநுஜ:” என்று வ்யுத்பத்தியாய் அத்தால் நாரீணாம் உத்தமையான பிராட்டியை அநுஸரித்து திருவவதரித்தவராகையாலே பிராட்டி ராவணனுக்கு ஹிதம் சொல்லியும், ஏகாக்ஷீ, ஏககர்ணீ முதலான எழுநூறு ராக்ஷஸிகளுக்கு தம் க்ருபையாலே தானே “பவேயம் ஶரணம் ஹி வ:” (ரா.ஸு – 58.93) என்றாப்போலே இவரும் ஸம்ஸாரிகள் படும் அலமாப்பு கண்டு பொறுக்கமாட்டாதே, தாமேமேல்விழுந்து இவர்களுக்கு ஹிதம் செய்வது தம் கார்யத்துக்காகவன்றிக்கே அவர்கள் உஜ்ஜீவிக்கையே ப்ரயோஜநமாகவென்கை.

(ராமாநுஜம் யதிபதிம்) “இராமானுசனெனும் மாமுனியே” (இரா.நூ – 16) என்கிறபடியே ராமானுசனென்னும் திருநாமமுடைய எம்பெருமானாரை.  (யதிபதிம்) ஸ்வாநுஷ்டாநத்தாலே ஸ்வாஶ்ரித ரக்ஷகரான எம்பெருமானாரையென்னுமாம்.  கீழ், “பாதபக்தம்” என்று சொல்லிவைத்து இங்கு “யதிபதிம்” என்கையாலே இவருடைய ஜ்ஞாநபக்திவைராக்யங்கள் சொல்லப்பட்டன.

(ப்ரணமாமி மூர்த்நா) கீழ் சொன்னபடியே இவர் செய்த மஹோபகாரங்களைக் கண்டு பெருமாள் விஷயத்தில் பிராட்டி “ஶிரஸாபிவாதய” (ரா.ஸு – 38.54) என்றாப்போலே தாமும் இவ்விஷயத்தில் தலையால் வணங்குகிறார்.  (மூர்த்நா ப்ரணமாமி) க்ருதஜ்ஞதாதிஶயமிருந்தபடி யென்தான்.  நினைவும் சொல்லும் பிற்படும்படி காயங்காணும் முற்பட்டது.

அன்றிக்கே, “மூர்த்நா” என்று காயிகத்தை முந்துறச் சொல்லி, உபலக்ஷணதயாஇரண்டுக்குமடியானமாநஸிகத்தைச்சொல்லவும்.  ஆக கரணத்ரயத்தாலும் ஸேவிக்கிறாரென்னவுமாம்.

அன்றிக்கே, “தத்விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவ அபிகச்சேத்” (முண்டக – 1.2.12) என்றும், “அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே” (திருவாய் – 2.3.2) என்றும் சொல்லுகிறபடியே ஶிஷ்யனுக்கு ஜ்ஞாநலாபம் ஆசார்யனாலேயாகையாலே ததர்த்தமாக அவர் தம்மையே ஶரணமாகப் பற்றுகிறார் என்னவுமாம்.

“நமாமி” என்று – “ந நமேயம்” (ரா.யு – 36.11) என்று இருக்கும்படி பண்ணுகிற அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லி, “ப்ர” என்கிற உபஸர்க்கத்தாலே அதினுடைய நிஶ்ஶேஷ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது.  இத்தால் ஆத்ம ரக்ஷணத்தில் தனக்கொரு அந்வயமின்றிக்கே அவனிட்டவழக்காய் இருக்குமிருப்பைச் சொல்லுகிறது.

ஶிஷ்யலாபம் ஆசார்யனுக்குப் புருஷார்த்தமிறே.  “ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தி நிஶ்சயாத் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சனமிமம் ஜநம்” (பூர்வதிநசர்யா – 11) என்று ஸ்வாங்கீகாரத்தை அத்தலைக்குப் புருஷார்த்தமாகவிறே அப்பா அருளிச்செய்தது.  (யதிபதிம் மூர்த்நா ப்ரணமாமி) அவர் மேன்மைக்கு எல்லை  நிலமானவோபாதி இவர் தாழ்மைக்கு எல்லைநிலமாகிறார்.  அவர் மாறநடி பணிந்துய்ந்தவர்; இவர் யதீந்த்ர ப்ரவணர்.  இத்தால் ஆசார்யாபிவாதநரூப மங்களத்தைச் செய்தருளுகிறார்.

  1. ஶ்ரீரங்கராஜ சரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்

ஶ்ரீமத்பராங்குஶ பதா3ம்புஜ ப்4ருங்கராஜம் |

ஶ்ரீப4ட்டநாத2 பரகாலமுகா2ப்3ஜமித்ரம்

ஶ்ரீவத்ஸசிந்ஹ ஶரணம் யதிராஜமீடே3 ||

அவதாரிகை –

“உபா4ப்4யாமேவ பக்ஷாப்4யாம் ஆகாஶேபக்ஷிணாம்க3தி: |

ததை2வ ஜ்ஞாநகர்மாப்4யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” ||

(நார.பு – 61.11) என்கிறபடியே ஜ்ஞாநாநுஷ்டானங்களிரண்டும் பகவத் ப்ராப்தி ஸாதநமாக ஶாஸ்த்ரவிஹிதங்களாகையாலே கீழ் ஶ்லோகத்தில் இவருடைய ஜ்ஞான பூர்த்தியைச்சொல்லி இஶ்ஶ்லோகத்தில் ததநுகுணமான அநுஷ்டாநபூர்த்தியை அருளிச்செய்கிறார் ஶ்ரீரங்கேத் யாதியால்.

வ்யாக்யானம் – ஈஶ்வரனே உபாயம் என்றிருக்குமிவர்க்கு ஜ்ஞாநாநுஷ்டாநங்களைக் கொண்டு ப்ரயோஜநம் என்னென்னில் இவர்க்கு இவற்றால் வருமதொரு ப்ரயோஜநமில்லையேயாகிலும், இவைதான் ஸ்வரூபாநு பந்திகளாகையாலே விடவரிதாயிருக்கும்.  ஸ்வரூபாநு பந்திகளாய்த்தது கைங்கர்யரூபங்களாகையாலே “ரஜ்யதே அநேநேதி ரங்கம்” “ரஜ்யதே அஸ்மின் இதி ரங்கம்” என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பெரியபெருமாளுக்கு ஸர்வ சேதநரும் தன்னையாஶ்ரயிக்கையால் வந்த ப்ரீதிக்குக் காரணமாகையால் அவர் தமக்கே ப்ரீதி விஷயமான தேஶமென்கிறது.

அதுக்கு மேலே ஶ்ரீமத்த்வமாகிறது “தேஶாந்தரகதோவாபி த்வீபாந்தரகதோவா ஶ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணிபத்ய ந ஸீததி, ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் க்ஷுதப்ரஸ்கலநாதிஷு ப்ரஹ்மலோகமவாப்நோதி ஸத்ய: பாபக்ஷயாத் நர:” இத்யாதியில் சொல்லுகிறபடியே தனக்குண்டான பகவதங்கீகாரபலத்தாலே தானிந்த திக்கைநோக்கி தண்டம் ஸமர்ப்பித்தல், பேரைச் சொல்லுதல் செய்வாரென்ன, அவ்வளவாலே அவர்களுக்குண்டான ஸமஸ்த துரிதங்களையும் போக்கி அபிமதபலவிஶேஷத்தைக் கொடுக்கைக்கீடான ஶக்தி விஶேஷமாதல், “ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமாநம் ரங்கஸம்ஜ்ஞிகம்” ( அஷ்டோத்தரஶத) என்கிறபடியே ஸ்வயம் வ்யக்த திவ்யதேஶங்களில் ப்ராதாந்யமாதல்.

ஶ்ரீ ஶப்தம் பூஜ்யவாசியாகையாலே பகவத் ஸம்பந்தத்தாலுண்டான பூஜ்யதையைச் சொல்லவுமாம்; ப்ராப்யதையைச் சொல்லவுமாம். அன்றிக்கே ”ஶ்ரியா ரங்கம் – ஶ்ரீரங்கம்” என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே “ஔதார்ய காருணிகதாஶ்ரித வத்ஸலத்வபூர்வேஷு ஸர்வம் அதிஶயிதம் அத்ர மாத:” (ஶ்ரீகுணரத்நகோஶம் – 57) என்கிறபடியே பெரியபிராட்டியாருடைய ஔதார்யாதி குணங்களுக்கு ப்ரகாஶகமான தேஶமென்னவுமாம்.

(ராஜ) அத்தேஶத்துக்கு நிர்வாஹகனாகையாலே வந்த ஔஜ்ஜ்வல்யத்தையுடையன் என்னுதல்;  தன்னுடைய ஸௌலப்யாதி குணங்களுக்கு ப்ரகாஶகமான தேஶத்தைப் பெறுகையாலே வந்த ஔஜ்ஜ்வல்யத்தை யுடையவன் என்னுதல்.  பெரிய பிராட்டியார் தனக்குத் தன்னைக் கொடுக்கைக்குப் பாங்கான தேஶத்தைப் பெறுகையால் வந்த ஔஜ்ஜ்வல்யத்தையுடையவன் என்னுதல்.

(ஶ்ரீரங்கராஜ) உபயவிபூத்யைஶ்வர்யத்தைக் காட்டில் இவ்வைஶ்வர்யம் பெறுகைக்கும் விலக்ஷணமாய்த் தானுமிருப்பதென்கிறார். (ஶ்ரீரங்கராஜ) அவன் ஒன்றை அபிமாநிப்பது அது தனக்கு நிரூபகமாகவிறே அபிமாநிப்பது.  (சரணாம்புஜ) பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளுக்கு உபமாநம் நேர்நில்லாமையாலே உபமேயந்தன்னையே உபமாநமாகச் சொல்லுகிறது.

(ராஜஹம்ஸம்) அத்திருவடித்தாமரைகளில் விஹரிக்கும் ராஜஹம்ஸம் காணும் இவரென்கிறார்.  அதாவது – ராஜஹம்ஸத்துக்குத் தாமரை விஹாரஸ்தாந மாகிறாப்போலே  இவருக்கு பெரிய பெருமாள் திருவடிகள் விஹாரஸ்தாநமானபடியும் என்கை.  “ரமந்தே யோகிநோ அநந்தே ஸத்யாநந்தே சிதாத்மநி” என்னக்கடவதிறே.  ஆகையாலே “அத்ரைவ ஶ்ரீரங்கே ஸுகமாஸ்வ” (ஶரணாகதி கத்யம்) என்று பெரிய பெருமாள் அநுக்ரஹித்ததும்.  அன்றிக்கே, தாமரைக்கு ராஜஹம்ஸம் ப்ரகாஶகமானாப்போலே இவரும் திருவடிகளுக்கு ப்ரகாஶகரென்னவுமாம்.  ஶேஷஶேஷிகள் ஒருவருக் கொருவர்  ப்ரகாஶகரிறே.

அன்றிக்கே “கபர்திமதகர்தமம்” (யதிராஜ ஸப்ததி – 38) இத்யாதியிற் சொல்லுகிறபடியே பகவத் தத்த்வத்துக்கு பாஹ்ய குத்ருஷ்டிகளாலுண்டான அப்ரகாஶதையைப் போக்கி அந்த தத்த்வத்தை ஶ்ரீபாஷ்யக்ரந்தங்களாலே ப்ரகாஶிப்பிக்குமவரென்னுமாம்.  பகவத் தத்த்வம் ஸ்வயம்ப்ரகாஶமாயன்றோ இருப்பது, அதற்கு இவர் ப்ரகாஶகராவது என்னென்னில் – அது ஸ்வயம் ப்ரகாஶமேயாகிலும் தத்விஷயஜ்ஞாநமில்லாதார்க்கு அப்ரகாஶமாயன்றோ இருப்பது.  அவர்களுக்கு தத்விஷய ஜ்ஞாநத்தையுண்டாக்கி அத்தை ப்ரகாஶமாம்படிப் பண்ணுகை.  ஆகையால் இவர் ஈஶ்வர சேதநரிருவருக்கும் உபகாரகரென்கிறது.  இவ்வுபகாரம் ஶேஷி முகவிகாஸஜநகமாகையாலே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தமாயிருக்கும்.

கீழ் இவருக்குண்டான பகவதங்கீகாரத்துக்கு நிதாநத்தைச் சொல்லுகிறது.  மேல் (ஶ்ரீமதித்யாதி) இவர்க்கு ஶ்ரீமத்த்வமாவது – “சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவப்பிரானையே தந்தை தாயுமென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்” (திருவாய் – 6.5.11) என்கிறபடியே ஈஶ்வரனையே ஸர்வவித பந்துவாகப் பற்றின சீர்மையாதல், உண்ணும் சோற்றிற்படியே அவன் தன்னையே தாரக போஷக போக்யங்களாகப் பற்றின சீர்மையாதல், ஒழிவில் காலப்படியே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸமஸ்தவித கைங்கர்யங்களையும் தாமொருவருமே செய்யவேணுமென்கிற மநோரதமாதல்.  அன்றிக்கே, “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்” (திருவாய் – 6.7.2) தம்படி ஸ்வஸம்பந்தி பரம்பரைக்கும் உண்டாம்படி பண்ணுகையாதல்.

(பராங்குஶ) இப்படிகளாலே பாஹ்யகுத்ருஷ்டிகளை வஶீகரிக்க வல்லவரான ஆழ்வாருடைய (பதாப்ஜ ப்ருங்க ராஜம்) அத்திருவடித் தாமரைகளின் மதுவை புஜித்து மதுபானமத்தமாய்ச் சுழன்று திரிந்து விளங்குகின்ற ப்ருங்க ஶ்ரேஷ்டரான.  இத்தால் ப்ரமரமானது தாமரைகளின் மதுவை உண்டு தன் குறை தீர்ந்தற்றதன்றிக்கே மதுபான மத்தமாய்ச் சுழன்று திரியுமாப்போலே இவர் மாறன் அடிபணிந்து கவியமுதுண்டு களித்து குமதி க்ருதிகளை மதியாதே பூமண்டலமெங்கும் விஜயயாத்ரையாய் ஸஞ்சரிக்குமவரென்கிறது.

ப்ருங்கத்துக்கு மது ஜீவநமானாப்போலவும் ராஜஹம்ஸத்துக்கு தாமரை விஹாரஸ்தாநமானாப்போலவும் இவருக்கு ஆழ்வார் திருவடிகள் தாரகமாகவும் பெரியபெருமாள் திருவடிகள் விஹாரஸ்தாநமாகவும் இருக்குமென்கிறது.  “ஆசார்யவான் புருஷோ வேத” (சாந்தோ –  6.14.2) என்கிறபடியே ஆசார்யாதீனமிறே உஜ்ஜீவநம்; ஶிஷ்யன் ப்ரதம பர்வத்தில் இழிகிறதும் அவநுகந்த விஷயமென்றாய்த்து.

இனி இவர் ததீயவிஷயத்தில் கிஞ்சித்கரிக்கிறபடியைச் சொல்லுகிறது மேல் (ஶ்ரீபட்டநாதேத்யாதி) ஶ்ரீ ஶப்தம் பூஜ்யதையைச் சொல்லுகிறதாதல், ஶ்ரீமத்வத்தைச் சொல்லுகிறதாதல் .  இவர்களுக்கு ஶ்ரீமத்த்வமாவது – ஶ்ரீ மாலாகாரரைப்போலே திரு நந்தவநம் செய்து திருமாலை ஸமர்ப்பிக்கையும், பரமதநிரஸந பூர்வகமாக ஶ்ரீமந்நாராயணனாகிற தத்த்வத்தை ஸ்தாபித்து அவன்தன்னை ஸாக்ஷாத்கரித்து தம்மைப் பேணாதே அத்தலைக்கு மங்களஶாஸனமே பண்ணுகையும், கோபுர ப்ராகார நிர்மாணம் முதலான கைங்கர்ய கரணங்களும்  ப்ராப்யத்வமாதல்.  ஆக இப்படி ஶ்ரீமான்களாக இருந்துள்ள (பட்டநாத) ப்ராஹ்மண ஶ்ரேஷ்டரான பெரியாழ்வாரென்ன.  இவர்க்கு ப்ராஹ்மணரில் ஶ்ரைஷ்ட்யமாவது – மந்த்ர பரஹ்மமான திருமந்திரத்தில் ப்ரதமபதத்தாலே சொல்லப்படுகிற ஸ்வரூபாநுரூபமான மங்களாஶாஸநமும், அஸ்தானே பயஶங்கையும் மேன்மேலும் மங்களாஶாஸநமும்.  (பரகால) ஶத்ரும்ருத்யுவான திருமங்கையாழ்வாரென்ன.  சிலர்க்கு ஶத்ருக்கள் பகவத் த்விட்டுக்கள்.  அவர்களாகிறார் – ஆத்மைக்யம் இத்யாதியிற் சொல்லுகிறபடியே ஆத்மைக்யவாதிகள் முதலானவர்கள் இவர்களுடைய.

(முகாப்ஜ) திருமுகமண்டலங்களாகிற  தாமரைகளுக்கு.  முகத்தைத் தாமரையாகச் சொல்லுகிறது – தாமரையுடைய ஸௌகுமார்யம் ஸ்பர்ஶஸஹமன்றிக்கே இருக்குமாப்போலே திருமுகமண்டலமும் பரது:க்கம் பொறுக்கமாட்டாத ஸௌகுமார்யத்தையுடையதென்கிறது.  (மித்ரம்) சூர்யனாயிருக்குமவராய்.  அதாவது – ஆதித்யன் ஸ்வோதயத்தாலே தாமரையை அலர்த்துமாப்போலே இவரும் பரமத ப்ரதிக்ஷேபாத்யநேகவித கைங்கர்யங்களாலே இவர்களுக்கு அபிமதமான பெரிய பெருமாளை உகப்பிக்கை.

அன்றிக்கே முக ஶப்தம் ஆதி ஶப்த பர்யாயமாய் பெரியாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற தாமரைகளுக்கு மித்ரரானவராய் யென்னவுமாம்.  அப்போதைக்கு அவர்கள் உகந்த விஷயமென்று பெரிய பெருமாள் திருவடிகளில் அநந்த கைங்கர்யங்களையும் செய்தருளுகையாலே அவர்கள் திருமுகமண்டலத்துக்கு விகாஸகரென்கிறது.  ஆக, கீழ் ஶ்லோகத்தில் பூர்வார்த்தத்தாலே சொல்லப்படுகிற இவருடைய ததீயஶேஷத்வபர்யந்தமான தச்சேஷத்வ ஜ்ஞானத்துக்கு அநுகுணமான பர்வத்ரயகிஞ்சித்காரம் சொல்லிற்றாயிற்று.

இனி ஆஶ்ரித விஷயத்தில் இவருக்கிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.  (ஶ்ரீவத்ஸசின்ஹ ஶரணம்) ஶ்ரீவத்ஸ சின்ஹாம்ஶபூதராகையாலே ஶ்ரீவத்ஸசின்ஹரென்கிற திருநாமமுடைய கூரத்தாழ்வானுக்கு “ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே” (ஶ்ரீ வை.ஸ்த – 1) என்று அவர் தம் வாயாலே சொல்லலாம்படி உபாயபூதராய்.  ஆழ்வானிறே “ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுராக்ஷரீ” (ஶ்ரீ வரவர முனி விஷயக முக்தகம் – 5) என்று வ்திரேகத்தாலும் “ராமாநுஜாங்க்ரி சரணோஸ்மி” (வரத.ஸ்த – 102) என்று அந்வயத்தாலும் இவருடைய உபாயத்வத்தை அருளிச்செய்தார்.  ஆகையாலே “ஶ்ரீவத்ஸசின்ஹ ஶரணம்” என்கிறார்.  இது எல்லோருக்கும் ஒக்குமாகையாலே உபலக்ஷணம்.  கீழ் ஶ்லோகத்தில் “காமாதி தோஷஹரம் ஆத்மபதாஶ்ரிதானாம்” என்கிறவிடத்தில் தாத்பர்யவிதயா தோற்றுகிற உபாயத்வம் இங்கு ஶ்ரீவத்ஸசின்ஹ ஶரணம் என்று ஶரணஶப்தத்தாலே வ்யாக்யாதம்.

(யதிராஜம்) கீழ்ச்சொன்ன ஆகாரங்களால் உண்டான ஸ்வோத்கர்ஷம் நெஞ்சில் தட்டாதபடியான வைராக்யமுடைய எம்பெருமானாரை.  அன்றிக்கேக் கீழ்ச் சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம் நிதாநமான வைராக்யமுடைய எம்பெருமானாரை என்னுமாம்.  இவ்வைராக்யமிறே இவர்க்கு ப்ரகாஶ ஹேது.  (ஈடே) வாகிந்த்ரியம் படைத்த பலம் பெற்றோமென்று ஸ்தோத்ரத்தில் ப்ரவ்ருத்தராகிறார்.  (ஈடே) கீழ் மூர்த்நா ப்ரணமாமி என்று காயிகமான கைங்கர்யத்தைச் சொல்லி, இதில் ஈடே என்று வாசிகமான அடிமையைச் சொல்லுகிறது.  “அன்றிவ்வுல” (திருப்பாவை – 24)கிற்படியே குணஜிதர்க்கு ஸ்தோத்ரமிறே க்ருத்யமாவது.

  1. வாசா யதீந்த்ர மநஸா வபுஷா வா ச யுஷ்மத்3

       பாதா3ரவிந்தயுக3ளம் ப4ஜதாம் கு3ரூணாம் |

    கூராதிநாத2 குருகேஶ முகா2த்3யபும்ஸாம்

        பதா3நுசிந்தந பரஸ்ஸததம் ப4வேயம் ||

அவதாரிகை – (வாசேத்யாதி) கீழிரண்டு ஶ்லோகத்தாலும் எம்பெருமானாருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்து, மேல் மூன்று ஶ்லோகத்தாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்தருளுகிறார்.  உபாயவரணம் ப்ராப்ய ஶேஷமிறே.  அதில் முதல் ஶ்லோகத்தில் கரணத்ரயத்தாலும் தேவரீர் திருவடிகளையே உபாயோபேயங்களாக அத்யவஸித் திருக்கும் பூர்வாசார்யர்களுடைய திருவடிகளை அடியேன் இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருக்கக் கடவேனாக வேணும் என்கிறார்.  அன்றிக்கே, “ஶ்ரீவத்ஸசின்ஹ ஶரணம்” என்று ப்ரஸ்துதமான உபாயக்ருத்யம் இஷ்டப்ராப்தியும் அநிஷ்டநிவாரணமுமாகையாலே அதில் இஷ்டத்தை மூன்று ஶ்லோகத்தாலே அருளிச் செய்கிறார்.  அதில் ப்ரதமத்தில் ஆசார்யாந்வயத்துக்கு அவஶ்யாபேக்ஷிதராய், கரணத்ரயத் தாலுமுண்டான ஸ்வாநுஷ்டாநோபதேஶங்களாலே தத்விஷயப்ரீதிவர்த்தகரான உபகாரகவிஷயத்தில் க்ருதஜ்ஞதை தமக்கு யாவதாத்மபாவியாகவேணுமென்கிறார் (வாசேத்யாதியால்).

வ்யாக்யானம் –  திருவடிகளுடைய போக்யதாதிஶயம் நெஞ்சால் நினைப்பதற்கு முன்னே வாயால் சொல்லலாம்படிகாணுமிருப்பது.   “வாசா” என்றவநந்தரம் “யதீந்த்ர” என்கிறது இவர்க்கு இந்த்ரிய நிக்ரஹத்தால் பிறந்த ஐஶ்வர்யம் ஸம்பந்தி ஸம்பந்திகளளவும் சென்று, அத்தை அறியும்படியாயிருக்கையாலே;  இத்தால் தம்முடைய கரணங்களையும் நியமிக்கவேணுமென்று கருத்தாகிறது.  (வாசா மநஸா வபுஷா ச) மநஸ்ஸடியாக வரும் க்ரமம் குலைந்தது – கரணங்களுடைய பதற்றத்தால்.  ப்ரேமம் தலையெடுத்தால் க்ரமம் பார்க்கவொட்டாதிறே.  “வாங்மந:காயை:” என்று கூட்டிச் சொல்லாதே பிரித்துச் சொல்லுகையாலே கரணைகதேஶஸமாஶ்ரயணமும் கார்யகரமென்கிறது.

(யுஷ்மத்) ப்ராப்தரான தேவரீருடைய என்னுதல்; ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநரான தேவரீருடையவென்னுதல்.  (பாதாரவிந்த யுகளம்) அப்ராப்தமாகிலும் விடவொண்ணாத போக்யதாதிஶயமுடைய திருவடிகளுடைய யுகளத்தை.  “யுகளம்” என்கையாலே மற்றொரு துணை தேடவேண்டாதபடி நிரபேக்ஷமாய் போந்திருக்கையும், சேர்த்தி அழகையும் சொல்லுகிறது.  (பஜதாம்) போக்யதாதிஶயத்தாலே இடைவிடாமல் ஆஶ்ரயித்துக் கொண்டிருக்குமவர்களாயென்னுதல்.  உபாயமாக ஆஶ்ரயிக்குமவர்களென்னுதல்.  பஜநம் – பக்தி விஶேஷமிறே.  (குரூணாம்) திருவடிகள் ஸம்பந்தத்தாலே தங்கள் அஜ்ஞாநம் போகிறமாத்மன்றிக்கே தாங்களும் ஸ்வஸம்பந்திகளுக்கு தேஹாத்மபாவ அஜ்ஞான நிவர்த்தகராம்படியாகிறதும் இவர் திருவடிகளை ஆஶ்ரயித்ததாலே.  அஜ்ஞாந நிவர்த்தகத்வமிறே குரு ஶப்தார்த்தம்.  (யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குரூணாம்) ப்ராப்தமான விஷயத்தைப் பற்றினவர்களாகையாலே அப்ராப்த விஷயங்களிலே ப்ராப்யத்வ புத்தி நிவர்த்தகரானவென்னுதல்.  பரமபோக்யமான  விஷயத்தைப் பற்றினவர்களாகையாலே அபோக்யவிஷயத்தில் போக்யதா புத்தி நிவர்த்தகர்களானவென்னுதல்,  நிரபேக்ஷோபாயத்தைப் பற்றினவர்களாகையாலே ஸாபேக்ஷோபாயங்களிலே உபாயத்வ புத்தி நிவர்த்தகர்களானவென்னுதல்.  க்ருபாமாத்ரப்ரஸன்னமான விஷயத்தைப் பற்றினவர்களாகையாலே  “தேஹி மே ததாமி தே” (யஜுர் – 1.8) என்கிறபடியே இத்தலையில் ஏதேனுமொன்றை அபேக்ஷிக்கும் விஷயத்தில் க்ருபாமாத்ர ப்ரஸந்நத்வ புத்தி நிவர்த்தகர்களானவென்னுதல்.

அன்றிக்கே “பரித்யஜ்ய” “வ்ரஜ” “மோக்ஷயிஷ்யாமி” என்னும்  விஷயத்தில் க்ருபாமாத்ர ப்ரஸந்நத்வ புத்தி நிவர்த்தகர்களானவென்னுதல்.  இவருடைய த்யாக ஸ்வீகாரங்களிரண்டும் ஸம்ஸாரிகளுடைய ஸம்ஸார மோக்ஷத்துக்காகவிறே.  “பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலைநின்று மண்ணின் தலத்துதித்த”(இரா.நூ  -95) வரிரே இவர்.

(கூராதிநாத குருகேஶ முகாத்யபும்ஸாம்)  ஸ்வாவதாரத்தாலே அவ்வூரை ஸநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாகவுடைய ஆழ்வாரென்ன, ஆழ்வார் விஷயத்தில் உபகாரஸ்ம்ருதியாலே அவர் திருநாமம் சாற்றத் திருவுள்ளமாய் எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் “குருகைப்பிரான்” என்று சாத்தப்பட்ட திருநாமத்தையுடைய திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்ன, இவர்கள் முதலான பூர்வாசார்யர்களுடைய; முக ஶப்தத்தாலே முதலியாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது. இவர்களுடைய கரணத்ரய ஸமாஶ்ரயணமும் அஜ்ஞாந நிவ்ருத்திபூர்வக ஜ்ஞாநப்ரதத்வமும் அவர்கள் க்ரந்தங்களில் காணலாம்.

(பாதாநுசிந்தனபர:) இவர்கள் பண்ணின உபகாரங்களை நினைத்து இவர்கள் ஶ்ரீபாதங்களுடைய அவிச்சின்ன ஸ்ம்ருதியிலே தாம் ஆஸக்தராகவேணுமென்கிறார்.  (ஸததம்) இதுதான் காலதத்த்வமுள்ளதனையும் நடக்கவேணுமென்கிறார். (பாதாநுசிந்தனபரஸ்ஸததம் பவேயம்) உபகாரகவிஷயத்தில் உபகாரஸ்ம்ருதி தமக்கு தாரகமாகையாலே அதுதமக்கு யாவதாத்மபாவியாக வேணுமென்கிறார்.  (பாதாநுசிந்தனபரோ பவேயம்) வ்யதிரேகத்தில் தாமுளரன்றுபோலேகாணும்.  உபேயத்வாப்ரதிபத்தியிறே க்ருதக்நதா பீஜம். அன்றிக்கே, நாமாதரிக்கைக்கு எம்பெருமானாருடைய ஸாக்ஷாத் ஸம்பந்தம் வேணுமோ?  அவர்களுடைய ஸம்பந்தி பரம்பரா ஸம்பந்தமே அமையாதோவென்கிறார்.

  1. நித்யம் யதீந்த்ர தவ தி3வ்ய வபுஸ்ஸ்ருதௌ மே

   ஸக்தம் மநோ ப4வத்3 வாக்கு3ணகீர்த்தனே அஸௌ |

   க்ருத்யஞ்ச தா3ஸ்யகரணம் து கரத்வயஸ்ய

   வ்ருத்யந்தரேஸ்து விமுக2ம் கரணத்ரயஞ்ச ||

அவதாரிகை – கீழ் உபகாரக விஷயத்தில் உபகாரஸ்ம்ருதி தமக்கு யாவதாத்மபாவியாகவேணுமென்று ப்ரார்த்தித்து ததுபக்ருதமான எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யம் தம்முடைய கரணத்ரயத்துக்கும் அநவரத அந்வயமுண்டாக வேணுமென்று அவர் தம்மையே ப்ரார்த்திக்கிறார்.  அன்றிக்கே, “பாதாநுசிந்தநபர: ஸததம் பவேயம்” என்று தாம் ப்ரார்த்தித்த புருஷார்த்தம் தமக்கு அப்போதாக ஸித்தியாமையாலே அதுதனக்குமடியான தத்விஷய ப்ரேமமும் போனதாகக்கொண்டு அதுதன்னை ப்ரார்த்திக்கிறாராகவுமாம்.

வ்யாக்யானம் – (நித்யமித்யாதி) மேல் தாமபேக்ஷிக்கிற ஸ்ம்ருதி தமக்கு அத்யந்தம் போக்யமாயிருக்கையாலே அத்தை ப்ரார்த்திப்பதற்கு முன்னே அதினுடைய அவிச்சேதத்தை ப்ரார்த்திக்கிறார் (நித்யமென்று).  ஸ்வாபேக்ஷிதம் செய்கைக்குத்தக்க ஶக்திவிஶேஷத்தைச் சொல்லி ஸம்போதிக்கிறார் (யதீந்த்ரரென்று).  அன்றிக்கே, இதரவிஷய வைராக்யத்தாலுண்டான பெருமதிப்புத் தோற்ற இருக்குமிருப்பைக் கண்டு   “யதீந்த்ர” என்று ஸம்போதிக்கிறாராகவுமாம்.  (தவ) “பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து” (பெரியாழ்வார் திரு – 5.2.8) என்றும் “ஸாக்ஷாத் நாராயணோ தேவ:” (ஜயாக்ய ஸம்ஹிதை – 1.63) என்றும், “ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத்” (?) என்றும் சொல்லுகிறபடியே பகவதவதாரவிஶேஷமான தேவரீருடைய என்னுதல்; “காருண்யாத் குருஷூத்தமோ  யதிபதி:” (?) என்கிறபடியே க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யரான தேவரீருடைய என்னுதல்.  “எந்தை யதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா வந்துதித்த” (உபதேஶ.ரத் – 29) என்கிறபடியே அடியோங்களை உத்தரிப்பிக்க அவதரித்த தேவரீருடைய என்னுதல்.  இவையெல்லாவற்றாலும் ப்ரார்த்திக்கிறது – அத்தலைக்கவஶ்ய கர்த்தவ்யமென்கிறது.  (திவ்ய) “திவி பவம் திவ்யம்” என்கிற வ்யுத்பத்தியாலே அப்ராக்ருதமான என்னுதல்.  “உந்தன் மெய்யில் பிறங்கிய சீர்” (இரா.நூ – 104) என்கிறபடியே மிக்க தேஜஸ்ஸை உடைத்தானவென்னுதல்.  “ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த” (திருவாய் – 3.5.5) என்றது ததீயர்க்கும் ஒக்குமிறே.  “ஆவிர்பாவைஸ் ஸுர நர ஸமோ தேவதேவஸ்ததீயா” (?) என்னக்கடவதிறே.  “தருணௌ ரூபஸம்பந்நௌ” (ரா.ஆர – 19.14) என்றாரிறே.  (தவ திவ்ய) ப்ராப்தமானதுவே போக்யமாயிருக்குமென்கிறது.

(வபுஸ்ம்ருதௌ) திருமேனி ஸ்மரணத்திலே த்யேயம் ஶுபாஶ்ரயமிறே.  (வபு:) திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கும் திவ்யமங்களவிக்ரஹம் போக்யமாயிருக்கிறது காணும் இவர்க்கு.  (ஸ்ம்ருதௌ) விஷயத்தோபாதி ஸ்ம்ருதிதானும் போக்யமாயிருக்கிறபடி.  “தவ” என்று பகவதவதாரங்களையும் ஆழ்வார்களையும் வ்யாவர்த்திக்கிறது.  “திவ்ய” என்று  இவர் தம்முடைய விக்ரஹாந்தரங்களையும் வ்யாவர்த்திக்கிறது.

இத்தால் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலமுடையவன்” (திருவாய் – 1.1.1) என்று தொடங்கி ஈஶ்வரனுடைய ஆநந்தாதி குணங்களையும் திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் நிரபேக்ஷோபாயத்வத்தையும் பரத்வத்தையும் அநுஸந்தித்து, தாம் “துயரறு சுடரடி” என்று திருமேனியிலும்  ஸௌந்தர்யாதிகளிலும் ஈடுபட்டு தமக்கந்தரங்கமான திருவுள்ளத்துக்கு “தொழுதெழென் மனனே” என்று உபதேஶித்தாப்போலே இவரும் “தவ” என்று எம்பெருமானாருடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் ஆத்ம குணங்களான க்ருபா ஸௌலப்யாதிகளையும் அநுஸந்தித்து “திவ்ய வபு:” என்று அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தாநமான திருமேனியிலே ஈடுபட்டு ஸ்வஸம்பந்தியான மனஸ்ஸும் திருமேனி ஸ்மரணத்தில் ஸக்தராகவேணுமென்கிறா ரென்கிறது.  (வபு:) உப்யதே பித்ரேதி – வபு: என்கிற வ்யுத்பத்தியாலே “ஸர்வேஷாமேவ லோகானாம் பிதா மாதா ச மாதவ:” (பார.ஆர – 189.57) என்றும், “தேவதேவோ ஹரி: பிதா” (வி.பு – 1.9.126) என்றும், “பூதாநாம் யோ அவ்யய: பிதா” (ஸஹஸ்ரநாமாத்யாயம்) என்றும் சொல்லுகிறபடியே ஸகலஜகத்பிதாவான எம்பெருமானாலே கேவலம் ஸ்வேச்சையாலே ஸர்வசேதநவிஷயமாக ஹிதப்ரவர்த்த னோபயோகிதயா க்லுப்தமாகையாலே ஜந்மஜரா மரணங்களாலே  விவர்ஜிதமாய், நித்யமாய், பகவதநந்யார்ஹஶேஷமாய், ஜ்ஞாநாநந்தஸ்வரூபமான ஆத்மஸ்வரூபத்துக்கு வர்த்தகமான திருமேனியுடைய ஸ்மரணத்திலே என்னுமாம்.  திருமேனி அப்ராக்ருத மாகையாலே ஜ்ஞாநவர்த்தகமாயிறே இருப்பது.  (மே) “மாறி மாறி பல பிறப்பும் பிறந்து” (திருவாய் – 2.6.8) என்கிறபடியே ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறித் திறிகிற என்னுடையவென்னுதல்.  திருமேனி ஸ்மரணத்துக்கிட்டுப் பிறந்த அடியேனுடைய வென்னுதல்.  திருமேனி ஸ்மரணத்தில் போக்யதையறியும் அடியேனுடைய வென்னுதல்.

“அஸௌ” என்றத்தை லிங்கத்வயமாக்கி “அதோ மந:” என்று மநஸ்ஸுக்கு விஶேஷணமாக்கி இதரவிஷயங்களில் சபலமாய், இதின் வாசியறியும் மநஸ்ஸென்னுதல்.  ஜ்ஞாநப்ரஸரணத்வாரமான  மநஸ்ஸென்னுதல்.  (மே மந:) மநஸ்ஸுதான் ஜ்ஞாநப்ரஸரணத்வாரமேயாகிலும் அது ப்ராப்த விஷயத்திலாகாமல் அப்ராப்தவிஷயங்களிலேயாய்த் தடுமாறுகைக்கடி அடியேனுடைய ஸம்பந்தமென்கிறார்.  அன்றிக்கே, (மே மந:) அடியேனுக்கு பவ்யமான மநஸ்ஸென்கிறார்.  இத்தால் ஸ்வஸம்பந்திகளுக்குமிவை உண்டாகவேணுமென்கிறது.

(ஸக்தம்பவது) அப்ராப்த விஷயத்தில் அநவரத ஸஞ்சரணத்தாலுண்டான உறாவுதல் தீரும்படி தேவரீர் திருமேனியை நினைக்கையே தனக்கு ஸ்வரூபமாம்படி யாகவேணுமென்கிறார்.  ஜ்ஞாநேந்த்ரியங்களிலே ப்ரதாநமான மநஸ்ஸுக்கு விஷயம் சொன்னபோதே உபலக்ஷணதயா மற்ற சக்ஷுராதி ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஐந்துக்கும் தத்தர்ஶன, தத்ஸௌகுமார்ய, தத்குணஶ்ரவண, தத்திவ்யகந்த, தத்தீர்த்தப்ரஸாத, மாதுர்யாதிகள்  விஷயங்களாக வேணுமென்னுமதுவும்    சொல்லப்பட்டது.  மநஸ்ஸுக்கு ஶேஷமிறே மற்ற இந்த்ரியங்கள்.  “குரு பாதாம்புஜம் த்யாயேத்” (?) என்னக்கடவதிறே.  (அஸௌ வாக்) “நிதியைப் பொழியும் முகிலென்று” (இரா.நூ – 21) “மன்னா மனிசரைப் பாடி” (திருவாய் – 3.9.4)யிளைத்திருக்கிற என் நாவென்னுதல்.  தேவரீருடைய குணகீர்த்தன லுப்தையான என் நாவென்னுதல்.  (குணகீர்த்தனே) தேவரீருடைய ஆத்மகுணங்களான வாத்ஸல்யாதிகளுக்கும், திருமேனி குணங்களான ஸௌகுமார்யாதிகளுக்கும் வாசகங்களான திருநாமங்களைச் சொல்லுகையாலே (நித்யம் ஸக்தா பவது) “சொலப்புகில் வாயமுதம் பரக்கும்” (இரா.நூ – 43) என்கிறபடியே திருநாமாநுஸந்தானம்  உபக்ரமமே தொடங்கி போக்யமாயிருக்கையாலே இதில் என் நாவானது அநாதிகாலமே பிடித்து விஷயாந்தரங்களை ஸ்துதித்து இளைத்துக்கிடந்த தன்னிளைப்பெல்லாம் தீரும்படி என்றுமொக்க ஸக்தமாகவேணுமென்கிறார்.  “குரோர் நாம ஸதா ஜபேத்” (?) என்னக்கடவதிறே.

இவ்விடத்தில் குண ஶப்தத்தாலே திருநாமத்தை லக்ஷிக்கிறது.  இப்ரமாணாநுகுணமாக குணாவிநாபாவத்தைப் பற்றவுமாம்;  முதலியாண்டான் திருக்கோட்டியூர் நம்பியை ஸேவிக்க எழுந்தருளினபோது அவர் த்யாநத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு, பின்பு தண்டன் ஸமர்ப்பித்து “த்யாநமெது? மந்த்ரமெது?” என்று கேட்க “த்யாநம் ஆளவந்தார் திருமேனி;  மந்த்ரம் யமுனைத்துறைவர் என்கிற திருநாமம்” என்றருளிச்செய்தாராகையாலே த்யாநாந்தரப்ராப்தி திருநாமத்துக்கிறே.  “பஹவோ ந்ருப! கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே” (ரா.அயோ – 2.26) என்கிறவிடத்தில் குணஶப்தத்தை திருநாமவாசகமாக அருளிச்செய்தாரிறே பெரிய ஜீயர்.  இப்படி மநோவாக் காயங்களுக்கு விஷயத்தைச் சொல்லி, மேல் காயிக வ்யாபாரமும் தேவரீர் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமாகவேணுமென்கிறார் (க்ருத்யமித்யாதியால்).  அன்றிக்கே, காயந்தனக்கு விஷயத்தைச் சொல்லுகிறாராகவுமாம்.  “விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஶ்வராய (விஷ்ணுதத்த்வம்)விறே.  (கரத்வயஸ்ய) கைங்கர்யம் செய்யுமிடத்தில் மற்றொரு துணை தேடவேண்டாதபடி அந்யோந்யஸஹாயமான கரத்வயத்தினுடைய (க்ருத்யஞ்ச) வ்யாபாரமும், “தேவ தாஸ்ய கரணம் து பவேத்” தேவரீர்  விஷயமாய் விலக்ஷணமாயிருக்கிற கைங்கர்யமாகவேணுமென்கிறார்.

து ஶப்தம் –  வைலக்ஷண்யவாசி.  கைங்கர்யத்துக்கு வைலக்ஷண்யமாவது – இதர விஷய ஶுஶ்ரூஷைபோலே ஸ்வரூபவிரோதியாய் ஸுகோதர்க்கமாயிருக்கையன்றிக்கே, பகவத் கைங்கர்யம் போலே ஶாஸ்த்ரைகஸமதிகம்யமாய் இருக்கையன்றிக்கே தேவரீர் ஶ்ரீஸூக்திகளால் அறியத்தக்கதாயிருக்கையாகவுமாம்.

அன்றிக்கே, “கரத்வயஸ்ய து கர்தவ்யஞ்ச” என்றந்வயித்து முன்பெல்லாம் இதரவிஷயங்களை ஶுஶ்ரூஷித்து அதுவே யாத்ரையாய்ப் போந்த இந்த கரத்வயத்தினுடைய வ்ருத்தியென்னவுமாம்.  அங்ஙனன்றிக்கே து ஶப்தம் – அப்யர்த்தமாய் காயிக வ்யாபாரமும் தாஸ்யகரணரூபமாக வேணுமென்கிறாராகவுமாம்.  உபாயவரணாத்மகத்வ முண்டிறே அஞ்சலிக்கு.  இத்தால் கரணத்ரயத்துக்கும் உபாயோபேயங்களில் அந்வயம் உண்டென்கிறது.  இத்தால் கர்மாத்யுபாயங்களுக்கு பகவந்நிஷ்டோபாயத்வ அபிவ்யஞ்சகத்வமொழிய  ஸாக்ஷாத் உபாயத்வமில்லை யென்கிறது.   “நிதித்யாஸிதவ்ய:” என்கிறதும் இவனுடைய அஜ்ஞதையைப்பற்றியிறே.

யத்வா சகார துகாரங்களிரண்டும் – ஏவகாரார்த்தமாய் கரணத்வயத்தினுடைய வ்யாபாரத்தாலே ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமாயேயாகவேணுமென்கிறாராகவுமாம்.  அங்ஙனுமன்றிக்கே, ச ஶப்தம் – ஏவகாரார்த்தமாய் விஷயாந்தர ஶுஶ்ரூஷையை வ்யவச்சேதிக்கிறதாகவுமாம்.  அன்றிக்கே, “கரத்வயஸ்ய ச தவ தாஸ்யகரணந்து க்ருத்யம் பவேத்” என்று யோஜிக்கவுமாம்.  “குரோர் வார்த்தாம்ஶ்ச கதயேத்” என்னக்கடவதிறே.  இவ்விடத்தில் சகாரத்தாலே கைங்கர்யத்தைச் சொல்லுகிறது.

இப்படி கரணத்ரயமும் அநுகூல விஷயங்களில் மண்டியிருந்தாலும் வ்யாபாராந்தங்களிலானால் கொத்தையாமிறே.  ஆகையால் கரணத்ரயமும் வ்யாபாராந்தரங்களில் விமுகமாகவேணுமென்கிறார்.  (வ்ருத்யந்தரே அஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச) என்று.  இது ஏவகாரபர்யாயமான து ஶப்தத்தாலே நிரஸிக்கப்பட்டதன்றோ வென்னில், அத்தாலே தாஸ்யேதரங்களாய்த்து வ்யவச்சேதிக்கப்படுகிறது.  இங்கு பகவத் கைங்கர்யம் தாஸ்யமாகையாலே அத்தை வ்யவச்சேதிக்கிறது.  ஆசார்யநிஷ்டனுக்கு த்வய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யம் விரோதியிறே.  (கரணத்வயஞ்ச வ்ருத்யந்தரே விமுகமஸ்து) து ஶப்தம் வைலக்ஷண்யவாசியானபோது இங்கு விஷயாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது.  அன்றிக்கே, சகாரம் இவ அர்த்தமாய் கரணத்ரயமானது வகுத்த விஷயத்தில் ஸக்தமானாப்போலே ததிதரவிஷயங்களில் விமுகமாகவேணுமென்கிறாராகவுமாம்.  “குரோரன்யந்ந பாவயேத்” (?) என்னக்கடவதிறே.

  1. அஷ்டாக்ஷராக்2ய மநுராஜ பத3த்ரயார்த்த2

   நிஷ்டா2ம் மமாத்ரவிதராத்3ய யதீந்த்ரநாத2 |

   ஶிஷ்டாக்3ரக3ண்ய ஜநஸேவ்ய ப3வத்பதா3ப்ஜே

   ஹ்ருஷ்டாஸ்துநித்யமநுபூ3ய மமாஸ்ய புத்3தி:4 ||

அவதாரிகை – கீழிரண்டு ஶ்லோகத்தாலே தாம் ப்ரார்த்தித்த அரத்தங்களுக்கு ப்ரமாணமாக திருமந்த்ரத்தை ப்ரஸக்தி பண்ணி, தாம் ப்ரார்த்தித்த அர்த்தங்கள் அஷ்டாக்ஷரத்தின் பதத்ரயார்த்தங்களாகையால் தந்நிஷ்டையை அடியேனுக்கு ப்ரஸாதித்தருளி, அடியேன் புத்தியானது தேவரீர் திருவடிகளை அநுபவித்து ஹ்ருஷ்டமாம்படி செய்தருளவேணுமென்கிறார்.  கீழ் ஶ்லோகத்தில் ப்ரதம பாதத்தாலே ப்ரணவார்த்தமும், “வாக்குணகீர்த்தனே அஸௌ” என்றத்தாலே வாத்ஸல்யாதி குணகீர்த்தநத்திலே என்றபோதே அக்குணங்கள் உபாயகுணங்களாகையாலே மத்யமபதார்த்தமும் த்ருதீய பாதத்தாலே சரம பதார்த்தமும், சதுர்த்த பாதத்தாலே ப்ரதம சரமபதஸ்தாநாந்வித – நமஶ்ஶப்தார்த்தமும் சொல்லப்பட்டதிறே.

வ்யாக்யானம் – (அஷ்டாக்ஷரேத்யாதி) (அஷ்டாக்ஷராக்ய) “ஏதத்வை நாராயண பதஸ்யாஷ்டாக்ஷரம் பதம்” (நாராயணோபநிஷத்) “எட்டெழுத்துமோதுவார்”  (திருச்சந்த – 77) “கதிரஷ்டாக்ஷரோ ந்ரூணாம்” (நாரா. அஷ்டா) “மந்த்ரம் அஷ்டாக்ஷரோ வித்யாத்” (?) என்றுமித்யாதி ப்ரமாணங்களாலே அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்தமானவென்னுதல்; அஷ்டாக்ஷரமென்று திருநாமமுடையவென்னுதல்.

(மநுராஜ) “தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம்” (ஶ்வேத – 6.7) ”ராஜாதிராஜஸ்ஸர்வேஷாம்” (பார.ஆஸ்வ – 43.17) என்றும், “வானோரிறை” (திருவாய் – 1.5.1) என்றும், “அமரர்களதிபதி”  (திருவாய் – 1.1.1) என்றும் “தேவதேவேஶ:” (வி.பு – 5.7.70) என்றும் இத்யாதியிற் சொல்லுகிறபடியே வாச்யனான ஈஶ்வரன் ஸ்வாபேக்ஷயா நியாமகாந்தரஶூந்யனாய், தான் ஸர்வ நியந்தாவாயிருக்குமாப்போலேயாய்த்து வாசகமான திருவஷ்டாக்ஷரமும்.  “மந்த்ராணாம் பரமோ மந்த்ர:” (நாரா. அஷ்டா) “ந மந்த்ரோ அஷ்டாக்ஷராத் பர:” (நாரஸிம்ஹ புரா) என்கிறபடியே பகவத் மந்த்ரங்களில் ப்ரதாநமான திருமந்த்ரத்தினுடைய.  அவனுடைய ப்ராதாந்யம் குணபௌஷ்கல்யாதி நிபந்தனம்; இதினுடைய ப்ராதாந்யம் அர்த்த பௌஷ்கல்யாதி நிபந்தனம்.  (பதத்ரய) ப்ரணவ- நமோ – நாராயணாய என்கிற பதத்ரயத்தினுடைய  (அர்த்த) அநந்யார்ஹ ஶேஷத்வ – அநந்ய சரண ஶரணத்வ அநந்யபோக்யத்வங்களாகிற அர்த்தங்களில்.  (நிஷ்டாம்) அவிசால்யமான இருப்பை.  அர்த்தஸ்திதியில் அவிசால்யமாவது – விரோத்யுதயாஸஹிஷ்ணுத்வம்.  அதாவது – அநந்யார்ஹஶேஷத்வ விரோதியான அந்யஶேஷத்வத்தினுடையவும்; அநந்யஶரணத்வவிரோதியான உபாயாந்தரஸம்பந்தத்தினுடையவும்; அநந்யபோக்யத்வவிரோதியான உபேயாந்தரங்களினுடையவும் உதயத்தைப் பொறாதொழிகை.  ஸ்வரூபோபேய புருஷார்த்தங்களில் ஸ்வார்த்ததா புத்தி தவிர்க்கையாகவுமாம்.  இதிறே நமஶ்ஶப்தார்த்தத்தாலே பூர்வோத்தரபதங்களோடே காகாக்ஷி ந்யாயத்தாலே அந்வயித்துக் கழியுண்கிறது.

(அஸ்ய மம)   “உண்டியே உடையே உகந்தோடும்” (பெரிய.திரு – 3.4) என்கிறபடியே அன்னவஸ்த்ராதி விஷயார்ஜன லோலனான அடியேனுக்கென்னுதல்;  அதில் ஆஶாலேஶமில்லாத அடியேனுக்கென்னுதல்.  மேல் “விதர” என்றதுக்கநுகுணமாக “மஹ்யம்” என்னவேண்டியிருக்க, “மம” என்கிறது ஸம்பந்த ஸாமான்யாபிப்ராயத்தாலே.  அன்றிக்கே, “அஸ்ய மம” இதிலாசையுடைய அடியேனென்னுதல்.

(விதர) ப்ரஸாதித்தருளவேணுமென்கிறார்.  தேவரீர் தரப்பார்க்கில் அதை இப்போதே தரவேணுமென்ன, தேஶவிஶேஷத்திலேயாகிறதென்ன (அத்ர) இருள்தருமாஞாலமான இத்தேஶத்திலேயாகவேணுமென்கிறார்.  தேவரீர் ஸம்பந்திகளுக்கு இதுவன்றோ அஸாதாரண லக்ஷணம்.  ஆகில் தருகிறோம். பொறுத்திருமென்ன  (அத்ய) அபேக்ஷையுடைய இக்காலத்திலே யாகவேணுமென்கிறார்.  “நின்றவா நில்லா நெஞ்சிறே” (பெரிய.திரு – 1.1.4)

அன்றிக்கே, உமக்கிப்படி ஸ்வரூபாநுரூபங்களான அர்த்தங்களிலாசையில்லாமைக்கடியென்னென்ன  (அத்ராத்ய) இருள்தருமாஜ்ஞாலமான இத்தேஶமும் ஸதநுஷ்டான விரோதியான இக்காலமும் என்கிறார்.  காலம் கலியிறே.  தேஶகாலபாத்ரங்களைப் பாராமல் தேவரீர் இந்த ஸம்பந்தமே ஹேதுவாகச் செய்தருளவேணுமென்கிறார்.  “அதிகாரமில்லாதார்க்கன்றோ யதிராசா நீ இரங்கவேண்டுவது”  (ஆர்த்தி.ப்ர – 14)  “ஆசையுடையார்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்”  (உபதே.ரத் – 17) என்று அத்தலையில் நினைவறிந்திறே இவரருளிச்செய்தது.

இப்படி அநதிகாரியாயிருந்துவைத்து  நம்மை நிர்ப்பந்திக்கிறது என்னென்ன (யதீந்த்ர) நம் குறை  ஆராயும்படியன்றோ தேவரீர் பூர்த்தி.  தேவரீருக்குள்ள ஶமதமாத்யாத்ம குணங்கள் தேவரீர் ஸம்பந்திகளுக்கும் போரும்படியன்றோ தேவரீர்  மதிப்பு.  ஆகில் உமக்கு என்னென்ன  (நாத) தேவரீர் இத்தலைக்கு ஸ்வமியன்றோ நம் கார்யம் செய்யாமைக்கென்கிறார்.  யாசித்தும் பிறர் கார்யம் செய்யுமவர்க்கு ப்ரார்த்தனை மிகையன்றோ என்கிறார்.  ,

ஸ்வாமியானமையை நீர் என்கொண்டு அறிந்தீர் என்ன (ஶிஷ்டாக்ரகண்ய ஜநஸேவ்ய) ப்ரமாணங்களில் ப்ரதாநமான ஶிஷ்டாசாரம் கொண்டு அறிந்தேனென்கிறார்.  “தர்மஜ்ஞஸமய: ப்ரமாண:” (ஆபஸ்தம்ப தர்மத் தொடக்கம்)மிறே.  வேதப்ரமாண்யாதிகளிலே முதலெண்ணத்தக்கவர்களான கூரத்தாழ்வான் முதலியாண்டான் முதலான ஶிஷ்ட ஜநங்களாலே ஸேவிக்கத் தகுதியானவரேயென்று ஸம்போதிக்கிறார்.  இவர்களாஶ்ரயிக்கும்போது ப்ராப்த விஷயமாகவேணுமென்றறிந்தேன் என்று கருத்து.

அன்றிக்கே, ஶிஷ்டாக்ரகண்யருடைய ஸம்பந்தி ஜநங்களால் ஸேவிக்கத் தகுந்தவரே என்றுமாம்.  அப்போது அவர்கள் தந்தாமைப் பற்றினவர்களுக்கு ப்ராப்த விஷயமென்று உபதேஶித்துக் காட்ட, அவர்களும் கண்டாஶ்ரயிக்கையாலே தேவரீர் ஸ்வாமியானமையை அறிந்தேனென்று கருத்து.  ஆகில் தருகிறோமென்று இவர் ப்ரார்த்தித்தபடியே ப்ரதம பர்வத்தை வெளிச்செறிப்பிக்க, அடியேனுக்கு இவ்வளவால் போறாது  இதினுடைய எல்லை நிலமான தேவரீர் திருவடிகளை அநுபவித்து அடியேனுடைய புத்தியானது ஹ்ருஷ்டமாகவேணுமென்கிறார்.

ஆசார்யகைங்கர்யம் பகவத் கைங்கர்யத்தினுடைய சரமாவதியானமை எங்ஙனேயென்னில் “ப்ராப்யத்துக்கு ப்ரதமபர்வம் ஆசார்ய கைங்கர்யம்” என்று தொடங்கி “சரம பர்வம் பாகவதகைங்கர்யம் (ஶ்ரீ வச.பூ – 412) என்று அருளிச் செய்து, அதுக்கர்த்தம் ஆசார்யநுகப்புக்காக பண்ணும் பகவத் கைங்கர்யம்.  ஆசார்ய கைங்கர்யம் என்று தொடங்கி பாகவதர்களுக்கு உகப்பாக பண்ணும் ஆசார்ய கைங்கர்யம் பாகவதகைங்கர்யம் என்று ஆசார்யகைங்கர்யத்தை சரம பர்வமாக அருளிச்செய்தாரிறே பிள்ளைலோகாசார்யர்.

ஆசார்யன் திருமந்த்ரத்தை உபதேஶித்து அதுக்கர்த்தமாக பகவத் தாதர்த்த்யத்தை உபதேஶிக்க பகவானும் “மத்பக்த ஜந வாத்ஸல்யம்” என்று தொடங்கி, “ஸ ச பூஜ்யோயதாஹ்யஹம்”  “ததுச்சிஷ்டம் ஸுபாவநம்” என்று பாகவத தாதர்த்த்யத்தை உபதேஶிக்கையாலே அவர்களுடைய ஆசார்ய ஸம்பந்தத்தையிட்டு இவனை அங்கீகரித்து பதிவ்ரதைகள் பதிவ்ரதைக்கு பாதிவ்ரத்யத்தை உபதேஶிக்குமாபோலே “குருரேவ பரம் ப்ரஹ்ம” (த்வயோபநிஷத்) இத்யாதிகளாலே ஆசார்ய தாதர்த்யத்தை உபதேஶிக்கையாலே ப்ராப்யத்தில் சரமபர்வம் ஆசார்ய கைங்கர்யம் என்கிறது.

  இத்தையிறே “திருவெட்டெழுத்தும் கற்று நானுற்றதும் உன்னடியார்க்கடிமை”  (பெரிய.திரு – 8.10.3) என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது.  பகவத் கைங்கர்யத்தில் ஆசார்யநுகப்புண்டு; பாகவத கைங்கர்யத்தில் ஆசார்ய பாகவத ப்ரீதியுண்டு;  ஆசார்ய கைங்கர்யத்தில் ஆசார்ய பகவத் பாகவதர்களுடைய உகப்புண்டு.  ஆகையால் ஆசார்ய கைங்கர்யம் ததீயகைங்கர்யபரமாயிருக்கும்.  ஆகையால் ஆசார்ய கைங்கர்யமே திருவஷ்டாக்ஷரத்திற்கு ப்ரதாந ப்ரமேயமாகக்கடவது.

அன்றிக்கே ஶிஷ்டேத்யாதிக்கு இப்படி ஸம்பந்த மாத்ரம் கொண்டு நாம் ஆருக்கு அதிகாரமுண்டாக்கி உதவினோமென்ன, (ஶிஷ்டேத்யாதி) ஶாஸ்த்ரவிஶ்வாஸஶாலிகளான ஜநங்களுண்டு – யாதவப்ரகாஶ – யஜ்ஞமூர்த்யாதிகள்.  அவர்களாலே ஸேவ்யரானவரேயென்னுமாம்.  அவர்களை அதிகாரிகளாக்கியன்றோ தேவரீர் மந்த்ரார்த்தத்தை உதவியருளிற்று.

அன்றிக்கே, “ஶிஷ்டாக்ரகண்ய! ஜநஸேவ்ய!” என்று இரண்டும் ஸம்போதநமாகவுமாம்.  அப்போது ”நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்” (கண்ணி – 4) என்றும் “ஆந்ருஶம்ஸ்யம் பரோ தர்ம:” (ரா.ஸு – 38.41) என்றும் சொல்லுகிறபடியே ஸகல ஶாஸ்த்ரதாத்பர்யமான ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநரில்  முதலெண்ணத்தக்கவராகையாலே இன்னாரென்னாதே ஸர்வ ஜநங்களாலும் ஸேவிக்கத் தகுதியானவர் என்று பொருள்.

இவருக்கு ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநரில் அக்ரகண்யத்வமாவது – முன்புள்ள முதலிகள் க்யாதிலாபபூஜாநிரபேக்ஷராய், ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநராய் பராநர்த்தம் பொறுக்கமாட்டாதே ஆஸ்திக்யாதி பரீக்ஷை பண்ணி ஹிதமருளிச்செய்வர்களாகில், இவர் அங்ஙனன்றிக்கே பராநர்த்தமே பற்றாசாக  ஆஸ்திக்யாதி பரீக்ஷை பண்ணாமல் ஹிதம் அருளிச்செய்து போருகை.  ஆழ்வானை மாஸோபவாஸம் கொண்டது நம்பி நியமநத்துக்காக.

அன்றிக்கே, “ஶிஷ்டாக்ரகண்ய ஜநஸேவ்ய” என்கிறது பதாப்ஜ விஶேஷணமாகவுமாம்.  அப்போது ”ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே” ((ஶ்ரீ வை.ஸ்த – 1) “ராமாநுஜ பதாம்போஜ ஸமாஶ்ரயணஶாலிந:” (எம்பார் முக்தகம்) “ராமாநுசன் தன் இணையடியே – உதிப்பன உத்தமர் சிந்தையுள்” (இராமா. நூ – 50) என்கிறபடியே ஆழ்வான் முதலான ஶிஷ்ட ஜநங்களால் ஸேவிக்கத் தகுதியான பதாப்ஜங்கள் என்கிறது.  இத்தால் தாம் அயோக்யரென்று கருத்தென்கிறது.  (பகவத் பதாப்ஜே) பரமப்ராப்யரான தேவரீருடைய பரமபோக்யங்களான திருவடித்தாமரைகளை.  “அநுபூய ஹ்ருஷ்டாஸ்து” என்னவேண்டியிருக்க முதலில் “ஹ்ருஷ்டாஸ்து” என்றது திருவடிகளுடைய போக்யதாதிஶயம் அநுபவோன்முகமாகும் தஶையிலும்  அநுபவஜநிதாநந்தத்தையுண்டாக்கவற்றென்னுமபிப்ராயத்தாலே.  (நித்யம்) அநுபாவ்ய வஸ்துவோபாதி அநுபவமும் ரஸித்திருக்கையாலே இது நித்யமாகவேணுமென்கிறார்.

அன்றிக்கே, (ஹ்ருஷ்டாநுபூயாஸ்து) திருவடிகளுடைய போக்யதாதிஶயத்தைக் கண்டு அலப்யங்களான இத்திருவடிகள் நமக்கநுபாவ்யங்களாகக் கடவதென்று ஹ்ருஷ்டமாயநுபவித்து தான் ஸத்தைப்பெறக்கடவது என்கிறாராகவுமாம்.  முன்பு அஸந்நேவவிறே.  அன்றிக்கே, (அநுபூயாஸ்து ஹ்ருஷ்டாஸ்து) அநுபவித்துத் தான் உளதானமாத்ரமன்றிக்கே ஸ்வதர்மமான ஆநந்தரூபத்தையும் அடைந்தாகவேணுமென்கிறார்.  (நித்யம் அநுபூய ஹ்ருஷ்டாஸ்து) இவ்வநுபவம் போக்யமாயிருக்கையாலே காலதத்த்வமுள்ளதனையும் அநுபவித்து அநுபவஜநிதமான ஹர்ஷம் புறம்பு ஒசித்துக் காட்டும்படியாகவேணுமென்கிறார்.  ஏன்தானென்னில் (மமாஸ்ய புத்தி: ) நிரூபகம் முன்னாக நிரூப்ய ஸித்தியாகையாலே நிரூபகமான அநுபவத்தை முன்னே சொல்லி அநந்தரம் நிரூப்யமான தம்மை அநுஸந்திக்கிறார்.  (மமாஸ்ய) தேவரீருடைய திருவடிகளை அநுபவித்து அத்தாலே லப்தஸத்தாகனாம்படியான அடியேன் இப்படி ஸ்வரூபநாஶங்களான விஷயங்களிலே சபலனாவதே என்கிறார்.  இப்படி விஷயசபலனான அடியேனுடைய என்னுதல்; (புத்தி:) ஜ்ஞானமாதல், மநஸ்ஸாதல்.  (மமாஸ்ய புத்தி: ) ஜ்ஞானமாகில் தேவரீரையொழிய மற்றொன்றில் புகாது.  அது விஷயாந்தரத்தில் புகுருகைக்கடி அடியேனுடைய ஸம்பந்தமாய்த்து.   இப்படியிருந்துள்ளவடியேனுடைய புத்தி என்னவுமாம்.  அன்றிக்கே, (மமாஸ்ய புத்தி: ) தேவரீரால் கொடுக்கப்பட்ட அஷ்டாக்ஷராக்யமநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டையையுடையனாய் அதுக்கிட்டுப் பிறந்த அடியேனுடைய புத்தியானது என்னவுமாம்.  இத்தால் ப்ரதம பர்வம் அதிவிலக்ஷணமாயிருந்ததேயாகிலும் அதில் சரமபர்வ நிஷ்டனுடைய புத்தியானது புகாதென்கிறார்.  ஶிஷ்டேத்யாதி – பதாப்ஜவிஶேஷணமானபோது “நாத” என்றவநந்தரம்.  ஆகில் செய்கிறோமித்யாதி ஸங்கதி கண்டுகொள்வது.

  1. அல்பாபி மே ந ப3வதீ3யபதா3ப்3ஜ ப3க்தி:

   ஶப்3தா3தி3 போ33ருசிரந்வஹமேத4தே ஹா |

   மத்பாபமேவ ஹி நிதா3நமமுஷ்ய நாந்யத்

   தத்வாரயார்ய யதிராஜ ! த3யைகஸிந்தோ4 ! ||

அவதாரிகை – கீழ் ஶரணமென்று ப்ரஸ்துதமான உபாயக்ருத்யம் இஷ்டப்ராபணமும் அநிஷ்டநிவாரணமுமாகையாலே, அதில் ப்ராபணீயமான இஷ்டத்தை மூன்று ஶ்லோகங்களினாலே விண்ணப்பம் செய்து, மேல் ஶ்லோக ஸப்தகங்களாலே நிவர்த்தநீயமான அநிஷ்டத்தை விண்ணப்பம் செய்யாநின்றுகொண்டு தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும் தோஷபூயஸ்த்வத்தையும் விண்ணப்பம் செய்கிறார்.  இதில் ப்ரதமத்தில் நீர் திருமந்த்ரத்தினுடைய பதத்ரயார்த்த நிஷ்டையை ப்ரஸக்தியா நின்றீர்.  உமக்கு இதில் ப்ரேமமும் ததிதரங்களில் அருசியும் உண்டோவென்ன அடியேனுக்கு இவையிரண்டுமில்லை, இவற்றையும் தேவரீரே உண்டாக்கித் தரவேணுமென்கிறார்.  அன்றிக்கே, “அஷ்டாக்ஷராக்ய மனுராஜ பதத்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய” என்றவாறே உமக்கிது இல்லையோவென்ன , இல்லையென்கிறாராகவுமாம்.

வ்யாக்யானம் – (அல்பாபீத்யாதி) ப்ராப்தியையும் போக்யதையையும் விசாரித்தால் பரிபூர்ணமாக ப்ரேமம் செய்யவேண்டும்  விஷயத்தில் அடியேனுக்கு அல்பாம்ஶமும் ப்ரேமமின்றிக்கேயொழிவதே என்று இன்னாதாகிறார்.  (அல்பாபி) அப்ராப்த விஷயங்களில் பரிபூர்ணமான ப்ரேமத்தைச் செய்யுமடியேனுக்கு ப்ராப்த விஷயத்தில் ப்ரேமம் அல்பாம்ஶமுமின்றிக்கேயொழிவதே என்கிறார்.  (மே) அப்ராப்தனாயிருந்துவைத்து செய்யாதொழிந்தேனோ?  ப்ராப்தனாயிருந்து காணும் செய்யாமலொழிந்ததென்கிறார்.  “தாஸ்யபூதாஸ்ஸ்வத:ஸர்வே“ (பகவத் ஶாஸ்த்ரம்)மிறே.  (மம) தேவரீர் திருவடிகளில் நிரவதிகமான ப்ரேமம் செய்யக்கடவ வம்ஶத்திலே பிறந்த அடியேனுக்கென்றுமாம்.  (பவதீய) அடியேனுடைய உஜ்ஜீவநத்தில் க்ருஷி பண்ணுகிற தேவரீர் ஸம்பந்திகளானவென்னுதல்.  உபகாரகரன்று என்று ஆறியிருக்கலாமோ? என்கிறார்.  (பதாப்ஜ பக்தி:) ஸ்வரூபாநுரூபமான திருவடித்தாமரைகளில் பக்தியானது.  (பதாப்ஜ) போக்யதையில்லை என்றிருக்கலாமோவென்கிறார்.  (நாஸ்தி) இத்தால் பக்தியில் ஸ்வல்பாம்ஶமுமில்லையென்று பக்தி ஶப்தவாச்யத்தினுடைய த்வம்ஸப்ராகபாவங்களைச் சொல்லுகையன்றிக்கே அத்யந்தாபாவத்தைச் சொல்லுகிறது.  அன்றிக்கே, (பவதீய பதாப்ஜ பக்தி:) “நல்லார் பரவும்” (இரா.நூ – 44) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே கரணத்ரயத்தாலும் ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸமஸ்தவித கைங்கர்யங்களை ப்ரார்த்தித்துச் செய்யவேண்டும் விஷயமாய் தேவரீர் ஸம்பந்திகளான ஆழ்வான் முதலானோர் திருவடிகளில் பக்தியானது அடியேனுக்கு அல்பாம்ஶமுமில்லை என்னவுமாம்.  ஆக ப்ரதமத்தால் ப்ரதமபதார்த்தமில்லையென்கிறது.

இவரிப்படி ஸாநுதாபமாக விண்ணப்பம் செய்தவாறே உமக்கு நம்மிடத்தில் பக்தியில்லையாகில் உண்டாக்கித் தருகிறோம்.  இதர விஷயங்களில் அருசிதானுமுண்டோவென்ன அதுவுமில்லை என்கிறார் மேல்.  (ஶப்தாதி போகருசிரந்வஹமேததே) என்று ஶப்தாதி விஷயாநுபவத்தில் கிடீர் அடியேனுக்கு ப்ரேமமுண்டாகிறதென்கிறார்.  (போகருசி:) விஷயம்போலே தானும் ஶ்லாக்ய (அஶ்லாக்ய) மாயிருக்கை.  (அந்வஹம்) அதுதன்னிலே ஒருகாலுண்டாய் கழிகையன்றிக்கே திநந்தோறும் உண்டாகாநின்றதென்கிறார்.  (ஏததே) அது தன்னிலும் ஒருபடிப்பட்டிருக்கையன்றிக்கே ஸ்வயம் ப்ரயோஜநமாக அபிவ்ருத்தமாகாநின்றதென்கிறார்.  (அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்திஶ்ஶப்தாதி போகருசிரந்வஹமேததே ஹா) விரோதி வாஸனையுமில்லாமையாலே ஶப்தாதி விஷயாநுபவத்தில் ப்ரேமமானது அகுதோபயமாக அநுதிநம் அபிவ்ருத்தமாகாநின்றதென்கிறார்.  (அந்வஹமேததே) அஹோராத்ரங்களை இரண்டையும் சொல்லாமல் அஹஸ்ஸை மாத்ரம் சொன்னது பகல் முப்பதும் ஆசையை வளர்த்து இரா முப்பதும் அநுபவித்தாலும் விடிய விடிய ஆசை வளராநிற்கையாலே.  (ஹா) ப்ராப்த விஷயத்தில் ருசி அல்பாம்ஶமுமில்லாமையையும், அப்ராப்த விஷயத்தில் அநுதிநம் அபிவ்ருத்தமாகிறபடியையும் நினைத்து ஐயோவென்று க்லேஶிக்கிறார்.  இத்தால் சரமபதார்த்தம் இல்லையென்கிறது.

நீர் இப்படி க்லேஶிப்பானென்?  இவையிரண்டுக்கும் அடி ஆராய்ந்து பரிஹரிக்கலாகாதோவென்ன, அது ப்ரஸித்தமன்றோவென்கிறார்.  (மத் பாபமேவ ஹி நிதாநம் அமுஷ்ய) இவையிரண்டுக்கும் அடி அடியேன் பண்ணிவைத்த பாபமேயன்றோவென்கிறார்.  “மத்பாபம்” என்று தாமறிந்ததாகச் சொல்லுகையாலே ப்ராமாதிகத்தை வ்யாவர்த்திக்கிறது.  ஏவகாரத்தாலே “த்விஷந்த: பாபக்ருத்யாம்”  (ஶாட்யாயந ஶ்ருதி) என்கிறபடியே ப்ராப்தமான ஸங்க்ராந்த பாபத்தை வ்யாவர்த்திக்கிறது.  மத்பாபமென்று தாமறிந்ததாகவும் தாம் செய்ததாகவும் தோற்றுகையாலே அவையிரண்டும்  (ஸந்திக்தம்) தள்ளி ஏவகாரத்தாலே வ்யவச்சேதிக்கப்படுகிறது.

பாபமாகில் ப்ராயஶ்சித்தவிநாஶ்யமாயன்றோ இருப்பது.  நீர் ப்ராயஶ் சித்தங்களைப் பண்ணி போக்கிக்கொள்ளலாகாதோவென்ன, அடியேனுக்கு கர்த்ருத்வமுள்ளது பாபங்களிலேயாகையாலே ப்ராயஶ்சித்தங்களில் அந்வயிக்க அவஸரமில்லையென்று ப்ராயஶ்சித்தாந்வயாநவகாஶமாகவுமாம்.  இத்தால் ப்ராயஶ்சித்தாந்வயாவகாஶாஸஹமாந பாபமே காரணமென்கிறது.  “மத்பாபம்” என்கையாலே லௌகிகபாபம் போலே அநுபவவிநாஶ்யமாதல், ப்ராயஶ்சித்தவிநாஶ்யமாதலின்றிக்கே ஸ்வப்ரவ்ருத்தி ஸாமாந்யத்துக்கு காரணமாய் அநுபவ (அநுதிந) வர்த்திஷ்ணுவாயிருக்கும்  பாபமென்று பாபவைலக்ஷண்யத்தைச் சொல்லவுமாம்.  அன்றிக்கே, “மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்ஶய:” (ரா.ஸு – 38.46) என்கிறபடியே ஜ்ஞாதாம்ஶம் அல்பமாய் அஜ்ஞாதாம்ஶம் பஹுவாயிருக்கும் பாபமென்னவுமாம்.

(ஹி) இவ்வர்த்தம் அடியேன் சொல்கொண்டு அறிவதன்றிக்கே ஜகத்விதிதமாயன்றோ இருப்பது என்கிறார்.  (நிதாநம்) பாபஶேஷத்தால் பிறந்த பாபமன்றிக்கே பாபங்களுக்கெல்லாம் மூலமான பாபமென்கிறார். நிதாநந்த்வாதி காரண (அமரம்)மிறே.  இம்மஹாநர்த்தத்துக்கு இதொழிய மற்றொன்று காரணமாமோவென்கிறார்.  பாபவிஜாதீயமான ஈஶ்வரஸ்வாதந்த்ர்யமானாலோவென்ன  (நாந்யத்) ஈஶ்வரஸ்வாதந்த்ர்யம் அன்றென்கிறார்.  பரமதயாளுவான ஈஶ்வரனுக்கு பராநர்த்த வஹமாயிருப்பதொரு ஸ்வாதந்த்ர்யம் உண்டோ என்று கருத்து.  இத்தால் மத்யமபதார்த்தமில்லை என்கிறது.

ஆகில் நிலைநிற்குமேயென்ன, நிவாரகரில்லாமையோ நிலைநிற்பதென்ன; ஆகில் நிவாரகர் ஆரென்ன (தத் வாரய) ப்ராயஶ்சித்தாநுபவங்களால் நஶிக்கையன்றிக்கே அநுதிநவர்திஷ்ணுவாய் ப்ரஸித்தமான அப்பாபத்தை தேவரீரே போக்கியருளவேணுமென்கிறார்.   (வாரய) தேவரீருக்கஶக்ய மானதொன்று உண்டோ என்று விதிக்கு தாத்பர்யம்.  என்கொண்டு இந்நிர்பந்தமென்னில் –

(ஆர்யேத்யாதி) பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு தேவரீர் ஸர்வஜ்ஞரல்லீரோ?  இது இஷ்டமாயிருக்குமவரல்லீரோ? பரதுக்கம் பொறுக்கைக்கு க்ருபையுடையரல்லீரோ?  அடியேன் பாபத்தைப் போக்கியருளாமைக்கென்கிறார். (ஆர்ய) அடியேன் பாபத்தைப் போக்கும் விரகறிகைக்குப் போரும்படி ஶக்தரானவரே என்கிறார். (யதிராஜ) அறிந்தபடி செய்கைக்குத்தக்க ஶக்தியுடையராய் அத்தாலே விளங்குமவரே யென்கிறார்.  ப்ரகாஶம் இஷ்டசித்யதீனமாகையாலே  இது இஷ்டமாயிருக்குமவரென்கிறார்.

(தயைகஸிந்தோ) ஜ்ஞானஶக்த்யாதிகளிரண்டும்  கார்யகரமாம்படி தயாகுணமுடையவரே யென்கிறார்.  (தயைகஸிந்தோ)  ராமபாணம் போலே தயை குறியழியாமல்  கிடப்பது தேவரீரிடத்திலேயென்கிறார்.  (தயைகஸிந்தோ) “ஆரேயறிவர் நின்னருளின் தன்மை” (இரா.நூ – 25) என்கிறபடியே அபரிச்சின்னமான தயாகுணமுடையவரென்கிறார்.  இதில் த்ருதீய பாதத்தாலே ஆகிஞ்சந்யத்தைச் சொல்லுகிறது.

  1. வ்ருத்யா பஶுர்நரவபுஸ்த்வஹமீத்3ருஶோபி

   ஶ்ருத்யாதி3ஸித்த4 நிகி2லாத்மகுணாஶ்ரயோயம் |

   இத்யாத3ரேண க்ருதிநோபி மித: ப்ரவக்தும்

   அத்3யாபி வஞ்சநபரோ அத்ர  யதீந்த்ர வர்த்தே ||

அவதாரிகை – கீழ் இவர் இப்படி நிர்பந்திக்கையாலே “நீர் மநுஷ்யரல்லீரோ, ஆஸ்திக்யாதிகளையுண்டாக்கிக் கொள்ளலாகாதோ என்ன, அடியேன் ஶரீர மாத்ரத்தாலே மநுஷ்யன்; வ்ருத்தியாலே பஶுஜாதீயநும், பஶுவ்யாவ்ருத்தனுமென்கிறார் (வ்ருத்யேத்யாதியால்).

வ்யாக்யானம் – (வ்ருத்யேத்யாதி) து ஶப்தம் வ்யஸ்ருத்யர்த்தமாய் “அஹம் து” என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார்.  அதாவது – தம்முடைய மநுஷ்யத்வம் லோகவிலக்ஷணமென்கை.  அத்தை விவரிக்கிறார் (வ்ருத்யேதி).  அடியேன் வ்ருத்தியாலே பஶுவென்னவுமாய், ஶரீரத்தாலே மநுஷ்யனென்னவுமாய் இருப்பானொருவனென்கிறார்.  பஶுத்வே நரத்வம் லோகவிலக்ஷணமிறே.  இத்தால் அடியேனுக்குள்ளது பஶுவுக்குப் போல் ஆஹாரநித்ராபயமைதுந நிமித்தமான ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளொழிய ஸ்வாத்மோஜ்ஜீவநரூபமான ப்ரவ்ருத்திநிவ்ருத்திகளில்லை என்கிறது.

ஆகில் உமக்கு வ்ருத்தியன்றோ ஶிக்ஷணீயை.  அத்தை ஸத்துக்களை அநுவர்த்தித்து ஶிக்ஷித்துக்கொள்ளலாகாதோவென்ன, அடியேன் அவர்களை வஞ்சித்துக்கொண்டிருப்பது அவர்கள் என் பக்கல் தாங்கள் வ்ருத்திஶிக்ஷை பண்ணிவைத்துக்கொள்ளும்படி காணுமென்கிறார்.  (ஈத்ருஶோபி) இப்படி நரபஶுவாயிருந்தேனேயாகிலும் பிறர் அடியேனைக்கண்டால் ஐயோ இவன் மநுஷ்யனாய் இருந்துவைத்து ததநுரூபமான ஶாஸ்த்ரவஶ்யதா ஜ்ஞானமன்றிக்கேயொழிவதே என்று தயை பண்ணும்படி வர்த்தித்தேனோ, அதுவுமில்லை.

அவர்கள் இவன் ஸர்வஜ்ஞனென்னும்படி காணும் வர்த்தித்ததென்கிறார்.  (ஶ்ருத்யேத்யாதியால்) நித்ய நிர்தோஷமாய் ஸ்வத: ப்ரமாணமாய் என்றுமொக்க குருமுகஶ்ரவணஸித்தமான ஶ்ருதியாலும் ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதீதிஹாஸபுராண  தர்மஶாஸ்த்ரங்களாலும் “ஶாந்தோ தாந்த:” (ப்ருஹ.உப – 6.4.23) இத்யாதிப்படியே ஸம்ஶயவிபர்யயமற ப்ரிதிபாதிக்கப்படாநின்றுள்ள ஸமஸ்தாத்ம குணங்களுக்கும் வகுத்தவிடம் இவரென்றறுதியிட்டு இந்தளத்தில் தாமரை பூத்தாற்போலே இருள்தரு மாஜ்ஞாலமான இவ்விபூதியிலே இப்படியிருப்பானொருவன் உண்டாவதே என்று ப்ரீதியுடனே அல்பஜ்ஞரன்றிக்கே, கீழ் சொன்ன ஶ்ருத்யாதிகளுடைய அர்த்தங்களை யதாவாக அறியும்படியான ஜ்ஞாநஶக்த்யாதிகளை யுடையவர்களும் தங்களிலே தாங்கள் விஶ்வாஸபூர்வகமாக சொல்லுகையே ப்ரயோஜநமாக ஸ்வவ்ருத்தியை தேவரீர் ஸந்நிதியில் விண்ணப்பம் செய்யும் தசையிலும் பரவஞ்சநத்தில் அத்யாதரவிஶிஷ்டனாய்க் கொண்டு இவ்விபூதியிலே வர்த்தியாநின்றேன்.

(வஞ்சநபர:) அவர்கள் அடியேனுடைய பாஹ்யாகாரத்திலே ஆதரத்தைப் பண்ணுமாபோலேயாய்த்து அடியேன் அவர்களை வஞ்சிக்கையில் பண்ணுமாதரமுமென்கிறார்.  (அத்யாபி வஞ்சனபர:) இப்படி விண்ணப்பம் செய்கிறதும் ஒரு வஞ்சநாவிஶேஷமென்கிறார்.  (வஞ்சநபர:)  இதுவாய்த்து வ்ருத்தியாலுண்டான பஶுவில் வ்யாவ்ருத்தி.  இதுக்கு ஹேதுவேதென்ன (அத்ர) இவ்விபூதியிலிருப்பதாய்த்து என்கிறார்.  (யதீந்த்ர) ஜிதேந்த்ரியரில் தலைவராகைக்கும் அடியேன் பரவஞ்சநபரனாகைக்கும் என்ன சேர்த்தி உண்டென்கிறார்.

அன்றிக்கே, இத்தால் பெற்ற பலம் ஏதென்ன, (அத்ரவர்த்தே) தார்மிகர் கரையிலிருக்க பெருங்காற்றில் மூழ்கிப்போவார் கூவுமாப்போலே தாம் ஸம்ஸாரார்ணவ நிமக்நராய் ததுத்தரணதக்ஷரான எம்பெருமானாரைக் கண்டு தேவரீர் ஸந்நிஹிதராயிருக்க அடியேன் இப்படி ஸம்ஸாரஸாகரநிமக்நநாவதே என்று கூப்பிடுகிறார்.  (ப்ரவக்தும் வஞ்சநபர:) ஶாஸ்த்ரார்த்தங்களை அறிந்து வைத்து அநுஷ்டியாமல் பரவஞ்சநம் பண்ணுகிறவடியேன் ஒருநாளும் திருத்தலாகாது என்று கருத்து.  அன்றிக்கே, து ஶப்தம் வ்யாவ்ருத்யர்த்தமாய் “அஹம் து” என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச்  சொல்லுகிறார்.  அதாவது மநுஷ்யன் என்கிற ப்ராந்திவிஷயனான அடியேன் மநுஷ்யனன்றென்கை.  ஆனால் பின்னை ஆரென்னில் (பஶு:) பஶுவென்கிறார்.  உம்மிடத்தில் தத்வ்யாவ்ருத்தி தோற்றாநின்றதே என்ன, (நரவபு:பஶு:) அதுதன்னிலும் விஜாதீய பஶுவென்கிறார்.  அதாவது பாஹ்யமான சதுஷ்பாதத்வமில்லையேயாகிலும் ஆந்தரமான அஜ்ஞாநமுண்டென்கை.  “ஜ்ஞானேன ஹீந: பஶுபிஸ்ஸமாந:” என்கிறபடியே த்விபாத் பஶுவுமுண்டென்கிறாராகவுமாம்.  இத்தால், ப்ரயோஜகஜ்ஞாநாபாவ நிபந்தநபஶுத்வம் அடியேனிடத்தில் உண்டென்கிறாரென்கிறது.

(அஹம் நரவபு:பஶு:) பஶுவாயடியேன் த்விபாத் பஶுவாகையாலே கேவல நரனுமன்று, கேவல பஶுவுமன்று;  உபயவ்யாவ்ருத்தனென்கிறார்.  இத்தால் கேவல நரனைப்போலே ஶாஸ்த்ரவஶ்யநுமன்றிக்கே, கேவல பஶுவைப்போலே கட்டவும் விடவுமாம்படி பரவஶ்யநுமன்றிக்கே ஸ்வேச்சாசாரியாய் இருப்பானொருவனென்கிறது.  இத்தால் ஸாத்ய ஸித்தோபாஸநங்களுக்கு அநதிகாரியென்கிறது.  ஆகில் உமக்கு ஜ்ஞாநமன்றோ வேண்டுவது;  அத்தை ஸத்துக்களை அநுவர்த்தித்து உண்டாக்கிக்கொள்ளலாகாதோவென்ன, அடியேன் வ்ருத்தியாலே அவர்களை வஞ்சித்துக் கொண்டிருப்பது, அவர்கள் தாங்கள் அஜ்ஞாந நிவ்ருத்தி அடியேன் பக்கல் பண்ணி வைத்துக் கொள்ளலாம்படி காணுமென்கிறார்.  மேல் (ஈத்ருஶோபி) இப்படி நரபஶு வ்யாவ்ருத்தனாய் ஜ்ஞாநாபாவநிபந்தனமான பஶுத்வமுடையேனாயிருந்ததேனேயாகிலும் ததநுரூபமான பாஹ்யா காரத்தோடே வர்த்தித்தேனோ?  அதுவுமில்லை.  தத்விருத்தமாய்க்காணும் வர்த்தித்ததென்கிறார்.

(வ்ருத்த்யா) கேவல பாஹ்யாகாரத்தாலே கிடீர் அவர்கள் இவர் ஸாரஜ்ஞரென்று தங்களில் தாங்கள் விஶ்வாஸபூர்வகமாகச் சொல்லும்படிகாணும் அவர்களை வஞ்சித்ததென்கிறார்.  (வ்ருத்த்யா அத்யாபி வஞ்சனபர:) இப்படி தேவரீரை அநுவர்த்தித்துப் போருகிறதும் வஞ்சனாவிஶேஷமென்கிறார்.  (அத்ர யதீந்த்ர வர்த்தே) தேவரீர் இவ்விபூதியில் ஜிதேந்த்ரியரில் தலைவராய் வர்த்திக்குமாபோலே அடியேன் வஞ்சகரில் தலைவனாய் வர்த்திக்கும்படியென்கிறார்.  (யதீந்த்ர வர்த்தே) தேவரீருக்கு இந்த்ரிய ஜயத்தால் பிறந்த ஐஶ்வர்யம் தேவரீர் ஸம்பந்திகளுக்கும் போரும்படியிருக்க அடியேன் இந்த்ரிய பரவஶனாய் ஸம்ஸாரத்துக்கு ஆளாவதே என்கிறார்.

  1. து:3க்கா2வஹோஹம் அநிஶம் தவ து3ஷ்டசேஷ்ட:

   ஶப்3தா3தி3போ43நிரத:ஶரணக3தாக்2ய: |

   த்வத்பாத3 ப4க்த இவ ஶிஷ்டஜநௌக4மத்4யே

   மித்2யாசராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க2: ||

அவதாரிகை – நீர் ஶரணாகதரன்றோ?  உமக்கு ஆநுகூல்யாதிகளில்லையோ?  அவை ஜ்ஞானகார்யங்களன்றோவென்ன, அவை விபரீதமாய்க்காணுமிருப்பது என்கிறார்  (து:க்கேத்யாதியால்).

வ்யாக்யானம் – (து:க்காவஹோஹம்) இதுவாய்த்து அடியேனுடைய ஆநுகூல்ய ஸங்கல்பம்.  ஸர்வ ப்ரகாரத்தாலும் ஆநுகூல்ய ஸங்கல்பம் செய்கைக்கு யோக்யமான விஷயத்தில் ப்ராதிகூல்யம் செய்கைமாத்ரமன்றிக்கே ப்ராதிகூல்ய காரணத்தாலுண்டான து:க்கத்தை தேவரீர் அநுபவிக்கும்படி பண்ணினேன் என்கிறார்.  (து:க்காவஹோஹம்) ஆநுகூல்யம் செய்கையையிட்டு நிரூபிக்கைத் தவிர்ந்து து:க்காவஹனென்றாய்த்து நிரூபகமிருக்கும்படி.  (அஹம்) இப்படியானதுதான் மற்றாரேனுமொருவரென்றாறியிருக்கலாமோ?  “ஸ்ருஷ்டஸ்தவம் வநவாஸாய” (ரா.அ. – 40.5) என்கிறபடியே தேவரீர் திருவடிகளிலே ஸமஸ்தவித கைங்கர்யங்களையும் செய்கைக்கிட்டுப் பிறந்த அடியேன் காணும் து:க்காவஹனென்னலாம்படியாவது.

(அநிஶம்) இதுதான் ஒரு காலத்திலன்றிக்கே ஸ்வரூபமுள்ளதனையும் இதுவே யாத்ரையாய்த்தென்கிறார்.  இப்படி து:க்காவஹனாயிருந்ததுதான் ஆருக்கென்னில் (தவ) மற்றையாரேனும் விஷயத்திலேயாகில் ஆறியிரேனோ?  “காமாதி தோஷஹரம்” என்று கீழ்ச்சொன்னபடியே ஆஶ்ரித து:க்கநிவர்த்தகரான தேவரீர் விஷயத்திலே கிடீர் அடியேன் து:க்கத்தைச் செய்வது.  (தவது:க்காவஹ:) இதுவாய்த்து அடியேன் செய்யும் ப்ரத்யுபகாரமென்கிறார்.  அன்றிக்கே, “ரிபூணாமபி வத்ஸல:”  (ரா.யு – 50.56) என்கிறபடியே குற்றம் செய்தவர்கள் திறத்திலும் வத்ஸலரான தேவரீர்க்கென்றுமாம்.

(துஷ்டசேஷ்ட:) இப்படி உபகார விஷயத்தில் து:க்கம் செய்வது மாநஸிகமாகையன்றிக்கே காயத்தாலும் துர்வ்யாபாரங்களைச் செய்தாய்த்து து:க்கத்தை உண்டாக்குவதென்கிறார்.  அவையாவன – தேவதாந்தரபஜநாதிகள்.  (துஷ்டசேஷ்ட:) மாநஸீகமாகவுமாம். து:க்கம் செய்ய நினைக்கவொண்ணாத விஷயத்தில் அடியேன் காயிகமாக துர்வ்யாபாரங்களைச் செய்தாய்த்து து:க்கத்தைச் செய்வதென்கிறார்.

இதுதனக்கு அடியென்னென்ன (ஶப்தாதிபோகநிரத:) அநுதபிக்கைக்கு மநஸ்ஸுதானில்லை.  அது ஶப்தாதி விஷயங்களில் மிகவும் ஆஸக்தமாகைக்கு த்வாரமாய்த்தென்கிறார்.  ரதி – மந:கார்யமிறே.

நீர் ஶப்தாதி விஷயப்ரவணராய் நிந்திதங்களைச் செய்தீராகில் நமக்கு து:க்கமாகும்படி எங்ஙனேயென்ன, (ஶரணகதாக்ய:)  ஶரணாகதன் குறை ஶரண்யநதன்றோ?  “வ்ஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஶம் பவதி து:க்கித:” (ரா.அ – 2.40) “த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம” (ரா.யு – 41.4) என்றவனோடே படிகிறவரன்றோ தேவரீர்.  (ஶரணாகதாக்ய:) ப்ரஸித்திமாத்ரமேயாய்த்துள்ளது.  (ஶரணாகதாக்ய:) தேவரீர் து;க்கப்படுகைக்குப் போரும், அதில் வ்யுத்பத்தியில்லை என்கிறார்.  ந நாம்நி வ்யுத்பத்தியிறே.

உமக்கு ஶிஷ்டபரிக்ரஹமுண்டே அது ஆநுகூல்யாதி களிலேகதேஶமன்றோவென்ன, அது அடியேனுடைய வஞ்சநாஸாமர்த்யத்தாலுண்டானதித்தனை போக்கி தத்யமன்றென்கிறார் மேல்; வஞ்சித்தபடிதான் எங்ஙனேயென்ன (த்வத் பாத பக்த இவ) அடியேனை ஶிஷ்டர் பரிக்ரஹிக்கைக்கு அடியேன் அநுஷ்டித்தவுபாயம்.  தேவரீர் திருவடிகளில் ப்ரீதி உள்ளவன்போலே வர்த்தித்தது.  (தத் பிந்நத்வே ஸதி  தத்கத பூயோதர்மமிறே – ஸாத்ருஶ்யம்) தத்பேதம் பக்தியில்லாமை;  தத்கதபூயோதர்மம் –  பக்திமான்கள் செய்யும் செயல்கள்.  அவையாவன – ஸ்வரநேத்ராங்க விக்ரியாதிகள்.  (ஶிஷ்டஜநௌகமத்யே) இவ்வநுகாரமாத்ரத்தாலே ப்ரமாணபரதந்த்ரரானவர்கள் அடியேனை மெய்யே தேவரீர் ஸம்பந்தியாக ப்ரதிபத்தி பண்ணி ஸ்வகோஷ்டியிலே புகுரவிட்டார்கள்.  (மித்யாசராமி) அவ்வளவிலும் ஒரு விஶேஷமின்றியே அக்கோஷ்டியின் நடுவே கோமுக வ்யாக்ரம்போலே அவர்கள் மேன்மேலும் விஶ்வஸிக்கும்படி அந்ருதத்தையே அநுஷ்டியாநின்றேன்.  அதாவது பூர்வாநுகாரத்தை விடாதொழிகை.  (ஶிஷ்டஜநௌகமத்யே மித்யாசராமி) ஓரிருவரன்றிக்கே மஹாஸங்கமான ஶிஷ்டஜநங்களுடைய நடுவிலே அடியேன் அந்ருதத்தையே அநுஷ்டியாநின்றேனென்கிறார்.  இத்தால் “மஹாஜநோ யேந கதஸ்ஸ பந்தா:” (பார. வந – 313.17) என்கிற மார்க்கத்தையும் தப்பினேன் என்கிறார் என்கிறது.  அதாவது – பாவபந்தமில்லாமை.

(யதிராஜ) இக்கோஷ்டிக்கு நிர்வாஹகர்  தேவரீரென்று அறிந்துவைத்துச் செய்யும் வஞ்சநத்தைத் தவிர்கிறிலேன்.  அன்றிக்கே தேவரீர் இக்கோஷ்டியின் நடுவே இந்த்ரிய ஜயத்தால் புகர் பெற்று ஸஞ்சரிக்குமாப்போலேயாய்த்து அடியேன் வஞ்சநத்தாலே புகர் பெற்று ஸஞ்சரிக்கும்படியென்கிறாராகவுமாம்.   அங்ஙநுமன்றிக்கே தேவரீர் இக்கோஷ்டியின் நடுவே தத்யத்தை  ஆசரித்துப் புகர் பெறுமாப்போலேயாய்த்து அடியேன் மித்யாசரணத்தாலே புகர் பெறும்படியென்கிறாராகவுமாம்.

நம்மை இக்கோஷ்டிக்கு நிர்வாஹகராக அறிந்துவைத்து பயமுமின்றிக்கே இப்படி ஸஞ்சாரத்தைச் செய்வானென்னென்ன (ததோஸ்மி மூர்க்க:) ஆகையிறே அடியேன் மூர்க்கனாகிறேன் என்கிறார்.  (மூர்க்கோஸ்மி) இம்மௌர்க்யம் அடியேனுக்கு ஸ்வரூபமென்கிறார்.  ஹிதாஹித விவேகமின்றியே பிடித்தது கைவிடாமல் இருக்குமவனிறே மூர்க்கனாவது.  “மூர்க்கவைதேய பாலிஶா:” (அமரம்) என்றிறே கோஶம்.

  1. நித்யம் த்வஹம் பரிப3வாமி கு3ரும் ச மந்த்ரம்

   தத்தே3வதாமபி ந கிஞ்சித3ஹோ பி3பே4மி |

   இத்த2ம் ஶடோபி அஶடவத்33வதீ3யஸங்கே4

   ஹ்ருஷ்டஶ்சராமி யதிராஜ ! ததோஸ்மி மூர்க்க2: ||

அவதாரிகை – கீழும் மேலும் ஸ்வகதமாக அநுஸந்திக்கிற வஞ்சநாதி தோஷங்களுக்கெல்லாம் நிதாநத்தை விண்ணப்பம் செய்கிறார் (நித்யமித்யாதியாலே).  அன்றிக்கே, இவர் “மித்யாசராமி” என்றவாறே நீர் பிறர் விஶ்வஸிக்கும்படி மித்யாவேஷத்தைத் தரித்துத் திரியாநின்றீராகில் உமக்கு குரு மந்த்ர தேவதாதிகளில் விஶ்வாஸமிருக்கும்படி எங்ஙனேயென்ன;  ஐயோ! அடியேனுக்கு இவ்விஷயங்களில் விஶ்வாஸமில்லாமை மாத்ரமன்றிக்கே அவ்விஷயங்களைப் பரிபவியாநின்றேனென்கிறார்.

வ்யாக்யானம் – (நித்யமித்யாதி) (நித்யம்) யாவதாத்மபாவியாக ஶ்லாகநீயமான விஷயங்களைக் கிடீர் அடியேன் நித்யமாக பரிபவிப்பது.   (அஹம் து) என்று பரிபவிக்கிற தம்முடைய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறார்.  அதாவது – ஸம்ஸாரிகளிலும் முமுக்ஷுக்களிலும் வேறுபட்டிருக்கை.  அதாவது – ஸம்ஸாரிகள் ஸ்வரூபஜ்ஞாநமில்லாமையாலே குரு மந்த்ர தேவதைகளை பரிபவிப்பார்கள்.  முமுக்ஷுக்கள் ஸ்வரூபஜ்ஞராகையாலே ஶ்லாகியாநிற்பர்கள்.  அடியேன் ஸ்வரூபஜ்ஞனாயிருந்துவைத்து பரிபவியாநிற்பன் என்கிற இதுவாய்த்து அடியேன் வைலக்ஷண்யம்.

(நித்யம் து பரிபவாமி) உச்சிவீடு விடுமாப்போலே அல்பகால விச்சேதமும் இன்றிக்கே பரிபவியாநின்றேன்.  (அஹம் து நித்யம் பரிபவாமி) லோகத்திலுள்ளவர்கள் ப்ரமப்ரமாதிகளால் காதாசித்கமாக பரிபவிப்பவர்களாகில், அடியேன் அப்படியன்றிக்கே புத்திபூர்வகமாக யாவத்காலமும் பரிபவியாநின்றுகொண்டு அதில் நின்றும் கால்வாங்குகிறிலேன்.  (அஹம் து நித்யம் பரிபவாமி) லௌகிகருங்கூட நித்யமாக ஆதரிப்பார்களாகில், அடியேன் நித்யமாக பரிபவியாநிற்பனென்கிறார்.  து ஶப்தம் ஏவகாரார்த்தமாய் அடியேனைப்போலே நித்யமாகப் பரிபவிப்பார் மற்றொருவரில்லை என்கிறாராகவுமாம்.

இப்படி பரிபவிக்கிறது தான் எவற்றையென்னில் (குரும் ச மந்த்ரம் தத்தேவதாமபி) ஸ்வோபதேஶாதிகளாலே தேஹாத்மாபிமாநம் முதலான அஜ்ஞாநத்துக்கு நிவர்த்தகனாய் “ந குரோரபரஸ்த்ராதா” (?) என்கிறபடியே இவன் தனக்கு ஸர்வவித ரக்ஷகனான ஆசார்யனையும், “மந்தாரம் த்ராயதே இதி மந்த்ர:” என்கிறபடியே ஸ்வார்த்த ப்ரகாஶனத்வாரா  இவன் தனக்கு ஸ்வாசார்யோபதிஷ்டார்த்தங்களில் விஸ்ம்ருதியும் ததநுரூபமான அநுஷ்டாந ப்ரச்யுதியும் வாராமல் ரக்ஷகமான மந்த்ரத்தையும், அம்மந்த்ரத்துக்குள்ளீடாய் ஸ்வாசார்யனாலே இவ்வாத்மவஸ்துவுக்கு ப்ராப்த ஶேஷியாக உபதேஶிக்கப்பட்ட தேவதையையும் கிடீர் அடியேன் பரிபவிப்பதென்கிறார்.  ச காரம் ஸமுச்சயார்த்தமாய் குரு மந்த்ர தேவதைகளையுமென்று ஸமுச்சயிக்கிறது.  அபி ஶப்தம் விரோதார்த்தமாய் “யஸ்ய தேவே பராபக்திர் யதாதேவே ததா குரௌ” (ஶ்வேத – 6.23)  “மந்த்ரே தத்தேவதாயாஞ்ச ததா மந்த்ரப்ரதே குரௌ த்ரிஷு பக்திஸ்ஸதா  கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதநம்” (ஶ்ரீ விஷ்ணு தத்த்வம்) என்கிறபடியே இச்சேதநநுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம காரணமாக விதிக்கப்பட்ட பக்திக்கு விஷயமான குரு மந்த்ர தேவதைகளையும் அதுக்கெதிர்தட்டாக பரிபவியாநின்றேன் என்னுமிவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது.

இதில் குருபரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படி நடவாதொழிகையும், அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்.  மந்த்ரபரிபவமாவது – அதின் அர்த்தங்களில் விஸ்ம்ருதியும், விபரீதார்த்த ப்ரதிபத்தியும்.  தேவதாபரிபவமாவது – கரணத்ரயத்தையும் தத்விஷயத்தில் ப்ரவணமாக்காதொழிகையும், இதர விஷயங்களில் ப்ரவணமாக்குகையும்.  இவையிறே அடியேனுக்குள்ளது என்று கருத்து.

இப்படி இருந்துவைத்து பரிபவிக்கையில் பயந்தானில்லையோவென்ன (ந கிஞ்சிதஹோ பிபேமி) (ந கிஞ்சித்) அல்பாம்ஶமும் பயப்படுகிறதில்லை.  லோகத்தில் புராண வைராக்யம்போலே ஶ்ரவணதஶையில் பயமுண்டாகலாமிறே, அதுவுமில்லை அடியேனுக்கென்கிறார்.  (அஹோ) தம்முடைய நிலை தமக்கு ஆஶ்சர்யமாகத் தோற்றுகையாலே “அஹோ” என்கிறார்.  அன்றிக்கே, இப்படி ப்ராப்த விஷயங்களைப் பரிபவித்தாலும் பரிபவித்தோமென்கிற பயம் அல்பாம்ஶமும் இல்லாதொழிவதே! என்று வ்யஸநப்படுகிறாராகவுமாம்.  “கிஞ்சிதபி ந பிபேமி” என்னவேண்டியிருக்க, முன்னே “ந கிஞ்சித்” என்கிறது – நிஷேத்யமான பயலேஶத்தினுடைய அத்யந்தாபாவத்தைப்பற்ற, மத்யே “அஹோ” என்கிறது பிறந்த ஆஶ்சர்ய விஷாதங்கள் உள்ளடங்காமையாலே நீர் இப்படி குரு மந்த்ர தேவதைகளை பரிபவிப்பதுதான் பிறரறியும்படியாயோவென்ன, கூடமாய்க்காணுமென்கிறார்.  (இத்தம் ஶடோபி) கீழ்ச்சொன்னபடியே குரு மந்த்ர தேவதைகளை கூடமாய் பரிபவித்து பயலேஶமுமின்றிக்கே இருந்தேனேயாகிலும் (அஶடவத்) அது பிறர் நெஞ்சில் தட்டாதபடி கரணத்ரயத்தாலும் தேவரீர் திருவுள்ளத்துக்கு அபிமதம் செய்யுமவன்போலே வர்த்தித்தேன்.  அதுகொண்டு (பவதீய ஸங்கே) தேவரீருடைய ஸம்பந்தமே நிரூபகமாயிருக்குமவர்கள் அடியேனை பாவபரீக்ஷை பண்ணாமல் ஸ்வகோஷ்டியிலே புகுரவிட்டார்கள்.  (ஹ்ருஷ்ட:) இவர்களை வஞ்சித்து இவர்கள் ஸங்கத்தில் புகுந்தேனாவது எப்போதோ என்றிருந்த அடியேன், அது பெற்றவாறே மநஸ்ஸந்தோஷமுடையவனாய் (சராமி) நிவாரகரில்லாமையாலே யதேச்சமாக ஸஞ்சரியாநின்றேன்.

(பவதீய ஸங்கே ஹ்ருஷ்டஶ்சராமி) இவ்வஞ்சந்தான் புறம்பே செய்யப்பெற்றதோ?  “இராமாநுசனைக் கருதுமுன்னம் பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே” (இராமா.நூ – 86) என்கிறபடியே இவ்வாத்மவஸ்துவுக்கு ப்ராப்த ஶேஷிகளான தேவரீர் ஸம்பந்திகள் திறத்தில் கிடீர் செய்யப்பெற்றதென்கிறார்.  அன்றிக்கே, அடியேனுக்கு ஸ்வவஞ்சநத்தால் பிறந்த ஹர்ஷத்தை அவர்கள் ஸ்வகோஷ்டியில் புகுருகையால் வந்ததென்னும்படிகாணுமென்கிறாராகவுமாம்.

(யதிராஜ) அடியேனுக்கு இந்த்ரிய நிக்ரஹத்தில் ருசியையுண்டாக்கியன்றோ தேவரீர் யதிராஜராக வேண்டியதென்கிறார்.  ரஞ்ஜநாத் ராஜாவிறே.  (பவதீய ஸங்கே ஹ்ருஷ்டஶ்சராமி யதிராஜ) இந்த்ரிய நியமநத்தால் புகர்பெறும் தேவரீருக்கு அடியேன் இந்த்ரிய வஶ்யனாய் தேவரீர் ஸம்பந்திகளை வஞ்சித்துத் திரிவதேயென்கிறார்.

“அறிந்து வைத்து வஞ்சிப்பானென் என்ன (ததோஸ்மி மூர்க்க:) கீழ் சொன்னவையெல்லாம் ஸ்வரூப விரோதிகளென்றறிந்திருக்க பயலேஶமுமின்றிக்கே அவற்றை விடமாட்டாமல் செய்கையாலே மூர்க்கனாகிறேன்.  (மூர்க்கோஸ்மி) அடியேனுக்கு மௌர்க்யமாயிற்று ஸத்தையென்கிறார்.  கீழ் “க்ருதிநோபி” என்றும் “ஶிஷ்டஜநௌகமத்யே” என்றும் ஸாமாந்யேன சொன்னத்தை பவதீய ஸங்கே என்று ஒரு விஶேஷத்திலே பர்யவஸிப்பிக்கிறார்.

இத்தாலே எம்பெருமானார் ஸம்பந்திகளாய்த்து ஶாஸ்த்ரார்த்த வித்துக்களும் ததர்த்தப்ராமாண்யவாதிகளுமென்கிறது.

  1. ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா

    யோஹம் சராமி ஸததம் த்ரிவிதா4பசாராந் |

    ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதே3

    காலம் நயாமி யதிராஜ!  ததோஸ்மி மூர்க்க2: ||

அவதாரிகை – தேவரீர் ஸம்பந்திகளை வஞ்சிக்கை மாத்ரமன்றிக்கே தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேனென்கிறார் (ஹா ஹந்த ஹந்தேத்யாதியால்).

வ்யாக்யானம் – (ஹா ஹந்த ஹந்த) வீப்ஸையாலே விஷாதாதிஶயம் தோற்றுகிறது.  தாம் அத்தலையில் கரணத்ரயத்தாலும் பண்ணுகிற அபராதங்களையும் வஞ்சநத்தையும் பார்த்து அவற்றை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே து:க்கம் இரட்டித்து ஐயோவென்கிறார்.   அபராதங்களைச் செய்வது உபகாரகவிஷயத்திலேயாகையாலே பொறுக்கமாட்டிற்றிலர்.

(மநஸா க்ரியயா ச வாசா) சகாரம் ஸமுச்சயார்த்தகம்.  அதுதானும் ஒரு கரணத்தாலன்றிக்கே கரணத்ரயத்தாலும் செய்யப்பெற்றேன்.  (மநஸா க்ரியயா ச) ப்ராமாதிகமாகவன்றிக்கே ஸங்கல்பபூர்வமாயாயிற்றுச் செய்வது.  (வாசா) நினைத்தபோதே சொல்லில் அறிந்து பரிஹரிப்பார்களென்று நினைத்து செய்தபின்பாயிற்றுச் சொல்லுவது.  (வாசா) அதுதானும் கூடமாயோ? பிறரறிந்ததும் என் வாயாலேகாணும்.  (மநஸா க்ரியயா வாசா) “வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம்” என்கிறதற்கு எதிர்தட்டாகக் கிடீர் அடியேன் செய்திருப்பது.  (யோஹம்) “பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச” (?) என்கிறபடியே பாபம் செய்கையிலே ப்ரஸித்தனான அடியேன்.  “யோ வஜ்ரபாத” (ரா.யு. – 59.140) இத்யாதிகளாலே யச்சப்தம் ப்ரஸித்தபராமர்ஶியிறே.  (யோஹம்) இப்ரஸித்தியையிட்டு நிரூபிக்கும்படி காணும் அடியேனிருப்பது.  (சராமி) அநுதாபம் பிறந்து க்லேஶிக்கிற தஶையிலும் அபராதங்களைச் செய்கையைத் தவிர்கிறிலேன்.  (ஸததம்) தந்தாம் ப்ரஸித்தியை ஒருநாளும் கைவிடார்களிறே.

அபராதங்கள்தான் எவையென்ன (த்ரிவிதாபசாரான்) மூன்று வகைப்பட்டிருந்துள்ள அபசாரங்களாய்காணும் அபராதங்களிருப்பது என்கிறார்.  அவையாவன – பகவதபசாரமும், பாகவதாபசாரமும், அஸஹ்யாபசார முமென்று; நிஷித்தங்களை நாலு விதமாகச் சொல்லாநிற்க இங்கு அபசாரங்களை மாத்ரம் சொல்லுகிறது.  விதி நிஷேதங்களிரண்டும் பகவதாஜ்ஞாரூபங்களாகையாலே தததிக்ரமம் பகவதபசாரத்திலே சேருமென்னுமபிப்ராயத்தாலேயாதல்; அக்ருத்யகரணாத்யபேக்ஷயா பாகவதாபசாராதிகள் க்ரூரங்களாகையாலே அவற்றினுடைய அநுஷ்டாநத்தைச் சொன்னபோதே ததநுஷ்டாநம் கிம்புநர்ந்யாயஸித்தமிறே என்னுமபிப்ராயத்தாலேயாதல்.

அங்ஙனன்றிக்கே மநஸேத்யாதிக்குச் சேர கரணபேதநிபந்தநமான கார்யபேதத்தை திருவுள்ளம் பற்றி த்ரிவிதாபசாரான் என்கிறாராகவுமாம்.  அப்போதைக்கு ஓரொரு அபசாரங்களை கரணத்ரயத்தாலும் அநுஷ்டித்தேனென்று பொருளாகக்கடவது.  (ஸோஹம்) கீழ்ச் சொன்னபடியே அபசாரங்களைச் செய்யாவிடில் ஸத்தைப் பெறாத அடியேன்.  (தவ) “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு: ஸ ஏவ ஸர்வ பூதாநாம் உத்தர்தா நாஸ்தி ஸம்ஶய:” (?) என்கிறபடியே ஸர்வோத்தாரகரான தேவரீருக்கென்னுதல்.  “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஶம் பவதி து:க்கித:” (ரா.அ – 2.41) என்கிறபடியே பரது:க்கம் பொறுக்கமாட்டாத ம்ருதுப்ரக்ருதிகரான தேவரீருக்கென்னுதல்.

(அப்ரியகர:) உபகாரத்தைப் பார்த்தாலும் ஸௌகுமார்யத்தைப் பார்த்தாலும் ப்ரியமே செய்யத்தக்க விஷயத்தில் அப்ரியத்தைச் செய்யாநின்றேன்.  ஶிஷ்யன் ஆசார்யநுகப்பிலே  ஊன்றிபோரு மென்கைக்கெதிர்தட்டாயாயிற்று அடியேன் நிலை என்கிறார்.  (அப்ரியகர:) நெஞ்சாலும் அப்ரியம் செய்ய நினைக்கவொண்ணாத விஷயத்தில் கிடீர் அடியேன் அப்ரியத்தை காயிகமாகச் செய்வதென்கிறார்.

ஆகில் நம்முன் நிற்கும் விரகென்ன (ப்ரியக்ருத்வத்).  தேவரீர் திருவுள்ளம் அறிய தேவரீர்க்கு விப்ரியம் செய்தேனேயாகிலும் அது தேவரீர் திருவுள்ளத்தில் தட்டாதபடி தேவரீர் திருவுள்ளத்தாலே ப்ரியம் செய்வான்போல் வர்த்தித்தேன்.  அதுகொண்டு தேவரீர் திருமுன்பே நிற்கலாய்த்தென்கிறார்.  ராவணன் ஸந்யாஸி வேஷத்தைக்கொண்டு பிராட்டியை வஞ்சித்தாப்போலே அடியேன் ஸாத்விக வேஷத்தைத் தரித்து தேவரீரை வஞ்சித்தேன் என்று கருத்து.  (ஏவம் காலம் நயாமி) இப்படி ஆசார்யாபசாரம் பண்ணாதொழியில் அடியேனுக்குக் காலம் செல்லாதென்கிறார்.  (காலமேவம் நயாமி) “குணாநுபவ கைங்கர்யங்களே போதுபோக்காகையும்” (முமுக்ஷுப்படி – 116) என்கிறபடியே குணாநுபவ கைங்கர்யங்களால் போக்கத்தக்கக் காலத்தை கிடீர் அடியேன் அவ்விஷயங்களை வஞ்சித்து அதுவே யாத்ரையாய் போக்குகிறதென்கிறார்.  இவர் இப்படி விண்ணப்பம் செய்தவாறே, இவர் செய்த அபசாரங்களைத் தம் திருவுள்ளத்தில் தட்டாமல் ஸ்வாபராதங்களை அறிந்து அநுபவித்து ப்ராப்த விஷயத்தில் அவற்றை விண்ணப்பம் செய்யும்படி ஓரதிகாரியும் உண்டாவதே என்று இவர் திருவுள்ளம் உகந்தவாறு இருக்கும் இருப்பைக் கண்டு “யதிராஜ” என்று ஸம்போதிக்கிறார்.  அன்றிக்கே, இவர் அநுதாபத்தைக்கண்டு அவர் இவ்வபசாரகரணத்தில் நி்ன்றும் மீண்டாராகும் விரகேதோவென்று தம் திருவுள்ளத்தில் ஓடுகிறபடி தோற்றவிருக்கும் இருப்பைக்கண்டு ஆஶ்ரித விஷயத்தில் உஜ்ஜீவநயத்நமன்றோ தேவரீருக்கு புகர் என்று யதிராஜ ஶப்தத்தால் ஸம்போதிக்கிறாராகவுமாம்.

இப்படி ஸாநுதாபமாக ஸ்வாபராதங்களை விண்ணப்பம் செய்தபின்பும் அபசாரங்களிலே அந்வயிக்கிறபடியைக்கண்டு அபசாரங்களென்றறிந்து வைத்து அவற்றிலந்வயிக்கப் பெறுவதே என்று (ததோஸ்மி மூர்க்க:).  ஆகாது என்றறிந்து வைத்து அவைதன்னையே செய்கையாலிறே அடியேன் மூர்க்கனாகிறதென்கிறார்.

Continued…

error: Content is protected !!