ப்ரதிவாதிபயங்கரம் அண்ணா
அருளிச்செய்த பாதாதிகேசமாலை
மணவாளமாமுனிகள் விஷயமான அமலனாதிபிரான்
1 போதச்சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த
சீதக்கமலத்தை நீரேறவோட்டுச்சிறந்து அடியே
ஏதத்தைமாற்று மணவாளயோகி இனிமை தரும்
பாதக்கமலங்கள் கண்டேன் எனக்குப்பயமில்லையே.
2 வேழக்குருத்தின் அழகைப் பழித்து விரைமருவும்
வாழைப்பருவத்தின் ஆகாரங்கொண்டு வளம்புனைந்த
ஏழைக்கிரங்கும் மணவாளயோகி இருகுறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒருகாலமும் கேடில்லையே.
3 தேனமரமாலை மணவாளயோகி திருமருங்கு
வீனமிலாத இளமையினாரும் எழில் சகனம்
வானிலையுய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அகலாமல் எனை ஊழிகாலமும் தாங்கியவே.
4 வந்திக்க வாழ்வித்து அருள்மணவாளமுனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம்; அழகாற்றில் திகழ் சுழிபோல்
உந்திச்சுழி எனது உள்ளமும் சூறை கொண்டாயதேன்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாமிருந்தே.
5 ஆரும் வணங்கு மணவாளமாமுனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத்தாமரையில்
சேரும் திருத்தண்டும் சேவித்த மானிடர் தீவினையால்
ஈரும்படிப் பிறவார் திருநாட்டு இன்ப மெய்துவரே.
6 தடங்கொண்ட கோயில் மணவாளமாமுனி தாமரைத்தார்
வடங்கொண்ட மார்பினில் வண்புரிநூலும் எனது நெஞ்சில்
இடங்கொண்டு அடங்க எழுதிவைத்தேன் இனி வல்வினைகாள்
திடங்கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏகிடும் தீதறவே.
7 மங்காது உலகை அருள் மணவாளமுனி மருவார்
சிங்கார மாலைத் திருத்தோள்களும் அவற்றேதிகழும்
சங்காழியும் தொழுதேத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியவே.
8 பொழியும் தமிழ்புனையும் மணவாளமுனி கருணை
பொழியுந் திருவிழியும் திருமூக்கும் பொலிமறைகள்
செழியன்பு கொண்டு உரைக்கும் திருநாவும் திருமுகமும்
வழியன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பமற்றில்லையே.
9 பொருநல் துறையில் அருளாலிருந்த நம்புங்கவர்கோன்
அருள்நல் தமிழுரை மாமணவாளவரு முனிவன்
திருநெற்றியும் திருநாமமும் நாலும் திருச்சிகையும்
வருணத்தெழிலும் மனத்தினுள்னே நின்று வாழ்விக்குமே.
10 வாழிசெந்தாமரைத்தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோலங்கை வாழி திண்தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற்கோயில் மணவாளமாமுனி வாழ் முடியே.
சாற்றுமுறை வாழித்திருநாமப் பாட்டு
செய்யதாமரைத் தாளிணை வாழியே
சேலைவாழி திருநாபி வாழியே
துய்யமார்பும் புரிநூலும் வாழியே
சுந்தரத்திருத்தோளிணை வாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணிணை வாழியே
பொய்யிலாத மணவாளமாமுனி
புந்திவாழி புகழ் வாழி வாழியே.
பாதாதிகேசமாலை நிறைவுற்றது.