கோயில்கந்தாடை அண்ணன் அருளிச்செய்த
மணவாளமாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு
தனியன்
எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்போர் ஆயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே – மிக்க புகழ்க்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணனென்னும்
பேராளனை அடைந்தபேர்.
1 சீருற்ற செஞ்சொல் திருவாய்மொழிப்பிள்ளை செம்முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன்மனத்துப்
பூரித்து வாழும் மணவாளமாமுனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரணென்று பற்றினனே.
2 பற்றினன் செம்மைத்திருவாய் மொழிப்பிள்ளை பாதங்களே
உற்றனன் செம்மறை யுள்ளதெல்லாம் இவை உண்மை யென்றே
கற்றனன் கோயில் மணவாளமாமுனிக் கார்முகிலைப்
பெற்றனன் இங்கு அடியேன் இனிமேல் பிறவாமலுக்கே.
3 பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமையென்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்யபதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாளமாமுனி மாமலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்சமாபாதகரே.
4 பாதகமுள்ளவை தாமே ஒழித்துப் பரிந்தவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண்கொடுக்கும்
மாதகவோன் மணவாளமாமுனிப்பரன் மாமலர்த்தாள்
பாதுகையைச் சரணாய் முடிமேல் கொண்டு பற்றினர்கே.
5 நற்கேசவன் தமர் நற்றவத்தோர் நயனங்களுக்குப்
பொற்கோல மேனியன் பூதலத்தோர் செய்த புண்ணியமாம்
முக்கோல் தரித்த மணவாளமாமுனி மூர்த்திதனை
எக்கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடில்லையே.
6 இல்லை என்றே எண்ணி என் பவக்காட்டை எரியிலிட்டு
நல்லருள்மாரிபெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தைத் துய்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாளயோகியை வாழ்த்துவெனே.
7 வாழ்த்துவேன் எந்தை மணவாளமாமுனி மாமலர்த்தாள்
தாழ்த்துவேன் யானவன் தாளினைக்கீழ்ச் சிரந்தாரணியில்
காழ்த்திடும் செல்வமுதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என்றனன் அதிகோர பாவங்கள் பற்றறவே.
8 பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றிவைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடிசன்மத்
தாவங்கள் பற்றறும் தண்ணரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாளயோகியைச் சிந்திக்கவே.
9 சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயங்கெடச் சென்னிதன்னால்
வந்தித்து நிச்சலும் வாயார வாழ்த்துமெய்ம் மாமறையோர்
புந்திக்குள் மேவும் வரயோகி தம்மைப்புகைந்துசிலர்
சிந்திக்கினுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே.
10 நெஞ்சே அனைய அடியார் நிறங்கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப்பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாளயோகி இந்நாளளிக்கும்
தம்சேவை தன்னை இகழ்வார்க்கல்லால் அவர்தாமிட்டரே.
11 இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இருநிலத்தே
சிட்டர்கள்வாழ நம் தேசிகர் வாழச் செகத்திலுள்ள
துட்டர்கள் மாள மணவாளமாமுனி தோன்றினனே
எட்டு மிரண்டும் அறியாரிங்கு ஏசினும் யாவருமே.
12 யாவருமுய்ய மணவாளயோகி தயாளுவென்னப்
பூமகள் மண்மகள் புண்ணியமாய் இந்தப் பூதலத்தே
தாம் அவதாரம் செயாதிருந்தால் சடகோபர் திரு
வாய்மொழியோடு கடலோசையோடு என்னவாசியுண்டே?
13 வாசியறிந்த வதரியில் நாரணனார் மனங்கொள்
தேசுடை எந்தை மணவாளமாமுனி சீர் தழைப்பச்
சீசயிலேச தயாபாத்திரமெனும் சீர்மந்திரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே.
மணவாளமாமுனி கண்ணிநுண்சிறுத்தாம்பு நிறைவுற்றது.