பெரிய திருமொழி
ஏழாம் பத்து
ஏழாம் திருமொழி
திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்ய கண்ணா ! *
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா ! *
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து * ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7.7.1 திருவழுந்தூர்
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடும் உடனே
வந்தாய் * என் மனத்தே மன்னி நின்றாய்
மால்வண்ணா ! மழை போலொளி வண்ணா ! *
சந்தோகா ! பெளழியா ! தைத்திரியா !
சாமவேதியனே ! நெடுமாலே ! *
அந்தோ ! நின்னடி யன்றி மற்றறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7.7.2 திருவழுந்தூர்
நெய்யா ராழியும் சங்கமும் ஏந்தும்
நீண்ட தோளுடையாய் ! * அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய்
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து *
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறிப்
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன் *
ஐயா ! நின்னடி யன்றி மற்றறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே! 7.7.3 திருவழுந்தூர்
பரனே ! பஞ்சவன் பெளழியன் சோழன்
பார் மன்னர் மன்னர் தாம் பணிந்தேத்தும்
வரனே ! * மாதவனே! மதுசூதா !
மற்றோர் நல்துணை நின்னலால் இலேன் காண் *
நரனே ! நாரணனே ! திருநறையூர் நம்பீ !
எம்பெருமான் ! உம்பராளும்
அரனே ! * ஆதிவராகம் முனானாய் !
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7.7.4 திருவழுந்தூர்,
திருநறையூர்
விண்டான் விண்புக வெஞ்சமத்து, அரியாய்ப்
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து *
பண்டு ஆனுய்ய ஓர் மால் வரை யேந்தும்
பண்பாளா ! பரனே ! பவித்திரனே ! *
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
கருமமாவதும் என் தனக்கு அறிந்தேன் *
அண்டா ! நின்னடி யன்றி மற்றறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7.7.5 திருவழுந்தூர்
தோயா இன் தயிர் நெய்யமுதுண்ணச்
சொன்னார் சொல்லி நகும் பரிசே * பெற்ற
தாயால் ஆப்புண்டிருந்து அழுதேங்கும்
தாடாளா ! தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் ! * கிரேத திரேத துவாபர கலியுகம்,
இவை நான்கும் முனானாய் ! *
ஆயா ! நின்னடியன்றி மற்றறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7.7.6 திருவழுந்தூர்
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் !
கார்வண்ணா ! கடல் போலொளி வண்ணா ! *
இறுத்திட்டு ஆன் விடையேழும் முன்வென்றாய் !
எந்தாய் ! அந்தரமேழும் முனானாய் ! *
பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணாப்
போகமே நுகர்வான் புகுந்து * ஐவர்
அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7.7.7 திருவழுந்தூர்
நெடியானே ! கடியார் கலிநம்பீ !
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை *
கடியார் காளைய ரைவர் புகுந்து
காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் *
குடி போந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்தெனக் கருளி *
அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் !
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே! 7.7.8 திருவழுந்தூர்
கோவாய் ஐவர் என் மெய் குடியேறிக்
கூரை சோறிவை தாவென்று குமைத்துப்
போகார் * நான் அவரைப் பொறுக்ககில்லேன்
புனிதா ! புட்கொடியாய் ! நெடுமாலே ! *
தீவாய் நாகணையில் துயில்வானே !
திருமாலே ! இனிச் செய்வதொன்று அறியேன் *
ஆ ! ஆ ! என்றடியேற்கு இறை இறங்காய்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே. 7.7.9 திருவழுந்தூர்
அன்ன மன்னு பைம்பூம் பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை *
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி
ஆலிநாடன், மங்கைக் குலவேந்தன் *
சொன்ன வின்தமிழ் நன்மணிக் கோவை
தூய மாலை இவை பத்தும் வல்லார் *
மன்னி மன்னவராய் உலகாண்டு
மான வெண்குடைக் கீழ் மகிழ்வாரே. 7.7.10 திருவழுந்தூர்