பெரிய திருமொழி
ஏழாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
கள்ளம் மனம் விள்ளும் வகை, கருதிக் கழல் தொழுவீர் *
வெள்ளம் முதுபரவைத், திரை விரியக் * கரையெங்கும்
தெள்ளும் மணிதிகழும், சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் * எனதுள்ளத்துள்ளும், உறைவாரை யுள்ளீரே ! 7.9.1 சிறுபுலியூர்
தெருவில் திரி சிறுநோன்பியர், செஞ்சோற்றொடு கஞ்சி
மருவிப் * பிரிந்தவர் வாய்மொழி மதியாது, வந்தடைவீர் ! *
திருவிற் பொலி மறையோர், சிறுபுலியூர்ச் சலசயனத்து *
உருவக் குறளடிகள், அடி யுணர்மின் உணர்வீரே. 7.9.2 சிறுபுலியூர்
பறையும் வினை தொழுதுய்ம்மினீர் பணியும் சிறுதொண்டீர் ! *
அறையும் புனல் ஒருபால், வயல் ஒருபால் பொழில் ஒருபால் *
சிறை வண்டின மறையும், சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் * இறையடி யல்லது, ஒன்று இறையும் அறியேனே. 7.9.3 சிறுபுலியூர்
வானார் மதிபொதியும் சடை, மழுவாளியொடு ஒருபால் *
தானாகிய தலைவனவன், அமரர்க் கதிபதியாம் *
தேனார் பொழில் தழுவும், சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆனாயனது * அடியல்லது, ஒன்று அறியேன் அடியேனே. 7.9.4 சிறுபுலியூர்
நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை * நாளும்
எந்தாய் ! என, இமையோர் தொழுதேத்தும் இடம் * எறிநீர்ச்
செந்தாமரை மலரும், சிறுபுலியூர்ச் சலசயனத்து *
அந்தாமரை யடியாய் ! உனதடியேற்கு அருள் புரியே. 7.9.5 சிறுபுலியூர்
முழுநீலமும் மலராம்பலும், அரவிந்தமும் விரவிக் *
கழுநீரொடு மடவாரவர், கண்வாய் முகமலரும் *
செழுநீர் வயல் தழுவும், சிறுபுலியூர்ச் சலசயனம் *
தொழு நீர்மை யதுடையார், அடி தொழுவார் துயரிலரே. 7.9.6 சிறுபுலியூர்
சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை, உறையும்
மாயா ! * எனக்குரையாய் இது, மறை நான்கினுளாயோ ? *
தீயோம்பு கைமறையோர், சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ ? * உனதடியார் மனத்தாயோ ? அறியேனே. 7.9.7 சிறுபுலியூர்,
திருமாலிருஞ்சோலை
மையார் வரிநீலம், மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு *
உய்வான், உனகழலே தொழுது எழுவேன் கிளி மடவார் *
செவ்வாய் மொழி பயிலும், சிறுபுலியூர்ச் சலசயனத்து *
ஐவா யரவணைமேல், உறை அமலா ! அருளாயே. 7.9.8 சிறுபுலியூர்
கருமா முகிலுருவா ! கனலுருவா ! புனலுருவா ! *
பெருமால் வரையுருவா ! பிறவுருவா, நினதுருவா ! *
திருமாமகள் மருவும், சிறுபுலியூர்ச் சலசயனத்து *
அருமா கடலமுதே ! உனது அடியே சரணாமே. 7.9.9 சிறுபுலியூர்
சீரார் நெடுமறுகில், சிறுபுலியூர்ச் சலசயனத்து *
ஏரார் முகில் வண்ணன் தனை, இமையோர் பெருமானைக் *
காரார் வயல் மங்கைக் கிறை, கலியனொலி மாலை *
பாரார் இவை பரவித் தொழப், பாவம் பயிலாவே. 7.9.10 சிறுபுலியூர்