திருமொழி
நான்பெரிய காம் பத்து
முதல் திருமொழி
போதலர்ந்த பொழிற்சோலைப், புறமெங்கும் பொருதிரைகள் *
தாதுதிர வந்தலைக்கும், தடமண்ணித் தென்கரைமேல் *
மாதவன் தானுறையுமிடம், வயல் நாங்கை * வரிவண்டு
தேதெனவென்றிசை பாடும், திருத்தேவனார் தொகையே. 4.1.1 திருத்தேவனார் தொகை
யாவருமாய் யாவையுமாய், எழில்வேதப் பொருள்களுமாய் *
மூவருமாய் முதலாய, மூர்த்தியமர்ந்து உறையுமிடம் *
மாவரும் திண்படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை *
தேவரும் சென்றிறைஞ்சு பொழில் திருத்தேவனார் தொகையே. 4.1.2 திருத்தேவனார் தொகை
வானாடும் மண்நாடும், மற்றுள்ள பல்லுயிரும் *
தானாய எம்பெருமான், தலைவன் அமர்ந்து உறையுமிடம் *
ஆனாத பெருஞ் செல்வத் தருமறையோர், நாங்கை தன்னுள் *
தேனாரும் மலர்ப் பொழில்சூழ், திருத்தேவனார் தொகையே. 4.1.3 திருத்தேவனார் தொகை
இந்திரனு மிமையவரும், முனிவர்களும் * எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும், கதிரவனும் சந்திரனும் *
எந்தை ! எமக்கருளென, நின்றருளுமிடம் * எழில் நாங்கை
சுந்தரநற் பொழில் புடைசூழ், திருத்தேவனார் தொகையே. 4.1.4 திருத்தேவனார் தொகை
10.4.1.5 அண்டமுமிவ் வலைகடலும், அவனிகளும் குலவரையும் *
உண்ட பிரானுறையுமிடம், ஒளிமணி சந்தகில் கனகம் *
தெண்திரைகள் வரத் திரட்டும், திகழ்மண்ணித் தென்கரை மேல் *
திண்திறலார் பயில் நாங்கைத் திருத்தேவனார் தொகையே. 4.1.5 திருத்தேவனார் தொகை
ஞால மெல்லா மமுது செய்து, நான்மறையும் தொடராத
பாலகனாய் * ஆலிலையில் பள்ளிகொள்ளும், பரமனிடம் *
சாலிவளம் பெருகி வரும், தடமண்ணித் தென்கரைமேல் *
சேலுகளும் வயல் நாங்கைத் திருத்தேவனார் தொகையே. 4.1.6 திருத்தேவனார் தொகை
ஓடாத ஆளரியின் உருவாகி, இரணியனை *
வாடாத வள்ளுகிரால், பிளந்தளைந்த மாலதிடம் *
ஏடேறு பெருஞ் செல்வத்து, எழில்மறையோர் நாங்கை தன்னுள் *
சேடேறு பொழில் தழுவு, திருத்தேவனார் தொகையே. 4.1.7 திருத்தேவனார் தொகை
வாராரு மிளங்கொங்கை, மைதிலியை மணம் புணர்வான் *
காரார் திண் சிலையிறுத்த, தனிக்காளை கருதுமிடம் *
ஏராரும் பெருஞ் செல்வத்து, எழில்மறையோர் நாங்கை தன்னுள் *
சீராரும் மலர்ப் பொழில்சூழ், திருத்தேவனார் தொகையே. 4.1.8 திருத்தேவனார் தொகை
கும்பமிகு மதயானை, பாகனொடும் குலைந்து வீழக் *
கொம்பதனைப் பறித்தெறிந்த, கூத்தனமர்ந் துறையுமிடம் *
வம்பவிழும் செண்பகத்தின், மணங்கமழும் நாங்கை தன்னுள் *
செம்பொன்மதிள் பொழில் புடைசூழ் திருத்தேவனார் தொகையே. 4.1.9 திருத்தேவனார் தொகை
காரார்ந்த திருமேனிக், கண்ணன் அமர்ந்துறையுமிடம் *
சீரார்ந்த பொழில் நாங்கைத், திருத்தேவனார் தொகைமேல் *
கூரார்ந்த வேல் கலியன், கூறு தமிழ் பத்தும் வல்லார் *
ஏரார்ந்த வைகுந்தத்து, இமையவரோடு இருப்பாரே. 4.1.10 திருத்தேவனார் தொகை