திருவாய்மொழி
ஆறாம் பத்து
ஏழாம் திருவாய்மொழி
உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலையு மெல்லாம் *
கண்ணன் எம்பெருமான், என்றென்றே கண்கள் நீர்மல்கி * மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவனூர் வினவித் *
திண்ணம் என் இளமான் புகுமூர், திருக்கோளூரே. 6.7.1 திருக்கோளூர்
ஊரும் நாடும் உலகமும், தன்னைப் போல் * அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக், கற்பு வானிடறிச் *
சேரும் நல் வளஞ்சேர், பழனத் திருக்கோளூர்க்கே *
போருங் கொல் ? உரையீர் ! கொடியேன் கொடி பூவைகளே ! 6.7.2 திருக்கோளூர்
பூவை பைங்கிளிகள், பந்து தூதை பூம்புட்டில்கள் *
யாவையும், திருமால் திருநாமங்களே கூவியெழும் * என்
பாவை, போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே *
கோவை வாய் துடிப்ப, மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ? 6.7.3 திருக்கோளூர்
கொல்லை என்பர் கொலோ ? குணம் மிக்கன ளென்பர் கொலோ ? *
சில்லை வாய்ப் பெண்டுகள், அயற் சேரி யுள்ளாரும் எல்லே ! *
செல்வம் மல்கி அவன் கிடந்த, திருக்கோளூர்க்கே *
மெல்லிடை நுடங்க, இளமான் செல்ல மேவினளே. 6.7.4 திருக்கோளூர்
மேவி நைந்து நைந்து, விளையாடலுறாள், * என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால், திருக்கோளுரில் *
பூவியல் பொழிலும் தடமும், அவன் கோயிலும் கண்டு *
ஆவியுள் குளிர, எங்ஙனே உகக்குங் கொல் இன்றே? 6.7.5 திருக்கோளூர்
இன்று எனக்குதவாதகன்ற, இளமான் இனிப் போய்த் *
தென்திசைத் திலதமனைய, திருக்கோளூர்க்கே சென்று *
தன் திருமால் திருக்கண்ணும், செவ்வாயும் கண்டு *
நின்று நின்று நையும், நெடுங் கண்கள் பனி மல்கவே. 6.7.6 திருக்கோளூர்
மல்குநீர்க் கண்ணொடு, மையலுற்ற மனத்தனளாய் *
அல்லும் நன்பகலும் நெடுமாலென்றழைத்து, இனிப் போய்ச் *
செல்வம் மல்கி அவன் கிடந்த, திருக்கோளூர்க்கே *
ஒல்கி யொல்கி நடந்து, எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே ? 6.7.7 திருக்கோளூர்
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து *
கசிந்த நெஞ்சினளாய்க், கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல் ? *
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன், திருக்கோளூர்க்கே *
கசிந்த நெஞ்சினளாய், எம்மை நீத்த எம் காரிகையே. 6.7.8 திருக்கோளூர்
காரியம் நல்லனகளவை காணில், என் கண்ணனுக்கென்று *
ஈரியா யிருப்பாள், இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூயிரைப்பத், திருக்கோளூர்க்கே *
நேரிழை நடந்தாள், எம்மை யொன்றும் நினைத்திலளே. 6.7.9 திருக்கோளூர்
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கணிளமான் இனிப்போய் *
அனைத்துலகு முடைய, அரவிந்த லோசனனைத் *
தினைத் தனையும் விடாள், அவன்சேர் திருக்கோளூர்க்கே *
மனைக்கு வான் பழியும் நினையாள், செல்ல வைத்தனளே. 6.7.10 திருக்கோளூர்
வைத்த மாநிதியாம், மதுசூதனையே யலற்றிக் *
கொத்தலர் பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் சொன்ன *
பத்து நூற்றுள் இப்பத்து, அவன் சேர் திருக்கோளூர்க்கே *
சித்தம் வைத்துரைப்பார், திகழ் பொன்னுலகாள்வாரே. 6.7.11 திருக்கோளூர்