திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
ஐந்தாம் திருவாய்மொழி
எங்ஙனேயோ அன்னைமீர்காள் ! என்னை முனிவது நீர் ? *
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் *
செங்கனி வாயொன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே. 5.5.1 திருக்குறுங்குடி
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே *
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் *
மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திரு மறுவும் *
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே. 5.5.2 திருக்குறுங்குடி
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர் *
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் *
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே. 5.5.3 திருக்குறுங்குடி
நீங்க நில்லா கண்ணநீர்களென்று அன்னையரும் முனிதிர் *
தேங்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன் முடியும் வடிவும் *
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே. 5.5.4 திருக்குறுங்குடி
பக்கம் நோக்கி நிற்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர் *
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் *
தக்க தாமரைக் கண்ணும் பாவியேனாவியின் மேலனவே. 5.5.5 திருக்குறுங்குடி
மேலும்வன்பழி நங்குடிக்குஇவளென்று அன்னைகாணக்கொடாள்*
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
கோலநீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும் *
நீலமேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே. 5.5.6 திருக்குறுங்குடி
நிறைந்தவன்பழிநங்குடிக்குஇவளென்று அன்னைகாணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும் *
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கை யுளதே. 5.5.7 திருக்குறுங்குடி
கையுள்நன்முகம்வைக்கும் நையுமென்று அன்னையரும்முனிதிர் *
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் *
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே. 5.5.8 திருக்குறுங்குடி
முன் நின்றாயென்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் *
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
சென்னி நீள்முடி ஆதியாய உலப்பி லணிகலத்தன் *
கன்னல் பாலமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே. 5.5.9 திருக்குறுங்குடி
கழியமிக்கதோர் காதலளிவளென்று அன்னை காணக்கொடாள் *
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் *
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச், சோதி வெள்ளத்தினுள்ளே *
எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும் ஆர்க்கும் அறிவரிதே. 5.5.10 திருக்குறுங்குடி
அறிவரிய பிரானை ஆழியங் கையனையே அலற்றி *
நறிய நல் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன *
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடியதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே. 5.5.11 திருக்குறுங்குடி