திருவாய்மொழி
எட்டாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
நங்கள் வரிவளை யாயங்காளோ !
நம்முடை யேதலர் முன்பு நாணி *
நுங்கட்கு யானொன்றுரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன் *
சங்கம் சரிந்தன சாயிழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் *
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே. 8.2.1 திருவேங்கடம் திருப்பதி
வேண்டிச் சென்றொன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் *
ஈண்டிதுரைக்கும் படியை அந்தோ !
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் *
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால் *
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே? 8.2.2
காலம் இளைக்கிலல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின் *
ஞாலமறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தானென் ? *
நீலமலர் நெடுஞ் சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட *
கோல வளையொடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே. 8.2.3
கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் ?
கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் *
பாடற்றொழிய இழந்து, வைகல்
பல்வளையார் முன் பரிசழிந்தேன் *
மாடக்கொடி மதிள் தென்குளந்தை
வண்குடபால் நின்ற மாயக் கூத்தன் *
ஆடற் பறவை யுயர்த்த வெல்போர்
ஆழி வலவனை ஆதரித்தே. 8.2.4 திருக்குளந்தை (பெருகுளம்)
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம் *
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ இங்கு அரியது தான் *
ஊழிதோறூழி ஒருவனாக நன்குணர்வார்க்கும் உணரலாகா *
சூழலுடைய சுடர்கொளாதித் தொல்லையஞ்சோதி நினைக்குங்காலே. 8.2.5
தொல்லை யஞ்சோதி நினைக்குங் கால்
என் சொல்லளவன்று, இமையோர் தமக்கும் *
எல்லை யிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான் *
அல்லி மலர்த் தண்துழாயும் தாரான்
ஆர்க்கு இடுகோ இனிப்பூசல் ? சொல்லீர் *
வல்லி வளவயல் சூழ் குடந்தை
மாமலர்க் கண் வளர்கின்ற மாலே. 8.2.6 திருக்குடந்தை (கும்பகோணம்)
மாலரி கேசவன் நாரணன்
சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்றென்று *
ஓலமிட என்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் *
ஏலமலர்க் குழலன்னை மீர்காள் !
என்னுடைத் தோழியர்காள் ! என் செய்கேன் ? *
காலம் பல சென்றும் காண்பது ஆணை
உங்களோடு எங்களிடை யில்லையே. 8.2.7
இடை யில்லை யான் வளர்த்த கிளிகாள் !
பூவைகள்காள் ! குயில்காள் ! மயில்காள் ! *
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்று மொழிய வொட்டாது கொண்டான் *
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
அஞ்சன வெற்பு மவை நணிய *
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவன் அவை காண் கொடானே. 8.2.8 திருப்பாற்கடல்,
பரமபதம்
காண் கொடுப்பா னல்லன் ஆர்க்கும் தன்னைக்
கைசெயப் பாலதோர் மாயந் தன்னால் *
மாண்குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த *
சேண்சுடர்த் தோள்கள்பல தழைத்த
தேவபிராற்கு என் நிறைவினோடு *
நாண் கொடுத்தேன், இனியென் கொடுக்கேன் ?
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள் ! 8.2.9
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள் !
யான் இனிச் செய்வதென் ? * என்னெஞ்சு என்னை
நின்னிடையே னல்லே னென்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு *
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற்றோடு
பால்மதி யேந்தி * ஓர் கோலநீல
நன்னெடுங் குன்றம் வருவதொப்பான்
நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே. 8.2.10
பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு *
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன *
தீதிலந்தாதி யோராயிரத்துள்
இவையுமோர் பத்து, இசையொடும் வல்லார் *
ஆதுமோர் தீதிலராகி, அங்குமிங்கும்
எல்லாம் அமைவார்கள் தாமே. 8.2.11