திருவாய்மொழி
எட்டாம் பத்து
நான்காம் திருவாய்மொழி
வார்கடா வருவி யானை மாமலையின்
மருப்பிணைக் குவடிறுத் துருட்டி *
ஊர்கொள் திண்பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று * சூழ் பரண் மேல்
போர்கடா வரசர் புறக்கிட
மாடமீமிசைக் கஞ்சனைத் தகர்த்த *
சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே. 8.4.1 திருச்செங்குன்றூர்
எங்கள் செல்சார்வு யாமுடை யமுதம்
இமையவரப்பன் என்னப்பன் *
பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன் *
செங்கயலுகளும் தேம்பணை புடைசூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற * ஆதியானல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே ? 8.4.2 திருச்செங்குன்றூர்
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநில மிடந்த எம்பெருமான் *
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற எம்பெருமான் *
தென் திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம்பெருமான் * அடியல்லால் சரண்
நினைப்பிலும், பிறிதில்லை எனக்கே. 8.4.3 திருச்செங்குன்றூர்
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும்
நிறையப், பேருருவமாய் நிமிர்ந்த *
குறிய மாணெம்மான் குரைகடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான் *
செறிகுலை வாழை கமுகு தெங்கணிசூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய * மெய்ம்மையே நின்ற எம்பெருமான்
அடியிணை யல்லதோ ரரணே. 8.4.4 திருச்செங்குன்றூர்
அல்லதோ ரரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் * அவனை
யல்லது என்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற *
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும்புகை விசும்பொளி மறைக்கும் *
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எனக்கு நல்லரணே. 8.4.5 திருச்செங்குன்றூர்
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னைத் *
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடற் பள்ளி யம்மானை *
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண்சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் *
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறதனுள் கண்டேனே. 8.4.6 திருச்செங்குன்றூர்
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறதனுள்
கண்ட, அத்திருவடி என்றும் *
திருச்செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும் *
திருச்செய்ய கமலவுந்தியும்
செய்ய கமல மார்பும் செய்ய வுடையும் *
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ என் சிந்தையுளானே. 8.4.7 திருச்செங்குன்றூர்
திகழ என் சிந்தையு ளிருந்தானைச்
செழுநிலத் தேவர் நான்மறையோர் *
திசை கை கூப்பி யேத்தும் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரை யானைப் *
புகர்கொள் வானவர்கள் புகலிடந் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றைப் *
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே. 8.4.8 திருச்செங்குன்றூர்
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப்பிரா னவனே *
இடைப்புக் கோருருவும் ஒழிவில்லை அவனே
புகழ்வில்லை யாவையும் தானே *
கொடைப் பெரும் புகழாரினையர் தன்னானார்
கூறிய விச்சையோடு ஒழுக்கம் *
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றா றமர்ந்த நாதனே. 8.4.9 திருச்செங்குன்றூர்
அமர்ந்த நாதனை அவரவராகி
அவர்க்கரு ளருளும் அம்மானை *
அமர்ந்த தண்பழனத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரை யானை *
அமர்ந்த சீர் மூவாயிரவர்
வேதியர்கள் தம்பதி அவனி தேவர் வாழ்வு *
அமர்ந்த மாயோனை முக்கணம்மானை
நான்முகனை அமர்ந்தேனே. 8.4.10 திருச்செங்குன்றூர்
தேனை நன்பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட அம்மானை *
வானை நான்முகனை மலர்ந்த தண்கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனைக் *
கோனை வண்குருகூர் வண்சடகோபன்
சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் *
வானின் மீதேற்றி அருள் செய்து முடிக்கும்
பிறவி மாமாயக் கூத்தினையே. 8.4.11 திருச்செங்குன்றூர்