திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
மல்லிகை கமழ் தென்ற லீருமாலோ !
வண்குறிஞ்சி யிசை தவறுமாலோ ! *
செல் கதிர் மாலையும் மயக்குமாலோ !
செக்கர் நல் மேகங்கள் சிதைக்குமாலோ ! *
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்களேறு அரியேறு எம்மாயோன் ! *
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியமாலோ ! 9.9.1
புகலிட மறிகிலம் தமியமாலோ !
புலம்புறு மணி தென்ற லாம்பலாலோ ! *
பகலடு மாலை வண் சாந்தமாலோ !
பஞ்சமம் முல்லை தண் வாடையாலோ ! *
அகலிடம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்து
எங்கு மளிக்கின்ற ஆயன் மாயோன் *
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனியிருந்து என்னுயிர் காக்குமாறென் ? 9.9.2
இனியிருந்து என்னுயிர் காக்குமாறென் ?
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்கத் *
துனியிருங் கலவி செய்தாகம் தோய்ந்து
துறந்தெம்மை இட்டகல் கண்ணன் கள்வன் *
தனியிளஞ் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் * நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்றீருமாலோ ! 9.9.3
பாவியேன் மனத்தே நின்றீருமாலோ !
வாடை தண் வாடை வெவ்வாடையாலோ ! *
மேவு தண் மதியம் வெம்மதியமாலோ !
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாலோ ! *
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மை யம்பூவிதாலோ ! *
ஆவியின் பரமல்ல வகைகளாலோ !
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ! 9.9.4
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ !
ஆபுகு மாலையு மாகின்றாலோ ! *
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ !
அவனுடைத் தீங்குழல் ஈருமாலோ ! *
யாமுடைத் துணையென்னும் தோழிமாரும்
எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ ! *
யாமுடை ஆருயிர் காக்குமாறென் ?
அவனுடை யருள் பெறும் போதரிதே. 9.9.5
அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருளல்லன அருளுமல்ல *
அவனருள் பெறுமளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் *
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை
சேர் திருவாகம் எம்மாவி ஈரும் *
எவம்(ன்)இனிப் புகுமிடம் ? எவம் (ன்) செய்கேனோ ?
ஆருக்கு என் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் ! 9.9.6
ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள் !
ஆருயிரளவன்று இக்கூர் தண்வாடை *
காரொக்கும் மேனி நங்கண்ணன் கள்வம்
கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே *
சீருற்ற அகிற்புகை யாழ் நரம்பு
பஞ்சமம் தண் பசுஞ் சாந்தணைந்து *
போருற்ற வாடை தண் மல்லிகைப்பூப்
புது மணம் முகந்து கொண்டெறியுமாலோ ! 9.9.7
புது மணம் முகந்து கொண்டெறியுமாலோ !
பொங்கிள வாடை புன் செக்கராலோ ! *
அது மணந்தகன்ற நங்கண்ணன் கள்வம்
கண்ணனிற் கொடிது இனியதனிலும்பர் *
மது மணமல்லிகை மந்தக்கோவை
வண் பசுஞ்சாந்தினில் பஞ்சமம் வைத்து *
அது மணந்தின்னரு ளாய்ச்சியர்க்கே
ஊதும் அத்தீங் குழற்கே உய்யேன் நான். 9.9.8
ஊதுமத் தீங்குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்திடை யிடைத் தன் செய்கோலத் *
தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசித்
தூமொழி யிசைகள் கொண்டு ஒன்று நோக்கிப் *
பேதுறு முகஞ் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சறவறப் பாடும் பாட்டை *
யாதுமொன் றறிகிலம் அம்ம ! அம்ம !
மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9.9
மாலையும் வந்தது மாயன் வாரான்
மாமணி புலம்ப வல்லேறணைந்த *
கோல நன்னாகுகள் உகளுமாலோ !
கொடியன குழல்களும் குழறுமாலோ ! *
வாலொளி வளர் முல்லை கருமுகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ ! *
வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ !
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே? 9.9.10
அவனை விட்டகன்று உயிராற்றகில்லா
அணியிழை யாய்ச்சியர் மாலைப் பூசல் *
அவனை விட்டகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன் *
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலுரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு *
அவனியுளலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்!
அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. 9.9.11