திருவாய்மொழி
பத்தாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி
முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா ! * என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என் கள்வா ! *
தனியேனாருயிரே ! என் தலைமிசையாய் வந்திட்டு *
இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே. 10.10.1
மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை *
வாசம் செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் *
நேசம் செய்து உன்னோ டென்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே *
கூசம்செய்யாதுகொண்டாய் என்னைக் கூவிக்கொள்ளாய் வந்தந்தோ. 10.10.2
கூவிக்கொள்ளாய் வந்தந்தோ! என்பொல்லாக் கருமாணிக்கமே !*
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் *
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம் *
நாவிக் கமல முதற்கிழங்கே ! உம்பரந்ததுவே. 10.10.3
உம்பரம் தண் பாழேயோ! அதனுள்மிசை நீயேயோ ! *
அம்பர நற்சோதி ! அதனுள் பிரமன் அரன் நீ *
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ *
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே. 10.10.4
போர விட்டிட்டென்னை நீ புறம் போக்கலுற்றால் * பின்னை யான்
ஆரைக்கொண்டு எத்தையந்தோ ! எனதென்பதென்? யானென்பதென்?*
தீர இரும்புண்ட நீரது போல, என்னாருயிரை
ஆரப் பருக* எனக்கு ஆராவமுதானாயே. 10.10.5
எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை *
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனியுண்டொழியாய் *
புனக்காயா நிறத்த புண்டரீகக்கண் செங்கனிவாய் *
உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கு அன்பா!,என்னன்பேயோ ! 10.10.6
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ ! *
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக் *
கோல வராக மொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் !
நீலக்கடல் கடைந்தாய் ! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ? 10.10.7
பெற்றுஇனிப் போக்குவனோ ? உன்னை என் தனிப்பேருயிரை *
உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய் *
முற்ற இம்மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றில் புக்கு *
முற்றக் கரந்தொளித்தாய் ! என் முதல் தனி வித்தேயோ ! 10.10.8
முதல் தனி வித்தேயோ ! முழு மூவுலகாதிக்கெல்லாம் *
முதல்தனி உன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் ? *
முதல் தனி அங்குமிங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய் *
முதல் தனி சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த முடிவிலீயோ ! 10.10.9
சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த, முடிவில் பெரும் பாழேயோ ! *
சூழ்ந்ததனில் பெரிய, பரநன் மலர்ச் சோதீயோ *
சூழ்ந்ததனில் பெரிய, சுடர் ஞான வின்பமேயோ ! *
சூழ்ந்ததனில் பெரிய, என் அவாவறச் சூழ்ந்தாயே. 10.10.10
அவாவறச் சூழ், அரியை அயனை அரனை அலற்றி *
அவாவற்று வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன *
அவாவி லந்தாதிகளால், இவை ஆயிரமும் * முடிந்த
அவாவி லந்தாதி இப்பத்தறிந்தார், பிறந்தார் உயர்ந்தே. 10.10.11
*************
திருவாய்மொழி முற்றும்
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.